முதன் முதலில், அலுவலகத்தில் 2006ல் "Skype" உபயோகிக்க ஆரம்பித்தேன்.  அலுவலகம் சார்ந்த பேச்சுக்காக மட்டுமே Skype பயன்பட்டது.  கான்ஃபரன்ஸ் கால்'களுக்காக அலுவலக நண்பர்களை அதில் சேர்த்திருந்தேன்.

வெளிநாட்டில் உள்ளோரிடம், அலுவலக வேலையாகவும், வெளிநாட்டு நண்பர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசுவதற்கும் Skype பயன்பட்டு வந்தது. ஆனால் இதுவரை யாருடன் பேசும் போதும் தோன்றாத ஒரு விசயம் , இப்போது என் குழந்தையோடு பேசும் போது தோன்றுகிறது. அப்படி என்ன தோணிச்சின்னு கேக்கறீங்களா?

"என்ன பேசி என்ன பண்ண, என் புள்ளைக்கு ஒரு வாய் சோறு ஊட்ட முடியல, என்னத்த டெக்னாலஜியோ.......என்னத்த சோ மச்சு இம்ப்ரூவ்டோஒ ????? "

சரி சரி... யாரும் ரென்ஷன் ஆகப்பிடாது. பெத்த மனம் பித்துன்னு சும்மாவா சொன்னாங்க. எனக்கே தெரியும் இப்படி யோசிக்கறதெல்லாம் ரொம்ப ஓவர்னு.. ஆனால்..  இதுவரை ஸ்கைப் பயன்படுத்தும் போது தோன்றாத ஒரு விசயம், என் புள்ளையோடு பேசும் மட்டும் எனக்குத்தோன்றியிருக்கிறது.


இங்கிருந்து கிளம்ப ஒரு நாள் முன்னிலிருந்து, யூரோவை இந்திய ரூபாயில் எவ்வளவு வருகிறது எனக் கணக்கு பார்க்க ஆரம்பித்திருந்தான். சரி இது மனித குணம், எப்படியும் 3-4 மாதங்கள் இப்படித்தான் இருப்பான் என்று நினைத்திருந்தாலும், காசு கணக்குப்பார்த்து வயிற்றை காயப்போடுவானோ என்ற பயம் எனக்கு இருந்தது. அது சென்னை விமானநிலைத்தில், "என்னடா சாப்பிட்ட" ன்னு கேட்பதில் இருந்து ஆரம்பித்தது.

"ரொம்ப விலை அதிகம்மா.. ஒரு சாக்லெட், ஒரு கோல்ட் காஃபி குடித்தேன், என்றான்.

இது நடக்குமென்று தெரிந்ததால், ஒன்றும் சொல்லவில்லை, சொன்னாலும் அவன் மாற்றிக்கொள்ள மாட்டான் எனத்தெரியும். துபாய் சென்றதும், "சாப்பிட்டியாடா?" என்ற கேள்விக்கு அதே பதில் ஆனால், சாக்லெட்டும் குறைந்து இப்போது வெறும் "கோல்ட் காஃபி" யில் நின்றது.

பாரிஸ் சென்றதும், நானே அழைத்து, "ஐயா சாமி, சப்பாத்தி இருக்கு,  2 நாளைக்கு வரும், சூடு பண்ணி, ஜாம் வச்சி இருக்கேன்  தொட்டுக்கிட்டு சாப்பிடு" என்றேன்.

நேற்று தான் ஸ்கைப்பில் வந்தான்.  சாப்பாடு விசயம் பேசிவிட்டு, இருவரும் கொடுத்தனுப்பிய பணத்தைப்பற்றி வரவு செலவு கணக்குப்பார்த்தோம்.

கொஞ்சம் பாரிஸ் நகரம் பற்றி சொன்னான். அதிகம் சொல்லவில்லை. என்னளவு பேசக்கூடிய பையன் இல்லை. என்னைப்போல் இருந்திருந்தால், இன்னேரம் பக்கம் பக்கமாக பேசியிருப்பான். முக்கியமாக எந்த கேமராவும் எடுத்துச்செல்லவில்லை. உன் அளவு எனக்கு ஃபோட்டோகிராபியில் இன்ட்ரஸ்ட் இல்லை என சொல்லிவிட்டான்.

நான் வளர்த்தது சரியில்லையோ என அடிக்கடி நினைக்கும் படி தான் இங்கு நடந்துக்கொள்வான். ஆனால், அங்கு ஒரே நாளில், நான் சொல்லித்தராமலேயே எல்லாவற்றையும் செய்துக்கொண்டான்.  குறிப்பாக "ஏன் மிதியடி வாங்கி அனுப்பல"  என்று கேட்டான்.  ஆஹா?? நான் மறந்துவிட்ட ஒரே பொருள் இது தான் போல, எப்படி எனக்குத்தோன்றாமல் போனது என்று நொந்துக்கொண்டேன்.  சமையல் பிடித்துணிக்காக இரண்டு சின்ன டவல்கள் கொடுத்திருந்தேன், அதில் ஒன்றை மிதியடி ஆக்கியிருந்தான்.  கச்சிதமாக எல்லாவற்றையும் அறையில் அடுக்கி வைத்திருந்தான்.

இனி மிச்சம் இருக்கும் எங்களின் வாழ்க்கை,  இந்த ஸ்கைப்போடு தான் தொடரும் போல..  அவன் என் பக்கத்தில் இருப்பதைப் போல உணர முடிவது என்னவோ உண்மை தான்.    இருந்தாலும் -

"என்ன பேசி என்ன பண்ண, என் புள்ளைக்கு ஒரு வாய் சோறு ஊட்ட முடியல, என்னத்த டெக்னாலஜியோ.......என்னத்த சோ மச்சு இம்ப்ரூவ்டோஒ ????? "  :((((

அணில் குட்டி : அம்மணிக்கு ரொம்பத்தான் ஆசை, நேத்து பேசினமாதிரி இன்னும் ஒரு இரண்டு நாள் பேசட்டும், காசிக்கு போனாலும் கர்மம் தொலையலங்கற கதையா, புள்ள.. என்னடா இது ஸ்கைப் மூலம் நமக்கு வந்த தொல்லைன்னு, இன்னைக்கு பீச் லீவு, கேட் போட்டுட்டாங்கன்னு சொல்றாப்ல, ஸ்கைப் ல கவிதா'ன்றவங்கக்கூட எல்லாம் பேசமுடியாதாம்ம்மா" ன்னு சொல்லிட்டு கடைய கட்டப்போறாரு...  அம்மணி இம்சை.. பெரிய இம்சையாச்சே.....

பீட்டர் தாத்ஸ் : The Internet: transforming society and shaping the future through chat.