அன்பான நெஞ்சங்களுக்காக..:- ஈமெயில் மூலம் தலைப்பை மாற்ற கூறி, அன்பாக பாசத்துடன் கடித்துக்கொள்ளும் அனைவருக்காகவும் தலைப்பை மாற்றியிருக்கிறேன்...

ஆமாம், 1993-94 லிருந்து சென்னை மாநகரத்தில், அண்ணாசாலை உட்பட பல இடங்களில் இரு சக்கர வாகனத்தில் சென்று வந்து கொண்டு இருக்கிறேன். இது நாள் வரை இல்லாத பயம் இப்போது வந்துவிட்டது.

காரணம் Hel(l)met தான். ஆமாம் , ஜீன் 1 லிருந்து Hel(l)met போடவேண்டும் என்பதால் நேற்று கணவரை வருத்தி, கடைக்கு அழைத்து சென்று ஒரு Hel(l)met வாங்கி அதை இன்று அணிந்து வந்தேன். வீட்டில் Trail பார்க்கும் போதே கணவரும், மகனும் அடித்த கமெண்ட் காதில் விழவில்லை. சரி காது கேட்காமல் சாலையில் நான் போகும் வேகத்திற்கு இனி எனக்கு சீக்கிரம் சங்கு தான் என்பதை உணர்ந்து, என் கணவரிடம் அவரின் ‘visiting card’ ஒன்று வேண்டும் என்று கேட்டேன், அவரோ “இத்தனை நாள் இல்லாமல் ஏன் இன்று மட்டும் கேட்கிறாய்? “ என்றார். நானும் இதுநாள் வரையில் தினமும் வீட்டிற்கு வந்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது, இன்று இந்த Hel(l)met என்னை திரும்பி வீட்டிற்கு கொண்டுவரும் என்ற நம்பிக்கை இல்லை. அனாதையாக சாலையில் கிடக்காமல், உடனே உங்களுக்கு தகவல் சொல்லுவார்கள் அல்லவா?.. என்று புத்திசாலித்தனமாக பதில் சொன்னேன். அவரும் என்னுடைய புத்திசாலி தனத்தை மெச்சி, visiting card’ கொடுத்தார்.

சரி, முதலில் Hel(l)met நன்மையை பார்க்கலாம் :-

1. வேகமாக செல்லும் பழக்கம் இருப்பதால், காற்றின் வேகம் தாங்காமல் கண்களிலிருந்து தண்ணீர் வரும். Hel(l)met டினால் அந்த பிரச்ச்னை இல்லாமல் இருந்தது.

இந்த ஒன்றை தவிர நான் நன்மையாக எதையும் உணரவில்லை

சரி, இப்போது Hel(l)met ட்டினால் அனுபவித்த பிரச்சனைக்கு வருவோம்.

1. அணிந்தவுடன் காது சரியாக கேட்கவில்லை. அதனால் அக்கம் பக்கம் வரும் வாகனங்களின் சத்தம் கேட்கவேயில்லை.

2. வண்டி ஓட்டும் போது ஒரு மயான அமைதி. எனக்கு சந்தேகம், நாம் சென்னை சாலையில் தான் வண்டி ஓட்டுகிறோமா?

3. அதிகமான கணம், முன்னரே தலைகணம் அதிகம் அதனுடன் இதுவும் சேர்ந்து., காலையிலேயே தலைபாரமாக இருந்தது.

4. எல்லோரும் (பெண்கள்) எதையோ சுற்றி சுற்றி உடம்பை மறைத்து (வெயிலுக்காக) வருகிறார்களே நாமும் அப்படி செய்வோம் என்று ஒரு பழைய துப்பட்டாவை தலையில் சுற்றி Hel(l)met ஐ அணிந்ததால், இந்த துணி என்னவோ ராஜா , ராணி க்கு எல்லாம் பின்னால் ஒரு அங்கி பறக்குமே அதுபோல் பறந்து வந்தது. அதனால், நிறைய பேர் என்னை திரும்பி திரும்பி பார்த்தார்கள்.

5. நடுநடுவே காற்றில் விலகும் என்னுடைய உடையை சரிப்பார்க்க/சரி செய்துக்கொள்ள முடியவில்லை.

6. சிக்னலில் நிற்கும் போது, பின்னால் வந்து நிற்கும் வண்டிகளின் சத்தத்தை உணரமுடியாமல், இன்றே ஒரு சைக்கிள், ஒரு ஆட்டோ பின்னாலிருந்து என் வண்டியை மோதின.. அவர்கள் மோதின பிறகு தான் திரும்பி பார்த்து கொஞ்சம் முன்னால் சென்றேன்.

7. எல்லாவற்றிக்கும் மேல், 60- 70 கிமி வேகத்தில் செல்லும் நான் 30-40 கிமி வேகத்தில் சென்றதால் என்னுடைய பயண நேரம் அதிகமானது.

8. என்னுடைய black bird (Honda Activa) முன்னமே சத்தமில்லாமல் ஓடும்.. இப்போது ஓடுகிறதா நின்றுவிட்டதா என ஒன்றுமே தெரியவில்லை.

9.அலுவலகத்திற்கு சென்று Hel(l)met ஐ கழட்டியவுடன், தலை எல்லாம் கலைந்துவிட்டது. அலுவலகத்தில் உள்ளே நுழைந்ததும் என் தலைவிரி கோலத்தை பார்த்து சிலர் பயந்து அலறினர்.

ஒரு சாதாரண Hel(l)met ட்டினால் ஒரு மனுஷிக்கு இத்தனை பிரச்சனையா?. படிக்கும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து, என் உயிர் மேல் இரக்கம் கொண்டு, என்னுடைய பிரச்சனைகளை எப்படி சரிசெய்து கொள்வது என்று சொல்லவும்.

அணில் குட்டி அனிதா:- கவி.. உங்களுக்கு தான் தலையில ஒன்னுமே இல்லையே..... இல்லாத ஒன்னுக்கு எதுக்கு இத்தனை சிரமம்/பாதுகாப்பு?. ஏதோ தலையில இருக்கறவங்க தலைய பாதுகாக்கனும்னு நினைப்பாங்க.. உங்களுக்கு அவசியமே இல்ல..... ஏதோ இருக்கறவங்க சொன்ன கேட்டுக்கோங்க.......

[மக்களா.. என்னை கவிக்கிட்ட இருந்து காப்பாதுங்க...... நீங்க என்ன நினைக்கறீங்களோ..... அதை தான் நான் சொல்லியிருக்கேன்.... அதனால என்னை காப்பாத்துங்க..........]

பீட்டர் தாத்ஸ் :- Many people have a good aim in life, but for some reason they never pull the trigger.