மிகவும் தாமதமாக கேப்பங்கஞ்சிக்கு அழைக்கும் ஒரு அன்பான பதிவர் மங்கைஜி. வலைச்சரம் தொடுக்க சென்றபோது இவரைப் பற்றி சொல்லியிருந்தேன். சத்தமில்லாமல் யுத்தம் நடத்தும் ஒரு அற்புதப்பெண், என்னை மிகவும் கவர்ந்த, நான் பின்தொடர வேண்டும் என்றும் நினைக்கின்ற பெண். இன்னமும் நான் பலவிதத்தில் வளரவேண்டும் என்னை சரிசெய்து கொள்ளவேண்டும் என்று நினைப்பது இவர்களை பார்த்தே.. இவரை கேப்பங்கஞ்சிக்கு அழைக்க ஏன் இந்த தாமதம் ஏற்பட்டது என்பதற்கு விடை எனக்கே தெரியவில்லை. இருப்பினும் மங்கைஜி ஐ விடாமல் துரத்தி அழைத்து வந்தாகிவிட்டது. இதோ நம்முடன் மங்கைஜி...

விளக்கமாக கேட்ட கேள்விகள் :-

கவிதா :- மங்கைஜி! வாங்க, வணக்கம் ! எப்படி இருக்கீங்க? புதுடில்லி எப்படி இருக்கு? தேர்தல் சமயமாக இருப்பதால் ஏதாவது ஸ்பெஷல் நியூஸ் உண்டா?

தில்லிக்கென்ன நல்லா தான் இருக்கு...சும்மாவே தெருவுல உய் உய்ன்னு எப்பவும் விஐபி கார்கள் போயிட்டு தான் இருக்கும்...இப்ப கேட்கணுமா... அதுவும் என் அலுவலகம் இருக்குறது ஜன்பத்துல...எல்லா கட்சி ஆபீசும், முக்கிய அலுவலகங்களும் இருக்கிற இடம்..சொல்லிக்கவே வேணாம். பரபரப்பா இருக்குற ஒரு நகரம்... மக்களை பத்தி சொல்லணும்னா..வெட்டி பந்தா...ஈசி மணி வேணும்னு நினைக்குற மக்கள்...நம்ம தென்மாநில மக்களின் பக்குவம் இவர்களுக்கு வர இன்னும் நாளாகும்...இது என் தனிப்பட்ட கருத்து.

கவிதா : உங்களின் தற்போதைய பணி பற்றிய சின்ன விளக்கம்

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம். சுகாதார அமைச்சரகத்தின் கீழ் செயல்படும் ஒரு துறை. இந்தியாவில் எச்ஐவி எய்ட்ஸ் கட்டுப்பாட்டிற்கு தேவையான திட்டங்களை வகுத்து அதை செயல் படுத்தும் ஒரு அரசு நிறுவனம். அதில நான் Technical Officer (Training) ஆக பணி புரிகிறேன். ஒவ்வொரு அரசு மருவத்துவமனைகளிலும் தன்னார்வ பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இது தவிர பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருந்துகள் வழங்கப்படும் ஏ ஆர் டி (ART - Anti Retroviral Therapy) மையங்களும் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. பாதிக்கப்பப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஆலோசகர்கள் இங்கு பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். ஆலோசனை வழங்குவதற்க்கான அடிப்படை கல்வி இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும், ஆலோசனை குடுக்கும்போது அவர்கள் செய்ய வேண்டிய / செய்ய கூடாத செயல்கள், எதிர் கொள்ளக் கூடிய பிரச்சனைகள், அதை சமாளிக்க வேண்டிய விதம், பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை, குடும்ப உறுப்பினர்களிடன் பேச வேண்டிய முறை, தகவல்கள் உள்பட பல விஷயங்களில் பயிற்சி கொடுக்கப் படுகிறது. ஆலோசகர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீஷியன்கள் ஆகியோருக்கு பயிற்சியை ஒருங்கிணைக்கும், ஒருங்கிணைப்பாளர் பணி. இவர்கள் அனைவரும் நாடெங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெறுகிறார்கள்.

கவிதா :- உங்களின் பணியில் உங்களுக்கு ஏற்படும் மனத்திருப்தி/ அதிருப்தி

இந்த பணியில் இருப்பதே திருப்தி தான். சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது ஒருவகையில் உதவ நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்கிற திருப்தி. இன்னும் நிறைய உதவி தேவைப்படுகிறது.

அதிருப்தி என்றால் அரசு தரப்பிலும் தனியார் தரப்பிலும் இதற்கென்று ஒதுக்கப்பட்ட பணம் வெட்டியாக செலவு செய்யப்படுவதை பார்க்கும் போது வருத்தம் வருகிறது.

கவிதா: பிரிதிபா பற்றி

கோவையில் என்னுடன் பணி புரிந்த ஒரு தோழியும் நானும் யூனிசெஃப் (UNICEF) ன் ஆதரவுடன் எடுத்துக் கொண்ட ஒரு முயற்சி. மத நல்லிணக்கதை மையமாக வைத்து வகுக்கப்பட்ட ஒரு திட்டம். எல்லா மதத்திலிருந்தும் தன்னார்வமுள்ள பெண் தலைவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு எச்ஐவி பற்றி பேச பயிற்சி அளித்து, அதை தங்களின் பிரார்த்தனை கூட்டத்தில் பக்தர்களுக்கு எடுத்துகூற ஊக்கப்படுத்தினோம். நாடு முழுவதும் 500 பெண்களை கண்டறிந்து பயிற்சி அளித்தோம். ஆர்வமுள்ள பல பெண்கள் முன்வந்தார்கள். பாதிக்கப்பட்ட பெண்களின் அமைப்பிற்கும் உதவ முடிந்தது.

கவிதா: கருத்துடை மாத்திரைகள் பெண்கள் உபயோகப்படுத்துவது என்னை பொறுத்தவரை பிரச்சனையே.. உங்களின் கருத்தும் ,விளக்கமும்.

என்ன/ எப்படி பிரச்சனை என்று நினைக்கிறீர்கள்?
கருத்தடை மாத்திரை யார் சாப்பிடுகிறார்கள்? என்பதை பொறுத்தது அது.குழந்தை பேற்றிற்குப்பின் குழந்தை பிறப்பை தடுக்க இது கண்டிப்பாக ஒரு நல்ல முறை. பல ஆராய்ச்சிகளுக்கு பின்னரே இது போன்ற மாத்திரைகள் அரசாலும், சர்வதேச நிறுவனங்களாலும் பரித்துரைக்கப்படுகிறது. ஒரு சிலருக்கு ஏதாவது பிரச்சனைகள் வரலாம். இது மாதிரி ஓரிரண்டு சதவீத ஒவ்வாமை எந்த மாத்திரையிலும் இருக்குமே. அதற்காக ஒட்டு மொத்தமாக கருத்தடை மாத்திரை பிரச்சனை என்று கூறி ஒதுக்க முடியாது. சுகாதாரமற்ற முறையில் நடக்கும் அனாவசிய கருத்தடைகளை தடுக்க இது உதவும்.

இரண்டாவது இப்பொழுது சந்தையில் பல கருத்தடை மாத்திரைகள் வர ஆரம்பித்திருக்கிறது. கருத்தடை மாத்திரைகளின் விளம்பரங்கள் வெகு சாதாரணமாக தொலைக்காட்சிகளில் காணமுடிகிறது. தில்லியில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் திருமணமாகாத பெண்கள் அதிக அளவில் இந்த மாத்திரைகளை வாங்குவதாக ஒரு அறிக்கை வெளி வந்தது. இது தான் வருத்தம் அளிக்க கூடிய விஷயம். அவ்வாறு திருமணம் ஆகாத பெண்கள் பின்னர் தான் செய்த தவறை நினைத்து வருத்தப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவரை அணுகுவதாக அந்த ஆராய்ச்சி முடிவுகள் சுட்டுகிறது. இது கவனிக்கபடவேண்டிய விஷ்யம்.

கவிதா:- தலித்துகளின் நிலை பற்றி..?

5 ஆண்டுகளுக்கொரு முறை தான் இவர்களின் நினைப்பு அரசியல் வாதிகளுக்கு வருகிறது. ''During her interaction with Dalits, Soniaji had food provided by a Dalit family in Rohania village in Rae Bareli,’ ‘She had some flattened rice (chivda)'' இது மாதிரி செயல்கள் அவர்களுக்கு எந்த வித்தில் உதவும். அவங்களோட சோறு சாப்ட்டா போதுமா. அதுக்கு அப்புறம் அவர்களின் நிலை???.. உத்தரபிரதேச மாநிலத்தில் தலித் பெண்மணி முதலமைச்சராக இருந்தும், தலித்துகள் கொலை மற்றும் கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு அதிக அளவில் ஆளாகிறார்கள். இந்த குற்றங்களை புரிந்தவர்கள் பெரும்பாலும் உயர்ந்த (?) சாதியை சேர்ந்தவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். படிப்பறிவை கொடுப்பதே அவர்களின் இன்றைய நிலையை மாற்ற ஒரு நிலையான தீர்வாக இருக்கும். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

கவிதா: பாலியல் தொழில் - உங்களின் பார்வையில் -

பாலியல் தொழிலில் என்றால், அதில் சம்பந்தப்பட்டிருக்கும் பெண்கள் ஏதோ தெருவில் நின்று கொண்டு கண்ணடித்து அழைக்கும் அழகிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு காரணம், நம் ஊடகங்கள். அறிவு பூர்வமாக, சமுதாய அக்கறையுடன் கொஞ்சம் விரிவாக யோசித்துப் பார்த்தால், அவர்களின் குடும்ப சூழ்நிலை, பாலியல் தொழிலில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அன்றாட சந்திக்கும் நபர்களின் ஆசைகளுக்கு ஈடுகொடுக்கும் அவர்களின் பரிதாப நிலை நமக்கு புரியும். இதையெல்லாவற்றையும் விட, எச்ஐவி நோய் பரவி இருக்கும் இந்த நாட்களில் தங்களை பாதுகாத்துக் கொள்ள அவர்கள் படும்பாடு.ம்ம்ம்ம்..இன்னும் எத்தனை எத்தனை...ஊடகங்களில் இன்றும் அழகிகள் கைது என்ற வாசகத்தை படித்துக் கொண்டு தானிருக்கிறோம்.' 'விபச்சாரி' என்ற வார்த்தயை இன்னும் கேட்டுக் கொண்டுதானிருக்கிறோம் இன்று வரை பாலியல் தொழிலில் ஈடுப்பட்டவர்களை தண்டிக்கும் சட்டங்கள் தானிருக்கின்றனவே ஒழிய, சம்பந்தப்பட்ட ஆணை தண்டிக்கும் சட்டம் இன்னும் வரவில்லை.

கவிதா :- Memory Trigger - இதனால் உங்களுக்கு அடிக்கடி நினைவுவரும் விஷயங்கள்??

வேப்பம்பூ நறுமணம் என்றால் கோவையில் யுகாதி கொண்டாடிய நாட்களும், மாரியம்மன் நோம்பியில் தோழியருடன் ராட்டினாந்தூரி ஆடிய நாட்களும். புது துணி மணம் என்றால், ஜூன் மாதம் புது யூனிபார்ம் போட்ட நாட்கள், அடுத்த வகுப்பிற்கு போவதால் ஏற்பட்ட அந்த பதட்டம், இன்றும் எனக்கு வரும் ஒரு உணர்வு.

அணிலு:- யக்கோவ்..நீங்க பாட்டு எல்லாம் பாடுவீங்களா? கவி கொடுமைய தாங்கமுடியாம இருக்கோம்.. அது என்ன நடுநடுவுல சினிமா பாட்டா போட்டு தாக்கி இருக்கீங்க... ??? என்ன மேட்டரு

பாட்டு பாடாதவங்க யாரு இருப்பா...எனக்கு மட்டும் கேக்குற மாதிரி பாடிக்குறதுதான்.:-).. பிடித்த பாடல்களை வலையேற்றினேன்...இன்னும் வரும்...

கவிதா:- பிஞ்சு கரங்களில் தாய்மை - என்னவோ என் நினைவு வந்தது.. ஆனால் பதிவு வேறு விதமாக இருந்தது.. பெண்ணின் திருமணவயது தெரியும், ஆனால் இன்றைய பெண்கள் மிக தாமதமாக திருமணம் செய்துக்கொள்வதாக படுகிறது. உங்களின் நிலைப்பாடு.

அந்தப் பதிவை படித்ததும் என்னவோ நினைவு வந்தது என்று கூறியிருக்கிறீர்கள்..உங்களுக்கு என்ன நினைவு வந்தது....???

இது அவரவர்களின் விருப்பம்.. ஒரு பெண்ணோ, குடும்பத்தாரோ பல காரணங்களை முன் வைத்து முடிவை எடுப்பார்கள்..இதில் நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை...ஒரு நல்ல நிலைக்கு வந்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கலாம்.. குடும்ப சூழ்நிலைகள் காரணமாக இருக்கலாம்....தங்கைகளுக்கு திருமணம் செய்த பிறகு திருமணம் செய்து கொண்ட தோழியர் பலர்...இது அவரவரர் தனிப்பட்ட விருப்பம்... இந்த வயதில் தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று நினைக்குறேன்...இன்றைய பெண்கள் எதையும் ஆராய்ந்து முடிவு எடுக்க கூடிய பக்குவம் உள்ளவர்கள் என்று நினைக்கிறேன்.

முக்கியமான விஷ்யம்... இன்றும் ஆந்திரா, ராஜஸ்தான்,பீஹார், ஒரிசா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில், 14 / 15 வயதில் பெண்களுக்கு திருமணம் நடக்கிறது. அது தான் கவலைப்படவேண்டிய ஒன்று.

கவிதா : மங்கைஜி உங்களுடைய 80% பதிவுகள் பெண்களின் பிரச்சனைகளை சார்ந்தே உள்ளது. அடுத்து குழந்தைகள், அடுத்து சமுதாயம் சம்பந்தப்பட்ட பதிவுகள், இதில் எங்கேயுமே நான் ஆண்களுக்கான அல்லது ஆண்களை பற்றிய உங்களின் எழுத்தை பார்க்கவில்லை குறிப்பிட்ட காரணம் இருக்கா? (ம்ம்..அப்பா' வை பற்றிய ஒரு பதிவு இருந்தது அதைத்தவிர்த்து.)

நான் பெரும்பாலும் எழுதுவது என் துறை சார்ந்த பதிவுகளே...எதைப் பற்றி தெரியுமோ அது தானே எழுத முடியும்!!...சமுதாயத்தை பற்றி எழுதும் போது ஆண்களைப் பற்றியும் எழுதித்தான் இருக்கிறேன்...ஆண்/ பெண் என்ற பேதம் பிரித்து நான் எழுதவில்லை....எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களை பற்றி எழுதும் போது இரு பாலாரைப்பற்றியும் தான் எழுதி இருக்கிறேன்..பாலியல் பலாத்காரத்தைப்பற்றி எழுதும் போது குறிப்பாக ஆண் குழந்தைகளைப் பற்றி் எழுதியிருக்குறேன்...ஆண்களுக்கு வரும் மசக்கையைப் பற்றி எழுதி்யிருக்கிறேன்.. தெருவில் வளர்ந்து வாழ்க்கையில் வெற்றி பெற்ற விக்கியைப்பற்றி எழுதி இருக்கிறேன்...மனித உரிமை நாள் பதிவில் அரும்பணியாற்றிய சில ஆண்/பெண் இருபாலாரையும் குறிப்பிட்டு எழுதியிருக்குறேன்...எல்லாமே பொதுவாக எழுதியவையே...

ஆண்களைப் பற்றி நான் வேறு என்ன எழுதி இருக்கலாம் என்று நீங்கள் நினைக்குறீர்கள்?.

ஒரு விஷயம் பெண்ணீயத்தை பற்றி நான் என்றுமே நான் எழுதியதில்லை..எழுதப்போவதுமில்லை..அதில் எனக்கு விருப்பம் இல்லை.. நான் எழுதியது எதுவுமே பெண்ணீய பதிவுகள் இல்லை. 80% பெண்களைப்பற்றியதா?.. அப்படியில்லையே...5 அல்லது 6 பதிவுகள் தான் முற்றிலும் பெண்கள் பற்றியது..அதுவும் ஒரு சமுதாய பிரச்சனையாகத்தான் நான் எழுதியிருக்கிறேன்.

சுருக்கமாக கேட்ட கேள்விகள் :-

1. உங்களின் சொந்த ஊர், பிடித்த விஷயம் - கோவை...அங்க பிடிக்காத விஷயம் ஒன்னுமே இல்லை.:-)

2. தனிமையில் நீங்கள் இனிமை காணும் ஒரு விஷயம்- தனிமையையே இனிமையாக்க கற்றுக் கொண்டேன். பாட்டு கேட்பது, நண்பர்களுடன் உரையாடல்..

3. உங்கள் பதிவுகளில் உங்களுக்கு பிடித்தது 3 - எல்லாமே பிடித்த பதிவுகள் தான்... ரொம்ப பிடித்த பதிவு --வலிகளை பகிர்தலின் அவசியம்.

4. பிடித்த ஆண்கள் மூவர்- எனக்கு பிடிக்காதவர்கள்னு யாரும் இல்லை.. சட்டென்று நினைவிற்கு வருபவர்கள்...1) முதலில் அப்பா...2) ராணுவத்தில் சேர்ந்து, இறந்து போன என் கல்லூரி தோழன் செம்பியன்..3) நான் விழும்பொழுதெல்லாம் என்னை தூக்கி நிறுத்தி என் தன்னம்பிக்கையை தூண்டிவிட்ட நண்பன். இதில் கணவர் இல்லையானு கேட்கவேண்டாம்... என் கணவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்னு சொன்னா என்னமோ நல்லா இல்லை. அது எங்களுக்குள்ள சொல்லிக்க வேண்டியது..

5. உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு- அப்படி குறிப்பிட்டு சொல்லும்படியா ஒன்னும் இல்லை....எப்படியாவது பொழுது போயிடுது.

6. உங்கள் வாழ்க்கையின் லட்சியம்- லட்சியம் எல்லாம் இல்லைங்க.... செய்யும் பணியை முடிந்த வரை முழு அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும்.. அவ்வளவு தான்.

7. உங்களுக்கு பிடிக்காத விஷயம்-கோபம், மற்றவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுக்காமல் தனக்கே எல்லாம் தெரியும் என்கிற இறுமாப்பு, ஒரு வரைப்பற்றி அனாவசிய விமர்சனம்

8. இந்த தேர்தலில் எந்த கட்சிக்கு நாம் ஓட்டு போடலாம் என்று நீங்கள் பரிந்துரைக்கும் 2 கட்சிகள்- அரசியலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்.பரிந்துரை செய்யும் அளவிற்கு நான் அரசியலை அலசியதில்லை.

9. கவிதாவிடம் கேட்க நினைக்கும் ஒரு கேள்வி-உங்கள் குறைகளை பிறர் சுட்டிக்காட்டும்போது உங்கள் மனநிலை?. அது உண்மையிலேயே குறைகளாகவே இருக்கும் பட்சத்தில்?