உள்ளூரில் இன்னும் நான்கு முக்கிய இடங்கள் பாக்கி, அவரின் அண்ணன் மகன் பாரிஸ்ஸில் இருந்தாரு, அவங்க வீட்டுக்கும் ஒரு மாலை பொழுதில் போயிட்டு வந்தோம். பார்த்த இடங்கள் எல்லாவற்றிற்கும் இணைப்புகள் கொடுத்திருக்கேன். படம் சேர்த்தால், நேரமும் இடமும் பிடிக்குது. அதனால் இணைப்புகளை க்ளிக்கி, படங்களையும், விபரங்களையும் தெரிந்துக்கொள்ளலாம்.
Sacre-Coeur :  இந்தியர்கள் ( Gare du nord) பகுதியிலிருந்து காலார நடந்து சென்றுக்கொண்டே இருந்தால், 15 நிமிடங்களில் இந்த சர்ச் வந்துவிடுகிறது. சிறிய குன்றின் மேல் அமைந்த இந்த சர்ச் மிகவும் பிரசித்தி பெற்றதாக இருந்தது. மேலிருந்து மாலை நேர சூரிய வெளிச்சத்தில் பாரிஸ் நகரம் மிக அழகாக தெரிந்தது. உள்ளே நுழையும் முன் வெளி மதில் சுவர் மேல் வைத்திருந்த சிலை ஒன்று திடீரென்று அசைந்து எல்லோரையும் பயமுறுத்தியது. சுதாரித்து பார்த்தால்..அட !! சிலைப்போல வேஷமிட்ட மனிதர்.. ஃபோட்டோவிற்கு சிலைப்போல போஸ் கொடுத்தார். இங்கும் கறுப்பினத்தவர்கள் ஐஃபில் டவர் பொம்மைகளை கூவி கூவி விற்றுக்கொண்டு இருந்தனர். ஒரு ஈரோவில் ஆரம்பித்து 10-15 ஈரோ வரை விலைகள் இருந்தன. நவீனுக்கு வேலைக்காக இந்த சர்ச்சில் வேண்டிக்கொண்டு மெழுகுவற்றி ஏற்றினேன்.
இங்கு, குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இயங்கும் கழிப்பிடம் இருந்தததால், சர்ச்'சின் ஒரு பகுதியில் சுற்றுளா பயணிகள் இயற்கை உபாதைக்கு ஒதுங்கி, துர்நாற்றம் வீசியது.
பக்கத்தில் நம்மூர் கோயில் இருப்பதாக சொன்னதில், வெகுதூரம் நடந்தும் கண்டுப்பிடிக்க முடியாமல், அவரின் அண்ணன் மகன் வீட்டுக்கு சென்றோம். கைப்பேசி வசதி எங்களுக்கு இல்லை, அதனால் முன்னமே இறங்கும் ரயில் நிலையம், வீட்டு முகவரி வாங்கிக்கொண்டு எத்தனை மணிக்கு வருகிறோம் போன்ற தகவலை சொல்லியிருந்தோம். ரயில் நிலையம் அச்சு அசலாக நம்மூர் கிராமத்து ரயில் நிலையம் போலவே இருந்தது, அவர் ரயில் நிலையம் வந்து எங்களை அழைத்துசென்றார்,அந்த இடம் பாரிஸ் நகரை தாண்டி புறநகர் பகுதி. நம்மூர் வீட்டுவசதிவாரிய குடியிருப்புகள் போன்றே இருந்தன, மூவர் கூட சரியாக நிற்கமுடியாத மிகக்குறுகிய லிஃப்ட்டில் 7 ஆவது மாடியிலிருந்த அவரின் குடியிருப்புக்கு சென்றோம். கட்டிடம் கட்டி பல வருடங்கள் இருக்கலாம். பாண்டிச்சேரியிலிருந்து ஃப்ரான்ஸ் குடியுரிமை பெற்று, பரம்பரையாக செட்டில் ஆகியிருந்த அந்த குடும்பத்தினருக்கு, அரசே அநேக சலுகைகள் செய்து வருகிறது. மாதந்தோரும் உதவித்தொகை, பிள்ளைகள் வேலைக்கு செல்ல அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்வதற்கான எந்தவித படிப்புக்கும் அரசே உதவுகிறது போன்ற தகவல்கள் எனக்கு அதிகபட்சமாகவே தெரிந்தன. இவை ஃப்ரான்ஸ்ஸில் குடியேறும் மற்ற நாட்டு அகதிகளுக்கும் பொருந்தும்.
மருமகள் சுட சுட சிக்கன் சமோசாவும், டீ யும் கொடுத்து உபசரிக்க, சிற்றூண்டி முடித்து, 7 ஆவது மாடியிலிருந்து, இரவு நேர பாரிஸ்ஸின் அழகை ரசித்துவிட்டு , வீடு வந்து சேர்ந்தோம்.
*********
மற்ற இடங்களைப் பார்க்க செல்லும் முன், ஐரோப்பாவின் பூக்கள் பற்றி சொல்லிவிடுகிறேன். எங்குப்பார்த்தாலும் கண்ணைப்பறிக்கும் விதவிதமான வண்ண வண்ணப்பூக்கள். குறிப்பாக நாங்கள் சென்றிருந்த மாதத்தில் மிக அருமையான தட்பவெப்ப சூழல் இருந்தது. மிதமான குளிர் (10-11 டிகிரி), லேசான மழைச்சாரல், சில நேரம் பலத்த மழை என சுற்றுப்பயணத்திற்கு ஏற்ற வானிலை ரசிக்கத்தக்க வகையில் இருந்தது.
பூக்களே......
சற்றே தயாராகுங்கள்...
கவிதா வந்துவிட்டாள்...
உங்களை படம் பிடிக்க..
ன்னு '' திரைப்பட பாடலை அடிக்கடி மனதிலும்/வாய்விட்டும் பாடிக்கொண்டே இருந்தேன்.
ஒரு பூவே
இன்னொரு பூவை
படம் பிடிக்கிறதே?!!
எனவும்.............. சரி சரி.. டென்ஷன் ஆவப்பிடாது... கூல் !!  
இந்தியா வந்தவுடன் புகைப்படங்களை சரிப்பார்த்து, கணினியில் சேமித்து வைக்கும் போது, ஐரோப்பாவின் பூக்கள் என்றே ஒரு ஆல்பம் தயார் செய்யுமளவு அதிகளவில் பூக்களை தான் படம் பிடித்திருந்தேன். பாரிஸை விட, ஜெனிவா & மான்ட் ப்ளான்க்'கில் தான் விதவிதமான பூக்கள் இருந்தன. பாரிஸ் & பார்சிலோனா'வில் வழிநெடுக மரங்களில் பூத்துக்குலுங்கிய பூக்கள், காய்ந்த இலைகளோடு சேர்ந்து நடைபாதைகளில் உதிர்ந்து, பெரிய பெரிய மலர் படுக்கை விரிப்புகளையும், அழகழகான கோலங்களையும் உருவாக்கியிருந்தன.
இவற்றை கண்டுக்களித்தவாரே அடுத்து சென்ற இடம் :
Notre Dame de Paris : சய்னி நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த சர்ச் மிகவும் வித்தியாசமான கட்டிட வடிவமைப்பில் சுற்றுளா பயணிகளை கவர்ந்தது. கோதிக் என்ற கட்டிடக்கலையின் அடிப்படையில் கட்டியிருக்கிறார்கள். நுழைவாயிலின் கதவுகளிலும், மேற்புற சுவரோடு ஒட்டி செதுக்கிய சிலைகளும் கவனத்தை ஈர்த்தன.  உள்ளேயும் ஆடம்பர விளக்குகள், ஆதீத உயரத்தில் மேல் கூரை ஓவியங்கள் என எல்லாமே பிரம்மாண்டமாக இருந்தன.
இங்கிருந்து சய்னி நதிக்கரையில் சற்று தூரம் நடந்து ஊரை சுற்றிப்பார்த்தோம். சாலையோர கடை ஒன்றில் பேன் கேக்கின் சிஸ்டர் என்று சொல்லப்படும் 'க்ரீப்ஸ்' உணவை தயாரித்துக் கொண்டிருந்தனர். இது வேற ஒன்னுமில்ல, நம்மூர் மைதா/கோதுமை தோசை தான். ஒருவேளை இந்த உணவை புதுச்சேரியிலிருந்து இவர்கள் கற்றுவந்திருக்கலாம். சீஸ், வெண்ணெய், நெய், சாக்லெட் என பல ஃப்ளேவர்களில் கலந்து விதவிதமான தோசைகளை, வித விதமான விலைகளில் விற்கிறார்கள். மாமிசம் கலக்கவில்லை (முட்டை மட்டும்) என்பதை ஊர்ஜிதம் செய்துக்கொண்டு, வெண்ணெய் தோசை ஒன்றை வாங்கி சாப்பிட்டோம். அடடா..!! என்னா ருசி!!. அதிலிருந்து இந்த தோசையை எங்குப்பார்த்தாலும் வாங்கி சாப்பிட ஆரம்பித்தேன். மைதா மாவுடன் முட்டை கலந்து செய்கிறார்கள் என கூகுள் சொல்லுது.
அடுத்து சென்ற இடம் Arc de Triomphe நம் புதுதில்லி 'இந்தியா கேட்' போல இருக்கிறது. பாரிஸிலிலுள்ள மிகவும் புகழ்பெற்ற நினைவுச்சின்னங்களில் ஒன்று. இதன் கீழே முதலாம் உலகப்போரின் "அறியப்படாத போர் வீரன்" கல்லறை உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த கேட்'டிற்கு செல்லும் சாலை நம் சென்னை அண்ணாசாலையை நினைவுப்படுத்தியது. சாலையில் இருபுறமும் ஒரே வரிசையில் நெடுக வளர்ந்திருந்த பெரிய மரங்கள், மிகப்பெரிய ஷாப்பிங் மால்கள், சாலையோர கடைகள், உணவு விடுதிகள் என  ஆடம்பர ஷாப்பிங் இடமாக இருந்தது.
இங்கு, சிறுநீர் கழிக்க கழிப்பிடம் ஏதுமில்லாமல், நேரம் செல்ல செல்ல அடிவயிற்றில் அதிக வலி ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்கு ஆளானேன். வலியின் காரணமாக அத்தனை குளிரிலும் எனக்கு வியர்வை கொட்ட ஆரம்பித்தது. கழிப்பிடம் தேடி 40 நிமிடங்களுக்கு மேலாக அலைந்தோம். ஷாப்பிங் காம்லெக்ஸ்'ஸில் இருந்த ஒன்றிரண்டு இடங்களில்,  நீண்ட வரிசை இருந்ததால் வேறு இடம் தேடி அலைந்து, நேரம் கரைந்து, வலியும் அதிகமானது. இதன் நடுவில், கழிப்பறை பொருட்கள் விற்கும் ஒரு கடையில், கட்டண கழிப்பிடம் இருப்பதாக ஒருவர் சொல்ல, அதைக்கண்டுபிடித்து வரிசையில் நின்றேன். 2 ஈரோ கட்டணம் என்பதாலோ என்னவோ அதிக கூட்டம் இல்லை, இதுவே பாரிஸில் அதிகபட்ச கழிப்பறை கட்டணமாக இருக்கும். 50 சென்ட்ஸ் லிருந்து 1 ஈரோ தான் சாதாரணக்கட்டணம்.. நம் அவசரம் தெரியாமல், மிகுந்த பகட்டான அந்த கடையில் வேலை செய்பவர், உள்ளே சென்றவர் வெளியில் வந்ததும், ஒவ்வொரு முறையும் இவர் உள்ளே சென்று, நின்று நிதானமாக சுத்தம் செய்துவிட்டு வந்தார். "அடேய் அநியாய ஆபிசரே, எங்க அவசரம் தெரியாமல், ஏண்டா இப்படி செய்யறேன்னு" நினைச்சாலும் கேக்க முடியல. வெளியே வந்தும், எனக்கு அடிவயிற்றில் ஏதோ இறுக்கிப்பிடித்தது போலவே இருந்தது. மிகவும் சோர்ந்து, நடக்கக்கூட முடியாமல் சாலையோர பெஞ்சில் உட்கார்ந்துவிட்டேன். வலி குறைந்து நடக்கமுடியும் என்ற நம்பிக்கை வந்தவுடன் தொடர்ந்து சுற்ற ஆரம்பித்தோம்
*********
மறுநாள், நவீன் இருக்குமிடத்திலிருந்து 3 ஆவது ரயில் நிறுத்தத்தில் அமைந்திருந்த Louvre அருங்காட்சியகம் சென்றோம். உலகில் அதிகளவு பார்வையாளர்கள் வந்து போகும் அருங்காட்சியகம் இதுவே. அங்கிருந்த அரண்மனை ஒன்றின் முகப்பு முதற்கொண்டு எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே மியூசியமாக மாற்றியிருந்தனர். மிகப்பெரிய மியூசியமான இதை சுற்றிப்பார்க்க இரண்டு முழு நாட்கள் நிச்சயம் தேவை. ஆனால் எங்களுக்கு 3/4 நாள் தான் கிடைத்தது. இந்த இடத்தைப்பற்றி தனிப்பதிவுக்கூட எழுதலாம். ஏனென்றால், என் வாழ்க்கை சம்பவத்தோடு, நெருங்கிய தொடர்புடையது என அங்கு செல்லும் வரை எனக்கே தெரியாது. ஆம், உள்ளே சென்ற எனக்கு பெரிய அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் காத்திருந்தது.
தொடரும்..