பாப் வைத்த தலைமுடி, முட்டிக்கால் தெரிய போட்டு இருந்த ஃப்ராக், அந்த சின்ன முகத்தில் கண்கள் முழுக்க சோகம், உள்ளுக்குள் ஒரு வித படப்படப்பு, பயம் எல்லாவற்றையும் அவளின் அம்மாவிற்கு தெரியாமல் மறைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள் 8 வயது குட்டி பெண் அனுஷா. பொழுது விடிந்து பொழுது போனால் படிக்கட்டில் நின்று தெருவின் முக்கை வெறித்து பார்த்தவாரே இருந்தாள்.
"அப்பா வரமாட்டீங்களா? ஏன் இப்படி என்னை தனியா விட்டுட்டீங்க? இங்கேயே விட்டு விடுவீங்களா? எனக்கு இங்க பிடிக்கல.. பயம்மா இருக்கு... இங்க யாரையுமே பிடிக்கல... அப்பா வந்துடுங்கப்பா..ப்ளீஸ். .வந்து என்னை கூட்டிட்டு போயிடுங்கப்பா.... " மனதுக்குள் அந்த சின்ன குழந்தையின் தொடர்ந்த புலம்பல் இதுவாகத்தான் இருந்தது.
சாப்பிட கூப்பிடும் போது உள்ளே செல்வதும் மற்ற நேரங்களில் படிகளே பழியாய் கிடப்பதும், தெரு முக்கையே அப்பாவின் வரவுக்காக பார்ப்பதுமாக காலம் கடத்தினாள்.
------------------------------
அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை, காலையில் தலைக்கு குளித்துவிட்டு, மதியம் அப்பா சொன்னதற்காக படுத்து தூங்கிக்கொண்டு இருந்தாள் அனுஷா. பலத்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த அனுஷா, அப்பா அம்மா சண்டையிட்டு கொண்டிருப்பதை பார்த்தாள். வீட்டில் உள்ள சில பொருட்களை அவளின் அப்பா தூக்கி எரிந்து அம்மாவின் மேல் கோபத்தை காட்டிக்கொண்டு இருந்தார். அனுஷாவிற்கு அவர்களின் சண்டையை பார்த்து நெஞ்சு நடுங்கியது. பயத்தில் ஓரமாக போய் நின்று அவர்களின் சண்டையும் எதற்கு என்று புரியாமல் முழித்துக்கொண்டு இருந்தாள்.
ஒரு கட்டத்தில் அப்பா வேகமாக வெளியில் சென்றுவிட.. அம்மாவும்.. வேக வேகமாக பெட்டியை எடுத்து துணிமணிகளை நிரப்ப ஆரம்பித்தார்கள். கிளம்பும் போது "அனு வா போலாம்..:" என்றார்கள்.
"எங்கம்மா? "
"மெட்ராஸ்."
"எனக்கு ஸ்கூல் இருக்கும்மா.. நான் வரலை..."
"நீ வந்து தாண்டி ஆகனும்.. சீக்கிரம் கிளம்பு"
"ம்ம்மா.. .நான் வரலை அப்பாவை விட்டுட்டு வர மாட்டேன்... அப்பா கூடவே நான் இருக்கேன் நீங்க போங்க..."
அதற்கு மேல் அம்மா பேசவில்லை... கோபத்துடன் வந்து தொடையில் நறுக்கென்று ஒரு திருகு திருகினார்கள். வலியில் துடித்தாள் அனுஷா.....
"ம்ம்ம்.. பேசாமல் ...கிளம்பு சீக்கிரம்" அதட்டினார்கள்.
அம்மா கையை எடுத்தவுடன் குனிந்து தொடையை பார்த்தாள். அம்மா நகத்தோடு சேர்த்து கிள்ளியதால் ரத்தம் லேசாக வர ஆரம்பித்து எரிச்சலும் வலியும் இருந்தது. அதற்கு மேல் அனுஷாவிற்கு அம்மாவை எதிர்த்து பேச பயம்... வேண்டா வெறுப்பாக அம்மாவின் கையை பிடித்துக்கொண்டு கிளம்பிவிட்டாள். வழியில் எல்லாம் அம்மா கோபமாக இருக்கிறார்கள் என்று வாயை திறக்காமல் இருந்தாள். மதுரையில் இருந்து சென்னை.,வெகு நேர பஸ் பிரயாணம். தூங்கி எழுந்திருக்கும் போது எல்லாம் வயிறு காலியாக இருந்தது, அவளுக்கு ரொம்பவும் பசித்தது. நடுவில் அம்மா மட்டும் இறங்கி என்னவோ சாப்பிட்டுவிட்டு, வரும் போது வேற்கடலை பர்பி வாங்கி வந்தார்கள். அம்மாவிடம் வேறு எதுவும் கேட்கவும் பயப்பட்டு, அதை மட்டும் சாப்பிட்டுவிட்டு அமைதியாக வேடிக்கை பார்த்தவாறு வந்தாள் அனுஷா.
ஆயிற்று. அவளும் வந்து 18 நாட்கள் ஆயிற்று. அவளின் அப்பா இன்னும் வரவில்லை. அவளும் காத்திருப்பை நிறுத்தவில்லை. அனுஷாவிற்கு அப்பா வரவில்லை என்ற கவலையுடன் பள்ளியை பற்றிய நினைவு வேறு. இங்கு மாமா, பெரியம்மா வீடுகளில் எல்லாம் குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்றன. ஏன் அம்மா தன்னை மட்டும் இப்படி இங்கு கொண்டு வந்து வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்?. அனுஷாவை பார்க்கும் போது எல்லாம் அவளின் அப்பாவை திட்டிக்கொண்டே இருக்கும் அம்மும்மா வேறு ஒரு பக்கம். அனுஷாவிற்கு அதனாலேயே அம்மும்மாவை கண்டாலே பிடிக்காமல் போனது. அந்த வீடும் பிடிக்கவில்லை. தனியாக இருந்தாள், யாரிடமும் பேசவோ, பழகவோ அவளுக்கு பிடிக்கவில்லை. அம்மா சில சமயம் படிக்கட்டில் உட்கார விடாமல் உள்ளே தள்ளி கதவை சாத்தி விடுகிறார்கள். பெரிய மாமா ரூமில் உள்ள ஜன்னலில் இருந்து பார்த்தால் தெரு முக்கு தெரியும்... அதனால் அந்த ஜன்னலில் ஏறி நின்று திரும்பவும் அப்பா வருகிறாரா என்று பார்க்க ஆரம்பித்தாள் அனுஷா.
------------------------------
திடீரென்று ஒரு நாள் மாலை 6 மணி இருக்கும். பெரியம்மா வீட்டிலிருந்து ஃபோன் வந்தது. கணேஷ் வந்து இருக்கிறார், அனுஷாவையும், சுமதியையும் அழைத்துக்கொண்டு நீங்களும் வாருங்கள் என்று தகவல் வர... அம்மா கிளம்பும் முன்... கதவை திறந்துக்கொண்டு பெரியம்மா வீடு நோக்கி ஓட ஆரம்பித்தாள் அனுஷா. மாமா வீட்டிலிருந்து ஒரு தெருக்கு அப்பால் பெரியம்மாவின் வீடு.
அப்பா மரநாற்காலியில் அமர்ந்து இருந்தார். அனுஷா ஓடி சென்று அப்பாவின் மேல் ஏறி கழுத்தைக்கட்டி க்கொண்டு யாருக்கும் தெரியாமல் ரகசியமாக..."அப்பா...என்னை கூட்டிட்டு போயிடுங்க. .எனக்கு இங்க பிடிக்கலை , பயம்மா இருக்கு... ஸ்கூல் போகனும்.." என்றாள்.
அப்பா பதில் ஏதும் சொல்லாமல் அனுஷாவை இறக்கிவிட்டார்.
பெரியவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அப்பா மட்டும் தனியே... அம்மாவிற்காக பேச நிறைய பேர் இருந்தார்கள். அம்மும்மா, பெரியம்மா, பெரியப்பா, நடு மாமா, பெரியமாமா, சின்ன மாமா, பெரியம்மாவின் பிள்ளைகள் என்று பெரிய கூட்டமாக இருந்தது.
அப்பா பேச ஆரம்பித்தார். "அனுஷாவை கூட்டிட்டு போக வந்தேன், வந்து 23 நாள் ஆச்சி, குழந்தையின் படிப்பு வீணா போகுது.. திரும்பி வருவாங்கன்னு எதிர் பார்த்தேன் வரலை.. .இதுக்கு மேல் குழந்தையின் படிப்பை வீணாக்க முடியாது, அவளை என்னுடன் அனுப்புங்கள்.."
அம்மா சத்தம் போட ஆரம்பித்தார்கள். அனுஷாவை இழுத்து சென்று ஒரு ரூமில் பூட்டி வைத்து விட்டு வந்தார்கள்.
அனுஷாவிற்கு திரும்பவும் பயம் கவ்வ ஆரம்பித்தது. உள்ளுக்குள் பரிட்சை எழுத போகும் போது வருவது போல வயிற்றை பிசைந்தது. அப்பா விட்டுவிட்டு சென்று விடுவாரோ..?!! வெளியில் வாக்குவாதம் நடந்தது. அப்பா கேள்வி கேட்பவகள் அத்தனை பேருக்கும் பதில் சொல்லியவாறே இருந்தார். ஆனால் அனுஷாவை அழைத்து செல்வதில் உறுதியாக இருந்தார். அவர் பேச பேச ஒரு கட்டத்தில் மற்றவர்கள் அமைதி ஆனார்கள். சுமதியை அவர்கள் வீட்டில் இருப்பவர்களே அமைதிப்படுத்தினர்.
கதவு திறக்கப்பட்டது. அனுஷா..மடை திறந்த வெள்ளம் போல..... வேகமாக வெளியில் ஓடி வந்து அப்பாவிடம் போய் நின்றாள். சுமதி அழுதுக்கொண்டு இருந்தாள். அனுஷா அதை எல்லாம் பொருட்படுத்தவில்லை. அப்பாவின் கையை பிடித்துக்கொண்டு கிளம்பிவிட்டாள். அம்மும்மாவை ஒரு முறை திரும்பி பார்த்து முறைத்தாள். வேறு யாருடனும் பேசவில்லை.
வெளியில் வந்தவுடன் அப்பா கேட்ட கேள்வி.. " சாப்பிட்டியாம்மா??? "
"...ஏன்ப்பா என்னை இத்தனை நாளா கூட்டுப்போக வரலை...?"
"....உங்க அம்மாவே திரும்பி வருவாங்கன்னு நினைச்சேன்....."
"...எனக்கு இங்க பிடிக்கலைப்பா.. நான் உங்க கூடத்தான் இருப்பேன்.. அம்மா வேணாம்ப்பா....கிள்ளறாங்க..அடி
குனிந்து பார்த்து... தடவிவிட்டபடி... "...ம்ம்..அப்படி சொல்லக்கூடாது....அம்மா பாவம் இல்லையா... உன்னை அனுப்பலன்னா என்ன செய்யறதுன்னு டிசி க்கூட வாங்கிட்டு தான் வந்தேன்....."
அதிர்ந்தவளாக...."...ப்பா... அப்படின்னா அம்மாக்கிட்ட என்னை விட்டுட்டு போகவா வந்தீங்க...."
"...இல்லம்மா... அம்மா ரொம்ப பிடிவாதமா இருந்தா என்ன செய்யறது உன் படிப்பு முக்கியம் இல்லையா..."
".....ம்ம்ம்ம்..என்னை எப்பவும் அம்மாக்கிட்ட விடாதீங்கப்பா....சரி.. இப்ப எந்த ஸ்கூல்..ப்பா....??? "
" .....பாப்போம்... போய் த்தான்...பார்க்கனும்.. சரி முதல்ல வா...நீ சாப்பிடு..... " என்று அனுஷாவை அழைத்துக்கொண்டு ஹோட்டலை தேடி சென்றார் கனேஷ்.
அனுஷாவிற்கு 23 நாட்கள் கழித்து உள்ளுக்குள் இருந்த படப்படப்பு, பயம் எல்லாம் மறைந்து நிம்மதியாக இருப்பதை உணர்ந்தாள்... இப்போது தான் சுதந்திரமாக சுவாசிக்க முடிந்தது அவளால், சந்தோஷமாக அப்பாவின் கைகளை பிடித்து நடக்க ஆரம்பித்தாள். அப்பா இனி அவளுக்கு தாயுமானார்.....