எங்க வீட்டு சமையல் - ஸ்டஃப்ட் சப்பாத்தி

தினம் இரவில் சப்பாத்தி தான் உணவு என்றாகிவிட்டது. இதற்கு தொட்டுக்கொள்ளும் உணவை எப்படி மாற்றி மாற்றி செய்தாலும், ஒரு சில சமயங்களில் சப்பாத்தியை சாப்பிட சளிப்பு ஏற்படுகிறது. அதனால் நடுநடுவில் ஸ்டஃப்ட் சப்பாத்தி செய்வேன்.

குறிப்பு.: இந்த பதிவில் முள்ளங்கியை வைத்து ஸ்டஃப்ட் செய்ததை எழுதியிருக்கேன்.   முள்ளங்கி தவிர, கோஸ், கேரட், வெந்தையக்கீரை, அரைக்கீரை, பட்டாணி, உருளைக்கிழங்கு, காலிஃபெளவர், சுரக்காய், பீர்க்கங்காய் என எதில் வேண்டுமேனாலும் உங்களின் விருப்பப்படி செய்யலாம். ஆனால் ஒவ்வொன்றின் செய்முறையும் தேவையான பொருட்களும் அந்தந்த காய்கறி, கீரைக்கு தகுந்த மாதிரி மாறும்.   

ஸ்டப்ஃட் சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள் :

சப்பாத்தி செய்ய : 

கோதுமை மாவு - 2 கப்
எண்ணெய் - 1-2 ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப

மசாலா செய்ய :

வெள்ளை (அ) சிகப்பு முள்ளங்கி : 3 
வெங்காயம் : 1 
பூண்டு : 4-5 பல்
இஞ்சி - சின்னத்துண்டு
பச்சைமிளகாய் - 1 
மஞ்சள் தூள் : ஒரு சிட்டிகை
மிளகாய்த்தூள் :- 1 1/2 ஸ்பூன் (தனியா, மிளகாய் கலந்தத்தூள்)
எண்ணெய் : 2 ஸ்பூன்
கொத்தமல்லி தழை : சிறிது
உப்பு தேவைக்கேற்ப

செய்முறை :  கோதுமை மாவை தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசைந்து வைத்துவிடவும்.

முள்ளங்கியை கேரட் சீவலில் சீவி வைத்துக்கொள்ளவும், அதன் கூடவே இஞ்சி, பூண்டையும் பொடியாக சீவி கலந்து வைத்துக்கொள்ளவும்.
மைக்ரோவேவ் அவன் (Oven) கண்ணாடி கிண்ணத்தில் எண்ணெய் விட்டு 30 செகண்ட் சூடு செய்யவும். சூடானவுடன் வெளியில் எடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை கலந்து 1-2 நிமிடம் சூட்டில் வைக்கவும். வெங்காயம் வதங்கியிருக்கும், இத்துடன் முள்ளங்கி, இஞ்சி, பூண்டு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நன்கு கலக்கி 8 நிமிடங்கள் சூட்டில் வைக்கவும். நடுவில் ஒருமுறை நிறுத்தி கலக்கிவிடவும்.


கடைசியாக, கிண்ணத்தை வெளியில் எடுத்தப்பிறகு, பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலையை சேர்த்து கலக்கி விடவும்.

சப்பாத்தி மாவை கொஞ்சம் பெரிய உருண்டையாக எடுத்து, படம் 1 ல் உள்ளது போல உருட்டி, அதன் மேல் முள்ளங்கி மசாலாவை வைத்து, படம் 2 ல் உள்ளது போல மடக்கி, படம் 3 ல் உள்ளது போல மிருதுவாக மெதுவாக
உருட்டவும். சப்பாத்தி உருட்டும் குழவி மெல்லியதாக இருந்தால், இந்த ஸ்டஃப்ட் சப்பாத்தியை உருட்டுவது எளிது, மசாலா வெளியில் வராமல் உருட்ட முடியும். 
தோசைக்கல்லை சூடாக்கி,  சப்பாத்தியை இட்டு, எண்ணெய் அல்லது நெய் விட்டு இரண்டு பக்கமும் திருப்பிப்போட்டு, நன்கு வெந்ததும் எடுக்கவும்.  இதற்கு தொட்டுக்கொள்ள எதும் தேவையிருக்காது. ஒரு வேளை தேவைப்பட்டால் ஊறுகாய் வகைகள் நன்றாக இருக்கும்.

 அணில் குட்டி : பாவம் அம்மணி ஊட்டுக்காரு, அம்மணி என்னைக்கு ஸ்டஃப்ட் சப்பாத்தி செய்யறாங்க.. என்னைக்கு வெறும் சப்பாத்தி செய்யறாங்கன்னு தெரியாம..  ஸ்டஃப்ட் சப்பாத்தியை தட்டில் வச்சிக்கிட்டு "தொட்டுக்க எங்க" ன்னு கேட்டு நல்லா வாங்கிக்கட்டிக்குவாரு... :)

பீட்டர் தாத்ஸ் :  “There is no spectacle on earth more appealing than that of a beautiful woman in the act of cooking dinner for someone she loves.”  ― Thomas Wolfe

பென்சில் சீவலின் மிச்சத்தில் வரைந்த படங்கள்...









மேலுள்ளவைகளை வரைவதற்கு முன் அவற்றின் படங்கள் : 

பென்சில் சீவி எடுத்த மிச்சத்தை வைத்து எதையோ செய்ய போனேன்...அதை செய்து முடிக்கும் போது...இதிலிருந்து ஏதாவது உருவம் செய்யலாம் போலவே'ன்னு யோசனை வர கூகுளில் தேடினேன்..நிறைய ஐடியா கிடைச்சது.. அதையும் பயன்படுத்திக்கிட்டேன்..நானும் கூட சிலதை வரைந்துப்பார்த்தேன்...  பிறகு புகைப்படங்கள் எடுத்து அவற்றை MSpaint டில் கற்பனைக்கேற்ற படங்களாக வரைந்தேன். டிசைன்ஸ் நல்லாவே வந்தது.... (நாமே சொல்லாட்டி எப்படி?)

உங்களுக்கும் பென்சில் சீவலிலிருந்து புதுசா டிசைன் வரைய ஐடியா கிடைத்தால் சொல்லுங்க .. வரைந்துப்பார்ப்போம்!.  உங்க வீட்டு குட்டீஸ்'க்கு காட்டுங்க, அவர்களிடம் நிறையவே ஐடியா கிடைக்கும்.. அவற்றை இங்கே பகிரவும்...

அணில் குட்டி : ம்க்கும்...இதை செய்யறேன் அதை செய்யறேன்னு, பென்சிலை சீவி சீவிப்போட்டு, அது பாட்டுக்கும் ஃபேன் காத்தில் பறந்து அங்க இங்கன்னு வீடுப்பூராவும் ஒரே குப்பை....அம்மணி அதையெல்லாம் கண்டுக்காம தீவிரமா படம் வரைய..பாவம் அவங்க வூட்டுக்காரு.. பொறுக்கமுடியாம ஒவ்வொன்னா எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டுக்கிட்டு இருந்தார்.... இதையெல்லாம் இந்தம்மா வெளியில் சொல்ல மாட்டாங்களே... ??!!

பீட்டர் தாத்ஸ் : “Art doesn’t have to be pretty. It has to be meaningful.” ~Duane Hanson

Thx : Google.

ராஜநாகம்

25 வருடங்களாக  ராஜநாகத்தை’ (King Cobra) ஆராய்ச்சி செய்யும் வெளிநாட்டவர் ஒருவர், இந்தியாவின் மேற்குப்பகுதியில், கர்நாடக காடுகளில் தன் ஆராய்ச்சியை தொடர வருகிறார். இந்திய மாணவர்களும் இந்த ஆராய்ச்சியில் உடன் பணி செய்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சியின் முதற்கட்ட வேலையாக, ஆண், பெண் என இரண்டு ராஜ நாகங்களை, காடுகளில் மிகுந்த சிரமங்கங்களுக்கிடையில் தேடி பிடிக்கின்றனர். பிடிக்கப்பட்ட நாகங்கள் இரண்டிற்கும் மயக்கம் செலுத்தப்பட்டு, அவற்றின் உடலில் பாம்புகள் இருக்குமிடத்தை காட்டக்கூடிய இண்டிக்கேட்டர் பொறுத்தப்படுகிறது. 

மயக்கம் தெளிந்து, உடல்நிலை சீரான இரண்டு ராஜநாகங்களும்,  பிடிக்கப்பட்ட இடத்தை விடுத்து, வெகுதூரத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, காட்டில் வெவ்வேறு இடங்களில் விடப்படுகின்றன. இரண்டையும்
ஆராய்ச்சியாளர்கள், இண்டிகேட்டரின் உதவியோடு பின் தொடர்கின்றனர். இரண்டு ராஜநாகங்களும் தன் இறையைத்தேடுவதோடு, தன் துணையையும் தேடுகின்றன.  ஒரு கட்டத்தில் காதலன் காதலி இரண்டும் சந்திக்கின்றன. இரண்டும் கூடி சந்தோஷமாக இருக்கின்றன. பெண் ராஜநாகம் கருவுகிறது. 
இந்நிலையில், வேறொரு இடத்திலிருந்து வரும், ஒரு ஆண் ராஜநாகம்(2) இவ்விடத்தில் குடியேற முனைக்கிறது. அப்படி புது இடத்தில் குடியேற நினைக்கும் ராஜநாகம்(2), அங்கு ஏற்கெனவே இருக்கும் ஆண் ராஜநாகத்தோடு(1) சண்டையிட்டு, அதனை வெற்றிப்பெற்றால் தான் குடியேற முடியும். அதனால், இந்த புதிய ஆண் ராஜநாகமும்(2), அங்கு முன்னமே இருக்கும் ஆண் ராஜநாகமும்(1) –(இண்டிகேட்டர் பொறுத்தப்பட்ட) சண்டையிட தொடங்குகின்றன. 2-3 மணி நேரம் நடைபெறும் இந்த பெரிய ஆக்ரோஷமான யுத்தத்தின் முடிவில், புதிய ராஜநாகம்(2) வெற்றிப்பெற்று அந்த இடத்தில் வெற்றிக்களிப்போடு குடியேறுகிறது.

இந்த புதிய ராஜநாகம்(2), அங்கிருக்கும் பெண் ராஜ நாகத்தை சந்திக்கிறது. அதன் மேல் மையல் கொண்டு தன் இச்சையை வெளிப்படுத்துகிறது. ஆனால்,  அதற்கு அடிபணிய மறுக்கும் பெண் ராஜநாகம், அதனை விட்டு விலகிசெல்கிறது. ஆனால் விடாமல் துரத்தும் புதிய ஆண் ராஜநாகம், கெஞ்சியும் கொஞ்சியும் மிகவும் நாகரீகமான முறையில் தன் ஆசைக்கு
இணங்க வைக்க எல்லாவிதமான முயற்சியும் செய்கிறது.

பெண் ராஜநாகமோ, தன் காதலனின் கருமுட்டைகளை சுமந்துக் கொண்டிருப்பதால் புதிய ஆண் ராஜநாகத்தை அறவே வெறுத்து ஒதுக்குகிறது. ஒரு கட்டத்திற்கு மேல், பொறுமை இழக்கும் ஆண் ராஜநாகம், கோபம் கொண்டு வெறித்தனமாக அந்த பெண் ராஜநாகத்தை மிகச்சரியாக அதன் கழுத்தில் கடித்து, கொஞ்சம் கொஞ்சமாக துடிதுடிக்க சாகடிக்கிறது. சிறிது நேரப்போராட்டத்திற்கு பிறகு பெண் ராஜநாகம் இறந்தேப்போகிறது. ஆராய்ச்சியாளர்கள் இந்த பெண் ராஜநாகத்தின் வயிற்றை அறுத்துப்பார்க்கையில் அதனுள் 17 முட்டைகள் இருந்தன. இந்த இறந்த நாகத்தை நெருப்பு மூட்டி  எரித்துவிடுகின்றனர்.

பின்னர், அதே காட்டில் புதிய ராஜநாகத்தின் மூலமாக கருவுற்ற வேறொரு பெண் ராஜநாகம் 21 முட்டைகளை இட்டு, அதை அடைக்காக்க காய்ந்த மூங்கில் தழைகளையும், இலைகளையும் ஒரு அடி உயரத்திற்கு குவித்து, முட்டைகளுக்கு தேவையான சீதோஷனநிலையை உருவாக்கி அவற்றிற்கு பாதுக்காப்பாக அங்கேயே இருக்கிறது.

இப்படியாக முடிவுபெறும் இந்த ராஜநாகத்தின் ஆராய்ச்சி கதையை "நேட் ஜியோ" வில் பார்த்த போது, காதலன் பாம்பு காதலியை தேடும் போதும், அவற்றின் தவிப்புகளும், தேடிக் கிடைத்தப்பின் அவற்றின் காதல் லீலைகளும், இரு ஆண் ராஜநாகங்களுக்கு இடையே நடக்கும் சில மணி நேர நிஜமான யுத்தமும், பின்பு பெண் ராஜநாகத்தை கொல்லும் போது ஆண் ராஜநாகத்தின் வெறித்தனத்தையும் பார்க்கையில் ஒரு வித பதட்டமும் ஆச்சரியமும் ஏற்படாமல் இல்லை.

சிறந்த திரைக்கதையில் அமைந்த ஒரு தமிழ் புராணக்கதை பார்த்தது போன்றே இருந்தது.  இது இப்பவும் நடக்கும் உண்மை சம்பவம் என்பதை அறிவுஏற்றுக்கொள்ள நேரம் பிடித்தது. 

ஆண்’ என்பவன், இந்த உலகத்தில் எந்த ஜீவராசி வடிவில் பிறந்திருந்தாலும் அதீத வீரத்தோடும், பெண்ணை அடக்கி ஆள்பவனாகவும், அடிமைப்படுத்துபவனாகவும், அதே சமயம் அவனே பெண்ணிற்கு சிறந்த பாதுகாப்பாளனாகவும் இருக்கிறான். இதை இயற்கையின் படைப்பில் ஒன்றாகவே பார்க்கவேண்டுமே ஒழிய.... பெண்ணீய பிதற்றல்களோடு பார்த்து..... .....அடடே  சப்ஜெக்ட் மாறுதே....?!!... ராஜநாகத்திற்கு வருவோம். 

ராஜநாகங்களைப் பற்றிய சில தகவல்கள் : 

ராஜநாகங்கள், 300 அடி தொலைவுக்குள் தன் இறையை பார்க்கும் வலிமைப்பெற்றது.  இவற்றிற்கு மிகவும் பிடித்த உணவு மற்ற பாம்பினங்களே. 

இவை, நேரடியாக நரம்பு மண்டலத்தை தாக்கி, மயக்கத்தை உண்டாக்கி, தூக்க நிலைக்கு செல்லவைத்து பிறகு இறக்கவைக்கும் விஷத்தன்மை கொண்டவை. 

ராஜநாகங்கள், மிக அறிதாகவே மனிதர்களை தாக்குக்கிறது. அதேசமயம்,  யானையை ஒரே கடியில் சாய்க்குமளவுக்கு தன்னுள் கடுமையான விஷத்தைப்பெற்றவை. அவ்விஷமானது ஒரே நேரத்தில் 20 மனிதர்களை சாகடிக்க வல்லவை. 

தன் உடலின் நீளத்தில், மூன்றில் ஒரு பங்கு உடலை தூக்கி நிற்ககூடியது. 

மேற்கிந்தியாவில் அதிகமாக ராஜநாகங்கள் காணப்படுகின்றன. 

காய்ந்த இலைகள், காய்ந்த மூங்கில் தழைகளைக்கொண்டு தன் முட்டைகளை மூடி அதற்கு தேவையான சீதோஷன நிலையை உருவாக்குகின்றது.  இதனை ஒரு மலைப்போல ஒரு அடி உயரத்திற்கு முட்டைகளின் மேல் கூட்டிவைத்து தன் முட்டைகளை காக்கிறது. 

அதிகபட்சமாக 24 முட்டைவரை இடக்கூடியவை, ஆனால் எத்தனை முட்டைகள் இட்டாலும், அவற்றில் பிழைத்து வருவது என்னவோ 1-2 ராஜநாகங்கள் மட்டுமே.

நன்றி : நேட் ஜியோ & கூகுள்.

அணில் குட்டி : ம்ம்ம்...இனி இப்படியெல்லாம் வேற பதிவு வருமோ ?! டிவி கேபிள் ஒயரை முதல்ல புடுங்கிவுடனும்... 

பீட்டர் தாத்ஸ் : Owing to ignorance of the rope the rope appears to be a snake; owing to ignorance of the Self the transient state arises of the individualized, limited, phenomenal aspect of the Self.- Guru Nanak

கணினி ஓவியங்கள்

 ஆற்றோரம் குடிசை, அத்தோடு இணைந்த வாழ்க்கை என என் கனவுகளில் வரும் இந்த காட்சியை சின்ன வயதிலிருந்தே அடிக்கடி வரைந்து வைத்து அழகுப்பார்ப்பேன். இப்போது பெயின்ட் பிரெஷ்ஷில் தொடருகிறது....

   கூகுள் கிலிப் ஆர்ட் பார்த்து வரைந்த காப்பி - நாய்க்குட்டி

 பறவை - இதும் கூகுள் க்லிப் ஆர்ட் பார்த்து வரைந்த காப்பி

வினாயகர் சதுர்த்தசி அன்று,  #Ganesh #OneLine #1Min #MsPaint  இப்படியொரு Tag 'ல், G+ ல் , இளா (விவாஜி) ஒரு ஓவியத்தை பதிவிட்டுருந்தார். அட... நாம ஏன் வரைந்துப்பார்க்க கூடாதுன்னு வரைந்தேன்.. என்னுடையது  #Gajananam #OneLine #27 Seconds #MsPaint  - நன்றி விவாஜி

 சில வெள்ளிக்கிழமைகளில் எங்கள் வீட்டு வாசலில் நான் இடும் கோலம்...


கலர்ஃபுல் கிளி..  இதும் கூகுள் இமேஜ் பார்த்து வரைந்ததே.. :)


மற்றுமோர் இயற்கை காட்சி... என் வானிலே...

* MSPaint ல் வரைந்தவை.

அணில் குட்டி : ஆங்...அம்மணி..?!... கூகுள் பார்த்து காப்பி அடிக்க இவ்ளோதானா கிடைச்சது ???

பீட்டர் தாத்ஸ் : Drawing is rather like playing chess: your mind races ahead of the moves that you eventually make - David Hockney  

எங்க வீட்டு சமையல் : ஆப்பம்

எனக்கு மிகவும் பிடித்த உணவு வரிசையில் இருப்பது ஆப்பம். அதுவும் தேங்காய் பாலோடு ஆப்பத்தை சாப்பிடும் போது..ஆஹா..ஓஹோ...சூப்பர்ர்... வாரத்திற்கு ஒருநாள் எங்க வீட்டில் ஆப்பம் இருக்கும். செய்யவும் மிகவும் எளிது.  உடலுக்கும் நல்லது.
 
தேவையான பொருட்கள் : 
பச்சரிசி : 3 கப் (200ml or 225 ml)
உளுந்து : 3 பிடி (படத்தில் இருப்பதுப்போல உளுந்தை அளக்கனும், உளுந்து அதிகம் ஆகிடக்கூடாது)
ஆப்பசோடா / சமையல் சோடா : 2 சிட்டிகை
உப்பு : சிறிது
தேங்காய் : 1
சர்க்கரை : தேவைக்கேற்ப
<= கவனிக்க : மேலுள்ள கைப்பிடி அளவிற்கும், படம் 2ல் உள்ள பிடிக்கும் வித்தியாசம் இருக்கு.  படம் 2ல் இருப்பதைப்போல அளவெடுக்கக்கூடாது. 

செய்முறை :  பச்சரிசி உளுந்து இரண்டையும் ஒன்றாக 2-3 மணிநேரம் ஊறவைத்து,  வெண்ணெய்ப்போல அரைத்து, மாவிற்கு தகுந்த உப்பில் கால் பகுதி மட்டும் சேர்த்து கரைத்து வைத்துவிடவும். இரவே மாவை தயார் செய்து வைத்துவிடவும்.

காலையில்,  4-5 கரண்டி மாவை வேறொரு கிண்ணத்தில் போட்டு, தண்ணீர் விட்டு தோசைமாவை விட சற்றே நீர்க்க கரைத்து, சமையல் சோடா சேர்த்து வைத்துக்கொள்ளவும்.

ஆப்பத்திற்கு என தனியாக நான்ஸ்டிக் வாணல் இருக்கிறது, எனக்கு
தோசைக்கல்லிலேயே (சற்று குழிவானதாக இருக்கவேண்டும், நான் ஸ்டிக் தோசைக்கல் இதற்கு சரிவராது) செய்து பழகிவிட்டதால், வாணல் பயன்படுத்துவதில்லை. வாணல்/தோசைக்கல் எதுவாக இருந்தாலும்  நன்கு சூடானவுடன் லேசாக எண்ணெய்த்தொட்டு தேய்த்துவிட்டு, (நான்ஸ்டிக் வாணலிற்கு எண்ணெய் தேவையில்லை) நடுவில் மாவை ஊற்றி, வேகமாக எடுத்து ஒரு சுற்று சுற்றி தோசை போல வடிவம் வரசெய்துவிட்டு, நடுவில் தேவைப்பட்டால் கொஞ்சம் மாவை ஊற்றி, சரியான அளவு மூடியால், மூடிவிட வேண்டும். முதலில் தீ பெரியதாகவும், ஆப்பம் ஊற்றியப்பிறகு தீயைக் குறைத்துவிடவும், 1-2 நிமிடத்தில் வெந்துவிடும், திருப்பிப்போடாமல் எடுத்தால் ஆப்பம் ரெடி.. !! 

தேங்காய் பால் செய்முறை :  தேங்காய்யை கீணி, சிறுத்துண்டுகளாக்கி, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி பொடியானவுடன், தேவையானளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்கவும். மாவு சலிக்கும் சல்லடையை  ஒரு அகலமானப்பாத்திரத்தின் மேல் வைத்து, அரைத்தக்கலவையைக் கொட்டி பாலை பிழிந்து எடுக்கவும்.  பிழிந்த தேங்காய்யை திரும்பவும் ஒரு தரம் தண்ணீர் விட்டு நன்கு அரைத்து, இன்னொரு முறை பாலை பிழிந்து எடுக்கவும்.  பாலை வேறு பாத்திரத்திற்கு மாற்றி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கலக்கி வைத்துக்கொள்ளவும். ஆப்பம் தயார் செய்யும் முன்பே தேங்காய் பாலை தயார் செய்துக்கொள்ள வேண்டும். 

ஆப்பம் சுட்டு எடுத்தவுடன், ஓரங்கள் மடங்கிய தட்டில் வைத்து, தேங்காய் பாலை அதன் மேல் ஊற்றிப் பரிமாறவும்.

தேங்காய் பாலின் பயன்கள்
 * வயிற்றுப்புண்ணிற்கு நல்லது.  முடி உதிர்தல், இளநரையைக் கட்டுப்படுத்தும், அடர்த்தியான கூந்தலுக்கும் தேங்காய்பால் சிறந்தது.
 
* கொழுப்பைக்குறைக்கும் தேங்காய் - என ஒரு பதிவைப்படித்தேன். நீங்களும் படிக்க 

அணில் குட்டி : அம்மணி வீட்டில் ஆப்பம் செய்தால், முதல்ல உக்காந்து இவிங்க நல்லா மூக்குமுட்ட சாப்பிட்டுட்டு,  அப்புறம் தான் வூட்டுக்காருக்கும் புள்ளைக்கும் கொடுப்பாங்க.. "சிறந்த அம்மா", மிகச்சிறந்த மனைவி" போன்ற பட்டமெல்லாம் இவிங்களுக்கு மட்டும் தான் கொடுக்கனும்னு இந்த நேரத்தில் மிகத் தாழ்மையோடு கேட்டுக் கொ(ல்)ள்கிறேன்........

பீட்டர் தாத்ஸ் : Your diet is a bank account. Good food choices are good investments. - Bethenny Frankel

எருமைமாடாக மாறுவது எப்படி?!

சூழ்நிலைகளால் மாறும் மனிதர்கள் இருக்கிறார்கள், ஆனால் மாறுவதுக்கென்றே சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்பவர்களை பார்க்க ஆயாசமாக இருக்கிறது, அவர்களை கடந்து வர முடியாமல் தவிக்கும் மனதிற்கு ஆறுதலோ அறிவுரையோ சொன்னாலும் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. 

அதே சமயம் யாரையும் நீ இப்படி இரு என்று சொல்வதை விட, நாம் நம்மை மாற்றிக்கொள்வது எளிதெனப்படுகிறது. எது நடந்தாலும் எதற்காக கஷ்டப்பட்டாலும் யாரையும் நொந்து பிரயோசனம் இல்லை,  என்னை நான் நொந்துக்கொள்வதை தவிர... :)

மனித குணங்கள் மாறுவதில்லை என்னையும் சேர்த்தே. கடந்து
வந்தப்பாதைகளை பார்க்கத் தெரிந்து, அதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளக்கூடிய பக்குவம் இருக்குமேயானால், நம் குணத்தை சற்றே மெறுகேற்றிக்கொள்ள முடியும்.. தவிர இயற்கையாக அமைந்த குணம் உள்ளேயே பதுங்கியிருக்கும். அதில் மனிதத்தைத்தாண்டி மிருகமே அதிகம் இருப்பதாக கணிக்கிறேன்..

மிருகத்தை கட்டுப்படுத்தி கட்டுப்படுத்தி மனிதத்தை வளர்க்க முயற்சி செய்தவாரே இருக்கிறேன்... என்னை சுற்றுயிருப்போர்  மிருகத்தை வெளிக்கொண்டுவரவே முயற்சி செய்கின்றனர். அவர்களை வென்று என் மனிதத்தைக்காப்பாற்ற அதீத போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறது என் மனமும் அறிவும்.

என் மனமும் அறிவுமே எப்போதும் ஒன்றாக இருப்பதில்லை... கிழக்கு மேற்காக, மேற்கு கிழக்காகவே இருக்கிறது.. இரண்டும் ஒன்று சேரும், ஒரு நாள் வருமென அறிவு மனதையும், மனது அறிவையும் எதிர்நோக்கி காத்திருக்கிறது.

என் சுயநலம், எதிர்பார்ப்பு, நான் வைத்த நம்பிக்கை நிறைவேறாத ஒரு சந்தர்ப்பத்தில் பிறர்மீது எனக்கு ஏற்படும் நம்பிக்கை இழப்பு, அவர்களை நம்பிக்கை துரோகிகளாக காண்பிக்கிறது. அவர்களின் இடத்திலிருந்து பார்க்கையில் அவர்கள் நல்லவர்களாகவே இருக்கலாம், வாழ்க்கையின் ஓட்டத்தில் எதையும் என்னைப்போல் தலையில் ஏற்றிக்கொள்ளாமல் அங்கங்கே இறக்கிவைத்துவிட்டு ஓடக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் எது முக்கியம், யார் முக்கியம் என்று தெரிந்திருக்கிறது. ஆனால் நானோ தேங்கிவிடுகிறேன்..அந்த தேக்கமே அவர்களை எனக்கு நம்பிக்கை துரோகிகளாகக்காட்டுகிறது. இப்படியானவர்கள் கண்ணில் படும்போது அல்லது அவர்களை மன்னிக்கும் அளவு நான் பக்குவப்படவில்லை எனும்போது, என் மனம் மனிதத்தை இழக்கிறது...உடனே அறிவு சும்மா இருந்து விடுவதில்லை. மனதை பார்த்துக் சரமாரியாக கேள்விகளைத் தொடுக்கிறது. தொடுத்த கேள்விகளின் பதிலில் "என்னைத்தவிர, என் கஷ்டங்களுக்கும் நஷ்டங்களுக்கும் வேறு யாரும்  பொறுப்பில்லை... " என்றே பஞ்சாயத்து முடிகிறது. இந்த முடிவில் இன்னொரு ஆரம்பமாக,  என் மேல் தான் தவறு என்பதை ஒருவிதக் குழப்பத்தோடு உணர்ந்து.....தொடர்கிறேன்...

இந்த தொடர்ச்சி மெளனத்தின் மொழியாக மாறுகிறது.  மெளனம் பல பிரச்சனைகளை உள்ளடக்கிவிட்டு, வெளியில் என்னை ரொம்பவே நல்லவளாகக் காட்டுகிறது.. ஆனால் உள்ளுக்குள் நான் நல்லவளில்லை என்பதை எனக்குள்ளேயே நான் பேசிக்கொள்ளும் சண்டையிட்டு மாண்டுக்கொள்ளும் இரு வேறு பிசாசுகள் உணர்த்துகின்றன. அந்த பிசாசுகள் வெளிவந்துவிடாமல் இருக்க என்னை நான் கட்டுப்படுத்தி வளர்ப்பதில் அதிக சிரமம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. 

இப்படி பிசாசாக மாறி அதைக்கட்டுப்படுத்துவதற்கு பதில்.. பிசாசாக மாறாமல் இருக்க என்ன வழியென்று யோசிக்கையில். வாழ்க்கையை அதன் போக்கிற்கே எடுத்துக்கொண்டு, எனக்கு நடப்பதை, எனக்கு சுற்றியிருப்பவர்களுக்கு நடப்பதை மிக எளிதாக எருமைமாட்டின் மீது மழைபெய்வதுப்போல சூடு சுரணை எதும் இல்லாமல் எடுத்துக்கொள்ள வேண்டுமென முடிவு செய்கிறேன்.

ஆக,  முடிவின் படி, இப்போது எருமைமாடாக மாறுவது எப்படியென்ற ஆராய்ச்சியில் இருக்கிறேன்... 

அணில் குட்டி : ஹை....?!! . எருமைமாடா அம்மணி ஆவறதப்பத்தி ஒரு பிரச்சனையுமில்ல....ஆனா அப்பவாச்சும் அம்மணி "வாயி" மூடுமான்னு அவங்க வூட்டுல இருக்கவங்க ஆர்வமாக எதிர்ப்பார்தீங்..... வாட் யூ கைஸ் எதிர்பார்த்தீங்...?. சொல்லிட்டுப்போங்க... எனக்கு பிரயோசனப்படும்...

பீட்டர் தாத்ஸ் : Human progress is neither automatic nor inevitable... Every step toward the goal of justice requires sacrifice, suffering, and struggle; the tireless exertions and passionate concern of dedicated individuals. - Martin Luther King, Jr.

தொடர்புடைய மற்றப்பதிவுகள் : (என்னுடைய குறிப்பிற்காக)
http://kavithavinpaarvaiyil.blogspot.in/2011/06/blog-post.html
http://kavithavinpaarvaiyil.blogspot.in/2009/05/2.html
http://kavithavinpaarvaiyil.blogspot.in/2009/02/blog-post_26.html
http://kavithavinpaarvaiyil.blogspot.in/2006/07/blog-post_05.html 

Images : Thx google.

பைத்தியக்காரி !!

ரயிலில் அவளைப்பார்த்தேன்..
மூவர் இருக்கையை அவளே ஆக்கரமித்திருந்தாள்...
எதிர் இருக்கை காலியாகயிருக்க உட்கார எத்தனித்தேன்...
தோள் தொட்டு வேரிடம் நகர்த்தினார் என் கணவர்
என் மனம் என்னவோ அவளையே சுற்றியது...

அவள் ஒரு இருக்கையிலும்
அவளின் சொத்து மூட்டை இரண்டு இருக்கையையும் பிடித்திருந்தது
மூட்டையின் பின்னாலிருந்து ஒரு நாய்க்குட்டி எட்டிப்பார்த்தது
என்னைவிட அதிர்ஷ்டசாலி தான்,  அவளுக்கு தனிமையில்லை !!
இரண்டு ரயில் நிலையங்கள் கடந்திருக்கும்....


நாய்க்குட்டியை தூக்கி இடதுகை அக்கத்தில் இடுக்கினாள்
மூட்டையை தூக்கி தோளில் போட்டாள்
முக்காடிட்டிருந்த துணி மெதுவாக நழுவியது
ஒருப்பக்கத்து சட்டையில்லா மார்பகம் பளீச்'சென தெரிந்தது
வெறித்துப்பார்த்த கூட்டத்தில் நானும் இருந்தேன்...

நாய்க்குட்டியை பாதுகாப்பாய் அணைத்த அந்த கைகள்
அவளின் மார்பை மூட முற்படவில்லை
நாய்க்குட்டியின் கழுத்தில் கிழிக்கப்பட்ட சிகப்புத்துணியில் நீளமான "பெல்ட்"
அவளின் ஊன்றுகோலாக கையில் ஒரு குச்சி !!
இப்போது, ஓடும் ரயிலில் கதவோரம் நின்றாள் !

இறங்கப்போகிறாள் என்றே நினைத்தேன்
அவள் எழுந்த ரயில் நிலையத்திலிருந்து கூட்டம் அதிகரித்திருந்தது -
அவளை சுற்றியிருந்த பைத்தியங்களைப்பற்றி
அவளுக்கு தெரிந்துதான் இருந்தது -
கதவோரம்  உட்கார்ந்தாள் !

முக்காடை சரிசெய்து இறுக்கப்போர்த்திக்கொண்டாள்
அப்படியே சாய்ந்து உறங்கிப்போனாள்-
நாய்க்குட்டி அவள் மடியில் பாதுகாப்பாய் உறங்கியது -
நான் அவளையே நினைத்து விழித்திருக்கிறேன் -

அந்த நாய்க்குட்டி
அவள் மேல் வைத்த நம்பிக்கையைக்கூட
நாம் அவள் மீது வைக்கவில்லை !!

இங்கே
பைத்தியக்காரி யாரென
இன்னமும் நானறியேன் ?!!  

கெஜானனம் பூத கனாதி சேவிதம்...

பட்டை அடித்திருப்பவர்...  (நெல்லையப்பர் கோயில் யானை, திருநெல்வேலி)
************

 காசுக்கேட்க மட்டும் தும்பிக்கை தூக்கற, ஃபோட்டோ எடுக்கவும் தூக்கிக்காட்டுன்னு சொன்னேன்.. .. உடனே போஸ் கொடுத்துட்டார்...

(ஹிஹி.. பாகன், நான் சொன்னதைக்கேட்டு போஸ் கொடுக்கவைத்தார்.. )
*****************
 நாமம்?!???? போட்டவர்...
ஆனா கணபதிக்கும் நாமத்துக்கும் என்ன சம்பந்தம் ?! விட்டால், லிங்கத்திற்குக்கூட நாமம் போடுவார்கள் வைணவர்கள். -(நவ திருப்பதியில் ஒரு கோயிலில், திருநெல்வேலி)

(ராகவன் சார் மிஸ்ஸிங் யூ...)

********************



இவரு, வேல் போட்ட குட்டி குட்டி யானையார்... (திருச்செந்தூர்)
********************
 இவரு வேலும், பட்டையும் அடிச்ச பெரிய பெரிய யானையார். (திருச்செந்தூர்)

********************

 ரிலேக்ஸிங்... :)

(நவத்திருப்பதி கோயில்களில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் யானை )  
******************
செந்தூரம் வைத்தவர்...
பெருமாள் கோவில்களில் யானை வைத்திருப்பது ......?! எதுக்குன்னு தெரியல..

 (ஆழ்வார்திருநகரி)



**************







இவங்க எல்லாருக்காகவும் "கெஜானனம் பூத கனாதி சேவிதம்..." & அப்பாவிற்கு....



ஓ...பட்டர்ஃப்ளை...பட்டர்ஃப்ளை

வீணையில் - ஓ... பட்டர்ஃப்ளை...


படம் :  மீரா
இசை : இளையராஜா

Thx to my Guru Madam Saranya 



Default  : ஸ, ரி2, க2, ப, த, நி2, ஸ்



மப மபம கமக ஸரி கமக மபம கம  - (2)

பநிபஸ்..... ரிகஸ்ரிரிஸ்  தநிநிஸ்ஸ்
நிததநி தபபத பமநிமப

மப மபம கமக ஸரி கமக மபம கம - (2)

நிநிநி பக ககபகநி நிநிநிக கரிகபபப
நிநிநி பக ககபகநி நிநிநிக கரிககரி

ஸரிக மபமபம மபத நிஸ்நிஸ்நி
தநிநிஸ்ஸ்  ரிகஸ்ரிரிஸ்  தநிநிஸ்ஸ்
நிததநி தபபத பமநிமப

மப மபம கமக ஸரி கமக மபம கம - (2)


Note : Red marked second string நி2,
          Blue marked மேல்ஸ்தாயி
.

ஏதோ சொல்கிறேன்...


மனச்சுமை-
என்னையும் உயிரையும்
கூட்டுக்குள்
இழுத்துக்கொள்கிறேன்-

பிழைக்கவுமில்லை
இறந்துவிடவுமில்லை
உள்ளே
உயிர் துடிக்கிறதே...........
********************




 பெளர்ணமி இரவு -

தூரத்தில்
தலைவிரித்து ஆடும்
தென்னங்கீற்றுகள்-

சீவி சடைப்போட்டு
சிங்காரிக்கத் தோன்றுகிறது -

 ********************




அரசின் இலவச சக்கரவண்டி
பக்கத்தில் அவன்
கால்கள் ஊனம்-

பூக்கட்டி விற்கலாமே ?!!

பிச்சைக்கு ஏந்திய அவன் கைகள்
நன்றாகத்தானிருந்தன !

********************




ஏரிக்கரையை
ஒட்டி
ஒற்றைப் பனைமரம்

பேச்சுத்துணையின்றி
தனியாக -

********************





ஒடுங்கிய கூன் கிழவிகள்-
ஒட்டிப்போன ஒற்றைநாடிக் கிழவன்கள்-
கைக்குச்சி பக்கத்தில் கிடக்கும் குருடன்கள்-

ஒர் நடுஇரவில்
வழிநெடுக
சாலையோரங்களில் உறங்கியவர்களின்
தொடர்...

வானத்திலிருந்து வந்தவர்கள் இல்லை -
இவர்களின் குடும்பம்
எங்கோ
இறக்கமின்றி உறங்கிக்கிடக்கிறது !!


************************


நகைக்கடையின்
விற்பனைப்பெண்-
குனிந்து கும்பிட்டு
நகையை
நன்றியோடு தருகிறாள்-
 
ஊக்கத்தொகை
உறுதியானதை-
அவளின் புன்னகை சொல்லியது ! 

                                                                                      *****************************

இலக்கியவாதிகள்  பலருக்கு
"யோனி" மட்டுமே -
வாழ்க்கையாகிப் போனதை
நினைத்து
வெறுமையாக சிரிக்கிறேன் !!

கைப்பிடித்தவன் சொன்னான் -
"அது' வும் ஒருவகை போதை" !!

பெண் குழந்தையைப்
பெற்ற அப்பனுக்குத்தெரியும்
"யோனி" அவனின்
பெண்ணிற்கும் உண்டு !!! 

************************************

என்னால்
சீரணிக்க முடியாதவற்றை
பார்க்காமல்
படிக்காமல்
தெரிந்துக்கொள்ளாமல்
அறிவிலி' யாக
இருக்கவே
விரும்புகிறேன்....
****************************************

என்னை -
அன்பு செய்பவர்களிடம்
ஒரு முகமாகவும்
நான் -
அன்பு செய்பவர்களிடம்
ஒரு முகமாகவும்
இருக்கிறேன்

        - சுயநலத்தின் பிரதிபலிப்பு

இருவரிடமும்
ஒரே முகமாக மாறும் தினம்
என்னை நான் வெல்வேன் !!

************************************
பழையத்துணிகளை
சேமித்து வைக்கிறேன் !

படுக்கையிலேயே
எல்லாமும் செய்யும்
அம்மா'விற்கு
பழைய உடைகளை அணிவிக்கும்
போதெல்லாம் -

"அவள் குழந்தையாகிவிட்டாள்"
எனக்கு நானே
சமாதானம்
சொல்லிக்கொள்கிறேன்

************************************

திவ்யா'வும் மனதளவில்
நிராகரித்துவிட்ட
வேதனையில்
தன்னை கொன்றுக்கொண்ட
இளவரசன் -

அறியாதொருக்கூட்டம்
சாதிவெறியென
பிதற்றிக்கொண்டிருக்கிறது !

**************************************

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால் #3





* படங்களை க்ளிக்கி பெரிதாக்கி பார்க்கவும் 

ரங்கோலி கோலங்கள் பெயின்ட் பிரஷ்ஷில் வரைந்தது.

எனக்காக குறிப்பு : என் பதிவுகளில் அதிகமாக தேடி பார்க்கப்படும் பதிவு "ரங்கோலி கோலங்கள்" அப்படின்னு ப்ளாகர் ஸ்டேடஸ் சொல்லுது. .



அணில் குட்டி : அம்மணிக்கு பொழுது போகலப்போல...?!!

பீட்டர் தாத்ஸ் : Photography is an immediate reaction, drawing is a meditation.

ஏதேதோ சொல்கிறேன்....

 கண்ணெதிரில்
களையும்
என்
கனவுகள்.....
பகல் கனவுகளோ?!!
**************************
இரவின் கனவுகள்......, ?????!
காற்புள்ளியிட
அவசியமில்லை
அவையும்
முற்றுப்புள்ளி தான் !!


Image : Baby Kaavya - Thekkikattan's daughter. Thx. Dr.Prabhakar.
******************************
நிழலாக
தொடர்கிறேன்..
இருட்டில் சென்றுவிடாதே..

*****************************

மெளனத்தில்
மறைந்திருப்பது -
நம்பிக்கை மட்டுமல்ல
வெறுப்பும் கோபமும்
கூட...

******************************


நாய்'க்கும்
மனிதனுக்கும்
வித்தியாசம் உண்டு
புலர்ந்ததிலிருந்து
புணர்வது வரையில்...


************************************

அடங்காத உடல்பசிக்கு
அறிவை முன்னிருத்தும்
இலக்கியவாதிகள்
பிண அறையின் காவலர்களாக
இருந்திருக்கலாம்
விதவிதமான
பெண்ணின் உடல்கள் அங்குமுண்டு !!

அதைக்கூட அனுபவித்து
இலக்கியம் கலந்து
சுவைப்பட
கவிதையாக்குவர்....
கைதட்டி சிரித்து சிறப்பு
சேர்க்குமொருக் கூட்டம் !!!


*************************************
எங்கோ
இழையோடும் அன்பும்
நம்பிக்கையும்
துடிக்கவைக்கிறது
இதயத்தை....

***************************
காவியின் குறியீடு துறவல்ல..
வெற்றுடலும் துறவல்ல

ஆசைகளற்றது துறவு...

முடிவென்று நினைத்தே
துறவைத்தேடினால்

அதை அடையும் போது
இவ்வாழ்வெதற்கு?!

துறவும் முடிவல்ல...!!!

**********************

இறந்துவிட வேண்டுமென
நெஞ்சம் துடிக்கையில்-
என் இறப்பும் 
என் கையிலில்லை-
வாழ்க்கை !!
****************************************

Images : Thx Google