உடுக்கை சத்தம் கேட்டால், தன் நிலை மறந்து ஆடும் ஆண், பெண்களை கோயில்களிலும், திருவிழாக்களிலும் பார்த்திருப்போம். உடுக்கைக்கு மனிதனின் மூளையை மழுக்கி, நினைவிழக்க வைத்து, இழுத்து வந்து ஆடவைக்கும் சக்தி இருக்கிறது என்பது வியப்பான விஷயம் தான். அதன் ஒலிக்கு அத்தனை சக்தி இருக்கிறது. ஆனால் எல்லோரும் ஆடுவதில்லை. ஏன் அந்த ஒரு சிலர் மட்டும்?

என் சின்ன வயதில் அப்பாவின் சித்தி மகள் இப்படி ஆடுவார். "அத்தை ஏன்ப்பா ஆடறாங்க..நான் ஏன் ஆடல.. நீங்க ஏன் ஆடல" ன்னு கேட்டு இருக்கேன். அப்பா "Nerve Weakness" என்ற பதில் சொன்னார்.  நரம்பு சம்பந்தப்பட்ட வியாதின்னு சொல்லலாமா? ஆனால் சமீபத்தில் ஒரு காதுக்குத்தல் விழாவிற்கு சென்றிருந்தோம். அங்கு பார்த்த பொழுது தான், இது பூசாரி யின் தில்லாலங்கடி வேலை என்று தெரிந்தது. விழாவை நடத்தியவர்கள் முத்திரை க்குத்திய வைணவர்கள், இவர்கள் எங்கள் குடும்பத்தில் நிறையவே இருக்கிறார்கள். நாங்கள் சைவம் என்றாலும், பல உறவினர்களின் குடும்பத்தில் திருமணத்தின் போது வைணவமும் கலந்துவிட்டது. 

எடுத்துக்காட்டாக என் அம்மா வைணவம்-அப்பா சைவம்,  என் கணவர் சைவம் - நான் சைவம், என் அண்ணன் சைவம்-அண்ணி வைணவம், நாத்தனார் சைவம்- அண்ணன் வைணவம், அத்தை சைவம்- அத்தை மாமா வைணவம் (முத்திரைக்குத்திய குடும்பம்)பெரியம்மா வைணவம்- பெரியப்பா வைணவம் (முத்திரைக்குத்திய குடும்பம்), தாய் மாமா வைணவம்- மாமி வைணவம். இப்படி குடும்பம் முழுக்க நிறைய சைவம்-வைணம் கலப்பு இருக்கிறது.
இதில் முத்திரை க்குத்திய வைணவர்கள் என்பவர்கள் வைணவத்தில் தீவிரமாக இருப்பவர்கள், சங்கையும் சக்கரத்தையும் கைகளில்  முத்திரையாக குத்திக்கொண்டு தங்களின் மதத்தின் மீதுள்ள, பெருமாள் மீதுள்ள பற்றை தீவிரமாக வெளிப்படுத்திக்கொண்டவர்கள்.

இவர்களை நேரில் நான் பார்த்ததில்லை. முத்திரைக்குத்தியவர்கள் எல்லோருமே தாத்தாவிற்கு தாத்தா என்ற நிலை தான். அதற்கு பிறகு வந்தவர்கள், இவர்களை தொடர்ந்து வருபவர்களாக, மிக சுத்த, உசத்தியான வைணவர்களாக தங்களை நினைத்தும், காட்டியும், இன்று வரை அப்படியே பழகியும் வருகிறார்கள்.  இதை ப்பற்றி விரிவாக சொல்ல தனியாகத்தான் பதிவிடவேண்டும். 

நிற்க, நாம் சாமி ஆட்டத்திற்கு வருவோம். இப்படி ஒரு வைணவ க்குடும்பம் நடத்திய காதுக்குத்தல் திருவிழா,  108 பிள்ளையார் மண்ணில் பிடித்து, அதை ஒரு கட்டுக்குள் வைத்து, தனித்தனியாக பூஜை செய்து, மாவிளக்கு, பஞ்சாமிருதம், பொங்கல் பொங்கி, உடுக்கை , பம்பை, சிலம்பம் அடித்து, பூசாரி பாட்டு பாட, நடந்த அந்த விழாவில் தான் சாமி ஆட்டத்தையும் பார்க்க முடிந்தது.

மூன்று பெண்கள் ஆடினார்கள், முதலில் ஆடிய பெண் உடுக்கை அடிப்பவருடன் வந்த பெண்.  அடுத்து என் நெருங்கிய உறவினர் பெண் ஆட ஆரம்பித்தவுடன் எனக்கு உள்ளுக்குள் ஆட ஆரம்பித்தது. இது வரையில் அந்த பெண் இப்படி ஆடுவார் என்று தெரியாமல் இருந்ததால் எனக்குள் ஆட்டம் எடுத்தது எனலாம்.  அந்த பெண்ணின் ஆட்டத்தின் நடுவில் பூசாரி உடுக்கை அடித்தவாறே கேட்கிறார்.

"தாயீ வந்து இருக்கறது யாரு..."

"முக்காத்தம்மன்"

"எந்த குறையும் இல்லையே..."

"இல்லடா.."

"சந்தோஷமா..."

"ரொம்ப சந்தோஷன்டா..."

பூசாரி கூட்டத்தை பார்த்து சத்தமாக - "எல்லாரும்  கேட்டுக்கோங்க... ஆத்தாவிற்கு எந்த குறையும் இல்லையாம் எல்லாம் திருப்தியாம்,,...ரொம்ப சந்தோஷமா.. வேற யாருக்காச்சும் எதாவது கேக்கனுமா?"

கூட்டத்தில் இருந்து ஒருவர் "இந்த கோயில் எப்ப புதுப்பிப்பாங்கன்னு கேளுங்க.."

ஆத்தாஆ... தாயீ... "இந்த கோயிலுக்கு எப்ப கும்பா அபிஷேகம் நடக்கும்...?"

"ஒரு வருஷன்டா....வர ஆடிக்குள்ள நடக்கும் டா.... நான் இருந்து நடத்தறேண்டா....... நடத்துவேண்டா......"

:நன்றி தாயீ........"  (கூட்டத்தை பார்த்து , "இன்னும் எதா கேள்வி இருக்கா?", எல்லோரும் அமைதியாக இருக்க) தட்டில் இருந்து வீபூதியை எடுத்து நெற்றியில் வைத்த அடுத்த வினாடி சாமி இறங்கி ஓடி ப்போகிறது. என்ன மாயம் இது? :)

இதில் பூசாரியின் கை நிறைய இருப்பதாகப்பட்டது.  எடுத்த வீடீயோவிலும் அது தெரிகிறது. அதாவது, பூசாரி தான் செய்தவை திருப்தி அளிப்பதாக தன்னை அமர்த்தியவர்களுக்கு சொல்ல வேண்டி, இதை செய்கிறார். கூட்டத்தில் யாரும் ஆடவில்லை என்றால் தன்னை சார்ந்தவர்கள் யாரையாவது ஆடவைத்து, இதை நிறைவேற்றிக்கொள்கிறார்கள், ஒரு வேளை கூட்டத்தில் யாரும் ஆடினால், அவர்களிடம் இப்படி கேள்வி கேட்டு சாமர்த்தியமாக நடந்துக்கொள்கிறார்கள். இதில் ஒரு முறை ஆடிய பெண் மீண்டும் ஆடுவதில்லை. :)  ஆடாமல் இருந்தாலும் பூசாரிகள் விடுவதில்லை.. உடுக்கையை வேகமாக அடித்து, அந்த பெண்ணை ப்பார்த்து ". .வாம்மா வா... வா தாயீ.. .வா வா. " .என்று சொல்லியே அடிக்கிறார்கள். அந்த பெண்ணும் கொஞ்சம் கொஞ்சம் தலையை ஆட்டி ஆட ஆரம்பித்து, வேகம் எடுக்கிறார்.

இப்போது சாமி ஆடும் பெண் பக்கத்திலிருந்து பார்க்கலாம். ஒரு முறை தன்னை சாமி என்று சுற்றி இருப்பவர்களால் நம்ப வைக்கப்படும் (அ) நம்பும் அந்த பெண், அதை தக்க வைத்துக்கொள்ள தொடர்ந்து அதே யுத்தியை கடைப்பிடிக்கிறார். மனிதனின் இயற்கை குணம் இது. இப்படி சாமியாக பார்க்கப்படும் அந்த பெண்ணிற்கு ஊரில் கிடைக்கும் மரியாதை, மதிப்பு, தன் வார்த்தையின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்ள, இதையே தொடர்ந்து அவர் செய்கிறார்.


கவனித்து பார்த்த வரை அவர்கள் சாமி ஆடும் போது செய்வது பேசுவது அவர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. சிலம்பு வைத்திருப்பவரிடம் சென்று சிலம்பை பிடுங்கி ஆடுகிறார்கள். உடுக்கை, பம்பை வைத்திருப்பவர்களிடம் இவர்கள் செல்வதில்லை. ஏன்? அதை எல்லாம் அடிக்க பயிற்சி த்தேவை.  சட்டென்று பிடுங்கி தாளம் தப்பாமல் அடித்துவிடமுடியாது.:)

கூகுலில் சாமி ஆட்டம் னு தேடினால், தமிழர்களின் மூட நம்பிக்கை பட்டியலின் கீழ் வருகிறது. :). அப்பட்டமான ஒரு மூட நம்பிக்கை இது என்றாலும் இன்னமும் இதை தொடர்ந்து நம் மக்கள் பழகி வருவது வருந்தத்தக்கது.  விழாவில் எடுத்த வீடியோ, இதில் ஒரு வயதான பெண் ஆடுவார் பாருங்கள், ரொம்ப குதித்து ஆடாமல், (6.00 -7.11) தன் வயதுக்கு தகுந்தார் போன்று நாசுக்காக ஆடுகிறார். அவரிடம் பூசாரி பேசுவதும், ஒரு வினாடித்துளியில்  பூசாரி அவரின் உள்ளிருக்கும் சாமியை வெளியே அனுப்பதும் இருக்கும்.அருள்வாக்கு சம்பந்தப்பட்ட ஒரு பதிவு கூகுகில் கிடைத்தது - http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=4542:2010-03-03-05-38-00&catid=3:short-stories&Itemid=266

அணில் குட்டி : நம்மையும் மதிச்சி ஒரு வீட்டு விஷேஷத்திற்கு கூப்பிட்டா,  போனமா குட்டிய விஷ் பண்ணமா ..நல்லா கொட்டிக்கிட்டோமா.. வந்தமான்னு இல்லாம ..என்னா கிருவித்தனம் !! ..  ... அந்த பூசாரி என்னவோ இவிங்க விடியோ எடுக்கும் போது ரொம்ப ரசிச்சி எடுக்கறாங்க. .ன்னு உடுக்கைய வேக வேகமா அடிச்சி சூப்பரா போஸ் எல்லாம் கொடுத்தாரு. .ஆனா அம்மணி  இம்புட்டு கொலவெறி யோட எடுக்கறாங்கனு தெரியுமா ????  ம்ம்ம்ம்.. .... யாராவது முட்டு சந்துல வச்சி மொத்து மொத்துனா த்தான் அடங்குவாங்க..

பீட்டர் தாத்ஸ் : I know God will not give me anything I can't handle.  I just wish that He didn't trust me so much.  ~Mother Teresa