பாரிஸ் பயணக்குறிப்புகள் #9


மொத்தம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்த Louvre மியூசியத்தில், முதலில் எதனைப்பார்க்கலாமென, டிக்கட்டோடு அவர்கள் கொடுத்திருந்த லீஃப்லெட்களை வைத்து தேர்வு செய்து, உள்ளே சென்றார், பின்னால் நானும். முதல் தளத்தில் ஆரம்பித்தது, சிலைகளையும், ஓவியங்களையும் பார்த்தபடி வந்துக்கொண்டிருந்தேன். பெண்களின் சிலைகள் அநேகமாக அரை/முழு நிர்வாணத்தோடே இருந்தன. ஆண் சிலைகளில் முழு நிர்வாண சிலைகள் இல்லவே இல்லை என்பது குறிப்பிட வேண்டியது, ஏன்னு எனக்கு தெரியல. பெண்களின் முழுநிர்வாணத்தை ரசிப்பதைப்போன்று ஆண்களை ரசிக்க முடியாது என்பதாலா? தெரியல. அவற்றை வடித்த சிற்பிகள் தான் விளக்கம் சொல்லனும் !
நடக்க நடக்க சீனத்து சுவர் போல நீண்டுக்கொண்டே சென்றது கூடவே கால் வலியும், சில அறைகளின் உள்ளே செல்லாமல் வெளியில் இருந்தே வேடிக்கைப்பார்த்துவிட்டு வந்தேன். அப்படி ஒரு அறையில் உள்ளே நுழையாமல் கடந்தபோது, என் கணவர் "இந்த அறையை மட்டும் உள்ளே சென்று பார்த்துவிடலாம் வா'னு அழைக்க.. "போங்கப்பா முடியல.. இன்னும் இரண்டு கட்டிடம் மிச்சமிருக்கு, நேரமும் இல்லை, நடக்கவும் முடியல..அதெல்லாம் எப்ப பார்க்கறது வாங்கன்னு" நான் அவரை இழுக்க..
"இல்லல்ல.. இதைமட்டும் உள்ள வந்து பாரு.. முக்கியமான அறை" னு சொல்ல, களைப்போடு உள்ளே போனேன்.
                 .................. ........... .............. .............. ...............
வியப்பில் விரிந்த கண்களோடு, பேச்சற்று, கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத அதிர்ச்சியில், வாய் லேசாக பிளக்க, முகம் இறுகி, அழுகை வந்துவிடுவேன் என என்னை அழுத்த.. பலவித உணர்ச்சிகளுக்கு ஆளாகி... தன்னிலை மறந்து நின்றேன். சற்று நேரம் கழித்து அவரை திரும்பிப்பார்க்கிறேன், "புருவம் உயர்த்தி, எப்பூடீ? ங்கற மாதிரி புன்னகை செய்ய..” நெகிழ்ந்துப்போனேன்.
ஆம்..அங்கே நான் பார்த்தது.. புகழ் பெற்ற ஓவியர் இலியானார்டோ தாவின்சியி வரைந்த மோனாலிசாவின் அசல் புகைப்படம். கூட்ட நெரிசலில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னே நகர்ந்து அருகே சென்றேன். இன்னமும் என்னால் நம்பவேமுடியவில்லை.. எப்படி நான் இங்கே? எப்படி இது சாத்தியம்? என் கண் எதிரில், நான் பார்ப்பது உண்மைதானா? இல்லை கனவா? என ஒன்றுமே எனக்கு புரியல..மோனாலிசா புகைப்படத்திலிருந்து என் கண்கள் நகரவேவில்லை, ஐக்கியமானேன்.
இவ்வளவு உணர்ச்சிவசப்பட காரணம்.... ??!!!
**********
திருமணம் ஆனவுடன், எனக்கு என்ன வேண்டும் எனக்கேட்ட என் கணவரிடம், ரொம்பவெல்லாம் யோசிக்காமல் "மோனாலிசா ஓவியம்" என்றேன். ஆனால் இத்தனை வருடங்கள் ஆகியும் அவர் வாங்கித்தரவில்லை. எப்போது கேட்டாலும் ஒரிஜினல் கிடைக்கலன்னு சொல்லி எஸ் ஆகிடுவார். நானும் எங்களுக்குள், எப்ப எதற்கு சண்டை வந்தாலும், சம்பந்தமேயில்லாமல் "முதல் முதலா கேட்ட கிஃப்ட் ஐ வாங்கித்தர முடியல..உங்களுக்கெல்லாம் ஒரு கல்யாணம்..” னு ஆரம்பிச்சி கழுவி ஊத்துவது தான் வழக்கம். ஆனால் எவ்வளவு கழுவி ஊத்தியும், ரோஷப்பட்டு அந்தப்படத்தை வாங்கித்தந்ததில்ல..
இதனால் என் மனதுக்குள் எப்போதும் ஒரு நிறைவேறாத ஆசை. ஆனால்... அன்று??!! உலகில் எத்தனையோ நாடுகள் இருக்க, ஃப்ரான்ஸ்க்கு வருவோம், அங்கே பாரிஸை சுற்றிப்பார்ப்போம் என்று தெரியாது, பாரிஸிலும் இந்த மியூசியம் வருவோம் என்று தெரியாது, இங்கு தான் மோனாலிசாவின் அசல் படம் இருக்கிறது என்றும் எனக்குத்தெரியாது. ஏன்னா நம்மோட ஜெனரல் நாலேஜ் அப்படி!. ஆனால் அவர் காலம் பூராவும் சொல்லியபடி... என்னை ஒரிஜினல் மோனாலிசா புகைப்படம் முன்பு நிற்க வைத்த அந்த நிமிடங்களை என்னால் வாழ்நாள் முழுக்க மறக்கவேமுடியாது அங்கிருந்த நிமிடங்கள் அத்தனையும் நெகிழ்ச்சியோடு பேச்சற்ற நிமிடங்களாக கடந்தன.
மோனாலிசா படத்தோடு சேர்த்து என்னை வீடியோ எடுத்தார், விதவிதமாக ஃபோட்டோ எடுத்தார். என்ன நடக்கிறது என்பதிலிருந்து வெளிவராத நான், இன்னமும் இறுக்கமான முகத்தோடே இருந்தேன். ஃபோட்டோ என்றால் பட்டுன்னு புன்னகை செய்யும் என்னால் மோனாலிசாவோடு எடுத்த எந்தப்புகைப்படத்திலும் புன்னகைக்க முடியவில்லை என்பது இப்பவும் அந்த புகைப்படங்களையும், வீடியோவையும் பார்க்கும் போது தெரிகிறது. ஆனால் எல்லாப்புகைப்படத்திலும் எனக்கும் சேர்த்து மோனாலிசா புன்னகைத்துக்கொண்டிருந்தார்... :)
அன்றிலிருந்து மோனாலிசா படம் வாங்கித்தரவில்லை என அவரை குத்திக்காட்டுவதை அடியோடு நிறுத்திவிட்டேன்.
Sea Life : நவீனோடு சென்ற ஒன்றிரண்டு இடங்களில் இதுவும் ஒன்று. என் குழந்தையோடு வெளியில் செல்வது புள்ளப்பூச்சியோடு வெளியில் செல்வதற்கு சமம். "ஏண்டா இப்படி நச்சரிச்சி தொலையற"ன்னு கேட்டால்.. "இதை நீ கேக்கக்கூடாது, நீ அடுத்தவங்கள எவ்ளோ புடுங்கறன்னு உனக்கு தெரிய வேணாம்? அதுக்கு தான்" னு கவுண்ட்டர் கொடுப்பான்.” “அய்யோஓஓ...என்னால முடியல, வீட்டுக்கு போய் தொலைக்கலாம்" னு சொல்றளவு தொந்தரவு செய்துடுவான்.. ஒரு நொடி என்னை விட்டு அப்படி இப்படி நகரமாட்டான், கையை வளைத்து இடுக்கிப்பிடி பிடிச்சிக்குவான், எப்பவும் என்னை உரசிக்கிட்டே இருக்கனும். இங்கவே அப்படிதான். இதுல வெளியூர்ல இரண்டு வருசமா தனியா இருக்கப்ப சொல்லவேணுமா.? .
கடல் வாழ் /நீர் வாழ் உயிரினங்கள் எக்கசக்கமாக இருந்தது. அவற்றைப்பார்ப்பதை விட, அவற்றை அவர்கள் பராமரிக்கும் விதம் பிரம்மிப்பாக இருந்தது. ஒரு பெரிய வீடு அளவிற்கு கண்ணாடி அறைகள், மிக சுத்தமான தண்ணீர், உள்ளே கடல்/நீர் நிலைகளைப் போன்ற அலங்காரங்கள். அந்த கண்ணாடி அறைகளின் மேலேயும், பக்கங்களிலும் நாம் நடந்து செல்லலாம். தண்ணீருக்குள் நாமும் இருப்பதாக ஒரு தோற்றப்பிழை. பெரிய பெரிய மீன்கள் நம் அருகில் வந்து செல்வது மயிற்கூச்சரிய செய்தது. மீன்கள் தவிர்த்து, பல்வேறு விதமான கடல்/நீர் வாழ் உயிரினங்களை காணமுடிந்தது. இணைப்பில் வீடியோவும் இருக்கிறது பாருங்கள்.
River Seine பாரிஸ்'ஸை சுற்றி ஓடும் இந்த ஆற்றை தனியாக சென்று பார்க்கவில்லை. போகிற இடமெல்லாம் கொசுறாக இதனையும் பார்த்து ரசித்துவந்தோம். நவீன் அவனுடைய ட்ரீட்டாக இந்த நதியில் செல்லும் சுற்றலா படகில், ஒரு இரவுக்கு புக் செய்திருந்தான். ஆனால் அவனோடு இருக்கவே விரும்புகிறோம் என சொல்லி மறுத்துவிட்டோம். என் புள்ளைக்கு சமைச்சிப்போட்டு, அவனோடு வம்பு வளத்தி, திரும்ப திட்டு வாங்கிட்டே இருக்கும் திருப்தி இந்த படகுப்பயணம் கொடுத்துவிடுமா என்ன?
உணவு வகைகள் : ரொட்டி, பீஸா, பர்கர் வகையறாக்களே. அவற்றோடு மாடு, பன்றி, கோழி போன்ற மாமிசங்களே இவர்களின் முதன்மை உணவுகள். ரொட்டி, சீஸ், வெண்ணெய், அவித்த மாமிசம், பச்சை அல்லது லேசாக அவித்த காய்கறிகள் சேர்த்து, மசாலா எதும் இல்லாமல் மிளகுத்தூள் உப்பு தூவி சாப்பிடுகிறார்கள். நாமறிந்த ஃப்ரென்ச் ஃப்ரை பிரசித்திப்பெற்றது. உருளை, கொடமிளகாய் போன்றவை அதிகளவில் சேர்த்துக்கொள்கிறார்கள். இவர்களின் பாரம்பரிய உணவு வகைகள் எதையும் ருசிப்பார்க்கவேயில்லை. முதல் காரணமாக எந்தவகை மாமிசம் என அறியமுடியவில்லை, ருசி எப்படியிருக்குமோ?, மற்றொன்று அதிகவிலை. விலை குறைந்த, மாமிசம் ஏதும் கலக்காத ரொட்டி வகைகள் எங்களுக்கு போதுமானதாக இருந்தது.. அவற்றில் சிக்கனில் செய்த சிக்கன் பனினி ரொம்பவே பிடித்தது. ரொட்டிக்குள் சிக்கன் வைத்து கிரில் செய்தால் அதுவே சிக்கன் பனினி (படம்) .தவிர, சாக்லெட் ஐஸ்க்ரீம் வகைகள் கண்களுக்குள் கொள்ளாமல் கொட்டிக்கிடக்கின்றன.

ஆடைகள்: பெண்கள் கழுத்தில் ஒரு மஃப்ளரை கட்டிக்கொள்கின்றனர். இவை கம்பளி நூலால் செய்தவை அல்ல. சாதாரண நைலான், ஜார்ஜட், காட்டன் துணிகளே. கழுத்தில் கட்டும் டையைப்போல, எந்தவித ஆடையோடும் மஃப்ளரை சுற்றிக்கொள்கின்றனர். கடைத்தெருக்களில் இந்த மஃப்ளர்கள் அதிகளவில் விற்கப்படுகின்றன. இதன் பலன் அநேகமாக குளிருக்கு அடக்கமாக இருக்கலாம். உடல் நிறத்திற்கு நேர் எதிரான, ஸ்கின் லெக்கிங்ஸ்அணிந்துக்கொள்கின்றனர். எத்திராஜ் கல்லூரியில் படித்தவள் என்பதால், மேல் சொன்ன இரண்டைத்தவிர, பாரிஸ்ஸில் பெண்கள் அணியும் ஆடைகள் எதும் புதிதாக தெரியவில்லை.


கவனத்தில் கொண்டவை: கறுப்பினதவர்கள், உள்நாட்டவர்களை போல அல்லாமல், பொது இடங்களில் சத்தமாக பேசுவது, பாடுவது, ஆடுவதுமாக கவனத்தை  ஈர்த்தனர். உடைகள், தலையலங்காரங்கள் என எல்லாமே இவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தியது.
நாம் குழந்தைகளை தோள்களில், கைகளில், இடுப்பில் தூக்கிக்கொள்வது போல யாருமே தூக்கவில்லை. தனியாக குழந்தைக்கான வண்டியில் வைத்தே ரயில், பேரூந்துகளில் அழைத்துவந்தனர். இதில் கைக்குழந்தைகளும் அடக்கம். தாய், தகப்பனின் அணைப்பே இக்குழந்தைகளுக்கு கிடைக்காதோ...என எண்ணத்தோன்றியது. கைக்குழந்தைகள் முதற்கொண்டு ஆண்கள் தனியாகவே குழந்தைகளை அழைத்துவந்தனர். பொதுவாக நம்மூரில் ஆண்களை நம்பி கைக்குழந்தைகளை கொடுக்கமாட்டோம்.
சென்ற இடங்கள் அத்தனையிலுமே, சாலைகளில் சைக்கிளுக்குக்கென்று தனிப்பாதை. சாலையை கடக்கும் போது, நடந்து செல்பவர்களுக்கே முன்னுரிமை. வாகனங்கள் எந்த வேகத்தில் வந்தாலும், பொறுமையாக நின்று, நடந்துசெல்பவர் கடந்தவுடனே தான் செல்கின்றன.
முதல் 2 பயணக்குறிப்புகளில் குறிப்பிட்டிருந்ததை நினைவுக்கொள்கிறேன். பாரிஸ்ஸில் இருந்த அத்தனை நாட்களும் மிகுந்த மன அழுத்தத்தோடு இருந்தேன், வெளியில் சென்று சுற்றிப்பார்க்கும் மனநிலையே எனக்கு இல்லை.24 மணி நேரமும், என் குழந்தைக்கு வேண்டுவன செய்து, அவனோடு இருக்கவே விரும்பினேன். ஆனால், அவருக்காக வெளியில் சென்று வந்தேன். அதனால் எழுதிய அனைத்துமே ஓரளவு கவனித்து எழுதியதே
10-11 டிகிரி குளிரில் ஸ்வெட்டர் இல்லாமல் வெளியில் செல்வது, குளிரை உணரும் போது, இருவருக்கும் நடுவில் நடந்து, நவீன் ஜெர்க்கின் பாக்கெட்டில் ஒரு கையும், அவரின் ஜெர்க்கின் பாக்கெட்டில் ஒரு கையும் விட்டுக்கொள்வது, வீட்டிலும் சன்னலை பப்பரப்பான்னு திறந்துவைத்துக்கொண்டு குளிரில் நின்றுக்கொள்வதுஅதே சமயம், பனி உள்ளே வந்து குளிரில் இருவரும் நடுங்குவதை பார்த்து, ஏன் இவங்களுக்கு குளிருதுன்னு வியப்பது, எப்பவும் அவர்களிடம் திட்டுவாங்கிவிட்டு சன்னலை மூடுவது என என் மன அழுத்தம் காரணமாக உயர் இரத்த அழுத்தம் அதிகமாகி என் உடல்நிலை இயல்பு நிலையில் இல்லை.
பாரிஸ் சுற்றுப்பயணத்தை எழுதத்தொடங்கி நடுவில் தொடரமுடியாமல் நிறுத்தி, திரும்ப ஓராண்டுக்குப் பிறகு, பயணத்தை முடிந்தளவு நினைவில் கொண்டுவந்து, எழுதிவிட்டேன். நிச்சயம் எதிர்காலத்தில் எனக்கு படிக்க உதவும் ! .
இத்தோடு பாரிஸ் பயணக்குறிப்புகள் நிறைவடைந்தன. ! என்  பயணக்குறிப்புகளில், இவை தான் அதிகளவு மக்களால் படிக்கப்பட்டு வருகிறது.  
பொறுமையோடு படித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி ! __/\__

பாரிஸ் பயணக்குறிப்புகள் #8

உள்ளூரில் இன்னும் நான்கு முக்கிய இடங்கள் பாக்கி, அவரின் அண்ணன் மகன் பாரிஸ்ஸில் இருந்தாரு, அவங்க வீட்டுக்கும் ஒரு மாலை பொழுதில் போயிட்டு வந்தோம். பார்த்த இடங்கள் எல்லாவற்றிற்கும் இணைப்புகள் கொடுத்திருக்கேன். படம் சேர்த்தால், நேரமும் இடமும் பிடிக்குது. அதனால் இணைப்புகளை க்ளிக்கி, படங்களையும், விபரங்களையும் தெரிந்துக்கொள்ளலாம்.
Sacre-Coeur :  இந்தியர்கள் ( Gare du nord) பகுதியிலிருந்து காலார நடந்து சென்றுக்கொண்டே இருந்தால், 15 நிமிடங்களில் இந்த சர்ச் வந்துவிடுகிறது. சிறிய குன்றின் மேல் அமைந்த இந்த சர்ச் மிகவும் பிரசித்தி பெற்றதாக இருந்தது. மேலிருந்து மாலை நேர சூரிய வெளிச்சத்தில் பாரிஸ் நகரம் மிக அழகாக தெரிந்தது. உள்ளே நுழையும் முன் வெளி மதில் சுவர் மேல் வைத்திருந்த சிலை ஒன்று திடீரென்று அசைந்து எல்லோரையும் பயமுறுத்தியது. சுதாரித்து பார்த்தால்..அட !! சிலைப்போல வேஷமிட்ட மனிதர்.. ஃபோட்டோவிற்கு சிலைப்போல போஸ் கொடுத்தார். இங்கும் கறுப்பினத்தவர்கள் ஐஃபில் டவர் பொம்மைகளை கூவி கூவி விற்றுக்கொண்டு இருந்தனர். ஒரு ஈரோவில் ஆரம்பித்து 10-15 ஈரோ வரை விலைகள் இருந்தன. நவீனுக்கு வேலைக்காக இந்த சர்ச்சில் வேண்டிக்கொண்டு மெழுகுவற்றி ஏற்றினேன்.
இங்கு, குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இயங்கும் கழிப்பிடம் இருந்தததால், சர்ச்'சின் ஒரு பகுதியில் சுற்றுளா பயணிகள் இயற்கை உபாதைக்கு ஒதுங்கி, துர்நாற்றம் வீசியது.
பக்கத்தில் நம்மூர் கோயில் இருப்பதாக சொன்னதில், வெகுதூரம் நடந்தும் கண்டுப்பிடிக்க முடியாமல், அவரின் அண்ணன் மகன் வீட்டுக்கு சென்றோம். கைப்பேசி வசதி எங்களுக்கு இல்லை, அதனால் முன்னமே இறங்கும் ரயில் நிலையம், வீட்டு முகவரி வாங்கிக்கொண்டு எத்தனை மணிக்கு வருகிறோம் போன்ற தகவலை சொல்லியிருந்தோம். ரயில் நிலையம் அச்சு அசலாக நம்மூர் கிராமத்து ரயில் நிலையம் போலவே இருந்தது, அவர் ரயில் நிலையம் வந்து எங்களை அழைத்துசென்றார்,அந்த இடம் பாரிஸ் நகரை தாண்டி புறநகர் பகுதி. நம்மூர் வீட்டுவசதிவாரிய குடியிருப்புகள் போன்றே இருந்தன, மூவர் கூட சரியாக நிற்கமுடியாத மிகக்குறுகிய லிஃப்ட்டில் 7 ஆவது மாடியிலிருந்த அவரின் குடியிருப்புக்கு சென்றோம். கட்டிடம் கட்டி பல வருடங்கள் இருக்கலாம். பாண்டிச்சேரியிலிருந்து ஃப்ரான்ஸ் குடியுரிமை பெற்று, பரம்பரையாக செட்டில் ஆகியிருந்த அந்த குடும்பத்தினருக்கு, அரசே அநேக சலுகைகள் செய்து வருகிறது. மாதந்தோரும் உதவித்தொகை, பிள்ளைகள் வேலைக்கு செல்ல அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்வதற்கான எந்தவித படிப்புக்கும் அரசே உதவுகிறது போன்ற தகவல்கள் எனக்கு அதிகபட்சமாகவே தெரிந்தன. இவை ஃப்ரான்ஸ்ஸில் குடியேறும் மற்ற நாட்டு அகதிகளுக்கும் பொருந்தும்.
மருமகள் சுட சுட சிக்கன் சமோசாவும், டீ யும் கொடுத்து உபசரிக்க, சிற்றூண்டி முடித்து, 7 ஆவது மாடியிலிருந்து, இரவு நேர பாரிஸ்ஸின் அழகை ரசித்துவிட்டு , வீடு வந்து சேர்ந்தோம்.
*********
மற்ற இடங்களைப் பார்க்க செல்லும் முன், ஐரோப்பாவின் பூக்கள் பற்றி சொல்லிவிடுகிறேன். எங்குப்பார்த்தாலும் கண்ணைப்பறிக்கும் விதவிதமான வண்ண வண்ணப்பூக்கள். குறிப்பாக நாங்கள் சென்றிருந்த மாதத்தில் மிக அருமையான தட்பவெப்ப சூழல் இருந்தது. மிதமான குளிர் (10-11 டிகிரி), லேசான மழைச்சாரல், சில நேரம் பலத்த மழை என சுற்றுப்பயணத்திற்கு ஏற்ற வானிலை ரசிக்கத்தக்க வகையில் இருந்தது.
பூக்களே......
சற்றே தயாராகுங்கள்...
கவிதா வந்துவிட்டாள்...
உங்களை படம் பிடிக்க..
ன்னு '' திரைப்பட பாடலை அடிக்கடி மனதிலும்/வாய்விட்டும் பாடிக்கொண்டே இருந்தேன்.
ஒரு பூவே
இன்னொரு பூவை
படம் பிடிக்கிறதே?!!
எனவும்.............. சரி சரி.. டென்ஷன் ஆவப்பிடாது... கூல் !!  
இந்தியா வந்தவுடன் புகைப்படங்களை சரிப்பார்த்து, கணினியில் சேமித்து வைக்கும் போது, ஐரோப்பாவின் பூக்கள் என்றே ஒரு ஆல்பம் தயார் செய்யுமளவு அதிகளவில் பூக்களை தான் படம் பிடித்திருந்தேன். பாரிஸை விட, ஜெனிவா & மான்ட் ப்ளான்க்'கில் தான் விதவிதமான பூக்கள் இருந்தன. பாரிஸ் & பார்சிலோனா'வில் வழிநெடுக மரங்களில் பூத்துக்குலுங்கிய பூக்கள், காய்ந்த இலைகளோடு சேர்ந்து நடைபாதைகளில் உதிர்ந்து, பெரிய பெரிய மலர் படுக்கை விரிப்புகளையும், அழகழகான கோலங்களையும் உருவாக்கியிருந்தன.
இவற்றை கண்டுக்களித்தவாரே அடுத்து சென்ற இடம் :
Notre Dame de Paris : சய்னி நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த சர்ச் மிகவும் வித்தியாசமான கட்டிட வடிவமைப்பில் சுற்றுளா பயணிகளை கவர்ந்தது. கோதிக் என்ற கட்டிடக்கலையின் அடிப்படையில் கட்டியிருக்கிறார்கள். நுழைவாயிலின் கதவுகளிலும், மேற்புற சுவரோடு ஒட்டி செதுக்கிய சிலைகளும் கவனத்தை ஈர்த்தன.  உள்ளேயும் ஆடம்பர விளக்குகள், ஆதீத உயரத்தில் மேல் கூரை ஓவியங்கள் என எல்லாமே பிரம்மாண்டமாக இருந்தன.
இங்கிருந்து சய்னி நதிக்கரையில் சற்று தூரம் நடந்து ஊரை சுற்றிப்பார்த்தோம். சாலையோர கடை ஒன்றில் பேன் கேக்கின் சிஸ்டர் என்று சொல்லப்படும் 'க்ரீப்ஸ்' உணவை தயாரித்துக் கொண்டிருந்தனர். இது வேற ஒன்னுமில்ல, நம்மூர் மைதா/கோதுமை தோசை தான். ஒருவேளை இந்த உணவை புதுச்சேரியிலிருந்து இவர்கள் கற்றுவந்திருக்கலாம். சீஸ், வெண்ணெய், நெய், சாக்லெட் என பல ஃப்ளேவர்களில் கலந்து விதவிதமான தோசைகளை, வித விதமான விலைகளில் விற்கிறார்கள். மாமிசம் கலக்கவில்லை (முட்டை மட்டும்) என்பதை ஊர்ஜிதம் செய்துக்கொண்டு, வெண்ணெய் தோசை ஒன்றை வாங்கி சாப்பிட்டோம். அடடா..!! என்னா ருசி!!. அதிலிருந்து இந்த தோசையை எங்குப்பார்த்தாலும் வாங்கி சாப்பிட ஆரம்பித்தேன். மைதா மாவுடன் முட்டை கலந்து செய்கிறார்கள் என கூகுள் சொல்லுது.
அடுத்து சென்ற இடம் Arc de Triomphe நம் புதுதில்லி 'இந்தியா கேட்' போல இருக்கிறது. பாரிஸிலிலுள்ள மிகவும் புகழ்பெற்ற நினைவுச்சின்னங்களில் ஒன்று. இதன் கீழே முதலாம் உலகப்போரின் "அறியப்படாத போர் வீரன்" கல்லறை உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த கேட்'டிற்கு செல்லும் சாலை நம் சென்னை அண்ணாசாலையை நினைவுப்படுத்தியது. சாலையில் இருபுறமும் ஒரே வரிசையில் நெடுக வளர்ந்திருந்த பெரிய மரங்கள், மிகப்பெரிய ஷாப்பிங் மால்கள், சாலையோர கடைகள், உணவு விடுதிகள் என  ஆடம்பர ஷாப்பிங் இடமாக இருந்தது.
இங்கு, சிறுநீர் கழிக்க கழிப்பிடம் ஏதுமில்லாமல், நேரம் செல்ல செல்ல அடிவயிற்றில் அதிக வலி ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்கு ஆளானேன். வலியின் காரணமாக அத்தனை குளிரிலும் எனக்கு வியர்வை கொட்ட ஆரம்பித்தது. கழிப்பிடம் தேடி 40 நிமிடங்களுக்கு மேலாக அலைந்தோம். ஷாப்பிங் காம்லெக்ஸ்'ஸில் இருந்த ஒன்றிரண்டு இடங்களில்,  நீண்ட வரிசை இருந்ததால் வேறு இடம் தேடி அலைந்து, நேரம் கரைந்து, வலியும் அதிகமானது. இதன் நடுவில், கழிப்பறை பொருட்கள் விற்கும் ஒரு கடையில், கட்டண கழிப்பிடம் இருப்பதாக ஒருவர் சொல்ல, அதைக்கண்டுபிடித்து வரிசையில் நின்றேன். 2 ஈரோ கட்டணம் என்பதாலோ என்னவோ அதிக கூட்டம் இல்லை, இதுவே பாரிஸில் அதிகபட்ச கழிப்பறை கட்டணமாக இருக்கும். 50 சென்ட்ஸ் லிருந்து 1 ஈரோ தான் சாதாரணக்கட்டணம்.. நம் அவசரம் தெரியாமல், மிகுந்த பகட்டான அந்த கடையில் வேலை செய்பவர், உள்ளே சென்றவர் வெளியில் வந்ததும், ஒவ்வொரு முறையும் இவர் உள்ளே சென்று, நின்று நிதானமாக சுத்தம் செய்துவிட்டு வந்தார். "அடேய் அநியாய ஆபிசரே, எங்க அவசரம் தெரியாமல், ஏண்டா இப்படி செய்யறேன்னு" நினைச்சாலும் கேக்க முடியல. வெளியே வந்தும், எனக்கு அடிவயிற்றில் ஏதோ இறுக்கிப்பிடித்தது போலவே இருந்தது. மிகவும் சோர்ந்து, நடக்கக்கூட முடியாமல் சாலையோர பெஞ்சில் உட்கார்ந்துவிட்டேன். வலி குறைந்து நடக்கமுடியும் என்ற நம்பிக்கை வந்தவுடன் தொடர்ந்து சுற்ற ஆரம்பித்தோம்
*********
மறுநாள், நவீன் இருக்குமிடத்திலிருந்து 3 ஆவது ரயில் நிறுத்தத்தில் அமைந்திருந்த Louvre அருங்காட்சியகம் சென்றோம். உலகில் அதிகளவு பார்வையாளர்கள் வந்து போகும் அருங்காட்சியகம் இதுவே. அங்கிருந்த அரண்மனை ஒன்றின் முகப்பு முதற்கொண்டு எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே மியூசியமாக மாற்றியிருந்தனர். மிகப்பெரிய மியூசியமான இதை சுற்றிப்பார்க்க இரண்டு முழு நாட்கள் நிச்சயம் தேவை. ஆனால் எங்களுக்கு 3/4 நாள் தான் கிடைத்தது. இந்த இடத்தைப்பற்றி தனிப்பதிவுக்கூட எழுதலாம். ஏனென்றால், என் வாழ்க்கை சம்பவத்தோடு, நெருங்கிய தொடர்புடையது என அங்கு செல்லும் வரை எனக்கே தெரியாது. ஆம், உள்ளே சென்ற எனக்கு பெரிய அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் காத்திருந்தது.
தொடரும்..

பாரிஸ் பயணக்குறிப்புகள் #7

மான்ட் ப்ளான்க் மறுநாள் 7.30 மணி வாக்கில் ஜென்தோட் அறையிலிருந்து கிளம்பி, ஜெனிவாவில் மான்ட் ப்ளான்க் செல்லும் பேரூந்து நிலையம் சென்று காத்திருந்தோம்.
ஜென்தோட் ரயில் நிலையத்தைப்பற்றி சொல்லியே ஆகவேண்டும். நம்மூர் கிராமங்களில் உள்ள ரயில் நிலையங்கள் போலவே இருந்தது. அதாது போகும் , வரும் ரயில் இரண்டுமே, ஒரே ப்ளாட்பாரத்தில் வந்து நிற்கும், போகும். டிக்கெட் கொடுக்க சின்னதாக கட்டிடம் அதை ஒட்டி சின்னதாக ப்ளாட்பாரம். சின்ன கேன்டீன், கழிப்பறை. சென்றதிலிருந்து திரும்ப வரும் வரை அந்த கேண்டீன் & கழிப்பறை இரண்டுமே திறக்கவேயில்லை. மக்கள் கூட்டமும் குறைவு. வந்தவர்கள் அநேகமாக மாணவர்களாக இருந்தனர். ரயிலுக்காக காத்திருக்கும் நேரத்தில் அதிவேக ரயில்கள் மற்ற தண்டவாளங்களில் மின்னல் வேகத்தில் கடப்பதைப்பார்க்க சுவாரசியமாக இருந்தது. அதைக் காத்திருந்து வீடியோ எடுத்தேன்.. ஆனால் ரயில் சென்ற வேகத்தில் சரியாக பதியவில்லை. :( . வீடியோ எடுக்கும் போது, குறுக்கே வராமல் வீடியோ எடுத்து முடிக்கும் வரை காத்திருந்து, பின்னர் புன்னகைத்தவாரே அந்நாட்டவர் என்னை கடந்து சென்றனர்.
பேரூந்து நிலையத்தில், வேன்கள், பேரூந்துகள் என ஒன்றன் பின் ஒன்றாக சுற்றுளா பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளம்பியவாரே இருந்தன. எங்களது பேரூந்து சொன்ன நேரத்தை கடந்து 30 நிமிடங்கள் தாமதமாகவே கிளம்பியது. பெரிய வால்வோ பேரூந்து, எண்ணி 12 பேர் தான் இருந்தோம்.
பேரூந்து பிரயாணத்தில் முதல் 30 நிமிடங்கள், ஜெனிவாவின் உள்ளேயே பயணித்தது. ஜெனிவாவின் கட்டிட அமைப்புகள் மற்றும் சாலைகளின் அமைப்புகளை பார்க்க முடிந்தது. ஓரளவு ஜெனிவா நகரை சுற்றிய திருப்தி. பின்னர் மெதுமெதுவாக மலைகள் சூழ்ந்த பகுதிகளில் பேரூந்து செல்ல ஆரம்பித்தது. சாலையின் ஓரத்தில் சிறிய ஓடை நதிகள்  என்னுடனேயே பயணம் செய்தன.
கைலாசம் மலையைப்போன்ற அமைப்பில், பனிப்படர்ந்து ஜொளித்த ஆல்ப்ஸ் மலைத்தொடர்ச்சியின் உச்சி தெரிய ஆரம்பித்தவுடன் எங்களுக்குள் ஒரு பரவசம் ஒட்டிக்கொண்டது. பேரூந்திலிருந்தே அதை வேடிக்கைப்பார்த்தபடி, புகைப்படம் எடுத்தபடி பயணித்தோம்.
மான்ட் ப்ளான்க் வந்துவிட்டது, இறக்கிவிட்ட நடத்துனர் கம் ஓட்டுனர், மாலை 5 மணிக்கு இதே இடத்தில் வந்து நில்லுங்கள் என்று சொல்லிவிட்டு பேரூந்தோடு கிளம்பிவிட்டார்.
அவ்விடம் மூன்று சாலைகளே அமைந்த சிறிய சுற்றலா தளம். அதிலும் அநேகமாக உணவகங்கள், சுற்றுளா பயணிகளுக்கான கடைகளாகவே இருந்தன. மலைக்கு மேல் செல்ல டிக்கெட் வாங்க வெகு நேரம் காத்திருந்தோம். பனி சரிவு இருந்ததால், முதல் நிலை வரையே எங்களை அழைத்துச்சென்றனர். கேபிள் காரில்  பயணம் செய்யும் போது அறுந்துவிழுந்தால் என்னாவது என்ற எண்ணம் வந்து சென்றது. ஆல்ப்ஸ் மலை முதல் நிலையில் கடைகள், உணவு விடுதிகள் என எல்லாமும் இருந்தன. ஹெலிக்காப்டர்கள் மூலம் பொருட்கள் கொண்டுவரப்பட்டதை பார்க்க ஆர்வமாக இருந்தது. மலையில், காக்கை நிறத்தில் புதுவிதமான பறவைகள் நிறைய இருந்தன.வெயில் அதிகமாக இருந்ததால் குளிர் தெரியவில்லை.
திரும்ப வந்து, உள்ளூரில் இருந்த ஒரு சில இடங்களை சுற்றிப்பார்த்து, ஒரு இலங்கை தமிழர் உணவகத்தில் மதியம் சாப்பிட்டு, வந்த பேரூந்திலேயே இரவுக்குள் ஜெனிவா வந்து, ரயில் நிலைய சூப்பர் மார்க்கெட்டில் இரவு உணவுக்கு ரொட்டி வகையறாக்கள் வாங்கிக்கொண்டு, ஜென்தோட் அறைக்கு வந்துவிட்டோம்.
அடுத்தநாள் விடியற்காலை 5.30 க்கு பார்சிலோனா செல்ல low cost 20 ஈரோ குட்டி விமானம் முன்பதிவு செய்திருந்தோம். அதுகுறித்து விடுதியில் சொல்ல, அவர்கள் விமான நிலையத்திற்கு 4 மணிக்கு டாக்ஸி புக் செய்துக்கொடுத்து, அலுவலகத்தில் அந்நேரத்திற்கு யாரும் இருக்க மாட்டோம், நீங்களே வெளிவாசல் திறந்து, மூடிவிட்டு செல்லுங்கள், அறை சாவியை அறையிலேயே விட்டுவிடுங்கள் என்றனர்.
விடியற்காலை 4 மணிக்கு நாங்கள் வெளியில் வந்தால், கும்மிருட்டு, சாலையில் எந்த நடமாட்டமும் இல்லை. ஏகத்துக்கும் குளிர். 10 நிமிடம் காத்திருந்தோம், டாக்ஸிக்கு சொல்லலையோ..? டாக்ஸி வராவிட்டால் இங்கிருந்து எப்படி விமான நிலையம் செல்வது போன்ற சந்தேகங்கள் வர கவலையானது. விமானத்தை விட்டுவிட்டால், மொழிதெரியாத வேற்று நாட்டில் பிரச்சனையாகுமேன்னு குழப்பத்தோடு குளிரில் நடுங்கியபடி காத்திருக்க.......20 நிமிடங்களில் ஆள் அரவமே இல்லாத அந்த இடத்தில், எங்கள் இடம் நோக்கி டாக்ஸி வந்தது.

 குட்டி விமானம் என்பதால் ஏகப்பட்ட கெடுபிடி, கட்டுப்பாடுகள். குறைந்த எடை, குறிப்பிட்ட அளவுக்கொண்ட சூட்கேஸ், கைப்பைகள் தான் அனுமதி. பாரிஸிலிருந்தே அதற்கு தகுந்தார்ப்போன்று சின்னதாக சூட்கேஸ் எடுத்துச்சென்றிருந்தோம்.
ஜெனிவா & மான்ட்ப்ளான்க் கில் அதிகம் கண்ணில் பட்டது ஸ்விஸ் வாட்சுகள். ஒன்றாவது வாங்கலாம் என விலை விசாரித்தால், எங்கள் பட்ஜெட்டில் இல்லை. வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு வந்துவிட்டோம். ஜெனிவாவின் விமானநிலையத்தில் தீபிகா படிகோனின் ஸ்விஸ் வாட்ச் ஆள் உயர விளம்பர பலகை கவர்ந்ததோடு மட்டுமல்லாமல், ஒரு இந்திய பெண் இந்நாட்டு விளம்பரத்தில் என்ற பெருமையும் உண்டானது. விமான நிலையத்தில் ஸ்விஸ் சாக்லெட்ஸ் நவீனுக்காக வாங்கிக்கொண்டோம்.
பார்சிலோனா: வெயில் அதிகமாக தெரிந்தது. இதுவரையில் பாரிஸ், ஜெனிவா, மான்ட் ப்ளான்கில் உணராத ஒரு வெயிலை இங்கு உணர்ந்தோம். விமான நிலைத்திலிருந்து பேரூந்து மூலம் ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து அரை மணி நேர பயணத்தில் ஹோட்டல் இருக்குமிடத்திற்கு வந்தோம். மாலை அங்குள்ள சுற்றுலா பயணிகளுக்கான பிரத்தியேகமான பேரூந்துகள் மூலம் ஊரை சுற்றிப்பார்த்தோம். நேரம் குறைவான காரணத்தினால் எல்லாவற்றையுமே பேரூந்திலிருந்தே பார்த்தோம். இரவு ஒரு சீன உணவகத்தில் சாப்பிட்டோம்.

பார்சிலோனா கூட்ட நெரிசலாக இருந்தது. பலதரப்பட்ட மக்கள் அங்கு இருப்பதாக தெரிந்தது. தவிர பெரிய பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகமாக தென்பட்டன,கார்கள் குவிக்கப்பட்டிருந்த அந்த நிறுவனங்கள் கண்களுக்கு விருந்து. இண்டஸ்ட்ரியல் ஏரியாவாக இருந்தது. வேலை வாய்ப்பு அதிகம் உள்ள இடமாக இருக்க வாய்ப்புகள் அதிகம். தவிர, சுற்றலா பயணிகள் மிக அதிகம். நம்மூர் திரைப்படங்கள் இங்கு அதிகம் படமாக்கப்படுகிறது போல. நிறைய இடங்கள், கட்டிடங்களை முன்னமே பார்த்ததுப்போல இருந்தது. இங்கு பல கட்டிடங்கள் வித்தியாசமான தொழில்நுட்பத்தில், வடிவமைப்பில் கட்டியிருந்தார்கள்.

பார்ஸிலோனாவிலிருந்து 40 கிமி தொலைவில் இருக்கும் விமான நிலையத்திற்கு பேரூந்தில் புக் செய்து சென்றோம். அங்கிருந்து பாரிஸ் செல்ல மேலே சொன்ன குட்டி விமானம். அது பாரிஸ் நகரின் எல்லையில் அமைந்து ஒர் விமானநிலையத்திற்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து பேரூந்தில் ரயில் நிலையம் வந்து, ரயிலில் Gare du nord ரயில் நிலையம் வந்து அங்கிருந்து நவீன் இருக்குமிடம் வந்து சேர்ந்தோம்.

சென்று வந்த இடங்களில், பெண்களைப்பற்றி சொல்லியே ஆகவேண்டும்.. பாரிஸ்ஸில் பெண்கள் பேரழகிகள், உலகில் உள்ள அத்தனை பேரழகிகளையும் ஒரு சேர பாரிஸ் நகரில் பிரம்மன் படைத்துவிட்டான் போல. செதுக்கி வைத்த சிலையைப்போன்று இருந்தனர். மேலும் குறைந்தபட்ச உயரம் 5.5 க்கு மேலாகவே இருந்தனர்.
ஜெனிவாவில் பெண்கள் அத்தனைப்பேருமே பைசப்' சுடன் விளையாட்டு வீராங்கனைகளை ப்போல இருந்தனர். இவர்கள் அத்தனை உயரம் என்று சொல்லிவிட முடியாது, மிகவும் அழகானவர்கள் என்றும் சொல்லிவிட முடியாது. சாதாரணமாக இருந்தனர்.
பார்சிலோனாவில் பெண்கள் கதைகளில் வரும் "விட்ச்" போன்று இருந்தனர். சூனியக்காரிகள் போலவே மிக நீளமான வளைந்த நகங்கள், அளவுக்கு மீறி கண்களிலும், வெளியிலும் அப்பியிருந்த காஜல், தலைவிரி கோலம், அதிகப்படியான மேக்கப், அடர் நிற விதவிதமான உதட்டு சாயங்கள் , நீண்ட முகம் என பயமுறுத்தினார்கள், இங்கு மிகப்பெரிய உருவ பெண்களை அதிகமாக பார்க்கமுடிந்தது. அழகாகவும் இல்லாமல் சாதாரணமாகவும் இல்லாமல் அதிக மேக்கப்போடு பயமுறுத்தினார்கள்.
பொதுவாகவே ஆண்களை அதிகம் கவனிக்கும் பழக்கம் இல்லை, கறுப்பின ஆண்களை மட்டும் கவனிப்பேன். எனக்கு அதிகம் பிடித்த, நடிகர் வில்ஸ் ஸ்மித் போன்றே அவர்களும் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். :) நவீன் குள்ளமாக தெரிந்ததால், அவனிடம் அதை சொல்லும் போது , அந்நாட்டு ஆண்களின் குறைந்தபட்ச உயரம் 6 அடி, அவர்களைப்பார்த்துவிட்டு அவனை ப்பார்த்தால் குள்ளமாக தான் தெரியும் என்றான். ஆக பாரிஸ் ஆண்களைப்பற்றி ஒரே ஒரு விபரம் 'உயரமானவர்கள்' என்பது மட்டுமே.!
தொடரும்..

சிம்பு என்ற பெயர்சொல் !

நம்ம வாழ்க்கை கொல்கத்தா - சென்னை 'னு தொடர்ந்து ரவுண்டு அடிக்குது.

சென்னையில், இப்ப பார்க்கற இடமெல்லாம் பசங்க "பிரேமம் தாடி" யோட இருக்காங்க. முதல்ல வீட்டிலிருந்து ஆரம்பிக்கிறேன்..

எம்புட்டு அழகா , ரவுண்டா, வெல்லக்கட்டி மாதிரி ஒரு புள்ளைய பெத்து, அதுக்கு நல்லது கெட்டதை எல்லாம் தேவைப்படும் போது சொல்லிக்கொடுத்து, எப்பவும்.."குட் பாய்'யா இருக்கியா?" ன்னு கேட்டு கேட்டு கன்ஃபார்ம் செய்துக்கிட்டு....வளத்தா.......  இந்தப்பய.. மூஞ்சி முழுக்க தாடி வச்சிக்கிட்டு, அதான் Style, Comfort னு சொல்லிட்டு இருக்கு..

(உடனே நீங்க நடுவுல வந்து "நல்லப்புள்ளைக்கும் தாடிக்கும் என்ன சம்பந்தம் னு கேக்கப்பிடாது... கேட்டாலும் அதுக்கெல்லாம் எனக்கு பதில் தெரியாது, அதனால கேள்விக்கேக்காம, அமைதியா படிக்கிற வழியப்பாருங்க)

தாடியோட  அவன் முகத்தை ப்பார்க்கும் போது... "இவன் என் புள்ள தானா" ன்னு  எனக்கே சந்தேகம் வந்துடுது. ஏன்னா நவீன் அப்படியே அவங்க அப்பா ஜாடை, அவர் இவ்ளோ தாடிவச்சி நான் பார்த்ததேயில்ல, ஆக இந்த முகம் எனக்கு பரிச்சயம் இல்லா முகமாவே இருக்கு..

ஃப்ரான்ஸ் போகும் போது ஃப்ரென்ச் பியர்ட்' இல்லைன்னா 'கோ(Go)ட்டி' னு ஒன்னு வச்சித்தான் தீருவேனு அவன் அடம் பிடிக்க.." முடியவே முடியாது அச்சு அசலா தீவிரவாதி மாதிரியே இருக்க... சென்னை செக்கிங்''ல சந்தேகத்துல பிடிச்சி வச்சி விசாரிப்பான்.. அவன் விசாரிச்சா உன் வாய் சும்மா இருக்காது.. நீ ஏடா கூடமா பதில் சொல்லுவ , கடுப்பாகி.. என்னா வேணா பண்ணுவாங்க.. விமானமே ஏறமுடியாம போகலாம்.. முதல்ல தாடிய எடு" னு நானு ஒரு பக்கம் இம்சை செய்ய...

"யம்மா...தாயே.....ஒரு தாடிக்கு இவ்ளோ பெரிய பில்டப், டெரரிஸ்ட் ஸ்டோரி எல்லாம் ரொம்பவே ஓவரா தெரியலையா உனக்கு....?" ன்னு கேட்டுட்டு... நீ என்ன சொல்றது நான் என்ன கேக்கறதுன்னு முடிவெட்டும் கடைக்குப்போயிட்டான்..

இதா பக்கத்துல தான்...நமக்கு தெரிஞ்ச கடை தான், இந்த பய சின்னப்புள்ளையிலிருந்து அங்க தான் வெட்றான். 15 நிமிடம் கழித்து, கொட்ற மழையில், குடைய எடுத்துக்கிட்டு பின்னாடியே போனேன். நினைச்சபடி நாற்காலியில் உக்காந்துட்டு இருந்தான்... முடிவெட்டுபவர் தலையில் வேலைப்பாத்துட்டு இருந்தாரு.

"தம்பி இங்கப்பாருப்பா..அவரு இன்னைக்கு வெளிநாடு போறாரு.. கோட்டி வை, ஃப்ரென்ச் பியர்ட் வை ன்னு கேப்பாரு,  எதாச்சும் வச்சி அனுப்பாத, பாஸ்போர்ட் ல வேற ஃபோட்டோ இருக்கு...முகம் வேற மாதிரி தெரிஞ்சா, என் புள்ளைய ஏர்போர்ட்ல போலிஸ் புடிக்கும்.. ..அப்புறம் அதுக்கெல்லாம் காரணம் நீதான்னு உன்னை சும்மா விடமாட்டேன் சொல்லிட்டேன்.." னு சொன்னது தான்.. அவனும் தொறந்தவாய மூடல.. என் புள்ளையும் கடுப்பா என்னை முறைக்க...." .இரண்டுப்பேரும் சுதாரிச்சி திரும்ப பதில் பேசறதுக்கு முன்னாடி.. யூடெர்ன் அடிச்சி, வீட்டுக்கு ஓடி வந்துட்டேன். 

வந்தான் பாருங்க என் புள்ள..!!!  வழிச்சிவச்ச கோழியாட்டும்!!!!..அட அட அட என்னா அழகு.. :). அம்மா கண்ணே பட்டுப்போச்சி..!!! கிட்டக்க போகாமல் தூராம இருந்தே சுத்திப்போட்டுக்கிட்டேன்

என்னை முறைச்சிட்டு, (வீட்டில் விருந்தாளிகள் இருந்ததால்) நேரா என் வூட்டுக்கார்கிட்ட போனான்.. "எங்கெருந்துப்பா இத கல்யாணம் செய்துக்கிட்டு வந்தீங்க..?" முடி வெட்டற கடைக்கு வந்து.. அந்த அண்ணன் கிட்ட சத்தம் போடறாங்கப்பா.....முடியலப்பா..."

ம்க்கும்...இனிமே யார் நம்மை எப்படி திட்டினா என்ன..?  தாடிய எடுத்தாச்சு அது போதும்..னு வூட்டுக்கார் பக்கம் திரும்பவேயில்லயே....யார்கிட்ட??!! 

ஆனா.. இப்ப கதையே வேறயா இருக்கு.. !!!

பெரிய மனுசர் ஆகிட்டாரு. எதுக்குமே பதில் சொல்றது இல்லை. நானும் வந்த 10 நாளா தினப்படி "தாடிய எடுடா எடுடா.. யாரோ மாதிரி இருக்குடா" ன்னு சொல்றேன். ஒரே வார்த்தை "முடியாது".

நடுவில் டூர் போயிட்டு வந்தாரு. அந்த ஃபோட்டோவெல்லாம் பாக்கும் போது தான் தெரியுது.. கூட இருக்க அத்தன பயலும் அடர்த்தியா தாடி வச்சிக்கிட்டு இருக்கானுங்க..

சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு போறேன்.. அங்க.. அக்கா பசங்க, அண்ணன் பசங்க எல்லாரும் தாடி. இதுல ஒரு அண்ணன் பையன் முறுக்கு மீச வேற... யார்னே அடையாளம் தெரியல.. அந்த பய..இப்பதான் கல்லூரி 3 ஆம் ஆண்டு படிக்குது. காலேஜ்'ஜில் எப்படிடா விடறாங்க? ன்னு கேட்டா... "அப்பப்ப அப்பா அம்மாவ கூப்பிடுவாங்க , இவங்களும் வருவாங்க.. அப்ப மட்டும் ஷேவ் செய்துக்குவேன்.. திரும்ப வளத்துக்குவேன்னு" அசால்ட்டா சொல்றான்.

இரண்டு நாள் பயணமாக வந்த என் வீட்டுக்காரரும் நவீனிடம் "இப்படி தாடி வச்சிக்கிட்டு ஆபிஸ் போகறது நல்ல பழக்கம் இல்ல" ன்னு சொல்லிப்பாத்தாரு.. "அப்படி எதும் கட்டுப்பாடு இல்ல... 90%  நாங்க எல்லாருமே தாடி தான்.. அவங்க ஒன்னும் செய்ய முடியாது"ன்னு பதில் சொல்றான்.

பாக்கற இடத்தில் எல்லாம் பசங்க..தாடியோட தான் இருக்காங்க.... எல்லாத்தும் அடிப்படை.. இந்த பிரேமம் படம் தான் போல...

தேர்தல் நேரம், சிம்பு ஓட்டுப்போட வந்த வீடியோவை பார்த்து, அடடே தாடியோட பாத்தா நம்ம புள்ளையாட்டும் இருக்காரே,ஆபிஸ் விட்டு வரட்டும் சொல்லலாம்னு.. வந்தவுடனே "தாடியோட நீ சிம்புவாட்டம் இருக்க..அப்ப உனக்கும் நிறைய பொண்ணுங்க ஃபேன்ஸ் கிடைப்பாங்க இல்லாடா? ன்னு கேட்டேன்.....

கிர்ர்ர்னு முகம் மட்டும் மாறிச்சி ஒன்னும் பதிலில்லை. ஆனா  அடுத்தநாளே... தாடிய ஒட்ட ட்ரிம் பண்ணிட்டு வந்துட்டான். என் கண்ணே பட்டுடும் போல...

இனிமே "சிம்பு" அடிக்கடி உதவுவார்னு நினைக்கிறேன். !! :)

பீட்டர் தாத்ஸ் : “...'beard' isn't really a superpower.” Amy Leigh Strickland, The Pantheon 

பாரிஸ் பயணக்குறிப்புகள் #6

நமக்கு எப்பவும் எதாது பிரச்சனை இருந்துட்டே தான் இருக்கும், ஆனால் மனதை ஒருமுகப்படுத்தி எழுதமுடியாத சூழ்நிலைகளில் இந்தப்பயணக்குறிப்புகளை பாதியில் விட்டுட்டேன்.  எதிர்கால குறிப்புக்கு வேண்டியாவது .... எழுதி வைக்க வேண்டும் என..தொடர்கிறேன்..
******

பாரிஸ் சென்றபோது அங்கிருந்து ஜெனிவா (Geneva), மான்ட் பளாங்க் (Mont Blanc) & பார்சிலோனா (Barcelona) வும் சென்று வந்தோம்.

ஜெனிவா : பாரிஸிலிருந்து அதிவேக ரயில் மூலம் ஜெனிவா சென்றோம். மிக சுகமான ஒரு பயணம் என இதைத்தான் சொல்லனும். ரயில் மிகவும் சுத்தமாக, புஷ் பேக் சீட் வசதியோடு இருந்தது. சிறிய பைகளை இருக்கைக்கு மேலும், பெரிய பெட்டி & பைகளை வைக்க  தனி இடமும் அமைத்திருந்தனர். விடியற்காலை 6 மணிக்கு Gare du nord என்ற ரயில் நிலையத்திலிருந்து ரயில். சென்னை சென்ட்ரல் போல, வெளி மாநிலங்கள்  செல்லும் விரைவு ரயில்களும், உள்ளூர் ரயில்களும் இருக்கும் மிக பிரம்மாண்டமான ரயில் நிலையம். இதன் (மிக) அருகில் தான் பாரிஸ்'ஸின் தமிழர்கள்/இந்தியர்கள் பகுதி.  நம்மூர் சரவணபவன், சென்னை கஃபே, ஆச்சி உணவகங்கள், துணிக்கடைகள், மளிகை, காய்கறி ன்னு எல்லாமே இங்கு மொத்த வியாபாரம். 
ரயில் நிலையத்திலிருந்து வெளிவந்து நடக்கும் இடத்தில் சிறுநீர் துர்நாற்றம் அடித்தது, அதற்கு காரணம் தமிழர்/இந்தியர் பகுதி, அவர்கள் வெளியில் தான் சிறுநீர் கழிப்பார்கள் என சொல்லப்பட்டது, ஆனால் பாரிஸிலிருந்து திரும்புவதற்குள் , அங்கு பொது இடங்களில் சரியான கழிப்பிட வசதி இல்லாததால், மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில், பாரிஸ் நகரின் புகழ்பெற்ற சர்ச் ஒன்றிற்கு சென்றபோது, அங்கும் துர்நாற்றம் வீசியது. இதற்கு தமிழர்கள்/இந்தியர்கள் மட்டுமே காரணம் இல்லை எனப்புரிந்தது. நவீன் சொன்னதிலிருந்து, பாரிஸ்'ஸில் பெண்களும் பல சமயங்கள் அவசரத்திற்கு நிற்கும் கார்களுக்கு பின்னால் ஒதுங்குகிறார்கள் எனத் தெரிந்தது.
பாரிஸ் நகரின் கழிப்பிடங்களை பற்றி தனிப்பதிவே எழுதலாம்.  பொது இடங்களில் உள்ள கழிப்பிடங்கள் அத்தனையும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை என்று நேரம் குறிப்பிட்டு, மற்ற நேரங்களில் மூடியே இருக்கின்றன. இயற்கை உபாதைகளுக்கு நேரம் காலம் இருக்கிறதா என்ன?. தவிர தானியங்கி கழிப்பிடங்களும் குறைவே.  ஐஃபில் டவர், கோத்தகேம்ப் போன்ற இடங்களில் மட்டுமே தானியங்கி கழிப்பிடங்கள் இருந்தன. ரயில், பேரூந்து நிலையங்கள் அத்தனையிலும் குறிப்பிட்ட நேரத்தில் தான் கழிவறை திறக்கப்படுகிறது. இப்படியான வசதிகள் எங்களுக்கு அதிக சிரமத்தை கொடுத்தன.  இவற்றை மீறி அவசரத்திற்கு கழிப்பிடம் கண்டுப்பிடித்து சென்றால், நீண்ண்ண்ட வருசையில் நின்று செல்ல வேண்டும். இதற்காகவே வெளியில் செல்லும் போது, தண்ணீர் குடிக்காமல் இருந்து பழக ஆரம்பித்தேன்.

பாரிஸ் சுற்றுப்பயணத்தின் போது,  எங்குப்போனாலும், Gare du nord ரயில் நிலையம்  வந்து தான் நவீன் இருக்கும் இடத்திற்கு ரயில் மாறனும்.   ரயில் நிலைத்திலிருந்து நம்மூர் கடைத்தெரு ரொம்ப பக்கம் என்பதால், ஓடிப்போய் நவீனுக்கு நம்மூர் பிரியாணி ஒன்னு வாங்கிட்டு வந்துடுவேன். நாங்கள் சென்றிருந்த போது, ஆச்சி கடை ஒன்றில் தள்ளுபடி விலையில் ஒரு பிரியாணி 5.5 Euro. மற்ற கடைகளில் 7-8 Euro. 
******

விடியற்காலை 3 மணி வாக்கில் எழுந்து நவீனுக்கு இரண்டு நாட்களுக்கு தேவையான உணவுகளை சமைத்து வைத்துவிட்டு, துணி துவைக்கும் வேலையும் முடித்து, நாங்களும் கிளம்பி, நடுவில் ஒரு இடத்தில் ரயில் மாறி, மெயின் நிலையம் வந்து, எங்களின் ரயிலை தேடிப்பிடித்து (சரியான வழிக்காட்டல் இல்லாமல் கண்டுப்பிடிக்க சிரமப்பட்டோம் ), ரயிலின் உள்ளே வந்து உட்கார்ந்தது தான், 10 நிமிடங்களில் தூங்கிப்போனேன்.
தூக்கம் கலைந்து எழுந்துபோது  மலைகள் சூழ்ந்த பச்சை பசேல்'லென்ற நிலப்பரப்புகளுக்கு இடையே ரயில் அதிவேகத்தில் சென்றுக்கொண்டிருந்தது. தொலைவில் மாடுகள், ஆடுகள் மேய்ந்துக்கொண்டிருந்தன. ஆங்காங்கே  ஒன்றிரண்டு வீடுகள்.  ஐரோப்பாவின் கிராமங்கள் என யாரும் சொல்லித்தர வேண்டியிருக்கவில்லை.   வேடிக்கைப்பார்த்தபடி நானிருக்க, எப்போது எழுந்திருப்பேன்னு பசியோடு இருந்த என் கணவர், ரயிலின் உள்ளே உள்ள காண்டீன் சென்று சாப்பிட ரொட்டியும் குடிக்க ஜூஸ்ஸூம் வாங்கிட்டு வந்தார். இருவரும் பகிர்ந்து சாப்பிட்டு வயிற்றை நிரப்பினோம்.

ஜெனிவா வந்திறங்கி,, ஹோட்டல் இருக்குமிடம் செல்ல, ரயில் நிலையத்தில் உதவிக்கேட்டு ஒரு கவுண்ட்டர் சென்றோம். டிக்கெட்டும் கொடுத்து, விபரமும் சொல்லி, விசா, பாஸ்போர்ட் வாங்கி பரிசோதனை  செய்து அனுப்பி வைத்தனர்.
பாரிஸ்ஸிலும் சரி, ஜெனிவா விலும் சரி..ரயில் நிலையங்களிலேயே பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட்டுகள் இருந்தன. தனியாக கடைத்தெருவிற்கு செல்லாமல், பயணம் முடிந்து வீடு திரும்பும் போது , வீட்டிற்கு தேவையான எல்லாவற்றையும் கையோடு வாங்கி செல்லும் வசதி.. இப்படியான வசதி அங்கு எல்லா நகரங்களிலும் இருக்குமென நினைக்கிறேன்.

பாரிஸ் பயணத்தில் எந்த இடம் மிகவும் பிடித்தது எனக்கெட்டால், யோசிக்காமல் "Genthod"  என்று சொல்லிவிடுவேன். ஜெனிவா ரயில் நிலையத்திலிருந்து 4-5 நிறுத்தங்களில் 8-10 நிமிட ரயில் பயணத்தில்,  உள்ள இடமே "ஜென்தோட்".

ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்ததும்,  ஐரோப்பாவின் மிக அழகிய, விதவிதமான வண்ணமிகு பூக்கள் என்னை  வரவேற்றன. அவர் என்னமோ ஹோட்டல் தேடி நடையைக்கட்ட, நான் பூக்களின் வரவேற்பில் மயங்கி, அவற்றை ரசித்து புகைப்படம் எடுத்தபடி அவர் செல்வதை கவனிக்காமல் நின்றுவிட,, வெகுதூரம் சென்று ..நான் வராததால் காத்திருந்தார்.

ஜென்தோட், ஜெனிவாவின் புகழ்ப்பெற்ற ஏரியின் ஒருக்கரையில் இருக்கும் சிறிய, எல்லா வசதிகளையும் கொண்ட மிக அமைதியான ஊர். மனிதர்களை அதிகம் பார்க்கமுடியவில்லை. நேர்த்தியாக, பல வண்ண பூச்செடிகள், பெரிய மரங்கள் சூழ வரிசையாக அமைந்த அழகான வீடுகள், சுத்தமான சாலைகள், சாலையில் உள்ள மின்சார கம்பங்களிலும் தொட்டிகள் கட்டப்பட்டு அவற்றில் வளர்க்கப்படும் பூச்செடி, கொடிகள் எனப்பார்க்கும் இடமெல்லாம் பூக்கள் பூக்கள் பூக்கள்...

எங்கோ ஒன்றி்ரண்டு கடைகள் இருந்தன. அவற்றில் ஒன்று வெதுப்பகம் (Bakery) வெளியில் வரும் போது அங்கு கொஞ்சம் ரொட்டி வகையறாக்கள் வாங்கி வைத்துக்கொண்டோம். அறையில் ஓய்வெடுத்துவிட்டு மாலை 4 மணி அளவில் ஜெனிவா சுற்றிப்பார்க்க சென்றோம். ரயில் நிலையத்திலிருந்து நடந்தே ஏரிக்கரைக்கு  (தனுஷ் நடித்த ஒரு பாடலில் இந்த ஏரிக்கரையில் எடுத்திருந்தனர், பாடல் நினைவு வரும் போது பகிர்கிறேன்) வரமுடியும், ஆனால் அக்கரைக்கு செல்ல முதலில் பேரூந்தில் சென்று, படகு சவாரி முடித்து, இக்கரைக்கு வந்து, ரயில் நிலையம் நடந்துவந்துவிட்டோம்.

ஏரியை சுற்றி இருக்கும் சாலையில், ஆண்களும் பெண்களுமாக ஓடிக்கொண்டிருந்தார்கள். ஓடி வந்த அத்தனைப் பெண்களுக்கும் biceps ' தெரிந்தது. விளையாட்டு வீராங்கனைகளைப்போன்று இருந்தனர்.

பாரிஸ் நகரிலேயே அருங்காட்சியங்கள் பார்த்துவிட்டதால், ஜெனிவாவிலும் அநேகமாக அவையே இருந்ததால்,  திரும்பவும் அவற்றையே பார்க்கவேண்டாம் என முடிவுசெய்து,  மாண்ட் ப்ளாங்க் போக பேரூந்தில் முன்பதிவு செய்துவிட்டு, இந்திய உணவகம் (பெங்காலி ஓனர்) ஒன்றை கண்டுபிடித்து, இரவு உணவை முடித்துவிட்டு, அறைக்கு திரும்பினோம்.

தொடரும்....