முன் கதை - பாகம் 6

நொச்சிக்குப்பம் கடற்கரை பகுதி...நடைபாதையில் மீன் கடைகளை தாண்டி, கலராக்கி நாட்டு கோழிமுட்டை என்று விற்கும் கிழவியை தாண்டி, நடுரோட்டில் விளையாடும் சென்னை நொச்சிக்குப்பம் கிரிக்கெட் டீமை தாண்டி சந்துருவும், ரமேஷ்ஷும் அமைதியாக பீச் பக்கமாக நடந்து சென்றனர். மெரினா கடற்கரை மிகவும் கூட்ட நெரிசல் ஆன பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து நொச்சிக்குப்பம் ஏரியாவை அவர்கள் சந்திக்குமிடமாக்கியிருந்தார்கள். ஆள் அரவமற்ற அந்த இடத்தில் அவர்களின் அழுகையையும், சிரிப்பையும் அவர்களுக்கு மட்டுமே சொந்தமாக்கியது.....

நீண்ட அமைதியும் பெருமூச்சுமே அதிக நேரம் இருந்தது...., அமைதியை உடைத்தான் ரமேஷ்... "மாமு...பேசுடா...என்னால இப்படி இருக்க முடியலடா..."

"ம்ம்..... சாரிடா மச்சி அன்னைக்கு உன்கிட்ட அப்படி பேசறமாதிரி ஆயிடுச்சி.. நீ எவ்வளோ கஷ்டப்பட்டு இருப்பேன்னு எனக்கு தெரியும்டா ஆனா வேற வழியில்ல...."

".......விடுடா.... மேட்டரே இல்ல.. அப்ப கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்தது.. ஆனா இது கண்டினியூ ஆறது தான் மனசு போட்டு கொல்லுதுடா..பேசிடலாண்டா ..."

யதார்த்தை பேச ஆரம்பித்தனர். நடந்தைவை எல்லாமே எப்படி நடந்தது யாரால் நடந்தது என்று விவாதிக்காமல் நடக்க வேண்டியதை பேசவே இருவருமே நினைத்தனர். நீண்ட விவாததிற்கு பிறகு ரமேஷ் இனி சந்துரு வீட்டுக்கு வரவதே இல்லை என முடிவானது.... அனுஷாவை பற்றிய ரமேஷ் 'இன் கவலை அத்தனையும் சந்துருவடனே நிற்கட்டும் என்று முடிவானது. எதையும் முடிவுடன் நெருங்கி பழக்கமில்லாத இருவரும் எல்லாவற்றிற்கும் முடிவெடுத்தனர்.

நட்பு என்ற அந்த மந்திரக்கோல் அவர்களை ஆட்டிபடைத்தது என்னவோ உண்மைதான், விடவும் முடியாமல் தொடரவும் முடியாமல் இருந்த இவர்களின் மனத்துடிப்பு மீனாவிற்காகவும், அனுஷாவிற்காகவும் விட்டுக்கொடுத்து விலகிசெல்லாமல், மனம் விட்டு பேசி இன்னும் அதை நெருக்கமாக்கி, அழகுபடுத்தி பார்த்து ரசித்தார்கள்.

அனுஷாவின் பிடிவாதம் தொடர்ந்தன... ரமேஷின் நினைவிலேயே வாழ்ந்துவிடுவேன் என்பதை வேதவாக்காக தொடர்ந்தாள். அவளின் திருமணத்திற்கு பின் தான் என் திருமணம் என்று சந்துருவும் அவளின் மாற்று முடிவிற்காக காத்திருந்தான்.

பார்வதி அம்மா மீனாவின் வருகைக்கு பின் சுத்தமாக மாறி இருந்தார்கள், தன் பெண்ணை எப்படியும் ரமேஷ்' உடன் வாழவைக்க வேண்டும் என்று திவரமாக இருந்தார்கள்.

ஒரு வெள்ளிக்கிழமை.. எப்போதும் போல கோயிலுக்கு சென்ற பார்வதியம்மா குடும்ப தோழி ஹேமாவை பார்த்தார்கள்.

"ஹேமா கொஞ்சம் உக்காறேன் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.."

"ஆன்ட்டி எப்படியிருக்கீங்க.. அனு, சந்துரு எப்படி இருக்காங்க..."

"......ஏதோ இருக்காங்கம்மா...... ஹேமா உனக்கு தெரியுமில்ல.அந்த பொண்ணு மீனா வந்து வீட்டு வாசல்ல நின்னு கத்திட்டு போனது? "

"...ம்ம்... கேள்விப்பட்டேன் ஆன்ட்டி?"

"..ரமேஷ் சுத்தமா வரதை நிறுத்திட்டான்ம்மா...."

".....நல்லது தானே ஆன்ட்டி..அனு கொஞ்சம் கொஞ்சமா மாறிடுவா....."

"..இல்லமா..அனுவோட உடம்பு மோசமாயிட்டே போது, ஒழுங்கா சாப்பிடறது இல்ல.. தூங்கறது இல்ல......எங்கக்கூட பேச மாட்டறா.... என்னால பாக்கமுடியலம்மா.."

"ஆன்ட்டி, கவலை படாதீங்க சரியாயிடும். ...நீங்களும் சந்துருவும் இருக்கும் போது அவளுக்கு என்ன மகாராணி மாதிரி இருப்பா.. கவலைய விடுங்க... "

"இல்லமா....அப்படித்தான் சரியாயிடும் சரியாயிடும்னு பொறுமையா இருந்தேன்... நல்ல வேளை உன்னை இங்கே பார்த்தேன்.. இந்த புள்ளைங்க என்னை எங்கேயும் அனுப்பாதுங்க.. எப்படி யார் கிட்ட சொல்லி முடிக்கறதுன்னு இருந்தேன்.. இப்ப நீ எனக்கு ஒரு உதவி பண்ணுமா.."

"சொல்லுங்க ஆன்ட்டி..."

"உன்னோட பெரியம்மா பொண்ணோட கஸின் இருக்கானே ஆனந்த அவனோட ஃபிரண்டு தானே ரமேஷ்....?!! நீங்க எல்லாம் ரொம்ப க்ளோஸ் தானேம்மா..? ஆனந்த் கிட்ட சொல்லி எப்படியாவது ரமேஷ்'க்கும் அனுவுக்கும் கல்யாணம் செய்துவைக்க சொல்லேன்... என் பொண்ணு படற கஷ்டத்தை என்னால பாக்க முடியலைம்மா..."

ஹேமா அதிர்ந்து போனாள்.. "ஆன்ட்டி ... நீங்களா இப்படி பேசறீங்க... எப்படி ரமேஷ்'க்கு இன்னொரு கல்யாணம் செய்யமுடியும்..........அதுவும் மீனா இருக்கும் போது .. "

"என் பொண்ணுவிட்டு கொடுத்த வாழ்க்கை ஹேமா அது.... எப்படியும் மீனாவை விட்டுட்டு ரமேஷ் வந்துடுவான்னு நெனச்சோம்.. .அவ்வளவு உண்மையாதானே இரண்டு பேருமே இருந்தாங்க..... கட்டாயப்படுத்தி அவங்க சந்தோஷத்துக்கு கல்யாணம் பண்றாங்க.. ஆறே மாசம் அவளை டைவர்ஸ் பண்ணிட்டு உன்னை கல்யாணம் செய்துக்கறேன்னு சொன்னாம்மா... ஆனா இப்ப வீட்டு பக்கம் கூட தல வைக்கறது இல்ல.... நான் இன்னொரு பொண்ணு வாழ்க்கையை கெடுக்க கூடாதுன்னு தான் நெனச்சேன்.. ஆனா.. எப்ப மீனா வந்து என் பொன்ணை இவ்வளவு அசிங்கபடுத்தி பேசினாலோ அப்பவே.. அவளை ரமேஷ் கிட்ட இருந்து பிரிக்கனும்னு முடிவு பண்ணிட்டேன்ம்மா.. பத்தாக்குறைக்கு அனுவை பார்க்க பார்க்க பெத்த வயிறு பத்தி எரியுதும்மா..."

"நீ போய் சொல்லும்மா.. என் பொண்ணை அவன் ஆஹா ஓஹோன்னு வாழ வைக்க வேணாம்.... கோயில்ல வச்சி தாலிக்கட்டி விட்டுட சொல்லு.. அது போதும்மா. .இப்படி இவ கஷ்டப்படறதுக்கு வாழ்நாள் பூரா அவன் கட்டின தாலியோட அவனுக்கு பொண்டாட்டியா எங்க வீட்டிலேயே இருந்துடுவாம்மா...அவளை கல்யாணம் செய்துகிட்டா போதும்மா....இப்படி அவ நடைபிணமா இருக்கமாட்டா..நல்லா ஆயிடுவாம்மா.."

ஹேமாவிற்கு என்ன சொல்லுவதென்றே புரியவில்லை.. அந்த வயதான தாயின் ஆதங்கமும் அழுகையும் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.. "ஆன்ட்டி..நான் ஆனந்த் கிட்ட பேசறேன்.... ஆனா இது எப்படி முடியும்னு தெரியல. .மீனா வீட்டுக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சனையாயிடும் இல்லையா..."

"ஆகாதும்மா. .எங்களை பத்தி உனக்கு தெரியும்மில்லையா. அனுவை பாக்க சகிக்காமத்தான் ரமேஷ்கிட்ட பேச சொல்றேன்.. அவளும் ரமேஷ்க்கு எந்த பிரச்சனையும் தரமாட்டா ..தருவதா இருந்தா எப்பவோ கொடுத்து இருக்கனுமே... !!

ஹேமாவின் கையை இரண்டையும் பிடித்து கெஞ்சினாள் அந்த தாய்."தயவுசெய்து உங்கம்மா மாதிரி என்னை நினைச்சிக்கோம்மா.. கொஞ்சம் ஆனந்த் கிட்ட சொல்லும்மா, நீங்க எல்லாரும் சேர்ந்து இந்த கல்யாணத்தை கொஞ்சம் நடத்திடுங்கம்மா.. அனு கழுத்துல ஒரு மஞ்ச கயறு போதும்.... அவ சந்தோஷமா இருப்பாம்மா.."

".....................ஆன்ட்டி..ஆனந்த்க்கிட்ட பேசி பார்க்கிறேன்... ...

இருவரும் கொஞ்ச நேரம் பேசியிருந்துவிட்டு கிளம்பினார்கள்.

வயதான அந்த தாயின் ஆசை நிறைவேற எந்த சாத்தியக்கூறும் இல்லை, அதை செயற்படுத்த நண்பர்கள், உறவினர்கள் என்று யாருமே உதவவும் இல்லை...

எப்போதும் போல இப்போதும் மனபுலம்பல்களுடன் தன் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையாதா என்றா தாயின் ஏக்கமும்...

யாருமே இந்த உலகத்தில் நமக்கு தேவையில்லை.. காதலனின் நினைவு மட்டுமே தன் வாழ்க்கை என கனவிலே மட்டுமெ வாழும் அனுவும்..

இவர்களை தவிர வேறு உலகம் அறியாத சந்துருவும்...............

நிழலாக தொடரும் நிலவு - எழுதிய எனக்கு முடிவுற்றது.............. மூவருக்கும் இன்னமும் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது..............