பி.ஈ. சிவில், பி.ஈ.மெக்கானிகல், பி.ஈ.எலக்ட்ரிகல் & எலக்ட்ரானிக்ஸ், மற்றும் தனி பாடபிரிவுகள் வேதியியல், இயற்பியல், கணிதம் இன்னமும் சம்பந்தமே இல்லாத பிரிவுகளில் படித்துவிட்டு, இன்று ஐ.டி துறையில் வேலைப்பார்த்துவரும் மெத்த படித்த இளைஞர்கள்/இளைஞிகளுக்கு நிச்சயமாக தன் எதிர்காலத்தை பற்றியோ, நாட்டின் எதிர்காலத்தை பற்றியோ அக்கறை இருக்கிறதா என்று தெரியவில்லை.

படித்தது ஒன்று செய்வது ஒன்று, காரணம் என்னவாக இருக்குமென்று ஆராய்ந்த்து பார்த்தால் ஒன்று சம்பளம் இன்னொன்று அமெரிக்க கனவு அல்லது ஆன்சைட் என்ற பெயரில் ஏதாவது ஒரு நாடு. இதைதவிர வேறு என்ன பெரிதாக இவர்களுக்கு லட்சியங்கள் இருக்கமுடியும். வாரம் ஒருமுறை நட்சத்திர ஹோட்டலில் கூத்து, மாதம் ஒரு முறை மகாபலிபுரம், கிழக்கு கடற்கரை சாலை பீச் ரிசாட்டுகள், பாண்டிச்சேரி, பெங்களூர் (பெண்களூர்..????? )

எங்கே போய் கொண்டு இருக்கிறோம் என்றே தெரியாமல் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். சென்னையில் ஒரு ஷாப்பிங் காம்லக்ஸ், சினிமா தியேட்டர்கள் தவறாமல் பெண்களும் ஆண்களுமாக, இருவரும் சேர்ந்தும் நட்பு என்று சொல்லிக்கொண்டு போடும் ஆட்டங்கள் தாங்கமுடியவதில்லை. நட்பை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? கொச்சை படுத்தாதீர்கள் என்று அடிவயிற்றில் இருந்து சத்தம் போட்டு சொல்லுவார்கள். ஆனால் அதில் நட்பு மட்டுமே இருக்கிறதா என்று பழகும் ஆண்களை தனியே அழைத்து கேட்டுப்பார்த்தால் தெரியும் நிஜமான உண்மை. "டைம் பாஸ் மச்சி" என்று மிக எளிதாக சொல்லிவிட்டு செல்வார்கள்.

இதில் பெருமை வேறு, ஐ.டி யில் இருப்பவர்கள் ஸ்பென்ஸ்ர்ஸ், மாயாஜால், சிட்டி சென்டர், அபிராமி மெகாமால், ஈசிஆர் ரோடு, இரவு நேர நடன விடுதிகள், எல்லா 2, 3 நட்சத்திர ஹோட்டல்கள் இங்கே மட்டும் தான் நாங்கள் போவோம் சீப்பான இடத்திற்கு நாங்கள் போவதில்லை என்பார்கள். இவர்களை மற்றவர்கள் எந்த அளவு சீப்பாக பார்க்கிறார்கள் என்ற உணர்வு சிறிதும் இன்றி தன்னை மறந்த நிலையில் இருக்கிறார்கள்.

அலுவலக டிரைனிங் நிகழ்ச்சிக்காக ஒரு ஹோட்டல் ஹாலை புக் செய்ய பீச் ரிசாட் ஒன்றுக்கு சென்றிருந்தபோது, அந்த நிர்வாகி, நீங்கள் பார்க்கவந்த இடத்தில் ஒரு பிறந்தநாள் நிகழ்ச்சி நடக்கிறது, பிரச்சனை ஒன்றும் இல்லை ஒருமுறை பார்த்துவிட்டு போய்விடுங்கள் என்றார். அவர் அழைத்து செல்ல அந்த ஹாலின் உள்ளே சென்ற எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. மதியம் 2 மணி இருக்கும் வெளியே நல்ல வெயில் ஆனால் உள்ளே கும்மிருட்டு எல்லா கதவுகளும் மூடியிருந்தன, விளக்குகள் எல்லாவற்றையும் அனைத்துவிட்டு சின்ன மெழுகு வர்த்தி ஒளியில் நான்கு ஆண்கள் கோப்பையும், சிகிரெட்டுமாக எங்களை வரவேற்றார்கள். காதை கிழிக்கும் மியூஸிக்.உள்ளே சென்று அந்த இருட்டிற்கு கண் பழக இரண்டு மூன்று நிமிடங்கள் ஆயின, ரொம்பவும் சிரமப்பட்டு இருட்டிற்கு கண்களை பழக்கி பார்த்தால் இன்னும் இரண்டு ஆண்களுடன் 3 பெண்களும் அரைகுறை ஆடையில் இதே நிலையில் இருந்தார்கள்.

அடகடவுளே..... எல்லோரும் 22 - 30 வயதுக்குள் இருப்பவர்களே. மாதத்திற்கு 20 - 1 லட்சம் வரை சம்பாதிக்கும் இவர்களுக்கு அந்த பணத்தை எப்படி செலவழிப்பது என்பது தெரியாமல் இப்படியா? நிர்வாகியிடம் பேசிவிட்டு கிளம்பும் முன், அவர்கள் யார் என்ன என்பதை விசாரித்தபோது ஐடி கம்பெனியில் வேலை செய்பவர்கள், பிறந்தநாள் கொண்டாட வந்து இருக்கிறார்கள். இன்று பகல் முழுதும், இரவும் அந்த ஹாலையும் அடுத்து இருக்கும் 2 அறைகளையும் புக் செய்து உள்ளார்கள் என்றார்கள்.

எனக்கு இப்படி எல்லாம் நடக்கிறது என்பதையும் இப்படி அந்த பீச் ரிசார்ட்டுகளும் இதற்கெல்லாம் அனுமதி அளிக்கிறது என்பதையும் முதன் முறையாக புரிந்துகொண்டேன்.

எதற்காக படித்தோம், எதற்காக சம்பாதிக்கிறோம் என்ற எண்ணம் இல்லாமல் 20 வயதிலேயே குடிப்பழக்கம், புகைப்பழக்கம் ஏன் பெண்கள் பழக்கம் என்று இந்த பணம் அவர்களை சீரழக்கிறது. மட்டுமல்லாது இந்த தொடர் குடிப்பழக்கத்தால் உடம்பு பெருத்து, கண்களுக்கு அடியில் சதை, தொப்பை தொங்குகிறது. மட்டுமல்லாது சிகிரேட் பழக்கத்தால் என்ன என்ன விளைவுகள் முன்பே பதிவெழுதிவிட்டேன். இதையும் விட கட்டுபாடு இல்லாத உணவு பழக்கம். நேரம் கெட்ட வேளையில் உணவு உண்ணும் பழக்கம். இப்படி தன் வாழ்க்கையை தானே மண்ணை தோண்டி புதைத்துக்கொள்கிறார்கள்.

1995 ஆம் ஆண்டில் குறைந்தபட்ச சம்பளம் 2000 ரூபாய் அதிகபட்ச சம்பளம் 15-35 ஆயிரம் ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். இன்று????? இப்பவும் குறைந்த பட்ச சம்பளம் அதே 2000 ரூபாய் ஆனால் அதிக பட்ச சம்பளம்????? 1 லட்சம் அல்ல அதற்கு மேலும் மிக சர்வ சாதாரணமாக வாங்குகிறார்கள் நம் மெத்த படித்த ஐ.டி'யில் பணிபுரியும் நம்மவர்கள். இதனால் யாருக்கு லாபம் அவர்களுக்கு மட்டுமே... உடம்பில் நோய், தொடர் கெட்ட பழக்கங்களால் குழந்தையின்மை, ஆண்மை குறைவு, சின்ன வயதிலேயே சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், கொழுப்பு என்று சகல லாபத்தையும் சம்பாதித்து வைத்து இருக்கிறார்கள்.

15 வருடம் சேல்ஸ்' இல் இருந்த ஒருவர் இந்த சம்பள மோகத்தில் சாஃட்வேர் டெஸ்டிங்' க்கு 2 மாதங்கள் பல ஆயிரம் பணத்தை செலவழித்து படித்து இப்போது டெஸ்ட் என்ஜியராக இருக்கிறார். ஆனால் எத்தனை வருடம் இருக்க முடியும். கம்பெனிகள் எல்லாம் பின்க் ஸ்லிப் கொடுத்து வருகின்றன. சமீபத்தில் சென்னையில் மீடியம் லெவல் கம்பெனிகளில் மிக பிரபலமாக இருந்த ஒரு சாஃப்வேர் நிறுவனம் தன்னிடம் வேலை செய்த 350 ஆட்களை சென்னையில் மட்டுமே பின்க் சிலிப் கொடுத்தது. அந்த கம்பெனியில் முன்னர் நானும் வேலை செய்ததால் அதில் வேலை பார்த்துவந்த பலரை எனக்கு நேரடியாக தெரியும். நல்ல பொறுப்பான பதவிகளில் இருந்த அத்தனை பேரும் 15 நாள் கெடு கொடுத்து தூக்கப்பட்டனர். அதில் திருமணம் ஆகி குழந்தைகளுடன் இருப்பவர்கள் அதிகம். அங்கு வேலை இழந்த இருவருக்கு மட்டும் வேலை வாங்கி கொடுத்தது மிகுந்த மனநிறைவை கொடுத்தது. ஆனால் என்னால் முடிந்ததது இருவருக்கு மட்டுமே, மற்றவர்கள்???? அவர்களையும் அவர்கள் குடும்பத்தையும் நினைத்து பார்த்தாலே மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

மேலே சொன்ன பிறந்த நாள் விழாவிற்கு வருவோம், நாளை கிடைக்கபோகும் பின்க் சில்ப் பற்றி இன்றே இவர்கள் யோசித்து பார்த்து கொஞ்சமாவது பொறுப்பாக நடந்துக்கொள்வார்களா?. தன் படிப்புக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் தன்னை பிரகாசமாக்கிக்கொள்ள வழியை தேடுவார்களா? ஐடி தவிர இந்தியாவில் பிரகாசிக்க வேறு துறைகளே இல்லையா?

அணில் குட்டி அனிதா:- நான் இதுல சொல்ல ஒன்னியும் இல்ல... எல்லாம் பொறாமையல வர பொக.. எப்ப பாத்தாலும் கவிதா இரண்டு காதுலையும் ஊது வத்தி ஏத்திவச்ச மாதிரி பொக வந்துக்கிட்டே இருக்குங்க.. மக்கா... நீங்க.. என் ஜாய் பண்ணுங்க.. இவிங்க கிடக்கிறாங்க.. .நானும் வரேன்.. ஒன்னு பத்தாது ஒரு 4, 5 பெக் குடுங்கப்பா.... அப்படியே ஒரே ஒரு தம்மூஊஊஊஊஊ...........ஓகேயா..?

பீட்டர் தாத்ஸ் :- Living in the lap of luxury isn't bad, except that you never know when luxury is going to stand up