விடாது கருப்பு பற்றி புதிதாக அறிமுகம் செய்ய தேவையே இல்லை. கேப்பங்கஞ்சி குடிக்க அவரை அழைத்த போது, அதுக்கு என்ன கவிதா..வந்துட்டா போச்சு என்று உடனே வந்து விட்டார். சிங்கப்பூரில் வசிக்கும் இவரை, இவர் ப்ளாக்'கில் எழுதுவதற்கு சம்பந்தம் இல்லாமல் கேட்கவேண்டும் என்றே கேட்கப்பட்ட கேள்விகள், அவரும் ஆனந்தத்துடன் பதில் அளித்துள்ளார்..... இதோ.. தன் எழுத்து நடையை கேப்பங்கஞ்சி' க்காக விட்ட கருப்பு - சதீஷ்
வாயை புடுங்கும் ரவுண்டு :-
கவிதா:- வாங்க சதீஷ் எப்படி இருக்கீங்க? முதல் கேள்வி, உங்கள் "விடாது கருப்பு" பெயர் காரணம் என்ன?
கறுப்பு வண்ணம் துக்கத்துடன் சம்பந்தப்பட்டது. அதேபோல கறுப்பு பயமறியாது என்பார்கள். இருட்டு எப்போதுமே ஒருவித பயத்தை தரக்கூடியது. நான் ஒரு தொலைக்காட்சித் தொடரில் பார்த்த விடாதுகருப்பு என்ற திகில் கலந்த வார்த்தை எனக்குப் பிடித்து இருந்தது. சதா சர்வகாலமும் பிரம்மாவின் மூக்குச்சளியில் இருந்து பிறந்ததாக ஒரு கும்பல் ஆரம்பித்தபோது அவர்களை அடக்கி ஒடுக்க இந்தப் பெயர்தான் எனக்கு சரியாகப் பட்டது. எனவே இப்பெயரைத் தேர்ந்து எடுத்தேன். எனது நலம் விரும்பிகளுக்கும் அய்யாவின் சீடர்களுக்கும் பகுத்தறிவுக் கழகத்தாருக்கும் இப்பெயர் சரியானதாகவே பட்டது. எனவே இதே பெயரையே தொடர்ந்தேன்.
கவிதா:- சதீஷ், நீங்க பிறந்த இடம், அதன் வளமை, அழகு, பெருமை பற்றி சொல்லுங்கள்.
திருச்சிக்கு அருகில் உள்ள திருவெறும்பூர். திருச்சியை அடுத்த இருப்புப் பாதை நிலையம், திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில் உள்ளது. திருச்சியிலிருந்து அடிக்கடி நகரப்பேருந்துகள் உள்ளன. இது ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,835 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருவெறும்பூர் மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருவெறும்பூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இங்கு முக்குலத்தோர் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். பெல் தொழிற்சாலை மூலம் மக்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் கிடைக்கிறது.
இங்கு இருக்கும் எறும்பீஸ்வரர் கோவில் சரித்திர புகழ்பெற்றதாகும். இவரின் நினைவாக வைக்கப்பட்ட திரு எறும்பியூர் என்ற பெயரே மருவி திருவெறும்பூர் ஆனதாக ஆராய்ச்சியாளர் சொல்வர். எறும்பு பூஜித்த இடம் திருவெறும்பூர். காவிரி ஆறு அழகாக ஓடுகிறது இங்கே. அதனால் எப்போதும் பசுமை நிறைந்த அழகான ஊர். எங்கும் பச்சைப்பசேல் என்று வண்ண மயமாகக் காட்சி அளிக்கும்.
கவிதா:- இப்ப நீங்க இருக்கிற வாழ்கிற வாழ்க்கை, உங்களது பிறந்த ஊரின் வாழ்க்கை - இழந்தவை பெற்றவை என்ன?
முன்பு இருந்ததைவிட நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஜாதி என்ற குட்டையில் ஊறி மூளையை மழுங்கடித்து வெட்டியாகத் திரிந்த என் மூதாதையர் கூட்டத்தில் இருந்து தனியே பிரிந்து என் சொந்த மூளையை சுயமாக உபயோகித்து பகுத்தறிவு கொண்டு சிந்தித்து இன்று புது மனிதனாக புது ரத்தத்துடன் வலம் வருகிறேன். இதுவே என் மகிழ்ச்சிக்குக் காரணம். சிங்கப்பூர் என்று மட்டும் இல்லை. நான் எந்த நாட்டுக்குச் சென்றாலும் என் கொள்கைகளில் மாற்றம் இராது. அய்யாவின்மேல் நான் கொண்ட பாசத்தின் அளவு குறையாது. தூரத்தில் இருந்தால்தான் பாசம் அதிகமாகும் என்பார்கள். எனவே அய்யாமேல் கொண்ட அதிக பாசத்திற்கு இந்த புதிய நாடுதான் காரணம்.
தமிழ் இணையத்துக்கு வந்தபின் பலரின் பதிவுகளையும் படிக்கிறேன். அவற்றில் நல்லனவும் உண்டு. அல்லனவும் உண்டு. நிறைய படித்தபின் என் அறிவு இன்னும் விசாலமாகியது. நானும் பல பதிவுகள் எழுதி இருக்கிறேன். எழுத எழுத எனக்குள் இருக்கும் எழுத்துக்கள் ஊற்றாக வெளிப்படுகின்றன. ஒருவேளை நான் எழுதாமலே இருந்திருந்தால் அவை முனை மழுங்கி மக்கிப் போயிருக்கலாம். எனவே இத்தருணத்தில் என்னை மென்மேலும் சீர்படுத்திய இணையத் தமிழுக்கும் பாராட்டித் தட்டிக் கொடுத்தவர்களுக்கும் ஆலோசனைகள் சொல்லி நேர்மைப்படுத்தியவர்களுக்கும் எனது நன்றியினை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். உள்ளூரிலேயே நான் இருந்து இருந்தால் என் எழுத்துக்கள் இவ்வளவு வீரியத்துடன் வந்திருக்ககது என்றே நினைக்கிறேன். காரணம் யாரிடத்தும் பயமில்லை. இந்த அளவுக்கு நேரம் அங்கே கிடைத்திருக்காது.
இழந்தவைகளில் முக்கியம் தாய்-தந்தை அருகில்லாமை. அந்த அன்பு, பாசத்திற்கு அருகில் இருப்பதுதான் எத்தனை சுகம்! அடுத்து சிறு வயது முதலே பளிங்கு, பம்பரம் விட்ட முட்டுச்சந்து நண்பர்கள். அப்புறம் காவிரியாற்றுக் குளியல், ஆக்ஸிஜன் அதிகமுள்ள மண்வாசனையுடன்கூடிய சுத்தமான காற்று, ஜன்னலோரத்து பேருந்து இருக்கை... பட்டாம்பூச்சியாய் சிறகடிக்கும் எங்களூர் தாவணிகள்.... ம்... இப்படி நிறைய ஜொள்ளிக் கொண்டே போகலாம்!
கவிதா:- என்னுடைய பதிவொன்றில் சொல்லியிருந்தீர்கள், கிராமத்து பெண்கள் குழந்தைக்கு பாலூட்டும் போதுகூட முந்தானை கொண்டு மறைக்காமல் அப்படியே கொடுப்பார்கள், அவர்கள் திருமணத்திற்கு பிறகு தங்களை கவனித்து கொள்வதில்லை என்று. இதற்கு காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்.
உண்மைதான் சகோதரி. படிக்காத பெண்கள் என்று மட்டுமில்லை. நன்கு படித்த பெண்களே குழந்தை பிறந்தபின் சர்வ சாதாரணமாக முந்தானை கொண்டு மறைக்காமல் பால் கொடுத்ததை பார்த்து(தவறா நினைக்காதீங்க... எதேச்சையாக) இருக்கிறேன். உறவுமுறை மட்டுமில்லல, முறையில்லாதவர்களும்கூட மறைக்காமல் பால் கொடுத்திருக்கின்றனர். அவர்களின் பார்வையில் குழந்தை பிறந்தபின் யாருக்காக அழகைக் கூட்ட வேண்டும் என்ற நினைப்பாக இருக்கலாம். திருமணத்துக்கு முன்னர் தம்மை அழகு படுத்திக் கொள்வதும் நல்ல உடையை தேர்ந்தெடுத்து அணிவதும், உடலை மறைப்பதும் வரப்போகும் கணவனுக்காகவும் செய்கின்றனர். அதேபோல ஊரார் ஏதும் தவறாக சொல்லிவிடக் கூடாதே என்ற எண்ணத்தினாலும் தங்களின் உடலில் அதிக கவனம் செலுத்துகின்றனர் திருமணத்திற்கு முன்னர். திருமணத்திற்குப் பின்னர் யாருக்காக செய்ய வேண்டும்? ஊர் என்ன சொன்னால் எனக்கென்ன என்ற மனோபாவம். நம் காலம் முடிந்து விட்டது, பிறந்த பிள்ளைகளள சீராட்டி வளர்த்தாலே போதும், நமக்கேன் இனி அழகு என்று நினைக்கின்றனர்.
அதாவது தங்களுக்காக செலவு செய்யும் நேரம், பணம் போன்றவற்றை குழந்தைகளுக்காக செலவிடுகின்றனர் என்பதுதான் உண்மை. பாசம் அவர்களின் கண்களை மறைக்கிறது.
நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான். கல்யாணம் முடிந்தால் எல்லாமே முடிந்து விடுவதில்லை. 21ல் கல்யாணம் முடிந்தால்கூட தோராயமாக இன்னும் 70 வருடம் வாழ இருக்கிறார் அப்பெண். எனவே வாழ்வின் இறுதிவரை அவர் உடலை பேணிக் காக்க வேண்டும். செலவு அதிகம் செய்யாவிட்டாலும் எளிய மருந்துகள், வாசனைத் திரவியங்கள், நல்ல சுத்தமான உடைகள் அணியலாம். கணவன் மட்டுமே காணும் உடலை பிறர் பார்க்க அனுமதித்தல் சரியல்ல.
ஒருகாலத்தில் இலை, தழைகளை இடுப்பில் மட்டும் சுற்றிக் கொண்டு அலைந்தனர் மக்கள். அன்றைக்கு இவ்வளவு கலாச்சார சீர்கேடுகள் இல்லை. பாலியல் வன்முறைகள் இல்லை. ஆனால் இன்றைக்கு நிலைமை வேறு. எனவே பெண்கள் தங்கள் உடலை மறைத்துத்தான் ஆகவேண்டும். நாகரீகம் என்ற பெயரில் பப், கரோக்கேக்களில் திருமணத்திற்கு முன்பே திறந்து போட்டு அலைகிறது சில இளைஞர் கும்பல். அவர்கள் கற்பினைப் பேணுபவர்கள் அல்லர். பட்டால்தான் புத்திவரும். நானே நேரடியாகக் கண்டு இருக்கிறேன். வயிற்றில் பிள்ளையைக் கொடுத்துவிட்டு ஆண்கள் ஓட்டம் பிடித்தபின் நினைத்து நினைத்து அழுவார்கள் இப்பெண்கள்.
நாகரீகம் என்பது என்ன? புதிய கலாச்சாரம் என்பது என்ன? திறந்து போட்டு அலைவதா? பெண்கள் சமுதாயம் சிந்திக்க வேண்டும். முள்ளில் சேலை பட்டடலும், சேலையில் முள் பட்டாலும் பாதிப்பென்னவோ சேலைக்குத்தான்! வெறிபிடித்த காமுகர்களை செருப்பால் அடித்து கூண்டில் ஏற்ற வேண்டிய பெண்களே அச்செயலுக்கு துணைபோவது வருத்தமாகத்தான் இருக்கிறது!
கவிதா:- பெண்கள் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்கு தனி பதிவு போட்டீர்கள். எனக்கு ஒரு பெண்ணாக உடன் பாடில்லை. அதில் நிறைய Practical பிரச்சனைகள் உள்ளன.
மன்னிக்கவும். நான் எல்லாப் பெண்களையும் அர்ச்சகராக ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. இறைவனைச் சேவிக்க அர்ச்சகராக ஆசைப்படும் பெண்களுக்கு அவர்கள் அவ்வாறு ஆவதில் தடையேதும் இல்லை என்று சொன்னேன். ஒரு ஆண் அர்ச்சகராக ஆகும்போது, ஒரூ பெண் ஏன் ஆகக் கூடாது என்பதற்கான பதிலாகவே எழுதினேன்.
1. கடவுளை தரிசனம் செய்ய வருபவர்களின் கவனம் அந்த பெண்ணின் மீது போகும்.
ஒரு ஆண் அர்ச்சகராக இருக்கும்போது அவரை எந்த பெண்ணின் பார்வையும் அவர்மேல் போகவில்லை என்று நினைக்கிறீர்களா? வெறும் பார்வைதானே.. போனால் போகட்டுமே! நன்கு இழுத்துப் போர்த்திக் கொண்டு அவர் அர்ச்சகம் செய்வதில் தவறில்லை. ஆண் அர்ச்சகர்போல அரைகுறை ஆடையுடன் அர்ச்சகம் செய்தால் ஆண்கள் பார்க்கத்தான் செய்வார்கள்.
பேருந்தில், சாலையில், அலுவகலத்தில், விமானத்தில் பெண்களை எப்படிப் பார்க்கிறார்களோ அதேபோலத்தான் கோவிலிலும் ஆண்கள் பார்ப்பார்கள். இறைவனைத் தொழவந்த அவர்களின் மனது அலைபாயாமல் இருக்க அப்பெண்கள் உடையை கவனமாக உடுத்தினாலே போதும். இப்போது கும்பிட வரும் சில பெண்களின் உடைகள்தான் அவ்வளவு உசிதமாக எனக்குப் படவில்லை. சிலர் தொப்புளைக் காட்டிக்கொண்டு வருகின்றனர். சிலர் கால்சராய்(அரைக்கால் சட்டை) அணிந்து வருகின்றனர். நான் பட்ட அனுபவங்களை தனியொரு பதிவாகத்தான் போட வேண்டும்.
என்னுடன் கூடப்படித்த பெண் எல்லா வெள்ளிக் கிழமையும் தவறாமல் கோவிலுக்குச் செல்வார். ஒருநாள் அவளிடம் தனிமையில் கேட்டேன்,
"ஏண்டி பக்தி முத்திப் போச்சா?" (அவள் எனக்கு ரொம்ப நெருக்கம். ஆனால் காதலி இல்லை.)
"அட நீ வேறடா... மந்த்ரம் ஓத புதுசா சிவப்பா அழகா ஒரு சின்னப் பயன் வந்திருக்கான்... அது மட்டுமில்லாம என்னையும் சைட் அடிக்க நாலு பசங்க வறானுங்க. எனக்கே ரொம்ப பெருமையா இருக்கு. அதான்... மற்றபடி பத்தியும் இல்ல... வாசனையும் இல்ல!" என்றாள்.
"நீ தேறவே மாட்டேடி!" என்று செல்லமாக தட்டினேன் அவளை.
மேற்கண்ட சம்பாஷணையில் என்ன புரிந்து கொண்டீர்கள்? ஆண் அர்ச்சகரையும் சைட் அடிக்க பெண் கூட்டம் வருகிறது. கோவிலுக்கு பக்திக்காக மட்டுமே சில பெண்கள் செல்லவில்லை.
எனவே கவனம் சிதறுவது ஆண்களுக்கு மட்டுமல்ல. பெண்களுக்கும்தான். எனவே பெண் அர்ச்சகர் ஆவதற்கு தாங்கள் சொல்லும் காரணம் ஏற்புடையதாக இல்லை.
2.அடுத்து பெண்களுக்கு மனதளவில் நிறைய தடுமாற்றங்கள் உண்டு, ஒருமித்த சிந்தனை இருக்காது. அந்த தடுமாற்றங்களை எல்லாம் கட்டுப்படுத்தி அடுத்தவர்கள் நலனுக்காக பூசை செய்ய முடியுமா என்று தெரியவில்லை.
ஆண்களை விட மனதை இன்னும் அதிகமாக அடக்கி ஆளத் தெரிந்தவர்கள் பெண்கள். இன்னும் சொல்லப்போனால் ஆண்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். காதலில் ஆகட்டும் காமத்திலாகட்டும், கோபத்தில் ஆகட்டும்... ஆண்கள்தான் பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காது எளிதில் உணர்ச்சி வசப்படுகின்றனர். பெண்களுக்கும் ஆசாபாசங்கள் உணர்ச்சிகள் இருக்கின்றன. ஆனாள் அவள் கட்டுப்படுத்தத் தெரிந்தவள். எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவள் அல்ல. நன்கு சிந்தித்து பிரகு முடிவு எடுப்பாள். அவள் இந்த ஊருக்கு பயந்தவள். சமுதாயத்துக்கு பயந்தவள். எனவே பெண்கள் மனதளவில் தடுமாறுகிறார்கள் என்று நீங்கள் சொல்வது ஏற்புடியதாக இல்லை.
குடும்பத்தில் ஆண்களின் பங்களிப்பைவிட பெண்களின் பங்களிப்பு மிக அதிகம். எனவே ஒரு பெண்ணானவள் அர்ச்சகர் தொழிலுக்குச் செல்வதால் குடும்பப் பணிகள் பாதிக்கலாம். ஆனாலும் மற்ற பணிகளுக்குச் செல்லும் பெண்களின் வீடுகளின் என்னவெல்லாம் பாதிப்பாகிறதோ அப்படியே இங்கும் ஆகும். பெரிதாக ஒன்றும் ஆகாது.
3.கருவறை தவிர, மற்ற வேலைகள் பெண்கள் செய்யலாம் என்றே தோன்றுகிறது. இதில் உங்களின் கருத்து?
இறைவன் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்று சொல்கிறார்கள். எனவே கருவறை என்ன, சுற்றுப் பிரகாரம்தான் என்ன? அர்ச்சகர் தொழில் செய்வது என்று ஒரு பெண் முடிவு செய்து விட்டால் அவள் தாராளமாக எல்லாப் பக்கமும் சுற்றிச் சுழன்று வரட்டுமே! அவளின் உரிமையில் தயவு செய்து நாம் தலையிட வேண்டாமே!
இதனையும் இங்கே சுட்டி படித்துப் பாருங்கள். சுவாரஸ்யமாக இருக்கும்!
அணில் :- சதீஷ் அண்ணே.. வாங்க.. என்னைய மாதிரி உங்க ப்ளாக் ல ஒரு பூனக்குட்டி கருப்பா வச்சி இருக்கீங்க..நானும் பாக்கறேன். நீங்க, கவிதா, பொன்ஸ் அக்கா, நாகை சிவா அண்ணே..இப்படி நிறைய பேரு எங்களை எல்லாம் புடிச்சிக்கிட்டு வந்து துணைக்கு வச்சிக்கறீங்களே.. நல்லா இருக்கா உங்களுக்கு?
இஸ்ரேலுக்கும் பாப்பானுக்கும் எப்படி சொந்தம் வந்ததோ அதேபோல கருப்புக்கும் பூனைக்கும் பூர்வ ஜென்ம பந்தம் உண்டு. சிகப்பு ரோஜாக்கள் படம் பாருங்கள். திகில் காட்சியில் கருப்பாக ஒரு பூனை ரத்தம் குடிப்பது போன்று எடுத்திருப்பார் பாரதிராஜா! எனவே பகுத்தறிவு பேசும் என்னைப் பார்த்தால் பார்ப்பனர்களுக்கு பயம்வர வேண்டும் என்பதற்காக துணையாக வந்தார் கருப்புப் பூனையார்!
அதுசரி, மெய்யாலுமே ராமர் உங்க முதுகில் மூன்று விரலால் தடவினாரா? அது ஏன் மூன்று விரல், ஏதும் வேண்டுதலா? மூன்று விரலால் தடவும்போது மற்ற விரல்களை மடக்கிக் கொண்டாரா?
கவிதா:- உங்களின் எழுத்தில் மாற்றம் செய்து எழுதவேண்டும் என்று காட்டாயமாக்க பட்டால் எதைப்பற்றி எழுத ஆவல்.
நகைச்சுவை!
அணில்:- நீங்க சிரிக்கவே மாட்டிங்களா.. எனக்காக சிரிப்பா ஒரு பதிவு போடுங்களேன்.
இதிலேயே சிரிப்பாக எழுதலாம். ஆனால் பதிவு பெரிதாகிவிடும். எனவே உங்கள் ஆசை விரைவில் நிறைவேறும் என் பதிவில்.
கவிதா:- திராவடர்கள் இடையே ஒற்றுமை இல்லை- ஆமாம் /இல்லை - உங்களின் பதிலுக்கு உங்களின் விளக்கம்?
திராவிடர்கள் இடையே இன்றைக்கு ஒற்றுமை இல்லை என்பதுதான் உண்மை. எவனெல்லாம் சாதி வேண்டும் என்று நினைக்கிறானோ அவனெல்லாம் பார்ப்பனர்களை ஆதரிக்கிறான். குறிப்பாக தேவர், ஆசாரி மற்ற பூணூல் போட்ட மேல்வர்க்கம். இவர்களுக்கெல்லாம் ஏன் ஜாதி வேண்டும்? தலித்துகளை அடக்கி ஆள வேண்டும். தீண்டாமை பேணப்பட வேண்டும். ஜாதியை வைத்து குளிர்காய வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களை ஏவலாளிகளாக வைத்துக் கொண்டு வேலை வாங்க வேண்டும். மற்றவர்களை அடக்கி ஆளுதலை பெருமையாக நினைக்கின்றனர் இந்த இழிபிறவிகள். வடக்கே இருந்து தென்னாட்டுக்கு பஞ்சம் பிழைக்க வந்த பட்டுநூல்காரன் கூட இன்றைக்கு சாதி வேண்டுமென்கிறான். பூனூல் போட்டு நாலு மந்திரங்களளக் கற்றபின் இன்றைக்கு நானும் உயர்சாதி என்கிறான்!
சுய ஆதாயத்துக்காக சில திராவிடர்களும் சாதி தேவை என்கின்றனர். திராவிடர்களிடத்தில் முழுமையான ஒற்றுமை இல்லை!
அணில்:- சதீஸ் அண்ணாச்சி, பெரியார் தாத்தா சொன்னதுல உங்களுக்கு பிடிச்சத எங்களுக்கு சொல்லுங்கள்.
“நான் மனிதனே! நான் சாதாரணமானவன், என் மனத்தில் பட்டதை எடுத்துச் சொல்லி யிருக்கிறேன். இதுதான் உறுதி. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள், மற்றதைத் தள்ளிவிடுங்கள்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என்மீது சுமத்தி விடாதீர்கள். நான் தெய்வத்தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால் மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள். " நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள், நான் சொல்லுவது வேதவாக்கு, நம்பாவிட்டால் நரகம் வரும் நாத்திகர்கள் ஆகிவிடுவீர்கள்" என்று வேதம், சாத்திரம், புராணம் கூறுவதுபோலக் கூறி, நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை, நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள். ஒருவனுடைய எந்த கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதனை வெளியிடக்கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது."
கவிதா:- தமிழை தவிர இந்திய மொழி எதிலும் இத்தனை அதிகமான ஆபாசமான வார்த்தைகள் இல்லை என்று நினைக்கிறேன். நாங்கள் அகமதாபாத் நகரில் வசிக்க நேரிட்ட போது, அங்கு சில ஆபாசமான வார்த்தைகளை அந்த வேற்று மொழிக்காரர்கள் என்னிடம் சொல்லி "இந்த வார்த்தை ஆபாசமானது தானே" என்று கேட்டார்கள், நான் வெட்கி தலல குனிந்து நின்றேன். இப்போது தமிழ்மணம் வந்த பிறகு அதை மீண்டும் உணர்கிறேன். தமிழனின் ஆபாசம் உலகம் முழுவதும் பரவிக்கிடப்பதாக எனக்கு தோன்றுகிறது -உங்களின் விளக்கம்.
எல்லா மொழிகளிலுமே ஆபாசமான வார்த்தைகள் இருக்கின்றன. தாங்கள் தமிழ் ஆர்வம் மிக்கவர் என்பதால் இந்த ஆபாச வார்த்ததகளைக் கண்டு மனம் வெம்பி இருக்கிறீர்கள். அதனால்தான் இப்படி நினைக்கிறீர்கள். இல்லை தோழர் டூண்டு அவர்களின் எழுத்துகளைப் படித்து கோபம் கொண்டீர்களா?(சிரிப்பு...)
நான் இங்கு வந்த புதிதில் வேலை வாங்கும் கங்காணி(மன்று)களைப் பார்த்து தமிழர்கள் சிரித்துக் கொண்டே "சரிடா xxxத்தா !" என்பார்கள். மேலதிகாரியைத் திட்டிய திருப்தி தமிழனுக்கு. அந்த சீனருக்கோ பணியாள் சிரித்துக் கொண்டே தன் சொல்லைத் தட்டாமல் கேட்கிறானே என்ற சந்தோஷம். முழு அர்த்தம் தெரிய வரும்போது அந்த சீனருக்கும் கோபம் வந்திருக்கலாம். அதேபோல தமிழனைப் பார்த்து சீனர்களும் "கன்னினாவே சீவாய்!" என்பார்கள். இதற்கு அர்த்தம்... எதிராளியின் அம்மாவை..xxxxx. என்பதாகும். மலாய் மொழியில் அதனை "புக்கி மா லூ" என்பார்கள்.
எல்லா மொழிகளிலுமே கெட்ட வார்த்தைகள் நிறைய இருக்கின்றன. தமிழில் புழக்கத்தில் புதிது புதிதாக நிறைய வார்த்தைகள் கண்டு பிடிக்கிறார்கள். உதாரணமாக xxxxx, xxxxx, xxxxx... நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகின்றன. சொல்லகராதியே வந்துவிடும் போலத் தெரிகிறது!
நம் தமிழ் மொழியில் உள்ள நிறைய கெட்ட வார்த்தைகளை மட்டும் தாங்கள் படிக்க, பார்க்க, கேட்க நேரிட்டதால் தாங்கள் வெட்கித் தலை குனிந்து இருக்கிறீர்கள்.
கவிதா:- நிறைய ப்ளாக் நண்பர்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டு பக்கம் பக்கமாக நமக்கு நம் நாட்டிற்கு உபதேசத்தை அள்ளி வழங்குகிறார்கள் , உங்களையும் சேர்த்து. இதை ப்பற்றி உங்களின் கருத்து.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
இப்படிச் சொன்னவன் நம்ம அய்யன் வள்ளுவன். பிறருக்கு புத்திமதி சொல்லுமுன் நாம் வாழ்ந்து காட்ட வேண்டும். அப்படி வாழ்ந்து காட்டியவர் மகாத்மா காந்தியடிகள்.
நாட்டு நன்மைக்காக ஆலோசனைகள், புத்திமதிகள் சொல்வதில் தவறு இல்லை. ஆனால் நாமும் நாட்டு முன்னேற்றத்திற்காக ஏதாவது ஒரு வழியில் பாடுபட வேண்டும். உதாரணமாக கல்வி, பொருளாதாரம் இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். வெறும் வாய் வார்த்தை மட்டுமே சொல்லிக் கொண்டிருத்தல் சரியில்லை. நான் என்னாலான பல நற்பணிகளை செய்து கொண்டுதான் வருகிறேன். தங்களை நேரில் சந்திக்கும்போது அவற்றைப் பற்றி விரிவாக விளக்க ஆசைப்படுகிறேன்.
கவிதா:- ஒரு பெண்ணும் ஆணும் சமம் என்று என்னால் ஒரு போதும் ஏற்று க்கொள்ள முடியாது. சில விஷயங்களில் பெண் பெண்ணாக மட்டுமே தான் இருக்க முடியும். ராக்கெட் 'டில் பறக்கிறார்கள், ஆணுக்கு நிகராக எல்லா வேலையும் செய்யாதாலும் கூட ஆணுக்கு சற்று குறைந்தவளே பெண் –உங்கள் கருத்து.
ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம் என்று மார் தட்டினான் எங்கள் பாரதி. பாரதி கண்ட புதுமைப் பெண்களாய் இன்றைக்கு பல பெண்கள் உலகையே கலக்கி வருகிறார்கள். குழந்தை பிறப்பைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் ஆணும் பெண்ணும் சமம்தானே. பெண்களுக்கு இருக்கும் சங்கோஜ புத்திததன் பல வேளைகளில் அவர்களின் முன்னேற்றத்தினை சீர் கெடுக்கிறது என்பேன். வெட்கப்படாமல் எல்லா தொழில்களையும் அவர்கள் செய்ய முன்வர வேண்டும். இப்போது பலர் ஆணுக்கு இணையாக எல்லாத் தொழில்களிலும் முன்னேறி வருகின்றனர். உதாரணமாக ராக்கெட், விமானம், மெக்கானிக், நடத்துனர், ஓட்டுனர், அலுவலகம்... இப்படிப் பல.
உடலுறுதியில் ஆணைவிட பெண் சற்று குறைவானவள் என்பது மட்டுமே உண்மை. ஒருசில பெண்கள் வேண்டுமானால் விதி விலக்காக இருக்கலாம். மற்றபடி ஆணுக்குப் பெண் சமம்தான். பெண்ணை ஆண் தனக்குச் சமமாக உரிமைகள் கொடுத்து நடத்துவதைக் கண்டு பெருமைப்படுகிறேன்.
ரவுண்டு கட்டி அடிக்கும் ரவுண்டு:-
நீங்கள் பிறந்த ஊருக்காக, மக்களுக்காக நீங்கள் ஏதாவது செய்யதுண்டா? செய்ய நினைக்கிறீர்களா? ஊருக்காக தனிப்பட்ட முறையிலும் குடும்பத்தின் மூலமும் நிறைய செய்தி இருக்கிறேன். நாட்டு மக்களுக்காகவும் தமிழ் மொழிக்காகவும் நிறைய செய்து கொண்டுதான் வருகிறேன். இன்னும் செய்வேன். செய்ததை சொல்லிக் காட்டக் கூடாது என்பார்கள். எனவே அவற்றை வெளிப்படையாக சொல்ல விரும்பவில்லல. தனிப்பட்ட முறறயில் சந்திக்கும்போது விரிவாகப் பேசுவோமே.
சிங்கப்பூர் மக்களிடம் நீங்கள்/நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்.
தமிழர்:- வானொலி, தொலைக்காட்சியில், பள்ளிகளில் தூய்மையான தமிழ்.
மலாய் மக்கள்:- ஒற்றுமை
சீனர்கள்:- உழைப்பு, உழைப்பு, உழைப்பு. பணக்காரர்கள் கூட தள்ளாத வயதிலும் 90 வயசு பாட்டிகளும் தாத்தாக்களும் கூட உழைக்கிறார்கள்.
உங்கள் எழுத்தின் மூலம் நீங்கள் இதுவரை சாதித்தது./சாதிக்க நினைப்பது?
பகுத்தறிவு, பகுத்தறிவு, பகுத்தறிவு.
நிறைய அனானி பின்னூட்டங்கள் உங்களுக்கு வருகின்றன. அதற்கு காரணம் என்ன?.
பெயர் வெளித்தெரிய வேண்டாமென்று நினைப்பதால்!
பார்ப்பனர்களால் தாக்கப்படுவோம் என்ற அச்சம் காரணமாக சிலர் அனானியாக உலவுகின்றனர். சொன்னால் சிரிப்பீர்கள். என்னை இதுவரை ஐந்து அனானிகள் சந்தித்து இருக்கின்றனர். அவர்களுக்கு வலைப்பது இல்லை. இன்னும் சில வலைப்பதிவர்களே அனானியாகவும் மறுமொழிகின்றனர். பார்ப்பனர் பால் அச்சம்தான் பிரதான காரணம். பார்ப்பனர் நேரடியாக மோதினால்கூட பரவாயில்லை. ஆனால் முரளி மனோஹர் என்ற பெயரில் டோண்டு மோதியதைப் போல மோதினால் பாவம் இவர்களும் என்னதான் செய்வார்கள்?
ஆச்சாரங்களை அவிழ்த்து விட்டு அம்மணமாக வா பெண்ணே 'ன்னு எழுதி இருக்கீங்க.- உங்களின் துணை ஆச்சாரனமான பெண்ணாக அமைந்து விட்டால் அம்மணமாக்க முயற்சி செய்வீர்களாக, இல்லை உடையுடன் உலாவரட்டும் என்று விட்டுவிடுவீர்களா? வர்ணம் போதித்த வேதம், மனு போன்ற பழைய புருடா புராணங்களை உதறிவிட்டு சிறந்த சிந்தனை உள்ள பெண்ணாக வரவேண்டும். ஒருவேளை அவள் ஆச்சாரங்களோடும் மடி கலாச்சாரத்தோடும் வந்தால் அவளை என் வழிக்கு மாற்றுவேன்.
பெரியார் புகழை பரப்ப, எழுதுவதை தவிர என்ன செய்கீறீர்கள்?
கூட்டங்களில் கலந்து கொள்கிறேன். நிறைய படிக்கிறேன். பழைய வரலாறுகளைப் புரட்டிப் பார்க்கிறேன். எனக்குத் தெரிந்ததை மற்றவர்களிடம் சொல்கிறேன்.
பிடித்த ப்ளாக் எழுத்துக்கள் எவை?
எனது வலைப்பதிவின் வலப்பக்கத்தில் முன்பு இருந்ததே. அடைப்பலகை சீர் செய்ததும் உங்களுக்கு காணக் கிடைக்கும்.
உங்கள் வீட்டில் உங்களின் எழுத்தினை பற்றிய விமர்சனம்.
உருப்படாத பய.
பெண் பதிவர்களுக்கு நீங்கள் சொல்ல நினைப்பவை
தைரியமாகச் சொல்லுங்கள். நிமிர்ந்து நில்லுங்கள். துணிந்து செல்லுங்கள். யாருக்கும் எதற்காகவும் பயப்படாதீர்கள். கொண்ட கொள்கையில் உறுதியாக இருங்கள். வீனர்களை புறத்தே ஒதுக்கித் தள்ளுங்கள்.
உங்களுடைய சுடர் பதிவு மற்றவற்றை விட வித்தியாசமாக இருந்தது. பின்னூட்டங்களும் சேர்த்து. இப்படி மாற்றங்களை உங்கள் பதிவில் நீங்கள் விரும்புகிறீர்களா?
அனைவரும் அதனைத்தான் விரும்புகிறார்கள். மாற்றம் என்பது மனிதத்தத்துவம். இந்த உலகில் மாற்றம் இல்லாதது எதுவும் இல்லை. எனவே மாற நினைக்கிறேன். விரைவில் புதிய கருப்பினை எதிர் பாருங்களேன்.
கேப்பங்கஞ்சி with கவிதா & அனிதாவுடன் - விடாதுகருப்பு
Posted by : கவிதா | Kavitha
on 11:05
Labels:
கேப்பங்கஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
28 - பார்வையிட்டவர்கள்:
சதீஷ், நல்ல பதில்கள், உற்சாகமாக இருக்கிறது உங்களின் பதில்களை படிக்கும் போது, அதுவும் நகைசுவை பதிவு விரைவில் போட போவதாக சொல்லியிருக்கீர்கள், ஆர்வமாக காத்திருக்கிறோம்.
உங்களின் புரிதலுக்கு - இதில்
//அடுத்து பெண்களுக்கு மனதளவில் நிறைய தடுமாற்றங்கள் உண்டு, ஒருமித்த சிந்தனை இருக்காது. அந்த தடுமாற்றங்களை எல்லாம் //
மனதடுமாற்றம் என்பது -பெண் எப்போதும் தன்நலம் காக்க நினைப்பவள், அதாவது, தன் குடும்பம், தன் குழந்தை என்று சிந்தனை அத்தனையும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடங்கிவிடும். அந்த எல்லையை தாண்டி, அடுத்தவர்களுக்காக பொதுநலமாக கடவுளிடன், பரிசுத்த மனதுடன் பூசை செய்ய முடியுமா என்பது தான் என்னுடைய சந்தேகம்.
யம்மாடியோவ், இம்மா பெரிய பதிவா? படிக்காம வெறுமனே தள்ளி பாக்கறதுக்கே களைப்பா ஆயிடுத்து. நல்ல வேளையா கீழ கடைசியில சோபா வெச்சி இருக்கீங்க.
ஸ்ஸ்ஸ்... அபாடா....
நேரம் கிடைத்தா கட்டாயம் படிக்கிறேனுங்க.
பெண்களால் கண்டிப்பாக நல்ல இறைச்சேவையைச் செய்ய முடியும் கவி.
"பெண் அர்ச்சகர் ஆகலாம்;கருவரைக்குள் நுழையலாம்"- இவை மனித உரிமை
சம்பந்தப் பட்டவை. நடைமுறைச்சிக்கல்களைக் காரணம் காட்டி அவற்றை மறுப்பது எவ்வளவு காலத்திற்கு எடுபடும்? காலப்போக்கில் சிக்கல்கள் மறைந்துவிடும்......
பெண் அர்ச்சகர் ஆவதற்கு எதிராக
கவிதா கூறும் காரணங்கள் யாவும்
அனைத்துப் பணியிடங்களுக்கும் பொருந்துமே...எனில், பெண்கள்
வேலைக்கே செல்லக்கூடாது என்று முடிவுசெய்வது சரியாகுமா?
1930 கள் வரையில் மருத்துவக்கல்லூரியில் சேர்வதற்கு
சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டுமென்பது விதி.
அவ்விதி ரத்து செய்யப்பட்ட பொழுதும்,
தேவதாசி முறை ஒழிப்பின் பொழுதும்
நடைமுறை சிக்கல்களை முன்வைத்துதான் அவற்றை எதிர்த்தனர்......இப்பொழுது என்ன ஆயிற்று?
மதம், இனம்,சாதி,மொழி,பால் அடிப்படையில் பேதம் காட்டுவது
மனித உரிமை மீறல் ஆகும்.
//யம்மாடியோவ், இம்மா பெரிய பதிவா? படிக்காம வெறுமனே தள்ளி பாக்கறதுக்கே களைப்பா ஆயிடுத்து. //
வாங்க மாசிலா, என்னங்க இப்படி சொல்லிட்டீங்க.. சதீஷ் எவ்வளவு கஷ்டப்பட்டு பதில் சொல்லி இருக்காங்க.. அதற்கு பார்க்கும் போது நாம் படிக்க தானே செய்கிறோம்.
//நல்ல வேளையா கீழ கடைசியில சோபா வெச்சி இருக்கீங்க.
ஸ்ஸ்ஸ்... அபாடா....//
ஆமாங்க..எப்பவும் என்னோட பதிவுகளில் விவாதம் அதிகமா இருக்கறதானல வருகின்றவர்கல் உட்கார்ந்து பொறுமையா விவாதம் செய்யட்டும் என்று தான் இந்த் டெம்ளேட் செலக்ட் செய்தேன்
//நேரம் கிடைத்தா கட்டாயம் படிக்கிறேனுங்க.
நன்றிங்க..
//பெண்களால் கண்டிப்பாக நல்ல இறைச்சேவையைச் செய்ய முடியும் கவி.//
சரி சதீஷ், பார்க்கலாம். முடியும் என்பது எல்லா விஷயங்களுக்கும் உண்டு, இதிலும் அப்படியே எடுத்துக்கொள்வோம்.
//பெண் அர்ச்சகர் ஆவதற்கு எதிராக
கவிதா கூறும் காரணங்கள் யாவும்
அனைத்துப் பணியிடங்களுக்கும் பொருந்துமே...எனில், பெண்கள்
வேலைக்கே செல்லக்கூடாது என்று முடிவுசெய்வது சரியாகுமா?//
வாங்க சிவஞானம்ஜி, எப்படி இருக்கீங்க..?
நீங்கள் சொல்லியிருக்கிற எல்லா கருத்துக்களையும் ஆமோதிக்கிறேன்.
நான் சொல்லவந்தது அவர்களின் வேலை செய்வதை தடுக்கவோ அல்லது முன்னேறாமல் இருக்கவோ அல்ல.
பெண்கள் மனதளவில் அவ்வளவு சீக்கிரம் பக்குவபட்டுவிடுவதில்லை. மற்றவர்களுக்காக நாம் வாழவும், மனமாற மற்றவர் நன்றாக இருக்கவேண்டும் என்று கடவுளிடம் முழுமனதுடன் பிராத்தனை செய்யவும் நம் ஆசைகள் அத்தனையும் துறந்து இருக்க வேண்டும் அல்லது அப்புறம் வைக்கும் அளவு பக்குவம் வேண்டும்.
பெண்கள் தனக்கு தன் சுற்றம்/ தன் குழந்தை, தன் குடும்பம் என்று மிகவும் சென்மென்டாக இருப்பவர்கள். அதனால் அவர்கள் மனதளவில், முதிர்ச்சி அடைந்து தன் இறை சேவையை நல்ல முறையில் செய்ய முடியுமா என்பது என் சிந்தனை. அப்படி யாராவது எந்த சலனமும் இல்லாமல் பணியை செய்கிறார்கள் என்றால் நல்லதே.
மற்றபடி நான் அவர்களின் முன்னேற்றத்தை ஒரு பெண்ணாக இருந்து கொண்டு நிச்சயம் எதிர்க்க மாட்டேன். இன்னமும் தைரியமாக நாங்கள் வெளியில் வரவேண்டும் என்பதே என் விருப்பமும் கூட.
கவிதா,
வித்தியாசமான பேட்டி.
பெண்கள் அர்ச்சகர் ஆவதைப் பற்றிய விசயத்தில், சதீஷ், சிவஞானம்ஜி ஆகியோருடன் நானும் உடன்படுகிறேன்.
பெண்கள் சுயநலவாதிகள் என்றும், தன்னுடைய வீட்டு இன்பத்தை மட்டுமே நினைப்பவர்கள் என்ற கருத்தையும் என்னால் ஒப்புக் கொள்ளவே முடியவில்லை.
தெருவில் போகும் போது ஒரு குழந்தை அழுதால் கூட "ஐயோ பாவம், அழுவுது.." என்று வருத்தப்படக் கூடிய தாயுள்ளம் மிக்க பெண்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். அடுத்த பெண்ணின், வேறொரு குடும்பத்தின் சோகம் பெண்களைத் தாக்காது என்றால், இன்றைய மெகா சீரியல்களும் சரி, அன்றைய தாய்ப்பாச, தங்கைப் பாச சினிமாக்களும் சரி, நமக்குக் கிடைத்திருக்கவே கிடைத்திருக்காது!
இங்கே வலையுலகிலேயே, தன் பதிவுண்டு, தானுண்டு என்று இருக்காமல், மற்ற பதிவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஓடி வந்து ஆறுதல் சொல்லும் பெண்கள் எத்தனை இருக்கிறார்கள்?! தன் பிள்ளை, தன் கணவன், தன் வீடு என்னும் சிறிய உலகில் இருக்க மட்டுமே பிரியப்பட்டிருந்தால், சமூகப் பிரச்சனைகளைப் பேசும் ஒரு கவிதாவை வலையுலகம் இழந்திருக்குமே!
மா.சிவகுமார் ஒரு பதிவில் பெண்கள் அரசாண்டால், உலகம் அன்புமயமானதாக இருக்கும் என்பார். அது ஓரளவுக்கு உண்மையும் கூட. தன்னைச் சேர்ந்தவர்களின் நலனுக்காக மட்டுமே உழைக்கும்/அதைப் பற்றி மட்டுமே சிந்திப்பவர்கள் என்று பெண்களைப் பற்றிச் சொன்னால், இந்த உலகம் முழுவதையுமே தன்னுடைய வீடாக நினைப்பவர்கள் பெரும்பாலும் பெண்கள் தான் என்பதையும் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்....
ந்ல்ல முயற்சி.நல்ல கேள்விகள்.உண்மையான பதில்கள்.இருவருக்கும் பாராட்டுக்கள்.கருத்துக்களில் வேறுபடலாம் ஆனால் கண்ணியமாக என்பதைப் பார்க்க மகிழ்ச்சி.பெரியாரை ஆண்களைவிடப் பெண்கள்தாம் கட்டாயம் படிக்க வேண்டும்,அறிந்து கொள்ள வேண்டும்.ஒரு ஆண் படித்தால் அது அவனுக்கு மட்டுந்தான் பயன் படும்.ஆனால் ஒரு பெண் படித்தால் ஒரு குடும்பத்துக்கே பயன் படும் என்றார் பெரியார்.அவரைப் போல் ஒரு பெண்ணுரிமை சிந்தனையாளரைச் செயல் வல்லுநரை
உலகம் இதுவரைப் பார்த்ததில்லை என்பது பலரின் கருத்து.அண்மையில் பிரெஞ்சு மொழியில் வெளியிடப் பட்ட "பெண் ஏன் அடிமையானாள்?" புத்தகத்தைப் படித்த புரட்சிக்குப் பெயர் போன் பிரஞ்சு அறிஞர்களே ஆச்சரியப் பட்டார்களாம்.
ரொம்ப அருமையான பதில்கள் சதீஷ். நிறைய படிப்பிங்க நிறைய விஷயங்கள் தெரிந்து வைத்து இருக்கிங்க. வாழ்த்துக்கள்.
//தன் பிள்ளை, தன் கணவன், தன் வீடு என்னும் சிறிய உலகில் இருக்க மட்டுமே பிரியப்பட்டிருந்தால், சமூகப் பிரச்சனைகளைப் பேசும் ஒரு கவிதாவை வலையுலகம் இழந்திருக்குமே! //
ஆஹா..யக்காவ்.. இது உங்களுக்கு கொஞ்சம் டூமச்சா தெரியல.. அம்மணி நீங்க எல்லாம் சும்மா இருந்தாவே.. ஓவர் திமிர் ல ஆடுவாங்க.. தாங்கமுடியாது. .நானும் அவங்க புள்ளையும் சேர்ந்து அப்ப அப்ப அவங்களை அடக்கி வைக்கிறோம் ..நீங்க என்னடான்னா வந்து இந்த ரேஞ்சுக்கு ஏத்தி விடறீங்க
நீங்க நினைக்கற அளவுக்கு அம்மணி ஒன்னும் செய்யறது இல்ல எல்லாம் வெளியில ஓவர் சீன்.. அதையெல்லாம் நம்பிக்கிட்டு நீங்களும்?.. ம்ம்... நல்லாவா இருக்கு இப்படி அவங்கள புகழ்றது.. அதுவும் நான் இங்க இருக்கும்போது..?..
யக்கா..இப்படி பண்ணிபுட்டீங்களே..?!!
//அதுசரி, மெய்யாலுமே ராமர் உங்க முதுகில் மூன்று விரலால் தடவினாரா? அது ஏன் மூன்று விரல், ஏதும் வேண்டுதலா? மூன்று விரலால் தடவும்போது மற்ற விரல்களை மடக்கிக் கொண்டாரா?//
சதீஷ் அண்ணாச்சி நீங்களும் ஓவர் தான் சொல்லிட்டேன்.. ஆன்னா ஊன்னா.. பகுத்தறிவு பகுத்தற்வு ன்னு பேசறீங்க.. நீங்க என்னடான்னா.. ராமர் என் முதுகல கோடு போட்டாறான்னு கேக்கறீங்க. .நல்லாவா இருக்கு??..
சரி. எனக்கு நீங்க சொல்லுங்க.. புள்ளி மானுக்கு.. யாரு புள்ளி வச்சா? புலிக்கு யாரு கோடு போட்டா? ..அட நம்ம பட்டாம்பூச்சி மேல யாரு டிசைன் போட்டாங்க..
அது என்ன எனைய மட்டும் ராமர் கோடு போட்டாருன்னு ஒருகதைய கிளப்பி விட்டு இருக்கீங்க.. யாரு அந்த ராமர்? முன்ன பின்ன அவர நான் பார்த்தது கூட இல்ல.. அவருக்கு என் முதுகுல கோடு போடுவதை தவிர வேற வேல இல்லையாமா?..
நீங்க வேற.. உலகத்துல..இந்தியாவில சில வகை அணில்குட்டிகள் என்னையா மாதிரி இருக்கும்.. உலகத்துல இருக்கற அணில் எல்லாத்தையும் கூகிலில பாருங்க.. ஒன்னு ஒன்னு ஒரு ஒரு மாதிரி இருக்கும்.. எதுக்கும் என்னைய மாதிரி மேல கோடு இல்லீங்கண்ணா..
வாங்க பொன்ஸ்! சதீஷ், சிவஞானம்ஜி, நீங்கள் சொல்லுகின்ற கருத்துக்களில் எனக்கும் மாற்று கருத்து இல்லைதான்.
என் கேள்வியே பெண்களால் மனதை ஒருநிலை படுத்தி இறைவழிப்பாட்டை அடுத்தவர்களுக்காக செய்ய முடியுமா என்பது தான். ஒரு உதாரணம்:-
ஒரு பெண் அர்ச்சகர் தன் வீட்டில் உடல் நலமில்லாத குழந்தையை விட்டு விட்டு வேலைக்கு வருகிறார் என்று வைத்து கொள்வோம். அவரின் மனம் அந்த குழந்தையை அன்று முழுதும் சுற்றி சுற்றி வரும். மற்ற வேலைகளில் இதனால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் இறைவழிபாடு என்று வரும் போது மனமும் அறிவும் ஒன்று பட்டு, வேற்று சிந்தனைகளை புறம் தள்ளி வழிப்பட வேண்டும் அல்லவா? . அதை பெண்ணால் செய்ய முடியுமா.?
அதே வீட்டில் பெண்ணுக்கு பதிலாக ஒரு ஆண் அர்ச்சகர் இருக்கிறார் என வைத்துக்கொள்வோம். அவருக்கும் தன் குழந்தைக்கு உடல் நலம் இல்லாமல் போன கவலை இருக்கும், ஆனால் ஆண் மிக எளிதாக அந்த வேதனைக்கு எல்லாம் தன் மனதை வளைந்து கொடுக்காமல், தன் கடமையை முழுமையாக செய்யும் ஆற்றல் பெற்றவர்கள். அவர்களால் மிக எளிதாக மாற்று சிந்தைனைகளை புறம் தள்ள முடியும் ஆனால் பெண்களுக்கு அது எளிதல்ல என்று தோன்றுகிறது.
இது போன்ற பெண்ணின் சிந்தனைகள் என்னுடைய அந்த கேள்விக்கு காரணம்.
இன்னும் ஒரு நிகழ்ச்சியை சொல்கிறேன்.
என்னுடைய தாத்தா, ஒரு முறை , இன்று எமன் வந்து என்னை இறைவனிடம் அழைத்து செல்ல கூப்பிட்டால் சென்று விடுவேன். செல்லும் போது இந்த துன்பம் மிகுந்த உலகில் என் மனைவியை விட்டு செல்ல விருப்பம் இல்லை அவளையும் அழைத்து வருகிறேன் என அனுமதி கேட்பேன். ஆனால் என் மனைவி வரமாட்டேன், என் மகனின் குழந்தைகள் அநாதைகள் ஆகிவிடுவார்கள் (நானும் என் அண்ணங்களும் தான்) என்று சொன்னால், அவளை அவளின் ஆசைப்படி இங்கே விட்டு சென்று விடுவேன் என்றார்.
எங்கள் மீது என் ஆயாவை போல அதிகமான பாசம் என் தாத்தாவிற்கும் இருக்கிறது என்றல்லவா நினைத்தேன், ஆனால் அவர் என்ன எங்களை விட்டு இறைவனிடம் போகிறேன் என்கிறார்?. எமனிடம் இவர் என் பேரக் குழந்தைகளை விட்டு வர முடியாது என்றல்லவா வாதிட வேண்டும். அதைவிட்டு தான் போவது மட்டுமல்லாமல் , ஆயாவையும் அழைக்கிறார்? என்று தோன்றியது.
மேலும் எப்படி தாத்தாவால் இப்படி மிக எளிதாக எங்களின் எதிர்காலத்தை எடுத்துகொண்டு சிந்திக்க முடிகிறது, உலகத்தில் பிறந்துவிட்டோம், அவரவர் பிழைக்க அவரவருக்கு ஒரு வழி கண்டிப்பாக இருக்கும் என்று நினைத்து இருப்பாரோ?.. எப்படி அவரால் எங்களின் மேல் உள்ள பாசத்தை புறம் தள்ளி வைத்து இப்படி பேச முடிகிறது என்று எனக்கு தோன்றியது.
அதுவே என் ஆயாவால் ஏன் அப்படி முடியவில்லை.. ஏன் தாத்தாவை போல் என் ஆயா சிந்திக்க வில்லை. விதிமுடிந்தால் போக வேண்டியதுதான் என்ற நம்பிக்கை கூட என் ஆயாவுக்கு இல்லை. என் பேரபிள்ளைகளை கரையேற்றிவிட்டு தான் நான் இந்த உலகை விட்டு போவேன் என்ற விடாபிடியான அழுத்தத்தை அவரிடம் இருந்ததை நான் கண்டிருக்கிறேன்.
இந்த நிகழ்ச்சி என் மனதில் இன்னமும் இருப்பதால் இப்படி ஒரு கேள்வி வந்துவிட்டது எனலாம்
//ந்ல்ல முயற்சி.நல்ல கேள்விகள்.உண்மையான பதில்கள்.இருவருக்கும் பாராட்டுக்கள்.கருத்துக்களில் வேறுபடலாம் ஆனால் கண்ணியமாக என்பதைப் பார்க்க மகிழ்ச்சி//
நன்றி தமிழன். சதீஷ் இப்படி பதில் அளிப்பார் என்று நான் நினைக்கவில்லை எனக்கும் அவரின் பதில்களில் மகிழ்ச்சி.
//ரொம்ப அருமையான பதில்கள் சதீஷ். நிறைய படிப்பிங்க நிறைய விஷயங்கள் தெரிந்து வைத்து இருக்கிங்க. வாழ்த்துக்கள். //
சந்தோஷ், நன்றி , உங்களின் கருத்தை சதீஷ் படிப்பார் என்று நினைக்கிறேன். :)
திருச்சி தஞ்சை மார்க்கத்தில் திருச்சிக்கு அடுத்த தொடர்வண்டி நிலையம் பொன்மலை. அதற்கு அடுத்த நிலையம் மஞ்சத்திடல். அதற்கு அடுத்ததே திருவெரும்பூர். இதை தொடர்வண்டி அட்டவனையிலிருந்து கூட உறுதி செய்து கொள்ளலாம்.
திருவெரும்பூரில் காவிரி ஓடவில்லை. இவ்வூருக்கு மேற்கே 3 கிமீ தள்ளியுள்ள வேங்கூர் என்ற ஊரில்தான் காவிரி திருவெரும்பூருக்கு அருகில் ஓடுகிறது. பொதுவாக திருவெரும்பூர் ஒரு வரண்ட பிரதேசம். சில இடங்ளில் வயல்களும் மற்ற இடங்களில் முட்காடுகளும் இருக்கும். கோடையில் பாதிக்கு மேற்பட்ட கிணறுகளில் தண்ணீர் அதல பாதாளத்துக்கு சென்று விடும்.
பாரத மிகுமின் தொழிலகத்துக்கு அருகில் இருப்பதால் இதன் சுற்று வட்டாரத்திலுள்ள மற்ற ஊர்களைவிட தொழிலாளர்களும் செலவச் செழிப்பும் நிறைந்த ஊர்.
ஓகை நீங்கள் கொடுத்துள்ள விபரங்களுக்கு நன்றி :)
ஊரின் பெயரில் எழுத்துப் பிழை இருக்கிறது. திருவெறும்பூர் என்பதே சரி.
போன பேட்டிக்கு ஈடு கொடுக்கும் விதமாக, சூடாக இருக்கிறது :)
பிழை திருத்தத்திற்கு மிக்க நன்றி ஓகை.
பாலா, நன்றி சூடுன்னா.. எவ்வளவு சூடு?.. :))))))
நெசமாவே கேப்பங்கஞ்சி குடித்து வளந்த என்னைஎப்ப கூப்பிட போறீங்க!! கருப்புவின் பதில்கள் சூப்பர்! கேள்விகள் வித்தியாசமான கோணங்களில் இருந்தன! அணிலை கேட்டதாகச் சொல்லவும்! அதற்கும் ராமபிரானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்றால்! :-)
இணைய நாடோடி
ஓசை செல்லா
பாபா! இப்ப எல்லாம் நான் திருந்திட்டேன் :-)
//நெசமாவே கேப்பங்கஞ்சி குடித்து வளந்த என்னைஎப்ப கூப்பிட
போறீங்க!!//
செல்லா, நம்ம எல்லாருக்கும் (தமிழர்கள்) கேப்பங்கஞ்சிக்கும் ஒரு strong relationship இருக்கு..அதனால் தான் பேரே இப்படி வைத்தேன்..!! ஒரு ஒருத்தராக கூப்பிடனும் சீக்கிரம் உங்களையும் கூப்பிடறேன்..
//பதில்கள் சூப்பர்! கேள்விகள் வித்தியாசமான கோணங்களில் இருந்தன! //
நன்றி..:))) எல்லா கேள்வியையும் சதீஷ் சரி என்று ஆமோதித்து பதில் சொல்லி இருக்கிறார். அதனால் பாராட்டு அவருக்கு மட்டுமே !!
//அணிலை கேட்டதாகச் சொல்லவும்! அதற்கும் ராமபிரானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்றால்! :-)//
சொல்லிட்டேன்.. நிச்சயமா சம்மந்தம் இல்லைங்க !!
//பாபா! இப்ப எல்லாம் நான் திருந்திட்டேன் :-) //
உஷாஜி, அடிக்கடி இப்படி ஏதாவது எனக்கு புரியாத மாதிரி போடறீங்க.. சரி உங்க பிரண்டு அணிலுக்கு தெரியாதான்னு பார்த்தா அது உங்கள கேட்டு சொல்றேன்ங்குது.. :))
//ஓகை said...
ஊரின் பெயரில் எழுத்துப் பிழை இருக்கிறது. திருவெறும்பூர் என்பதே சரி.//
நவீன நக்கீரர் ஒகையார் வாழ்க.
நல்ல பதிவு, பதில்களும்
அண்ணன் விடாது கருப்பு சதீஷ் அவர்களின் பதில்கள் அருமை.
ஓகை சார்!
lol
லக்கி, சதீஷ் கருத்துக்களிலிருந்து நான் மாறுபடுகிறேன் என்பது உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். ஆனால் அவர் அதை மறுப்பார் என்றே ஊகிக்கிறேன். விவாதத்துக்கு இப்போது நான் தயாரில்லை.(நேரப் பற்றாகுறை மட்டுமே காரணம்) அதனால் தான் அவர் தனது சொந்தவூர் என்று குறிப்பிட்ட திருவெறும்பூரைப் பற்றி மட்டும் உண்மைகளைக் குறிப்பிட்டேன். இவற்றை அவர் மறுக்க முடியாது என்பதோடு அவரே அவருடைய சொந்தவூரைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டிய உண்மைகளாகும்.
// நவீன நக்கீரர் ஒகையார் வாழ்க //
வரவனை, சதீஷ் சரியாகத்தான் எழுதியிருக்கிறார். நான் தான் என்னுடைய முந்தய பின்னூட்டத்தில் தவறாக எழுதியிருந்தேன். அதனால் திருத்தம் கொடுத்திருந்தேன்.
நக்கீரன் இல்லை. சீத்தலை சாத்தனார்.
//நல்ல பதிவு, பதில்களும் //
நன்றி வரவனையான்.
//அண்ணன் விடாது கருப்பு சதீஷ் அவர்களின் பதில்கள் அருமை.//
நன்றி லக்கிலுக். சதீஷ் படிப்பார் என நம்புகிறேன். உங்களுக்கும் ஓகை பதில் சொல்லியுள்ளார்.
Post a Comment