கேப்பங்கஞ்சி'யில் இன்று தென் சென்னை வேட்பாளர் சரத்பாபு'விடம் தேர்தலில் நிற்பதைப் பற்றியும், அவரின் தேர்தல் அறிக்கை பற்றியும் கேள்விகள் கேட்க வேண்டிய சூழ்நிலையை நம் சக பதிவர்கள் ஏற்படுத்திவிட்டனர். அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று அவரையே கேட்டுவிடலாம் என்று நினைத்து இமெயிலில் தொடர்பு கொண்டு அவரின் அனுமதி கோரி இருந்தேன். இத்தனை வேலைகளுக்கு நடுவில், அவரும் தன்னை தொலைபேசியில் அழைத்து பதிலை பெற்றுக்கொள்ளுமாறு பதில் அனுப்பி இருந்தார்..

இதில் குறிப்பிட வேண்டியது என்னுடைய கேள்விகள் எதற்குமே அவர் முன்னேற்பாட்டோடு இல்லை அல்லது முன் கூட்டி யோசித்து வைத்தும் பதில் சொல்லவில்லை. மிக எளிமையாகவும் தயக்கமே சிறிதும் இன்றி மனதில் உள்ளதை நிதானமாக உணர்ச்சிவசப்படாமல் சொன்னார். தேர்தல் அறிக்கை பற்றி கேட்ட கேள்விகளுக்கு மட்டும் சற்றே யோசித்து பதில் சொன்னதாக உணர்ந்தேன். இதோ நம்மிடையே தென் சென்னை வேட்பாளர் சரத்பாபு.

கவிதா : ஹல்லோ சரத், கவிதா பேசறேன். எப்படி இருக்கீங்க? அம்மா எப்படி இருக்காங்க...?! நீங்கள் இப்போது என்னுடன் பேச இயலுமா?

கவிதா?!! ...................?!ம்ம்ம்ம் !! ஓ... கவிதா சொல்லுங்க.. ! நான் நல்லா இருக்கேன்.. அம்மா நல்லா இருக்காங்க. நீங்க எப்படி இருக்கீங்க?. தாராளமாக பேசலாம், சொல்லுங்க...

கவிதா:- என்னுடைய கேள்விகளை ஆரம்பிக்கிறேன் சரத், அரசியலில் எந்த முன் அனுபவம் இன்றி, இது வரையில் எந்த ஒரு சிறிய பதவியும் வகுத்திராத நீங்கள் எப்படி இந்த தேர்தலில் போட்டி இடுகிறீர்கள்?, ஏழ்மையிலிருந்து வந்தவர், இளைஞர், படித்தவர் என்ற தகுதியை தவிர்த்து அரசியலுக்கு வர வேறு என்ன தகுதி இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்.

கவிதா, முதலில் நாம் மக்களின் Basic Concept, Mindset ஐ மாத்தனும். அரசியல் பின்னணி இல்லாமல் ஏன் ஒரு இளைஞர் தேர்தலில் நிற்க கூடாதுன்னு நாம் யோசிக்கவேயில்லை. அதோடு, இந்தியாவில் தேர்தலில் நிற்கும் முதல் இளைஞன் நான் இல்லை. இதுவரையில் எத்தனையோ பேர் நின்றிருக்கிறார்கள். எடுத்துக்காட்டு, ராஜிவ் காந்தி, ராகுல் காந்தி. சச்சின் பைலட், ஜோதி ஆதித்யா சிந்தியா, பிரியா தத், மு.க.ஸ்டாலின் போன்றோர். ஆனால் அவர்களுக்கு எல்லாம் அரசியல் பின்னணி இருந்தது, செல்வாக்கு, குடும்ப பாரம்பரியம், பணம் இருந்தது, அதனால் அவர்களை நாம் இப்படி கேள்விக்கேட்டு கொண்டு இருக்கவில்லை.

அரசியலை விட மோசமான பல விஷயங்களை நான் என் வாழ்க்கையில் கடந்து வந்து இருக்கிறேன். அதனால் அரசியல் எனக்கு பெரிதல்லவே, அரசியலில் சாதிக்க முடியும், எதையும் சமாளிக்கமுடியும் என்ற தன்னம்பிக்கை இருக்கிறது, அதற்கான முதிர்ச்சியை என் அனுபவம் எனக்கு கொடுத்துள்ளது.

கவிதா: பசியில்லாத இந்தியா உங்கள் கனவு, தேவைப்படுபவர்களுக்கு உதவ நினைக்கிறீர்கள், அதற்கு அரசியல் அவசியமா? ஏன் தனிப்பட்ட முறையில், சில பிரபலங்கள் செய்து வருகிறார்கள் அப்படி செய்யலாம் இல்லையா? அரசியலை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?

அரசியலில் இருந்தால் மட்டுமே நல்லவிதமான மாற்றங்களை விரைவில், எளிதில் செய்ய முடியும். தனிமனிதனாக என்னால் எவ்வளவு உதவ முடியும் என்று நினைக்கிறீர்கள்? ஒரு... 1 கோடி ரூபாய்? அதுவே நான் அரசியலில் இருந்தால் மக்களுக்கு அதிகப்படியாக உதவ முடியும். உதாரணமாக 5 வருடங்களில் குறைந்தபட்சம் ஒரு 500 கோடி ரூபாய் மதிப்புள்ள உதவிகளை, நலத்திட்டங்களை அரசின் உதவியோடு என்னால் செய்யமுடியும். தனியாக உதவி செய்வதற்கும் அரசியலில் இருந்து உதவுவதற்கும் உள்ள வித்தியாசத்தை பார்த்தீர்களா? எவ்வளவு? 500 மடங்கு இல்லையா? இவ்வளவு தனியாக செய்தால் முடியுமா.? நீங்கள் குறிப்பிடும் பிரபலங்கள் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்ற காரணத்தை நீங்கள் எனக்கு சொல்லமுடியுமா? அரசியல் அவ்வளவு எளிதல்ல என்பது அவர்களுக்கு தெரியும் இல்லையா?!

கவிதா: அப்படியென்றால் ஏன் சுயேட்சையாக நிற்கிறீர்கள்? ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து இருக்கலாமே?

கவிதா..:) கவிதா.. :) ! உங்களின் முதல் கேள்விக்கு வாருங்கள், அரசியல் தலைவர்கள் என்னுடைய தகுதிக்கு நாடாளுமன்ற தேர்தலில் நிற்க வாய்ப்பளிக்க சாத்தியக்கூறுகள் இல்லவே இல்லை. :) என்னுடைய qualification எல்லாம் அவர்களின் எதிர்பார்ப்புக்கு எம்மாத்திரம்? அரசியல் கட்சியில் இறங்க என்ன மாதிரியான தகுதிகள், பணம், குடும்ப பின்னணி வேண்டும் என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா? எனக்கு அப்படி ஒன்றும் இல்லையே. :)

கவிதா: இதுவரை மக்களுக்கு நீங்கள் தனிப்பட்ட முறையில் ஏதாவது செய்ததுண்டா?

நிறைய உண்டு இந்தியா முழுக்கவும் இது என்னுடைய மொத்த நேரத்தில் 400 நாட்கள் ஏழைக்குழந்தைகளுடன் செலவிட்டு இருக்கிறேன். அவர்களுக்கு கல்வி மற்றும் உழைப்பை பற்றிய விழிப்புணர்வு, விளக்கங்கள், ஊக்கங்கள் (Awareness) கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறேன். 850 நாட்கள் இளைஞர்கள் தொழில் தொடங்க தேவையான அறிவுரை, தொழில் சார்ந்த அறிவு, மனதளவில் அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து இதுவரை 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் என்னால் தொழில் அதிபர்களாக ஆகியிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்திருக்கிறார்கள். 3000 மேற்பட்ட மாணவ மாணவியருக்கு அவர்களின் career பற்றிய விழுப்புணர்வையும், ஊக்கத்தையும், ஆதரவையும் தந்திருக்கிறேன்.

கவிதா: உங்களின் படிப்புக்காக இந்திய அரசு எத்தனை செலவு செய்து இருக்கிறது, துறை சார்ந்த தொழில் செய்யாமல் ஏன் இப்படி ஹோட்டல் தொழில் செய்கிறீர்கள்? உங்கள் படிப்பிற்காக இந்திய அரசு செலவிட்டது எல்லாம் வீணாகி அல்லவா விட்டது?

:) ஓ என்னால் இந்திய அரசின் பணம் வீணாகிவிட்டதா? (சிரிக்கிறார்) சரி எனக்கு நீங்கள் ஒன்று சொல்லுங்கள், துறை சார்ந்த தொழில் தொடங்க முதலீடு தேவை, ஒரு மென்பொருள் கம்பெனி தொடங்க குறைந்தபட்சம் 5 லட்சங்களாவது தேவை இல்லையா?, ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியரின் சம்பளம் என்னவென்பது உங்களுக்கு தெரிந்து இருக்கும். நான் குறைந்த முதலீட்டில் வெறும் 2000 ரூபாயை கொண்டு தொழில் தொடங்கினேன். என்னுடைய முதல் ஆர்டர் 75 டீ, 25 காப்பி. லட்சங்களில் முதலீடு செய்ய இயலவில்லை, அப்படியே முதலீடு செய்தாலும் 100% சக்ஸஸ் ஆகும் என்று சொல்லமுடியாது. Food Industry அப்படி இல்லை. அதனால் என்னால் முடிந்ததை கொண்டும், சாத்தியக் கூறுகளை ஆராய்ந்தும் தொழில் தொடங்கினேன்.

கவிதா மேலும் இப்போது எனக்கு 29 வயது தான் ஆகிறது, என் வாழ்நாள் 60 வயது என்று வைத்துக் கொண்டாலும் எத்தனை வருடங்கள் இன்னும் இருக்கின்றன. இது மட்டுமே என்னுடைய தொழில் இல்லை, என் துறை சார்ந்த மட்டும் இல்லாது குறைந்தபட்சம் 10 இண்டஸ்டீரிஸ் தொடங்கி அதில் என் முத்திரை பதிப்பேன். இன்னும் காலம் இருக்கிறது அல்லவா? கண்டிப்பாக இந்திய அரசாங்கம் எனக்கு செலவிட்ட பணத்தை வீணாக்கமாட்டேன். :)

கவிதா: நீங்கள் அரசியலுக்கு வர நினைப்பது, 1. உங்கள் வியாபாரத்திற்கு விளம்பரம் தேடிக்கொள்ளவும், 2. தேர்தல் நிதி என்று இது வரையில் நீங்கள் சம்பாதிருக்கும் கறுப்புப் பணத்தை எல்லாம் வெளுப்பாக்கிக் கொள்ளவும். - உங்களின் விளக்கம்?!

(வாய்விட்டு சிரிக்கிறார்) எப்படிங்க இப்படி எல்லாம் யோசிச்சி கேள்வி கேட்கறீங்க? விளம்பரமா? யூத் ஜகான் கொடுக்கப்பட்ட போதே எனக்கு தேவையான விளம்பரம் கிடைத்துவிட்டதே? அதையும் தாண்டி என் வியாபரத்திற்கு விளம்பரம் தேவையா?

அடுத்து நிஜமாகவே உங்களின் இரண்டாவது கேள்வியை பற்றி எனக்கு ஒன்றும் தெரியலைங்க. :). நான் சம்பாதிக்கவேண்டும் என்றால் சொன்னேனே 400 நாட்கள், 850 நாட்கள் என்று அந்த நேரங்களை எல்லாம் என் வியாபாரத்தில் மட்டுமே செலவிட்டு இருப்பேன் இல்லையா?. கண் எதிரில் லட்சங்கள் சம்பளத்தில் எனக்கு வேலை கிடைத்த போது அதை புறம் தள்ளிவிட்டு, தொழில் தொடங்கி அதில் என்னால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க எண்ணியவன், கையில் ஒரு 200 ரூபாய் கூட இல்லாமல் மும்பை ரயில் நிலையத்தில் படுத்துகிடந்து இருக்கிறேன். என் அனுபவங்கள் எனக்கு நல்ல விதமான பாடங்களை மட்டுமே கற்று தந்து இருக்கிறது. நான் அதை தவறாக உபயோகிக்க நினைக்கவில்லை. பட்ட அடிமட்ட கஷ்டங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை தான் இருந்தாலும் உங்களின் கேள்வி எனக்கு புரியலைங்க.. அப்படியெல்லாம் செய்ய எனக்கு அவசியம் ஏற்படாதுங்க.

உங்கள் தேர்தல் அறிக்கையிலிருந்து சில கேள்விகள்

கவிதா : உங்களின் தேர்தல் அறிக்கை முறையே 1, 2, 3, 6 - இவற்றிக்கு நீங்கள் இதுவரையில் ஏதாவது திட்டம் தீட்டி வைத்து இருக்கிறீர்களா ? அப்படி இருப்பின் பகிர்ந்து கொள்ள முடியுமா?

திட்டம் என்றால், முதலில் நான் நேரடியாக மக்களை தனித்தனியாக சந்தித்து அவர்களுக்கு தேவையான விழிப்புணர்வை தருவது, அது யூத் பூத்' கள் மூலமாக நடைபெறும். 100 இளைஞர்கள் முதல் கட்டமாக நேரடியாக கேம்ப் அமைத்து இதில் இறங்குவார்கள், ஒவ்வொரு இளைஞரும் குறைந்தபட்சம் 100 பேருக்காவது வேலைவாய்ப்பு அளிக்க தேவையாக வசதிகள், தொழில் பற்றிய ஆலோசனை வழங்கப்படும். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக திட்டத்தை விரிவு படுத்துவேன்.

கவிதா:- மகளிர் மேம்பாட்டுக்கென அனைத்து இல்லத்தரசிகளுக்கும் வங்கிக் கணக்கு துவக்கப்படும். வீட்டில் உள்ள பெண்கள் வருவாய் ஈட்டும் வகையில் நல்ல வாய்ப்புகளும் திட்டங்களும் அறிமுகப்படுத்துவேன். இந்தத் திட்டத்தில் நான் நேரடியாகவே ஈடுபடுவேன். - எப்படிப்பட்ட வேலைவாய்ப்புகள் வழங்கப்படும், இதற்கான உங்களின் திட்டத்தின் தொகுப்பு ஏதாவது இருந்தால் விளக்கமுடியுமா?

கவிதா, முதலில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று பிரித்து, படிக்காத முன்னரே சிறுதொழில் செய்துவரும், அதாவது சின்ன சின்ன தொழில் பூ கட்டுதல், காய்கறி வியாபாரம், போன்றவற்றின் கொள்முதலை ஒவ்வொரு ஏரியாவிலும் மையப்படுத்துவேன். ஒரு பூ கட்டும் பெண் செலவு செய்து கோயம்பேடு சென்று வாங்கிவரும் செலவை குறைப்பேன். 50 பேருக்கு ஒருவர் சென்று வாங்கிவந்தால் போதுமே. எவ்வளவு பணம் மிச்சமாகும். இது போல் ஒவ்வொரு சிறுதொழிலிலும் எளிதான முறைகளை செயற்படுத்த தேவையான அறிவுரையை வழங்குவேன். படித்தவர்களுக்கு அவர்களுக்கு ஏற்றது போன்ற வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பேன். அதற்கான முழு திட்டத்தையும் இன்னும் முடிக்கவில்லை.

கவிதா: வேளச்சேரியில் வெள்ளத் தேக்க பிரச்னை, பெருங்குடியில் குப்பை மேடுகள் மிகுதியாவது போன்ற அனைத்து பகுதியிலுள்ள பிரச்னைகளுக்கும் தேர்வு காணப்படும். - சரத் இதை படித்தவுடன் எனக்கு சிரிப்பு தான் வந்தது, முடியும் என்பதை ஆராய்ந்து கொடுக்கப்பட்ட அறிக்கையா? வேளச்சேரி வெள்ளபிரச்சனைக்கு இதுவரை அரசு செய்துள்ள திட்டம் தோல்வி, அகலமான ரோடுகள் குறுகிவிட்டன. அதுதான் மிச்சம். நீங்கள் இந்த கேள்விக்கு டெக்னிகலாக எப்படி சாத்தியம் என்று பதில் சொல்ல முடியுமா?

கவிதா, நான் ரொம்பவெல்லாம் ஆராயவில்லை. ஆனால் முடியும். துறை சார்ந்த வல்லுநர்களின் உதவியோடு ஒரு குறிப்பிட்ட இடத்தை தேர்ந்தெடுத்து அங்கே ஒரு ஏரியை உருவாக்கி, நகரில் நீர் நிற்காமல் அதில் வெள்ளநீரை கொண்டு சேர்க்க முடியும்.

80% குப்பை மக்கும் குப்பையாக இருப்பதால், அதற்கென ஒரு ப்ளான்டை ஏற்படுத்தி குப்பைகளை உரங்களாக மாற்றி, அந்த உரங்களையும் சென்னையிலுள்ள செடிகளுக்கும் மரங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

கவிதா : சரத், மிக்க நன்றி ! உங்களின் பதில்கள் உங்களை ஆதரிக்கும், எதிர்க்கும் அனைவருக்குமே நல்ல விதத்தில் பயன்படும் என்று நம்புகிறேன். :)

மை ப்ளஷர் கவிதா. !!