கேப்பங்கஞ்சி with கவிதாவுடன் -முதியோர் இல்லம் நடத்தும் தம்பதி

சின்ன சின்ன ஆசைகள் நிறைய இருக்கு, இதை ஆசை என்று சொல்ல முடியாது லட்சியம் என்று சொல்லலாம். எப்படியாவது என் வாழ்நாளில் சாத்தியப்படும் என்று காத்திருக்கிறேன் வேறு எதற்கும் அல்ல ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் அமைக்க. இதற்காக சந்தர்ப்பம் கிடைக்கும் போது எல்லாம் தேவையான அறிவையும், அனுபவத்தையும் பெற முயற்சித்துவருகிறேன். அப்படி கிடைத்த அனுபவம் - என் தோழியின் பெற்றோர்கள் மதுரையில் "மீனாட்சி ஆச்சி இல்லம்" என்ற முதியோர் இல்லம் நடத்திவருகின்றனர். அவர்களை சந்தித்து நேரடியாக பேசிய அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்வது மட்டுமல்லாமல், அவர்களுக்காக உதவி கரத்தையும் நீட்டுகிறேன்...

உதவி செய்ய விரும்புவோர்...

Account # -

SB A/C # 25609
Indian Overseas Bank
Aringar Annanagar Branch
Madurai - 625020


In Case of Cheque - Shd be in the name of "Meenakshi Achi Trust Old Age Home "

தோழியின் அப்பா - திரு.முத்து - இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் DGM ஆக இருந்து ஓய்வு பெற்றவர். அம்மா- திரு.வள்ளியம்மை, குடும்பத்தலைவி. அப்பா,அம்மா இருவரையும் ஒன்றாக சந்தித்து உரையாடிய தொகுப்பு :-

கவிதா :- அப்பா உங்கக்கிட்ட ரொம்ப நாளா இதைப்பற்றி பேசணும்னு இருந்தேன்..இப்பத்தான் இரண்டு பேருமாக கிடைச்சீங்க.. ஏன் இப்படி ஒரு இல்லம் அமைக்கனும்னு உங்களுக்கு தோன்றியது.

அப்பா:- நான் வேலையில் இருக்கும் போது வட இந்தியா டூர் சென்றிந்தோம். அங்கே எங்களின் தோழி ஒருவர் இப்படி ஒரு இல்லைத்தை நடத்தி வந்தார். அதை பார்த்து பிறகு எங்களுக்கும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

கவிதா:- இந்த எண்ணம் எப்போது தோன்றியது? எப்போது ஆரம்பித்தீர்கள்? அதற்கான அனுபவத்தை எப்படி உங்களுக்கு கிடைத்தது?
அப்பா:- 10 வருடங்கள் காத்திருந்து, ரிடையர் ஆனவுடன் செயற்படுத்தினோம். ஆனால் நேரடியாக இறங்கவில்லை. கிட்டத்தட்ட 20 இல்லங்களுக்கு நேரடியாக சென்று பார்த்து அதன் நல்லது, கெட்டது, பிரச்சனை, செலவு போன்றவற்றை ஆராய்ந்தபின்தான் தொடங்கினோம். சட்ட ஆலோசனைகளையும் பெற்றோம்

கவிதா:- எப்படி நீங்கள் முதியவர்களை தேர்வு செய்கிறீர்கள்.?
அப்பா:- பிள்ளைகளுக்கு மாதம் ரூ 2000/- க்குள் வருமானம் இருப்பவர்களை சேர்க்கிறோம். துணை யாரும் இல்லாமல் வந்தால் சேர்த்துக்கொள்வதில்லை. காரணம் வயதானவர்கள் என்பதால் அவர்களுக்கு உடல் நலம் பாதித்து ஏதாவது ஏற்பட்டால் பிரச்சனை வரும். அதனால் அவர்களுக்காக சொந்தமாக யாராவது உடன் வந்தால் மட்டுமே சேர்த்துக்கொள்கிறோம். மாதம் அவர்களிடம் ரூ 250/- வாங்குகிறோம். இது அவர்களின் பிள்ளைகள் தொடர்பில் இருக்கவேண்டும் என்பதற்காக மட்டுமே, சிலர் விட்டுவிட்டு சென்றால் திரும்பியே பார்ப்பதில்லை. இவை எல்லாமே அனுபவம் காரணமாக நாங்களே கொஞ்சம் கொஞ்சமாக இல்லத்தில் உறுப்பினர்கள் சேர்க்கையின் போது மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டது.

கவிதா:- அவர்கள் உங்கள் இல்லத்தில் சந்தோஷமாக இருக்கிறார்களா? அவர்களுக்கு உங்களின் கவனிப்பும் ஆதரவும் எப்படி கொடுக்கிறீர்கள்.?
அம்மா: - தினமும் காலையும், மாலையும் நான் சென்று 2-3 மணி நேரம் அவர்களுடன் செலவழிக்கிறேன். அப்பாவும் தினமும் சென்று கவனிப்பார்கள். ஒரு அக்கவுன்டன்ட் இருக்காரு, பார்ட் டைம்ல கணக்கு பார்க்க வராரு. சமையலுக்கு ஒரு அம்மா இருக்காங்க. காய்கரி நறுக்கி தருவது எல்லாம் இல்லத்தில் இருப்பவர்களே உதவிசெய்வார்கள். தினமும் காலையில் பூஜை முடித்துத்தான் சாப்பாடு. யோகா, தியானம் சொல்லி தருகிறோம். வாரம் ஒரு முறை ஒரு டாக்டர் ரெகுலராக வந்து எல்லோருடைய உடம்பையும் பரிசோதித்து செல்வார்கள். தேவையான மாத்திரை மருந்து முடிந்த அளவு நாங்களே கொடுக்கிறோம். வாக்கிங் செல்ல அவர்களை ஊக்கப்படுத்துகிறோம். அவர்கள் வீட்டிற்கு விஷேஷ தினங்களுக்கு கூட செல்ல பிடிக்காமல் இங்கேயே இருக்கிறார்கள். :) டிவி, பிரிட்ஜ், ஃபேன் வசதி இருக்கிறது. அணைவருக்கும் தரமான கட்டில், பெட், தலையணை, போர்வை, ஒரு கப்போர்டு வழங்கியிருக்கிறோம். பேப்பர், புத்தங்கள் வாங்கிக்கொடுக்கிறோம், நான் பாடல்கள், சுலோகங்கள் சொல்லி தருகிறேன்..:)

கவிதா:- ஓ..வீட்டுக்கு ஏன் போக மறுக்கிறார்கள். எப்படிப்பட்ட பிரச்சனை உடையவர்கள் இங்கே வருகிறார்கள்?
அம்மா:- எல்லோருக்குமே வீட்டில் மருமகள் பிரச்சனை தான். சிலரை மகள்கள் கூட வந்து சேர்ப்பது உண்டு. இவர்கள் இருந்தால் மனைவிக்கு/கணவருக்கு தொந்தரவாக இருக்கிறது, பிரச்சனையாக இருக்கிறது என்றே சொந்த பிள்ளைகளே இங்கே அழைத்துவந்து சேர்த்துவிடுகின்றனர்.

கவிதா:- பெண்களுக்கு சரி ஆண்களுக்கு கூடவா மருமகள் பிரச்சனை?
அம்மா: ஆமாம் கவி, பெரியவர்களை மனம் நோகும் படி பேசுகிறார்களாம், மறைமுகமாக திட்டுவது, சாப்பாடு சரியாக கொடுக்காமல் கஷ்டப்படுத்துவது, மேலும் சில வீடுகளில் வயதானவர்கள் இருந்தால் நான் இருக்கமாட்டேன் என்ற சொன்னதால் கூட இங்கு வந்து சேர்ந்து இருக்கிறார்கள்.

கவிதா:- உடல் நலம் ரொம்பவும் மோசமாகிவிட்டால் என்ன செய்கிறீர்கள்? தேவையான மருத்துவ வசதி உங்களிடம் உள்ளதா? எல்லோருமே வயதானவர்கள் ஆயிற்றே?
அப்பா:- மருத்துமனையில் சேர்ப்பது அதிகபட்ச உதவியாக செய்கிறோம், ஆனால் அவர்கள் வீட்டிலிருந்து கண்டிப்பாக ஒருவரை வரவைக்கிறோம். காரணம் ஒரு முறை எங்களுக்கு மிக மோசமான அனுபவம் ஏற்பட்டது. ஒரு பெரியவர் உடல் நலம் மோசமானதால் ஆஸ்பித்திரியில் சேர்த்து மகள், மகன் இருவருக்குமே சொல்லி அனுப்பினோம். ஆனால் அவர்கள் வரும் முன் பெரியவர் இறந்துபோய்விட்டார். இருவருமே கடைசி வரை வராமல் "அப்பா எங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை.. நான் ஏன் அவருக்கு இறுதி சடங்கு செய்யவேண்டும்? "என்று மகன் சொல்லிவிட்டான்

அம்மா:- மகளோ, எனக்கு 40 வயது வரை திருமணம் செய்யாமல் இருந்தார் அவரை பார்க்க நான் ஏன் வரவேண்டும், எதற்குமே தகுதியான ஆள் அவரில்லை என்று சொல்லிவிட்டாள். இங்கு இருப்பவர்கள் யாருமே சொந்த பிள்ளைகளிடம் ஒரு பாசத்துடன், ஆசையுடன் அவர்களை பார்க்கவேண்டும் என்று சொல்லுவதே இல்லை , ஏதோ ஒரு ஓரத்தில் அவர்களின் நினைவு இருந்தாலும் மனம் வெறுத்து அவர்களை மறந்து சந்தோஷமாக உள்ளனர்.

அப்பா:- இப்படி ஒரு சில பிரச்சனைகளை சந்தித்த பிறகு தான் இப்போது எல்லாம் சேர்க்கையின் போதே உறுப்பினர்கள் இறந்துவிட்டால் "நாங்கள் பொறுப்பேர்க்கிறோம்" என்று பிள்ளைகளிடம் எழுதி வாங்கிக்கொள்கிறோம்.

கவிதா:- இதற்கான செலவை எப்படி யார் சமாளிக்கிறீர்கள்.? எப்படி திட்டம் இட்டு நடத்துகிறீர்கள்?
அப்பா:- 5 லட்சம் முதல் போட்டு ஆரம்பித்தோம், உறவினர்களிடம், நண்பர்களிடமும் இருந்தே டோனேஷன் வருகிறது. ஒரு வீடு இதற்காக சொந்தமாக கட்டியிருக்கிறோம். இன்னமும் பணம் தேவைப்படுகிறது. பேங்கில் டிபாஸிட் செய்து வைத்துள்ளோம். மருந்து மாத்திரைக்காக வேண்டி மாதம் ஒருவர் தவறாமல் 500ரூ கொடுக்கிறார்.

கவிதா:- எல்லா மதத்தினரையும் சேர்த்துக்கொள்கிறீர்களா ?
அப்பா:- இல்லை, இந்துக்களை மட்டுமே. காரணம் இவுங்க (அம்மாவை பார்த்து) தினமும் பூஜை செய்யறாங்க. வேற்று மதத்தினரை சேர்த்தால் எங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. அவர்களுக்குள் பிரச்சனை வரும், அவர்கள் வழிபடும் நேரம் அவர்களின் வழிப்பாட்டு முறைகள் இவற்றால் கண்டிப்பாக மன வேற்றுமை வரும். இதை தடுக்கவே வேற்று மதத்தினரை சேர்த்துக்கொள்வதில்லை. "மீனாட்சி ஆச்சி" என்ற பெயர் என் பாட்டியுடையது, எனக்கு அப்பா அம்மா இல்லை, ஆச்சித்தான் வளர்த்தார்கள்,அதனால் ஆச்சியின் பெயர் வைத்துள்ளேனே தவிர, சாதியை எல்லாம் நாங்கள் பார்ப்பதில்லை. எந்த சாதியாக இருந்தாலும் சேர்த்து கொள்கிறோம்.

கவிதா: இப்போது எத்தனை பேர் இருக்கின்றனர்?
அப்பா: சரியாக பத்துபேர் இருக்கின்றனர், இதற்கு மேல் ஒருவர் சேர்ப்பாதானால் கூட கட்டிட வசதி, அதற்கான பணமும் மேற்க்கொண்டு தேவைப்படுகிறது. அதனால் பணம் சேர்த்துவிட்டு எண்ணிக்கையை அதிகபடுத்தலாம் என்று இருக்கிறோம்.

கவிதா:- அப்பா எனக்கும் இப்படி ஒன்று செய்யனும்னு ஆசை ஆனா ஆதரவற்ற குழந்தைகளுக்காக தான் செய்யனும்னு இருக்கேன். அதான் உங்களை இப்படி நொய் நொய்ன்னு கேள்வி கேக்கறேன்.. :)
அப்பா & அம்மா:- அதை அப்புறம் செய்துக்கோம்மா இப்ப எங்களோட சேர்ந்துக்கோ.. :)))))

கவிதா:- நான் எப்படி உங்களுக்கு உதவ முடியும்னு சொல்லுங்கப்பா?
அப்பா :- உங்க பிள்ளை, கணவர், உங்க பிறந்தநாளைக்கு ஒரு வேலை சாப்பாடு அவர்களுக்கு போட உதவிசெய்யுங்க...சாதாரண சாப்பாடுக்கு ரூ.300/-, வடை, பாயாச சாப்பாடிற்கு ரூ.500/-,இப்படி எல்லாம் போட்டா, நல்லா விரும்பி சாப்பிடுவாங்க.., தீபாவளி, பொங்கல் இதுக்கு எல்லாம் ஏதாவது பணம் அனுப்பினீங்கன்னா சந்தோஷம். உங்க பெயரை போர்ட்ல டிஸ்ப்லே செய்வோம்..:))) உதவி செய்மா...:))

கவிதா:- கண்டிப்பாக செய்றேன்ப்பா.. என்னோட ப்ளாக்ல போடறேன் என்னோட பிரன்ட்ஸ் எல்லாருமே செய்வாங்க... உங்க டீடைல்ஸ் கொடுங்க.. கான்டாக்ட் நம்பர், அட்ரஸ் எல்லாம் கொடுங்க... போட்டா இருந்தா கொடுங்க....
அப்பா:- வாசுக்கு அனுப்பறேன்மா நீ வாங்கிக்கோ...

கவிதா:- அப்பா இவ்வளவு பொறுமையா என்னோட நொய் கேள்விக்கு எல்லாம் இரண்டு பேரும் பதில் சொன்னீங்க.. எனக்கு ஒரு ஐடியா வந்து இருக்கு.. என்ன எல்லாம் செய்யணும்னு.. :) தாங்ஸ்ப்பா.. தாங்ஸ்ம்மா... :)))
=========================
போட்டோ அடுத்த பதிவில்....

அணில் குட்டி அனிதா:- பாவம் அவிங்க.. ஏதோ ஒரு நாள் பொண்ணு வீட்டுல வந்து இருக்கலாம் வந்தா அம்மணி அவங்களை நோண்டு நோண்டுனு நோண்டிட்டாங்க...

பீட்டர் தாத்ஸ்:- Charity begins at home, but should not end there”
Charity sees the need, not the cause”


அவர்களுக்கு உதவி செய்ய நினைப்பவர்கள் தொடர்பு கொள்ள -






சில பதிவர்களும் …..அணில்குட்டியும்… .!

ச்சும்மா ஒரு கற்பனை யாரும் கோச்சிக்கிட்டு என்னை திட்டப்படாது அடிக்கப்படாது, கொலைவெறியோட திரியப்படாது… ஆட்டோ அனுப்பப்படாது….சரியா டீல்….. டீல்’ ல கையெழுத்து போட்டுட்டு அதுக்கு அப்புறமா பதிவ படிக்க போங்க…ஓகே……

ம்ம்….இப்ப என்ன மேட்டருன்னு சொல்றேன்.. நம்ம அண்ணாச்சீ’ங்க, தங்கச்சீங்க…. தம்பிச்சீ’ங்க.. அக்காசீ’ங்க., தாத்தாங்க, பாட்டிங்க, மச்சான்ஸ், மச்சினிச்சீ’ங்க.. மாமூங்க.. மாமிங்க.., சித்திங்க..சித்தாப்பாங்க.. குட்டீஸ்ங்க…இப்படி ஒரு பேமலியா இருக்க இந்த ப்ளாக்ல.. சில பேரு இப்படி இருந்தால்….த்தான் அதிசயம் ஆச்சரியம்… ….

1. ராகவன் சார் – தானே கேள்வி கேட்டு தானே பதில் சொல்லி பதிவு போடாமல் இருந்தால்
2. சிபி- நயனை எவ்வளவு கேவலமா திட்டி பதிவு போட்டாலும் கோவப்படாம சிரிச்ச முகத்தோட அவங்களை பாராட்டினா…
3. சென்ஷி – கவிதை எழுதும் போது எல்லாம் ஒரு நடிகை படம் போடாமல் இருந்தால்..
4. சந்தோஷ் – செய்தியை சுட்டி கொடுத்து பதிவு போடாமல் இருந்தால்…
5. நாகை சிவா – கவி பதிவு -ஆண்கள் என்ற மிருகத்தை – மறந்துவி்ட்டால்…
6. ஜொள்ளு – அநியாயத்துக்கு ஜொள்ளுவிடறதை கொஞ்சூட்டு குறைச்சிக்கிட்டா
7. ரவி – யார் டவுசரை’யாவது கழட்ட முயற்சி செய்யாமல் இருந்தால்
8. லக்கி – வெட்கபடாதிங்க சார் அப்டேட் செய்யாமல் இருந்தால்..
9. பொன்ஸ் – திரும்பி பிளருவதை ஆரம்பிச்சிட்டா..
10. பாலா – பின்னூட்டம் போட்டுட்டா…
11. கைப்பூ- எங்களுக்கு பிரியற மாதிரி பதிவெழிதிட்டா..
12. கோவிகண்ணன் – ரவியை பாராட்டி பதிவு போட்டால்..
13. ராப் அக்கா :- மீ த ஃபஸ்டு ‘ போடாட்டா..
14. துர்கா : அண்ணன்னு கூப்பிட்டு நம்ம அண்ணன்களை எல்லாம் நோகடிக்காமல் இருந்தால்..
15. மங்கைஜி- சமுதாயம் சாராத பதிவுகள் எழுதினால்….
16. குழலி, செல்லா – ரவிக்கூட சேராமல் டூ விட்டுட்டாஆ..
17. தெகாஜி – விளக்கம் சொல்லறேன்னு நம் உயிரை வாங்காமல் இருந்தால்….
18. உண்மைத்தமிழன் – கொஞ்சமா எழுதிட்டாஆஆஆ?!!
19. போலி – கெட்ட வார்த்தையா அப்படின்னா? ன்னு கேட்டுட்டா ?
20. திவ்யா – கதை எழுதாமல் இருந்தால்….
21. கோபி- நடுநிலையா நின்னு கவிக்கு டெரர் பட்டம் வாங்கிக்கொடுத்துட்டா…
22. முத்துக்கா – “இதுதாண்டா முத்து” ன்னு தனி முத்திரை பதிக்கும் படியா பதிவு எழுதிட்டா….
23. பிரபு- பொண்ணுங்களை தவிர வேற பதிவு போட்டால்
24. ஆசிப் அண்ணாச்சி – “டே.... வார்த்தை போடாமல் எழுதிட்டா…


லாஸ்ட் பட் லீஸ்ட்……..


அணிலு :- இப்படி உங்களை எல்லாம் புகழ்ந்து அடிக்கடி பதிவு போடாமல் இருந்தால்… ஹி ஹி ஹி…....


உங்களுக்கும் யாரையாச்சும் புகழ்னும்னா புகழ்ந்துட்டு போங்க…. குறிப்பா இன்னைய டார்கட்… வேற யாரு நம்ம கவித்தான்….. ஸ்டார்ட் த கேமு….

ஹய்யோ ஹய்யோ….!! கவி உங்கள நெனச்சா எனக்கு பாவமா இருக்கு… !!

பீட்டர் தாத்ஸ் : The Road to success is paved with good intentions.

சிங்கார நாக நாக நாகவல்லியே...!!

நாகவல்லிக்கும் எனக்கும் ஏதோ எப்பவும் ஒரு தொடர்பு பந்தம் இருந்துக்கிட்டே இருக்கு. அடிக்கடி பாம்புகளை பார்ப்பது, உள்ளே நடுங்கினாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் தைரியமாக கண்ணோடு கண் பார்த்து பேசுவது போன்றவை நடக்கும்.

கேரளாவில் இருக்கும் போது இது நடந்தது.. ஆயாவிற்கு போன் செய்து சொல்லுவேன். பெருங்காயம் கரைத்து வீட்டு வாசல் படிகளில் தெளித்துவை, அந்த வாசத்திற்கு பாம்பு வராது என்றார். பக்கத்துவீட்டு ஆன்ட்டியும் அதேயே சொன்னார். அதை எல்லாம் செய்தும் எனக்கும் அதுக்கும் உள்ள பந்தம் போகவில்லை.

கேரளாவில் பொதுவாக தோட்டங்களில் புல் செடிகள் எல்லாம் முழங்கால் அளவிற்கு வளர்ந்து இருக்கும். அதை ஆள் வைத்து 2-3 மாதங்களுக்கு ஒருமுறை செதுக்கி எடுக்கவேண்டும். இல்லையென்றால் இப்படி பாம்புகளுடன் நாமும் நம்முடன் பாம்புகளுமாக உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருக்கவேண்டும்.

இப்படிப்பட்ட அனுபவம் இல்லாத புது இடம், சொந்த ஊரில் நடப்பது போலவே அங்கேயும் கொடியில் காயவைத்த துணிகளை எடுக்க தோட்டதிற்கு சென்றேன். தோட்டம் வீட்டை விட 5 படிகள் மேல் ஏறி செல்ல வேண்டும். என் ரவுண்டு குட்டி (என் பையன், இப்படி நிறைய செல்லமாக அவனை நான் அழைப்பதுண்டு) என் பின்னாடியே வந்தான். அவனுக்கு என்னுடைய சுடிதாரை, புடவையை பிடித்துக்கொண்டு நடக்கவில்லை என்றால் தூக்கம் வராது. அதே போலவே நான் நடக்க என் பின்னால் அவனும்.. துணி எடுத்துக்கொண்டு இருக்கும் போது மிக மெதுவாக ஒரு சத்தம். ஸ்.ஸ்...ஸ்.... இடது கையில் துணி, எனக்கு பின்னால் இருந்த ரவுண்டு குட்டியை வலது கையால் என்னுடன் சேர்த்து இறுக்கி அனைத்தேன்...

"குட்டி சத்தம் போடாம அப்படியே அம்மாவோட சேர்ந்து நில்லு...காலை நகர்த்தாதே " என்றேன்.

"ஏம்மா..?!! "

"பாம்பு இருக்குடா..எங்கன்னு தெரியல சத்தம் மட்டும் வருது..அப்படியே ச்டாச்சு மாதிரி நிக்கனும் சரியா...."

"................."

நின்ற இடத்திலிருந்து சுற்றி பார்வையை செலுத்தினேன்... என் கால்களூக்கு ஒரு முழம் இடைவெளியில் இடது கை பக்கம் ஒரு வல்லி தலையை தூக்கி நின்று (படம் எடுத்து) என்னை போட்டுத்தள்ள காத்திருந்தது.

பார்த்த அடுத்த வினாடி உடம்பு ஆடியது..என் உடம்பின் ஆட்டம் ரவுண்டு குட்டிக்கும் தெரிந்துவிட்டது போல.. எட்டி அவனும் பார்த்துவிட்டான்....

"அம்மா போயிடலாம் வா..." என்னை பின்னால் இருந்து இழுக்க ஆரம்பித்தான்...

"குட்டி இழுக்காத விழுந்துடுவேன்..ன்னு சொல்ல அவனுக்கு என்னை பாம்பு கடித்துவிட போகிறது என்ற பயத்தில் என்னை பிடித்து வேகமாக இழுக்க...பின்னாலே இருவரும் வினாடிகளில் அந்த இடத்தைவிட்டு தடுமாறி வர.. படிக்கட்டுகள் இருவருக்குமே நினைவில்லாமல்.. கால் தடுமாறி வைத்து படிக்கட்டுகளில் முதலில் அவன் விழ அவனை தொடர்ந்து நான் விழ.... எப்படியோ தோட்டத்தைவிட்டு கீழே வந்துவிட்டோம்.. (இதில் வந்த அத்தனை வினாடித்துளிகளும் என் கான்சன்ட்ரேஷன் அந்த பாம்பின் அசைவுகளில் இருந்தது. எங்களை நோக்கி வருகிறதா.. குட்டியுடன் இருக்கோமே போன்ற கான்ஷியஸ் எனக்கு இருந்தது.)

நாங்கள் விழுந்த சத்தத்தில் பக்கத்துவீட்டு ஆன்ட்டி எட்டிப்பார்க்க.. "ஆன்ட்டி பாம்பு பாம்பு கருப்பா... படம் எடுத்துக்கிட்டு நிக்குது..வாங்க ஆன்ட்டி......பயமா இருக்கு..."

ஆன்ட்டி அவங்க சமையல்கார பையனை அனுப்ப அவன் தடியுடன் ஓடி வந்தான்....ஆனால் எவ்வளவு தேடியும் அந்த பாம்பு கிடைக்கவில்லை...

ஆன்ட்டி "எப்படிம்மா இருந்தது...எவ்வளவு பெருசு....?!!

"கருப்பா இருந்தது ....இல்லல்ல...கொஞ்சம் கருப்பா இருந்தது...இல்ல மேல் பக்கம் கொஞ்சம் கருப்பா உள் பக்கம் சிமெண்டு கலரா இருந்தது....நீட்டு தெரியல..தலையத்தான் பாத்தேன்.. படம் எடுத்து என்னை நேரா பாத்துது....நானும் பா....த்துட்டேன்.... நானும் அதை நே...ரா பாத்..துட்டேன் ஆன்ட்டி எ....னக்கு பயமா இருக்கு...ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ன்னு சத்தம் போட்டுது.... என் குட்டிக்கு ஒன்னும் ஆகல....அவன் என் பின்னாடித்தான் இருந்தான்.... நாங்க ஓடிவந்து விழுந்துட்டோம்.... "

பிரமை பிடித்தது மாதிரி இருந்தேன்.. என் பையனை இறுக்கி இருந்த என் கை விடவே இல்லை..அவனும் என்னை இறுக்கமாக கட்டிக்கொண்டு நின்றிருந்தான். இருவருமே ஏகத்துக்கு பயந்து போய் இருந்தோம்...

ஆன்ட்டி..தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து.. "ஒன்னும் இல்லைம்மா..போயிடுச்சி.. ஒன்னும் செய்யாதும்மா... அதுப்பாட்டுக்கும் போயிடும் .இங்க எங்கேயோ கூடு இருக்கு நாளைக்கே செதுக்கி பாத்துடுவோம்..பயப்படாதேம்மா..."

"இல்ல ஆமா ....என் பையனுக்கு ஒன்னும் ஆகல......ஆன்ட்டி ப்ளீஸ் இதை சீக்கிரம் க்ளீன் பண்ணிடுங்க.."

"நீ துணிய மாடியில காயப்போடும்மா.. இங்க வேண்டாம்.. "

========================

ஒரு வழியாக இது முடிந்த பிறகு எனக்கும் வல்லிக்கும் உள்ள பந்தம் நின்றுவிட்டதாக நினைத்தேன். கேரளாவிலிருந்து கிளம்புகிறோம்.. மூட்டை முடிச்சி எல்லாம் கட்டி நடு ஹாலில் வைத்துவிட்டு மிச்சம் இருக்கும் வேலைகளை செய்து க்கொண்டு இருந்தேன். வீடே காலி, மாலை 5 மணிக்கு ரயில். 3 மணி இருக்கும் குட்டியும் அவங்க அப்பாவும் வெளியில் சென்றுவிட்டனர். நான் மட்டுமெ இருந்தேன்.

முன் வாசல் கதவு, பின் வாசல் கதவு எல்லாம் திறந்து இருந்தது. வீட்டை பெருக்கி குப்பையை கொட்ட தோட்டத்திற்கு போக பின் வாசல் கதவிற்கு செல்ல... பந்தம் வந்து சரியாக பின் வீட்டு வாசலை தாண்டி சமையல் அறைக்கு வந்துக்கொண்டு இருந்தது. அத்தனை நீளமான பாம்பை அவ்வளவு அருகில் அப்போது தான் பார்த்தேன். குட்டி இல்லாததாலோ என்னவோ அதை பார்த்தவுடன் எனக்கு பயம் வரவில்லை... என் காலடிக்கு சட்டென்று தலையை தூக்கியது... நானும் அப்படியே நின்று அதையே பார்த்தேன். .அதுவும் என்னையே பார்த்தது... நானும் நகரவில்லை அதுவும் நகரவில்லை.... பார்த்துக்கொண்டே இருந்தோம்...

பேச ஆரம்பித்தேன். "என்ன வேணும் உனக்கு என்னை போட்டு தள்ளனுமா? எதுக்கு என்னையே சுத்தி சுத்தி வர.? நான் ஊருக்கு போறேன்ன்னு எப்படி தெரியும் உனக்கு..? கடைசியாக பாக்க வந்தியா? இல்ல போட்டு தள்ள வந்தியா? சொல்ல்லு.....

கொஞ்சம் கூட எனக்கு பயமில்லாமல் மிக சாதாரணமாக ரொம்பவும் பழகிய ஒருவருடன் பேசுவதை போன்று பார்த்து பேசினேன்.. அது திருப்பி நாகவல்லி சீரியல்ல வர மாதிரி டைலாக் டெலிவரி எதுவும் இல்லாமல் தலையை பேக் எடுத்து வந்தவழியே சென்றது. அது செல்ல செல்ல நானும் பின்னாலே சென்றேன்.. லேசாக என்னுடைய அசைவுகளை திரும்பி பார்த்துக்கொண்டே தான் சென்றது.. அதை கடைசி வரை தொடர்ந்து கண் மறையும் வரை பார்த்தவிட்டு வந்தேன். குட்டி உடன் இல்லாததால் பயம் இல்லாமல் இருந்தேன் என்பதை உணரமுடிந்தது....

பாம்பின் கண்களை நேராக பார்த்த அனுபவம் எனக்கு மனதில் இன்றளவும் நின்றுவிட்ட ஒன்று... சென்னையிலும் இப்பவும் பாம்புகளை பார்த்தால் நின்று நிதானமாக அவற்றின் அசைவுகளை ரசிக்கமுடிகிறது.... கண்டிப்பாக உடன் யாரும் இல்லாவிட்டால் மட்டுமே. .யாராவது இருந்தால் அவர்களுக்கு ஆபத்து வரக்கூடாது என்பதிலே மனம் சென்று கத்தி ஆர்பாட்டம் செய்து..... :)))

அணில்குட்டி அனிதா :- கவி சிங்கார நாகவல்லி க்கு பேசமா அப்ளை பண்ணுங்க எடுத்துக்குவாங்க...அனிமெஷன் எதுவும் இல்லாம நீங்களும் நிஜ பாம்புவும் நடிக்கலாம்..அனிமேஷன் செலவு மிஞ்சும்..!! ம்ஹிம் பிரோடிசர்க்கு தான் பாவம் நேரம் சரியில்லாம போகும் !!!..... பாம்பை நேராக பார்த்து பேசியதால் இனி உங்களை கவிபாம்பு.. இல்ல பாம்புகவி.. இல்ல நாகக்கவி....வல்லிகவி....சேக்..... ஏதொ ஒரு பேரு குடுங்கப்பா இவிங்களுக்கு...... தாங்க முடியல..

பீட்டர் தாத்ஸ் :- Owing to ignorance of the rope the rope appears to be a snake; owing to ignorance of the Self the transient state arises of the individualized, limited, phenomenal aspect of the Self.

நீ இங்கு இல்லை........

நீ இங்கு இல்லாமல்...

உனக்கு முன் தூங்கி
உனக்கு பின் விழித்து

திறக்கமுடியாத கண்களுடன்
நீ இருக்கும் இடம் தேடி
வநது-
உன் மேல் சாய்ந்து
நீ படிக்கும் செய்திதாளின் பக்கங்களாய்
சில மணிதுளிகள்
உன் காதுக்குக்கும்
கழுத்துக்கும் இடையே
முகம் புதைத்து தேய்த்து....

"போதுண்டீ போடி.."

பிடித்த தள்ள நீ இங்கு இல்லை...

உன் மடியில் உட்கார
இடம் தேடி
உன் செய்திதாளை கசக்கிப்போட்டு
நீ படிக்கும் செய்திதாளாய்
மீண்டும் உன் மடியில்
சில மணிதுளிகள்...

"போதுண்டீ போடி.."

பிடித்த தள்ள நீ இங்கு இல்லை...

உன் சட்டை விளக்கி
உன் மார்பில் முகம் புதைத்து
மூக்கழுத்தி தேய்த்து
முத்தமிட்ட
நொடிகளில்...

"போதுண்டி போடி"

பிடித்த தள்ள நீ இங்கு இல்லை...


அணில் குட்டி அனிதா: அட அட அட ஃபீலிங்ஸ் ஆப் வூட்டுக்காரா?! ஓவர்த்தான் கவிஜ எழுதறாங்க.. எழுதனுதுல என்னைய மறந்துட்டாங்க..சரி சரி போட்டும்..ஆனா.. ஒன்னு நீங்க கவனீச்சீங்களா... இவிங்க வூட்டுக்காரு புடிச்சி தள்ளிவுட்டுக்கிட்டே இருக்காரு ஏன்னு உங்க எல்லாத்துக்கும் டவுட் வரவே இல்லயா????..வரணுமே..... அதுக்கு தானே நான் இங்க இருக்கேன்.. முழு பூசிணிக்காய சோத்துல மறச்சிட்டாங்க நம்ம உஷார் அம்மணி... இப்ப நான் எழுதறேன் பாருங்க அதே கவுஜைய..நிஜமான சிசுவேசனுக்கு-

ஃபஸ்டு - "போதுண்டீ போடி.." - ஏண்டி பல்லைக்கூட விளக்காம டைலி என் மேல வந்து விழற தாங்க முடியல போய் தொல..

செகண்டு: "போதுண்டீ போடி.." வெயிட்தாங்க முடியல ஏன்ச்சி தொல....."

தெர்டு் - "போதுண்டீ போடி.." ஆபிஸிக்கு டைம் ஆச்சி போ போ போயி சமையல கவனி.... உன் முத்தம் எல்லாம் கோவத்துல பாத்திர சத்தமா ஆகுன்னு எனக்கு தெரியும்...கிளம்பு காத்து வரட்டும்...!

பீட்டரு நீ இல்லாம கவி ப்ளாக்ல இல்ல மேட்டரு.. அவுத்துவுடு...

பீட்டர் தாத்ஸ் :


Nothing makes the earth seem so spacious as to have you at a distance; they make the latitudes and longitudes.

Within you I lose myself...
Without you I find myself
Wanting to be lost again.

Your absence has gone through me
Like thread through a needle
Everything I do is stitched with its color.

I dropped a tear in the ocean. The day you find it is the day I will stop missing you.

அண்ணன் சென்ஷி-க்கு அணில்குட்டியின் கவிதை

இரண்டு மூணு நாளாஆ கவிதா தம்பிக்கு ஒரு பாட்டு எழுதனும்னு பாட்டு எழுதனும்னு ஒரே பினாத்தல்… தூக்கத்துல எழுப்பினா க்கூட தம்பிக்கு ஒரு பாட்டு எழுதனும்னு சொல்லிக்கிட்டே எழுந்திருக்காங்க.... சரி எழுதுவாங்கன்னு பாத்தா எழுத தான் அம்மணிக்கு நேரம் இல்லை

அதனால் இந்த சான்ஸை மிஸ் பண்ணாம நானு அண்ணன் சென்ஷி'க்கு ஒரு கவிஜ எழுதி இருக்கேன் ….


நீங்க எல்லாரும் படிக்க முடிஞ்சா படிங்க.. ஆனா அடிக்க மட்டும் வராதீங்க.... !! சின்ன உடம்பு தாங்காது…ஒகே!!

ஸ்டார்ட் கேமரா.. ச்சேஏ!ஸ்டார்ட் தி கவுஜை..!!

அண்ணே !!

நீ கமென்ட்டு போடறதுல சுட்டி
ஏன்னா நீ எப்பவுமே வெட்டி

ராத்திரியான உன் கையில புட்டி
நீ பாக்க விரும்பறதோ பல்லான்ன பார்ட்டி

உன் பிரொப்பைல்ல எந்த நேரமும் ஒரு குட்டி
அதை பாத்தூ நீ அடிக்கடி அடிக்கற சீட்டி

நீ வாய தொறந்தா கவுஜை வருது கொட்டி
தாங்க முடியாம நாங்க எல்லாரும் எடுப்போம் உன் பல்லை தட்டி

நீ இருக்கறது சார்ஜாவில ஒரு சிட்டி
உன் போட்டா பாத்த பிறகும்
நாங்க உசுரோட இருந்தா எங்க உசுரு ரொம்ப கெட்டி

இவ்வளவு அ(ழு)ழகான ஒரு கவுஜைய நான் தட்டி
நீ என்னவோ அனுப்ப போவது என்னை மெயில்ல திட்டி

இந்த கவுஜைக்காக கவிதா எனக்கு கொடுத்த பட்டம் "பட்டி"
இதுக்கு மேல இங்க நின்னா கும்பிடுவாங்க
கவி என் போட்டோக்கு மாலைய "மாட்டி"

வரட்டாஆஆஆஆஆ!!

தாத்ஸு நீ ஒதுங்கிக்கோ....இன்னைக்கு வேணாம் ஒன்னோட பீட்டரு..

நிழலாக தொடரும் நிலவு -இறுதி பாகம்

முன் கதை - பாகம் 6

நொச்சிக்குப்பம் கடற்கரை பகுதி...நடைபாதையில் மீன் கடைகளை தாண்டி, கலராக்கி நாட்டு கோழிமுட்டை என்று விற்கும் கிழவியை தாண்டி, நடுரோட்டில் விளையாடும் சென்னை நொச்சிக்குப்பம் கிரிக்கெட் டீமை தாண்டி சந்துருவும், ரமேஷ்ஷும் அமைதியாக பீச் பக்கமாக நடந்து சென்றனர். மெரினா கடற்கரை மிகவும் கூட்ட நெரிசல் ஆன பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து நொச்சிக்குப்பம் ஏரியாவை அவர்கள் சந்திக்குமிடமாக்கியிருந்தார்கள். ஆள் அரவமற்ற அந்த இடத்தில் அவர்களின் அழுகையையும், சிரிப்பையும் அவர்களுக்கு மட்டுமே சொந்தமாக்கியது.....

நீண்ட அமைதியும் பெருமூச்சுமே அதிக நேரம் இருந்தது...., அமைதியை உடைத்தான் ரமேஷ்... "மாமு...பேசுடா...என்னால இப்படி இருக்க முடியலடா..."

"ம்ம்..... சாரிடா மச்சி அன்னைக்கு உன்கிட்ட அப்படி பேசறமாதிரி ஆயிடுச்சி.. நீ எவ்வளோ கஷ்டப்பட்டு இருப்பேன்னு எனக்கு தெரியும்டா ஆனா வேற வழியில்ல...."

".......விடுடா.... மேட்டரே இல்ல.. அப்ப கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்தது.. ஆனா இது கண்டினியூ ஆறது தான் மனசு போட்டு கொல்லுதுடா..பேசிடலாண்டா ..."

யதார்த்தை பேச ஆரம்பித்தனர். நடந்தைவை எல்லாமே எப்படி நடந்தது யாரால் நடந்தது என்று விவாதிக்காமல் நடக்க வேண்டியதை பேசவே இருவருமே நினைத்தனர். நீண்ட விவாததிற்கு பிறகு ரமேஷ் இனி சந்துரு வீட்டுக்கு வரவதே இல்லை என முடிவானது.... அனுஷாவை பற்றிய ரமேஷ் 'இன் கவலை அத்தனையும் சந்துருவடனே நிற்கட்டும் என்று முடிவானது. எதையும் முடிவுடன் நெருங்கி பழக்கமில்லாத இருவரும் எல்லாவற்றிற்கும் முடிவெடுத்தனர்.

நட்பு என்ற அந்த மந்திரக்கோல் அவர்களை ஆட்டிபடைத்தது என்னவோ உண்மைதான், விடவும் முடியாமல் தொடரவும் முடியாமல் இருந்த இவர்களின் மனத்துடிப்பு மீனாவிற்காகவும், அனுஷாவிற்காகவும் விட்டுக்கொடுத்து விலகிசெல்லாமல், மனம் விட்டு பேசி இன்னும் அதை நெருக்கமாக்கி, அழகுபடுத்தி பார்த்து ரசித்தார்கள்.

அனுஷாவின் பிடிவாதம் தொடர்ந்தன... ரமேஷின் நினைவிலேயே வாழ்ந்துவிடுவேன் என்பதை வேதவாக்காக தொடர்ந்தாள். அவளின் திருமணத்திற்கு பின் தான் என் திருமணம் என்று சந்துருவும் அவளின் மாற்று முடிவிற்காக காத்திருந்தான்.

பார்வதி அம்மா மீனாவின் வருகைக்கு பின் சுத்தமாக மாறி இருந்தார்கள், தன் பெண்ணை எப்படியும் ரமேஷ்' உடன் வாழவைக்க வேண்டும் என்று திவரமாக இருந்தார்கள்.

ஒரு வெள்ளிக்கிழமை.. எப்போதும் போல கோயிலுக்கு சென்ற பார்வதியம்மா குடும்ப தோழி ஹேமாவை பார்த்தார்கள்.

"ஹேமா கொஞ்சம் உக்காறேன் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.."

"ஆன்ட்டி எப்படியிருக்கீங்க.. அனு, சந்துரு எப்படி இருக்காங்க..."

"......ஏதோ இருக்காங்கம்மா...... ஹேமா உனக்கு தெரியுமில்ல.அந்த பொண்ணு மீனா வந்து வீட்டு வாசல்ல நின்னு கத்திட்டு போனது? "

"...ம்ம்... கேள்விப்பட்டேன் ஆன்ட்டி?"

"..ரமேஷ் சுத்தமா வரதை நிறுத்திட்டான்ம்மா...."

".....நல்லது தானே ஆன்ட்டி..அனு கொஞ்சம் கொஞ்சமா மாறிடுவா....."

"..இல்லமா..அனுவோட உடம்பு மோசமாயிட்டே போது, ஒழுங்கா சாப்பிடறது இல்ல.. தூங்கறது இல்ல......எங்கக்கூட பேச மாட்டறா.... என்னால பாக்கமுடியலம்மா.."

"ஆன்ட்டி, கவலை படாதீங்க சரியாயிடும். ...நீங்களும் சந்துருவும் இருக்கும் போது அவளுக்கு என்ன மகாராணி மாதிரி இருப்பா.. கவலைய விடுங்க... "

"இல்லமா....அப்படித்தான் சரியாயிடும் சரியாயிடும்னு பொறுமையா இருந்தேன்... நல்ல வேளை உன்னை இங்கே பார்த்தேன்.. இந்த புள்ளைங்க என்னை எங்கேயும் அனுப்பாதுங்க.. எப்படி யார் கிட்ட சொல்லி முடிக்கறதுன்னு இருந்தேன்.. இப்ப நீ எனக்கு ஒரு உதவி பண்ணுமா.."

"சொல்லுங்க ஆன்ட்டி..."

"உன்னோட பெரியம்மா பொண்ணோட கஸின் இருக்கானே ஆனந்த அவனோட ஃபிரண்டு தானே ரமேஷ்....?!! நீங்க எல்லாம் ரொம்ப க்ளோஸ் தானேம்மா..? ஆனந்த் கிட்ட சொல்லி எப்படியாவது ரமேஷ்'க்கும் அனுவுக்கும் கல்யாணம் செய்துவைக்க சொல்லேன்... என் பொண்ணு படற கஷ்டத்தை என்னால பாக்க முடியலைம்மா..."

ஹேமா அதிர்ந்து போனாள்.. "ஆன்ட்டி ... நீங்களா இப்படி பேசறீங்க... எப்படி ரமேஷ்'க்கு இன்னொரு கல்யாணம் செய்யமுடியும்..........அதுவும் மீனா இருக்கும் போது .. "

"என் பொண்ணுவிட்டு கொடுத்த வாழ்க்கை ஹேமா அது.... எப்படியும் மீனாவை விட்டுட்டு ரமேஷ் வந்துடுவான்னு நெனச்சோம்.. .அவ்வளவு உண்மையாதானே இரண்டு பேருமே இருந்தாங்க..... கட்டாயப்படுத்தி அவங்க சந்தோஷத்துக்கு கல்யாணம் பண்றாங்க.. ஆறே மாசம் அவளை டைவர்ஸ் பண்ணிட்டு உன்னை கல்யாணம் செய்துக்கறேன்னு சொன்னாம்மா... ஆனா இப்ப வீட்டு பக்கம் கூட தல வைக்கறது இல்ல.... நான் இன்னொரு பொண்ணு வாழ்க்கையை கெடுக்க கூடாதுன்னு தான் நெனச்சேன்.. ஆனா.. எப்ப மீனா வந்து என் பொன்ணை இவ்வளவு அசிங்கபடுத்தி பேசினாலோ அப்பவே.. அவளை ரமேஷ் கிட்ட இருந்து பிரிக்கனும்னு முடிவு பண்ணிட்டேன்ம்மா.. பத்தாக்குறைக்கு அனுவை பார்க்க பார்க்க பெத்த வயிறு பத்தி எரியுதும்மா..."

"நீ போய் சொல்லும்மா.. என் பொண்ணை அவன் ஆஹா ஓஹோன்னு வாழ வைக்க வேணாம்.... கோயில்ல வச்சி தாலிக்கட்டி விட்டுட சொல்லு.. அது போதும்மா. .இப்படி இவ கஷ்டப்படறதுக்கு வாழ்நாள் பூரா அவன் கட்டின தாலியோட அவனுக்கு பொண்டாட்டியா எங்க வீட்டிலேயே இருந்துடுவாம்மா...அவளை கல்யாணம் செய்துகிட்டா போதும்மா....இப்படி அவ நடைபிணமா இருக்கமாட்டா..நல்லா ஆயிடுவாம்மா.."

ஹேமாவிற்கு என்ன சொல்லுவதென்றே புரியவில்லை.. அந்த வயதான தாயின் ஆதங்கமும் அழுகையும் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.. "ஆன்ட்டி..நான் ஆனந்த் கிட்ட பேசறேன்.... ஆனா இது எப்படி முடியும்னு தெரியல. .மீனா வீட்டுக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சனையாயிடும் இல்லையா..."

"ஆகாதும்மா. .எங்களை பத்தி உனக்கு தெரியும்மில்லையா. அனுவை பாக்க சகிக்காமத்தான் ரமேஷ்கிட்ட பேச சொல்றேன்.. அவளும் ரமேஷ்க்கு எந்த பிரச்சனையும் தரமாட்டா ..தருவதா இருந்தா எப்பவோ கொடுத்து இருக்கனுமே... !!

ஹேமாவின் கையை இரண்டையும் பிடித்து கெஞ்சினாள் அந்த தாய்."தயவுசெய்து உங்கம்மா மாதிரி என்னை நினைச்சிக்கோம்மா.. கொஞ்சம் ஆனந்த் கிட்ட சொல்லும்மா, நீங்க எல்லாரும் சேர்ந்து இந்த கல்யாணத்தை கொஞ்சம் நடத்திடுங்கம்மா.. அனு கழுத்துல ஒரு மஞ்ச கயறு போதும்.... அவ சந்தோஷமா இருப்பாம்மா.."

".....................ஆன்ட்டி..ஆனந்த்க்கிட்ட பேசி பார்க்கிறேன்... ...

இருவரும் கொஞ்ச நேரம் பேசியிருந்துவிட்டு கிளம்பினார்கள்.

வயதான அந்த தாயின் ஆசை நிறைவேற எந்த சாத்தியக்கூறும் இல்லை, அதை செயற்படுத்த நண்பர்கள், உறவினர்கள் என்று யாருமே உதவவும் இல்லை...

எப்போதும் போல இப்போதும் மனபுலம்பல்களுடன் தன் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையாதா என்றா தாயின் ஏக்கமும்...

யாருமே இந்த உலகத்தில் நமக்கு தேவையில்லை.. காதலனின் நினைவு மட்டுமே தன் வாழ்க்கை என கனவிலே மட்டுமெ வாழும் அனுவும்..

இவர்களை தவிர வேறு உலகம் அறியாத சந்துருவும்...............

நிழலாக தொடரும் நிலவு - எழுதிய எனக்கு முடிவுற்றது.............. மூவருக்கும் இன்னமும் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது..............

முகம் பார்க்க வாங்க....:(

இப்படிப்பட்ட விஷயங்கங்கள் தங்கள் வீட்டு பெண்களுக்கு நடக்கவே கூடாது என்று ஆண்கள் முடிவுசெய்ய வேண்டும். கணவன் இறந்தபின் பெண்களுக்கு செய்யும் சம்பரதாயம் என்ற பெயரில் பெண்களுக்கு உறவினர்கள் செய்யும் கொடுமைகளை வார்த்தைகளால் சொல்ல இயலாது.

எங்களது வீட்டில் என்னுடைய சித்தியை (அப்பாவின் தம்பி மனைவி) நான் நினைவு தெரிந்து சித்தப்பா இல்லாமல் தான் பார்த்தேன். நான் குழந்தையாக இருக்கும் போதே சித்தப்பா விபத்தில் இறந்து போனார். ஆனால் என்னுடைய ஆயா (சித்தியின் மாமியார்) என் சித்தியை ஒரு அபசகுகனமாக பார்த்தே இல்லை, நடத்தியதே இல்லை. அதனால் எங்களுக்கும் அப்படி ஒரு நினைவு இருந்ததே இல்லை. வீட்டு திருமணங்களில் எல்லாவற்றிலும் என் சித்தியும் பெண், மாப்பிள்ளைக்கு நலங்கு வைப்பார்கள், மற்ற பெண்களுக்கு கொடுக்கப்படும் அத்தனை மரியாதைகளும் அவருக்கும் கொடுக்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு குடும்ப சூழலில் வளர்ந்து, இப்படிப்பட்ட கொடுமைகளை பார்த்திராத, வெளி உலக நடப்பு தெரியாத எனக்கு இவை எல்லாம் தெரிய ஆரம்பித்தது என்னுடைய குடும்பம் என்று வந்த பிறகே. மருமகளாக இன்னொரு வீட்டுக்கு சென்ற பிறகு, அங்கே கணவனை இழந்த பெண்களுக்கு நடக்கும் சாங்கியங்கள்.. அக்கம் பக்கம் நடக்கும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

எங்களது அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவர் இறந்தபோது, தீடீரென்று ஒருநாள் "முகம் பார்க்க வாங்க" என்று அழைத்தார்கள். அப்படி என்றால் என்ன என்றே எனக்கு தெரியாது, சரிங்க வரேன் என்று சொன்னேன் போகவில்லை. திரும்பவும் "வந்து காத்திருக்காங்க வாங்க "என்றார்கள். யார் எதுக்காக காத்திருக்காங்க எனக்கு புரியவில்லை. பக்கத்துவிட்டில் கேட்டேன்..உங்களை அழைத்தார்களா? யார் முகத்தை பார்க்கனும்.. அவர்கள் தயக்கத்துடன்..சும்மா பிரியாவோட அம்மாவை பார்த்துவிட்டு வந்துடுங்க' என்றார்கள். போய் தான் பார்ப்போமே என்று போனேன். அவரை ஒரு ரூமில் உட்காரவைத்திருந்தார்கள், எதிரில் ஒரு தட்டில் அட்சதை, குங்குமம், பால் எல்லாம் இருந்தது. எனக்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை. உடனே ஒரு அம்மா வந்து..போய் அவங்க முகத்தை பார்த்துவிட்டு குங்குமம் வாங்கிக்கோங்கம்மா.. என்றார்கள். அவரை நேருக்கு நேராக பார்க்கும் போது தான் அவரை இப்படி பூவும் பொட்டுமாக நான் பார்ப்பது இது தான் கடைசிமுறை என்றே எனக்கு புரிந்தது. கண்கள் குளமாகி என்னை அவர்கள் பார்த்தபோது அடிவயிற்றில் இருந்து ஒரு சொல்லமுடியாத துயரம், பயம் என்னை கவ்வியதை உணர்ந்தேன். எனக்கு குங்குமம் கொடுத்தார்கள். வாங்கியவுடன் ஓடிவந்து விட்டேன். இன்னொரு முறை இப்ப்டி செய்யவே கூடாது என்ற முடிவுடன் இருந்தேன்.

ஆனால் அப்படி யாரும் விட்டுவிடவில்லை, சொந்த மூத்தார் இறந்தபோது அவரின் மனைவிக்கும் இப்படி நடந்தது. இது மட்டுமல்ல என்னென்னவோ நடந்தது. என் கணவர் தான் புடவை வாங்கி போடவேண்டும் என்றார்கள். அதுவரை அமைதியாக அழுதுக்கொண்டு இருந்த அந்த அம்மா என் கணவர் தன் கையால் அந்த புடவையை கொடுத்தவுடனே.. "ஐயோ...நீயும் என்னை இப்படி செய்யறேயேப்பா" என்று கதறியது.. இன்னமும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது. வீட்டிற்கு வந்தவுடன் என் கணவருடன் ஒரே சண்டை.. ஏன் இப்படி செய்தீங்க. அது சாங்கியம் என்றால், யாரிடமாவது கொடுத்து செய்து இருக்கலாம், அந்த வினாடி அந்த அக்கா உங்களை எப்படி மனதார சபித்திருப்பார்கள், இது நமக்கு தேவையா? ஏன் அந்த பெண்ணின் சாபத்தை நீங்கள் வாங்கிக்கொள்கிறீர்கள் என்று கேட்டேன். மிக நிதானமாக-உன் பேச்சு, உன் சிந்தனை,எந்த மண்ணாங்கட்டியும் அங்கிருப்பவர்களுக்கு புரியாது, நான் அவரின் தம்பி, அண்ணிக்கு நான் தான் அதை செய்யவேண்டும் என்று பெரியவர்கள் சொன்ன பிறகு அதை மாற்றி என்னால் பேசமுடியாது பேசவும் கூடாது என்று சொல்லிவிட்டார். என்னால் இதற்கு மேல் என்ன செய்யமுடியும் என்று தெரியவில்லை. என் கணவரின் செயல்களையே என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை அதற்கான காரணக்காரியங்கள் சொல்லப்படுகின்றன.

இப்படி வழிவழியாக இதை இவர் தான் செய்யவேண்டும், இந்த பெண்கள் இப்படி ப்பட்ட கொடுமைகளை அனுபவித்து தான் ஆகவேண்டும் என்பது தொடர்ந்து கொண்டே தான் இருக்குமா? என் பிறந்தவீட்டில் என்னுடைய ஆயாவும் தாத்தாவும் எங்கள் வீட்டு பெண்ணிற்கு இப்ப்டி நடக்ககூடாது என்று எங்களையெல்லாம் வளர்த்தது போல் எல்லோர் வீடுகளலும் அப்படி பெண்கள் மனம் நோகாமல் நடத்துவார்களா? சாங்கியம் சம்பரதாயம் எல்லாம் நாம் நடத்துவதுதானே...? அதை நாமே மாற்றி அமைக்கக்கூடாதா?

கணவனை இழந்த பெண்ணை பிணத்திற்கு சமமாக நடத்தும் நம் சம்பிரதாயங்கள் அவசியமா? அந்த பெண்ணுக்கும் உணர்ச்சிகள், மனம், ஆசைகள் என்று எல்லாமே இருக்கிறதே..?!! அதை யாருமே யோசிப்பது இல்லையா? அந்த பெண்ணின் பாதத்தில் நின்று யாராவாது அந்த வேதனையை உணர்ந்து இருக்கிறீர்களா?. பெண்ணிற்க்கு அவளின் பொட்டை அழிப்பது கூட உங்களுக்கு எல்லாம் ஒரு துக்க விழாவா ?? இவை எல்லாம் அவசியம் தானா?
தயவுசெய்து உங்கள் வீட்டிலோ அக்கம் பக்கத்தில்லோ இப்படி நடந்தால் எதிர்த்து குரல் கொடுங்கள்... குரல் எழுப்ப எழுப்பத்தான் நிற்கும்..

அணில்குட்டி அனிதா:- கவீஈஈஈஈஈஈ... கூல்ல்ல்ல்ல்..!!

பீட்டர் தாத்ஸ் : ஆண்களே உங்கள் வீட்டு பெண்கள் எப்படி நடத்தப்படவேண்டும் என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது.!!

சீன பட பேய்களும் நம் கதாநாயகியும்...

அணில்குட்டி அனிதா :- நல்லா பாருங்க...நிறைய வித்தியாசம் எதுவும் இல்ல....










.சீன பேய் படங்கள் பார்த்துவிட்டு நம் கதாநாயகிகளை பார்த்தால் பேய்களை பார்ப்பது போலவே இருக்கிறது.......


இதுல கவிதா படத்தையும் சேர்த்து இருக்கணும்... உங்க எல்லோரோட வாழ்க்கை நலமுடன் இருக்கனும்னு ஒரு நல்ல எண்ணத்துல லாஸ்ட் மொமன்ட் அந்த ஐடியாவை விட்டுட்டேன்..!!

பீட்டர் தாத்ஸ் :- “The past is a ghost, the future a dream, and all we ever have is now

கண்டிப்பாக ஒவ்வொருவரும் செய்யவேண்டியது..

குஜராத் நிலநடுக்கும், சுனாமியின் தாக்குதல், இப்போது மும்பாய் தீவரவாதிகளின் தாக்குதல் என்று நாம் எதிர்பார்க்காத எத்தனையோ இழப்புகள். இதில் குழந்தைகள் அதிகமாகி பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். நெருங்கிய சொந்தங்களை இழந்த கொடுமைகள். யாருக்கு வேண்டுமானாலும் எதுவும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலைமையில் தான் ஒவ்வொருவரும் இப்போது இருக்கிறோம்.

நாம் நம் குழந்தைகளுக்கும், நம்மை நம்பி உள்ளவர்களுக்கும் என்ன செய்து வைத்து இருக்கிறோம் என்பதை வெளிப்படையாக சொல்லிவையுங்கள்.

1. உங்களின் சேமிப்புகள், அதன் முழுவிபரம், சேமிக்கு கணக்கின் நம்பர்.
2. உங்களின், உங்களின் குடும்ப உறுப்பினர்களின் இன்சூரன்ஸ் பாலிஸி பற்றிய முழு விவரங்கள்
3. நிலம், வீட்டின் பத்திரங்கள், அதன் கணக்கு வழக்குகள், விபரங்கள்
4. வீட்டிற்காக எடுத்த இயற்கை அழிவுகள் சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் தகவல்கள் (Fire, earthquake etc), தனி நபர் விபத்து பாலிஸிகள்
5. நகைகள், உடைமைகள், வாகனங்கள் பற்றிய விவரங்கள்
6. EPF பற்றிய தகவல்கள்
7. எல்லாவற்றிற்கும் மேல் நீங்கள் வாங்கி வைத்திருக்கும் கடன் பற்றிய தகவல்கள்
8. நீங்கள் யாருக்காவது கடன் கொடுத்து இருந்தால் அந்த விபரங்கங்கள்

மேற்கொண்ட முழுவிவரங்களை தெளிவாக எழுதி உங்களின் நெருங்கிய சொந்தம் குறைந்தபட்சம் இரண்டு நபரிடமாவது கொடுத்துவையுங்கள், நெருங்கிய நண்பர்களிடம் ஒரு காப்பி கொடுத்துவையுங்கள். வீட்டில் மனைவி குழந்தைகளிடம் விபரமாக எல்லாவற்றையும் விளக்கமாக சொல்லி அவர்களுக்கும் ஒரு காப்பி கொடுத்து வையுங்கள்.

அவ்வபோது இதனை அப்டேட் செய்யுங்கள், அப்டேட் செய்யும் போது எல்லாம் மறக்காமல் மற்றவர்களிடம் கொடுத்துவையுங்கள்.

என் பக்கத்து வீட்டு நண்பர் வீட்டின் எல்லா சாவிகளையும் கூட அவரின் சொந்த ஊரில் ஒரு செட் செய்து வைத்துள்ளார்... சில விஷயங்கள் நமக்கு funny ஆக இருக்கும் ஆனால் அதன் பலன் என்றாவது ஒருநாள் கண்டிப்பாக தெரியும். எங்களது வீட்டில் எதிர்பாராத விபத்து ஒன்று நடந்து அதில் குடும்பதலைவர் மரணமடைந்தார். அவரின் சாதாரண பேங்க் அக்கவுண்ட் நம்பர் தெரியாமல், பேங்க், இன்சூரன்ஸ் டாகுமன்ட் எங்கு வைத்து இருக்கிறார் என்று தெரியாமல் அவர் மனைவி பட்டப்பாடு அவருக்கு மட்டுமே தெரியும். இதில் இது கூட தெரியாம இத்தனை வருஷம் குடும்பம் நடத்தி இருக்கா பாரு!! என்ற ஊர் பேச்சு வேறு. :(((

இதுவரை இவற்றை செய்யாதவர்கள் இனி செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்...

அணில் குட்டி அனிதா :- ம்ம்.. என்னவோ திட்டம் இருக்கு போல ... திட்டம் நல்லாத்தான் இருக்கு ஆனா யாரும் கவிதாக்கு மட்டும் விவரங்களை நம்பி சொல்லாதீங்க.. அப்புறம் கவிதா உங்க வூட்டுலத்தான் டேரா..ங்கோ..!! :))

பீட்டர் தாத்ஸ்- “To keep every cog and wheel is the first precaution of intelligent tinkering”

நீங்க கவிதா தானே....?!!

சொந்த ஊருக்கு சென்று வந்தாலே ஒரு சொல்லமுடியாத சந்தோஷம், அதுவும் பள்ளிக்கூடம், தோழிகளுடன் பேசிக்கொண்டு நடந்த தெருக்கள், எங்களின் வீடு..என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

அண்ணன் இன்னமும் எங்களுது வீட்டில் இருந்தாலும், இப்போது இருக்கும் வீடு கொத்தி கூறுபோட்டுவிட்ட வீடு. பெரியவர்கள் இறந்தபிறகு, சிறுசுகள் தனக்கு கொடுக்கப்பட்ட பாகத்தை தனக்கு தகுந்ததாக மாற்றிக்கொண்ட வீடுகள். நாங்கள் வளர்ந்த வீடாகவே இல்லை.

சரி விஷயத்திற்கு வருவோம், 3, 4 பயணங்களாக ஊருக்கு சொல்லும் போது யாராவது ஒரு பெண் என்னை இப்படி "நீங்க கவிதா தானே? " என்று கேட்கிறார்கள்.

நேற்று கணவரின் நெருங்கிய உறவினர் வீட்டு நிச்சயதார்த்தம். கிளம்பும் போது பெற்று வைத்த பிள்ளை அவனை விட அம்மா அழகாக இருக்கிறார்களே என்ற பொறாமையில் -

"போட்டு இருக்கிற நகையோட போ" ஓவரா போட்டு சீன் போடாதே..!!" என்றான்..

"டேய் ப்ளீஸ் சிமிக்கி மட்டும் போட்டுக்கிறேனே " என்றேன்..

"இல்லை தேவையில்லை இப்படியே போ.. !"

ஆபிஸ்'க்கு எப்படி போவேனோ அதே தான்..என்ன சுடிதார் மாற்றி சேலை..அதிலும் பட்டு சேலை கட்ட அனுமதி கிடைக்கவில்லை :((

அங்கு சென்று,நிச்சயதார்தம் முடிந்து சாப்பிட போகும் போது, தோலை ஒரு கை தொட்டது. திரும்பி பார்த்தேன்...

"நீங்க கவிதா..தானே? " கருப்பாக குள்ளாமாக குண்டான ஒரு பெண் தயங்கி தயங்கி கேட்டார்கள்.

"ஆமாங்க....." அவரை யாரென்று சுத்தமாக என்னால் அடையாளம் காண முடியவில்லை.

கணவர் வீட்டு சொந்தம் யாராவது இருக்குமோ..? சைஸ்ஐ பார்த்தால் கண்டிப்பாக அவங்க வீடாக இருக்க எல்லாவித சாத்திய கூறுகளும் தெரிந்ததால்...என்ன சொல்லி சமாளிப்பது என்று தீவிரமாக யோசித்தேன். தெரியாது என்று சொன்னால் அங்கேயே ஒரு கூட்டம் கூட்டி நம்மை ஒரு வழி ஆக்கி விடுவார்கள். கல்யாணம் ஆகி மாமியார் வீடு என்று போவது வருடதிற்கு ஒருமுறையோ இரண்டு முறையோ..இதுல ஒரெ மாதிரி இருக்கும் இவர்களை எப்படி அடையாளம் கண்டுப்பிடிப்பது. அதுவும் ஒரு ஒரு வீட்டிலும் எப்படியும் 7, 8 என்று பிள்ளைகள் அவர்களின் மனைவிகள், கணவர்கள், அவர்களின் பிள்ளைகள், சொந்தகள் என்று அனுமார் வால் மாதிரி போய் கொண்டே இருக்கும்.

இது கணவருக்கு தெரிந்தால் -

"ஏன்டி உனக்கு யார்க்கிட்டயுமே நாசுக்கா பதில் சொல்ல தெரியாதா? உண்மைய பேசறேன்ன்னு ஏன் என் மானத்தை வாங்கிட்டு வரே" திருந்தவே மாட்டியா நீ.? உனக்கு மெச்சுரிட்டீயே வராதா? - இப்படி கண்டிப்பாக ஒரு ஒருமணி நேரத்திற்கு எனக்கு உபதேசம் கிடைக்கும். எப்படியும் இந்த காதில் வாங்கி அந்த காதில் அதை விட்டுவிடுவேன் என்பது வேறு விஷயம், இருந்தாலும் அந்த ஒரு மணி நேரம் அவரின் பேச்சை கேட்கவேண்டுமே! சரி இந்த முறை கணவரிடம் என் சாமார்த்தியமான பேச்சை பற்றி சொல்லி நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று, புத்திசாலிதனமாக பேச முயற்சி செய்தேன்.

"நீங்க........... "..ஹி ஹி..என்று சிரித்தேன்...

"நான் தான் கற்பகம்..."

கற்பகமா.....??? எனக்கு தெரிந்த ஒரே கற்பகம் சென்னையில் உள்ள கற்பகாம்பாள் கோவில் கற்பகம் தான்.. இந்த அம்மா என்ன "ஜார்ஜ் புஷ்" ன்னு சொல்லுகிற மாதிரி "கற்பகம்" என்று சொல்லிகிறார்கள்,...புத்திசாலித்தனம் ஓடிப்போனது...

"தயவுசெய்து மன்னிச்சிக்கோங்க.. நீங்க யாருன்னு எனக்கு தெரியலைங்க.... நீங்கலே சொல்லிடுங்க......" .

"நான் உங்க கூட படிச்சேன்... விழுப்புரம்..ஸ்கூல்.. ஞாபகம் இல்லையா...."

"ஓஓஓஒ.... என்று இழுத்தேனே தவிர ஞாபகம் வரவே இல்லை.. என்னோட க்ளாஸா... ? " என்றேன்..

"இல்லை நான் 9th C... "

"ஸ்..ஓ அதான்ப்பா எனக்கு நினைவில்லை..நீங்க என் க்ளாஸ் இல்லை.. நான் 9th F ஆச்சே.. சரி எப்படி இருக்கீங்க.... நான் இந்த மாப்பிள்ளைக்கு சொந்த சித்தி..!! மாப்பிள்ளையோட அப்பாவோட தம்பியோட ஒயிஃ .."

"..ம்ம்... நீங்க என்ன செய்றீங்க..எங்க இருக்கீங்க?"

"நான் சென்னையில இருக்கேன்..."

"வேலை செய்யறீங்களா? என்ன வேலை செய்யறீங்க? "

" ம்ம் செய்யறேன்... HR ஆ இருக்கேன்.."

"HR ..ன்னா?"

திரு திருவென்று விழித்தேன்... " ப்ர்சனல் டிபார்ட்மென்ட்' தான் இப்ப எல்லாம் HR " என்றேன்.

"நான் டீச்சரா இருக்கேன்................பக்கத்தில் ஒரு கிராமத்தில்...."

"ஓ வெரிகுட் .... ஏன் என்னை இப்பத்தான் பார்க்கிறீங்களா.. நான் இந்த வீட்டு மருமகள்.. எப்பவும் எல்லா விஷேத்திலும் என்னை பார்க்கலாமே ஏன் என்னிடம் நீங்க பேசல..?"

"இல்லை இன்று தான் நான் வந்தேன்..இது வரையில் என் வீட்டு பெரியவர்கள் மட்டுமே வந்தார்கள்.."

கற்பகத்தின் கணவர் மற்றும் குழந்தையை அறிமுகம் செய்து வைத்தார்கள்.... அவர்களிடமும் பேசினேன்.. கற்பகத்தின் கணவர் என் கணவரின் பெயரை சொல்லி..ஓ அவரோட ஒய்ஃ'ஆ நீங்கள் என்றார்.

ஒரு ஆட்டோகிராப் படம் ஓடியது.... ஒரே பள்ளியில் படித்த இருவர், எங்கெங்கோ இருக்கிறோம்... பார்த்து பேசும் போது,செய்யும் வேலையை பற்றி சொல்லுவதில் ஒரு தயக்கம், அதுவும் கிராமத்தில் என்று சொல்லும் போது அந்த குரலில் இருந்த தோய்வு.. ஆசிரியர் பணி செய்ய கொடுத்து வைத்து இருக்கவேண்டும் இல்லையா...?.. நம்மை எல்லோரையுமே உருவாக்குபவர்கள் அவர்கள் தானே..?.. என்னை அடையாளம் கண்டு அந்த பெண் பேசியது சந்தோஷமான ஒரு நினைவு........

அணில் குட்டி அனிதா:- மக்கா மேட்டர புடிச்சீட்டீங்களா இல்லையா?.. கவி பத்தி நல்லா தெரிஞ்சவங்க மேட்டர புரிஞ்சி இருப்பாங்க....என்ன சொல்ல வராங்க தெரியுமா.. அவங்கள எல்லாரும் அடையாளம் கண்டுக்கற மாதிரி அன்னையிலிருந்து (ஸ்கூல் டேஸ்'ல) இருந்து இன்னைக்கு வரைக்கும் இளைமையோட அப்படியே இருக்காங்கங்களாம்... அதான் எல்லாரும் இவிங்கள அடையாளம் கண்டுக்கறாங்களாம்.. இதுக்கு மேல நீங்களாச்சி அம்மணியாச்சி...... :)))

பீட்டர் தாத்ஸ்:- The difference between school and life? In school, you're taught a lesson and then given a test. In life, you're given a test that teaches you a lesson. ~ Tom Bodett