பேரூந்தில் தொடர்ந்து பிரயாணம் செய்து பல ஆண்டுகள் சென்ற நிலையில், திடீரென பேரூந்து பயணம் செய்ய ஆரம்பித்ததன் விளைவு, இந்த பதிவு. :(. இரு சக்கர வாகனத்தில் போகும் போதும் நம்மைச்சுற்றி நடக்கும் பலவற்றை பார்க்க நேரும் தான், ஆனால், இத்தனை நிதானமாக, வேடிக்கை பார்த்து செல்லும் பயணமாக அது இருந்ததில்லை. பேரூந்து பயணத்தில், அதிக நேரம், நிதானம், பார்வையை வெகுதூரம் செல்ல வைக்கமுடிகிறது, அதற்காக யோசிக்கவும் முடிகிறது.

தினந்தோறும், சென்று திரும்பும் வழியில் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 10-12 திக்கற்ற, தெருவில் தன் நிலை உணராத, வித விதமான மனித உயிர்களை பார்க்கிறேன். இது வரையில் பார்த்ததில் எல்லோருமே ஆண்கள். பெண்கள் இன்னும் கண்ணில் படவில்லை. பெண்கள் பட்டு இருந்தால் இன்னமும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பேன்.

பல வீடுகளில் பார்த்திருக்கிறேன், நாய், பறவைகள் மற்றும் மரம்,செடி,கொடிகளை தன் வீட்டு குழந்தைகளை போல கவனித்துக்கொள்வார்கள். அந்த அன்பில் ஒரு 5 சதவிகிதமாவது இந்த சக மனித உயிர்களிடம் நாம் காட்டலாம் என்பது என் கருத்து. நேற்று கிண்டி அருகில் ஒரு பெரியவரை பார்க்க நேர்ந்தது. உட்கார்ந்த நிலை, கிழிந்து நைந்துப்போன ஆடைகள், முழங்காலுக்கு கீழே ஏதோ நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். கூட்டமாக கொசுக்களும், ஈக்களும், பூச்சிகளும், புழுக்கழும் மொய்க்க , நடக்க இயலாத நிலை. அவற்றை பார்த்து பழகிப்போன அவரின் மனம், கண்கள், கைகள்....செயலற்று இருந்தன.  இடுப்பை இழுத்து இழுத்து நகர்ந்து வந்துக்கொண்டு இருந்தார். என்ன கொடுமை இது??!! இதை நான் பார்த்திருக்கிறேன்... :(( ..என் நெஞ்சை விட்டு அவரின் புழுக்கள் மொய்த்த கால்கள் இன்னும் நீங்கவில்லை.

முன்னரே, இது சம்பந்தப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு ,இவர்களை ப்பற்றிய தகவல் சொல்லி உதவிக்கேட்டு பழக்கம் இருந்தாலும், தகவல் கொடுப்பதோடு நம் வேலை அங்கு முடிந்துவிடுவதில்லை. தொண்டு நிறுவன ஊழியர்கள் சொல்லும் நேரத்திற்கு, நாம் அங்கு நின்று, ஆட்களை அடையாளம் காட்டி, நாம் தான் அவர்களை அழைத்தோம் என்பதை சொல்லி, இந்த மனிதர்களை அவர்களுடன் அனுப்பி வைக்க வேண்டும். இப்படி, பல சமயங்களில் என்னால் அந்த குறிப்பிட்ட இடங்களில், தொண்டு நிறுவன ஊழியர்கள் வருகிறேன் என்று சொல்லும் நேரத்தில் காத்திருக்க முடியாமல் போகும் போது, அவர்களை பற்றிய விபரங்கள் சொல்லி உதவி கேட்டு வைப்பதிலும் எந்தவித பயணம் இல்லை என்று உணர்கிறேன். ஏனென்றால், நாம் வர முடியவில்லை என்று சொன்னால், தொண்டு நிறுவன ஊழியர்களும் வரமாட்டார்கள்.

இந்த நடைமுறை பிரச்சனையால், நாமே ஏன் இவர்களை அழைத்துக்கொண்டு விட்டுவிட கூடாது என்ற யோசனை தோன்றியது. இதனை என்னால் தனியாக செய்யமுடியுமா என்றால், முடியாது என்ற பதிலோடு, உங்களிடம் உதவி க்கேட்டு நிற்கிறேன்.

எதிர்பார்க்கும் உதவியும் திட்டமும் :-

1. ஒரு வேன் (அதற்கான கட்டனத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன், இருப்பவர்கள் உதவி செய்யலாம், வாடகைக்கு அமர்த்துவதாயின் அதையும் நான் செய்துக்கொள்கிறேன்)
2. இவர்களை அழைத்து,/தூக்கி செல்ல இரண்டு அல்லது மூன்று நபர். குறிப்பாக ஆண்கள்.
3. ஏதோ ஒரு விடுமுறை நாளில் அரை நாள் / ஒரு நாள் சென்னை நகரில் ஒவ்வொரு பகுதியாக செல்ல திட்டம்
4. இந்த மனிதர்களை தொட்டு தூக்கி/ அழைத்து செல்லும் மனப்பக்குவம் சகிப்புத்தன்மை உடல்வலிமை
5. அவர்களை தொண்டு நிறுவனத்தில் சேர்க்கும் வரை, உடன் வருவது.

தன்னார்வு தொண்டு நிறுவனங்களில் முன்னரே பேசி இவர்களை சேர்க்க அனுமதி ப்பெற்று விடுகிறேன். இதை அவர்களிடம் சொல்லி, ஒரு விடுமுறை நாளில் நீங்களே செய்யலாமே என்று கேட்கலாம். தன்னார்வு தொண்டு நிறுவனங்களில் இதுவரை பேசியதில், யாரும் நம் நேரத்திற்கு தகுந்தார் போன்று வர தயாராக இல்லை. அவர்கள் அழைக்கும் நேரத்திற்கு நாம் அங்கு இருக்க வேண்டும். பொதுவாக அவர்கள் அழைக்கும் நேரங்கள், அலுவலக நேரங்களாகவே உள்ளதால் நடைமுறை சிக்கல் ஏற்படுகிறது.

மேலும் இந்த உதவியை செய்ய விரும்புபவர்கள், தானாகவே, நல்ல உள்ளத்தோடு, மனமுவந்து செய்ய முடியுமாயின் வரவும்.

ஆர்வமும் எண்ணமும் இருப்பவர்களும், இதைத்தவிர்த்து இதனை வேறு எப்படி சாத்தியப்படுத்த முடியும் என்று யாருக்கும் தெரிந்தாலும் எனக்கு
gkavith [at] gmail [dot] com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பவும்.

அணில் குட்டி : ம்ம்ம்ம்... . அம்மணி.. எல்லாத்தையும் தனியா செய்வீங்களே இதுக்கு மட்டும் ஏன் ஆள் சேக்கறீங்க..?


பீட்டர் தாத்ஸ் : If we have no peace, it is because we have forgotten that we belong to each other - Mother Teresa
.