கோதுமை தோசை :

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு : 2 கப்
பெரிய வெங்காயம் : 1
பச்சைமிளகாய் : 3
கடுகு : 1/4 ஸ்பூன்
உளத்தம் பருப்பு : 3/4 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
உப்பு : தேவையான அளவு
எண்ணெய் : தேவையான அளவு

செய்முறை :

மாவை தோசை மாவு பதத்திற்கு உப்பு சேர்த்து கரைத்து வைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லை வைத்து, 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு , உளுத்தம் பருப்பு தாளித்து பொன் நிறமானதும், நறுக்கிய வெங்காயத்தையும், நீட்டு வாட்டில் நறுக்கிய பச்சை மிளகாவையும் போட்டு வதக்கவும், பாதி வதங்கும் போது கருவேப்பிலைப்போட்டு  வதக்கி, இதை கரைத்து வைத்துள்ள மாவில் கொட்டி நன்கு கலக்கவும்.

தோசைக்கல்லில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, மாவை வெளிப் புறத்திலிருந்து சுற்றி ஊற்றி, உட்புறத்தை நிரப்ப வேண்டும். நடுவில் ஊற்றி சுற்றக்கூடாது.  சாதா தோசை மாவைவிட சற்று தளர இருக்க வேண்டும். ரொம்பவும் கெட்டியாகவோ, ரொம்பவும் தண்ணியாகவும் இருக்கக்கூடாது. 

தோசை வெந்ததும் திருப்பிப்போட்டு எடுக்கவும். இது மாவின் பதத்தை பொறுத்து மொறு மொறுவென சுட்டு எடுக்க முடியும்.  இந்த தோசைக்கு எந்த காய்கறி சாம்பாராக இருந்தாலும் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும். சாம்பார் தவிர, தேங்காய் சட்னி, இட்லி தூளும் நன்றாக இருக்கும்.

                                                                   =======&=======
அடை :

தேவையான பொருட்கள் :
1.
இட்லி அரிசி : 1.5 கப்
துவரம் பருப்பு : 1 கப்
காய்ந்த மிளகாய் : 7-8 

2 :
பாசி பருப்பு : 1 பிடி
கடலை பருப்பு : 1 பிடி
கொண்டகடலை : 1 பிடி

3.
சோயா ச்சங்க்ஸ் : 1 பிடி

தேங்காய் : பொடியாக நறுக்கியது 3 ஸ்பூன் அளவு
வெங்காயம் - 2 
கருவேப்பிலை - சிறிது
உப்பு : தேவைக்கேற்ப
எண்ணெய் : தேவைக்கேற்ப

செய்முறை :

அரிசி , பருப்பை தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும். அரிசியில் காய்ந்த மிளகாயை போட்டுவிடவும்.

2 இல் சொல்லியிருப்பது தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம். இவற்றை சேர்க்கும் போது துவரம் பருப்பின் அளவை 1/2  கப்பாக குறைத்துக்கொள்ள வேண்டும். கொண்டக்கடலையை 4-5 மணி நேரம் முன்னமே ஊறவைக்கனும்.

சோயா ச்சங்க்ஸ் 1, 2 - இரண்டிலும் சேர்க்கலாம். இதனால் ருசி எதுவும் மாறாது. சோயா ச்சங்க்ஸை ஊறவைத்து பிழித்து வைத்துக்கொள்ளவும்.

ஊறிய அரிசி +மிளகாயை நைசாக முதலில் அரைத்து வைத்துக்கொள்ளவும். பருப்பு வகைகளை ஒன்றும் பாதியுமாக அரைத்துக்கொள்ளவும். கொஞ்சம் பருப்பை நிறுத்தி, அதனுடன் சோயா ச்சங்ஸை சேர்த்து நைசாக அரைத்து எல்லாவற்றையும் தோசை ஊற்றும் பதத்திற்கு கெட்டியாக கரைத்துக்கொள்ளவும்.

அத்துடன் பொடியாக நறுக்கி வதக்கிய வெங்காயம், கருவேப்பிலை, உப்பு, தேங்காய் துண்டுகள் சேர்த்து (கொத்தமல்லி இலை இருந்தால், பொடியாக நறுக்கி அதையும் சேர்க்கலாம்)  நன்கு கலக்கி, இதையும் தோசைக்கல்லில் முதலில் எண்ணெய் விட்டு, வெளிப் புறத்திலிருந்து சுற்றி ஊற்றி உள்பக்கத்தை நிரப்ப வேண்டும்.  நடுவில் ஊற்றி சுற்றக்கூடாது, அப்படி செய்தால் அடை மெல்லியதாக இல்லாமல் , குண்டாக வந்துவிடும்.

இரண்டு பக்கமும் நன்கு வெந்தவுடன், எடுத்து பரிமாறவும். இதற்கு எண்ணெய் சற்று தாராளமாக விட வேண்டும். இல்லையேல் ருசிக்காது. அடைக்கு அவியல் தொட்டுக்கொள்வார்கள். ஆனால் தேங்காய் கார சட்னி நன்றாக இருக்கும். அடை இரவு நேரத்தில் சாப்பிட நன்றாக இருக்கும்.

அணில்குட்டி : அம்மணி இனிமே சாப்பாடு போஸ்ட் நிறைய எழுத உத்தேசித்து இருக்காங்க. .காரணம் என்னென்னு உங்களுக்கு மட்டும் சொல்றேன் காதைக்கொடுங்க... .. ..... ....... ........ " திடீர்னு ஒரு நாள் ப்ளாகர் ஸ்டேடஸ் செக் பண்ணாங்க..அதுல.. மத்த போஸ்டுகளை விட, இவிங்க எழுதின சாப்பாட்டு போஸ்ட்கள் தான் 1000 கணக்கில் மக்கள் தேடி படிச்சி இருக்கறதை கவனிச்சாங்க.... மக்களுக்கு எது தேவையோ ..அதை சேவையா செய்யனும்னு முடிவு பண்ணி..... .. ...........   ........ஹி ஹிஹி..... இதுக்கு மேல என்னால முடியல.. 

பீட்டர் தாத்ஸ் : The main facts in human life are five: birth, food, sleep, love and death.
.