நமக்கு எப்பவும் எதாது பிரச்சனை இருந்துட்டே தான் இருக்கும், ஆனால் மனதை ஒருமுகப்படுத்தி எழுதமுடியாத சூழ்நிலைகளில் இந்தப்பயணக்குறிப்புகளை பாதியில் விட்டுட்டேன்.  எதிர்கால குறிப்புக்கு வேண்டியாவது .... எழுதி வைக்க வேண்டும் என..தொடர்கிறேன்..
******

பாரிஸ் சென்றபோது அங்கிருந்து ஜெனிவா (Geneva), மான்ட் பளாங்க் (Mont Blanc) & பார்சிலோனா (Barcelona) வும் சென்று வந்தோம்.

ஜெனிவா : பாரிஸிலிருந்து அதிவேக ரயில் மூலம் ஜெனிவா சென்றோம். மிக சுகமான ஒரு பயணம் என இதைத்தான் சொல்லனும். ரயில் மிகவும் சுத்தமாக, புஷ் பேக் சீட் வசதியோடு இருந்தது. சிறிய பைகளை இருக்கைக்கு மேலும், பெரிய பெட்டி & பைகளை வைக்க  தனி இடமும் அமைத்திருந்தனர். விடியற்காலை 6 மணிக்கு Gare du nord என்ற ரயில் நிலையத்திலிருந்து ரயில். சென்னை சென்ட்ரல் போல, வெளி மாநிலங்கள்  செல்லும் விரைவு ரயில்களும், உள்ளூர் ரயில்களும் இருக்கும் மிக பிரம்மாண்டமான ரயில் நிலையம். இதன் (மிக) அருகில் தான் பாரிஸ்'ஸின் தமிழர்கள்/இந்தியர்கள் பகுதி.  நம்மூர் சரவணபவன், சென்னை கஃபே, ஆச்சி உணவகங்கள், துணிக்கடைகள், மளிகை, காய்கறி ன்னு எல்லாமே இங்கு மொத்த வியாபாரம். 
ரயில் நிலையத்திலிருந்து வெளிவந்து நடக்கும் இடத்தில் சிறுநீர் துர்நாற்றம் அடித்தது, அதற்கு காரணம் தமிழர்/இந்தியர் பகுதி, அவர்கள் வெளியில் தான் சிறுநீர் கழிப்பார்கள் என சொல்லப்பட்டது, ஆனால் பாரிஸிலிருந்து திரும்புவதற்குள் , அங்கு பொது இடங்களில் சரியான கழிப்பிட வசதி இல்லாததால், மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில், பாரிஸ் நகரின் புகழ்பெற்ற சர்ச் ஒன்றிற்கு சென்றபோது, அங்கும் துர்நாற்றம் வீசியது. இதற்கு தமிழர்கள்/இந்தியர்கள் மட்டுமே காரணம் இல்லை எனப்புரிந்தது. நவீன் சொன்னதிலிருந்து, பாரிஸ்'ஸில் பெண்களும் பல சமயங்கள் அவசரத்திற்கு நிற்கும் கார்களுக்கு பின்னால் ஒதுங்குகிறார்கள் எனத் தெரிந்தது.
பாரிஸ் நகரின் கழிப்பிடங்களை பற்றி தனிப்பதிவே எழுதலாம்.  பொது இடங்களில் உள்ள கழிப்பிடங்கள் அத்தனையும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை என்று நேரம் குறிப்பிட்டு, மற்ற நேரங்களில் மூடியே இருக்கின்றன. இயற்கை உபாதைகளுக்கு நேரம் காலம் இருக்கிறதா என்ன?. தவிர தானியங்கி கழிப்பிடங்களும் குறைவே.  ஐஃபில் டவர், கோத்தகேம்ப் போன்ற இடங்களில் மட்டுமே தானியங்கி கழிப்பிடங்கள் இருந்தன. ரயில், பேரூந்து நிலையங்கள் அத்தனையிலும் குறிப்பிட்ட நேரத்தில் தான் கழிவறை திறக்கப்படுகிறது. இப்படியான வசதிகள் எங்களுக்கு அதிக சிரமத்தை கொடுத்தன.  இவற்றை மீறி அவசரத்திற்கு கழிப்பிடம் கண்டுப்பிடித்து சென்றால், நீண்ண்ண்ட வருசையில் நின்று செல்ல வேண்டும். இதற்காகவே வெளியில் செல்லும் போது, தண்ணீர் குடிக்காமல் இருந்து பழக ஆரம்பித்தேன்.

பாரிஸ் சுற்றுப்பயணத்தின் போது,  எங்குப்போனாலும், Gare du nord ரயில் நிலையம்  வந்து தான் நவீன் இருக்கும் இடத்திற்கு ரயில் மாறனும்.   ரயில் நிலைத்திலிருந்து நம்மூர் கடைத்தெரு ரொம்ப பக்கம் என்பதால், ஓடிப்போய் நவீனுக்கு நம்மூர் பிரியாணி ஒன்னு வாங்கிட்டு வந்துடுவேன். நாங்கள் சென்றிருந்த போது, ஆச்சி கடை ஒன்றில் தள்ளுபடி விலையில் ஒரு பிரியாணி 5.5 Euro. மற்ற கடைகளில் 7-8 Euro. 
******

விடியற்காலை 3 மணி வாக்கில் எழுந்து நவீனுக்கு இரண்டு நாட்களுக்கு தேவையான உணவுகளை சமைத்து வைத்துவிட்டு, துணி துவைக்கும் வேலையும் முடித்து, நாங்களும் கிளம்பி, நடுவில் ஒரு இடத்தில் ரயில் மாறி, மெயின் நிலையம் வந்து, எங்களின் ரயிலை தேடிப்பிடித்து (சரியான வழிக்காட்டல் இல்லாமல் கண்டுப்பிடிக்க சிரமப்பட்டோம் ), ரயிலின் உள்ளே வந்து உட்கார்ந்தது தான், 10 நிமிடங்களில் தூங்கிப்போனேன்.
தூக்கம் கலைந்து எழுந்துபோது  மலைகள் சூழ்ந்த பச்சை பசேல்'லென்ற நிலப்பரப்புகளுக்கு இடையே ரயில் அதிவேகத்தில் சென்றுக்கொண்டிருந்தது. தொலைவில் மாடுகள், ஆடுகள் மேய்ந்துக்கொண்டிருந்தன. ஆங்காங்கே  ஒன்றிரண்டு வீடுகள்.  ஐரோப்பாவின் கிராமங்கள் என யாரும் சொல்லித்தர வேண்டியிருக்கவில்லை.   வேடிக்கைப்பார்த்தபடி நானிருக்க, எப்போது எழுந்திருப்பேன்னு பசியோடு இருந்த என் கணவர், ரயிலின் உள்ளே உள்ள காண்டீன் சென்று சாப்பிட ரொட்டியும் குடிக்க ஜூஸ்ஸூம் வாங்கிட்டு வந்தார். இருவரும் பகிர்ந்து சாப்பிட்டு வயிற்றை நிரப்பினோம்.

ஜெனிவா வந்திறங்கி,, ஹோட்டல் இருக்குமிடம் செல்ல, ரயில் நிலையத்தில் உதவிக்கேட்டு ஒரு கவுண்ட்டர் சென்றோம். டிக்கெட்டும் கொடுத்து, விபரமும் சொல்லி, விசா, பாஸ்போர்ட் வாங்கி பரிசோதனை  செய்து அனுப்பி வைத்தனர்.
பாரிஸ்ஸிலும் சரி, ஜெனிவா விலும் சரி..ரயில் நிலையங்களிலேயே பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட்டுகள் இருந்தன. தனியாக கடைத்தெருவிற்கு செல்லாமல், பயணம் முடிந்து வீடு திரும்பும் போது , வீட்டிற்கு தேவையான எல்லாவற்றையும் கையோடு வாங்கி செல்லும் வசதி.. இப்படியான வசதி அங்கு எல்லா நகரங்களிலும் இருக்குமென நினைக்கிறேன்.

பாரிஸ் பயணத்தில் எந்த இடம் மிகவும் பிடித்தது எனக்கெட்டால், யோசிக்காமல் "Genthod"  என்று சொல்லிவிடுவேன். ஜெனிவா ரயில் நிலையத்திலிருந்து 4-5 நிறுத்தங்களில் 8-10 நிமிட ரயில் பயணத்தில்,  உள்ள இடமே "ஜென்தோட்".

ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்ததும்,  ஐரோப்பாவின் மிக அழகிய, விதவிதமான வண்ணமிகு பூக்கள் என்னை  வரவேற்றன. அவர் என்னமோ ஹோட்டல் தேடி நடையைக்கட்ட, நான் பூக்களின் வரவேற்பில் மயங்கி, அவற்றை ரசித்து புகைப்படம் எடுத்தபடி அவர் செல்வதை கவனிக்காமல் நின்றுவிட,, வெகுதூரம் சென்று ..நான் வராததால் காத்திருந்தார்.

ஜென்தோட், ஜெனிவாவின் புகழ்ப்பெற்ற ஏரியின் ஒருக்கரையில் இருக்கும் சிறிய, எல்லா வசதிகளையும் கொண்ட மிக அமைதியான ஊர். மனிதர்களை அதிகம் பார்க்கமுடியவில்லை. நேர்த்தியாக, பல வண்ண பூச்செடிகள், பெரிய மரங்கள் சூழ வரிசையாக அமைந்த அழகான வீடுகள், சுத்தமான சாலைகள், சாலையில் உள்ள மின்சார கம்பங்களிலும் தொட்டிகள் கட்டப்பட்டு அவற்றில் வளர்க்கப்படும் பூச்செடி, கொடிகள் எனப்பார்க்கும் இடமெல்லாம் பூக்கள் பூக்கள் பூக்கள்...

எங்கோ ஒன்றி்ரண்டு கடைகள் இருந்தன. அவற்றில் ஒன்று வெதுப்பகம் (Bakery) வெளியில் வரும் போது அங்கு கொஞ்சம் ரொட்டி வகையறாக்கள் வாங்கி வைத்துக்கொண்டோம். அறையில் ஓய்வெடுத்துவிட்டு மாலை 4 மணி அளவில் ஜெனிவா சுற்றிப்பார்க்க சென்றோம். ரயில் நிலையத்திலிருந்து நடந்தே ஏரிக்கரைக்கு  (தனுஷ் நடித்த ஒரு பாடலில் இந்த ஏரிக்கரையில் எடுத்திருந்தனர், பாடல் நினைவு வரும் போது பகிர்கிறேன்) வரமுடியும், ஆனால் அக்கரைக்கு செல்ல முதலில் பேரூந்தில் சென்று, படகு சவாரி முடித்து, இக்கரைக்கு வந்து, ரயில் நிலையம் நடந்துவந்துவிட்டோம்.

ஏரியை சுற்றி இருக்கும் சாலையில், ஆண்களும் பெண்களுமாக ஓடிக்கொண்டிருந்தார்கள். ஓடி வந்த அத்தனைப் பெண்களுக்கும் biceps ' தெரிந்தது. விளையாட்டு வீராங்கனைகளைப்போன்று இருந்தனர்.

பாரிஸ் நகரிலேயே அருங்காட்சியங்கள் பார்த்துவிட்டதால், ஜெனிவாவிலும் அநேகமாக அவையே இருந்ததால்,  திரும்பவும் அவற்றையே பார்க்கவேண்டாம் என முடிவுசெய்து,  மாண்ட் ப்ளாங்க் போக பேரூந்தில் முன்பதிவு செய்துவிட்டு, இந்திய உணவகம் (பெங்காலி ஓனர்) ஒன்றை கண்டுபிடித்து, இரவு உணவை முடித்துவிட்டு, அறைக்கு திரும்பினோம்.

தொடரும்....