உஷாஜி’க்கு புதிதாக அறிமுகம் தேவை இல்லை எனலாம்..இணையத்தில் பல வருடங்களாக இருப்பவர், என்னை போன்ற புதியவர்களை ஊக்கம் கொடுத்து பாராட்டி எழுதவைக்கிறார் என்பது குறிப்பிடதக்கது. இவர் பத்திரிக்கை துறைக்கும் புதிதல்ல, நான் இவரை முதல் முதலில் தெரிந்து கொண்டது அவள் விகடன் வாசகியாக. இவரின் கட்டுரை ஒன்றை படித்துவிட்டு, இவர் பெயரை ப்ளாகரில் பார்த்து இருக்கிறோமே..என்று அதற்கு பிறகு இவரின் ‘நுனிப்புல்’ சென்று படித்து வருகிறேன்..இன்று நம்மிடையே..உஷாஜி..

வாயை புடுங்கற ரவுண்டு:-

கவிதா:- உஷாஜி, சொந்தநாடு திரும்புவதை எப்படி உணருகிறீர்கள்?
மகள் கல்லூரி படிப்புக்கு இந்தியா சென்றவுடன், வெளிநாட்டு வாழ்க்கை போதும் என்ற எண்ணம் எங்கள் இருவருக்கும் வலுத்துக் கொண்டு வந்தது. மகன் பத்தாவது தேர்வு முடிந்ததும் நானும் அவனும் ஊருக்கு திரும்புவது என்பது முன்பே எடுத்த முடிவு. இதில் இன்ப அதிர்ச்சியாய் என் கணவருக்கு வேலை தேடி வந்துள்ளது. ஓரளவு நாடோடி வாழ்க்கை பழகிவிட்டதால், மாற்றத்தை விரும்பி ஏற்கிறோம். அதே சமயம், கொஞ்சம் சுக வாழ்க்கை வாழ்ந்து பழகிவிட்டதால், லேசான கலவரமும் அவ்வப்பொழுது வருகிறது.

கவிதா:- எல்லா பத்திரிக்கைகளிலும் அநேகமாக எழுதி இருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள். உங்களின் எழுத்தில் உங்களுக்காக தனிப்பட்ட ஒரு நடையை வைத்து இருக்கிறீர்களா?.
ஓரளவு அனைத்து இணைய இதழ்களில் எழுதியிருக்கிறேனே தவிர, அச்சு இதழ்களில் அதிகம் இல்லை.
முதலில் நான் நல்ல வாசகி, பிறகே எழுத்தாளினி. வேகமான, தொய்வில்லாத நடையும், மெல்லிய நகைச்சுவையும், யதார்த்தமான எளிமையான எழுத்துக்கள் எனக்கு பிடிக்கும். அதை என் எழுத்திலும் கொண்டு வர முயற்சி செய்துக் கொண்டு இருக்கிறேன்.

கவிதா:- அரபு நாடுகளில் பெண்களின் கட்டுபாடு பற்றி, எதற்கு அப்படி என்று அறிந்து கொண்டது உண்டா?
உள்ளூர் அரபி பெண்களுடன் பழகும் வாய்ப்பு வந்ததில்லை. ஆனால் பிற நாட்டு அரபி பெண்கள் (இஸ்லாமிய) சிலருடன் நட்பு உண்டு. பெண்களுக்கு தரப்படும் கல்வி சுயசிந்தனையை வளர்க்கும் என்பதை அவர்களுடன் பேசும்போது நன்கு தெரியும்.. விரைவில் விவரமாய் எழுத உத்தேசித்துள்ளேன்.

கவிதா:- உங்கள் எழுத்தில் நீங்கள் கொண்டுவர நினைக்கும் சில விஷயங்கள்?
மனிதர்கள் அனைவருமே சுவாரசியமானவர்கள், விதவிதமான கேரக்டர்கள். அதை கதைகளில் கொண்டு வர வேண்டும் என்பதே என் விருப்பம்.

அணில்:- உஷா அக்கா, அது என்னா சின்ன புள்ள மாதிரி ஸ்டாம்பு கலக்ஷ்னஸ் எல்லாம் செய்யறீங்க..? (கவி வேஸ்ட்..இதுமாதிரி எல்லாம் செய்யறது இல்ல..வாய் கிழிய பேச சொல்லுங்க நல்லாஆஆஆ பேசுவாங்க..)
அட அனி என் செல்லம் நீயாவது கேட்டியே!. சுதந்திரத்துக்கு முந்திய திருவாங்கூர், மைசூர் சமஸ்தான ஸ்டாம்புகள் எல்லாம் வெச்சிருக்கேன். மிக பழைய, அபூர்வமானது பல இருக்கின்றன. அப்படியே நாணயங்களும். இதைப் பற்றியும் எழுதணும். புகைப்படத்துடன்.

கவிதா:- இணையத்தில் “பெண்கள் புலம்புகிறார்கள்” உங்கள் கருத்து.
இணையத்தில் மட்டுமா ? இந்த பழக்கம் பல பெண்களுக்கு இருக்கு. நான் சொல்ல விரும்புவது ஒன்றேதான். புலம்பிக் கொண்டு இருந்தால் கேலியும் நக்கலும் அதிகம்தான் ஆகும். உன்னுடைய உரிமை, அது யாரையும் பாதிக்காது என்றால் அதை செயல் படுத்த யாரிடமும் கேட்டுக் கொண்டு இருக்காதே என்பதுதான்.

கவிதா:- என்னுடைய நண்பர் ஒருவர் “Don’t write like a typical house wife” என்று சொல்லுவார். பொதுவாக பெண்கள் அப்படி எழுதுவதாக அவரின் கருத்து. House wife என்றால் ஒரு இளக்காரம்/நக்கல் இருக்கிறது.
இது பெண்களூக்கான பத்திரிக்கை தேவையா என்ற தலைப்பில் இதுல எழுதியிருப்பதும், உங்க கேள்வியை ஒட்டித்தான். இது ஆண்கள் மட்டுமே மேதாவிகள் என்று நினைத்துக்கொள்ளுபவர்களில் வழக்கமான நக்கல் இது. பெண்கள் எழுதத்தொடங்கியப்பொழுது, (ஹவுஸ் ஓய்ப்புகள்) அவர்களுக்கு தெரிந்ததை எழுதினார்கள். வீட்டினுள் இருக்கும் பிரச்சனைகள் அப்படிதானே வெளி உலகிற்கு தெரிய வந்தன! எழுத்து என்பது அவரவர் ரசனையும், புரிதலும் பொறுத்து அமைகிறது. இதில் நக்கல் செய்ய என்ன இருக்கு? அது சரி, நான் எழுதுவது எப்படி இருக்கு ?

கவிதா:- திருமணம் நிச்சயம் செய்யும் போதே தனிக்குடித்தினம் பேசும் பெண்கள் பற்றியும் சொல்லுங்கள்.
நீங்க வேற, பையன்களே தனிக்குடித்தனம் போக திட்டம் போடுதுங்க. கேட்டால், நானும் வேலைக்குப் போகிறேன், அவளும் போறா. உங்களுக்கு எங்களோட இருந்தா சரிப்பட்டு வராது என்கிறார்கள்.

அணில்:- அக்கா “கிழவி” கதையின் மூலம் சொல்லவந்த கருத்தை கவிதா மாதிரி ஆளுங்களுக்கு சொல்லுங்க
அனி, வயது அதிகம் ஆக, ஆக குழந்தைப் போல மாறிவிடுகிறார்கள். ஆனால் உண்மையான குழந்தையின் நடத்தைகளை ரசித்து ஏற்றுக் கொள்ளும் நாம், பெரியவர்களிடம் எரிச்சலையே காட்டுகிறோம். வயதானப்பிறகு பல கிழ, கிழவிகளிடம் காண்பது அதீத சுயநலம்.

கவிதா:- “ஆணுக்கும் உண்டு sexual harassment” - உங்கள் பதிவு ஒன்றை படிக்க நேர்ந்தது. ஆண்களுக்கு உண்டு என்றாலும், அவர்கள் எளிதாக வெளிவரமுடியும், நேரடி பிரச்சனை இல்லை, மனவலி குறைவு, உடல் ரீதியான பாதிப்பு குறைவு என்று நினைக்கிறேன் -இது பற்றி உங்கள் கருத்து.
பெண்களுக்கு ஏற்படும் தாக்குதலைவிட ஆண்களுக்கு குறைவுதான். ஆனால் இருக்கு. சிறுவயதில் ஏற்படும் தாக்குதல் பாதிப்பு பின்னால் அவன் மண வாழ்க்கையே பாதிக்கப்படலாம் இல்லையா? பெண், தன் சோகத்தை முன்னபின்ன பழக்கம் இல்லாத ரயிலில் கூட பயணிக்கும் பெண்ணிடம் கூட பகிர்ந்துக் கொள்வதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஆண்கள் அப்படி செய்வதில்லை.

மூன்று வாரத்திற்கு முன்பு, இங்குள்ள கல்ப் நியூஸ் செய்தித்தாளில் ஒரு விசித்திர செய்தி. ஐரோப்பிய நாடு ஒன்றில், பதினைந்து வயது சிறுவன், தன் வகுப்பு மாணவனுடன் படிக்க அவன் வீட்டுக்குப் போயிருக்கிறான். இரவு வரவேற்பரை சோபாவில், படுத்திருந்தவனிடம், தோழனின் தாயே...... என்ன சொல்ல? அவன் படிப்பில், நடத்தையில் பல மாற்றங்களை பெற்றோர் கண்டுப்பிடித்து, கவுன்சிலிங் போய் கொண்டு இருக்கிறார்களாம். போலீஸ் கேஸ் ஆகி, வழக்கு நீதிமன்றம் வந்துள்ளது.

நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான், பெண்ணின் வேதனைகள் ஆணுக்கு என்றும் புரியாது. அதுப் போலத்தான் ஆண் பிரச்சனைகளையும் பெண்கள் புரிந்துக் கொள்ள முயல வேண்டும். நம்மைப் போல அவர்கள் வெளியே புலம்புவது இல்லை. ஆனால் புகைப்பது, குடி போன்ற பழக்கங்கள் தன் பிரச்சனையை மறக்கவே என்றுத் தோன்றுகிறது.

பெற்றோர்கள் தன் பிள்ளைகளிடம், ஆண் பெண் வித்தியாசம் காட்டாமல் வளர்த்தால், பையன்களும் தங்கள் பிரச்சனைகளை, கவலைகளை நம்மிடம் பகிர்ந்துக் கொள்வார்கள். அவர்களுக்கு புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

பெண்கள் வெளிப்படையாய் புலம்பியோ, அழுதோ தீர்த்துக் கொள்வதால் ஹார்ட் அட்டாக் அதிகம் வருவதில்லை போல.

கவிதா:- பொதுவாக பெண்களுக்கு பொதுஅறிவு குறைவு, அதை அதிகமாக்கி கொள்ளவும் அவர்கள் சிரத்தை எடுப்பதில்லை. -காரணம்
மேலே கேட்ட ஹவுஸ் ஓய்ப் எழுத்து கேள்வியின் தொடர்ச்சியாய் இதைக் கருதலாம். எங்கள் வீட்டில் அத்தைகளும், பாட்டியும், அம்மாவும் உலக விஷயங்கள் அனைத்தையும் அலசுவார்கள். சிறுமியாய் வாயைப் பார்த்துக் கொண்டு இருந்தது நன்கு நினைவில் இருக்கு.. பிறகு எனக்கு வாய்த்த சிநேகிதகள், தெரிந்த பெண்கள், உறவுகளில் பலரும் நகை, புடைவை, சீரியல் என்று மட்டும் இல்லாமல் பொது விஷயங்கள் பேசுவார்கள். ஏன் ஆண்களில் விஜய் படம், ரஜினியின் புது நாயகி, லோக்கல் அரசியல் என்று உப்பு பெறாத விஷயங்களை மணிக்கணக்கில் பேசுபவர்கள் இல்லையா? ஆனால் இன்று பதிவுலகில் எழுதும் பெண்களில் 99% சதவீத பேர்கள் எல்லா விஷயங்களை எழுதுவதைப் பார்க்க, பார்க்க மனதுக்கு நிறைவாய் இருக்கிறது.

ரவுண்டு கட்டி அடிக்கும் ரவுண்டு:-

1. பெண் பதிவர்கள் ஆண் பெயர்களில் எழுத ஆரம்பித்து விட்டால் நிறைய பிரச்சனைகள் இருக்காது - உங்கள் கருத்து
அதுக்கெல்லாம் எந்த பெண்ணும் பயந்தா மாதிரி தெரியவில்லையே J)

2. உங்களின் நுனிப்புல்’ லில் உங்களுக்கு மிகவும் பிடித்த சில
பல முறை நான் கவனித்தது, நான் எழுதியதை விட, எனக்கு வரும் பின்னுட்டங்கள் மிக சுவாரசியமாய் இருக்கும்.

3. உங்களின் கதைகளில் நீங்கள் ரசித்தவை
அதை வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்
உங்களுக்காக சில, படித்துவிட்டுச் சொல்லுங்கள்.
http://nunippul.blogspot.com/2006/06/blog-post_27.html - குஸ்கா - என் மனதில் முதலில் தோன்றியது
http://nunippul.blogspot.com/2006/06/25-50-75-00-25.html- ..25, ..50,..75,..00,..25- தேன்கூடு போட்டியில் 2வது பரிசு வென்றக்கதை
http://nunippul.blogspot.com/2006/07/blog-post_06.html - ஆன்மா சாந்தியடையுமா?
http://nunippul.blogspot.com/2005/11/blog-post_18.html - கரோமாவில் துளசிக் கல்யாணம் அப்புசாமி.காமில் வந்தது
http://nunippul.blogspot.com/2005/12/blog-post_07.html - நடேசன் சார்
http://nunippul.blogspot.com/2005/12/blog-post_11.html - குஞ்சாமணி - கணையாழியில் வெளியானது
http://nunippul.blogspot.com/2005/12/blog-post_17.html - பிள்ளை நிலா
http://nunippul.blogspot.com/2006/01/2006.html - வெற்றி- கணையாழியில் வெளியானது

4. உங்களின் குழந்தைக்கு உங்களிடம் பிடித்த விஷயம் என்ன?
இருவருககும் அம்மா எதையும் பகிர்ந்துக் கொள்ளும் ஒரு தோழி. அதனால் பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள், பிறர் முன்னிலையில் கஷ்டப்பட்டு “அம்மா!”

5. “தனிநபர் தாக்குதல்” - உங்கள் கருத்து
ஒன்று ஆபாச தாக்குதல். இது எனக்கு மட்டுமல்லாமல், ஓரளவு எல்லா பதிவாளர்களும் இதனால் பாதிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் இருந்த அதிர்ச்சி இப்பொழுது இல்லை. அத்தகைய கமெண்டுக்களை பார்க்காமலேயே குப்பையில் போக செய்தாகிவிட்டது. அடுத்து பதிவுகளில் என்னைப் பற்றி எழுதுவது.. என்ன விளக்கம் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. சில சமயம் என்ன ஏது என்று நேராக கேட்டுவிடுவேன். ஆனால் அலட்சியப்படுத்துதலே சரியான வழி.
என் எழுத்துக்களை விமர்சிக்கும் உரிமை அனைத்து வாசகர்களுக்கும் உண்டு. எதிர்வினைகளுக்கு நான் பயந்தால் டயரியில் எழுதி வைத்துக் கொண்டு நானே படித்துக் கொள்ள வேண்டும். பொதுவில் போட்டுவிட்டு, கமெண்ட் பாக்சையும் வைத்துவிட்டு, இதற்கு பயந்தால் முடியும? மட்டுறுத்தலும், அனானிமஸ் கமெண்ட்டையும் எடுத்தது ஆபாசம் மட்டுமல்லாது வேண்டாத பிரச்சனைகளையும் சிலர் உருவாக்கினர். பல முறை (கொஞ்சம் யோசனையுடன்) தவறாய் நினைக்க மாட்டார்கள் என்பவர்களுக்கு மட்டும் என் கருத்தை கமெண்ட்டாய் போட்டிருக்கிறேன். சொல்ல வரும் கருத்து தவறில்லை என்றால் அனானிமஸ் கமெண்ட்டோ அல்லது வேறு வேறு புது புது பெயர்களில் (எழுது பெயர் அல்ல) பதிவுப் போடுவது போன்றவை எல்லாம் என்னால் ஒத்துக்கொள்ள முடியாத செயல். அனைத்து பிரச்சனைகளும் இதனால்தான்.

6. உங்களை ஏதாவது தமிழ்மண குழுவில் இணைய சொல்லி கூப்பிட்டால் எதில் சேருவீர்கள்.
ஆஹா, அது எப்படி இந்த கேள்வி எனக்கு மட்டும் எக்ஸ்குளூசீவா வருது? ஆரம்பத்தில் இருந்தே, கணிணி பற்றிய எந்த அடிப்படை அறிவும் இல்லாததால், இணையம் எனக்கு பிரமிப்பாய் இருக்கிறது. இந்த புரிப்படாத மாயாஉலகத்தில் இருந்து கொஞ்சம் விலகி இருப்பதே நல்லது என்று மூன்று வருடத்திற்கு முன்பே எடுத்த முடிவு இன்றுவரையில் கடைப்பிடிக்கிறேன்.

7. உங்கள் கதையின் முதல் விமர்சகர் யார்?
நானேதான்.

8. அடிக்கடி நடக்கும் தமிழ்மணத்தில் நடக்கும் பிரச்சனையும், உடனே போடப்படும் பதிவுகள் பற்றியும்
நான் தவிர்த்துவிடுவேன். அப்படிப் போட்டாலும் வித்தியாசமாய், கொஞ்சம் நையாண்டி இருக்கும். உதாரணமாய் தர்ம அடிப் போடுவது எப்படி என்ற பதிவு.

9. இணையம் உங்கள் பார்வையில்
எழுத்தைப் பொறுத்தவரையில் ஆரம்பக்கட்டத்தில் இணைய நட்புகளின் வெளிப்படையான கருத்துக்கள் என்னை சீர்திருக்கக்கொள்ள மிக உபயோகமாய் இருந்தது.. தனிப்பட்ட முறையில் மிகவும் தேர்தெடுத்த இணைய நட்புகள், கொஞ்சம் என் வயதை ஒத்த சிநேகிகளுடன் சொந்தக்கதை பேச மெயில் பரிவர்த்தனை மட்டுமே!. அதுவும் மிக, மிக அபூர்வமாய். சாட்டிங் செய்வதில்லை என்பதும் இன்றுவரைக் கடைப்பிடிக்கும் விரதம். கணிணி சம்மந்தமாய் பிரச்சனை என்றாலும் கேட்டவுடன் கைக் கொடுக்கும் நட்புகளும் உண்டு. ஆபாச பின்னுட்ட பிரச்சனையால் அவதிப்பட்டப் பொழுது, தானே முன் வந்து எப்படி எதிர்க்கொள்வது என்று சொல்லிக் கொடுத்த நல்லுள்ளங்கள் நிறைந்த இடம் இது. ஆக மொத்தம் “தீதும் நன்றும் பிறர் தர வாரா”

10. உங்கள் குடும்பத்தினர் உங்களின் எழுத்துக்கு துணையாக இருக்கிறார்களா?. அவர்களால் தடை ஏதும் உள்ளதா?
என் கணவர் செய்யும் மிகப் பெரிய உபகாரம் நான் எழுதியது எதையும் படிக்க மாட்டார். ஆனால் ஏதாவது பிரச்சனை என்றால் சொல்லிவிடுவேன். எழுதுவதும், எழுதாமல் இருப்பதும் உன்னுடைய விருப்பம், யாராவது ஏதாவது சொன்னார்கள் என்பதற்காக எழுதுவதை நிறுத்தாதே என்பார். என் மாமனாரும், என் அப்பாவின் தங்கை- என் அத்தை மட்டுமே விசாரிப்பார்கள், தேடிப்பிடித்துப் படிப்பார்கள்.

சில சொந்தங்கள், நட்புகளிடம் அறிவுரைகள் வந்தன. யாரையும் இப்படி எழுது, ஏன் இந்த மேட்டர் எழுத வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இருப்பது அபத்தம். என்ன எழுத வேண்டும் என்பது எழுதுபவர்களின் விருப்பம். அவரவர் ரசனைக்கு ஏற்றாற்போல தேடி படித்துக் கொள்ள வேண்டியதுதான்..

செலக்டீவ் அம்னீஷியா உஷா சொன்ன தத்துவம்- Happiness is nothing more than good heath and a bad memory