புது முயற்சியாக இன்றைய கேப்பங்கஞ்சி'யில் எங்களுடன், நம் பிளாக் நண்பர்களும் சேர்ந்து ஒருத்தரை உண்டு இல்லை என்று ஆக்கியிருக்கிறோம். அவர் வேறு யாருமில்லை..எல்லா விதமான படைப்புளையும் தன்னுடைய நகைசுவை பாணியில் மிக எளிமையான தமிழ் நடையில் தந்து கொண்டிருக்கும் ஒரு “easy going” personality". எதற்கும் டென்ஷன் ஆகாமல்..நக்கலாக பேசி நம்மை டென்ஷன் ஆக்கிவிடும் நல்லவர்.. பார்போம் எங்கள் கேள்வியால் அவர் டென்ஷன் ஆகிறாரா இல்லை அவர் பதிலால் நம்மை டென்ஷன் ஆக்குகிறாரா.. இதோ..நம்மிடையே..இன்று.. “சந்தோஷத்துடன் சந்தோஷ்

கார்த்திக்ஜெயன்த்:- ஏன் பிளாக்கை துவக்கினீர்கள்? எழுதுவதில் முழுமை அடைந்துவிட்டதாக நினைக்கிறீர்களா? எப்போதாவது எழுத்திற்க்காக வருத்தப்பட்டதுண்டா?
பொதுவா பெரிய பெரிய பதிவர்கள் மாதிரி தமிழ் தொண்டு ஆற்ற வேண்டும் அப்படின்னு எல்லாம் கண்டிப்பா நான் பதிவை துவங்கவில்லை. இங்க வந்த பிறகு என்னுடைய தனிமையை போக்கிக்கொள்ள பதிவுகள் பெரிதும் உதவி இருக்கின்றன. மேலும் எனக்கு புதுசு புதுசா ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் தொடர்ந்து ஒரே வேலையை செய்து கொண்டு இருந்தால் bore அடித்து விடும். பதிவு எழுத ஆரம்பித்தால் படிக்க வேண்டும் ஏதாவது விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும் புதுசு புதுசா ஏதாவது கற்றுக்கொள்ளலாம் அப்படிங்கிற ஆசை தான். இதுவரையில் நான் பதிவு எழுதியதற்கு வருந்தியது இல்லை ரொம்ப மகிழ்ச்சி தான் அடைந்து இருக்கிறேன். நிறைய நண்பர்கள் பல்வேறு வகையான மேன்மையான சிந்தனனகளை உடைய நண்பர்கள் கிடைச்சி இருக்காங்க இதுக்கு எல்லாம் ரொம்ப குடுத்து வெச்சி இருக்கணும் யாராவது வருத்தப்படுவாங்களா என்ன?

மதுரா:-.. சந்தோஷ் உங்க பக்கம் வர்ற எல்லாரையும் சந்தோஷமா அனுப்புறீங்களே இந்த ஜாலியான பேச்சு யாருக்கிட்ட கத்துக்கிட்டீங்க?
பொதுவா எங்க அப்பா வழி வந்த எல்லாருக்கும் கொஞ்சம் நகைச்சுவை உணர்வு அதிகம். சீரியசா இருந்து என்னத்த சாதிக்கபோகிறோம்.. நாம சந்தோஷமா இருந்து, அடுத்தவங்களையும் சந்தோஷமா வச்சிக்கனும் அப்படீங்கறது தான் நம்ம பாலிசிங்க.. நம்ம நகைசுவை உணர்வு அதுக்கு கொஞ்சம் உதவி செய்துங்க.. அவ்வளவுதான்..!!!

ராம் :- எப்பிடி உங்களுக்கு மட்டும் தோணுது... நீயூஸ் பேப்பர் சைட்லே போயிபடிச்சிட்டு அதை பரபரப்பு தலைப்பை போட்டு பதிவே ஒப்பேத்துறது.
என்ன பண்றது ராம் பெருமையா எழுதறதுன்னு வந்துட்டேன். சொந்தமா சரக்கு எதுவும் இல்ல இது மாதிரி எதாவது ஒப்பேத்துனா தான் உண்டு. பதிவு எழுதுவதற்கு ஆரம்பிப்பதற்கு முன்னாடி பதிவு அப்படின்னா என்னான்னு தெரிந்து கொள்ள இந்த பக்கம் போனேன் அவங்க சொன்னாங்க பதிவுன்னா சில சமயம் நிகழ்வுகளின் மீது உங்களது கருத்துக்களை பதிவதுன்னு சொல்லி இருந்தாங்க சரி நக்கல் அடிக்கறது தான் நமக்கு நல்லா வருமே அப்படின்னு மெய்டேன் பண்ணிட்டு வரேன் :))

நாகை சிவா:-.இந்தியாவில் MNC வேலை பார்த்துக் கொண்டு அயல்நாட்டில் வேலை செய்பவர்களை ஏதோ தேச துரோகி போல் விமர்சிப்பவர்களை பற்றி என்ன நினைக்கிறீங்க?
சொல்லுறவங்க என்ன செய்தாலும் அதில் குறை சொல்லிக்கொண்டே தான் இருப்பாங்க Just Ignore them.

கவிதா:- இளைஞர்களின் "அமெரிக்க" கனவு தேவையானதா?
இன்றைய இளைஞர்களின் அமெரிக்க கனவு நேற்றைய இளைஞசர்களின் கனவுகளில் இருந்து வேறு பட்டது. இப்ப எல்லாம் பெரும்பான்மையானோர் அங்க போயி நிறைய கத்துகிட்டு வந்து அதை இந்தியாவில் செயல்படுத்த வேண்டும் என்று தான் இருக்கிறார்கள். மேலும் "Return to India" தான் இப்பொழுது இங்க பெரிய Buzz word. நிறைய பேர் அதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள், செயல் படுத்திக்கொண்டும் இருக்கிறார்கள் http://www.nriol.com/returntoindia/index.asp அவர்களுக்கு உதவ இது போன்ற தளங்கள் கூட வந்து விட்டன.

ஜொள்ஸ்:-. சந்தோஷ் கதறக் கதற கடலை வறுப்பீங்களாமே அப்படியா ?
பாண்டியன்னே வாலிப வயசுல இது எல்லாம் சகஜம் கண்டுகப்படாது. கடலை போடுவேன் ஆனா எதிர் முனையில் இருக்குறவங்க கதறுவாங்களான்னு தெரியலை. இதுல நம்ம பாலிஸியே "கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே" அப்படிங்கிற கீதையின் வரிகள் தான் (இதுக்கு மட்டும் சரியா பயன்படுத்திகிங்கடா கீதையை.)

தேவ்::-. சந்தோஷ், திருமணம் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? அமெரிக்காப் பொண்ணுங்க இந்தியப் பசங்களை லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணா ஒத்து வருமா? ஓங்க கருத்து..
அது ஒரு இனிமையான சுமை இருவருக்குமிடையே புரிதல், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கும் வரை. எல்லா மனிதர்களுக்கு உண்மையான உள் மனது ஒண்ணு தான். அவன் அமெரிக்காகாரனாக இருந்தாலும் சரி பாகிஸ்தான்காரனாக இருந்தாலும் சரி. எனவே புரிதலும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் இருந்தால் போதும் உலகத்துல யார் கூடயும் வாழ்க்கை நடத்தலாம்.

கைப்புள்ள :- அமெரிக்காவில கடந்த சில வருஷமா இருக்கீங்க. இது வரை அங்கே உங்களுக்கு மறக்க முடியாத சம்பவம்/நிகழ்வுன்னு எதாவது இருக்கா?
நிறைய இருந்தாலும் இதை மறக்கவே முடியாது. வந்த புதுசுல நாங்க பஸ்ல ஆபீசுக்கு போவோம். அதுல எங்களோட(எங்க பஸ்ல) ஒரு பொண்ணு தினமும் வரும். செம பிகர் ஹி ஹி... அதை பாக்கவே உலகமே அழிஞ்சாலும் 8 மணி பஸ்ஸை புடிச்சிடுவோம் :)).. முதலில் ஒண்ணுமே நடக்கலை கொஞ்ச நாள் கழிச்சி அவங்க சிரிக்க நாங்க சிரிக்க சரி நடப்பது நடக்கட்டும் அப்படின்னு ஒரு நாள் துணிந்து பேசினோம் அந்த அம்மா எங்களை பாத்து என்ன புள்ளங்களா இங்க புதுசா பள்ளிகூடம் எதுனாச்சும் தொறந்து இருக்காங்களா என்ன தினமும் போயிட்டு வரீங்கன்னு கேட்டாங்க? என்னது பள்ளிக்கூடமா நாங்களா? அன்னிக்கு நிறுத்தினோம் பஸ்ல போறதை.

மதுரா:-.விவாசாயத்தில் இரண்டாவது பசுமை புரட்சி பத்தி ஒரு நல்ல பதிவு போட்டீங்க. ஆனா முடிவா என்ன பண்ணனும் விவசாயிகளுக்குன்னு சொல்றீங்கன்னு தெரியலையே. சொல்றீங்களா?
இது வந்து ஆனந்த விகடனில் வந்த ஒரு செய்தி. எனக்கு அவ்வுளவு விவசாய அறிவு எல்லாம் கிடையாது. என்னுடைய இந்த பதிவின் நோக்கமே இதை படிச்சி பிறகாவது விலை கொஞ்சம் அதிகம் ஆனாலும் இயற்கை உரங்களை பயன்படுத்தி பயிர் செய்யப்படும் பொருள்களை மக்கள் ஊக்குவிச்சா நல்லா இருக்கும் அப்படின்னு தான். ஆனா நீங்க சொன்ன மாதிரி இன்னும் சிலரும் இதே கருத்தை சொல்லி இருக்காங்க. அதுல என்னோட கருத்து என்னானா பசுமை புரட்சி அப்படி இப்படின்னு சரியான முறையில் ஆராயாமல் ஏறகனவே விவசாய நிலங்களை நாசம் செய்தாகி விட்டது. அதன் தாக்கம் வெளி வந்து கொண்டு இருக்கும் பொழுதே இரண்டாம் பசுமை புரட்சிக்கான ஆயத்தங்களை அரசு எடுத்த்க்கொண்டு இருப்பது வருந்தத்தக்கது. ஏற்கனவே இயற்கை தாயை பல்வேறு வகையில் நாம் நாசம் செய்து விட்டோம் இப்பொழுதாவது உணர்ந்து அதற்கான பிராயத்தங்களை செய்ய வேண்டும் இல்லையா? இங்க அமெரிக்காவில் மக்கள் அதை உணர ஆரம்பித்து விட்டனர். இயற்கையான முறையில் பயிர் செய்யப்படும் மூலப்பொருட்களையும், எந்த வகையான செயற்கை மருந்துகள் அளிக்கப்பட்டு வளர்க்கப்படாத மிருகங்களின் மாமிசங்களை கொண்டு தயாரிக்கும் Chipotle போன்ற உணவகங்கள் பெருகி வருகின்றன மக்களின் ஆதரவும் அவர்களுக்கு கணிசமான அளவு இருக்கிறது. நம்ம ஊரிலும் இது மாதிரி இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் உணவுக்கு ஆதரவு பெருக வேண்டும். இயற்கையை காப்பாற்ற இது ஒன்றே வழி. அரசியல்வாதிகளை நம்பி பிரயோஜனம் இல்லை நமக்கு நாமே திட்டம் தான் இதுக்கு உதவும்.

ராம் :- சர்வேசன் வாக்கெடுப்பிலே 2வது இடத்திலே கெலிக்க எத்தனை கள்ள ஒட்டு போட்டிங்க.... :)
அய்யோ போடும் பொழுது கணக்கு எடுக்க மறந்துட்டேனே. அடுத்த தபா ஒழுங்கா கணக்கு எடுத்து சொல்றேன் தலை :)..

அணில் :- நீங்க எழுதி என்னத்த சாதிக்க போறீங்க?
அணிலு ரொம்ப கேள்வி கேக்குற தனியா மாட்டுன கைமா தான்டி நீ இன்னிக்கு. அந்த மாதிரி பெரிய பெரிய நோக்கம் எல்லாம் எதுவும் இல்லிங்கோ. எதோ என்னால நாலு பேர் சிரிச்சிகிட்டு இருந்தா போதும் அதுவே சாதனைன்னு நினைக்கிறேன்.

துர்கா:- இந்திய அரசியல் பற்றி உங்களின் பொதுவான கருத்து. உங்களின் எதிர்பார்ப்பு அல்லது மாற்றம் என்ன வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
இந்திய அரசியல் மட்டும் இல்ல பொதுவா உலகத்துல ஜனநாயகமே கேலிக்கூத்து ஆகிக்கொண்டு வருகிறது. மக்கள் தான் தலைவர்களை தேர்ந்து எடுக்கிறார்கள் என்கிற நிலைமை மாறி ரவுடிகள், தீவிரவாதிகள், வெளிநாட்டு கம்பெனிகள், வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் தான் இப்பொழுது பெரும்பான்மையான நாடுகளின் தலைவர்களை தீர்மானம் செய்கின்றன. ஒரு சில சமயங்களில் மன்னர் ஆட்சிக்கும் இப்பொழுது இருக்கும் ஆட்சிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை மன்னர் ஆட்சியிலாவது மன்னரிடம் மட்டும் பயம் இருக்கும், ஆனால் இப்பொழுது கட்சி உறுப்பினர் ஆட்டை வைத்து இருக்கும் நாய்கள் எல்லாம் மக்களை பார்த்து குரைக்கின்றன. :(( போகிற போக்கை பார்த்தால் மன்னர் ஆட்சியே எவ்வுளவோ மேல் என்று தோன்றுகிறது.

நாகை சிவா:-.வாகனங்கள் மேல் உங்களுக்கும் தனிப்பட்ட பிரியம் உண்டு என்று எண்ணுகின்றேன். அதை பற்றி சற்று கூறலாமே?
அமாம் எனக்கு Bikes மேல ரொம்ப craze அதுவும் எனக்கு புடிச்ச விஷயமே வேகம் தான். அது பைக் ஆனாலும் சரி கார் ஆனாலும் சரி வேகமா போகணும். இங்க போலீஸ் எல்லாம் ரொம்ப மோசம் புலி 60 speed limit இருக்குற இடத்துல 90ல தான் போறேன் அதுக்கே டிக்கெட் குடுக்குறாங்க. நம்ம வாங்குற 5, 10 டாலருக்கு டிக்கெட் கட்டியே தாங்கலை இப்பதான் கொஞ்சம் அடங்கி இருக்கேன் :))..

ஜொள்ஸ்:-. உங்களைப் பத்தி ஏதாச்சும் கிசு கிசு ?
கிசு கிசு எல்லாம் பெரிய பெரிய ஆளுங்களை பத்தி வருவது நான் எல்லாம் almost nothing in this world :)) அதனால் என்ன பத்தி அது மாதிரி எதுவும் இல்ல :)).

கைப்புள்ள:- உங்க வாழ்க்கையில் செய்யனும்/சாதிக்கனும்னு நெனச்சி வச்சிருக்கற விஷயங்கள்.
சொந்தமா ஒரு கம்பெனி ஆரம்பிக்கணும் அப்படிங்கறது தான் என்னோட கனவுகளில் ஒன்று. இன்னும் சரியான வழிகாட்டுதல் கிடைக்கவில்லை அந்த பாதையில் போக.

தேவ்::-உங்க பதிவுலக வாழ்க்கையில் உங்களை மிகவும் பாதித்த பதிவர் யார்? அதுக்கு என்னக் காரணம்? (அதாவ்து உங்களுக்கு ரொம்பவும் கடுப்பேத்துன பதிவர்ன்னு வச்சுக்கங்களேன்.)
கடுப்பேத்துனவங்க அப்படின்னு எல்லாம் யாரும் இல்ல. டோண்டு சார் முதல்கொண்டு அனைவரிடமும் கருத்து பரிமாற்றமே தவிர வேற எதுவும் இல்லை. ஆனா தனிப்பட்ட முறையில் ஒரு பெண் பதிவர் என் பின்னால், என்னைப்பற்றி தவறாக பேசி என்னை மிகவும் காயப்படுத்தி விட்டார். இதுல ஒரு கொடுமை என்னான்னா அவரை நான் சந்தித்தது கூட கிடையாது. ஒரு 5 - 10 முறை கூகுலி உரையாடி இருப்பேன், கடித பரிமாற்றம் நடந்து இருக்கிறது அவ்வுளவு தான். என்னையும் என்னுடைய வளர்ப்பையும் பற்றி தவறாக பதிவுலக மக்களிடம் பேசிவிட்டார் அந்த பெண்ணுரிமைவாதி. இதுல என்ன கொடுமை அப்படின்னா இப்பொழுது பேசினால் கூட என்மீது ரொம்ப அக்கரை உள்ளது போல நடிப்பார் என்ன உலமடா இது? அதுல இருந்து பெண் பதிவர்கள் அப்படின்னாலே கொஞ்சம் அலர்ஜி.

கார்த்திக்ஜெயன்த்:- சிறிது காலமாக நீங்க: அமெரிக்காவில் இருந்துவருகிறீர்கள், உங்களின் தனிப்பட்ட & தொழில் சம்பந்தமான அனுபவத்தை சொல்லுங்கள்-
தொழில் முறையில் எனக்கு இந்த பயணம் மிகப்பெரிய வளர்ச்சியை கொடுத்து உள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையிலும் நான் ஏராளமாக கற்றுக்கொண்டு இருக்கிறேன். தொழில் முறையில் நான் படித்து வியந்த Technologyயில் எல்லாம் ரொம்ப சாதாரணமா இருக்கு. என்னுள் இந்த பயணம் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவை பற்றியும் அதன் கலாச்சாரம் பற்றியும் நான் கொண்டு இருந்த பலவகையான எண்ணங்கள் தவறு என்று இதில் தெரிந்து கொண்டேன்.

தேவ்::- உங்கள் பதிவுக்கு இருக்கும் பெண் ரசிகைகளை எப்படி சமாளிக்கிறீங்க?
நான் எல்லாம் நீயூஸ் பேப்பரை கட் பண்ணி பேஸ்ட் செய்ற டிக்கெட்டு. நம்ம பக்கம் மக்கள் தெரியாம வந்தாத்தான் உண்டு ரசிகைங்க அப்படின்னு எல்லாம் காமெடி பண்ணிகிட்டு.

துர்கா:- "பெண்கள் உடைகள் ஆண்களை கவர உடுத்துகிறார்கள் " என்பதை பற்றி உங்கள் கருத்து.
பெண்கள் மட்டுமில்லிங்க பொதுவா மக்கள் உடை உடுத்துவதே To attract the opposite sex இதை பிரபல மனோதத்துவ நிபுணர்களே உறுதிப்படுத்தி உள்ளனர்.

ஜொள்ஸ்:-. எப்படீங்க புத்துல இருந்து கெளபுற மாதிரி அப்பப்போ உங்களுக்கு சமுதாயக்கோபம் கெளம்புது ? என்னா மேட்டரு?
பொதுவாவே எனக்கு கொஞ்சம் கோவம் அதிகம்.. அதிலும் கொஞ்சம் சமூக அக்கரை உண்டு. குட்டியூண்டு அளவு நேர்மையா நடந்து கொள்ள முயற்சி செய்வேன்(இதுக்கு காரணமும் என்னோட நண்பர்கள் தான் முக்கியமா என்னோட மிக நெருங்கிய நண்பன் திருமால் அப்படின்னு ஒருத்தன். என்னோட நண்பர்கள் பெரும்பான்மையானோர் பற்றி இங்க சொல்லி இருக்கேன். என்னோட வாழ்கை நல்ல பாதையில் போயிக்கொண்டு இருக்கிறது அப்படின்னா என்னோட குடும்பத்துக்கு அடுத்த படியா இவங்களுக்கு அதுல மிகப்பெரிய பங்கு உண்டு.) .. எதிர்வகையா நடக்கும் பொழுது கொஞ்சம் கோவம் வருது வேற எதுவும் இல்ல.

மதுரா:-.ஒரு ஆப்ப்ள் ஐஃபோன் ஐநூறு டாலர். ஒரு பித்தளை குத்துவிளக்கு நூறு டாலர். அப்படின்னா ஒரு அப்பிள் ஐஃபோன் ஓனர், எத்தனை குத்துவிளக்குக்கு ஓனர் ஆகலாம்? (பரிசு: கரெக்டா பதில் சொன்னா நிறைய பேர் வீடு புகுந்து அடிப்பாங்க! :) ...)
ஒரு ஆப்பிள் ஜபோன் ஓனரு ஒரு குத்துவிளக்கோட இருந்தா தான் வெளங்க முடியும் இல்லாட்டி ஆப்பிள்விக்க தான் போக வேண்டி இருக்கும்.

தேவ்::- அமெரிக்காப் போய் வீட்டுக்குத் தெரியாம நீங்க செஞ்ச சின்ன பெரிய தப்பு என்ன?
டிஸ்கோவுக்கு போயிருக்கேன் அதை சொன்னது இல்லை.

கவிதா:-நாம் அமெரிக்கர்களிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும் என்று நினைக்கிற ஒரு விஷயம்.
அருமையான வாழ்க்கை முறை அவர்களுடையது. குடும்பம் மற்றும் Personal life தான் முக்கியம் அதற்கு பிறகு தான் அலுவல். ரொம்ப planned life அவர்களுடையது எதையும் நிதானமாக ஆலோசனை செய்து முடிவு எடுப்பார்கள்.

நாகை சிவா:-.சந்தோஷ் பலர் உங்களை வீடு புகுந்து அடிச்சி இருக்காங்க, அது எல்லாருக்கும் தெரிந்த செய்தி தான். நீங்க தெரிந்தோ தெரியாமலோ யாரு வீட்டுக்கும் போய் அடி வாங்கி இருக்கீங்களா? அப்படி இருந்தால் அதை பற்றி சொல்லுங்களேன்?
நான் எனக்கு பிடித்து இருந்தால் மட்டுமே பின்னுட்டம் இடுவேன். ஏடாகூடமா அவ்வுளவா பின்னுட்டம் எதுவும் போட்டது இல்ல. நான் எல்லாம் சாதா பதிவர் புலி கொஞ்சம் பிரபலமான ஆளா இருந்தா இது நடந்து இருக்கும் எனக்கு இதுவரைக்கும் அது மாதிரி எதுவும் நடந்தது இல்ல.

துர்கா:- தமிழ்மணம் அரசியல் பற்றி உங்கள் கருத்து? நல்ல ப்ளாக் பதிப்புகளுக்கு,என்ன சாத்தியக்கூறுகள் நீங்கள் சொல்ல நினைக்கிறீர்கள்?
அரசியல் எல்லாம் ஓ.கே, அதுல இருக்குற ஆட்கள் சாதாரண மக்களை இம்சை பண்ணாம எப்படியே அடிச்சிகிட்டு சாவுக யாரு என்ன கேக்க போறாங்க. நல்ல பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் இல்லையே தவிர மக்கள் தேடிப்போயி படிக்கிறாங்க. இதுக்கு உதாரணம் சொல்ல வேண்டும் அப்படின்னா குமரன், மா.சிவகுமார், பாஸ்டன் பாலா, இட்லிவடை, ஊசி போன்றவர்களின் பதிவுகளை சொல்லாம். உண்மையான திறமையை எப்பவுமே மறைக்க முடியாது.

கைப்புள்ள:- ஒரு சினிமா நடிகர்/நடிகையிடம் கேக்கற மாதிரியான கேள்வி : நீங்க சாஃப்ட்வேர் இஞ்சினியர் ஆகலைன்னா என்ன வேலைக்குப் போயிருப்பீங்க?
என்னோட dream job வந்து Genetic Engineer ஆக வேண்டும் என்பது தான். +2 ல ஆடிய ஆட்டத்தால் காலேஜ் சீட் கிடைக்கிறதே பெரிய குதிரை கொம்பா போச்சி. அந்த வேலையும் அப்படியே போச்சி. மத்தபடி Software Engineer ஆகவில்லை அப்படின்னா மாடு தான் மேச்சிகிட்டு இருந்து இருப்பேன் :))..

கவிதா:- உங்களின் மற்ற ப்ளாக்ஸ் பயாஸ்கோப், sqlspy பற்றி சொல்லுங்க
பயஸ்கோப் சும்மா படம் காட்டுவதற்கு. SQLSpy என்னோட ஆங்கில பதிவு SQL Server பற்றி எனக்கு இருக்குற கொஞ்சம் நஞ்ச அறிவை எழுதி வெச்சிகலாம் பின்னாடி மறந்தா இங்க வந்து படிச்சிகலாம் அப்படின்னு எழுத ஆரம்பித்தேன். இன்னும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி அதில நிறைய எழுதணும்.

கார்த்திக்ஜெயன்த்:- கடைசியாக, நீங்கள் இங்கேயே தங்கவிட வேண்டும் என்று நினனக்கிறீர்களா? அல்லது திரும்பி நல்லதை நோக்கி செல்ல நினைக்கிறீர்களா?. உங்கள் கருத்தென்ன?
கண்டிப்பாக நமக்கு இந்த ஊர் ஒத்துவராது. என்ன இருந்தாலும் இந்தியா இந்தியா தாங்க. என்னங்க ஒரு காரும் கார்பெட் போட்ட வீடும் கிடைச்சிட்டா போதுமா? எங்க ஊரில் நான் தான் முதல் தர குடிமகன் அடிச்சாலும் புடிச்சாலும் நம்ம சொல்றதை அங்க மதிப்பாங்க. இங்க ஒரு பையன் நம்மளை மதிக்க மாட்டான். என்ன தான் ஜல்லி அடிச்சாலும் இங்க நம்ம மூன்றாம் தர குடிமக்கள் தான் வெள்ளைக்காரன் அளவுக்கு மரியாதை நமக்கு கிடைக்காது இங்க.


சந்தோஷ் சொல்லிய தத்துவம் :-Failure Means Delay Not Defeat