நண்பர்களின் உதவியை எதிர்பார்த்து....

என் சொந்த வேலைகள் போக நேரம் கிடைப்பின், குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு சென்று அவர்களுடன் கொஞ்சம் நேரம் செலவிட  பிடித்தமானதாக இருந்தது. ஆனால், இரண்டு முறை குழந்தைகள் இல்லங்களுக்கு சென்று வந்ததில், அந்த குழந்தைகளின் முகத்தில் இருக்கும் ஏக்கம், அவர்களின் வயதுக்கும், வளர்ச்சிக்கும் சம்பந்தமில்லா ஆடைகள், அவர்களின் படிப்பு, பேச்சு என என்னால் மனதளவில் ஏற்றுக்கொள்ளமுடியாத  சில விஷயங்களால் மனபாரம் அதிகமானதால் போவதை நிறுத்திக்கொண்டேன். தள்ளியிருந்து உதவி செய்வது மட்டுமே என்னால் முடிந்தது என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன். பல வருடங்களுக்கு பிறகு, போகும் வழியில் இந்த இல்லத்தின் பெயர் பலகை பார்த்து, ஒரு முறை சென்று பார்க்கலாமே என ஆவலில் சென்றேன்.. ஒரு மணி நேரம், அவர்களுக்கு என்னால் நிச்சயம் சந்தோஷம் தான்... நம்மை பார்க்க ஒருவர் வந்திருப்பதாக நினைத்து முகத்தில் அத்தனை சந்தோஷம். எல்லோருமே வயதானவர்கள். ஆண், பெண் என கலந்து தான் இருந்தார்கள். 

சரஸ்வதி பாட்டி 90 வயது, திரும்பவும் என்னை அதே மனநிலைக்கு  எடுத்துவந்துவிட்டார். :(. பார்வையில்லை, ”குட் ஈவினிங்” என்று சொல்லி என்னை இழுத்து மிகவும் இறுக்கமாக அணைத்துக்கொண்டார். சில நிமிடங்கள் என்னை விடவில்லை. பிறகு பேச ஆரம்பித்தார், அப்போதும் என் கையை இறுகப்பிடித்தவாரே பேசினார். நடு நடுவே ஆங்கிலம் :). சாப்பிட்டு விட்டு போகச்சொல்லி தொந்தரவும் செய்தார்.:) இரண்டு மனநிலை சரியில்லாத ஆண்கள், இவர்களில் பலருக்கும் சொந்தங்கள் இருந்தும் ஆதரவற்று இருப்பது, வேதனை. 

வந்தப்பிறகு அதை நடத்தும் திரு.சூரியக்குமாரிடம் விபரங்களை கேட்டு மெயில் அனுப்பினேன்.  நீங்களும் அவற்றை படித்து, அவர்களின் இணையத்தளத்தை பார்வையிட்டு, உங்களுக்கு நம்பிக்கை ஏற்படும் பட்சத்தில், தயவு கூர்ந்து உங்களால் ஆன உதவியை செய்யவும்.

அவரிடம் கேட்டறிந்தவை :

1.  எத்தனை ப்பேர் இங்கே வசிக்கிறார்கள்?
11 பாட்டிகளும் 2 தாத்தாக்களும் 2 மாற்றுதிறனாளிகளுமாய் மொத்தம் 15 நபர்கள் இல்லத்தில் வசிக்கின்றனர். இரு பாட்டிகள்  (80 வயது & 65 வயது) விரைவில் சேர இருக்கிறார்கள். மொத்தம் 17 நபர்கள் மட்டுமே இங்கு தங்க இயலும்.

2. எந்த வயதினர் ?
பெரும்பாலான பாட்டிகளுக்கு வயது 80க்கும் அதிகம். அனைவரையும் சேர்த்த சராசரி வயது 74 ஆகும்.

3. மனநிலை பாதிக்கப்பட்டவர் நிலைப்பற்றி.
எங்கள் இல்லத்தில் சஞ்ஜீவிக்கு 48 வயது ஆகிறது. பிறவியிலேயே உடல்வளர்ச்சி குன்றி படுக்கையிலேயே காலம் கழிக்கும் இவருக்கு இவரையும், இவரது இடத்தையும் சுத்தமாக பராமரிக்க பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பாலகுமார் (26) மனப்பிறழ்ச்சி நோயால் அவதிப்படுபவர். அடுத்தவருக்கு தீமை விளைவிக்கும் செயல்களை தவிர்க்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. டாக்டர் ருத்ரன் அவர்களின் மருத்துவ ஆலோசனையுடன் பாலகுமார் விரைவில் குணமடையும் வாய்ப்புகள்  தென்படுகின்றன.

கமலம்மாள் (95) ஆதரவில்லாமல் வந்து சேர்ந்திருக்கும் இவரது தள்ளாமை பிரச்சினைகளுடன், கத்துவது, துணியை அவிழ்த்துக்கொள்வது போன்ற குணம் மாறி நடந்து கொள்பவர். இவ்வில்லம் இவர்களையும், சாதாரணமானவர்களுடன் இணைத்து போதுமான அளவில் கவனித்துக்கொள்ள உதவியாளர்களுக்கும் சொல்லித்தரப்பட்டுள்ளது.

4.  என்னுடைய தோழியாகிவிட்ட சரஸ்வதி பாட்டி  :) பற்றி 
சரஸ்வதி (90) முழுவதுமாக பார்வையின்றி சிரமப்படுபவர். அனைத்து உறவினர்கள் இருந்தும் ஒதுக்கப்பட்டுள்ள இவர் இல்லத்திற்கு வந்து சேர்ந்த முதல் சிலபேர்களுடன் மூத்தவர். சிறிது சிறிதாக (20-25 வருடங்களில்) பார்வை போனதற்கு தாம் சிந்திய கண்ணீர்கள் காரணமாகும் என்கிறார். பார்வையற்ற இவரை வெளியே தள்ளி விரட்டிவிட்டார் இவரது மருமகள்.

5. இந்த இல்லம் தொடங்கிய திரு. சாரதி பற்றிய விபரங்கள் .
இல்லத்தின் அமைப்பாளர் ஸ்ரீ.பார்த்தசாரதி அவர்கள் ஆச்சரியப்படத்தக்க ஒரு சமூக சேவகர். சென்னை கிண்டி-யில் பிறந்து வளர்ந்த இவர் பள்ளிபருவத்திலேயே சிவானந்த குருகுலத்திற்கு சென்றுவந்தபின் ஏற்பட்ட தூண்டுதலால் தமது சேவைகளை துவங்கிவிட்டவர். பல சேவை நிலையங்களுக்கும் சென்று அவர்களுடன் நாள்முழுதும் தங்கியிருந்து பணிகளை செய்து வாரஇறுதிகளை கழித்தவர். 
புற்றுநோய் மருத்துவமனை - இல்லம், ஆதரவற்ற குழந்தைகள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர், பிறவி பிரச்சினைகளுடன் உள்ளவர் என பலதரப்பட்டவர்களுக்கும் அன்புடன் பணிசெய்தவர். அவரது அனைத்து நண்பர்கள் - அவர்களது நண்பர்களும் என சேவைப்படையை உருவாக்கிக்கொண்டு இருந்தவர். குடிசைபகுதிகளுக்கு சென்று சுத்தம் செய்து உதவியும், மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு முகாம்கள் என அமைத்து எளியோரின் அன்பை பெற்றவர். எக்ஸ்னோரா, காவல்துறையின் நண்பர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியின் பல மக்கள் பங்களிப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர்.

பார்த்தசாரதி அவரது 26 வயதில் நம்மையும் அவரது குடும்பத்தினரையும் விட்டு மறைந்து ஒரு பெரிய இழப்பை உணர்த்தியுள்ளார். தன்னார்வ தொண்டுகளை அவர்தம் செயல்களிலிருந்தே கற்றவர்கள் நாங்கள். அவர் காட்டிய வழியிலேயே அவருக்காகவும், அவர்மீது கொண்டிருந்த நட்பிற்க்காகவும், கைவிடப்பட/உதவிகிடைக்காத இளைஞர் - நலிந்த - முதிர்ந்த மக்களுக்காகவும் பலவிதமான சேவைகளையும் தொடருகிறோம். மனித சேவை மகத்தானது, பங்குகொண்டு பெரும்பேறடையுங்கள்.


6. உங்களின் வங்கி முகவரி, வங்கி கணக்கு விபரம் :
Bank Particulars:
C R Suriyakumar,
Indian Overseas Bank, (Br Code: 001296)
SB A/c: 1296 010000 18606,
Velachery, Chennai 600042
IFSC Code: IOBA0001296

7. Tax exception details.
Donation to this Trust is exempted U/S 80G of the Income Tax Act 1961 vide notification No. DIT(E). NO.2(1035)/08-09 dt. 29-07-2009.

இல்லத்திற்கு (ஆரதி அறக்கட்டளைக்கு) அளிக்கப்படும் நன்கொடைக்கு வருமான வரித்துறையின் அறிக்கை எண். DIT(E). NO.2(1035)/08-09 தேதி. 29-07-2009. படி வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

8. Contact Person:
Dr. C.R.Suriyakumar, Ph.D.,D.Ag.,
Secretary - Aarathy Trust

முனைவர். சௌ.ரா. சூரியக்குமார்
செயலாளர் - ஆரதி அறக்கட்டளை

கைபேசி எண்: 94449 04947, 8122002261
தொலைபேசி எண்: 2245 6596
மின்னஞ்சல்: info@aarathy.org, suryakmr@gmail.com
இணையத்தளம்: www.aarathy.org

முகவரி:
இதயவாசல் முதியோர் இல்லம்,
ஆரதி அறக்கட்டளை,
1-C, வேளச்சேரி மெயின் ரோடு,
நாகேந்திரா நகர்
வேளச்சேரி செக்போஸ்ட்
சென்னை 600042

அணில் குட்டி : இவ்ளோ சொல்லி இருக்காங்க, ஹோம் ல பாட்டிங்க தீபாவளிக்காக செய்துக்கிட்டு இருந்த கை முறுக்கை நல்லா அமுக்கிட்டு வந்தாங்க சொன்னாங்களா ???? நல்லா சாப்பிட்டுட்டு ஏப்பம் விட்டுட்டு...  ஒரு வார்த்தை க்கூட முறுக்கை பத்தி சொல்லல... நன்றியில்லா கவிதா...

நான் சொல்றேன்.... பாட்டிங்க செய்த கை முறுக்கு ஜூப்பரோ ஜூப்பர். கவி  தீபாவளிக்கு முன்ன ப்ளான் பண்ணி இதுக்காகவே போயி இருப்பாங்களோ ?!  கை முறுக்கு அம்புட்டு ருசி.. :) ஹி ஹிஹி... :)

பீட்டர் தாத்ஸ் : The tragedy of old age is not that one is old, but that one is young.

அப்பாடக்கர் ' ரின் டச்சோ டச்சூ....

இத்தனை நாள் வவாச வில் தனியாவே டீ ய ஆத்து ஆத்து ஆத்திக்கிட்டு இருந்தவரு, தீடீர்னு  பெரிய "அப்பாடக்கர்" ஆகிட்டாரு.  ..அதாவது....

இவரு...ஒரு குறும்படம் எடுக்கறேன் 'னு கிட்டத்தட்ட ஒரு வருச காலமாக சொல்லிக்கிட்டு இருந்தாரு...  சரி நிசமாத்தான் எடுக்கறாரு போலன்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தா.. இந்தா இன்னைக்கு .. இந்தா நாளைக்கு , இந்தா மறுநாளைக்கு, இந்தா முந்தா நாளைக்கு ரீலிஸ் ’ன்னு சொல்லி சொல்லி,  ஒரு கட்டத்தில் இனி படம் வரும் ஆனா வராது ங்ற ரேஞ்சுக்கு நம்மளை எல்லாம் கொண்டுவந்துட்டாரு..... ஒரு நாள் பாருங்க.. தீடீர்னு, அவருக்கே அவருக்கு தெரியாம படத்தை ரிலீஸ் செய்துட்டாரூஉ....


இந்த வலையுலகம் எத்தனை படங்களை விமர்சித்திருக்கிறது ?  அசிங்க அசிங்கமாக திட்டி இருக்கிறது...?? கேவல கேவலமாக துப்பி இருக்கிறது ?!! ஆனால்...வவாச டீ கடை ஓனர்,  கடலை யின் மொத்த குத்தகைக்கார
விவசாயி என்கிற விவாஜி என்கிற இளா இயக்கிய ”அப்பாடக்கரை ” பற்றி யாருமே எழுதலையே னு இந்த பக்கம் , அதோ அந்த பக்கம், அன்னாந்து பாத்தா கூரை மேல, ஓடிப்போயி தண்ணிக்குள்ளார  எல்லாம் உக்காந்து, உங்க மேல சத்தியமா கவலை எல்லாம் படலைங்க.. ஆனால்ல்ல்ல்ல்ல்,  நாம ஏன் இதை சான்ஸ் ஆ எடுத்துக்கிட்டு, இந்த வலையுலக விமர்சன மகாஜனத்தோட  ஜனமா ஐக்கிய மாகக்கூடாதுன்னு ஒரு ஆஆஆர்ர்ர்ர்ர்வத்தில் அப்பாடக்கரை பார்க்க உக்காந்தேன்..............ரைட்டூஉ................   குறும்படம்னு இல்ல சொன்னாங்க.........?!!
டீடெயில் ஆப்ஃ தி அப்பாடக்கர் க்கு போவோமா ஊர்கோலம் ?!

முதல் டச் :
இந்த படத்தை பார்த்தவுடனே எனக்கு என்னா தோணிச்சின்னா... இயக்குனர்க்கு இன்ஸ்டென்ட் ஆக  ”ஆள்காட்டி விரல் அப்பாசாமி” னு பேரு வைக்கலாம். இதுல நடிச்ச அத்தனை பயப்புள்ளைக்கும் ஆள்காட்டி விரலை காட்டி மிரட்டி மிரட்டி சொல்லி கொடுத்து இருப்பாரு போல... அத்தனை பயப்புள்ளையும் நம்மக்கிட்ட மட்டு மரியாதை இல்லாம விரலை காட்டி காட்டி பேசுதுங்க... சரி அதுப்போட்டும்னு பார்த்தா, இயக்குனரும், அவரோட ஆள்காட்டி விரலை ஒரு சீன் ல காட்டிட்டு போக மறக்கல...  இப்படி ஒரு சீன் லையாச்சும் அவரோட படத்தில் அவரு இருக்கனும்னு நினைச்சதால இயக்குனர் ரவிக்குமார் ஐ நினைவுப்படுத்தி ..தனக்குள்ளும் ஒரு ரவிக்குமார் இருப்பதை வெளிப்படுத்தி நம்மை டச்'சிட்டாரு.

இரண்டாவது டச் :

அமெரிக்காவில் படம் புடிச்சாலும் நேட்டிவிட்டி போவவே க்கூடாதுன்னு ரொம்ப பாடுப்பட்டு இருக்காரு... அதுல ஒரு சீனுக்காக.... குளம் குட்டையின் தேடி கண்டுப்பிடிச்சி போயி நின்னு , நம்மூரு பாசையில ......(அதை ஆள்காட்டி விரல் அப்பாசாமி யே டப் பும் செய்து இருக்காரு)   கசங்காத  பொட்டிப்போட்ட டீ சர்ட் டும், லுங்கியும் கட்டிக்கிட்டு பேசறாங்க பாருங்க. .இங்கத்தான் நம்ம இயக்குனர் நிக்கறாரு.. ! எப்படி?????  இயக்குனர் இமயம் பாரதிராஜை வை அப்படியே நம் கண்ணுமுன்னாடி கொண்டாந்து நிக்க வைக்கறாரு... உக்காரவைக்கறாரு... ஏன்சிக்க வைக்கறாரு... ஆக இயக்குனர் பாரதிராஜா' வை டச்சிட்டாருங்கோவ்..

மூணாவது டச் :

கறுப்பு'னு ஒரு பயபுள்ள.. வேல தேடுது தேடுது தேடுது தேடுது.... ... ம்ம்..பாக்கும்போது,....எனக்கெ
ல்லாம் ரத்தக்கண்ணீர் வந்துடுத்து .. வெளியப்போற ரத்தத்ததை சரிக்கட்ட ஒரு கையில ப்ளெட் ஐ ஏத்திக்கிட்டே பாக்கிறேன்...அப்படி ஒரு தேடல்... அந்த தேடலை.. நம்ம இயக்குனர் எப்படி டச்சிங் டச்சிங் ஆ சொல்லி இருக்காரு தெரியுமா??!   கறுப்பு’ வோட மொத்த  ஃப்லீங்சையும் புடிச்சி இழுத்தாந்து அவரு கால்கிட்ட போடறாரு...  காலை மட்டும்... டைட்டிங் டைட்டிங் க்ளோஸபில் காட்டராரு... ..அப்ப நம்ம கண்ணுக்கு தெரியறது யாருன்னு டக்குன்னு சொல்லுங்க.. ஆங்..அவரே தான்.. இயக்குனர் மிஷ்கின்.. :) அடடா.. நம்ம அப்பாசாமிக்குள்ள எத்தனை டச்சிங் டிச்சிங் இயக்குனர்ங்க..இருக்காங்க ..அப்படியே .வாயப்பொளந்துக்கிட்டு...அடுத்த டச்சிங்..க்கு போவோம்......

நாலாவது டச் :

பேச்சிலர் ரூம் செட்டப்... ஆணியே அடிக்கமுடியாத ஒரு ரூமில், எலக்ட்ரிக் மெயின் பாக்ஸ் ஸில் கொடியை கட்டி,அதில கன்னாபின்னான்னு துணிகளை போட்டு வச்சி, ஒரு தலக்காணி கவர் போட்டு, இன்னொன்னு போடாம,  டபரா டம்ளர், டீ கடை நாயர், அவரிடம் வேல செய்யும் சின்னப்பையன் கையி, வாடிக்கா எண்ணெய் பாட்டில், தரையில் உக்காந்து தட்டற கம்பியூட்டர், மானிட்டரில் ஜோ ' னு யதார்தத்தை அங்க அங்க...இங்க இங்க நு அள்ளி தெளி தெளின்னு தெளிச்சி இருக்காரு... .....ம்ம்ம்ம்......இந்த தெளிப்பு எல்லாம் யாரை நமக்கு டச் பண்ணுது ????  ... ஆங் ...அவரே அவரே அவரே தான் இயக்குனர் மகேந்திரன்....... டச்சூஊ...

அஞ்சாவது டச் :
கேமராவும் லைட்டிங்கும் படம் முழுக்க நம்ம கூடவே விடாது கறுப்பாட்டுமே வருது... என்ன மா வளச்சி வளச்சி, மேல , கீழ , இந்தா அந்த சைட்ல, அந்தா இந்த சைட்ல, நடு நடுவுல என்னா ஜூமிங்கு.. அப்புறம்... லாங் ஷாட்டு.. . டைட்டு க்ளோசப்பூ... கைய தனியா,  காலத்தனியா.. மூக்கை தனியா.ன்னு,  .அட மீசைய ஒருத்தர் சீவுவாரு ...  பெல்ட்டு மாட்டறாரு.. . கிராமத்து சீன் ல ...  இந்த கோடியில நின்னு ஒரு ஷாட்...  டீக்கடை நாயரை கூப்பிடற காட்சியில சைட் ல வர லைட்டிங்கு..... ராத்திரி எஃபெக்ட் ப்ர்ஃவெக்ஷன் நு எங்க எல்லாம் கேமரா பேசனுமோ அங்க எல்லாம் கண்டிப்பா பேசல..ங்க ஆனா............ பாட்டா பாடி இருக்கு.....  இது யார் டச்சுன்னு கேட்டீங்க பிச்சிப்புடுவேன் பிச்சி.. .. பிசி ஸ்ரீராமையும் பாலுமகேந்திராவையும் கலந்துக்கட்டி சும்மா சூப்பரா டச்சி இருக்காரு......

ஆறாவது டச்
:
இது தாங்க இந்த படத்துலியே சூப்பர் டூப்பர் காட்சி.....  மாஸ்டர் சூர்யா னு ஒரு அப்பாடக்கர்...  இவரு . ஒரே ஷாட் ல இயக்குனர் சொன்னதை பேசி நடிச்சி இருக்காராம்.....அட நம்பவே முடியல...  இவரு தாங்க படத்தை ச்சும்மா கும்முனு தூக்கி நிறுத்தறாரு.... இவரையும் ஆள்காட்டி விரலை காட்டவச்சிட்டாரு நம்ம இயக்குனர்... இந்த பயப்புள்ள இப்பவே இம்புட்டு ஸ்டைலா இருக்கே.. வருங்காலத்துல எப்படி இருக்குமோஒ? (#லைட்டா பொறாமை.! சரி வுடுங்க தனியா கவனிச்சிக்கலாம்) ...நம்ம இயக்குனர்  இப்படி ஒரே ஒரு காட்சியில் மொத்த படத்தின் க்ளாப்ஸையும் வாங்கிக்கிட்டு போறதால...இயக்குனர் பாக்கியராஜ் ‘ஐ டக்குன்னு நினைவுக்கு கொண்டு வந்து டச்சு டச்சுன்னு டச்சராரு... . ..

ஏழாவது டச்.:

...  வவாச வின் போர்வாள்(ல்)... பவர் வாள்(ல்) எவர் கிரீன் கச்சேரி தேவ் தான் வசனகர்த்தா.. ..........னு...... டைட்டில் ல சொல்றாங்க.. ம்ம்ம்... ஸ்டெடியா, க்ளாசிக்கா .. தெரிஞ்சாலும் நடு நடுவில் ரேண்டி பேசற வசனங்கள் சிலதில் பஞ்ச்சிங் பஞ்சிங்...”தண்ணி அடிக்கும் போது பேசற வசனம்.... ..  குளக்கரையில் பேசும் வசனம் நு சிலது எல்லாம் டச்சிங் டச்சிங்.. . தேவ் அண்ணாச்சியின் மைக் பிடிச்சா நிறுத்தாத பேச்சு தெரிஞ்சதாலோ என்னமோ... வசனாகர்த்தாவின் கைகள் ரொம்பவும் இறுக்கமாக கட்டப்பட்டு விட்டதோ ????????? அப்படீங்கறா சந்தேகம் எழாமல் இல்லை. அப்பாடக்கர் இயக்குனர் "ஆள்காட்டி விரல் அப்பாசாமி" தான் விளக்கம் அளிக்கோனும்...

எட்டாவது டச் :

மியூஜிக்... ஆரம்பமே அசத்தல்... கொஞ்சம் நடுவிலே டவுனு... திரும்ப.. கொஞ்சம் ஏத்தம்.. திரும்ப கொஞ்சம் டவுனு.. மொத்தத்தில்... பல இடங்களில் ஏத்தம்.. சில இடங்களில் சரிவு.. நடு நடுவுல  ச்சிசுவேசன் சாங்கு.போட்டு இருக்காரே ஆகாகஹாக..அதுல தான்  டச்சிங் டச்சிங்கு.. மியூஜிக் க்கும் இயக்குனரே போல...  அதனால் அதுக்கும் ஒரு டச்சிங் சேர்த்து மொத்தம் 3 டச்சிங் கொடுக்கலாம்..... எக்கச்சக்க மியூஜிக் இயக்கனருங்க வந்துட்டாங்க..அதனால இவரை இப்பத்திக்கு தேவா வோட புள்ள ஒருத்தர் இருப்பாரே அவரோட டச்சலாம்... :))) ( அணிலு இதுக்காக மட்டுமே இயக்குனர் இந்தியா வரும்போது இருக்குடீஈஈ)

எட்டாவது டச் :

இது குறும்படம் நு சொல்ற நெடும் படமாக இருந்தாலும்... ஓவராத்தான் ஒரு வருசமா உழைச்சி இருக்காங்க..  ரேண்டி'னு ஒருத்தர் வராரு... அடடா... அடா அடா ஆ படம் முழுக்க இவரோட நடிப்பூ... ஃப்பூ னு ஊதி தள்ளி இருக்காரு..... குடுத்த காசுக்கு மேலாள "நான் இருக்கேன்" நான் இருக்கேன்னு" ...கூவி கூவி நடிச்சி இருக்காரு...அடுத்து 'எட்டாம் அறிவு' னு ஒரு படம் எடுத்தா இவரைத்தான் ஹூரோவா ப்போட நானு ரெக்கமண்டு செய்வேன்... (என்ன கொஞ்சம் கிட்டக்க வந்து கையை நீட்டி பேசறப்போ, யோவ் இனிமே நீ கைய நீட்டின... கடிச்சி துப்பிடுவேன்.. நு சொல்லனும் போல மனசுக்குள்ள தோணிச்சி.. இதையெல்லாம் வெளியில சொல்ல முடியுமா சொல்லுங்க..) அப்புறம் கறுப்பு.....  வவாச த்து சிங்கம் ஒன்னு மூஞ்சி அச்சு அசலா இதே மாதிரி இருக்கும்..அதுவும் இப்ப இதே மாதிரி தாடி மீசை வச்சிக்கிட்டு சுத்துது...அது யார்னு சங்கத்து சிங்கங்களே மூஞ்சிய பாத்து பாத்து கடிச்சிக்கட்டும்... இவரு.. = நேச்சுரல்  நல்லாவே நடிச்சி இருக்காரு.. அப்புறம் நம்ம லிட்டில் அப்பாடக்கர் சூர்யா..  .. சொல்லனுமா என்ன? டச்சோ டச்சூஊ....

ஒன்பதாவது டச் :

இதுல சில ப்ளஸ் சஸ், கொஞ்சம் மைனஸ் சஸ்ஸ டச்சலாம்...  . ஒரு காட்சி நடக்கும் போது..சைட்ல பொட்டிப்போட்டு பின்னாடி நடப்பதை காட்டியது.. ரெசியூம் திருத்துவது, கூகுல் சர்ச் பண்றது.... மொபைல் ரிங் ஆகும் சீனு, பெல்ட் போடும் சீனு, (அது யாரு சீனு நு கேட்டா தலை மேல நறுக் குன்னு கொட்டுவேன்...) தலையில புத்தகத்தை கவுத்துப்போட்டு கையை அசைக்கும் சீனு, சூர்யாவின் நேம் போர்ட்... என ....சில காட்சிகள் சபாஷ்.. போட்டு நம்மை நிசமாவே டச்சுகிறது

படிக்கட் சீன்.. அப்பாடக்கரு... அப்பாடக்கர் வேல பார்த்து இருப்பது தெரியது..... டப்பிங் சில இடங்களில் சோம்பேரியா பின்னாடி வருது... இன்ட்ரவியூ போகும் சீனில் பின்னால் அமெரிக்க வண்டிகள், ரூம்களில் அமெரிக்க வாசனை னு லைட்டா அமெரிக்க மைனஸ் டச்சிங்ஸ் இருக்கு.. அதிகமாக இல்லாமல் இருக்க முயற்சித்த இயக்கனரின் திறமை டச்சிங் டச்சிங் ..


10 ஆவது டச் :

வேற என்னவா இருக்கும்... சொந்த புராணம் தான்... ஒரு வழியா அப்பாடக்கர் விமர்சனத்தை எழுதியாச்சி...  இனி... நானும் ஒரு வலையுலக விமர்சகர்..னு பேர் வாங்கிடுவேன்.. எளக்கியவாதி, முற்போக்கு, பிற்போக்குவாதி முக்கியவியாதி, முனுகியவியாதி ன்னு ஏதோ ஒரு பட்டம் எனக்கு கொடுக்கப்படும்னு நினைச்சாவே.... டச் டச் டச் டச் சிங்கா தான் இருக்கு....... அதுக்காகவே படம் எடுத்த இயக்குனர் ”ஆள்காட்டி விரல் அப்பாசாமி அப்பாடக்கர் - க்கு ஒரு கும்பிடு போட்டுக்கிட்டு எஸ் ஆகறேன்.... .

இதே போல நீங்களும் வந்து அவரை டச்சிட்டு மட்டும் போவாதீங்க.... நல்லா கொட்டி, தட்டி , திட்டிட்டும் போங்க.. ஹி ஹி..அப்பத்தானே எனக்கு பொழுது ப்போகும்...


இப்படிக்கு வலையுலக விமர்சகர் வரிசையில் இடம்பிடிக்க தவியா தவிக்கும்  உங்களின் -
அணில் குட்டி ! அணில் குட்டி !.அணில் குட்டி ! (இது எக்கோ) )
.

ஏழாம் அறிவு - Movie Review by Naveen !


Movie Review: 7aam Arivu

7aam Arivu was one of the most anticipated movies of the year, directed by A.R.Murugadoss.

For the first half hour It starts off well exploring the Pallava dynasty around Kanchipuram 1600 years ago which was rich in medicine and martial arts at that point of time. It is here where we first meet Bodhi Dharmar (Suriya) a Pallava Prince who travels to China under his mothers instructions to spread his knowledge on medicine and martial arts. It takes him 3 years to finally reach China where an interesting life awaits him.

The present day portrays Suriya as Aravind a circus worker who hails from Kanchipuram himself. He is casual, playful and mindlessly falls in love with Subha Srinivasan (Shruti) a geneticist. Shruti does a good job as a geneticist but her Tamil accent is horrible at the least.

The first half of the film leads you to expect something big in the second half. But it all goes downhill from there. Operation red was a downright joke and the dialogues that explain it will tickle your funny bone rather than explain the plot and the way our protagonists deal with a national crisis makes you think "Dude! I have more brains than that!!!!". Realism is as rare as a Strawberry Tiger and logic goes right out the window in the second half where disappointment takes a major share among all the other feelings the film gives you.

The villan Dong Lee (Johnny Tri Nguyen) is one of the plus's of the film plays the role of a martial arts expert who can control minds. Believe it or not Dong lee actually gets more whistle's and claps than Suriya does.

Harris's Music generally aids the story line and adds a bit of spice to it but here it disrupts the plot and creates a sense of irritation. Removing the music would have helped the plot a bit.

Overall 7aam Arivu starts off well enough and ends with a large dose of disappointment. 

Would I watch it again? I dont think so.

By
Naveen



Kavitha;s Note : OMG ... This is the first Review & Writeup from Naveen in my blog !  I am so excited to post this. I felt that he could write well & now guess he proved.   Wish You All The Very Best Baby ! I Love You !

க்ளிக்....க்ளிக்....க்ளிக்..

 பேரூந்த நிறுத்தத்தில் தினம் வரும் இவருக்கு கண்கள் தெரியாது., சத்தத்தை வைத்தே பஸ் நிற்கும் இடம் நோக்கி சென்று, இறங்குமிடம் கேட்டு, ஏறுவார். சில சமயங்களில் உதவி இருக்கிறேன். ஆனால் இவரின் தன்னம்பிக்கை - ?! தினம் பிரம்மிக்கும் விஷயம்....
 ஜவுளிக்கடை பொம்மைக்கூட கட்டுதம்மா பட்டுசேலை... 
 குண்டு மல்லிகைப்பூ -ன்னு சொன்னால் நம்பனும் ! (ரோஜாவென்று நினைத்தே வாங்கினேன்.. அலுவலக நண்பர் கொடுத்தது)
 என் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த இந்த ஆயா, என்னை த்தூங்கவிடாமல் ரம்பம் போட்டுவிட்டு, தூங்கறதை பாருங்க..
 திருப்பதியில் என் முன்னே சென்ற ஆந்திரா பெண் அணிந்திருந்த காதுக்கம்மல்... சூப்பர் டிசைன்ஸ்.. கிராமங்களிலிருந்து கண்டெடுக்கவேண்டியவை..
 அவருடன் வந்த இன்னொரு பெண் அணிந்திருந்த காதுக்கம்மல்...
அலுவலகம் போகும் வழியில், நேற்றைய மழையில் வேரோடு சாய்ந்தவிட்ட மரம்.

*  Mobile photos.

NRI கொசுத்தொல்லைகள்

ஆன்சைட்’க்கு ஒரு மாசமோ,  இரண்டு மாசமோ  இல்ல ஒரு வருசம்னே வச்சிக்கோங்களேன், அமெரிக்கா போவாங்க. ஆனா வந்தப்பிறகு இவங்க பண்ற அலும்பு இருக்கே. இதுல அங்கவே செட்டில் ஆகிற நம்ம மக்கள் போடற சீன் இருக்கே ஸ்ஸ்யப்பா முடியாது.

* ஏதோ 3-4 வருஷத்துக்கு ஒரு தரம் வாராங்களே, நம்ம சொந்தமாச்சே, நமக்கு இருக்க வேலைகளுக்கு நடுவில்  இப்ப பார்க்காட்டா  இதுக்கு அப்புறம் எப்ப பார்க்க முடியுமோன்னு, இவங்களை அதுவும் சென்னை ட்ராஃபிக்ல அடி உதை குத்து எல்லாம் வாங்கி பார்க்கப்போனால்.. என்னமோ இவங்கக்கிட்ட நாம் ஒன்னுமே இல்லாம பிச்ச எடுக்க வந்த ரேஞ்சிக்கு பேச ஆரம்பிப்பாங்க... ”கவிதா , வரும் போது நிறைய க்கொண்டு வந்தேன்.. ஆனா பாரு நீ வரத்துக்குள்ள எல்லாம் காலியா போச்சி, அடுத்த முறை வரும் போது எடுத்துக்கிட்டு வரேன்”

இல்ல நாங்க கேட்டோமா? கேக்காமயே ஏன் இந்த பில்டப்பூ?   என்னமோ இவங்க கொண்டு வந்து கொடுக்கற 4 ரூ சோப்பும், 10 ரூ செண்டும் இல்லாம நம்ம வாழ்க்கையை ஓட்டவே முடியாதுப்பாரு...?!  தெரியாமத்தான் கேக்கறேன்.. நீங்க எல்லாம் அமெரிக்கா போயிட்டா இந்தியாவே பிச்சை எடுக்குதுன்னு நினைச்சிக்குவீங்களா?

* அமெரிக்கா போயிட்டு வந்தாவே பீட்டரே தனி பீட்டர்த்தான்.. . இங்க இருக்கவரைக்கும் தெருவை ரோடு ந்னு சொல்றவங்க அங்கப்போயிட்டு வந்தா பார்க்கனுமே.. “லேன்” ந்னு சொல்லுவாங்க..இந்த ஊர்ல எங்க "லேன்" இருக்கு?  இது பரவாயில்லை,   வார்த்தைக்கு வார்த்த பிரிஃபிக்ஸ் ஆக "ஆசம்...ஆசம்" ன்னு சேர்த்துக்கிட்டு படம் காட்டுவாங்கு... பாருங்க..

அவங்க "ஆசம்" ன்னு சொல்லும் போது.. "ச்சீ.... நீங்க ரொம்ப "மோசம்" ன்னு   காது "சோசம்" ஆகிற அளவு விளாசனும் போல இருக்கும்......... 

* அடுத்து, பார்க்கும் எல்லாத்தையும் அமெரிக்காவோட ஒப்பிட்டு பேசுவாங்க.. பாருங்க. .அப்படியே கொமட்டுலேயே குத்தனும் போல இருக்கும். ! அங்க எல்லாம் இப்படி இல்ல.. ஏன் இந்தியா இன்னும் அப்படியே இருக்கு... .நான் போனப்ப இருந்ததை விட ரொம்ப மோசமா இருக்கு.. ஏன் இப்படி எச்சி த்துப்பறாங்க.. ஏன் இப்படி குப்பை கொட்டறாங்க.. ஹோ...... நோ பவர்.....அங்க எல்லாம் சான்ஸே இல்லத்தெரியுமா........ கொசு கடிச்சி ப்பாரு. முகமெல்லாம் எபப்டி இருக்குன்னு ?! யூநோ.. .அங்கெல்லாம் இன்ஸெக்ட்ஸே ஃப்ரீ... ந்னு கொடுக்கற பில்டப் இருக்கே..

ம்ம்ம் அப்புறம் ???!  உங்க பரம்பரையே அமெரிக்கா அதிபராவே இருந்தவங்களா... ? சொல்லவே இல்ல? !


* ஆண்களை விடுங்க..இந்த பொண்ணுங்க போனால், தலை அலங்காரம் முதல்ல மாறும். பின்னலோ, குதிரைவாலோ போயி எப்பவும் ஃப்ரி ஹேர் தான். அப்புறம் உடைகள் மேல கொஞ்சம் குறையும், கீழக்கொஞ்சம் ஏறும். கேட்டா எங்க பரம்பரையில் இப்படித்தான் நாங்க ட்ரஸ் செய்வோம்னு ரேஞ்சுக்கு சீன் போடுவாங்க.

இங்க முகத்தில் எண்ணெய் வடிய அருக்காணி சடைப்போட்டுக்கிட்டு மூக்கு ஒழிகினது எல்லாம் மறந்தே போச்சா அம்மணிங்களா?.

* அடுத்து கடன், ஒரு வேள வெளிநாட்டில் இருந்து வரவங்கள குறிவைத்தே எல்லோரும் பணம் கேட்பாங்களானு தெரியல..நாம சாதாரணமாக பேசிக்கிட்டு இருக்கும் போதே அவங்களோட சொத்துக்கணக்கு எல்லாம் சொல்லுவாங்க. அமெரிக்காவில் இருந்தாலும் நான் பிச்சைக்காரன் ரேஞ்சிக்கு சொல்லி, நாம அவங்கக்கிட்ட பணம் கேட்காத அளவு நம்மை மனதளவில் தயார்படுத்துவாங்க..  எல்லா பில்டப் பும் முடிஞ்சி, "உனக்கு எதாது ஹெல்ப் வேணும்னா என்னைய கேளூஊஊ கண்டிப்பா செய்வேன்னு "  சொல்லி முடிப்பாங்க.

அது எப்படிங்க? இதெல்லாம் அமெரிக்கா போனா தானா வருமா.?. இல்ல அங்க ஏதாச்சும் இதுக்குன்னு தனியா க்ளாஸ் நடத்தறாங்களா??


*அடுத்து புள்ளைங்கக்கிட்ட தமிழ்ல பேசவே மாட்டாங்க. நம்மக்கிட்ட தமிழ்ல பேசுவாங்க..நடுவுல புள்ளைங்க வந்தா அவங்கக்கிட்ட ஒரே பீட்டர் தான். ஏன்ப்பா தமிழ் சொல்லி த்தரலியான்னு கேட்டா.. கொன்ச் கொன்ச் த்ரியும்.. ஆனா இங்கிலீஷ் நா ஈசியா புரிஞ்சிக்குவாங்க..அதனால் இங்கிலீஷ்லியே பேசிடுவோம் நு சொல்லுவாங்க. புள்ளைங்க நம்ம என்னவோ வேற்று கிரகத்து ஆட்களை பார்ப்பது போல மேலும் கீழும் பார்க்கும். சரி நாமும் குழந்தைங்கக்கிட்ட பேசி வைப்போம்னு.. அதான் தமிழ் தெரியாதே... Hai I am your Chitthi / Athai.... means..your mom;s younger sister/ your dad's younger sister" னு சொன்னாப்போதும்.. ஒரு மாதிரி வினோதமாக ”ஹாய்...சித்தி../அத்த....  இட்ஸ் கிரேட்.. டு சி யூ.. ஹே.. யூ கேரியான்.. மீத் யூ லேத்தர்.. ” ந்னு நாலு வார்த்தைக்கு மேல பேசமுடியாமல் ஓடி போயிடுவாங்க.  

சொந்தக்காரங்க வருவாங்க. .எல்லாம் பக்கி பனாதிங்க.. .அதுங்க க்கிட்ட நின்னு பேசாத ன்னு சொல்லியே கூட்டுட்டு வருவாங்களோ?

* அடுத்து டைம் ஸோன் பிரச்சனை. வந்து ஒரு 1 வாரத்திலிருந்து 10 நாளாவது, இவங்க அர்த்த ராத்திரியில் எழுந்து நடமாடுவாங்க. டிவி ய வச்சிக்கிட்டு பார்க்கிறது... கண்ட நேரத்தில் சாப்பிடறதுன்னு ஒரு மார்க்கமாவே இருப்பாங்க... .தனியா இருக்காங்களேன்னு பாவம் பார்த்து நாமும் கூட சேர்ந்து முழிச்சிக்கிட்டு உட்கார்ந்து இருந்தா............ சரி செய்யறோமேன்னு இல்லாம.. அமெரிக்கா மொக்கைய ஆரம்பிச்சி ... ராத்திரி பொழுதையும் நிம்மதியா விட்டுவைக்க மாட்டாங்க..

இங்க இருக்க கொசுத்தொல்லை இல்லாம அமெரிக்காவிலிருந்த வந்த கொசு ..இங்க இருக்கறதையாச்சும். அடிச்சே கொல்லலாம்..ஆனா இதுங்கல... ?! 

* கடைசியா இந்த ஆசம் அமெரிக்க மாப்பிள்ளைகள். ஒரு வீட்டுல நாலு மாப்பிள்ளை இருந்தாலும், அதுல ஒரே ஒருத்தர் அமெரிக்காவில் இருந்துட்டா போதும்.. அடடடா டாஆ.... முடியாதுடா சாமி.. ! :) இவரு தான் அந்த குடும்பத்தையே அமெரிக்கா போயி உசத்திட்டத்தா நினைச்சிக்குவாரு.. அதிகம் பேசமாட்டாரு.... அடுத்தவங்க எது பேசினாலும். .ஒரு கிரேட் ஸ்மைல் பண்ணுவாரு.... என்ன சொன்னாலும் டவுன் டு எர்த் ஆ இருப்பாரு.....எல்லா இடத்திலும் முக்காப்பேண்ட்ஐ போட்டுக்கிட்டு சுத்துவாரு, . ரொம்ப ரொம்ப சிம்பிள் ஆ காமிச்சிக்குவாரு...  நம்ம மக்களோ இங்க இருக்க உள்நாட்டு மூணு மாப்பிள்ளைய மாட்டைவிட கேவலமா மதிப்பாங்க.. ஆனா இவரை விழுந்து விழுந்து கவனிப்பாங்க...

பேசாமயே ...கிரேட் ஸமைலியோடயே..வந்த வேலைய முடிச்சிட்டு அமெரிக்கா பேரைச்சொல்லி எவ்ளோ கறக்க முடியுமோ கறந்துட்டு  கிளம்பிடுவாரு.... :)) இவரு தான் இருக்கறதிலேயே ரெம்ப நல்லவரு...

===========

இளா எழுதிய  NRI கொசுத்தொல்லைகள் பதிவை அச்சு அசலாக காப்பி செய்து எழுதியது. :). அவரிடம் ப்ர்மிஷன் கேட்டு (ஒரு வருசம் முடிஞ்சி இருக்குமோ?) மெயில் அனுப்பிய போது.. .எவ்ளோ திட்டிக்கனுமோ திட்டிக்கோங்கன்னு பெரிய மனசோட பர்மிஷன் கொடுத்தாரு. நன்றி இளா.

அணில் குட்டி : எச்சூச்சுமி கவி.. உங்க புள்ள  ஜிஆர்ஈ..எழுதிட்டாரு.. ட்டோஃபல் எழுதப்போறாரு...  .... இதெல்லாம் எதுக்கு ?! ...ச்ச்சும்மா ஒரு இன்ஃபோ க்கு கேட்டேன்.. ...  அப்புறம் இன்னொரு மேட்டரு கேக்கனும்.. சத்தமா கேட்டா உங்கள எல்லாரும் கல்லால அடிப்பாங்க. .காதக்கொடுங்க. .ரகசியமா கேக்கறேன்.. "உங்க புள்ளைக்கு தமிழ் படிக்கத்தெரியுமா? "   (மக்கா நீங்களும் கவிதா காதை  இழுத்து இதே கேள்வி ய கேட்டுட்டு போவீங்களாம்)

பீட்டர் தாத்ஸ் :  Patience when teased is often transformed into rage

வெள்ளை காக்கா

போன வாரம் தஞ்சாவூர் போயிட்டு வந்ததிலிருந்து சிவா'விடம் ஒரு மாற்றம் தெரிந்தது.  சொந்தக்காரர்கள் திருமணம் என்று சென்று வந்தான். ஆனால் அவன் வந்தலிருந்து கவனிக்கிறோம்... எப்போதும் போல இல்லை. வேலை நேரங்களில், விசிட்டர் ரூம் சோபாவில் அடிக்கடி சென்று தனியாக அமர்ந்து கொள்கிறான், அங்கிருக்கும் கண்ணாடியிட்ட கதவின் முன் வேடிக்கை பார்த்தவாறு நேரம் போவதே தெரியாமல் நிற்கிறான். கத்தி கதறி கூப்பிட்டால் தான் சாப்பிடவே வருகிறான். எப்போதும் போல் நடக்கும் அரட்டை கச்சேரி எல்லாம் நின்றுவிட்டது, தனிமையில் இருப்பதை விரும்புவதாக தெரிந்தது... விட்டறவா முடியும்..?!

"ஏன் டா என்ன ஆச்சி உனக்கு "  

".............................................. .......... ஒரு பொண்ணை பாத்தேன்..  ரொம்ப பிடிச்சி போச்சி... உன் கிட்ட சொல்லனும் தான் இருந்தேன்.. ஆனா எப்படி சொல்றது தான் தெரியல.. "

"ஓ...அதான் மேட்டரா.. ஹே பொண்ணு எப்படிடா இருக்கா...? "

"ம்ம் போட்டோ இருக்கு பாக்கறியா? "

"என்ன கேக்கற....எடுடா முதல்ல... "

ஓடி போயி, அவனுடைய டெஸ்க்கிலிருந்து ஒரு போட்டோவை எடுத்து வந்து "யார் ன்னு சொல்லு பாக்கலாம்".  என்று சிரித்தான்.

அது ஒரு குரூப் போட்டோ, ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடிவில்,  தாவணி போட்ட இரண்டு பெண்கள் இருந்தனர். ஒரு பெண் அழகாக லட்சணமாக இருந்தாள், மற்றவள் ரொம்பவே சுமார் ரகம், கொஞ்சம் குண்டு, கண்ணாடி போட்டு இருந்தாள். நான் அந்த அழகான பெண்ணை காட்டி "இவள் தானே ?" என்றேன்.

சிரித்துக்கொண்டே "நினைச்சேன் நீ அவளை தான் சொல்லுவேன். .அவ இல்ல. .பக்கத்துல இருக்கு இல்ல கண்ணாடி அது தான்.."

சட்டென்று மறைக்க முடியாத முக வாட்டத்தோடு . "ஏன்ன் இப்படி? நிஜமாவே இவளையா பிடிச்சி இருக்கு...?

"ம்ம்.. அவ ரொம்ப நல்ல பொண்ணு அனுஷ்...  அவள கல்யாணத்தில் தான் முதல்ல பாத்தேன்...உனக்கு தான் தெரியுமே எங்க வீட்டு கல்யாணம் எல்லாம் மூணு நாள் நடக்கும். அவள கவனிச்சிட்டே இருந்தேன்.  ரொம்ப இன்னசன்ட்.. அவள கூப்பிட்டு "அங்க பாரு வெள்ளை காக்கா பறக்குது ன்னு சொல்லி பார்... அவளும் ஓடி வந்து எங்க எங்க ன்னு பார்ப்பா" அதான் எனக்கு அவக்கிட்ட பிடிச்சி இருந்தது...அவ்ளோ குழந்தைத்தனம் வெகுளித்தனம் அவ கிட்ட இருக்கு..... ரொம்ப யோசிச்சி அவ தான் என் வாழ்க்கை ன்னு முடிவு செய்துட்டேன்.

"சொல்லிட்டியா? "

"சொல்லிட்டேன் ... ஆனா ரொம்ப பயப்படறா...  பதில் எதுவும் சொல்லல... அவ சொல்லாட்டி பரவாயில்ல. .அவ எனக்கு தான், அதை நான் முடிவு பண்ணிட்டேன்..  போக போக சரின்னு சொல்லிடுவா...... குழந்தை அவளுக்கு என்ன தெரியும்.."

"டேய்... உனக்கே ஓவரா இல்ல.. குழந்தைய போய் லவ் பண்றேன் னு சொல்ற... "

திரும்பவும் வாய்விட்டு சிரித்தான். "மனசால அவ குழந்தை ன்னு சொன்னேன்.... " சரி உனக்கு பிடிச்சி இருக்கா...? "

"அது எப்படிடா மனசாட்சியே இல்லாம இப்படி எல்லாம் கேள்வி கேக்கனும்னு உனக்கு தோணுது...என்னைய பாத்தா கேனச்சி மாதிரியே இருக்கா உனக்கு???.. கேக்கறான் பாரு கேள்வி..  ...அது சரி என்ன படிச்சி இருக்கா?"

"ப்ளஸ் 2....."

"என்னது ப்ள்ஸ் 2 வா?  ஏண்டா.. இது எல்லாம் வேலைக்கு ஆகுமா.. ரொம்ப சின்ன பொண்ணு.. அவ எப்ப படிச்சி முடிச்சி. . உன்னைவிட ரொம்ப சின்னவ டா..."

"ஆமா 7 வருஷம்... "

"தெரிஞ்சுமா?"

"என்னவோ அவ என் மனசுல பதிஞ்சிட்டா... எத்தன வருஷம் னாலும் காத்திருக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன்..."

"என்னமோ போ... பொண்ணும் சுமார் தான்.......சிவா நல்லா யோசிச்சிக்கோ...... சரி நம்ம மக்க கிட்ட சொல்லிடவா? "

வாய்விட்டு சிரித்தான். ."சொல்லாமலா இருக்க போற... உன் கிட்ட சொன்னா பிபிஸி கிட்ட சொன்ன மாதிரியாச்சே...  "

"ஹோ..நான் பிபிசி யா..போடா..யூஸ்லஸ்.. நான் போறேன்..நீயே சொல்லிக்கோ....."

"ஏய்ய் ஏய்ய்...ஏய்...நில்லு.... " கையை பிடித்து இழுத்தான்... "இப்படி போனா எப்படி..?  நீதான் எனக்கு எல்லாம்........உன்னைவிட்டா எனக்கு யார் ஹெல்ப் பண்ணுவாங்க சொல்லு....."

"என்ன...நாய் வால் ஆட்டுது..?"

"ஆமா அனுஷ்.. அவங்க வீட்டுல ரொம்ப ஸ்ட்ரிக்ட்...  பசங்க எல்லாம் போன் செய்து அத்தன ஈசியா பேசமுடியாது.... நீதான் போன் செய்து அவள கூப்பிட்டு என் கூட பேசவைக்கனும்.. ...

"ஆஹா.. ராசா... இதை தான் கண்ணாடி முன்ன நின்னு இத்தனநாளா யோசிச்சிக்கிட்டு இருந்தியா...? அடேய்.... என் ஆருயிர் தோழர்களா எல்லாரும் இங்க  வாங்க. .அண்ணன் ஏதோ மேட்டர் சொல்றாரு.....  வந்து கேளுங்க......,   சிவா... எல்லாரும் ஒக்கே சொன்னா தான் செய்வேன். .இப்பவே சொல்லிட்டேன்... .எனக்கும் காதலுக்கும் ரொம்ப தூரம்.. இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது......"
***********

நாங்கள் மொத்தம் எட்டு பேர், நான் மட்டுமே பெண்.. ஆனால் அந்த வித்தியாசம் இதுவரை எங்களிடம் வந்ததில்லை. எப்போதும் எங்கேயும் ஒன்றாகவே இருப்போம். இதில் ஒருவன் தான் சிவா. மற்றவர்கள் ராம், கணேஷ், ஆர்கே, ரகு, பட்டாபி, குமரன். எல்லோரும் நெருங்கிய நண்பர்கள் என்றாலுமே மற்றவர்களை விட ராம், சிவா, மற்றும் கணேஷ் ரொம்பவும் நெருக்கமானவர்கள்.

எங்களுக்குள் ஒளிவு மறைவு இல்லை... எப்போதும் சிரிப்பும் கூத்தும் பாட்டும் என்று அலுவலகத்தில் வேலை செய்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் ரொம்ப ஜாலியாக இருப்போம்..... ..

குமரன், ஆர்கே தவிர வேறு யாரும் பெண்களை பற்றி அதிகம் பேசுபவர்களாக இருக்க மாட்டார்கள். இவர்கள் இருவரும் எந்த நேரமும் பெண் தோழிகளை பற்றியும் அவர்களுடன் ஊர் சுற்றிய கதை, சைட் அடிச்ச கதை என்று பேசி க்கொண்டே இருப்பார்கள், இதில் ஆர்கே.. குமரனை விட ரொம்பவே அதிகம்.. காதலர்கள் தினத்தில் ஆர்கே அலுவலகமே வரமாட்டான்.. ஒன்றா இரண்டா.. சீக்கிரம் முடித்துவிட்டு வர... அந்த நாள் முழுதும் பெண்களுடனேயே கழிப்பான். அடுத்த நாள் வந்தால் , என்னை தவிர மற்ற எல்லோரும்.. "மச்சி. .இங்க வாடா உன்னை ஒரு தரம் கட்டி பிடிச்சிக்கிறோம்.. அப்படியாது எங்க ஆசையை தீத்துக்கறோம் ன்னு லைன் கட்டி கட்டிப்பிடிச்சி.. அவனின் காதலர் தினத்தை இவர்களும் கொண்டாடி மகிழ்வார்கள்..

எல்லாவற்றிக்கும் நடுவே சிவா'வின் காதல் தான் எங்கள் அனைவருக்குமே முதல் காதல். எல்லோருமே சந்தோஷமாக இருந்தோம், அவன் காதலை அவனுடன் சேர்ந்து நாங்களும் ரசிக்க ஆரம்பித்திருந்தோம். அவனுக்காக போன் செய்ய நானே நியமிக்க பட்டேன். 

ஆயிற்று.. போன் செய்ய ஆரம்பித்து, குந்தவை'வின் தோழி ன்னு அவங்க அம்மா க்கிட்ட அறிமுகம் செய்துக்கிட்டு ஃபோன் கை மாறியவுடன் சிவாவிடம் கொடுத்துவிட்டு அவன் பேசுவதை பார்த்து ரசிப்பது எங்கள் அனைவருக்கும் வாடிக்கையாகி விட்டது..

காதலிக்கறதே பிடிக்காது என்று இருந்த எனக்கு. .சிவாவின் காதல் கதை கேட்கவே நேரம் போதாமல் போனது. எந்த நேரம் பாத்தாலும் அனுஷ் வாயேன். .இன்னைக்கு அவ என்ன சொன்னா தெரியுமா.. .ன்னு ஆரம்பித்தால்.. என் காதில் ரத்தம் வரும் வரை பேசிக்கிட்டே இருப்பான்.. ..கேட்டு கேட்டு  குந்தவை என் மனதிலும் ஆழ பதிந்துவிட்டாள்.. ஒரு சின்ன குழந்தையாக.....

அடுத்த வந்த மாதத்தில் ஒரு நாள் தஞ்சாவூர் சென்று வந்தான்.  வந்ததிலிருந்து அலுவலகத்தில் வேலை பளு காரணமாக யாருமே ஒழுங்காக பேசிக்கொள்ள முடியவில்லை...  மாலை வீட்டிற்கு கிளம்பும் முன்... அனுஷ் நில்லு.. உன் கிட்ட பேசனும் னு சொல்லி, அலுவலகத்தில் வெளியே இருந்த தோட்டத்திற்கு கூட்டி சென்றான்...  யாரும் இல்லாத ஒரு ஓரம்....நேரம் ஆகிறது என்பதை பொருட்படுத்தாமல் , கையை பிடித்து இழுத்து புல் தரையில் அமர வைத்தான்.

"பொண்ணுங்ககிட்ட இப்படி தனியா உட்காந்து... தொட்டு.. தடவி பேசறது எல்லாம் ஒரு சுகம் இல்ல அனுஷ்..."

"ஹான்...செருப்பு........ வந்த விஷயத்தை சொல்லு..".

"நீ கோவப்பட்டா ரொம்ப அழகா இருக்க அனுஷ்.."

"அடச்சீ... டைம் ஆச்சுடா. .சொல்ல வந்தத சொல்லு...போனும்..."

"ஐ லவ் யூ அனுஷ்..."

"நான் கிளம்பறேன்.. ஆளவிடு.......... .."

"சரி சரி.. கூல் கூல்..ச்சும்மா...... .... இந்த தரம்.. அவள பாத்தப்ப... தனியா கூட்டிட்டு போயி... ரொம்ப நெருக்கமா உட்காந்து பேசினேன் அனுஷ்...."

"ம்ம்ம்..."

"அது சொல்லவே முடியாத ஒரு உணர்வு....... அவளோட நெருக்கும்... பார்வை, மூச்சு காத்து... லேசா அப்பப்ப காத்துல வந்து தொட்ட தாவணி.. .. அவ தலைய ஆட்டி பேசும் போது எல்லாம் காதுல கூடவே ஆடின ஜிமிக்கி........ அவ  உள்ளங்கைய பிடிச்சி இழுத்து வச்சி அழுத்தி பேசினது...................................................  அனுஷ்.. . பொண்ணுங்க எல்லாம் தேவதைங்க ....... அவங்களோட நெருக்கும்... நெஞ்சை உறுக்கி எடுக்குது..... என்னமோ ஒரு இனம் புரியாத சந்தோஷம்....இது வரைக்கும் கிடைக்காத சந்தோஷம்..................எப்படி சொல்றது.... அவக்கிட்ட இப்படி பேசினது... அங்கேயே அவ கூடவே எப்பவும் இருந்திடனும் போல  இருக்கு........மனசுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா....."

"...டேய் என்னடா ஆச்சி உனக்கு......இப்படி உறுகி ஓடற..........."

"உனக்கு புரியலையா அனுஷ்.... "

"...........................ம்ம்ம்... .....................புரியுது... ................................. ஆனா .லிமிட் டா இரு... அவள உண்மையா காதலிச்சா. .இந்த நெருக்கத்தை எல்லாம் அவாய்ட் பண்ணு. .சின்ன பொண்ணு.. இப்பத்தான் +2 படிக்கறா.. அவ மனசு சலன படக்கூடாது.....உன்னை மாதிரி இல்ல அவ..  படிக்கனும்.. ஸ்கூல் ஃபைனல் .. நல்லா மார்க் எடுத்தாத்தான் காலேஜ் நல்ல சீட் கிடைக்கும்..... இதை மறந்துடாத... ... சரி நான் கிளம்பவா?"

"இல்ல இரு.. " இன்னும் சொல்லனும்...

"இல்லடா.. டைம் ஆச்சி நாளைக்கு சொல்லு கேக்கறேன்.. உன் மூடு வேற ஒரு மாதிரியா இருக்கு இன்னைக்கு, உன் பக்கத்துல உக்கார எனக்கே பயம்மா இருக்குடா............."

"ஹா ஹா ஹா ......." .வாய்விட்டு சிரித்தான்.......

அடுத்தநாள்... டீ டைம்... 'அனுஷ்... நீ சொன்னத யோசிச்சேன்....நீ சொல்றது ரைட் தான்.... அவ முதல்ல நல்லா படிக்கனும்......!!"

.......................
   
# ஏப்ரல் '11 மாதம் தேவதை இதழில் வெளிவந்தது. நன்றி தேவதை.

கட்டைவிரல் மெட்டி..

திருமணம் ஆகாதப்பெண்களும் அணியக்கூடியது தான் கட்டைவிரல் மெட்டி. எத்தனைப்பேர் இதனை  பார்த்திருக்கிறார்கள் / பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சிறு வயதில் பல வருடங்கள் வீட்டில் இருக்கும் போது மட்டும் அணிந்து இருக்கிறேன். ஆண்டு விடுமுறைகளில் முழுநாளும், விஷேஷ நாட்கள், திருமணங்கள் என இந்த மெட்டியை அணிந்துக்கொள்ள பல காரணங்கள் இருந்தன.
(படத்தை பெரிதாக்கி பார்க்கவும் )

ஆயா,  இரண்டு டிசைனில் என் கால் கட்டைவிரல் அளவிற்கு மெட்டி செய்து வைத்திருந்தார்கள். படத்தில் உள்ளது போலவே இருக்கும். தீ விபத்தில் அழிந்துவிட்டதால், வரைந்திருக்கிறேன். மேல் புறம் நடுவில் 5-6 முத்துக்கள் கொண்ட சலங்கை ஒன்று இருக்கும். கீழ்பகுதி தட்டையாக செப்பு தகட்டில் செய்து இருப்பார்கள்.  நடக்கும் போது தேய்மானம் இருக்கும் என்று சொல்லப்பட்டது. மற்ற பகுதியெல்லாம் வெள்ளியால் செய்யப்பட்டு இருக்கும். நாம் சாதாரணமாக அணியும் மெட்டியைப்போல இல்லாது, பெரியதாக கட்டைவிரல் உள்ளே போகக்கூடியதாக இருக்கும். திருமணத்தன்றும், மெட்டிவிரலில் மெட்டி வருவதற்கு முன் அதற்கு முன் விரலில் இந்த மெட்டியை அணிந்திருந்தேன். :).

இதனை எங்கள் வீட்டைத்தவிர வேறு எங்கும் பார்த்தது இல்லை. என் காலில் இருப்பதை பார்த்து அத்தை மகள் கேட்பாள், அவளுக்கு டிசைன் கம்மியாக இருப்பதை மட்டும் கொடுக்க சம்மதித்து இருக்கிறேன். வீட்டிற்கு போவதற்கு முன், கவனமாக  அதை திருப்பி வாங்காமல் அனுப்ப மாட்டேன். சில சமயம் அதற்காக அழுதும் கூட இருக்கிறாள். அவளுக்கு மேல் அடம் பிடிப்பதில் நான் 'மன்னி' என்பதால், என்னிடம் வம்பு வேண்டாம் என்று, அவளை சமாதானம் செய்து, ஆயா, மெட்டியை வாங்கிவிட்டுத்தான் அனுப்புவார்கள்.

எனக்கு மிகவும் பிடித்த அல்லது என்னை கவர்ந்த வேறு சில நகைகள் நத்து'ம், புல்லாக்கு'ம். எப்போதுமே நகைகள் அணிந்துக்கொள்வதில் விருப்பம் இருந்ததில்லை. எனக்கு ஆர்வம் இல்லையென்றாலும் ஆயா அத்தனை சுலபமாக என்னை விட்டுவிடவில்லை. எனக்கு பிடிக்கிறதோ இல்லை, எந்நேரமும் ஏதோ ஒரு அலங்காரம் செய்துக்கொண்டே இருப்பார்கள். அதில் ரொம்பவே எங்க வீட்டில் கஷ்டப்படறவங்க "ஆண்டாள்" தான்.. :).  எத்தனை முறை இந்த ஆண்டாள் வேஷம் போட்டாகிவிட்டது. வீட்டில் ரெடிமேடாக ஆண்டாள் அலங்காரத்திற்கான 'பின் தலை கொண்டையும், சைட் கொண்டையும் ' இருக்கும். ஒரு பச்சக்கிளி பொம்மை வேறு!  என் திருமணத்திற்கு, முதல் நலங்கின் போதும் ஆண்டாளாக நிற்கவைத்தார்கள். பல்வேறு வயதுகளில் ஆண்டாள் வேஷம் போட்டு இருந்தாலும், திருமணத்திற்கு முன் போட்ட வேஷத்தில் ஆண்டாள் அழகாகவே இருந்தாள்.

திருமணம் வரும் வரையில், நத்து, புல்லாக்கின் மேல் எனக்கு ஆசை இருக்குமென ஆயாவிற்கே தெரியவில்லை. திருமணத்தன்று, மணப்பெண் அலங்கார நகைகளை நானே தேர்தெடுத்தேன். எதையும் இது வேண்டுமென கேட்காத நான், இந்த நகைகள் தான் வேண்டும். வேறு அணியமாட்டேன் என்று சொன்னது, ஆயாவிற்கு வியப்பளித்தது. ஆயா சொல்லிய எதையும் அணிந்துக் கொள்ளவில்லை.

சிகப்புக்கலர் கல் நகைகள் வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தேன். எல்லாமே வெள்ளைக்கல் வைத்த நகைகள்.

நத்து, புல்லாக்கு  ஏன் எனக்கு பிடிக்கும் என்ற காரணம் தெரியவில்லை. எங்க வீட்டு பெண் குழந்தைகளில் நான் மட்டுமே நத்து, புல்லாக்கு வேண்டுமென கேட்டு வாங்கி ப்போட்டுக்கொண்டு மற்றவர்களை எரிச்சல் படுத்தினேன். . புல்லாக்கு சரியாக மேல் உதட்டில் மேல் வந்து விழும். பேசவும், சாப்பிடவும் நிச்சயம் கஷ்டமாக இருக்கும். குறிப்பாக திருமணத்தன்று பால் பழம் கொடுக்கும் போது, யாராவது ஒருவர். புல்லாக்கை மேல் தூக்கி பிடித்து, குடிக்க வைத்தார்கள். நகைகளை அவிழ்க்கக்கூடாது என்பதால், அது சற்று சங்கடமாகவே இருந்தது.  ஆனால் அதை அணியும் போது தனி அழகு பெண்ணின் முகத்திற்கு வருகிறதென்பதை மறுக்கமுடியாது.

இரண்டுமே திருகு அல்லாது பிரஸ்ஸிங் டைப் நகைகள். மூக்கிலிருந்து நழுவி விடாமல் இருக்க மிகவும் அழுத்திவிடுவார்கள், நிச்சயம் வலி இருக்கும். அவற்றையெல்லாம் தாண்டி அணிந்துக்கொள்ள நினைப்பது, அந்த ஒரு நாள் தவிர்த்து, அந்த நகைகள் அணிய சந்தர்ப்பம் கிடைக்காது என்பதே. !.  அதற்கு பிறகு , நத்து, புல்லாக்கு எப்பவுமே அணியவில்லை.  கட்டைவிரல் மெட்டியும் கூட....

அணில் குட்டி : இப்ப நத்து, புல்லாக்கு, வங்கி, ஒட்டியானம்னு போட்டு ப்பார்த்தேன்... ஹய்யோ... ஹய்யோஓஓஓஒ..... :))))))))))...

பீட்டர் தாத்ஸ் : One men's memory is like a box where a man should mingle his jewels with his old shoes.
. 
பொன்ஸ் : உங்களுக்காக !! :)


  

படங்கள் : நன்றி கூகுல்.

கன்னா பின்னா'ன்னு ஒரு கதம்பம்

* ஒரு டி-ஷர்ட் எடுத்துத்தர வரீங்களாவென, பஸ் நிறுத்தம் போற வழியில் இருக்கும் நடைப்பாதை கடைக்கு அழைத்தான் அலுவலக ட்ரைவர். நானும், இன்னொரு நண்பருமாக மூவர் சென்றோம், எடுத்துப்பார்த்துக்கொண்டு இருக்கும் போது, நான் அவனைப்பார்க்க, ரூ.100/- க்குள் வேணும் என்றான். தேர்ந்தெடுத்துவிட்டு, கடைக்காரரிடம் விலையை கேட்க 120 என்றார். நான் ரூ.60/- க்கு கொடுங்கன்னு கேட்டது தான், நிமிர்ந்து பார்த்து முறைத்தார். "மேடம் இந்த காலத்தில்(எந்த காலம்? நாங்க என்ன அக்பர் காலத்தில் வாழ்ந்துட்டு இப்ப ஆவியாவா அலையறோம்)  60 ரூபாய் க்கு எல்லாம் டிஷர்ட் விக்கறது இல்லை" என்றார்.  "அப்படியே எல்லாத்தையும் போட்டுட்டு என் கூட வாங்க , 60ரூ என்ன 40ரூ க்கு டிஷர்ட் நான் வாங்கித்தரேன்னு கூப்பிட்டேன். (இப்படி எல்லாம் பேசாட்டி, நாயி நம்மை கவ்விடும் நு பெரியவங்க சொல்லி இருக்காங்க.) கடைசியில் பேரம் முடிந்தது ரூ.80 க்கு.

* ஒரு எமகாதகன், நான் பயணம் செய்யும் போது, கைப்பேசியில் பேசறவரை பேசிவிட்டு,"யாரோ பஸ் ல ஃபோன் ல பேசறவங்கள பத்தி, அவங்க ப்ளாக் ல எழுதி இருந்தாங்க, படிச்ச ஞாபகம்”  ஃபோனை வச்சிட்டான்.  :(  (ஏன் ஏன் ஏன்.. இனிமே பஸ்ல இருக்கும் போது எமகாதகன் மட்டுமில்ல எவன்/எவள் ஃபோன் வந்தாலும் பேசுவியா? பேசுவியா? பேசுவியா? -  )
   
* வாலி திரைப்படத்திற்கு பிறகு அஜித் மேல் கவனத்தை திருப்பியப்படம் மங்காத்தா எனலாம். த்ரிஷா +அஜித் டூயட் பாடல் படமாக்கப்பட்டவிதம் கவர்ந்தது. ஒரே ஒரு காட்சியில் சில மணித்துளிகள், தொப்பையை இழுத்துப்பிடுத்து அஜித் சட்டையில்லாமல் வருகிறார். விசில் பறக்கிறது. எல்லாரும் சூர்யா ஆகிவிடமுடியுமா?. ”மச்சி ஓபன் தி பாட்டில்” பாடலில் என்னா டான்ஸ்?!! குறிப்பாக அஜித் ஆடும் நடனும் க்ளாஸ் ! தியேட்டரில் லைனாக நின்று அதே மாதிரி ஆடினார்கள். கலக்கல்ஸ்! வீட்டுக்காரரோட சினிமாக்கு போகக்கூடாதுன்னு நினைச்ச பலநேரங்களில் இதுவும் ஒன்று. பாட்டுக்கு நடுவில் சோபாவில் அமர்ந்திருக்கும் ஒரு காட்சியில்....அஜித்..ம்ம்ம்ம்ம்ம்ம்.... ஸ்டைலு !   கொஞ்சமா மெலிஞ்சுடுங்களேன்.. இன்னமும் அழகா இருப்பீங்க.
 
* ஹூஸைனம்மா பதிவுகளை படிக்காமல் விடமாட்டேன், எப்படியும் சேர்த்துவைத்தாவது மொத்தமாக படித்துவிடுவேன். நேற்று ஒரு பதிவில் சூரிய ஒளியில் மின்னும் பாட்டில் அதிலிருந்து கிடைக்கும் ஒளி என  மிகவும் எளிமையான முறையில் வீட்டில் வெளிச்சம் கிடைக்கும் செய்தியை எழுதி இருந்தார்கள். தேவையான ஒன்றாகப்பட்டது. சுட்டுட்டேன். நன்றி ஹூஸைனம்மா! :).


ஃபிலிப்பைன்ஸ் நாட்டு நகரான மனிலாவில், வீட்டில் வெளிச்சம் கிடைக்க ஒரு எளிய முறையைக் கடைபிடிக்கிறார்கள். என்னன்னா, ஒரு பாட்டிலில் தண்ணீர் பிடித்து, வீட்டுக்கூரையில் ஒரு துளை இட்டு, சொருகி வைத்து விடுகிறார்கள். சூரிய ஒளி அந்தத் தண்ணீரில் பட்டு பிரதிபலித்து, வீட்டின் எல்லாத் திசைகளிலும் பரவி வெளிச்சம் அளிக்கிறது. இதையே, கூரையில் ஒரு துளையிட்டு கண்ணாடி போட்டால் என்ன என்று கேட்கலாம். அப்படிச் செய்தால், அது அந்தத் துளையின் நேரே மட்டும்தான் ஒளிபாய்ச்சும். இந்த ‘பாட்டில் முறை’யிலோ, அறை முழுவதுற்குமாக, 55 வாட்ஸ் அளவு வெளிச்சம் கிடைக்கிறதாம். தண்ணீரில் பாசி பிடிக்காமலிருக்க, நான்கைந்து ஸ்பூன் ப்ளீச்சிங் பவுடரையும் கலந்துவிட்டால், சுமார் நான்கு வருடங்கள் வரை இந்த ஒற்றை பாட்டில் தொடர்ந்து மங்காமல் வெளிச்சம் தருமாம்!! ஒரே அறைக் கூரையில் நான்கைந்து பாட்டில்களை மாட்டிவிட்டால், வெளிச்ச வெள்ளம்தானாம். ஆஃப்-ஆன் பண்ணும் சிரமமில்லை. மின்சாரக் கட்டணக் கவலையில்லை!!

* மனித உணர்வுகளோடு தொடர்ந்து விளையாடுபவர்களை...............
..... ”செக்” வைத்து தூக்கனும். செக் வைக்க அவர்களே வழி வகுக்கும் வரை காத்திருக்கலாம்/ கண்டிப்பாக வழி வகுப்பார்கள் ! # தெளிவு/அனுபவம்/வாழ்க்கை.

* மறுபடியும் ஆண்களை தொடர்கிறேன். இரு சக்கர வாகனம் ஓட்டுவதும், வேகமும் புதிதல்ல, ஆனால் நெடுந்தொலைவு பயணம், மிக நெரிசலான போக்குவரத்து இருக்கும் வீதிகளில் செல்லும் போது, மிக லாகவமாகவும், வேகமாகவும் வண்டி ஓட்ட ஆண்களை போல பெண்ககளால் முடியாது. அப்படி வண்டி ஓட்டும் ஏதேனும் ஒரு ஆணை பின் தொடர்ந்து, என் வண்டி ஓட்டும் திறனை வளர்த்துக்கொள்வது வழக்கம் மட்டுமல்ல, பிடித்தமான விஷயமும் கூட. அந்த ஒருவர்,  ஒரே ஆளாக இல்லாமல் அவ்வப்போது நடுநடுவில் என்னை முந்திச்செல்லும் யாரோ ஒருவராக இருப்பார். நடுவில் சில ஆண்டுகள் இதற்கு சந்தர்ப்பம் இல்லாமல் போக.. மீண்டும்...தொடர்கிறேன்.  இன்னமுமே அவர்களை போன்று ”கட்” கொடுக்க, லாரி/பஸ் டயர் வரை சாய்ந்து வளைந்து செல்வது போன்றவை எல்லாம் செய்யவில்லை. செய்யத்துணியவும் இல்லை. சில்லறை பொறுக்கினால், முதலில் வரும் வார்த்தை “பொம்பளைக்கு இதெல்லாம் தேவையா? நீ என்ன ஆம்பளையா?”. சரி விடுங்க...


* மெட்ரோ ரயில் திட்டம் என்னமோ ரொம்பவும் பிடிக்கிறது. சென்னையை சுற்றி மிக அற்புதமான திட்டமாக தெரிகிறது. 2015 க்குள் முடியும் என்று சொல்லுகிறார்கள். அது வரை போக்குவரத்து நெரிசல், பள்ளம் மேடு..சகிப்புத்தன்மை நமக்கு வேண்டும்,  இல்லையென்றால் மட்டும்..?! :) சென்னைப்போக்குவரத்து புதுசா என்ன?

* அம்மா ஆட்சி - புதிய பச்சைக்கலர் அம்மா படம் போட்ட மாநகர பேரூந்துகளை கோயம்பேடு பஸ் நிறுத்தத்தில் பார்க்கமுடிந்தது. அர்ஜன்ட்டா ஒரு டவுட்.. அம்மா மாடு, ஆடு எல்லாம் கொடுக்கறாங்களே. .அதுக்கும் பச்சைக்கலர் அடிப்பாங்களா? !  அம்மா வாழ்க. அம்மா நாமம் வாழ்க !  பச்சைக்கலர் பெயின்ட் மேனுஃபேக்சுரர் கோடீஸ்வரர் ஆக !கோடிஸ்வரர் கம்பெனி யில் எனக்கு லட்சங்களில் சம்பளம் கிடைக்கும்படி ஒரு வேலை கிடைக்க. அட, பச்சைக்கலர் நம் வாழ்வியல்பை எங்கோ தூக்கி செல்கிறதே?!

* அலுவலகம் விட்டு வரும் போது மட்டுமே ஏடிஎம் போக நேரம் இருக்கும். 8 - 8.30 மணி வாக்கில் வீட்டுக்கு திரும்பும் போது அப்படியே வேளச்சேரி ஐசிஐசிஐ வங்கிக்கு செல்லுவேன். நான் செல்லும் போதெல்லாம் சொல்லிவைத்தது போல ஏடிஎம் மூடி இருக்கும்.. பணம் நிரப்ப ஒவ்வொரு முறையும் எப்படியும் 20 நிமிஷம் எடுத்துக்கொள்கிறார்கள். இதற்கு முன் , பணம் தீர்ந்துப்போனால் மட்டுமே வந்து நிரப்புவார்கள் என்ற எண்ணம் இருந்தது. ஆனால்  தினப்படி காலையிலிருந்து இரவு வரை பணத்தோடு சென்னையை சுற்றும் டீம் இருப்பதாக புரிந்துக்கொண்டேன். # செக்கியூரிட்டி கொடுத்த தகவல். இது வேலைக்கு ஆகாது என, அப்படியே பொடி நடையாக வந்து ஹெச்.பி பெட்ரோல் பங்க், பாங்க் ஆஃப் பரோடா வில் பணம் எடுத்துக்கொள்வேன்.

* தமிழ்நாட்டில் குல்ஃபி சாப்பிடுவது நின்று போய் பல வருடங்கள் ஆகின்றன. ரொம்பவும் மோசமான பல அனுபவங்களே காரணம்.:(. பைபாஸ் ஹெச்.பி பெட்ரோல் பங்க்; க்கும் அம்மன் கோயிலுக்கும் நடுவில், பஞ்சாப் குல்ஃபி (வண்டி) கடை ஒன்றில் குல்ஃபி ரொம்ப நல்லா இருக்கு.  # உயிரை பணையம் வைத்து கண்டுப்பிடிச்சது.

* ரவுண்டு க்கு முதல்முதலாக சென்ற வாரம் ஒரு கருப்பு பேன்ட் எடுத்தோம். நேற்று போட்டுக்காண்பித்தான், என் குழந்தைக்கு கருப்பு கலர் பேன்ட் ரொம்பவே நன்றாக இருந்தது. அகம் மகிழ்ந்து அவனை சுற்றி சுற்றி வந்து நிறைய போட்டோ எடுத்தேன். கண்ணு வைக்கிறோமே என என் வீட்டுக்காரரிடம் "குழந்தைக்கு அம்மா கண்ணுப்படும் சுத்திப்போடுங்ன்னு சொன்னது தான். "நாய் கண்ணு, நரி கண்ணு, பேய் கண்ணு, பிசாசு கண்ணு, பன்னி கண்ணு, பரதேசி கண்ணு, ரவுடி கண்ணு, ராங்கி கண்ணு, பிடாரி கண்ணு .........  ....................... " வேணாம் வலிக்குது !! இத்தோட நிறுத்திக்குவோம் !!

அணில்குட்டி : கவி= //நாய் கண்ணு, நரி கண்ணு, பேய் கண்ணு, பிசாசு கண்ணு, பன்னி கண்ணு, பரதேசி கண்ணு, ரவுடி கண்ணு, ராங்கி கண்ணு, பிடாரி கண்ணு// உங்களுக்குள்ள இவ்ளோ பேரா...?! சொல்லவே இல்ல.. சரி கடைசியா ..சுத்திப்போட்டுட்டு, உங்க முகத்தில தான் 3 தரம் தூ தூ தூ ன்னு துப்பினாங்கன்னு சொல்லவே இல்ல... மறந்துட்டீங்களாஆஆஆ?????????

பீட்டர் தாத்ஸ் : Sometimes, Your blog is your unedited version of yourself
.
Images :- 

நிலா வந்தாச்சி.. அணில் குட்டி வந்தாச்சி... :)

ஈரமான ரோஜாவே
ராத்திரி மயபேஞ்சி இருக்கும்...

என்னை பார்த்து மூடாதே
.டேய் யானை மண்டையா...நான் என்ன டப்பாவா மூட?

ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
அட சொன்னதையே சொல்லிக்கிட்டு...
 

 கண்ணில் என்ன சோகம் 
வேணாம்...வலிக்குது.. விட்ரு..

போதும் ஏங்காதே
அழுதுடுவேன்...

என் அன்பே ஏங்காதே (2)
டேய் பேசி தீத்துக்கலாம்... .அம்பு கொம்பு ன்னு கிட்ட வராத..

என்னை பார்த்து ஒரு மேகம்
உன்னையெல்லாம் பாக்கறதே தப்பு... இதுல...

ஜன்னல் சாத்தி விட்டு போகும்
மூச்சி முட்டி சாவவா?
. .. ..
என்னை பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்தி விட்டு போகும்
டாய் நிறுத்திக்கோ முடியல...

உன் வாசலில் எனை கோலம் இடு
நீ வாங்கற 5க்கும் 10க்கும் இது தேவையா?

இல்லை என்றால் ஒரு சாபம் இடு
நாசமாஆஆஆஆஆ போக... !! கேட்டு வாங்கறான் பாரு ....

பொன்னாரமே...
அட அது ஆரூஊஊ?

தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
கண்டுப்பிடிச்சிட்டார்டா.. கண்ணதாசன்....

என்னோடு நீ பாடிவா சிந்து
நானே அதிகம்.. இதுல சிந்து வேறையா...

ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
.. .. சொல்ல சொல்ல.... டோண்ட் மேக் மீ ஆங்ரி..

நேரம் கூடி வந்த வேலை
பனக்கொட்ட தலையா... கூடி வந்து கொட்டினாங்களாடா?

நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
பார்ரா பார்ரா... இவரு பெரிய இமாலய வீரர்...

நேரம் கூடி வந்த வேலை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
 இந்தா... நிப்பாட்டு ! 
 

என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை
சாவூஊஊ

கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை
டாஸ்மாக் கை குத்தகைக்கு எடுத்திட்டியா?

என் காதலி...
ஹய்யோ அம்மே அது நானில்ல..

உன் போல என்னாசை தூங்காது ராணி
மாத்தரை ய போடறா வென்று...  தூக்கம் வரலியாம்.....

தண்ணீரில் தள்ளாடுதே தோனி
ஏண்டா... தோனி  ய ஏண்டா நடுவுல இழுக்கற .

ஈரமான ரோஜாவே ஏக்கம் என்ன ராஜாவே
ஓ... இது அம்மணி......பாடு சாந்தா பாடு.. ..

கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

ம்ம்ம்ம்  ...காதலிக்கறாங்களாமாம்ம்ம்ம்ம் !

Note : Copied from a Radio program.

இன்றைய....
அட ! : என்னைப்போலவே ஒரு பெண் என் கூட பஸ் ல வராங்க.. நான் பார்க்கதப்ப அவங்களும்,அவங்க பார்க்காதப்ப நானும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துப்போம். 95% என்னைப்போலவே..  அட! :). இன்னைக்கும் அப்படியே.. அவங்க முகத்தை கம்பி மறைக்க, எட்டி பார்த்தேன்... அவங்களும்.. ! :) சட்டென்று இருவரும் பின்வாங்கினோம்... :) எனக்கென்னவோ என்னைவிட அவள் என்னை அதிகம் பார்ப்பதாக தோணுது..

அடச்சே ! : அரசம்ப்பட்டி ஆனந்த் முதல்.. அமெரிக்கா இளா’ வரை.. எளிதாக பயன்படுத்தும் வார்த்தை #$#%த்தா. !  # எங்கிருந்தாலும் தமிழன் டா !

பேரூந்து பிரயாணம்.....

வீட்டுக்குள் நம்மை பூட்டி வைக்கும் போதே,  நம்ம மூளை ஆயிரம் விஷயங்களை அசைப்போடும்.  வண்டியில் போனால், சிக்னலில் நிற்கும் 1-1.5 நிமிடங்களில் சுற்றி இருப்பதை கவனித்தாலே இன்னும் பல ஆயிரம் விஷயம் தலைக்குள் புகுந்து குடைச்சல் கொடுக்கும்.. வண்டி சர்விஸ் விடும் ஒரு நாள், பஸ்ஸில் தான் போக வேண்டி இருக்கும். அந்த ஒரு நாளில் 10-15 கதைகளோடு வீட்டுக்கு வருவேன். இப்போது தினம் பஸ்ஸில் செல்கிறேன். கேட்கனுமா?  குறைந்த காலத்தில், பஸ் பயணம் எரிச்சல் ஊட்டுகிறது. பணம் கொடுத்து நாம் உண்டு நம் வேலை உண்டு என்று தான் சென்று வருகிறோம். ஆனால் சுற்றி நடக்கும் விஷயங்கள் பொறுமையை இழக்க செய்து, கோவமும் எரிச்சலும் தான் மிஞ்சுகிறது. வாயை திறக்காமல் வர ரொம்பவே சிரமப்பட வேண்டி இருக்கிறது.

பார்க்கும் காட்சிகள் :

1. ஆண்களும் பெண்களும் மணிக்கணக்காக செல் ஃபோனில் சத்தமாக பேசி வருவது. இது ஒரு தொடர் நிகழ்வு :(. அதுவும் காதலனும் காதலியும் பேசிக்கொள்ளும் கருமத்தை காதுக்கொடுத்து கேட்கமுடியவில்லை. காதலன்’கள் இப்படி பொதுவெளியில் பேசுவதில்லை (உஷார் மாக்கானுங்களாச்சே!) , பெண்கள் தன் நிலை இழந்து பேசுகிறார்கள். இவர்கள் பேசுவதிலிருந்து எதிர்பக்கம் கொஞ்சுவது காதலன் என்று தெரியவருகிறது. காதலிகளைப் பார்க்க பாவமாக இருக்கிறதே ஒழியே, வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

2. அலுவலக, வீட்டு பிரச்சனைகளை சுற்றம் பாராது, கத்தி பேசுகிறார்கள். இரண்டு நாளைக்கு முன் ஒரு உயர் அதிகாரி, தன் சக ஊழியரிடம் கோவத்தில் கத்திய கத்தில், பஸ்ஸே டக டக டிகு டிகு ன்னு ஆடியது.  அத்தனை முகங்களும் அவரின் குரலுக்கு அலண்டுப்போய் அவரைப்பார்க்க, அவரோ, எதையும் கவனிக்காது  கத்துவதை மட்டுமே தொடர்ந்து செய்துக்கொண்டு இருந்தார். :(

3. வேலைக்கு செல்லும் போதும், திரும்ப வரும் போதும், நம்ம ஐ.டி நாயகிகளும் நாயகர்களும் அந்த ஐடி கார்ட் ஐ கழட்டாமல் காட்டும் சீன் இருக்கே !  யப்பா.. .!! :) ஷாப்பிங் காம்பளக்ஸ், சினிமா தியேட்டர்,  பஸ் நிறுத்தங்கள், கடைகள், பீச், ஹோட்டல் என்று எதுவும் இவர்களுக்கு பாக்கி இல்லை, எங்கு போனாலும் ஐடி கார்ட் டோடு தான் போகிறார்கள்...”கொண்டை”  பளீச் ந்னு தெரியுது.! :)

4. நடுத்தரவயது மற்றும் வயதான கணவன் மனைவி வந்தால், மனைவியிடம் பணம் வாங்கித்தான் கணவர் டிக்கட் எடுக்கிறார். மனைவி சொல்லும் இடத்தில் தான் அமருகிறார், எழுந்திருக்கிறார், பேசுகிறார், சிரிக்கிறார். மனைவி சொல்லே மந்திரம். இது பொதுவாக 90% காணமுடிகிறது. பெண்கள் ஆட்டி படைக்கிறார்கள் ! :)

5. டாஸ்மாக் கடையில் ஒரு பெண், ஒரு சின்ன பாட்டில் வாங்கி, அதை ரவிக்கைக்குள் வைத்துக்கொண்டு, பார் என்று அம்புக்குறி போட்டு இருந்த சந்தில் நுழைந்து சென்றார்.  குடிக்கத்தான் உள்ளே செல்கிறார் என்றால், ஏன் பாட்டிலை ரவிக்கைக்குள் ஒளிக்க வேண்டும் ?!  (கூகுல் பஸ் ஸில் இதை மட்டும் பதிவிட்டேன்)

6. பள்ளி மாணவர்கள் 5-10 வகுப்புக்குள் இருக்கும், எல்லா வயது பிள்ளைகளும் மிகச்சரளமாக தமிழில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளும் பேசுகிறார்கள் ! :(((((((((   எங்கே சென்றுக்கொண்டு இருக்கிறோம் என்று புரியவில்லை. :(((((. அதாவது, அந்த வார்த்தைகளை கோவத்திலோ, சண்டை போடும் போதோ பயன்படுத்தவில்லை (நான் அப்படி பேசுபவர்களை தான் பார்த்திருக்கிறேன்)  இயல்பாகவே அவர்களின் மொழியே அப்படித்தான் இருக்கிறது. :((

7. எப்போதுமே எனக்கு இந்த சந்தேகம் உண்டு. பெண்களுக்கு எப்படி மேக்கப் செய்ய இத்தனை நேரம் கிடைக்கிறது? அதுவும் காலை வேலை பரப்பரப்பில்..?  பொறாமை' என்று சொல்லமுடியாது, எனக்கு மேக்கப் என்பதே 100% இவர்களை பார்க்கும் போது தான் நினைவுக்கே வருகிறது. சிலர், 1 இன்ச்’க்கு 2 கோட் வீதம் பூசிக்கொண்டு வருகிறார்கள் . ... கொஞ்சம் பயம் வரத்தான் செய்கிறது!

8. பல அழகான பெண்களை பார்க்க முடிகிறது. மிகவும் லட்சணமாக , சாந்தமாக இருக்கும் பெண்களை பார்க்கும் போது ஏனோ ஒரு அமைதி மனதுக்குள் நிலவுவதை தடுப்பதற்கு இல்லை.

9. ஸ்லீவ் லெஸ் அணியும் பெண்கள் கையைத்தூக்கும் வரை அழகாகத்தான் இருக்கிறார்கள். பேரூந்தின் ஆட்டத்தில் மேலே பிடிக்க கையை தூக்கினார்கள் என்றால்..... கடவுளே... ! :((((( என்ன கொடுமை இது ?!! :(.  வீட்டில் கையைத்தூக்கி கண்ணாடியில் ஒரு முறை இவர்களே இவர்களை பார்த்தால் மற்றவர்களின் நலன் பாதுக்காக்கப்படும். !!  இந்த கொடுமையை பஸ் ஸை தவிர ஜிம் மில் அதிகமாக அனுபவித்து இருக்கிறேன். நானாவது தள்ளி தூரப்போய் விடலாம். ட்ரைனர்களின் நிலைமை ரொம்பவே பாவம். சிலர் சகிக்கமுடியாமல் ஒன்றும் பாதியுமாக சொல்லிக்கொடுத்துவிட்டு தலைத்தெறிக்க ஓடி வந்துவிடுவதும் உண்டு.

10. நடத்துனர் சிலரிடம், சில்லறை திருப்பிப்பெற போராட்டமே நடத்தவேண்டி இருக்கிறது. சில்லறை திருப்பி க்கேட்கும் போது அவர்களுக்கு வரும் கோவத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. 50 பைசா நிச்சயமாக திரும்பி வருவதில்லை. அதிகபட்சமாக 5 ரூ வரை மனசாட்சியே இல்லாமல் ஆட்டையை போடுகிறார்கள். இந்தியா நன்றாகவே வளர்ந்துக்கொண்டு வருகிறது. !

11. சில நடத்துனர்கள் பள்ளியில் குழந்தைகளை நடத்துவது போன்றே பிரயாணம் செய்பவர்களையும் நடத்துகிறார்கள். நேராக போயி வலது பக்கம் திரும்பி இடது பக்கம் பார்த்து நிற்கவும்,  இங்கே நிற்கக்கூடாது அங்கே நிற்கக்கூடாது என ஓவர் இன்ஸ்ட்ரக்ஷ்னஸ் ரூல்ஸ் யுவர் ஆனர்.. முடியவில்லை !  அவர்கள் சொல்லுவதை காதில் வாங்காமல் இருந்தால், பஸ்ஸில் இருப்போர் அத்தனை பேர் காதில் விழும்படி கத்தி கூப்பாடு போடுகிறார்கள். 

12. சந்தோஷமான ஒரே விஷயம் கைக்குழந்தைகளும், குட்டி குட்டி சிட்டுகளும், மொட்டுகளும் செய்யும் சேஷ்டைகளும், மழலையில் கொஞ்சி, அழுது, அடம் பிடித்து கத்தி ஆர்பாட்டம் செய்வதும் பார்க்க பார்க்க கண் ஆயிரம் வேண்டும்.

13. பக்கத்தில் உட்காரும் ஆண்களின் உடல் மொழி.. :) இயல்பாக இருக்கமுடியாமல் ஏன் இப்படி தவிக்கிறார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். ஒன்று அட்டென்ஷன், இல்லைன்னா ஓவர் ஸ்டேன்ட் அட் ஈஸ்.. இது இரண்டுக்கும் நடுவில் ஒரு நிலைபாடு இருக்கிறது என்பது இவர்களுக்கு தெரியவே தெரியாதா என்பது எனக்கு தெரியவில்லை.

14. தினம் பார்க்கும் முகங்கள், சிலர் அறிமுகமானதில் (பார்த்துக்கொள்வதை வைத்தே) சிரிக்கிறார்கள். பலர் கண்டுக்கொள்வதில்லை. அவர்களில் நானும் ஒருத்தி. சிரித்தால் திரும்ப சிரித்தும், முறைத்தால் திரும்ப முறைத்தும் ... :)

15.கடைசியாக, போக்குவரத்து நெரிசல். தொடர்ந்து தினப்படி போக்குவரத்து நெரிசல் நான் செல்லும் வழியில் அதிகமாக இருக்கும் பகுதி : கிண்டி - சின்னமலை - ஹால்டா ஜக்‌ஷனை சொல்லலாம். மாலை நேரத்தில் எப்போதுமே அங்கு நெரிசலோ நெரிசல். அதை அடுத்து திருமங்களம். இங்கு காலநேரமின்றி நெரிசல் காரணம் மெட்ரோ ரயில்.

அணில் குட்டி : இன்னும் என்னென்ன வெளியில் வரப்போகுதோ.. வூட்டுக்குள்ள பூட்டி வைங்கன்னா கேட்டா த்தானே.. அவங்க கஷ்டம் அவங்களுக்கு... பாவம்.. தாக்குப்பிடிக்க முடியலப்போல... :((

பீட்டர் தாத்தா : A bus is a vehicle that runs twice as fast when you are after it as when you are in it”

ஏதேதோ சொல்கிறேன்...


கல்லும் கடவுளும் !

கல்லை செதுக்கி
சிலை வடித்தான் சிற்பி

கடவுளாக பாவித்து
வேண்டியவை வேண்டினான் !!

கடவுள் அசைவேனா என்றது  !!
கோபமும் ஏமாற்றமும் சிற்பிக்கு..

சிற்பம் அப்போதும் இப்போதும்
"கல்" தான் !!

செதுக்குமுன் கல்லாகவும்
பின்னே கடவுளாகவும் பார்த்தவன் சிற்பி !

யார் தவறு ???

நம்பிக்கை

அடுத்தவரை நம்புவது
பொய்க்கிறது !
என்மேலேயே நம்பிக்கை
வைக்கிறேன்..
அதுவும்
பொய்க்கிறது.. :))))))
நம்பிக்கையை
அர்த்தமற்றதாக்கும்
வாழ்க்கை....!!

ஆசை

"ஆசையே துன்பத்துக்கு காரணம்! "
சொன்ன
புத்தர்
துறவியானார்..

துறவும்
ஆசைதானே.....???!!

இவரது ஆசையில்
துன்பப்பட்டது
இவரது மனைவியும் குழந்தையும் ..........

துறவியாகக்கூட
ஆசை
இருப்பதில்லை
வெறுமை
மனதை சூழும் போது... !

வெறுமைகள்
ஆசைகளை
அறவே
அகற்றுகின்றன !!

துரத்தல்

விடுபட்டு
ஓடும் நேரங்களில்
பிடித்து இழுக்கும்
இதயங்கள்..

திரும்பினால்
திரும்ப
ஓடவிடும்
அதே
இதயங்கள்.. !

இதயங்களின் மேல்
தவறில்லை
அவற்றை இயக்கும்
வாழ்க்கை... ???

ஓடிப்பிடிக்கும்
ஓட விடும்
"நிற்க " மட்டும்
விடவே விடாது...  !

பார்வைகள்

கடந்து செல்லும் கால்களை
அனிச்சையாய்த் தொடுகிறது
செருப்பு தைப்பவரின்
பார்வை !

*Image - thx google 
.

காதலிக்க நேரமில்லை..

காதலிக்க வயது வரம்பு இருக்கிறதா என்ன.. ? காதல் என்ற வார்த்தை ஒரு ஆணிடம்/பெண்ணிடம் உடல், மனம் சார்ந்த ஒன்றாக மட்டும் பார்க்காமல் கேட்கப்படும் கேள்வியாக இருந்தாலுமே, வயது வரம்பு இருப்பதாக தெரியவில்லை. அப்படித்தான் வரலாறுகள், நடைமுறை கதைகளும் சொல்கின்றன.

காதல், காதலிக்கும் வயதில் பலமுறை என்னை நெருங்கி வந்து, அதை கடக்கவிட்டு ஒதுங்கி இருக்கிறேன். எனக்குத்தான் என்னவோ காதலிக்க நேரமில்லை.

நேரமில்லை என்பதை இப்படியும் மாற்றி சொல்லாம்.. வயிற்றில் பசி, எதிர்காலத்தைப் பற்றிய பதில் தெரியாத ஆயிரம் கேள்விகள் நிறைந்த வாழ்க்கை பயணம், வளர்ப்பவர்களின் மேல் இருந்த அதீத காதல் இவற்றை எல்லாம் தாண்டி எனக்கு காதல் வரவேயில்லை. 

எந்த ஆணும் என்னை ஈர்க்கவேயில்லை. இந்த பக்கம், என்னிடம் காதல் சொல்லி வந்தவர்களை பார்த்து, அறிவே இல்லாதவர்கள் என்ற எண்ணமே வந்தது. இப்படி வரக்கூடிய வயதல்லவே, இருந்தாலும் வந்தது, அப்போதே வாழ்க்கை கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்த பாடம்  "காதல்" என்ற வார்த்தைக்கும் எனக்கும் எப்போதும் சம்பந்தம் இல்லை என்பதை உணர்த்தியது.  காதலிக்க தகுதியில்லாத ஒரு பெண்ணாக என்னை நானே பார்த்தேன் அல்லது அப்படித்தான் இருக்கவேண்டும் என்ற பிடிவாதம் எனக்கு இருந்தது. அழகு என்பது இதற்கு ஒரு தடையாக இருப்பதாக நினைக்கவில்லை. 

எத்திராஜ் கல்லூரியில் முதலாமாண்டு, சென்ரல் ஸ்டேஷனில், ரயிலுக்கு தினமும் மாலை ஓடி வந்து அமருவேன், அந்த ரயிலை விட்டிவிட்டால், இன்னமும் 40 நிமிடங்கள் அடுத்த ரயிலுக்கு நிற்கவேண்டும், காலையில் சாப்பிட்டு இருக்கமாட்டேன், அதிகாலையில் நான் கிளம்பும் நேரத்தில் சித்தப்பாவீட்டில் சாப்பாடு ரெடியாகி இருக்காது. காப்பி குடித்த வயிற்றோடு கிளம்பி இருப்பேன். காலேஜ்'  ஜில் ஆன்ட்டியின் முயற்சியில், கேண்டீனில், மதியம் இலவச சாப்பாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இலவச சாப்பாடு வாங்கி சாப்பிடுவதால், கேண்டீனில் வேலையாட்கள், எங்களை ஒரு பொறுட்டாக மதிக்க மாட்டார்கள், பசியோடு வெகு நேரம் ஓரமாக நிற்க வேண்டும், பணம் கொடுத்து வாங்குபவர்கள் அத்தனை பேரும் வாங்கி சென்றவுடன் தான் கொடுப்பார்கள், அப்படி காத்திருக்கும் பல சமயங்களில், உணவு தீர்ந்து போயி இருக்கும். ஏதோ கிடைப்பதை வாங்கி வந்து, தோழிகள் பிடிங்கியது போக சாப்பிட்டாலும், வயிறு காது கிழியும் படி சத்தம் எழுப்பும். வயதுக்கே ஏற்ற கெளரவம் நிறைய இருக்கும், பசி என்று யாரிடமும் சொல்லக்கூடாது, தோழிகளிடமும் காட்டிக்கொள்ள பிடிக்காது.  வெளியில் காட்டிக்கொள்ளாத திருட்டு சிரிப்பை அந்த கெளரவம் வரவழைக்கும்.  கொஞ்ச நாளில் இரண்டு வேளை  "பசி" பழகிப்போனது. 

இத்தனை பசியோடு மாலை ரயிலில் உட்கார்ந்து இருக்கும் போது, எதிரில் வந்து அமரும் "அரசு" என்ற இளைஞர் மூன்றாம் ஆண்டு பிரசிடன்ஸி கல்லூரி மாணவர், என்னை காதலிப்பதாக சொன்னபோது, சிரிப்பு தான் வந்தது. என்னை தினமும் ஒரு 35 நிமிட பயண நேரத்தில்  சில வாரங்களாக பார்த்திருக்கிறார், பேசி இருக்கிறார்.  அவருக்கு காதல் வந்துவிட்டது. என்னைப்பற்றி எதுவும் அவருக்கு தெரியாது, என் படிப்பு, காலேஜ் தவிர.  எனக்கு? எனக்கு அவரைப்பற்றி தெரிந்துக்கொள்ளும் ஆர்வமே இல்லை. என்ன காரணம் அவர் என்னை காதலிக்க? ஒரு மண்ணும் இருப்பதாக எனக்கு அப்போது தோன்றவில்லை.  யாரென்று தெரியாத, ஒரு சீனியர் மாணவர் என்ற பயமின்றி, அவர் ஒரு ஆண் என்ற தயக்கமின்றி, எதை எதையோ பேசிக்கொண்டு வந்தது காரணமாக இருக்கலாம். இருந்த பசியிலும் அவன் வேற்கடலை வாங்கி சாப்பிட்டு எனக்கு கொடுத்த போது, வேண்டாவே வேண்டாம் என்று தடுத்துவிட்டது காரணமாக இருக்கலாம். அவர் கண்ணுக்கு நான் அழகாக தெரிந்திருக்கலாம்.

அழகு என்பதை தாண்டி வாழ்க்கையில் பல விஷயங்கள் இருக்கிறது என்பதை உணர்ந்திருந்தேன். என்னையும் சேர்த்து யாருடைய அழகும் எனக்கு ஆர்வமளிக்கவில்லை, அவரின் காதல், மனிதர்கள் எத்தனை முதர்ச்சி இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்ற அதிருப்தியை தந்தது. ரயிலை மாற்றினேன்,  என்னை த்தேடி சுற்றி வர முயற்சி செய்தாரா என்றால், ஒரே முறை, வழிமறைத்து பேசியதாக நினைவு. வழியையும் மாற்றிக்கொண்டேன். யாரையும் நீ மாறி விடு என்று சொல்வதை விடவும், என்னை மாற்றிக்கொள்வதை அப்போதே வழக்கமாக்கி கொண்டிருப்பதை இப்போது நினைவு கொள்கிறேன்.

காதல் என்பதே பிடிக்காமல் போனது, வித்தியாசம் இல்லாமல் பேசும் பழக்கமே சிலருக்கு என் மேல் காதல் வர காரணமாக எனக்கு தோன்ற ஆரம்பித்தது. அது சரியா இல்லையா என்று அந்த சிலரிடம் கேட்டு தெரிந்துக்கொண்டேன், அதுவும் சரி என்ற பதிலில் எனக்கு திருப்தி. பேசுவதை மாற்றிக்கொள்ளவில்லை, காதலுடன் வந்து நிற்பவர்களை மட்டும் மாற்றிக்கொண்டே வந்தேன். பழகுபவர்களின் எண்ணிக்கை குறைந்தது. ஆண்கள் என்றாலே தள்ளி இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக என்னை ஆட்க்கொள்ள ஆரம்பித்து, செயற்படுத்தியும் வந்தேன், வருகிறேன்.

காதல் இல்லாத வாழ்க்கை வேண்டும் என்ற எண்ணமும் எப்போதும் இருந்தது. காதலிக்க தகுதியில்லாத ஒரு பெண்ணை காதலிக்கிறேன் என்று சொல்லுபவர்களை என்னவென்று சொல்வது?!  இதை தான் கண் மூடித்தனமான காதல் என்பார்கள், புரிந்துக்கொண்டு காதலிக்க முடியாதளவு முரண்பாடனவளாக இருக்கிறேன் என்பது எனக்கு தெரியும்.புரிந்தவர்கள் என்னை விட்டு விலகி தான் செல்வார்கள் என்பார்கள் என்பதும் எனக்கு தெரிந்திருந்தது. அதனால் புரிந்ததாக நினைத்துக்கொண்டு, புரியாமல் காதலிப்பவர்களை எனக்கு பிடிக்காமல் போனது. எனக்கு பிடித்தவர்கள் யாரையும் காதல் என்ற வரைமுறைக்குள் கொண்டுவரவில்லை அல்லது என்னுடைய பிடித்தம் காதலாக இருக்க வாய்பில்லாமல் இருந்தது அல்லது அதையும் தாண்டி ஏதோ ஒன்றாக இருந்தது.  எல்லாவற்றையும் கடந்து வரும் போது அல்லது சில பல காலம் அதிலேயே தொக்கி நிற்கும் போது,  அனுபவம் கிடைக்கிறது. அனுபவம் மட்டுமே நம் அறிவை கொஞ்சமாக வளர்க்க உதவுகிறது. அதையும் பலமுறை தவறவிடுவது எனக்கு பழக்கமாகி இருந்தது.  

நண்பர் ஒருவரிடம்,  என்னை உடல் சார்ந்து பார்க்காமல் இருக்கும், ஆண்கள் இருக்கும் இடத்தில் இருக்க விரும்புகிறேன், அப்படி ஆண்கள் உண்டா ? அல்லது அப்படி ஒரு இடம் இருக்கிறதா? என்றேன். நண்பரின் பதில், "இல்லவே இல்லை :)" உலகத்தில் எந்த மூலைக்கு சென்றாலும் ஆண்கள் உண்டு, அவர்களின் எண்ணங்களினால் பெண்களின் மீதான பார்வையை உன்னால் கட்டுப்படுத்தவோ.மாற்றவோ முடியாது , அது இயற்கை" என்றார்.   காதல் என்பது உடலும் சார்ந்தது என்பதில் சந்தேகம் இல்லை. அப்படி இல்லை என்று யாரும் விவாதிக்க வேண்டியதே இல்லை. நேர விரயம்.

காதலிப்பவர்களை பார்க்கும் போது எல்லாம், இவர்களின் வயிற்றுக்கு நேரத்திற்கு சோறு கிடைக்கிறது, தேவையான பணம் கிடைக்கிறது, நாளை எப்படி இருக்கும் என்ற கேள்வியோ, பாதுகாப்பு பற்றிய பயம்மோ இல்லை.  பெற்றோர் இருக்கும் ஒரு வீட்டில், பெற்றோர் இல்லாமல் தனியான தன்னை தானே கவனித்து, மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் தொந்தரவாக இருக்கக்கூடாது என்பதற்காக எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்ற நம் செய்கைகளைப்பற்றிய சுய அலசல், கட்டுப்பாடு, அடுத்து எப்படி இருக்க வேண்டும் என்ற யோசனை எதுவும் இவர்களுக்கு இருப்பதில்லை, வாழ்க்கை இவர்களுக்கு மிகவும் எளிமையானதாக, கேள்விகள், பயம் உணர்வு போன்றவை இல்லாததாக இருக்கிறது,அத்தோடு பெற்றோர் சம்பாதிக்கும் பணமும், பாதுக்காப்பும், உதவியும், உடையும், உட்கார்ந்த இடத்தில் சாப்பாடும் கிடைக்கிறது.  அதனால் காதல் வருகிறது.. .அது சுகமாகவும் இருக்கிறது..

எனக்கு வரவில்லை... காதலிக்க நேரமில்லாமல் என் தலையில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தன... என்னைப்பற்றி புரிந்துக்கொள்ளாமல் என்னை காதலித்தவர்கள் எல்லாம் எனக்கு இன்னமும் முட்டாள்களாவே தெரிகிறார்கள். பாவம் ஒரு வேளை அவர்களில் யாரையாவது என்னை திருமணம் செய்திருந்தால் நிம்மதியை இழந்திருப்பார்கள், வாழ்க்கையின் அத்தனை கஷ்டமும் என்னாலேயே என என்னை அடித்து, துரத்தி இருப்பார்கள்.  காதலே வேண்டாம் என்று வந்ததால், அப்படிப்பட்ட  துக்கம் எனக்கு இல்லை.

இன்னமும் என்னை நேசிப்பவர்களுக்கும், என்னால் நேசிக்கப்படுவர்களுக்கும் எப்போதும் பிரச்சனையாகவே இருக்கிறேன்...... ம்ம்ம்ம் . :( இதற்கும் மேல் என்ன சொல்ல...

அணில் குட்டி : எச்சுச்சுமீ கவி... எதுக்கு இந்த....ஃப்ளாஷ்ஷூ...பேக்கூ.. ?!! 

பீட்டர் தாத்ஸ் : One of the hardest things in life is having words in your heart that you can't utter
.



க்ளிக்..க்ளிக்...க்ளிக்...

 ஏடிஎம் க்யூவில் நிற்கும் குழந்தைகள். உடன் வந்த குழந்தைகளின் அப்பா , வெயில் அதிகமாக இருக்கிறதென்று, குழந்தைகளை வெயிலில் நிறுத்திவிட்டு அவர் நிழலில் போய் நின்றுக்கொண்டார். :(

 :))) ????????? :))))))

 கை, கால் எல்லாம் நல்லாத்தான் இருக்கு,  பஸ்ஸில் வந்து, நோட்டிஸ் கொடுத்து பிச்சை எடுத்து பிழைக்குது !! :(. 
மொட்டைத்தலையில் சுரேஷ் நல்லாத்தான் இருக்கானில்ல ?! :)
 மாரியம்மா மாரியம்மா.. ஆடி மாசம் ! :) சிங்கத்துக்கு ஒரு கண்ணு மிஸ்ஸிங்..!:)
 ஒரு வீட்டு மதில் சுவரில்...
மேலுள்ள அம்மனும் இந்த அம்மனும் ஒரே இடத்தில் மாறி மாறி வருகிறார்கள். லைட்டிங் எஃப்க்ட் ! :)

படங்கள் : மொபைல்' லில் எடுத்தவை.

யாரும் உதவி செய்ய முடியுமா?

பேரூந்தில் தொடர்ந்து பிரயாணம் செய்து பல ஆண்டுகள் சென்ற நிலையில், திடீரென பேரூந்து பயணம் செய்ய ஆரம்பித்ததன் விளைவு, இந்த பதிவு. :(. இரு சக்கர வாகனத்தில் போகும் போதும் நம்மைச்சுற்றி நடக்கும் பலவற்றை பார்க்க நேரும் தான், ஆனால், இத்தனை நிதானமாக, வேடிக்கை பார்த்து செல்லும் பயணமாக அது இருந்ததில்லை. பேரூந்து பயணத்தில், அதிக நேரம், நிதானம், பார்வையை வெகுதூரம் செல்ல வைக்கமுடிகிறது, அதற்காக யோசிக்கவும் முடிகிறது.

தினந்தோறும், சென்று திரும்பும் வழியில் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 10-12 திக்கற்ற, தெருவில் தன் நிலை உணராத, வித விதமான மனித உயிர்களை பார்க்கிறேன். இது வரையில் பார்த்ததில் எல்லோருமே ஆண்கள். பெண்கள் இன்னும் கண்ணில் படவில்லை. பெண்கள் பட்டு இருந்தால் இன்னமும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பேன்.

பல வீடுகளில் பார்த்திருக்கிறேன், நாய், பறவைகள் மற்றும் மரம்,செடி,கொடிகளை தன் வீட்டு குழந்தைகளை போல கவனித்துக்கொள்வார்கள். அந்த அன்பில் ஒரு 5 சதவிகிதமாவது இந்த சக மனித உயிர்களிடம் நாம் காட்டலாம் என்பது என் கருத்து. நேற்று கிண்டி அருகில் ஒரு பெரியவரை பார்க்க நேர்ந்தது. உட்கார்ந்த நிலை, கிழிந்து நைந்துப்போன ஆடைகள், முழங்காலுக்கு கீழே ஏதோ நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். கூட்டமாக கொசுக்களும், ஈக்களும், பூச்சிகளும், புழுக்கழும் மொய்க்க , நடக்க இயலாத நிலை. அவற்றை பார்த்து பழகிப்போன அவரின் மனம், கண்கள், கைகள்....செயலற்று இருந்தன.  இடுப்பை இழுத்து இழுத்து நகர்ந்து வந்துக்கொண்டு இருந்தார். என்ன கொடுமை இது??!! இதை நான் பார்த்திருக்கிறேன்... :(( ..என் நெஞ்சை விட்டு அவரின் புழுக்கள் மொய்த்த கால்கள் இன்னும் நீங்கவில்லை.

முன்னரே, இது சம்பந்தப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு ,இவர்களை ப்பற்றிய தகவல் சொல்லி உதவிக்கேட்டு பழக்கம் இருந்தாலும், தகவல் கொடுப்பதோடு நம் வேலை அங்கு முடிந்துவிடுவதில்லை. தொண்டு நிறுவன ஊழியர்கள் சொல்லும் நேரத்திற்கு, நாம் அங்கு நின்று, ஆட்களை அடையாளம் காட்டி, நாம் தான் அவர்களை அழைத்தோம் என்பதை சொல்லி, இந்த மனிதர்களை அவர்களுடன் அனுப்பி வைக்க வேண்டும். இப்படி, பல சமயங்களில் என்னால் அந்த குறிப்பிட்ட இடங்களில், தொண்டு நிறுவன ஊழியர்கள் வருகிறேன் என்று சொல்லும் நேரத்தில் காத்திருக்க முடியாமல் போகும் போது, அவர்களை பற்றிய விபரங்கள் சொல்லி உதவி கேட்டு வைப்பதிலும் எந்தவித பயணம் இல்லை என்று உணர்கிறேன். ஏனென்றால், நாம் வர முடியவில்லை என்று சொன்னால், தொண்டு நிறுவன ஊழியர்களும் வரமாட்டார்கள்.

இந்த நடைமுறை பிரச்சனையால், நாமே ஏன் இவர்களை அழைத்துக்கொண்டு விட்டுவிட கூடாது என்ற யோசனை தோன்றியது. இதனை என்னால் தனியாக செய்யமுடியுமா என்றால், முடியாது என்ற பதிலோடு, உங்களிடம் உதவி க்கேட்டு நிற்கிறேன்.

எதிர்பார்க்கும் உதவியும் திட்டமும் :-

1. ஒரு வேன் (அதற்கான கட்டனத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன், இருப்பவர்கள் உதவி செய்யலாம், வாடகைக்கு அமர்த்துவதாயின் அதையும் நான் செய்துக்கொள்கிறேன்)
2. இவர்களை அழைத்து,/தூக்கி செல்ல இரண்டு அல்லது மூன்று நபர். குறிப்பாக ஆண்கள்.
3. ஏதோ ஒரு விடுமுறை நாளில் அரை நாள் / ஒரு நாள் சென்னை நகரில் ஒவ்வொரு பகுதியாக செல்ல திட்டம்
4. இந்த மனிதர்களை தொட்டு தூக்கி/ அழைத்து செல்லும் மனப்பக்குவம் சகிப்புத்தன்மை உடல்வலிமை
5. அவர்களை தொண்டு நிறுவனத்தில் சேர்க்கும் வரை, உடன் வருவது.

தன்னார்வு தொண்டு நிறுவனங்களில் முன்னரே பேசி இவர்களை சேர்க்க அனுமதி ப்பெற்று விடுகிறேன். இதை அவர்களிடம் சொல்லி, ஒரு விடுமுறை நாளில் நீங்களே செய்யலாமே என்று கேட்கலாம். தன்னார்வு தொண்டு நிறுவனங்களில் இதுவரை பேசியதில், யாரும் நம் நேரத்திற்கு தகுந்தார் போன்று வர தயாராக இல்லை. அவர்கள் அழைக்கும் நேரத்திற்கு நாம் அங்கு இருக்க வேண்டும். பொதுவாக அவர்கள் அழைக்கும் நேரங்கள், அலுவலக நேரங்களாகவே உள்ளதால் நடைமுறை சிக்கல் ஏற்படுகிறது.

மேலும் இந்த உதவியை செய்ய விரும்புபவர்கள், தானாகவே, நல்ல உள்ளத்தோடு, மனமுவந்து செய்ய முடியுமாயின் வரவும்.

ஆர்வமும் எண்ணமும் இருப்பவர்களும், இதைத்தவிர்த்து இதனை வேறு எப்படி சாத்தியப்படுத்த முடியும் என்று யாருக்கும் தெரிந்தாலும் எனக்கு
gkavith [at] gmail [dot] com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பவும்.

அணில் குட்டி : ம்ம்ம்ம்... . அம்மணி.. எல்லாத்தையும் தனியா செய்வீங்களே இதுக்கு மட்டும் ஏன் ஆள் சேக்கறீங்க..?


பீட்டர் தாத்ஸ் : If we have no peace, it is because we have forgotten that we belong to each other - Mother Teresa
.

ரேடியோ ஜாக்கி !

ஆல் இந்திய ரேடியோ சென்னை வானொலி நிலையம் ! :) / இதே புதுச்சேரி க்கும் பெயர் மாறி வரும். அறிவிப்பாளாராக இரண்டு வானொலி நிலைத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்டு, புதுச்சேரி க்கு அவர்கள் அழைக்கும் நேரம் இங்கிருந்து சென்று வர முடியாமல் ஏறக்கட்டி விட்டு, சென்னையை மட்டும் தொடர்ந்தேன்.

காலை 6 மணிக்கு இருக்க வேண்டும். என்ன பேசப்போகிறோம் என்பதை எழுதி வைத்து, நிகழ்ச்சி இயக்குனரிடம் அப்பூருவ் வாங்கிட்டு தான் ஸ்டூடியோ விற்கு போகனும். சென்னை வானொலி நிலைத்தில் ஏகப்பட்ட ஸ்டூடியோக்கள். பலதை நான் பார்த்ததில்லை என்றே சொல்லனும். ஆனால் சில ஸ்டூடியோக்கள் மட்டுமே தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்த பயன்படுத்துவார்கள். தனிப்பட்ட்ட ரெக்கார்டிங் என்றால் நம் இஷ்டத்திற்கு, ஏதோ ஒரு ஸ்டூடியோவிற்கு சென்று செய்துக்கொள்ளலாம். லைவ் நிகழ்ச்சிகள் நடக்கும் ஸ்டூடியோக்கள் மட்டும் பார்க்க ரொம்ப ஆர்வமாக இருக்கும். எல்லோரும் ரொம்பவும் பிசியாக இருப்பார்கள். குறிப்பாக பிரபலங்கள் பலர் வருவார்கள்.

4 மணிக்கு எழுந்து வீட்டு வேலை முடித்து, நவீனுக்கு சாப்பாடு, எனக்கு சாப்பாடு காலை மதியம் எல்லாம் பேக் செய்துவிட்டு, எனக்கு கையில் எடுத்துக்கொண்டு, 5.30 க்கு கிளம்பி. வண்டியை என் வேகத்திற்கு விரட்டுவேன். எப்படியும் சரியான நேரத்திற்கு போகாமல் திட்டு வாங்குவேன். எனக்கு முன் நிகழ்ச்சி செய்பவர் நான் வரும் வரை காத்திருந்து மைக் ஐ தருவார். :). அதனால் கூட பயமில்லாமல் லேட்டாக போவேனோ என்னவோ. :). 8.30 க்கு என் நேரம் முடியும். வானொலி நிலைய கேண்டினில் காலை டிபன் எடுத்து சென்றதை சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்து நேராக அலுவலகம், வீடு வர மாலை 6.15 ஆகும்.

என்னால் முடியும் என்று உழைத்த நாட்கள் இவை. இனியும், எப்பவும் இப்படி உழைத்துக்கொண்டு இருக்க ஆவலாக த்தான் இருக்கிறது. இப்போது, பஸ் ஸில் போவதால் தினமும் ரேடியோ கேட்க முடிகிறது. எங்களுக்கு உச்சரிப்பு, வார்த்தை பிரயோகம், எந்த வார்த்தைகள் ஏர்' ல் போகக்கூடாது என்று சொல்லிக்கொடுக்கப்பட்டது. குறிப்பாக "அம்மா" வந்தால் எடுத்து விடுவார்கள் ! :)))))))

ழ என்ற வார்த்தை சரியாக உச்சரிக்கவேண்டும். தேர்வில் அதிகமாக ழ வரும் வார்த்தைகள் தான் கொடுக்கப்பட்டு இருந்தன. அவள் அவல் வாங்கி வந்தாள், ஏழை கிழவன் வாழைப்பழம் வழுக்கி கீழே விழுந்தான். போன்றவை தேர்வில் கொடுக்கப்பட்டது இன்னும் நினைவிருக்கிறது. அது போல நாம் பேசும் சில வார்த்தைகளில் "க" என்பதை "ஹ" வென உச்சரிப்போம். "எடுத்துக்காட்டாக' - இதை சொல்லும் போது கடைசி 'க' வில் ஹ சத்தம் கூட சேர்ந்து வரும். இப்படி பல "வார்த்தைகள்" உள்ளன. உச்சரித்து பார்த்தால் மட்டுமே தெரியும்.

பள்ளி படிப்பின் போது ஷோபனா ரவி அவர்கள் செய்தி வாசிப்பதை பார்த்து, ஈர்க்கப்பட்டு பாடப்புத்தகத்தை அவரைப்போலவே படித்து பார்ப்பேன். இப்படி பழகியே வானொலி குரல் தேர்வின் போது சொல்ல சொன்ன "ஆல் இந்திய ரேடியோ, சென்னை வானொலி நிலையம்" என்று இயல்பாகவே கொஞ்சம் ஸ்டைலிஷ் ஆக சொல்ல வந்தது. "க" வில் தான் தவறு செய்தேன் , திருத்தி திரும்ப திரும்ப பல வார்த்தைகள் சொல்லச் சொல்லி கேட்டார்கள். ஆங்கிலமே கலக்காமல் பேசவேண்டும் :)

ஆனால் இப்போது ?! :))))))))) ஆர்.ஜே க்கள் பேசுவதை கேட்டால், நாம் தமிழை சரியாக படிக்கவும் உச்சரிக்கவும் இத்தனை சிரமப்பட்டு இருக்கிறோம் என்று தெரிகிறது.

மறக்க முடியாதது - இன்று ஒரு தகவல் சொன்ன நிகழ்ச்சி இயக்குனர் தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்களுடன் லைவ் நிகழ்ச்சி ஒன்று செய்தது. :). மிகவும் எளிமையானவர். மைக் ஆன் செய்வதற்கு முன் என்ன பேசப்போறீங்க என்பதை கேட்டுக்கொண்டாலும், தவறு செய்தோமே ஆனால் அதை அப்படியே சிரித்தபடி வேறு விதமாக பேசி, தவறு வெளியில் தெரியாமல் செய்து விடுவதில் கெட்டிக்காரர், சுவாரசியமானவர், நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர்.


அணில் குட்டி : ஆஹா......................... அம்மணி ஆரம்பிச்சிட்டாங்கய்யா...

பீட்டர் தாத்ஸ் : When your hobbies get in the way of your work - that's OK; but when your hobbies get in the way of themselves... well.