இன்று கேப்பங்கஞ்சி' குடிக்க வந்து இருப்பவர் சாதிக்க நினைக்கும், சாதித்து கொண்டு இருக்கும் திருநங்கை லிவிங் ஸ்மைல் வித்யா அவர்கள், நாம் அனைவரும் அறிந்த பத்திரிக்கைகள் மூலமும், இணையதலம் மூலமாகவும் பிரமலமாகி இருப்பவர். இவரை பற்றிய அறிமுகம் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

வித்யா, பொதுவாக மற்ற நண்பர்களை இங்கு அழைக்கும் போது அவர்களின் பதிவுகளை படித்து அவர்களை பற்றி கொஞ்சம் தெரிந்துகொண்டு பின்பு கேள்விகள் கேட்பேன். உங்களை பொறுத்தமட்டில், இணையதளத்தில் தேடி தேடி சில விஷயங்களை தெரிந்துகொண்டு வந்து கேள்விகள் கேட்டு இருக்கிறேன். என்னுடைய கேள்விகள் சிறுபிள்ளைதனமாகவும், அறியாமையால் எழுந்தவையாகவும், உங்கள் மனதை புண்படுத்தும் படியாக இருந்தாலும் தயவசெய்து மனம் பொருத்து எனக்கு பதில் அளிப்பீர்கள் என்று நினைக்கிறேன். கேட்கப்பட்ட கேள்விகள் உங்களை மையமாக வைத்து மட்டும் இல்லை, எல்லா திருநங்கைகளையும் மனதில் கொண்டே.. இதோ.. நம்முடன்.. வித்யா......

வாயை புடுங்கற ரவுண்டு :-

கவிதா:- வாங்க வித்யா எப்படி இருக்கீங்க?. உங்களிடம் கேட்கும் முதல் கேள்வி உங்கள் சிறுவயதை பற்றி. நீங்கள் எப்போது மனதளவில், உடலளவில் உங்களிடம் மாற்றத்தை உணர்ந்தீர்கள்?

வணக்கம், ரொம்ப நல்லா இருக்கேன். சிறுவயது பற்றி சொல்வதென்றால், எனக்கு இயல்பான தொரு இளமைப் பிராயம் அமையவில்லை என்று தான் சொல்லமுடியும். கிட்டதட்ட வெறுமையான இளம்பருவம், தாயின் இழப்பு, அப்பாவின் படி, படி என்ற தொடர் கெடுபுடிகள் என கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது.

என் நினைவு தெரிந்து கிட்டதட்ட 10,11 வயது எனக் கொள்ளலாம், அப்போது, சிறுவர்களோடு விளையாடுவதை விட சிறுமிகளோடும், பெரிய அக்காக்களோடும் விளையாடுவதே எனக்கு சௌகரியமாக இருந்தது, வீட்டுக்கெடுபிடிகளையெல்லாம் தாண்டி சில்லாக்கு, தாயம், பல்லாங்குழி இவற்றில் அய்க்கியமாகி இருந்தேன். தாயரற்ற பிள்ளை / நன்றாக படிக்கும் பிள்ளை (சும்மா படி படின்னு இம்ச பண்ணதால வேற வழியில்லாம கொஞ்சம் சுமாரா படிச்சேன்) உறவினர்கள் எனது பெண்தன்மையை, மென்தண்மையாக புரிந்து கொண்டனர்.

நாட்பட 13/14 வயதில் அக்காவின் சட்டை பாவடையை போட்டு அழகு பார்க்க ஆரம்பித்த பிறகு பொம்பள சட்டி, பொட்ட மாரி போன்ற கேலி கிண்டல்கள் ஆரம்பமாயிற்று, அதை தவிர்ப்பதற்காக யாருமற்ற நேரங்களில் அறையில் அக்காவின் ட்ரஸ்ஸை போடுவது, கண்னுக்கு மை தீட்டுவது, தேங்காய் எண்ணெயை உதடுக்கு (லிப்ஸ்டிக்!) தேய்ப்பது, துண்டை தலையில் கட்டிக்கொள்வது (எங்கக்கா குளித்தபின் துண்டை கட்டிக் கொள்வதைப் போல) போன்ற சேட்டைகள் செய்து என் ஆசைகளைத் தீர்த்து கொள்வேன். குறிப்பா, அக்காவோட லாங்க் ஸ்கர்ட்டை கட்டிக் கொண்டு, வேகமா சுத்திகிட்டே சடாரன்னு உட்காருவேன். அப்போது நான் நடுவுல உக்காந்திருக்க, என்னை சுற்றிலும் பாவாடை அழகா வட்டாமா அமைந்திருக்க, அந்த அழகை நானே ரசித்து ரசித்து மகிழ்வேன்.

எந்தளவு என்னை பெண்ணா நினைச்சு மகிழ்ந்தேனோ, அதே அளவு ஜாக்கிரதையாவும் இருந்தேன். மற்றவர்கள் என் பெண்தன்மையை அடையாளம் காணக்கூடாது என்பதில் கவனமா இருந்தேன். ஆனால் அதையும் மீறி ஏதோ ஒன்று என் பெண்தன்மையை அம்பலப்படுத்தி விடும். இதனால், புறவயமாகவும் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டேன். ப்ளஸ் டூ படிக்கும் போது என்னை வெறுப்பேற்றவே நான்கு பேர் டீம் ஒன்று இருந்தது. என்னை கூனிக்குறகச் செய்யும் ஆயுதமாக என் பெண்தன்மை குறித்த இழிசொல்லை பயன்படுத்துவார்கள்.

போர்டில் என் பெயரை எழுதி
.... ஒரு படிப்ப்பலி,
.... ஒரு உழைப்பலி,
..... ஒரு தொழிலலி என்று எழுதி வைப்பார்கள்...

இதனாலேயே கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் சேருவதையே தவிர்த்தேன். பெண்களுடனும் பழகமுடியாமல், ஆண்களொடும் பழக முடியாமல் தவித்த போது புத்தகங்களே எனக்கு உற்ற தோழியாக இருந்தது. அப்படித்தான், இலக்கியம் பரிச்சயமமனது.

யு.ஜி. முடித்து, பி.ஜி. சேர்ந்த போது, நாடகத்துறையில் கவனம் செலுத்தி வந்தேன். அப்போது, திருச்சியில் உள்ள பாலியல் சிறுபாண்மையோர்க்கான தொண்டு நிறுவனத்திற்கு வரப்போக இருந்ததன் மூலம் திருநங்கைகளை நேரில் கண்டேன், அவர்களைப் பார்க்கும் போதும் அவர்களுடன் பேசும் போதும் நான் என்ன என்பது தெளிவாயிற்று..

கவிதா:- உணர்ந்த பின், உங்களின் மனநிலை எப்படி இருந்தது?. யாரிடமாவது சொன்னீர்களா?. எதனால் இப்படி என்று தெரிந்து கொள்ள முற்பட்டீர்களா?

உணர்ந்த பின் பெரிசா ஒன்னும் தோணல முன்பு சொன்னபடி நாடகம், வாசிப்பு என ஏதோ ஒன்றில் எண்ணத்தை செலுத்தி வந்தேன். ஆனாலும், பி.ஜி.யும் முடிச்சு, பி.எச்.டி சீட் கிடைச்ச நாட்களில் எனக்குள் முழு பெண்ணாக மாறவேண்டும் என்ற வெறி அளவு கடந்து விட்டது. நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்பதை விட எங்களை ஏன் சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று
தான் யோசித்தேன்.

திருச்சியில் உள்ள நண்பர்கள் நேரு மற்றும் குமரன் ஆகியோரிடம் மட்டும் என் நிலைமையை எடுத்துச் சொல்லி, அவர்களின் உதவியுடன் சென்னைக்கு சென்றேன். அப்பாவிடன் சென்னையில் வேலை கிடைத்திருப்பதால் சென்னைக்கு செல்கிறேன் என்று பொய் சொல்லி சமாளித்தேன். அங்கு சென்ற பின் எனது அபிமானமிக்க பேரா. மு. ராமசாமியிடமும் என் நிலைமையை தெரிவித்து என்னால் முனைவர் படிப்பை தொடரமுடியாது என்று கூறி புனேவிற்கும் சென்று விட்டேன்.

கவிதா:- அடிக்கடி எனக்கு தோன்றும் கேள்வி இது, திருநங்கையாக ஆவதற்கு நீங்கள் செய்து கொள்ளும் நவீன ஆப்ரேஷன் ஆகட்டும், அதற்கு முன் பழைய முறைப்படி செய்யப்பட்ட "அறுத்து எரிதல்" நிகழ்வாகட்டும், பெரும் வேதனையும், மனவலி, உடல் வலியையும்,பிழைத்தால் வாழலாம் என்ற நிலையை உங்களுக்கு கொடுக்கிறது. இதற்கு பதில், உங்களின் மனநிலையை மனோதத்துவ (counseling) முறைப்படி மாற்ற ஏதாவது முயற்சி செய்யலாம் இல்லையா?.. அப்படி நீங்களோ இல்லை வேறு யாரோ செய்து இருக்கிறார்களா?.. முயன்று இருக்கிறீர்களா?

பொதுவாகவே, தன்னை திருநங்கையாக உணரும் நபர் முதலில் ஹிஜ்ரா கம்யூனிட்டி (திருநங்கைகள் குழுமத்தில்)யில் சேருவார்கள். அங்கு மற்ற திருநங்கைகளோடு ஊடாடுவது மூலம், ஆப்ரேசன், அங்கீகாரமின்மை, வலி என அனைத்தையும் அறிந்து தெரிந்து கொள்வர். அதையும் மீறி ஆப்ரேசன் செய்து கொள்வேன் என்று உறுதியாக இருப்பவர்களுக்குத்தான் மேற்சொன்ன முறைமைகள் நடைபெறும். சிலர் ஆப்ரேசன் செய்யாமலும் இருப்பதுண்டு. மேலும் சிலர் வெளித்தொற்றத்தில் ஆணாகவும் திருநங்கைகள் மத்தியில் திருநங்கையாகவும் வாழ்வதுண்டு. தீர யோசித்து அவரவர் எடுக்கும் முடிவுதான் இது. ஒரு வகையில் ரியல் டைம் கவுன்சிலிங் என்றே கூறலாம்.

கவிதா:- ஆப்ரேஷன் இல்லாமல் ஹார்மோன் தெரபி முறை ஏதாவது உங்களுக்கு பயன் அளிக்குமா?. அதாவது திருநங்கையாக இல்லாமல் ஆணாக'வே (அ) பெண்ணாகவோ இருக்க சாத்தியகூறுகள் மேற்சொன்ன முறைகளில் முடியுமா?

தன்னை திருநங்கையாக உணரும் நபருக்கு, முறையான மருத்துவ திட்டத்தின் படி முதலில் கவுன்சிலிங் தரப்படும். அக்கவுன்சிலிங்கின் போதே மருத்துவருக்கு அந்நபர் குறித்த ஒரு தெளிவு கிடைத்துவிடும். தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ரியல் லைப் டெஸ்ட், கடந்த கால வாழ்க்கை குறித்த மனோவியல் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் அந்நபருக்கு என்ன சிகிச்சை தேவை என்பதை மருத்துவர் கணித்துவிடுவார். இதில் மருத்துவரை விட அந்நபரின் முடிவிற்கே முக்கியத்துவம் தரப்படும். அந்நபர் எந்த பாலினை தேர்வு செய்கிறாரோ அதுவே மேற்கொள்ளப்படும். ஆனால், மாற்று பாலினமாகவே அனைவரும் விரும்புகிறார்கள்

ஜெண்டர் அய்டெண்டிட்டி டிஸ்ஆர்டர் (GID _ Gender Idnetiy Disorder) உள்ள நபரின் விருப்பமே முதன்மையானது. அவரது விருப்பத்திற்கு மரியாதை தரப்பட வேண்டும் என்பது, திருநங்கைகள் குறித்து முதலில் சிந்தனை செய்த ப்ராய்ட் சொல்கிறார்.

கவிதா:- ஹார்மோன் குறைபாடு உடல் அளவில் ஒரு ஊனம், உங்களுக்கும் உடலில் ஒரு ஊனம் என்று எடுத்துக்கொள்ளலாமா?

சொல்லலாம், அது இடஒதுக்கீடு கேட்பதற்கு உதவலாம். ஆனால், எனது தனிப்பட்ட கருத்தின்படி சொல்வதென்றால், பாலின அடையாள சிக்கல் என்பது குறைபாடு கிடையாது. குறைந்த எண்ணிக்கை அவ்வளவே. சராசரி ஆண்/பெண் க்கு கிடைக்கும் அங்கீகாரமும், வாய்ப்பும் கிடைக்கும் பட்சத்தில் எங்களாலும் எந்த தடையுமின்றி எல்லாத் துறையிலும் சிறப்பாக பணியாற்ற முடியும். வேண்டுமானால் பாலியல் சிறுபாண்மையினர் என்று சொல்லலாம்.

கவிதா:- திருநங்கை'களுக்கு தனி அங்கீகாரம் கொடுக்கனும்னு நினைக்கறீங்க. இந்த அங்கீகாரம் உங்கள் வீட்டிலிருந்து ஆரம்பித்தால் நலம் இல்லையா?. அதற்காக முயற்சி ஏதாவது செய்தீர்களா?.

சரி தான், ஆனால் குடும்பம் என்பது என்ன? சமூகத்தின் சிறிய அலகுதானே?! ஆரம்பத்தில் ஸ்பஸ்டமாக நான் என்ன என்பது தெரியவரும்போது என்னை கண்டு
அதிரும் குடும்பம் நாளடைவில் நாளடைவில் என்ன இருந்தாலும் என் பிள்ளை என்று ஏற்றுக் கொள்ளும் பக்குவத்திற்கு வந்துவிடுகிறார்கள்.

மனதால் ஏற்றுக் கொண்டாலும், வெளிப்படையாக ஏற்றுக்கொள்வதற்கு சமூகமும், சமூக நியதிகளுமே காரணமாக உள்ளது. முதலில் வீட்டில் ஒரு திருநங்கை இருப்பது அவ்வீட்டிற்கான அவமானசின்னமாக கருதப்படுகிறது. இது உறவுகள் மத்தியில் தலைகுனிவை ஏற்படுத்துகிறது. சகோதர/சகோதரிகளின் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு தடையாகிறது. உதாரனத்திற்கு சொல்வதென்றால், ஒரு குடும்பத்தில் திருடன், கொலைகாரன் போன்ற குற்றவாளி இருந்தால் எத்தகைய இருக்கமான சூழல் நிலவுமோ அதைவிட மோசமான விளைவுகளை எங்கள் குடும்பம் சந்திக்க நேர்கிறது. மட்டுமன்றி தன்னால் தன் குடும்பத்திற்கு எந்த லாபமும் இல்லை ஆனால், அவமானம் மட்டும் நேர்கிறது என்ற குற்றவுணர்வும் எங்களை வெளியேற்றுகிறது.

சட்டமும், சமூகமும் ஏற்றுக் கொண்டால் குடும்பம் தானாகவே எங்களை ஏற்றுக் கொள்ளும்.

கவிதா:- உங்களுடைய ரத்த சொந்தங்கள் உங்களை அங்கரிக்காத போது எப்படி மற்றவர்கள் அதை ஏற்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?

இதில் ஒரு விசயத்தை நன்கு யோசித்து பார்க்க வேண்டும். நீங்கள் சொல்லும் ரத்த சொந்தங்கள் என்னை பாராட்டி சீராட்டி வளர்த்தவர்கள்; என் சார்ந்து பல கற்பனையை வளர்த்தவர்கள்; அவர்களுக்கு என் மாற்றம் ஒரு பெரும் இடியாகத்தான் இருந்திருக்கும். ஆக, நான் இப்படி இருப்பதால் நஷ்டம் அவர்களுக்கும் தான் அந்த கோபம் அவர்களுக்கு இருக்கத்தான் செய்யும்.

ஆனால், எந்த சம்பந்தமும் இல்லாத மற்றவர்களுக்கு நான் இப்படி இருப்பதால் என்ன கேடு வந்தது? இப்போ நீங்கள் ஒரு பஸ்ஸில் பயணம் செய்கிறீர்கள், அதில் உங்களோடு ஒரு அய்ம்பது பேராவது பயணம் செய்யாலாம். அந்த அய்ம்பதில் ஒன்றாக நானும் பயணம் செய்கிறேன். அப்படி இருக்க என்னை மட்டும் அருவெறுக்கவோ, கேலி செய்யவோ யாருக்கு என்ன அவசியம் இருக்கிறது? என் சொந்தம் ஏற்றுக் கொள்ளவில்லை நடுத்தெருவில் நிற்கிறேன் என்பதற்காக என்னை நிந்திக்கும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது?

கவிதா:- இந்த பால் மாற்றம் பற்றி உங்கள் குடும்பத்திற்கும், உங்களை சுற்றி உள்ளவர்களும் சரியாக புரிந்து கொள்ளும் படி (awareness) செய்தால் மட்டுமே அவர்கள் உங்களை ஏற்று கொள்வார்கள். உங்கள் குடும்பத்திற்கு செய்தீர்களா?

நான் புனேக்கு சென்ற சில மாதங்களிலேயே நண்பர்கள் மற்றும் பேராசிரியர் மூலமாக என் பெற்றோர்க்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டது. எனவே அவர்களை சென்னைக்கு வரவழைத்து சில படித்த திருநங்கைகள் முன்னிலையில் அவர்கள் புரிந்து கொள்ளும் படி செய்து (அன்று முழுவதும் அழவும், சண்டை போடவுமே சரியாக இருந்தது) ஆற்றாமையுடன் அவர்களை ஊருக்கு திருப்பி அனுப்புனேன்.

கவிதா:- இதை உங்களை போல உள்ளவர்களுக்கு அறிவுருத்துகிறீர்களா? அவர்கள் ஒதுக்க படாமல் இருக்க வேண்டும் அல்லவா?

இதில் அறிவுறுத்த ஒன்றும் இல்லை. கிட்டதட்ட எல்லோருக்கும் இப்படித்தான் நடக்கிறது.

கவிதா:- நான் படித்து தெரிந்து கொண்ட வரையில், இந்த பால் மாற்று அறுவை சிகிச்சை என்பது அறுவை சிகிச்சையுடன் மட்டும் முடிந்து விடுவதில்லை. பெண்ணிற்கு என்ற சில நடை உடை பாவைனைகள் உள்ளன. அதை தெரிந்து அதற்கு ஏற்றார்போன்று உங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். உதாரணமாக, இயற்கையாக ஆண்களுக்கு கை, கால், மார்பு போன்ற பகுதிகளில் ரோமம் அதிகம் இருக்கும், அதுவே பெண்களுக்கு அப்படி இருக்காது. அடுத்து ஆண், பெண் குரல் வித்தியாசம்.

நீங்கள் அப்படி ஒரு பெண்ணிற்கான மாற்றத்தை முழுமையாக செய்ய உங்கள் மனதை தயார் படுத்திக்கொண்டு செய்திருக்கிறீர்களா? இந்த கேள்விக்கு காரணம், மற்றவர்கள் உங்களை சமமாக நடத்தவும், மனதளவில் ஏற்றுக்கொள்ளவும் இந்த மாற்றங்கள் முக்கியம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

முழுமையான பால்மாற்று சிகிச்சை என்பது நீங்கள் குறிப்பிடுவது போல் வெறும் அறுவை சிகிச்சை மட்டுமன்றி Facial Feminasation, Speech Theraphy, என அனைத்தும் உள்ளடக்கியதே இது குறித்து பின்வரும் பதிவில் எழுதியுள்ளேன்.
http://livingsmile.blogspot.com/2007/04/blog-post_25.html

மேற்குறிய முறையான மருத்துவம் இந்தியாவில் இல்லாததால், திருநங்கைகளுக்கும் ஆண்களைப் போல தாடை, கை, கால், மற்ற இதர பாகங்களில் ரோமம் வளரும் ஆனால், எல்லோருக்கும் அப்படி கிடையாது. உதாரணத்திற்கு எனக்கு தாடையில் மட்டுமே ரோமம் இருக்கும், கை, கால் மற்ற பகுதிகள் இயற்கையாகவே கிடையாது.

கை கால்களில் ரோம வளர்ச்சி உள்ளவர்கள் வெல்லப்பாகினை காய்ச்சி ரோமம் உள்ள பகுதிகளில் வெதுவெதுப்பாக தேய்த்து காட்டன் துணி ஒன்றினால் ஒத்தி எடுப்பார்கள். துணியுடன் ரோமம் வேருடன் வந்து விடும். சொல்வதற்கு எளிதாக தோன்றும் இது கொடிய வலி நிறைந்தது. இதனை செய்வதற்கென்று தனி ஆட்கள் உண்டு. சில ப்யூட்டி பார்லரிலும் இந்த வசதி உண்டு.

தாடை ரோமத்தை நீக்க சிம்டா என்னும் கிடிக்கி போன்ற சிறு கருவி பயன்படுத்தப் படுகிறது. இதுவும், வலி நிறைந்தது ஆனால் வேறு வழியின்றி பயன்படுத்த வேண்டியுள்ளது. தாடை தோல் சற்று மென்மையாக இருப்பதால் ரோமத்தை பிடிங்கும் போது சிறு சிறு காயங்களும் ஏற்படும்.

குரலை மட்டும் ஒன்றுமே செய்ய முடியாது. வெகு சிலருக்கு குரல் இனிமையானதாக இயற்கையாகவே அமைவதுண்டு.

கவிதா:- திருநங்கைகள் பொதுவாக பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள் (அ) ஈடுபடுத்தபடுகிறார்கள். இது பணத்துக்காக மட்டுமா?. இல்லை உங்களுக்கும் உடல் தேவைகள் உண்டா?

வானத்திற்கு கீழ் உள்ள அனைத்து ஜீவராசிகளைப் போல திருநங்கைகளுக்கும் உடல் தேவைகள் உண்டு. ஆனால், உடல் தேவையை தீர்த்துக் கொள்வதற்காக (மற்ற பெண் பாலியல் தொழிலாளிகள் உட்பட) யாரும் பாலியல் தொழிலில் ஈடுபடுவதில்லை. அதிலும் வேறு வேலை வாய்ப்போ, குடும்ப/சமூக பாதுகாப்போ இல்லாத நிலையில் பிச்சை/பாலியல் தொழில் ஏதோ ஒன்றையே தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது.

தங்களது உடல் மற்றும் ஆன்ம தேவைக்கு அனைத்து திருநங்கைகளுக்குமே ஆண் நண்பர்கள் உண்டு. சிலர் மணமேடை, ரிஜிஸ்டர் ஆபிஸ் இன்றி திருமணமும் செய்து கொள்வதுண்டு. பொதுவில் மட்டும் தங்களை கணவன் மனைவியாக காட்டிக் கொள்வதில்லை.

கவிதா:- நீங்கள் அவள் விகடனில் சொல்லியிருந்த "பிச்சை எடுத்தல்" முறையை உங்களுக்கு பிறகு மாற்ற ஏதாவது செய்தீர்களா? இல்லை ஏதாவது செய்ய முயற்சிகள் செய்து வருகிறீர்களா?

ஒட்டு மொத்தமாக பிச்சை எடுத்தலையே நிறுத்தும் அளவிற்கு நான் இன்னும் வளரவில்லை. சட்டம், எங்களுக்கு கல்வி வாய்ப்பும், வேலை வாய்ப்பும், தொழில் வாய்ப்பும், பாதுகாப்பும் அளிக்காதவரையில் யாராலும் பிச்சை எடுப்பதையோ/ பாலியல் தொழிலையோ மாற்றவே முடியாது.

கவிதா:- அரசாங்கத்தில் உங்களின் பெயர், பாலினம் போன்ற மாற்றங்கள் செய்ய என்ன வகையான முயற்சிகள் நடந்து வருகின்றன. அதற்காக உங்களின் பங்கு என்ன?

பிப்ரவரி 2006ல் எனது பெயர் (பாலின மாற்றுக்கென எந்த விண்னப்ப படிவமும் கிடையாது) மாற்றத்திற்கு, தலைமை செயலகத்தில் உள்ள எழுத்து மற்றும் பதிப்பு துறை (Gazzette) ஆணையரிடம் விண்ணப்பித்தேன். அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட்து. எனவே, உயர்நீதி மன்றத்தில் எனது பெயர் மற்றும் பாலினத்தை மாற்றித் தரக் கோரி வழக்கு பதித்தேன். அதன் அடிப்படையில் எனது பெயரை (மட்டும்) 12 வாரங்களுக்கும் மாற்றித் தரப் பட வேண்டும் என்ற தீர்ப்பு பிப்ரவரி 2007ல் (கிட்டதட்ட ஒருவருடம்) வந்தது. ஆனால், இன்று வரை (15 வாரங்கள் ஆகிவிட்டது) பெயர் மாற்றித் தரப்பட வில்லை.

கவிதா:- கூத்தாண்டாவர் கோயில் விழா - இதன் நோக்கம், பலன், அவசியமா?

கூத்தாண்டவர் கோயில் திருவிழா

தொண்டு நிறுவனங்களின் நோக்க்கம் : பிசினஸ்,
ஊடகங்களுக்கு : கிளு கிளு செய்தி,
பொது மக்களுக்கு : வித்தியாசமான பொழுது போக்கு,
திருநங்கைகளுக்கு : கெட் டு கெதர்;
என்னைப் பொருத்த வரை : தடை செய்யப்பட வேண்டும்.

கவிதா:- நீங்கள் திருநங்கைகளை பற்றி தவறாக பேசினாலோ, திரைபடங்களில் காட்டினாலோ , தொலைக்காட்சியில் காட்டினாலோ, ஏன் கோபம் கொள்கிறீர்கள்?. அப்படிப்பட்டவர்களும் இருக்கிறார்கள் இல்லையா? அவர்களின் விழுக்காடு அதிகமாக கூட இருக்ககிறது இல்லையா?

அதற்கு முன் எனது சில கேள்விகள், இதற்கு பதில் தேவையில்லை நீங்கள் சிந்தித்து பார்த்தால் போதுமானது. இன்று நல்ல குடும்பத்தில் பிறந்து நல்ல படிப்பும், தொழிலும் இருந்தும் டாகடர், என்ஜினியர், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், லஞ்சம், ஊழல்னு கொடி கட்டி பறக்கிறார்களே ஏன்? படிப்பிலையா, பணம் இல்லையா? மக்களின் ஓட்டை வாங்கி மக்களை ஓட்டாண்டிகளாக்கும் அரசியல்வாதிகளிடம் தான் பணம் இல்லையா? சினிமா, பத்திரிக்கை என ஊடகங்கள் ஆபாசத்தை முன்னிருத்தி சம்பாதிக்கிறதே அவர்களிடம் பணம் இல்லையா? இருந்தும் மேலும், மேலும் பணம் சேர்க்க ஆளாய்ப் பறக்கும் இவர்கள் நல்ல்வர்கள்!! கல்வி, வேலை, பாதுகாப்பு, அங்கீகாரம் எதுவும் இல்லாட்டியும் திருநங்கைகள் மட்டும் மகாத்மாக்களாக வாழ வேண்டிய அவசியம் என்ன?

இனி உங்கள் கேள்வி வருவோம் நீங்கள் சொல்வது போல் அப்படிப்பட்டவர்கல் இருக்கிறார்கள் தான். ஆனால், அப்படிபட்டவர்கள் எப்படி அப்படி ஆனார்கள்? அதற்கு யார் காரணம்? இதைப்பற்றி ஒரு படம், ஒரே ஒரு படம் வந்துள்ளதா?

சும்மா உள்ளதை சொல்றேன்னு ஏற்கனவே திருநங்கைகள் குறித்து நிலவி வரும் அவதூறை தொடர்ந்து வளர்த்தெடுப்பதை நாகரீக சமூகம் எப்படி அங்கீகரிக்கலாம்? அல்லது நான்தான் எப்படி பொருத்துக் கொள்ள முடியும்?

ரவுண்டு கட்டி அடிக்கும் ரவுண்டு:-

1. உங்களுக்கு பிடித்த உடை, அலங்காரம்


ஜீன்ஸ் - குர்தா; லாங்க் ஸ்கர்ட் - குர்தா;

2. உங்களின் நெருங்கிய தோழர்/தோழி

ப்ரியா (இப்ப புனேவில் என்பதால்) எனக்கு நெருங்கிய தோழி/ தோழர் யாரும் இல்லை.

3. உங்கள் குடும்பம் பற்றி

பாசக்கார ஹிட்லர் அப்பா, அம்மா (எனக்கு 4 வயதாகும் போது இறந்துவிட்டார்); சித்தி (என் மூத்த அக்காவை விட 2 வயது இளைய, அப்பாவின் இரண்டாந்தாரம்); அம்மாக்கு இணையா எம்மேல பாசத்தக் கொட்டும் பொறுப்பான மூத்த அக்கா; எல்லா விசயத்திலும் என்னோட போட்டிப் போடும் சின்ன அக்கா; இருவருக்கும் திருமணமாகி, தலா ஒரு பையன் , ஒரு பொண்ணுன்னு செட்டில் ஆகிவிட்டார்கள்; என் மேலும் பாசமும், அபிமானமும் கொண்ட தங்கை;

இவர்களின் கனவுக் கோட்டையை தரைமட்டமாக்கிவிட்ட நான்

4. உங்களுக்கு சமைக்க தெரியுமா? பிடித்த உணவு

சமைப்பேன். ஓரளவிற்கு அட்ஜஸ்ட் பண்ணி சாப்டுக்கலாம். சிக்கன் இன்னும் கொஞ்சம் பெட்டரா சமைப்பேன். எனக்கு பிடிச்சது சிக்கன், சப்பாத்தி, புட்டு, ஆப்பம்.

5. உங்கள் வேலை, அலுவலகத்தில் உங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் பற்றி

என் வேலை டேட்டா எண்ட்ரி; சுருக்கம எலக்ட்ரானிக் டேட்ட ப்ராசஸிங் அசிஸ்டெண்ட்; எங்கள் அலுவலகத்தில் 10 ஊழியர்கள் அந்த 10ல் ஒன்று நான் என்பதை தவிர எந்த வித்தியாசமும் கிடையாது;

கூல்!!

6. எழுத்து, சினிமா தவிர உங்களின் பொழுதுபோக்கு

எழுத்து எனது பொழுது போக்கு கிடையாது; வாசிப்பு பிடிதத அளவிற்கு எழுத்து எனக்கு பிடிப்பதில்லை. எழுதியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்காக மட்டுமே எழுதுகிறேன். நடிப்பார்வம், நாடக ஆர்வம், தொடர்ந்து குறும்படம் எடுக்கும் ஆர்வம் என நிறைய உண்டு. இவற்றை தாண்டி இசையை தரிசிக்கவும், சமைக்க கத்துகிட்ட நாள்ல இருந்து சமைக்கவும் ஆர்வம் உள்ளது.

7. உங்களின் கனவுகள்?

நிறைய உண்டு. சும்மா பேர்/பாலின அங்கீகாரம், சமூக அங்கீகாரம்னு போராடுற அவசியம் இல்லாதபடி இந்தியா மாறனும். நல்ல நடிகை, சிறந்த இயக்குநர், என்ற முகவரி.. பிரேசில், ஜமைக்கா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளை சுத்து, சுத்துன்னு நல்லா ஊர் சுத்தனும்.
என்ற கனவு.

8. உங்களுக்கு ஒரு வரம் கிடைக்கிறது. உங்களுக்கு பிடித்த ஒருவராக நீங்கள் மாறலாம். யாராக மாறுவீர்கள்?

தி ஒன் அண்ட் ஒன்லி லிவிங் ஸ்மைல்

9. உங்கள் இசை ஆர்வம், பிடித்த பாடகர்கள், பாடகிகள்

இந்தியாவின் அநேக பாமரர்களைப் போல திரையிசையே எனக்கு வாய்த்த இசையாக இருந்தது. தற்போது, ரெக்கே, கொஞ்சம் ராக் கேட்க ஆரம்பித்துள்ளேன்.

பாடகர்கள் : பாப் மார்லி, ஜிக்கி, லீலா, பி. பி.ஸ்ரீநிவாஸ், ராம்ஸ்டர்ன் (அஸ்ஸே ஜு அஸ்ஸே), ஜிம்மி ஹெண்ட்ரிக்ஸ் ( ஊடோ சைல்ட்), சக் பெர்ரி (கோ ஜானி கோ), கீதா தத் (தக் தீர்), சுவர்ணலதா, வசுந்த்ரா தாஸ், சுனிதி சௌஹன், ஆஷா பொஸ்லே, கவிதா சுப்ரமணியம், சித்ரா,

10. பதிவர்களில் பிடித்தவர்கள்

பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள்னு இல்லைன்னாலும் தொடர்ந்து தங்களது படைப்பை படிக்க வைத்தவர்கள் என்னும் வகையில் உடண்டி நினைவில் வருபவர்கள் :

தல என்னும் பாலபாரதி, பொடிச்சி, துளசி, உஷா, வரவனை, சுகுணா, ராஜ் வனஜ், அசுரன், பொன்ஸ், ஆழியூரான், நரேன், பாஸ்டன் பாலா, மோகன்தாஸ், தமிழச்சி, திரு, செந்தழல், லக்கி, மகேந்திரன்.பெ, பொட்டீகடை, மலைநாடன், குழலி, தருமி, ராம், பாமரன், ஓசை செல்லா.

வித்யா சொன்ன தத்துவம் :- LOVE ALL; CELEBRATE YOUR LIFE;