சில வருடங்களுக்கு முன்.......

அனுஷாவின் அண்ணன் சந்துருவின் நண்பனாக அறிமுகம் ஆனவன் தான் ரமேஷ். அனுஷா & சந்துருவும் கல்லூரி சென்றுக்கொண்டு இருக்கும் போது அவர்களுடைய அப்பா மாரடைப்பால் இறந்துபோக குடும்ப பாரத்தை அனுஷாவும், சந்துருவும் சுமக்க துவங்கினர். அனுஷா, சந்துருவுக்கு தங்கையாக இருந்தாலும் நிர்வாக திறமையில் அவனை விட புத்திசாலியாக இருந்தாள். சந்துரு மிகவும் சாதுவான, வாய் திருந்து பேசவே பயப்படும் ஒரு இளைஞன். அனுஷாவும் அப்படியே என்றாலும் அப்பாவின் இடத்தை யாராவது நிரப்ப வேண்டுமே?.

30 வருடங்களாக இந்த குடும்பம் ஒரு சிறிய வீட்டில் (அவுட் ஹவுஸ்) குடியிருப்பதை வைத்தே அவர்களின் குடும்பம் எத்தனை அமைதியான, பிரச்சனை எதுவும் இல்லாத குடும்பம் என்று புரிந்து கொள்ளலாம். வீட்டை விட்டு எங்குமே போயிருந்திடாத பார்வதி அம்மாவை, பிள்ளைகள் இருவரும் அப்பாவின் மறைவுக்கும் பிறகும் அப்படியே வைத்து கொண்டார்கள்.

வெளி உலகம் தெரியாத அந்த அம்மாவிடம் வளர்ந்த பிள்ளைகளும் அப்படியே இருந்தனர். அமைதி, அடக்கம், பேச்சில் நிதானம் என்று எல்லா நல்ல பழக்கத்தையும் கொண்டு எல்லோரிடமும் நல்ல பெயரை மிக எளிதாக பெற்றிருந்தனர்.

சந்துருவிற்கு, நிறைய இல்லாவிட்டாலும் சில நெருங்கிய நண்பர்கள், எப்போதும் வீட்டுக்கு வருவதும் இங்கேயே நேரத்தை கழிப்பதும் வாடிக்கை. அப்படி சிறுவயது முதல் இந்த வீட்டில் இன்னொரு பிள்ளையாக இருந்தவன் தான் ரமேஷ். அனுஷாவின் மீது காதல் வந்ததும், அவன் முதலில் சொல்லியது சந்துருவிடம் தான். சந்துரு சரி என்றால் அனுஷாவிடம் சொல்லலாம் என்று முடிவெடுத்து சந்துருவிடம் சொல்ல, அவனும் சற்று யோசித்தாலும், ரமேஷ்ஷின் குணம், அன்பு, நேர்மை எல்லாவற்றையும் பார்த்து, சரி என்று சம்மதம் தெரிவித்தான்.

சந்துருவின் சம்மதத்துடன் துவங்கிய இந்த காதல் வருடங்களாக தொடர்ந்தது. காதல் என்றால் இதுவரை சினிமா பீச் என்று சென்றதில்லை. இவர்களின் காதல் அண்ணன் மற்றும் அம்மாவின் எதிரில் தான்.

சந்துருவுக்கும் அனுஷாவிற்கும் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தவுடன், இந்த நுங்கம்பாக்கம் வீட்டிற்கு குடிபெயர்ந்தார்கள். இதுவும் வருமானம் அதிகமானதால் எடுத்த முடிவு இல்லை, அவர்கள் வேலைக்கு செல்ல சுலபமாக இருக்கம், அதே சமயம் ரமேஷ்ஷின் மற்றோரு நண்பனின் வீடு இது, அவன் வெளிநாடு சென்று விட வீட்டை இவர்களுக்கு விட்டுவிட்டு சென்றான். இப்படி ஒரு சில காரணங்களுக்காக இங்கே இடம் மாறி இருந்தனர்.

===============


முன் கதையின் தொடர்ச்சி.................

ரமேஷ் சென்றவுடன்............ பார்வதி அம்மாவை சோர்வோடு பார்த்துவிட்டு, அனுஷா அவள் ரூமிற்கு சென்று கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள்.

பார்வதி அம்மா பின்னாலேயே வந்து.... கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தார்கள்.

“அனு......... இப்ப அந்த பொண்ணு வேற மாசமா இருக்கா..... நீயும் இப்படியே பிடிவாதமா இருக்கறது எனக்கு சுத்தமா பிடிக்கலை.”

அனுஷா மெளனமாக சுவற்றையே வெறித்து கொண்டிருந்தாள்.

அவள் கால்களை பிடித்து உலுக்கிய பார்வதி அம்மா.......... “அனு.. உன்னத்தாண்டி...” என்றார்கள்.

சுதாரித்து அம்மாவின் பக்கம் திரும்பியவள், “அம்மா.....மீனா கன்சீவ் ஆவங்கன்னு நான் எதிர்பார்க்கல................ “

“ம்ம்......” அவளின் மனக்கலக்கம் புரிந்தவர்களாய், தனியே யோசிக்கட்டும் என்று வெளியே வந்துவிட்டார்கள்.

===============

ரமேஷ் வீட்டிற்கு சென்று சேர்ந்தான்,

காத்திருந்தவளாக மீனா , அவன் உள்ளே நுழைந்ததும் சத்தம் போட ஆரம்பித்தாள். “ரமேஷ், அனுஷா ! அனுஷா !! ன்னு இன்னும் எவ்வளவு நாள் இருக்க போறீங்க...”

“சாகற வரைக்கும் இருப்பேன்.. எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டு தான் கல்யாணம் செய்துக்கிட்டேன்.. நீயும் தெரிஞ்சித்தானே கல்யாணம் செய்துக்கிட்ட?.. ஒன்னுமே தெரியாத மாதிரி கேக்கற..?

"ஆமா சொன்னீங்க அதுக்காக, கல்யாணத்துக்கு அப்புறம் கொஞ்சமாவது என்னை பற்றியும் நீங்க யோசிக்கனும் இல்ல......."

“என்ன யோசிக்காம இருக்கேன்....? எவ்வளவோ சொன்ன பிறகும், அடம்மா..... என்னை கல்யாணம் செய்துக்கிட்டது நீ..... இப்ப என்னை குத்தம் சொல்லாத......."

“சொல்லாம தானே இருந்தேன்.....ஆனா முன்ன மாதிரி இப்ப விடமுடியுமா? நமக்குன்னு ஒரு குழந்தை என் வயத்துல வளர ஆரம்பிச்சிடுத்து...... இதுக்கு அப்புறமும் நீங்க இப்படி மாறாம இருக்கறது நல்லது இல்ல............ “

"ஓ..... இதை காரணம் காட்டி என்னையும் அனுஷாவையும் பிரிக்கலாம்னு இருக்கியா?... அது மட்டும் நடக்காது..... "

“அவ்வளவு தெளிவா இருக்கறவர் எதுக்காக என்னை கர்ப்பமாக்கணும், அனுஷா “உங்க மனசுல இவ்வளவு ஆழமா இருக்கும் போது, என்னை ஏன் தொடணும்?”

ரமேஷ் அவளின் கேள்வியில் அதிர்ந்தான், "அடிப்பாவி...... !! மனச தொட்டு சொல்லு, நானா உன்னை தொடணும்னு உன் மேல் ஆசைப்பட்டு உன் கிட்ட வந்தேன்...... ? "

"சரி நீங்க வரல..... நான் தான் காரணம்னு வச்சிக்கோங்க..நீங்க வேண்டாம்னா வேண்டாம்னு இருக்க வேண்டியது தானே..? ஏன் வந்தீங்க?? “

‘மீனா.. வேண்டாம் மீனா.. இப்படி எல்லாம் பேசி என் மனசை நோகடிக்காத...... ஆனா இப்ப நல்லா உன்னோட வேஷத்தை புரிஞ்சிக்கிட்டேன்..... வேணும்னு என்னை அனுஷாக்கிட்ட இருந்து பிரிக்கனும்னு நீ இந்த வேலையை செய்து இருக்கேன்னு புரிஞ்சிக்கிட்டேன்..... ஏன் மீனா.. ஏன் இப்படி செய்த...... ??? , தலையை இரண்டு கைகளாலும் பிடித்து கொண்டு சோபாவில் அப்படியே தொம்' மென்று உட்கார்ந்தான் ரமேஷ்..

மீனா எதுவும் பேசாமல் வேகமாக ரூம்மிற்க்குள் சென்று விட..

ரமேஷ் "இப்படியும் ஒரு பெண் செய்வாளா?" என நம்பமுடியாமல், இனி என்ன செய்வது? இனி இவளை எப்படி சமாளிப்பது ? என்று யோசிக்கலானான்.

நிழல் தொடரும்........................