கடற்கரை-
இருள் சூழும் நேரம்
மழை வரும் வானம்
தனிமை-

முழங்கால்களை
கட்டிக்கொண்டு-

சுழன்று வரும் காற்று
சற்றே வேகமாய்
மோதிச்செல்கிறது -
முகர்ந்ததில்
உப்பின் வாசம் -

தன்னிச்சையாக
நாக்கை சுழட்டி
உதட்டோரம் சுவைக்கிறேன்
கரித்தது!

கடலின் எல்லையை
தேடி
கண்கள்
நெடுந்தொலைவு
பயணக்கிறது 

தொலைவில்
தள்ளாடும் குட்டி படகு
பெரிய வெள்ளை கப்பல்
கடல் பட்சிகள்
அலைகள் அடங்கிய
நிதானமான சாம்பல்
நிறக்கடல்  -

சிமிட்டாத இமைகள்
சுருக்கிய புருவங்கள்
பார்வையில் கூர்மை
நிற்காமல் அலைகிறது
எல்லை கிட்டவில்லை...

புரிந்த தருணத்தில்
வேகமாய் மீண்டு வந்த பார்வை
அருகில் '
மெதுவாய் மணற்பரப்பில்
உலாவுகிறது -

எட்டிய தூரம் வரை
பாதச்சுவடுகள் -
ஒவ்வொன்றும்
ஒவ்வொரு திசை நோக்கி
வெவ்வேறு அளவுகளில்-

எதையோ
தேடி தேடி... தேடி தேடி...

என் பாதங்களை
சாய்ந்து பார்க்கிறேன்
பாதங்களின் அடியில்
சுவடுகள்....சிரித்தன..

தேடல் எனக்கு மட்டுமல்ல..........