என்ன நடக்கிறது இங்கே? நாம் எதை நோக்கி எங்கே போய் கொண்டு இருக்கிறோம் என்று புரியவில்லை.

இன்று காலையில் எழுந்து பல் விலக்கினார்களா என்று கூட தெரியவில்லை. எல்லா திரை அரங்குகளிலும் அப்படி ஒரு கூட்டம், அதில் ஒருவர் சொல்கிறார், “எனக்கு ஒரே பயமா இருக்குங்க..“ (அவர் மேலே தொடருமுன் நான் மனதில் . சரி..சிவாஜி நல்லா இருக்குமா இல்ல கவுத்துக்குமான்னு; பயப்படுகிறார் என்று நினைத்தேன்) ஆனால் அவரோ.. “காலையில 7 மணிக்கு முன்னால வந்தேன், எனக்கு டிக்கெட் கிடைத்து, நான் படத்தை பார்ப்பேனா!!?”என்று பயமாக இருக்கிறது.

எவ்வளவு பணம் கொடுத்து இவர்கள் டிக்கெட் வாங்கி இருக்கிறார்கள், வாங்குகிறார்கள் என்பதை நான் சொல்ல வேண்டியது இல்லை. அதில் ரசிகர்கள் எல்லோருமே இத்தனை பணம் கொடுத்து வாங்கும் பொருளாதார சூழ்நிலையில் இருக்கிறார்களா என்றால் இல்லை என்பது அனைவருக்குமே தெரியும்.

சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு, நாம் ஒரு தொழில் செய்து சம்பாதிப்பது போல, நடிப்பு என்ற தொழிலை செய்து நடிகர்கள் சம்பாதிக்கிறார்கள். பொழுது போக்குவதற்காக பார்க்க வேண்டிய சினிமாவை, இத்தனை சீரியஸாக எடுத்துக்கொண்டு, இவர்கள் இப்படி பைத்தியம் பிடித்தது போல் நடந்து கொள்வது ரொம்பவும் வருந்தத்தக்கதாக உள்ளது. தன் குடும்பத்திற்காகவும், தனக்காகவும், தன்னை சுற்றி உள்ளவர்களுக்காகவும் இப்படி ஏதாவது செய்வார்களா?

சினிமா & தொலைக்காட்சியை நம்பியே ஒரு கூட்டம், வியாபார நோக்கோடு பெரும் பணத்தை முடக்கி உள்ளது. வியாபார நோக்கோடு மட்டுமே அவர்கள் இருக்கிறார்கள் என்பதை சாமானியர்கள் உணராமல் பைத்தியம் பிடித்து “தலைவா....தலைவா” என்று ஆராதனை செய்கிறார்கள். இது ரஜனிக்கு மட்டும் இல்லை. ஒரு முறை தொலைக்காட்சியில் விஜய்’யின் ரசிகர் ஒருவர், “உடல் மண்ணுக்கு, உயில் விஜய்”க்கு என்று பெருமையுடன் சொல்லுகிறார். இப்படிப்பட்ட அடிமட்ட ரசிகர்கள் கூட்டத்தை முழுவதுமாக நம்பியே தனி நபர்கள் கோடிஸ்வரர்களாக வாழ்கிறார்கள். எத்தனையோ பேர் சினிமாவின் மூலம் வாழ்கிறார்கள் என்றாலும், நம்முடைய அறிவுக்கும், பார்வைக்கும் தெரியாமல் மோசமாக பாதிக்கப் பட்டவர்களும், அழிந்து போனவர்களும் அதிகம்.

ஒரு முறை எங்களுடைய பிறந்த ஊருக்கு சென்றிருந்த போது, எங்களது தெருவில் இருந்த சில இளைஞர்கள், சாக்லெட் எடுத்து வந்து கொடுத்தார்கள். அவர்களிடம் நான் பார்த்த சந்தோஷம் இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது. எதற்கு என்று கேட்டதற்கு , அதில் எங்கள் குடும்ப நண்பரின் மகன் சதீஷ் என்ற இளைஞர் சொன்னார்,

“இன்னைக்கு தலைவரோட பிறந்தநாள். “
“ஓ..யாரு உங்க தலைவர்? “
“அட என்னக்கா நீங்க ரஜினி’ சார்’ தான்!! “
“ ஓ.. எல்லா வீட்டிற்க்கும் போய் கொடுக்கறீங்களா?”
“இல்லையா பின்ன.. தல பிறந்தநாளைக்கு எல்லாரும் சந்தோஷமா இருக்கவேண்டாமா? “
“தலைவர் உங்களுக்கு என்ன செய்யறாரு?
“அட என்னக்கா நீங்க ..எத்தன வீட்டுக்கு போகனும்.. சும்மா..கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கீங்க.. தலைவர் செய்யறது எல்லாம் வெளியில சொல்ல மாட்டாரு..... அவரு ஒருத்தருக்கு செய்தா லட்சம் பேருக்கு செய்ததா அர்த்தம் !!”..
“சரி உங்களுக்கு என்ன செய்தாருன்னு சொல்லுங்க..”
“அக்கா எல்லாருக்குக்கும் கிடைக்காத பாக்கியம் எனக்கு கிடச்சதுக்கா.. “
“ஓ.....என்ன பாக்கியம்..”
“அவரோட நின்னு போட்டோ எடுத்துக்கிட்டேன்.. அத என் வாழ் நாள்ல எப்பவும் மறக்கவே முடியாது..”

அதற்குமேல், எனக்கு என்ன சொல்லுவது , கேட்பது என்று தெரியவில்லை, அவனையே வியப்புடன் பார்க்க.. “அக்கா..வரேன் “..ன்னு சென்று விட்டான். மாலை அந்த இளைஞனின் தாயை பார்த்தபோது..இதை பற்றி கேட்டேன்.. அதற்கு அவர்கள், “பெத்த அம்மா அப்பா..க்கு ஒன்னும் செய்யல.....கூட பொறந்த அக்கா 2 இருக்கு..அதுங்களுக்கும் ஒன்னும் செய்யல.. ஏன் அவனுக்கே இன்னும் ஒன்னும் செய்துக்குல.. தலைவர் தலைவர் ன்னு எப்பபார்த்தாலும் ஏதாவது ஒன்னு செய்துகிட்டு, ஒழங்காவும் படிக்காம, இப்ப வேல வெட்டி எதுவும் இல்லாம.. முழுநேரமும் இதே மாதிரி இன்னும் 4, 5 புள்ளைங்ககூட சேர்ந்து வாழ்க்கைய வீணடிச்சிக்கிட்டு இருக்கான். ஏம்மா..நீதான் அவனுக்கு 4 நல்ல வார்த்தை சொல்லிட்டு போயேன்..... “ ஏக்கம் நிறைந்த கண்களுடன் அந்த அம்மா பேசியது இன்னமும் நினைவிருக்கிறது.

“சரிங்க ஆண்ட்டி ! நான் சொல்றேன்.. “ என்று சொன்னேனே தவிர..அந்த பிள்ளையை திருப்பி நான் ஊர் திரும்பும் வரை பார்க்கமுடியவில்லை. நான் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள கூடிய மனநிலையில் அவன் இல்லை என்பது எனக்கு புரிந்தது..அவனின் அம்மாவுக்கும் புரிந்துதான் விட்டுவிட்டார்கள் என்பதும் தெரிந்தது.

இப்படி எத்தனை எத்தனை இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை இன்றைய “சிவாஜி” படம் திரையிடப்படும் திரை அரங்குகளில் பார்க்கமுடிகிறது.

ஒருவரை பிடிக்கலாம், அதற்காக இப்படியா? எப்போது இந்த சினிமா மற்றும் தலைவர்’களின் பைத்தியங்களும் மாறுமோ....?

அணில் குட்டி அனிதா:- அட அட அட...!! கவிதா ஆரம்பிச்சிட்டீங்களா உங்க அட்வைஸ் அ?.. மக்களா..ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு கவிதா இந்த பதிவ எழுதிட்டாங்க.....போல.. (அவங்க எப்ப சாதாரணமா எழுதி இருக்காங்க ? ன்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது.!!.) இருந்தாலும் உங்களுக்கு எல்லாம் நான் ஒன்னு எப்பவும் போல சொல்லிக்க விரும்புறேன்.. இப்பவும் டிவி’ல ரஜினி பாட்டு, இல்ல படம் வந்தா....தலைவா..ன்னு சொல்லி........வராத விசிலை இழுத்து இழுத்து................. படு கேவலமா அடிப்பாங்க..!! அதை பாத்து அவங்க வூட்டுக்காரரும், பையனும்............. தலையல அடிச்சிக்கிட்டு எடத்தையே காலி பண்ணிடுவாங்க........!! ஏன்னு கேக்கறீங்களா..??? அதான் சொன்னேனே... கேவலமா இருக்கும்னு...... 10, 12 வயசுல இருந்து..விசில் அடிக்க கத்துக்கறாங்களாம்.. இன்னமும் சரியா விசில் கூட அடிக்க தெரியல.. படு கேவலமா ஓரு சவுண்டு வரும்..அதை இவங்க விசில்..ன்னு சொல்லிக்குவாங்க......!!! ஹோ.........சரி நான் ஓவரா விசில் பத்தி பேசி.. அம்மணிக்கு கோவம் வந்து எனக்கு சங்கு ஊதிட போறாங்க.. அதனால..நீங்க மிச்சத்த பாத்துக்குங்க....................... வரட்டா......பை..பை.....சீ.யூ.....ஆல்........சூன்..

பீட்டர் தாத்ஸ்:- The smallest good deed is better than the grandest intention.