மான்ட் ப்ளான்க் மறுநாள் 7.30 மணி வாக்கில் ஜென்தோட் அறையிலிருந்து கிளம்பி, ஜெனிவாவில் மான்ட் ப்ளான்க் செல்லும் பேரூந்து நிலையம் சென்று காத்திருந்தோம்.
ஜென்தோட் ரயில் நிலையத்தைப்பற்றி சொல்லியே ஆகவேண்டும். நம்மூர் கிராமங்களில் உள்ள ரயில் நிலையங்கள் போலவே இருந்தது. அதாது போகும் , வரும் ரயில் இரண்டுமே, ஒரே ப்ளாட்பாரத்தில் வந்து நிற்கும், போகும். டிக்கெட் கொடுக்க சின்னதாக கட்டிடம் அதை ஒட்டி சின்னதாக ப்ளாட்பாரம். சின்ன கேன்டீன், கழிப்பறை. சென்றதிலிருந்து திரும்ப வரும் வரை அந்த கேண்டீன் & கழிப்பறை இரண்டுமே திறக்கவேயில்லை. மக்கள் கூட்டமும் குறைவு. வந்தவர்கள் அநேகமாக மாணவர்களாக இருந்தனர். ரயிலுக்காக காத்திருக்கும் நேரத்தில் அதிவேக ரயில்கள் மற்ற தண்டவாளங்களில் மின்னல் வேகத்தில் கடப்பதைப்பார்க்க சுவாரசியமாக இருந்தது. அதைக் காத்திருந்து வீடியோ எடுத்தேன்.. ஆனால் ரயில் சென்ற வேகத்தில் சரியாக பதியவில்லை. :( . வீடியோ எடுக்கும் போது, குறுக்கே வராமல் வீடியோ எடுத்து முடிக்கும் வரை காத்திருந்து, பின்னர் புன்னகைத்தவாரே அந்நாட்டவர் என்னை கடந்து சென்றனர்.
பேரூந்து நிலையத்தில், வேன்கள், பேரூந்துகள் என ஒன்றன் பின் ஒன்றாக சுற்றுளா பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளம்பியவாரே இருந்தன. எங்களது பேரூந்து சொன்ன நேரத்தை கடந்து 30 நிமிடங்கள் தாமதமாகவே கிளம்பியது. பெரிய வால்வோ பேரூந்து, எண்ணி 12 பேர் தான் இருந்தோம்.
பேரூந்து பிரயாணத்தில் முதல் 30 நிமிடங்கள், ஜெனிவாவின் உள்ளேயே பயணித்தது. ஜெனிவாவின் கட்டிட அமைப்புகள் மற்றும் சாலைகளின் அமைப்புகளை பார்க்க முடிந்தது. ஓரளவு ஜெனிவா நகரை சுற்றிய திருப்தி. பின்னர் மெதுமெதுவாக மலைகள் சூழ்ந்த பகுதிகளில் பேரூந்து செல்ல ஆரம்பித்தது. சாலையின் ஓரத்தில் சிறிய ஓடை நதிகள்  என்னுடனேயே பயணம் செய்தன.
கைலாசம் மலையைப்போன்ற அமைப்பில், பனிப்படர்ந்து ஜொளித்த ஆல்ப்ஸ் மலைத்தொடர்ச்சியின் உச்சி தெரிய ஆரம்பித்தவுடன் எங்களுக்குள் ஒரு பரவசம் ஒட்டிக்கொண்டது. பேரூந்திலிருந்தே அதை வேடிக்கைப்பார்த்தபடி, புகைப்படம் எடுத்தபடி பயணித்தோம்.
மான்ட் ப்ளான்க் வந்துவிட்டது, இறக்கிவிட்ட நடத்துனர் கம் ஓட்டுனர், மாலை 5 மணிக்கு இதே இடத்தில் வந்து நில்லுங்கள் என்று சொல்லிவிட்டு பேரூந்தோடு கிளம்பிவிட்டார்.
அவ்விடம் மூன்று சாலைகளே அமைந்த சிறிய சுற்றலா தளம். அதிலும் அநேகமாக உணவகங்கள், சுற்றுளா பயணிகளுக்கான கடைகளாகவே இருந்தன. மலைக்கு மேல் செல்ல டிக்கெட் வாங்க வெகு நேரம் காத்திருந்தோம். பனி சரிவு இருந்ததால், முதல் நிலை வரையே எங்களை அழைத்துச்சென்றனர். கேபிள் காரில்  பயணம் செய்யும் போது அறுந்துவிழுந்தால் என்னாவது என்ற எண்ணம் வந்து சென்றது. ஆல்ப்ஸ் மலை முதல் நிலையில் கடைகள், உணவு விடுதிகள் என எல்லாமும் இருந்தன. ஹெலிக்காப்டர்கள் மூலம் பொருட்கள் கொண்டுவரப்பட்டதை பார்க்க ஆர்வமாக இருந்தது. மலையில், காக்கை நிறத்தில் புதுவிதமான பறவைகள் நிறைய இருந்தன.வெயில் அதிகமாக இருந்ததால் குளிர் தெரியவில்லை.
திரும்ப வந்து, உள்ளூரில் இருந்த ஒரு சில இடங்களை சுற்றிப்பார்த்து, ஒரு இலங்கை தமிழர் உணவகத்தில் மதியம் சாப்பிட்டு, வந்த பேரூந்திலேயே இரவுக்குள் ஜெனிவா வந்து, ரயில் நிலைய சூப்பர் மார்க்கெட்டில் இரவு உணவுக்கு ரொட்டி வகையறாக்கள் வாங்கிக்கொண்டு, ஜென்தோட் அறைக்கு வந்துவிட்டோம்.
அடுத்தநாள் விடியற்காலை 5.30 க்கு பார்சிலோனா செல்ல low cost 20 ஈரோ குட்டி விமானம் முன்பதிவு செய்திருந்தோம். அதுகுறித்து விடுதியில் சொல்ல, அவர்கள் விமான நிலையத்திற்கு 4 மணிக்கு டாக்ஸி புக் செய்துக்கொடுத்து, அலுவலகத்தில் அந்நேரத்திற்கு யாரும் இருக்க மாட்டோம், நீங்களே வெளிவாசல் திறந்து, மூடிவிட்டு செல்லுங்கள், அறை சாவியை அறையிலேயே விட்டுவிடுங்கள் என்றனர்.
விடியற்காலை 4 மணிக்கு நாங்கள் வெளியில் வந்தால், கும்மிருட்டு, சாலையில் எந்த நடமாட்டமும் இல்லை. ஏகத்துக்கும் குளிர். 10 நிமிடம் காத்திருந்தோம், டாக்ஸிக்கு சொல்லலையோ..? டாக்ஸி வராவிட்டால் இங்கிருந்து எப்படி விமான நிலையம் செல்வது போன்ற சந்தேகங்கள் வர கவலையானது. விமானத்தை விட்டுவிட்டால், மொழிதெரியாத வேற்று நாட்டில் பிரச்சனையாகுமேன்னு குழப்பத்தோடு குளிரில் நடுங்கியபடி காத்திருக்க.......20 நிமிடங்களில் ஆள் அரவமே இல்லாத அந்த இடத்தில், எங்கள் இடம் நோக்கி டாக்ஸி வந்தது.

 குட்டி விமானம் என்பதால் ஏகப்பட்ட கெடுபிடி, கட்டுப்பாடுகள். குறைந்த எடை, குறிப்பிட்ட அளவுக்கொண்ட சூட்கேஸ், கைப்பைகள் தான் அனுமதி. பாரிஸிலிருந்தே அதற்கு தகுந்தார்ப்போன்று சின்னதாக சூட்கேஸ் எடுத்துச்சென்றிருந்தோம்.
ஜெனிவா & மான்ட்ப்ளான்க் கில் அதிகம் கண்ணில் பட்டது ஸ்விஸ் வாட்சுகள். ஒன்றாவது வாங்கலாம் என விலை விசாரித்தால், எங்கள் பட்ஜெட்டில் இல்லை. வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு வந்துவிட்டோம். ஜெனிவாவின் விமானநிலையத்தில் தீபிகா படிகோனின் ஸ்விஸ் வாட்ச் ஆள் உயர விளம்பர பலகை கவர்ந்ததோடு மட்டுமல்லாமல், ஒரு இந்திய பெண் இந்நாட்டு விளம்பரத்தில் என்ற பெருமையும் உண்டானது. விமான நிலையத்தில் ஸ்விஸ் சாக்லெட்ஸ் நவீனுக்காக வாங்கிக்கொண்டோம்.
பார்சிலோனா: வெயில் அதிகமாக தெரிந்தது. இதுவரையில் பாரிஸ், ஜெனிவா, மான்ட் ப்ளான்கில் உணராத ஒரு வெயிலை இங்கு உணர்ந்தோம். விமான நிலைத்திலிருந்து பேரூந்து மூலம் ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து அரை மணி நேர பயணத்தில் ஹோட்டல் இருக்குமிடத்திற்கு வந்தோம். மாலை அங்குள்ள சுற்றுலா பயணிகளுக்கான பிரத்தியேகமான பேரூந்துகள் மூலம் ஊரை சுற்றிப்பார்த்தோம். நேரம் குறைவான காரணத்தினால் எல்லாவற்றையுமே பேரூந்திலிருந்தே பார்த்தோம். இரவு ஒரு சீன உணவகத்தில் சாப்பிட்டோம்.

பார்சிலோனா கூட்ட நெரிசலாக இருந்தது. பலதரப்பட்ட மக்கள் அங்கு இருப்பதாக தெரிந்தது. தவிர பெரிய பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகமாக தென்பட்டன,கார்கள் குவிக்கப்பட்டிருந்த அந்த நிறுவனங்கள் கண்களுக்கு விருந்து. இண்டஸ்ட்ரியல் ஏரியாவாக இருந்தது. வேலை வாய்ப்பு அதிகம் உள்ள இடமாக இருக்க வாய்ப்புகள் அதிகம். தவிர, சுற்றலா பயணிகள் மிக அதிகம். நம்மூர் திரைப்படங்கள் இங்கு அதிகம் படமாக்கப்படுகிறது போல. நிறைய இடங்கள், கட்டிடங்களை முன்னமே பார்த்ததுப்போல இருந்தது. இங்கு பல கட்டிடங்கள் வித்தியாசமான தொழில்நுட்பத்தில், வடிவமைப்பில் கட்டியிருந்தார்கள்.

பார்ஸிலோனாவிலிருந்து 40 கிமி தொலைவில் இருக்கும் விமான நிலையத்திற்கு பேரூந்தில் புக் செய்து சென்றோம். அங்கிருந்து பாரிஸ் செல்ல மேலே சொன்ன குட்டி விமானம். அது பாரிஸ் நகரின் எல்லையில் அமைந்து ஒர் விமானநிலையத்திற்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து பேரூந்தில் ரயில் நிலையம் வந்து, ரயிலில் Gare du nord ரயில் நிலையம் வந்து அங்கிருந்து நவீன் இருக்குமிடம் வந்து சேர்ந்தோம்.

சென்று வந்த இடங்களில், பெண்களைப்பற்றி சொல்லியே ஆகவேண்டும்.. பாரிஸ்ஸில் பெண்கள் பேரழகிகள், உலகில் உள்ள அத்தனை பேரழகிகளையும் ஒரு சேர பாரிஸ் நகரில் பிரம்மன் படைத்துவிட்டான் போல. செதுக்கி வைத்த சிலையைப்போன்று இருந்தனர். மேலும் குறைந்தபட்ச உயரம் 5.5 க்கு மேலாகவே இருந்தனர்.
ஜெனிவாவில் பெண்கள் அத்தனைப்பேருமே பைசப்' சுடன் விளையாட்டு வீராங்கனைகளை ப்போல இருந்தனர். இவர்கள் அத்தனை உயரம் என்று சொல்லிவிட முடியாது, மிகவும் அழகானவர்கள் என்றும் சொல்லிவிட முடியாது. சாதாரணமாக இருந்தனர்.
பார்சிலோனாவில் பெண்கள் கதைகளில் வரும் "விட்ச்" போன்று இருந்தனர். சூனியக்காரிகள் போலவே மிக நீளமான வளைந்த நகங்கள், அளவுக்கு மீறி கண்களிலும், வெளியிலும் அப்பியிருந்த காஜல், தலைவிரி கோலம், அதிகப்படியான மேக்கப், அடர் நிற விதவிதமான உதட்டு சாயங்கள் , நீண்ட முகம் என பயமுறுத்தினார்கள், இங்கு மிகப்பெரிய உருவ பெண்களை அதிகமாக பார்க்கமுடிந்தது. அழகாகவும் இல்லாமல் சாதாரணமாகவும் இல்லாமல் அதிக மேக்கப்போடு பயமுறுத்தினார்கள்.
பொதுவாகவே ஆண்களை அதிகம் கவனிக்கும் பழக்கம் இல்லை, கறுப்பின ஆண்களை மட்டும் கவனிப்பேன். எனக்கு அதிகம் பிடித்த, நடிகர் வில்ஸ் ஸ்மித் போன்றே அவர்களும் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். :) நவீன் குள்ளமாக தெரிந்ததால், அவனிடம் அதை சொல்லும் போது , அந்நாட்டு ஆண்களின் குறைந்தபட்ச உயரம் 6 அடி, அவர்களைப்பார்த்துவிட்டு அவனை ப்பார்த்தால் குள்ளமாக தான் தெரியும் என்றான். ஆக பாரிஸ் ஆண்களைப்பற்றி ஒரே ஒரு விபரம் 'உயரமானவர்கள்' என்பது மட்டுமே.!
தொடரும்..