மனிதவளத்தில் இருப்பதால் இதை எழுதுகிறேன் என்பதை விடவும் என்னுடைய தனிப்பட்ட ஆர்வமே முதல் காரணம். என் தனிப்பட்ட ஆர்வத்தால் மனிதவளத்தை என் வேலையாக தேர்ந்தெடுத்தேனே தவிர்த்து, மனிதவளத்தில் இருப்பதால், என்னுடைய ஆர்வம், பேச்சு, எழுத்து & நடவடிக்கை மாறிவிடவில்லை அல்லது மாற்றிக்கொள்ளவில்லை. மனிதவளத்தில் இருப்பதால் இப்படி இருக்கிறேன் என்பதைவிடவும், மனிதவளத்தில் ஆர்வமுள்ள ஒருவராக என்னை பார்க்கவே விரும்புகிறேன்.

மனிதர்களின் குணம் இரண்டு.

1. இயற்கை குணம்,
2. சுற்றுச்சூழுலை பொறுத்து/கவனித்து நம்மை பாசிட்டிவாகவோ, நெகடிவாகவோ மெருகேற்றிக்கொள்வது அல்லது உள்வாங்கி அதை நம் குணமாக மாற்றிக்கொள்வது.

இயற்கை குணம் என்பது மாறாது. அப்படி ஒன்று மனிதனுக்கு இல்லை என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அடிப்படையில், நம் ரத்தத்தில் ஊறி இருக்கும் ஒரு குணம் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. அது என்ன? நம் தாய் தந்தை, தாய்மாமன், அத்தை, சித்தப்பா போன்றவர்களை கூர்ந்து கவனித்தால், அவர்களை போன்று நிறைய விஷயங்கள் அவர்கள் சொல்லித்தராமாலேயே நாம் செய்வோம், நடப்போம். அது தவிர்த்து குடும்ப சூழ்நிலை, வளர்ப்பு முறையில் அந்த அடிப்படை குணங்கள் இன்னமும் மெருகேற்றப்பட்டு இருக்கும்.

அடிப்படை குணங்களில் முதலில் வருவது -

1. அறிவும் அது சம்பந்தப்பட்டவையும்
2. பண்பு, பழக்கவழக்கங்கள், பேச்சு
3. கோபம்
4. ஈகை

இதில் நாமாக நம்மை சுற்றியுள்ளவற்றை பார்த்து கவனித்து அதை நம்முடைய குணமாக மாற்றிக்கொண்டு - இது பலருக்கு தெரியாது.. அதாவது நாம் மற்றவரை பின்பற்றி சிலவிஷயங்களை செய்கிறோம் என்பது. தன்னைப்பற்றி சுயமாக ஆராய்ந்து பார்ப்பவர்கள் மட்டுமே இதை உணர்வார்கள்.

இதற்கு சிறந்த உதாரணம் கணவன் மனைவி. இவர்களின் தனிப்பட்ட அடிப்படை குணங்கள் மாறுவதில்லை..ஆனால் திருமணத்திற்கு பிறகு மற்றவருக்காக விட்டுக்கொடுத்து அல்லது அவருக்கு பிடித்தமான சில விஷயங்களை செய்ய வேண்டி தன்னை மாற்றிக்கொள்வார்கள். அவர்கள் அடிப்படையில் மாறவில்லை, சூழலை பொறுத்து தன் அடிப்படை குணத்தோடு கூடி, வேறு ஒன்றையும் மனைவி/கணவனுக்காக சேர்த்துக்கொள்கிறார்கள்.

இப்போது இருவருக்குமே அடிப்படை குணத்தோடு சேர்ந்து + கூடுதலாக ஒரு குணம் (இது நெகடிவாகவும் இருக்கலாம்) சேர்ந்துவிடுகிறது.

இன்னுமொரு உதாரணம். பொது இடங்களில் நாம் இருக்கும் போது குப்பையை குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என்ற எண்ணமோ பழக்கமோ இல்லாதது நம் இயற்கை குணம். ஆனால் அதே பொது இடத்தில் , ஒருவர் குப்பையை குப்பைத்தொட்டியில் போடுவதை பார்த்து அதை நாம் நமக்கு தேவையான ஒன்று என்று கருதி, அதை நம்முடைய பழக்கதில் ஒன்றாக எப்போதும் மாற்றிக்கொள்வது என்பது சுற்றுச்சூழலை பொறுத்து நாம் நம் குணத்தை மெருகேற்றிக்கொள்வது, கூடுதல் குணம்.

சரி, இந்த கூடுதல் குணம் நெகடிவ்/பாசிடிவ் ஆக இருப்பது யார் கையில்??? கண்டிப்பாக அது தனிப்பட்ட மனிதனை பொறுத்து தான் இருக்கிறது, நல்ல விஷயங்களை மட்டும் கவனித்து இது நமக்கு தேவை என்று சேர்த்துக்கொண்டு ஒருவன் தன்னை மென்மேலும் உயர்த்திக்கொண்டே போகலாம். அல்லது நெகடிவாக கொண்டு தாழ்த்திக்கொண்டும் போகலாம். நெகடிவ்/பாஸிடிவ் என்பதை முடிவு செய்வது யார்? அதுவும் அதே நபர் தான். இது தான் நமக்கு சரி என்று படுவது பலருக்கு தவறு என்று படும். :)

அதனால், அடிப்படை குணத்தை கூட நாம் கூடுதலாக சேர்த்துக்கொள்ளும் குணம் மாற்றிவிடும் வாய்ப்பும் இருக்கதான் செய்கிறது.. அதற்கு மிகுந்த முதிர்ச்சியும், ஞானமும் தேவை. ஆனால் ஒரு சாமான்ய மனிதனுக்கு சூழ்நிலை என்று வரும் போது எத்தனை தடுத்தாலும் உள்ளுக்குள் இருக்கும் அடிப்படை குணமே வெளியில் வரும்.

இதற்கு சிறந்த பழமொழி "நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் வாலை ஆட்டிக்கிட்டி தேவையை தின்ன வெளியில் தான் போகுமாம்" - இது தான் அடிப்படை குணம் என்பது. ஏன் அது நல்லவிதமாக வளர்க்கப்படும் போது? என்ற கேள்வி கண்டிப்பாக வரும், ஆனால் அந்த நாய்க்கான சூழ்நிலை, அதற்கு சரியாக அமையும் போது அதன் இயற்கை குணம் கண்டிப்பாக வெளிப்பட்டே தீரும். ஆனால் இப்படிப்பட்ட வெளிவரும் குணத்தையும் , குறிப்பாக அது நெகட்டிவாக இருக்கும் பட்சத்தில் , அதை கட்டுப்படுத்தும் திறமையையும் கூடுதல் விஷயமாக நாம் தான் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாம் சூழ்நிலை கைதியாக ஆகாமல் இருக்க வாழ்க்கையின் அனுபவமும், முதிர்ச்சியும் கண்டிப்பாக தேவை.

ஆக, இயற்கை குணத்துடன் , நாம் நம்மை சுற்றியுள்ள சூழ்நிலைகளுக்காகவும், நம்மை சார்ந்தவர்களுக்காகவும் (சொந்தங்கள், நண்பர்கள், நம்மை சுற்றியுள்ள அத்தனை மனிதர்களும்...) நம் தேவைகளுக்காகவும் ஓரளவிற்கு மாற்றிக்கொண்டே இருக்கிறோம் என்பது சரியில்லை, நம்மின் குணத்தை அதிகப்படியாக வளர்த்துக்கொண்டே வருகிறோம். இது நிதர்சனமான உண்மை.

இதில் எது நம் இயற்கை குணம், எது நாம் சேர்த்துக்கொண்டது.. இனியும் நல்லவிதமாக சேர்த்துக்கொள்ள வேண்டியது எது என்பதை தனிப்பட்ட முறையில் ஆராய்ந்து, அதை நல்லவிதமாக சேர்த்தும், பயன்படுத்திக் கொள்வதும் நம் கையில் தான் இருக்கிறது.

மனிதர்களின் குணம் மாறுவதில்லை கூடுதலாக நாம் சேர்த்துக்கொண்டவை நம்மில் பல மாற்றைங்களை உண்டாக்குகின்றன.. அதனால் அடிப்படையில் நம் வளர்ச்சிக்கு தேவையானவற்றை நல்லமுறையில் கவனித்து அதை சேர்த்தும் செயற்படுத்தியும் நன்மை பெறுவோம்.

நாமே நம் கையில் ஒரு களிமண் தான் அதை எப்படி ஷேப் செய்கிறோம் என்பது நம் கையில் தான் இருக்கிறது.

அணில் குட்டி அனிதா :- ம்ம்......மக்கா உங்களுக்கு ஏதாச்சும் பிரியுதா எனக்கு ஒன்னியும் பிரியல. .அதுவும் அர்த்த ராத்திரியில பிசாசாட்டுமா உக்காந்துக்கிட்டு டைப்பறாங்க.......வெயில் காலம் போயிம் எனக்கு இன்னும் அம்மணிக்கிட்ட இருந்து விடுவுகாலம் வரலை.... நாந்தான் எழுதுனும் அடுத்தது....... விடியலை நோக்கி ன்னு... ................... முடியல..ooooopppssss !!

பீட்டர் தாத்ஸ் : There will be little rubs and disappointments everywhere, and we are all apt to expect too much; but then, if one scheme of happiness fails, human nature turns to another; if the first calculation is wrong, we make a second better: we find comfort somewhere . . .