நண்பர்கள், உறவினர்கள், உடன் பணிபுரிபவர்கள் எல்லோரும் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு வார்த்தை "நான் ரொம்ப பிஸி.." அதனால் சில வேலைகளை செய்ய முடியவில்லை, அல்லது நம்மை தொடர்பு கொள்ள முடியவில்லை, நாம் தொடர்பு கொண்டாலும் பேச முடியவில்லை, ஏன் நாம் அனுப்பும் மெயிலுக்கு கூட பதில் போட நேரம் இல்லை என்று சொல்லுவார்கள். ஒரு மெயிலுக்கு பதில் போட 2-3 நிமிடங்கள் ஆகுமா? முழுமையாக ஒருவருக்கு பதில் அளிக்க முடியவில்லை என்றாலும், உங்களின் மெயிலுக்கு / அழைப்புக்கு கூடிய விரைவில் பதில் அளிக்கிறேன் என்று ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க முடியும் தான். இதற்கு நம்முடைய சோம்பேறி தனம், மெத்தனம் காரணமே ஒழிய நேரமின்மையை காரணமாக கொள்ளமுடியாது. மெயில் வாசிக்கும் போதே அதற்கு பதில் அனுப்பிவிட முடியும். (முடியும் என்றால் முடியும் தானே?!! ). இங்கு இன்னொரு விஷயமும் உள்ளது. வேண்டாம் - வேண்டாம் என்று நினைக்கும் போது, அந்த வேலையை செய்யவே வேண்டாம் தான். வேண்டாம் என்று நாம் நினைக்கும் விஷயத்திற்காக நிச்சயமாக நம் நேரத்தை கொஞ்சமும் வீணடிக்க வேண்டிய அவசியம் இல்லை. முடியும் என்பதற்கும் வேண்டாம் என்பதற்கும் அதிக வித்தியாசங்கள் உண்டு. :)

வாழ்க்கையில், தொழிலில், செய்யும் வேலையில் முன்னேற்றமும், வெற்றியும் பெற்ற எல்லோருக்குமே இதே 24 மணி நேரம் தான் இருந்து இருக்கிறது. அதே நேரத்தை கொண்டு தான் அவர்கள் சாதித்தும் இருக்கிறார்கள். அவர்களால் முடிந்தது நம்மாலும் முடியும் அல்லவா?

இவர்களின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் மிக முக்கிய காரணம், அவர்களின் தினப்படி நாட்கள்,நாளையதினம், எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மட்டுமெ முன் நிற்கும். காலை எழுந்ததிலிருந்து இரவு தூங்கும் வரையிலான நம் நேரத்தை எப்படி நாம் பயன்படுத்த போகிறோம் என்பதை திட்டமிட வேண்டும்.

திட்டமிடல் என்பது நம்முடைய எல்லா வேலைகளுக்கும் பொருந்தும். திட்டமிடல் ஒரு வட்டமாக சுற்றி சுற்றி வரக்கூடியது, ஒரே இடத்தில் நின்றுவிடுவது அல்ல. இன்று திட்டமிட்டால் நாளை திட்டமிட வேண்டியது இல்லை என்று அர்த்தமில்லை. தினமும் திட்டமிடல் அவசியம் ஆகிறது.

காலையில் எழுந்தவுடன், டைரியை எடுத்து அன்றைய தினம் செய்ய வேண்டியவேலைகளை பட்டியல் இட்டுக்கொள்ளவேண்டும். (மொபைலில் கூட ரெக்கார்ட் செய்து வைத்துக்கொள்ளலாம்) முந்தைய தினபட்டியலை சரிபார்த்து, செய்து முடிக்கமுடியாத வேலைகளை இன்றைய பட்டியலோடு இணைத்துவிட வேண்டும். இப்படி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் -

1. இன்றைய தினம் செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தையும் நம் புத்தி பதிவு செய்து கொள்ளும், அதன்படி அதை எப்படி செயற்படுத்தவேண்டும் என்று கண்டிப்பாக திட்டமிட்டு செய்துவிடுவோம்.
2.செய்ய நினைத்த ஒரு வேலையை செய்து, மற்றொன்றை அடடா மறந்துவிட்டோமே என்று நினைக்கவேண்டியது இல்லை.
3. வேலையின் பளுவின் காரணமாக நம்மை அறியாமல், சில வேலைகளை செய்ய மறந்து, அதனால் பல பிரச்சனைகள் வந்து சேரும், அதை தவிர்க்க முடியும்
4. ஒரு வேலைக்கு எவ்வளவு நேரம், அல்லது எவ்வளவு நாட்கள் எடுத்துகொள்கிறோம் என்று தெரிந்து போகும். நம்மை பற்றி, நம் வேலை திறனை பற்றி நமக்கே ஒரு சுயமதிப்பீடு கிடைக்கும்
5. இதை தொடர்ந்து செய்து வந்தால், நம் அன்றாட வேலைகள் ஒழுங்குப்படுத்தபடும்,
6. நம்மை அறியாமலேயே நாம், நம் வேலைகளில் முழுகவனம் செலுத்த உந்தப்படுவோம்.
7. அப்படி வேலையில் கவனம் செல்லும் போது, தேவையற்ற பேச்சு, கூட்டம் கூடி வெட்டி அரட்டை போன்றவை தானாக நின்று போகும், நல்ல முறையில் நம்முடைய நேரத்தையும் நாட்களை கழிக்க உதவும்.

திட்டமிடல் மட்டும் முக்கியமன்று அதை விடாப்பிடியாக செயற்படுத்துதல், தினமும் 10 வேலைகளை எழுதிவிட்டு தூங்கிக்கொண்டு இருந்தால் பயனில்லை. திட்டமுடும் போதே அதை செயற்படுத்த நம்மை தயார் படுத்திவிடவேண்டும். என்னுடைய இந்த மேனேஜர் vs டெமேஜர் பதிவில் சிலரை உதாரணங்கள் கொடுத்து இருப்பேன். அவர்கள் அத்தனை பேரும் வாழ்க்கையில் என் கண் எதிரில் சாதித்தவர்கள், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை நிறையவே உள்ளன. அதில் ஒன்று திட்டமிடல்.

சில அன்றாட வேலைகளின் திட்டமிடலும் அதற்கான நேரத்தையும் பார்க்கலாம்

1. அலுவலக நேரம் - 8 மணி நேரம் + அதிகப்படியாக - 1 மணி நேரம்
2. தூக்கம் - 8 மணி நேரம் (குறைந்தபட்சம் 7 மணி நேரம்) - 8 மணி நேரம்
3. பயண நேரங்கள் - 2 மணி நேரம் (இது எப்போதும் வெளியில் சுற்றி வேலை
பார்ப்பவர்களுக்கு பொருந்தாது.)
4. சாப்பாடு - 3 வேளையும் சேர்த்து - 45 நிமிடங்கள் (இதற்கு மேல் உட்கார்ந்து
சாப்பிட ஒன்றும் இல்லை என்றே நினைக்கிறேன், அலுவலக நாட்களில் 10 நிமிடங்களுக்கு மேல் உணவு அறையில் அமர்ந்தது இல்லை,ஆனால் நமக்கு கொடுக்கப்படும் இடைவேளை 1/2 மணி நேரமாக இருக்கும், அதில் 10-15 நிமிடங்கள் போதுமானது, மீதம் இருக்கும் 15 நிமிடங்களை க்கூட சரியான முறையில் பயன்படுத்த முடியும், உணவு அறையில் அரட்டை அடிப்பது ஒன்றும் மிக முக்கிய வேலையாகவோ அதனால் நம் மனம், உடல் ஓய்வு எடுக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை. அப்படியே சிலருக்காக உட்காரவேண்டிய அவசியம் ஏற்பட்டால், அவர்கள் பேசும் சாரத்தை கவனித்து வைத்துக்கொள்வேன்.)
5. குழந்தைகள், உறவுகள் நிச்சயம் நேரம் ஒதுக்கவேண்டும் குறைந்த பட்சம் 30 நிமிடங்களிலிருந்து அதிகபட்சம் 2 மணி நேரம் ஒரு நாளைக்கு.
6. நம் படிப்பு - 30 நிமிடங்கள். எந்த சந்தர்பத்திலும் ஏதாவது ஒன்றை நாம் படித்துக்கொண்டு இருப்பது நலம். இது நம் அறிவு ஒட்டடை பிடித்துவிடாமல் இருப்பதற்கு உதவும்.
7. கேலிக்கை, பொழுதுப்போக்கு - 6- 10 மணி நேரம்- வாரத்திற்கு ஒரு முறை திட்டமிட்டுக்கொண்டால் நம் மனம் ஆரோக்கியமாக இருக்குமென்று நம்புகிறேன்.

தனித்தனியாக நேரத்தை பிரித்து சொல்லியிருந்தாலும் சில வேலைகளை சேர்ந்தும் செய்யலாம். பொதுவாக காலையில் நான் சமைக்கும் போது, துணியை ஒரு பக்கம் துவைத்துவிடுவேன். (வாஷிங்மிஷின் ல தாங்க). அதற்காக தனியாக எப்போதுமே நேரத்தை செலவு செய்வதில்லை. டிவி பார்த்துக்கொண்டு படிப்பது, எழுதுவது, குழந்தைகளுடன் , உறவினர்களுடன் நேரம் செலவு செய்வது செய்யலாம்.

சாப்பாடு, தூக்கம், அலுவலகம், வீட்டு வேலை, நம் படிப்பு, குழந்தைகள், பெற்றோர்,மனைவி, கணவர் இவை/இவர்கள் மிக முக்கியமாக தினப்படி கவனம் செலுத்தக்கூடிய வேலைகள். இவற்றிற்கான நேரத்தை சரிவர பகுத்து திட்டமிட்டுக்கொண்டால் எதற்கும், எவருக்கும் நேரமில்லை என்றோ, நான் ரொம்ப பிஸி..என்றோ சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டியது இல்லை.

அணில் குட்டி அனிதா: ம்ம்...கொஞ்சம் அசந்த நேரமா பாத்து ஆரம்பிச்சிட்டாங்களா "அட்வைஸ் அம்புஜம் "(பேரு நல்லா இருக்கா.இப்பத்தான் இன்ஸ்டன்டா கவி' க்கு இந்த நாமத்தை சூட்டினேன்..) சரி மக்கா கொஞ்சம் கூட யோசிக்கமா எல்லாருமா சேந்து அம்புஜம் ஒரு நாளை எத்தனை மணி நேரம் தூங்கறாங்கன்னு கேட்டுஊஊ......... அதுக்கு மேல நீங்க பாத்துக்குவீங்க.. அடுத்து.. இவிங்க செய்யற சாப்பாட்டை 10 நிமிஷம் என்ன 3 நிமிஷத்திலியே சாப்பிட முடியும்.. ஏன்னா அவ்வளவு கேவலமா இருக்கும்...ருசி பாத்து சாப்பிட்டீங்க செத்து இல்ல போவீங்க...!! பவ்வ்வ்வ்.. அம்புஜம் முறச்சிஃபை..மி.... ஒரு வேள நைட் சாப்பாடு இன்னைக்கு எனக்கு கட் ஆயிடுமோஓஓஒ....................?!!! :(

பீட்டர் தாத்ஸ் : “When planning for a year, plant corn. When planning for a decade, plant trees. When planning for life, train and educate people.”