ஒரு வருடத்திற்கு முன் எழுதியது, இன்னும் பல வருடங்கள் சென்றாலும் பதிவிடலாம் என்றே நினைக்கிறேன். நம்முடைய வளர்ச்சி குறித்து எப்போதும் அடிமனதில் ஓடிக்கொண்டிருக்கும் சிலவற்றை எழுதி வைக்க  நினைத்ததின் தொகுப்பு.

அடிப்படையில் இருந்து ஆரம்பிக்க வேண்டியுள்ளது. முன்னேற்றங்கள் பல கண்டு இருந்தாலும் இந்தியாவை பொறுத்தவரை பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இன்னும் அப்படியே உள்ளன. முக்கியமாக-

1.பொருளாதார ஏற்றத்தாழ்வை இப்போது இருக்கும் 20/80 லிருந்து 40/60 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்
2. எல்லோருக்கும் கல்வி - குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு வரையிலாவது குழந்தைகள் படிக்க வேண்டும், அதற்கு தேவையான அடிப்படை வசதி, அவேர்னஸ் குழுக்குள் அமைத்து கட்டாய கல்வி அடிப்படையில் குழந்தைகளுக்கு கல்வியின் பெருமையையும், அதன் பயன்பாட்டிலும் தேர்ச்சி அளிக்க வேண்டும்.
3. விவசாயத்தின் முக்கியத்துவம், அதற்கு இளைஞர்களின் பங்களிப்பை அதிகப்படுத்த வேண்டும். விளைநிலங்கள், வீட்டு மனைகள் ஆக்கப்படுவதை அறவே நிறுத்தவேண்டும்.
4. தொழிற்கல்வி, வேலைவாய்ப்பு பெருக தேவையாக தொழிற்கூடங்களை நிறுவ சிறிய/பெரிய முதலீட்டு முதலாளிகள் ஊக்கிவிக்கப்படவேண்டும்.
5. அடிப்படை வசதிகள்-தண்ணீர், சாலைகள், மின்சாரம், போக்குவரத்து வசதி சமனாக இருக்க வேண்டும்.
6. குறிப்பிட்ட சுற்றுவட்டத்துக்குள், மக்களுக்கு தேவையான அனைத்தும் கிடைக்க ஆவன செய்ய வேண்டும். எ.க. மாநகரத்திற்கு வந்தால் தான் இந்த வேலை நடக்கும் என்ற நிலை மாறவேண்டும்.
7. அரசு அலுவலங்களின் அடிப்படை வேலை முறை மாறவேண்டும். அவர்களின் வேலை நேரம், சம்பளம், மற்றும் infrastructure போன்றவை நல்ல தரத்திலும், அதை பயன்படுத்த தேவையான தேர்ச்சியையும் அவர்களுக்கு அளிக்க வேண்டும்.
8. துறை சார்ந்த வேலைவாய்ப்பும் அதற்கு தகுந்த ஊதியமும் வழங்கி துறை சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கவேண்டும்

இவற்றை போர்க்கால வேகத்தில் மிக மிக துரிதமாக, ஆனால் நெடுநாள் பயன்பாட்டின் அடிப்படையில் செய்து முடிக்க வேண்டும். அதற்கு நம் அடிப்படை அரசியல் முறை மாற வேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்தாலும் அதை செயற்படுத்த தன்னலமற்ற நல்ல தலைமையும், அதிகாரிகளும் அதிகாரத்தில் இருக்க வேண்டும்.

9. நம் இரத்தத்தில் கலந்துவிட்ட கட்சி சார்ந்த/தலைவர்கள்/தனி மனித துதி பாடலும், பக்தியும் அதை சார்ந்த நம்பிக்கைகளும் அடியோடு மாற வேண்டும். அதற்கு நம் ஆட்சி முறைகளும் அவர்களை தேர்தெடுக்கும் முறைகளும் மாற வேண்டும். புதிய அரசியல் சட்டங்களை கொண்டு வர வேண்டும்.

ஜனநாயக நாடு என்று பேசிக்கொண்டு இருந்தால், நிச்சயமாக இன்னும் எத்தனை ஆண்டு காலம் போனாலும் நாமும் மாறாமல் நம் சந்ததியும் மாறாமல் இப்படியே தலைவர்கள் துதி பாடிக்கொண்டு குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டு இருப்போம். நெடுங்கால நோக்குடன் யோசனையும், அதன் வழி நடக்க தேவையானவற்றை செய்யவும் நம்மை நாம் தான் தயார் படுத்தவேண்டும்.

சென்ற பாராளமன்ற தேர்தலில், தெற்கு சென்னையில் மட்டும் 46 வேட்பாளர்கள் தேர்தலுக்கு நின்றார்கள், குறிப்பிட்ட முக்கிய 6 வேட்பாளர்கள் தவிர்த்து வேறு யாரையும் மக்களுக்கு தெரிந்து இருக்கவில்லை என்பது நிதர்சனம். இதனால் எத்தனை பேருக்கு நேரம் விரயம், வேலை பளூ, தேவையற்ற பண இழப்பு ? இதை எல்லாம் சரியான அரசியல் சட்ட அமைப்புகள் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். தேர்தலுக்கு நிற்கும் வேட்பாளர்களுக்கு சில தகுதிகள் வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டு செயற்படுத்தவேண்டும்.

அ. அடிப்படை கல்வி தகுதி
ஆ. வயது வரம்பு நிர்ணயிக்க படவேண்டும். வயதானவர்கள் Advisory Position னில் மட்டும் இருக்கும் படியாக வைக்கலாம், அதுவும், Rotation Basis & Department துறை சார்ந்தும் இருக்க வேண்டும்.
இ. தேர்தலுக்கு தான் நிற்கும் தொகுதியை பற்றிய அ முதல் ஃ வரையிலான விபரங்கள், அந்த வேட்பாளருக்கு தெரிந்து இருக்க நேர்முக தேர்வும், தேர்ச்சியுற்றவருக்கு தொடர்ந்து அதற்கான அடிப்படை தேர்ச்சியும் கொடுக்க வேண்டும். அதிலும் தேர்ச்சி அடைபவர்கள் மட்டுமே அடுத்தக்கட்டத்திற்கு போகவேண்டும்.
ஈ. அவரவர் தொகுதிக்கான நலத்திட்டங்கள் அடங்கிய தொகுப்பு, அதை செயற்படுத்தும் முறைகள்,கால அளவு, அதற்கு ஆகும் செலவு. செலவிற்கான முதலீட்டு திட்டம் போன்றவை, முன் திட்ட அறிக்கையாக அரசுக்கு ஒவ்வொரு வேட்பாளரும் அளிக்க வேண்டும்.
உ. நலத்திட்டங்களின் அடிப்படையில் ஒவ்வொரு வேட்பாளரும் அந்த துறை சம்பந்தப்பட்ட நிபுணர்களின் நேரடி அலசலின் கீழ் தேர்தெடுக்கப்பட வேண்டும்.
ஊ. தேர்ந்தெடுக்கப்படுபவர்களும், குறைந்த பட்சம் மூன்று அதிக பட்சம் ஐந்து கட்டமாக தேர்ந்தெடுத்தல் நல்ல தரமான தலைவர்களை நமக்கு அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

8. துறை சார்ந்த வேலைவாய்ப்பும் அதற்கு தகுந்த ஊதியமும் வழங்கி துறை சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கவேண்டும்

எந்த துறையில் படித்தாலும் ஐ.டி யை கண்மூடித்தனமாக நம்பும் நம் இளைஞர்களின் மனப்போக்கும் மாற வேண்டும். அதற்கு அவர்களுக்கு தேவையான வேலைவாய்ப்பையும், ஐ.டி க்கு நிகரான சம்பளம் மற்றும் வசதிகளையும் மற்ற துறைகளிலும் கொடுக்கவேண்டும். சாத்தியக்கூறுகள் உண்டு, ஆனால் அதற்கான முயற்சியில் இறங்கவில்லை என்றே சொல்லலாம்.

அரசு அலுவலங்களின் அமைப்பை நிச்சயமாக மாற்றியே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தேவையான அடிப்படை வசதி, குடிநீர், சுத்தமான கழிப்பறைகள் வெளிச்சம் உள்ள விசாலமான அறைகள், காற்று, கணினி, மற்றும் இணையதளம். அரசு சார்ந்த எல்லா பணிகளும் கணினியின் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். காகிதம் மற்றும் கையால் இன்னமும் எழுதிக்கொண்டு இருக்கும் நிலையை மாற்ற வேண்டும். ஆந்திர அரசு இதை 2003 ல் நிறைவேற்றி விட்டதாக நினைவு. அதாவது அரசு சம்பந்தப்பட்ட எல்லாமே அவர்கள் இணையத்தின் மூலமாகவே செய்யலாம். எல்லா அரசு அலுவலகங்களிலும் கட்டாய கணினி முறை செயற்படுத்தப்பட்டுவிட்டது. தேவையானவற்றிற்கு நேரடியாக போகவேண்டும் என்ற அவசியம் இல்லை. இது எல்லா மாநிலங்களிலும் செயற்படுத்த வேண்டும்.

இப்பவும் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு நேரடியாக ஒவ்வொரு வீடாக சென்று விபரம் கேட்டு எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். எத்தனை நேர விரயம், எழுதுபவர் நாம் சொல்வதை புரிந்துக்கொண்டு எழுதக்கூடிய கல்வியறிவு பெற்றவராக இல்லை என்பது வருத்தமளிக்கிறது. மாநகரங்களில் இவற்றை கணினிமயமாக்க முடியும். இணையத்தில் நம்முடைய விபரங்களை பதிவிட முடியும். எப்போது இவை மாறும் என்பது கேள்வி குறியாகவே தான் உள்ளது.

அடுத்து, விவசாயம், சிவில், எலக்ட்ரிகல், மெக்கானிகல், லெதர், டெக்ஸ்டைல் பொருள் உற்பத்தி துறைகள், ஏற்றுமதி, இறக்குமதி, கல்வி என்று..இன்னும் எல்லா துறைகளிலும் நம் கவனத்தை செலுத்த வேண்டும், அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு ஐ.டி க்கு நிகராக அவர்களுக்கும் சம்பளம் கொடுக்க வேண்டும்,

உற்பத்தியும் அதன் ஏற்றுமதி யையும் உயர்த்தினால் ஒழிய அதிக ஊதியம்/வருமானம் பற்றிய பேச்சுக்கு இடமில்லாமல் போகும். சீனா இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இவர்களுடைய பொருட்கள் உலக தரத்தில் இருக்கும், ஆனால் குறைந்த விலையில் கிடைக்கும். எப்படி இது சாத்தியம் என்று கவனித்தால், ஒரு பொருளை எடுத்தால் அதில் அவர்களின் உற்பத்தி கோடிக்கணக்கில் இருக்கும். 100 பொருளை தயாரிக்க தேவைப்படும் முதலீட்டிற்கும் 1000 பொருளை தயாரிக்க தேவைப்படும் முதலீட்டிற்கும் அதிக வித்தியாசம் இருக்காது. நம்முடைய பிரச்சனை இங்கே தரம் மற்றும் விலையில் வந்து நின்றுவிடும். ஆனால் சீனர்களின் பொருட்கள் உலக தரத்திலும் குறைந்த விலையிலும் இருப்பதால், உலக அளவில் வரவேற்கப்பட்டு விற்கப்பட்டுவிடுகிறது. அவர்களின் தயாரிப்பும் அதிகம் அதுனுடைய முதலீடும் குறைவாக உள்ளாது. எடுத்துக்காட்டாக,  துணி, மற்றும் ப்ளாஸ்டிக் பொருட்களை சொல்லலாம்.

உற்பத்தி ஏற்றுமதி தவிர்த்து, நம் அந்நிய நாட்டு தொழில் சார்ந்த கொள்கையை இன்னமும் எளிமை படுத்தி, முதலீடுகளையும் அதிகப்படுத்த வேண்டும். அந்நிய நாட்டு முதலீகளும் ஊக்குவிப்பும் எல்லா துறைகளிலுமே முக்கியத்துவம் வாய்ந்தது, அந்நிய முதலீடு என்றாலே அதற்கு முக்கிய தேவை நிரந்தரமான அரசாங்கம். அதன் அடிப்படையில் தான் அந்நிய முதலீடுகள் ஆரம்பிக்கின்றன. அரசாங்கம் அடிக்கடி மாறுவதும் அதனால் நம் வெளிநாட்டு கொள்கைகள்  மாறுவதும் மற்ற நாட்டவர் நம் நாட்டில் முதலீடு செய்ய தயங்குகிறார்கள். நிரந்ததரமான அரசாங்கம் என்பது சாத்தியம் இல்லை என்றாலும், ஆட்சிக்கு வந்தால், சில குறிப்பிட்ட வருடங்கள் அவர்கள் தான் தொடரவேண்டும் என்று இருந்தால் கூட, தேவையற்ற தேர்தல், அதற்கான சதித்திட்டங்கள், பிரச்சனைகள் தவிர்க்கப்படும்.  அத்தோடு, ஆட்சியாளர்களின் கை அதிகம் ஓங்காமல் இருக்கவும் கட்டுப்பாடுங்கள் இருக்கவேண்டியது அவசியம் ஆகிறது.

அந்நிய முதலீடுகளை அதிகப்படுத்துவதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கப்பெறும். பண வரத்து புழக்கம் அதிகமாகும். இதில் குறிப்பிட்டு கவனிக்க வேண்டியது, அந்நிய நாட்டு முதலீடுகள் எளிமையாக இருந்தாலும், நம் பிடி அதில் இருக்க வேண்டும். ரொம்பவும் வளைந்து கொடுத்தாலும் திரும்பவும் அவர்கள் நம்மை ஆள நாமே வசதி செய்துக்கொடுப்பதாக ஆகிவிடும். அந்நிய முதலீட்டு கொள்கைகள் சிலவற்றை உள்நோக்கி பார்க்க தனியாக தான் பதிவிட வேண்டும்.

தொடரும்...

அணில் குட்டி அனிதா : என்னது தொடருமா? அம்மணி போன எம்.பி தேர்தல் முடிஞ்சவுடனே எழுதினீங்க போல இது... இதையே இப்பத்தான் போஸ்ட் பண்றீங்க. .அப்ப அடுத்தது...??? .. ஆண்டவா..... ஆ...

பீட்டர் தாத்ஸ் : Our goals can only be reached through a vehicle of a plan, in which we must fervently believe, and upon which we must vigorously act. There is no other route to success.

படம் : நன்றி கூகுல்