"ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்" - என்று அவ்வை பாடியதாக ஞாபகம்.

ஓர் ஊர் இருக்கின்றது, அழகான ஊர், மனிதர்கள் நடமாடும் ஊர், மாட மாளிகைகள் கூட கோபுரங்கள் உள்ள ஊர். அறிவுக்கே பிறப்பிடமான ஊர்.
இப்படிப்பட்ட ஒரு ஊருக்கு ஆறு வேண்டும் -வேண்டிய அவசியம் கூட இல்லை - அது ஒரு "அழகு அந்த ஊருக்கு" என்கிறார் அவ்வையார்.

சரி, ஆறு ஒரு இடத்தில் ஓடுகிறது. இருமருங்கிலும் பண்ணையாக தென்னைந்தோப்புகள், சவுக்கை தோப்புகள் இருக்கின்றன. அகலம் இரு "காதம்" இருக்கும். அந்த இடத்தில் ஒரு நடுத்தரமாக உள்ள அணை வேறு இருக்கிறது. ஒரு தாலுக்காவின் அரை பகுதி ஏரிகளுக்கு வேறு அது நீர் அளிக்கிறது. அப்படிப்பட்ட அந்த ஆற்றின் கரையில் சரியான -

ஊர் இல்லை!! அது தான் "எல்லிஸ்" சத்திரம்!

மேற்கூறிய காரணத்துக்காக தானோ என்னமோ அந்த ஆறு கண்னீர் விடுவது அதன் இரு மருங்கிலும் ஓடுகிறது.

"எல்லிஸ்" சத்திரம் என்னும் பெயர் உங்களுக்கு ஒரு புதுமையான சந்தேகத்தை அளிக்கலாம். ஏன்? எங்களுக்கும் கூடத்தான் ஒரு சில தினங்களுக்கு முன் இருந்தது. அந்த சத்திரத்தை கட்ட முக்கிய காரணம் "Ellis" என்ற ஆங்கிலேயராம். அதனால் தான் அந்த ஊருக்கு "எல்லிஸ்" சத்திரம் என்று பெயர் ஏற்பட்டதாம்.

இப்போது நமது ஊர் மக்கள் சிலர் அதை "எல்லிச்சத்திரம்" என்றும் "எல்லை சத்திரம்" என்றும் அழைக்கின்றனர். அதற்காக நாங்கள் பெரிதும் வருந்துகிறோம். அன்று ஞாயிற்றுக்கிழமை, எங்கள் எல்லோருக்குமே அன்று ஓய்வு தான், திடீரென்று து. கோவிந்தன் அவர்கள் வண்டி எல்லிஸ் சத்திரத்திற்கு ஒரு வேலையாக கிளம்பியது. நாங்களும் கிளம்பினோம். கிளம்பியவர்கள் :-
1. P. அரங்க நாதன்.
2. M. வேதகிரி
3. T. கோவிந்தன்
4.R. அனந்தன்
5. C.கிருஷ்ணமூர்த்தி

மேற்கூரியவர்களில் து.கோவிந்தன் அவர்கள் (மாட்டு) வண்டியில் சென்றவர்கள்:-
1. து.கோவிந்தன்
2. மு.வேதகிரி
3. பெ. அரங்கநாதன்
4. C.கிருஷ்ணமூர்த்தி.

என் ஓட்டை வண்டியில் (சைக்கிளில்!) நானும் அனந்தனும் சென்றோம். நாங்கள் இங்கு கிளம்பும் போது மாலை மணி சுமார் மூன்று இருக்கும். அங்கு சேரும் போது மணி நாலரை இருக்கலாம். ஒருவாறாக போய் சேர்ந்தோம்!. போய் சேர்ந்ததும் அந்த சத்திரத்தின் அமைப்பை பார்த்தோம். சத்திரம் என்றால் அதுதான் சத்திரம். அந்த மாதிரி அதன் அமைப்பு இருந்தது. ஒவ்வொன்றாக பார்க்கும் போது ஒரு சில(ர்) வற்றை பார்த்தோம்!. அந்த சத்திரத்தில் பல கெட்ட வார்த்தைகளை கை கூசாமல் எழுதி இருந்தனர். அதை பார்த்துவிட்டு மறுபுறம் திரும்பினால் ஒரு "காணாத காட்சி" யை கண்டோம்.

நமது விழி நகரில் உள்ள ஒரு 'பெயர் போன (!) மன்ற (?) நாடக விளம்பரம் இருந்தது. அதிலிருந்து குறிப்பாக நாங்கள் இது போன்ற இடத்தில் தான் நாடக சபையினர் விளம்பரம் செய்வார்கள் என தெரிந்து கொண்டோம்!.

பிறகு கையில் கொண்டு வந்த சிற்றுண்டியை அருந்த அணையின் பக்கமாக சென்று ஆற்றின் நடுவே, அணையின் பக்கமாக, உட்கார்ந்தோம். சிற்றுண்டியை சாப்பிட்டோம்!. தர்மாஸ் கூஜாவில் கொண்டுவந்த காபியையும் ஒரு கை பார்த்தோம்! சாப்பிடும் போது சில நாகரீக செம்படவர்கள் புது முறையில்(?) மீன் பிடிப்பதை பார்த்தோம்.
ஆற்று மணலில் சில நிமிடங்கள் உட்கார்ந்து பேசிவிட்டு அணையின் அமைப்பை கவனிக்க சென்றோம் தென்கரை நோக்கி!

அப்போது ஏனாதி மங்கலத்திலிருந்து வந்த ஒரு அணையின் தற்காலிக நிர்வாகி (Officer - in -Charge, Ellis Choultry Dam (Temporary)) எங்களுக்கு அணையின் அமைப்பை விளக்கினார். தென்கரையில் பிரியும் கால்வாய்கள் இன்ன இன்ன இடத்திற்கு போகிறது என்று சொன்னார். அவை எங்களுக்கு சரியாக ஞாபகம் இல்லை. வடக்கு புறம் வந்து கொண்டே இருந்தோம். படம் 3- ல் காட்டியபடி செங்குத்தாக மாறி மாறி சுமார் ஆயிரம் கற்களுக்கு மேல் நடப்பட்டு இருந்தது. அதைப்பற்றி மு.வேதகிரி அவரை வினவிய போது அவர் சொன்னதாவது.

(கவனிக்க:- அப்பா, மேலுள்ள படத்தில் 1, 2, 3, 4 என்று நம்பர் குறிப்பிட்டுள்ளார்)
"இந்த கற்களின் நீளம் 9 அடி, கனம் 1 அடி சதுரம். இதை 16 அடி உள்ள ஒரு கிணற்றில் சிமண்டு காங்க்ரீட்டின் மூலமாக புதைத்து இருக்கிறது. இந்த கற்களின் மூலமாக தண்ணீர் வேகம் படத்தில் காட்டியுள்ள படி குறைக்கப்படுகிறது.

பிறகு அணையின் சுவற்றின் மேல் நடந்தோம். அப்பொழுது அந்த சுவர் ஏன் சாய்வாகவும் ஒரு பள்ளமுடையதாகவும் இருக்கிறது?" என்று பெ.அரங்கநாதன் அவரை கேட்டார். அவர் படத்தில் காட்டி இருப்பது போன்ற (படம்-1) அந்த இடத்திற்கு விளக்கம் தந்தார். "இந்த மாதிரி அணையின் சுவர் சாய்வாகவும் வளைந்தும் இருப்பதால் அந்த சுவரை தண்னீர் உடைத்துவிடுவது என்பது அவ்வளவு சுலபமல்ல. மேலும் அதில் பள்ளம் வேறு இருப்பதால் (தயவு செய்து படத்தை பாருங்கள்) வழிந்த தண்ணீரின் வேகம் குறைக்கப்படுகிறது. அதுவுமில்லாமல் அணையின் "கசிவு நீர்" (Dam Fountain) அதில் தங்கவும் வசதியாகிறது" என்றார்.

பிறகு அந்த அணை சுவரிலேயே உள்ள ஒரு இடத்திற்கு இறங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அந்த இடத்தில் சுமார் 8 அடி நீளமுள்ள இரும்பு தகடுகள் ஒரே நீளமாக அந்த அணையின் காங்கரீட் சுவரின் மேல் பொருத்தப்பட்டு இருந்தது. அதைப்பற்றி அவரிடம் அனந்தன் அளவளாவிய போது அவர் அளித்த விளக்கம்

"இந்தத் தகடுகளினால் (படம்-2) வேண்டும் போது தண்ணீரை சீக்கிரமாக திறந்து விட சாத்தியமாகிறது மேலும் இதில் உள்ள "ஏற்பாட்டின் படி" (Adjustment) (படம் -4 ஐ பாருங்கள்) இதை தண்ணீரை தாக்கும் படியாகவோ (Beating of Water) அல்லது தாங்கும் படியாகவோ (Carrying of water)
அமைக்கலாம். நீங்கள் இப்போது பார்ப்பது அதன் நடுவான நிலை. (In it's normal position). வெள்ளத்தின் தன்மையை பொருத்து அதை அதிகாரிகளின் மேற்பார்வையில் வேலையாட்கள் அந்த "ஷட்டரை" (Shutter) ஏற்பாடு செய்வார்கள்" என்று சொன்னார்.

பிறகு தென்கரையை அடைந்தோம். அவர் கால்வாய்கள் எங்கு போகின்றன என்பதை விளக்கினார். நாங்கள் ஊருக்கு திரும்ப சத்திரத்திற்கு வந்தோம். அவர் அங்கேயே எதோ ஒரு வேலையாக தங்கிவிட்டார். சத்திரத்திற்கு வந்து அவிழ்த்த மாட்டை பூட்டினோம். கிளம்பினோம் வில்லுபுறம் நோக்கி.....
வழியில் சில(ர்)வற்றை கண்டோம், அவை(கள்)களை நாங்கள் மதிக்கவில்லை. கண்டம்பாக்கம் எனும் கிராமம் வந்தது, நானும் அனந்தனும் சைக்கில் விளக்கை பற்ற வைக்க ஒரு வத்திப்பெட்டி வாங்கினோம். ஏற்றினோம். புறப்பட்டோம். வழியில் சாலை சரிவர இல்லாதததால் நானும் அவரும் விழுந்து வாரினோம்.

பிறகு விழிநகர் நானும் அனந்தனும் முதலிலும் பிறகு எங்கள் நண்பருமாக வந்து சேர்ந்தோம்.
சிற்றுண்டி அருந்தி சீட்டாடி சிங்கார பண் இசைக்க போகவில்லை - நாங்கள்.
சத்திர சுவற்றில் "சிலர்" போல் தம் சித்திரத்தை தீட்ட ஆசைப்படவில்லை - நாங்கள்

மீன் பிடித்து சாப்பாடு சமைத்து சுவைத்து கூப்பாடு போட போகவில்லை - நாங்கள்

ஆனால் - சிதறிக்கிடக்கும் சிந்தனைக்கு சிலவுத்தர, காணா கண்களுக்கு விருந்தளிக்க, பதறும் மனதிற்கு பால் சோறு ஊட்ட, மருதூர் மக்களுக்கு அவ்வணையின் மதிப்பினை தெரிவிக்க -சென்றோம்.. "நாங்கள்"

இதுதான் நாங்கள் "எல்லிஸ்" சத்திரம் போன கதை.

கவிதா:- இது பார்வைகளின் 200ஆவது பதிவு. அப்பாவே வரைந்து எழுதிய எழுத்தை பதிவிட எனக்கு மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. 1954 ல் எழுதிய இந்த பதிவின் போது அப்பாவிற்கு வயது 20. படங்களில் PK வென கையெழுத்திட்டிருப்பார். பிளாக் வந்த பிறகு அவருடைய கையேட்டை படிக்கவில்லை. அவ்வப்போது எடுத்து அவரின் நினைவாக பார்ப்பதுண்டு. இன்று தான் எடுத்து இதோ டைப் செய்து முடித்துள்ளேன் அவரின் எழுத்து சாயல் நிறைய என்னிடம் இருப்பதாக இன்று தான் எனக்குப்பட்டது...! Ofcourse அப்பாவின் கையெழுத்து Damn Good!! அவரை போலவே எழுதுகிறேன் என்பதை விட அவர் இருக்கும் போதே உங்களை போல் அழகாக எழுதிக்காட்டுகிறேன் பாருங்கள் என்று கட்டாயாப்படுத்தி பழகிக்கொண்டது :)). வரைதலும் அப்படியே, அப்பாவிடம் ஆ, ஊ வென்றால் சவால் விட்டு உங்களை போல் வரைகிறேன் பாருங்கள் என்று வரைந்துக்காட்டுவேன்.
Appa, I love you !! I Miss You!! Naveen Missed you ! I want you back Daddy. !