என்ன எடுத்தவுடனே கடைசி? முதல், மிடில் எச்சரிக்கை எல்லாம் எங்கன்னு கேக்காதீங்க . அதெல்லாம் மெயில் ல முடிஞ்சிப்போச்சி. அவரு எதையும் கேக்கறாப்ல இல்ல, அதனால இது கடைசி எச்சரிக்கை ....தொடர்ந்து படியுங்கள்...  எச்சரிக்கை நடுவில் வரும்...

இணைய நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பகல் இரவு பாராமல், மீனவர்களின் வாழ்வியல்பு மாற்றத்திற்காகவும், இலங்கை கடற்படையால் தன் வாழ்க்கையை இழந்து வரும் மீனவர்களின் பாதுக்காப்பு வேண்டியும் பல்வேறு விதங்களில் தங்களின் ஆதரவையும், தற்போதைய அரசுக்கு எதிராக தங்களின் எதிர்ப்பையும் பதிவு செய்து வருகின்றனர்.

அதில் முதற்கட்டமாக, நாம் ஒன்றுகூடி "கீச்சின்" மூலம் நம் எதிர்ப்பை தெரிவித்துக்கொண்டு இருக்கிறோம்.  அடுத்து, நம் நண்பர்கள் பலர் சமீபத்தில் மென்பொருள் வல்லுனர்களின் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துக்கொண்டு மீனவர்களுக்காக தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.

இதற்கு நடுவே, இணைய நண்பர்கள் சிலர், மீனவர்கள் பிரச்சனை சம்பந்தமாக அரசியல் தலைவர்களையும், மீனவ பிரதிநிதிகளையும் சந்தித்து பேசி வருகின்றனர். சந்திப்பு மற்றும் பேச்சு விபரங்களை tnfisherman கூகுள் குழுமத்திற்கு அனுப்புகிறார்கள். http://groups.google.com/group/tnfisherman.

30 ஆண்டுகளாக தொடரும் இந்த பிரச்சனையை இத்தோடு  நாம் விட்டுவிடாமல்,  மீனவர்களை அவர்கள் இடத்தில் சந்தித்து, அவர்களின் வாழ்வியல் முறைகளையும், பிரச்சனைகளையும் நேரில் கண்டு, அதனை நம் வாயிலாக எழுத்தாக்கி பலரை சென்றடைய முயற்சி நடந்து வருகிறது. வருகின்ற மார்ச் 4,5 தேதிகளில் நாகையிலும் - 6, 7 தேதிகளில் ராமேஷ்வரத்திலும் மீனவ கிராமங்களுக்கு நேரடியாக சென்று, அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்டுள்ள நான்கு நாட்களில், இரண்டு நாட்கள் அல்லது ஒரு நாள் கலந்துக்கொள்ள முடியுமானால் கூட வரலாம்.

இதற்கான போக்குவரத்து மற்றும் உணவு செலவு மட்டும் நாம் பார்த்துக்கொண்டால் போதுமானது. தங்கும் வசதி, கிராமங்களுக்கு அழைத்து செல்லுதல் போன்றவற்றை அங்கிருக்கும் உள்ளூர் நண்பர்கள் செய்வதாக ஒப்புக்கொண்டு உள்ளனர்.  உங்களுக்கு அதில் சிரமம் ஏதும் இருக்காது.

*************************
விளம்பர இடைவேளை - 

விளம்பரம் உத்தி ன்னு கேள்விப்பட்டு இருப்போம்.  விளம்பரங்களால் மக்களின் கவனத்தை ஈர்த்துவிட்டால் போதும், நம் விளம்பரப்படுத்தும் பொருளினை பற்றிய விபரம் எளிதில் மக்களை சென்றடைந்துவிடும். அப்படி ஒரு விளம்பரம் தான் இது. :) லக்கி க்கு என் நன்றிகள். ஒரு நல்ல விஷயத்திற்கு அவர் பெயரை பயன்படுத்திக்கொள்கிறேன். பத்திரிக்கைகளில் கவர்ச்சிப்படத்தை முன் அட்டையாக போட்டு, பார்வையாளர்களின் கவனத்தை இழுப்பதை போன்று இங்கு கவர்ச்சி நாயகன் "லக்கி".  அவ்வளவு தான், எனக்கும் அவருக்கும் வாய்க்கால் வரப்பு தகறாரு என்று ஒன்றுமில்லை. :)) எவ்வளவு தான் மாங்கு மாங்கென்று எழுதினால் கூட, தலைப்பை வைத்து தான் மக்கள் பதிவினை படிக்க வருகிறார்கள். உங்கள் அனைவரின் கவனத்தை கவரவேண்டி வைக்கப்பட்ட பொய்யான ஒரு தலைப்பு. :) லக்கியின் பெயரை சொல்லி நன்மை நிகழ்தால் எல்லாம் லக்கிக்கே... :)  
*************************

இந்த பயணம் பற்றிய அறிவிப்பை தொடர்ந்து, இது வரையில் 8 நண்பர்கள் கலந்துக்கொள்ள முன் வந்துள்ளனர்.

1    மா சிவகுமார்
2    நாகை சிவா
3    அறுசுவை பாபு
4    கவிராஜன்
5    ரோசா வசந்த்
6    உண்மை தமிழன்
7    சாந்தப்பன்
8    அபிஅப்பா

உங்களுக்கும்  கலந்துக்கொள்ள ஆர்வம் இருப்பின், masivakumar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பெயர், தொலைபேசி எண், கலந்து கொள்ளும் நாட்கள் என்ற விபரங்களை குறிப்பிட்டு பதிவு செய்து கொள்ளுங்கள்.

மேலும், இதனைப்பற்றிய முழுவிபரங்கள் அறிய கீழ்கண்ட பதிவுகளை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

1. வலைப் பதிவர்களுக்கு ஒரு அழைப்பு 
2. நம் மீனவர்களுக்காக - செயல்படும் நேரம் இது !
3. பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

தினம் தினம் செத்து பிழைக்கும் மீனவர்களுக்காக, நம்மால் முடிந்த உதவிகளில், இந்த எள்ளளவு உதவியும் ஒன்று.  ஆர்வமும், விருப்பமும் இருப்பவர்கள், இதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள். விரைந்து உங்களின் பெயர்களை பதிவு செய்யுங்கள், உங்களை பின் தொடர்ந்து பலரும் வருவர்....

நன்றி !!

அணில்குட்டி : ம்ம்ம்.. இவிங்களுக்கு முன்ன மூனு நல்லவங்க இது சம்பந்தமா போஸ்ட் போட்டு இருக்காங்க. . எவ்ளோ டீசன்ட்டா, ரிலேட்டடா தலைப்பு வச்சி இருக்காங்க..  அம்மணி மட்டும்.. .. ...... ஒன்னும் பண்ணமுடியாது..  தலைப்பு ஹூரோ லக்கிலுக் வந்து கழுத்தை திருப்பினா தெரியும்... கதை :)) நமக்கென்ன...!
.