கார்த்தி என்னுடைய சின்ன அண்ணன், நான் வேலைக்கு போகவேண்டும், நிறைய படிக்கவேண்டும், பெண் என்பவள் ஒரு வட்டத்திற்குள் இருக்கக்கூடாது என்று என்னை வெளியில் வரவைத்தது என் அண்ணன் தான். அண்ணனுடன் சேர்ந்து அவரின் நண்பர்களுடன் நான் கபடி விளையாட ஆரம்பித்தபோதிலிருந்தே இது தொடங்கிவிட்டது. என்னை என் தோழிகளுடன் என் அண்ணன் விளையாட அனுமதித்ததில்லை. எப்போதும் எங்கு சென்றாலும் என்னையும் கையை பிடித்து அழைத்து சென்றுவிடும். நானும் அண்ணனுடன் சேர்ந்து சரிக்கு சமமாக விளையாடுவேன்.

குறிப்பாக பெண் குழந்தையால் செய்யமுடியாத சில விஷயங்களும் அண்ணனின் உதவியால் அவரை போலவே செய்திருக்கிறேன். அதில் இன்னமும் நினைவில் மட்டும் அல்ல எப்படி செய்துஇருப்பேன் என்று நினைப்பவை .........

படி இல்லாத மாடிக்கு கொய்யாமரத்தில் (ரொம்ப வழுக்கும்) மீது ஏறி செல்வோம். அடிக்கடி இப்படி செல்லுவோம். முதலில் சிரமப்பட்டாலும் பிறகு அண்ணனை போலவே நானும் வேகமாக ஏறக்கற்றுக்கொண்டேன்.

இரண்டு டீம் கபடி ஆட்டத்தில் அண்ணனின் டீம் மெம்பரில் நான் ஒரே ஒரு பெண் மெம்பர். :). அவர்களுக்கு சமமாக என்னையும் ஆட்டத்தில் பழக்கிவிட்டார். அப்போது நான் 4ஆம் வகுப்பு, அண்ணன் 5ஆம் வகுப்பு.

இதே போன்று அண்ணன் ஏதோ ஒரு மரத்தில் உச்சிக்கு ஏறிவிட, அவரை போலவே நானும் ஏறி செல்லும் போது..பாதி மரத்தில் இருந்து (12 அடிக்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன்) தவறி அப்படியே விழுந்தேன். என் முதுகு மண்ணில் நேராக அடிக்கும் படிவிழுந்தேன். தலையை தூக்கிவிட்டதாக நினைவு. அழுதுக்கொண்டே எழுந்தேன்… எழுந்தால் முதுகை நிமிர்த்தமுடியவில்லை. மேலே இருந்து பார்த்த அண்ணனுக்கு சிரிப்பு தாங்கவில்லை. என்னால் அண்ணனை பார்க்கவும் முடியவில்லை. கூனியாகவே வேக வேகமாக நடந்து படுக்கை அறைக்கு சென்றேன். பெட்டில் மல்லாக்கபடுத்தேன்.. நன்றாக 10-15 முறை பிரண்டேன். சரியாகவிட்டது. இவ்வளவும் வலியால் துடித்துக்கொண்டே, அழுதுக்கொண்டே செய்துவிட்டு திரும்பவும் அதே மரத்திற்கு சென்று அண்ணனை போலவே உச்சிக்கு ஏறிவிட்டுத்தான் அழுகையை நிறுத்தினேன்.

8 அடி சுவரில் குரங்கைபோன்று எப்படியோ தாவி ஏறி (கால் வைக்க மிக துள்ளியமான பிடிப்புகளே இருக்கும்) அமர்ந்து, பட்டாம்பூச்சியை நீளமான நூலில் கட்டி பறக்கவிட்டது. :(

நாங்கள் திருச்சியில் இருந்தபோது, பொன்மலையில் உள்ள பள்ளிக்கு செல்ல பஸ்’க்கு கொடுக்கும் காசை சேர்த்து வைத்துக்கொள்வோம். Shunting ரயில்கள், (இந்த வார்த்தையைத்தான் அந்த ரயில்களுக்கு பயன்படுத்துவார்கள்) கூட்ஸ்வண்டிகள் வரும், அவற்றின் பின்னால் ஓடி, அது ஓடும் போதே ஏறி நின்றுக்கொண்டு (பொன்மலைவரை) செல்லுவோம். இப்போதும் இது மிகவும் சிரமமான, ரிஸ்க்கான விஷயமாகத்தான் தெரிகிறது. ரயில்வே ஆட்கள் யாராவது பார்த்தால் அவ்வளவுத்தான், திட்டி அனுப்புவார்கள், ஆனால் அவர்கள் கண்ணில் மண்ணை தூவ எங்களுக்கும் தெரிந்திருந்தது.

இப்படி எந்த ரிஸ்க்கான விஷயம் செய்யும் போதும் அண்ணன் முதலில் எனக்கு எப்படி செய்யவேண்டும் என்று சொல்லிக்கொடுப்பார்கள் அதை அப்படியே பார்த்து செய்வேன். எனக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது என்பதில் அவரின் கவனம் அதிகமாக இருக்கும். அதனால், மிகவும் பொறுமையாக சொல்லிக்கொடுப்பார்கள். நானும் ஈ அடிச்சான் காப்பித்தான். பிளைண்டாக அண்ணன் சொல்லுவதை அப்படியே செய்வேன்.

அண்ணனை போலவே அவருடன் சேர்ந்து சாய்காலம் அந்த பெரிய்யயயய கிரவுண்டில் 3-4 ஓட்டங்கள் ஓடுவேன். சேகர் என்ற இன்ஸ்பெக்டர் அங்க்கிள் இருவருக்கும் வெகு தொலைவில் இருந்து மூங்கில் கழியுடன் ஓடிவந்து எப்படி தாவுவது என்று கற்றுக்கொடுத்தார்.. “L” போன்ற அமைப்புடைய மரத்தால் செய்யப்பட்ட தடுப்பான் மண்ணில் சொறுகி வைத்திருப்பார்கள். ஓடிவந்து அந்த தடுப்பானில் கழியை ஊன்றி எகுற வேண்டும். அண்ணனை பார்த்து நானும் தாவுவேன். சேகர் அங்க்கிள் திருடர்களை பிடிக்க அவர்கள் இதை பழக வேண்டும் என்று சொன்னார். நாங்களும் பழகிவிட்டோம்

அண்ணன் என் திருமணத்திற்கு பின்னும், என்னுடைய கணவரிடம் அனுமதி பெற்று நான் படிக்க பண உதவி செய்து என்னை படிக்க அனுப்பினார். ஒரு வருடம் கம்பியூட்டர் கோர்ஸ் போனேன். 4 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவினார்.

கால் கியர் உள்ள வண்டிகளை ஓட்டக்கற்றுகொடுத்தார்.(இதுவும் என் திருமணத்திற்கு பின் தான்) அவரால் தான் இப்பவும் ஆண்கள் ஓட்டும் இரு சக்கர வண்டிகளையும் நான் ஓட்ட பழகியிருக்கிறேன். எனக்கென்று வண்டி வாங்க சென்றபோது, பெண்களுக்கான வண்டிகளை தேர்வு செய்யாமல், ஸ்கூட்டர் வாங்கிக்கொடுத்தார். ஆனால் அதை நானே அவரும் எதிர்பார்க்காதவாறு அரை நாளில் பழகிக்கொண்டேன். வேளச்சேரியில் (இப்போது வண்டியை மாற்றிவிட்டேன்), “ஸ்கூட்டரில் எப்போதும் ஒரு பையனுடன் (என் பையன்) செல்லுவார்களே அவர்களா? “என்று என்னை குறிப்பிடும் படி ஸ்கூட்டர் ஓட்டும் பெண் ஆனேன். :)))

இன்னும் இப்படி என் அண்ணன் எனக்கு செய்தவை நிறைய இருக்கு. பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை விட பெண் இப்படியும் இருக்கலாம் என்று பழக்கிவிட்டவர் என் அண்ணன் அதனால் இந்த பகுதியை அவரின் பெயரில் எழுத ஆசைப்படுகிறேன்.

அலுவலகத்தில் நிறைய விஷயங்கள் அடுத்தவர்களை பார்த்து நாம் கற்றுக்கொள்ளலாம். அவை நமக்கு பலவகையில் பயன்படும். சின்ன சின்ன விஷயமாகக்கூட இருக்கும் ஆனால் அதன் பலன் அதிகமாக இருக்கும் நம்முடைய வேலை சுலபமாக முடியும். நான் நிறைய கற்றுக்கொண்டது என்னுடைய மேலதிகாரிகளிடம் இருந்து மட்டுமல்ல, ஆபீஸ் பாய் என்று அழைக்கப்படும் கடைநிலை ஊழியரிடமிருந்தும் கற்றுக்கொண்டு இருக்கிறேன். அவற்றில் சில….

குறிப்பு 1.

எல்லோரும் கம்பியூட்டர் உதவியுடன் தான் வேலைப்பார்க்கிறோம். சம்பந்தப்பட்ட file களை folder create செய்து சேவ் செய்து வைக்கிறோம். சமீபத்தில் என் அலுவலகத்தில் ஒருவர் இந்த folder களை நம்பர் போட்டு சேவ் செய்து இருந்தார். அதாவது அவருக்கு எது முதலில் வேண்டுமோ அதற்கு எண்.1 , 2, 3.. என்று பெயர் கொடுத்து இருந்தார். உதாரணம்.

Folder names :- (இவை எப்போது கிரியேட் செய்தாலும் alphabetic order இல் தான் போய் உட்கார்ந்து கொள்ளும்) Examples :-

Accounts
Admin
HR
Payroll
Policies
Purchase
Quotations
Recruitments.

மேலுள்ள இதையே அவர் தனக்கு தேவை எப்படியோ அப்படி நம்பர்களை கொடுத்து வைத்திருந்தார். இப்படி நம்பர்கள் கொடுப்பதால், இதனுள் நாம் சேவ் செய்து வைத்திருக்கும் பைல்களை தேடும் நேரம் குறைகிறது. இதில் என்னவோ 8 Folder தான் நான் குறிப்பிட்டு உள்ளேன்.. நாம் நூற்றுக்கணக்கில் Folder கள் வைத்து இருப்போம். இப்படி வரிசைப்படுத்திவிட்டால் எளிதாக, தேடலில் நேரத்தை வீணாக்காமல் இருக்கலாமே..

1. Recruitments
2. Accounts
3. Admin
4. HR
5. Quotations
6. Purchase
7. Payroll
8. Policies

அணில் குட்டி அனிதா: ஓஓஓஓஒ…இன்னைக்கு அண்ணன் புராணமா?.. நடக்கட்டும் நடக்கட்டும்…. அதே அண்ணன்கிட்ட நீங்க ரத்தம் சொட்ட சொட்ட அடிவாங்கின கதை எல்லாம் எப்ப சொல்லப் போறீங்க….????

பீட்டர் தாத்ஸ்: I sought my soul, but my soul I could not see. I sought my God, but my God eluded me. I sought my brother and I found all three

Never make a companion equal to a brother. ~Hesiod