ரொம்ப நாட்களாக சமையலையும் பதிவுல சேர்க்க வேண்டும் இருந்தேன், சமையல் இல்லாமல் நாம் இல்லை. அடிக்கடி உடல் நலமின்றி டாக்டரிடம் போவதற்கு பதில், நல்ல சாப்பாட்டை சாப்பிட்டாலே போதும் என்று என் ஆயா அடிக்கடி சொல்லுவார்கள்.
பத்மாவதி அம்மாள்’ என்னுடைய ஆயா,(அப்பாவின் அம்மா) அவர்களுடைய சமையலை சாப்பிட தவம் செய்து இருக்கவேண்டும். சமையல் மட்டுமே அல்ல, அதை மற்றவர்கள் வயிறு நிறைய சாப்பிட வைப்பதிலும் அவருக்கு நிகர் அவரே. மனசு நிறைய, சாப்பிடுபவர்கள் நல்ல உடல் நலத்துடன் நல்லபடியாக இருக்கவேண்டும் என்று பரிமாறுவார்கள். அவர்களிடம் சாப்பிட்ட உடம்பு மற்றவர்களிடம் இருந்து தனியாக நம்மை காட்டும். என் ஆயாவின் சமையலை சாப்பிடவே சொந்தக்காரர்களும், நண்பர்களும் வீட்டுக்கு வருவதுண்டு.
என்னுடைய ஆயாவிற்கு என்று தனி கைப்பக்குவம் இருந்தது, என் அத்தைகளும், நானும் அவர்களிடம் தான் சமையல் கற்றுக்கொண்டோம், ஆனால் அவர்கள் செய்வது போன்ற ருசி எங்களது சமையலில் இல்லாதது மிக பெரிய குறையாக உள்ளது. சமையல் சொல்லி தரும் போது, சமையலை தவிர, உடன் என்ன வேலைகளை செய்யலாம், என்பதையும் சொல்லி தருவார்கள். கண் பார்த்து கை வேலை செய்யவேண்டும், யாரும் சொல்லிதராமேலேயே வேலை செய்ய பழக வேண்டும் என்று, கண்களால் பேசியே வேலை வாங்கும் திறமை அவர்களிடம் இருந்தது.
எனக்கு அவரின் சமையலில் பிடித்தது, அல்லது எனக்காக நான் விரும்பி சாப்பிடுவேன் என்பதற்காக அவர்கள் சமைக்கும் உணவு.
1. எல்லா வகை கீரையும்
2. வாழைக்காய் வருவல்
3. கத்திரிக்காய் பொறியல்
4. ரசம்
5. மீன் குழம்பு, (மீன் முள்’ளிற்கு பயந்து அதை சாப்பிடமாட்டேன்,ஆயா, ஆய்ந்து கொடுக்க கொடுக்க சாப்பிடுவேன். இன்னமும் எனக்கு மீன் ஆய்ந்து சாப்பிட தெரியாது, 1, 2 முறை முயற்சி செய்து தொண்டையில் மாட்டி பிரச்சனை ஆகி, அந்த பக்கமே தலைவைப்பதில்லை, சாப்பிடுவதையே நிறுத்திவிட்டேன்)
பொதுவாக எல்லோருக்கும் அவரின் எல்லா சமையலுமே பிடிக்கும், குறிப்பாக மீன் குழம்பு, ரசம்.. சான்ஸே இல்லை, இது வரை அப்படி யாருமே ருசியாக சமைத்தது இல்லை. வெறும் ரசமும், வாழைக்காய் வறுவலும் இருந்தால் போதும் உலகமே மறந்து போகும். சாப்பாட்டின் ருசியால் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்து இருந்தார்கள்.
பத்மா ஆயா எனக்கு கொடுத்த சில நல்ல குறிப்புகள் :-
1. தலைக்கு குளிக்கும் தினம், முடியை முடிந்துக்கொள்ளாமல் (முடியை விரித்து போட்டு) சமையல் அறைக்கு மட்டும் அல்ல, வீட்டிற்க்குள்ளேயும் வரக்கூடாது என்பார்கள். தலைமுடி சாப்பாட்டில் வந்துவிட கூடாது என்பதற்காக சொல்லுவார்கள். சமையல் செய்யும் போது தலைமுடி கட்டி இருக்கவேண்டும்.
2. சமையல் செய்யும் போது பேசக்கூடாது, சிலர் பேசும் போது வாயிலிருந்து எச்சில் தெறிக்கும். ஆனால் எச்சில் தெறிப்பது அவர்களுக்கே கூட தெரியாது. அது சமையல் பொருட்களில் படும், அதனால் பேசக்கூடாது என்பார்கள். சாமிக்கு படையல் வைக்கும் நாட்களிலும் எச்சில் படாமல் சமையல் செய்யவேண்டும், அதற்கும் இதே தான் –பேசக்கூடாது.
3. சமையல் செய்யும் போது நல்ல மனதுடன், நிதானுத்துடன் செய்யவேண்டும், அதாவது கோபமாக இருக்கும் போது சமைத்தால் அதன் ருசி நன்றாக இருக்காது என்பார். பிறரின் பசியை போக்கும் உணவு நல்ல மனதுடன், அவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சமைத்தால் நல்ல ருசியாகவும், பக்குவமாகவும் சமைக்க முடியும் என்பார்.
4. டிவி பார்த்துக்கொண்டு, அக்கம் பக்கம் இருப்பவர்களுடன் பேசிக்கொண்டும் சமைக்க கூடாது என்பார். சமையலில் பல்லி விழுந்தால் கூட நமக்கு தெரியாது சமையல் விஷமாகிவிடும், கவன குறைவால் சமையல் தீய்ந்து விடும், அல்லது அதிக நேரம் அடுப்பில் இருந்தால் அதன் ருசி மாறிவிடும் என்பார்.
5. எந்த வகை சமையல் செய்தாலும் அதற்கு தேவையான எல்லா பொருட்களும் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு தான் சமையலை தொடங்க வேண்டும், இல்லையென்றால், அதை வாங்கிவந்த பிறகே அந்த சமையலை செய்வார். சரி வெந்தயம் இல்லை, பரவாயில்லை என்று காரக்குழம்பு தாளிக்கவே மாட்டார்கள். ஏனென்றால் ஒவ்வொரு பொருள் சேர்ப்பதும் அது சாப்பாட்டிற்கு தனி ருசியும், சக்தியும் தரும் என்பதற்காகவே. அதனால் ஒன்று இல்லை, பரவாயில்லை என்று விட்டு விட்டு சமைக்க கூடாது என்பார்.
6. சமைத்த பாத்திரங்களுடனே பரிமாற எடுத்துசெல்லக்கூடாது. பரிமார தனிப்பாத்திரம் வைக்கவேண்டும்.
7. சாம்பார் கரண்டியை மற்ற உணவுகளில் போடக்கூடாது. கெட்டுவிடும்.
8. பால் காய்க்கும் பாத்திரங்களை வெயிலில் காயவைக்க வேண்டும். பொதுவாகவே பாத்திரங்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்த பிறகு தான் கவிழ்த்து வைக்கவேண்டும், இல்லையென்றால், பூச்சிகள் அண்டும் என்பார்.
9. சூட்டு உடம்புக்கார பெண்கள் இட்லி மாவை அவர்கள் கைவைத்து கரைக்க க்கூடாது. சீக்கிரம் புளித்துவிடும் என்பார்.
10. கீரை, மீன் குழம்பு போன்றவை சமைக்க தனித்தனி சட்டி வைத்து இருப்பார்கள். இதில் தனித்தனி என்றால் அசைவம், சைவம் வித்தியாசம் இல்லை. சட்டியின் டிசைன் அப்படி இருக்கும். கீரை கடையும் சட்டி உட்புறம் வரி வரியாக இருக்கும். ஆனால் மீன் குழம்பு செய்யும் சட்டி டிசைன் எதுவும் இல்லாமல் சாதாரணமாக இருக்கும்.
11. எப்போதுமே (அவர் இருந்த வரை) முழு சமையலுக்கும் நல்லண்ணெய் மட்டுமே உபயோகித்தார். நல்லெண்ணெய் உடலுக்கு குளிர்ச்சி மற்றும் தோற்றம் இளமையாக இருக்கும். அவருக்கு தலைமுடி 82 வயதிலும் நரை இல்லாமல் இருந்தது, இப்படி ஒரே எண்ணெய்யை பயன்படுத்தியது தான் அதற்கு காரணம் என்று எல்லோரும் சொல்லுவார்கள். அப்பளம் , வத்தல் பொறிக்க மட்டும் ரீபைன் ஆயில் உபயோகித்தார்.
எல்லாமெ எனக்கு அவர்கள் சொல்லிக்கொடுத்தது என்றாலும், 2, 3 ம் எனக்கு அவர் அடிக்கடி சொல்லும் உபதேசங்கள். நான் இருந்தாலே வீட்டில் சத்தம் அதிகமாக இருக்கும். ஏதாவது ஒரு விஷயத்தை பேசிக்கொண்டே இருப்பேன், வேகமாக வேறு பேசுவேன். அவர்களுக்கு வயதாகி விட்டது அல்லவா அதனால், சில சமயம் காதை மூடிக்கொண்டு, “பாப்பா எனக்கு நீ பேசவதை ஜீரணிக்க முடியவில்லை, காது வலிக்குது, கொஞ்சம் அமைதியா இரு” நீ பேசறதனால் நிறைய சத்து உடம்பை விட்டு போய்டும், அப்புறம் வேலை எப்படி செய்வே? “ என்பார்கள். எந்த வேலை செய்தாலும் அமைதியாக செய்”என்பார்கள்.
நிறைய பதிவுகளில் சொன்னது போன்று அதிவேக கோபம், பிடிவாதம் போன்ற குணங்கள் என் சொத்தாகி போனதால், நான் சமைக்கும் போது நெடி நிறைய வந்து அனைவருக்கும் தும்மல் வருகிறது என்று, என் குணத்தை மாற்ற சொல்லுவார்கள். “நல்ல பெண்மணி இவள் நல்ல பெண்மணி “ என்ற பாட்டை அடிக்கடி பாடி என்னை வெறுப்பேற்றுவார்கள்.
இன்று ஒரு இனிப்போடு “பத்மா’ஸ் கிட்சன் ” னில் சமையலை ஆரம்பிக்கலாம். இது என்னுடைய ஆயாவின் சமையல் இல்லை. அத்தையிடம் கற்றுக்கொண்டு, இப்போது அடிக்கடி ஓவன்’ ல் எளிதாக செய்ய கற்றுக்கொண்ட டிஷ்.
பத்மா’ஸ் கிட்சன் – 1. பீட்ரூட் ஹல்வா
பீட்ரூட் – 4 மீடியம் சைஸ் (துருவி, கப்’பில் அளந்து கொள்ளவும்)
சர்க்கரை – பீட்ரூட் அளவில், 3/4 அளவு (இனிப்பு வேண்டும் என்றால் அதிகமாக போட்டு க்கொள்ளலாம்)
ஏலக்காய் :- 1 (நுணுக்கியது)
நெய்:- 5 ஸ்பூன்
முந்திரி பருப்பு – 4-5 (சிறு துண்டுகளாக பொடித்து வைத்துக்கொள்ளவும்.)
1. ஓவனில் வைக்கும் கண்ணாடி/பீங்கான் பாத்திரத்தில் மைக்ரோ வேவ்’ 100 ல், 1.5 mins செட் செய்து நெய்யை ஊற்றி சூடு செய்யவும். பிறகு அதில் பொடித்த முந்திரி பருப்பை போட்டு 2-3 mins வைக்கவும்.
2. முந்திரியை நெய்யை வடிகட்டி எடுத்துவிட்டு, மீதமுள்ள நெய்யுடன் பீட்ரூட் துருவலை போட்டு – 4-5 mins வைக்கவும். நடுவில் ஒரு முறை ஓவனை நிறுத்தி கிளறி விடவும்.
3. பீட்ரூட் நன்றாக வதங்கி இருக்கும், இதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கி, திரும்பவும் 6-8 mins வைக்கவும். நடுவில் ஒரு முறை ஓவனை நிறுத்தி கிளறி விடவும்.
அவ்வளவு தான் பீட்ரூட் ஹல்வா ரெடி – ஓவனிலிருந்து எடுத்து, பரிமாற தட்டில் கொட்டி ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி பருப்பு தூவி பரிமாறவும். இதே போன்று கேரட் ஹல்வாவும் செய்யலாம். இதை சூடாகவும் சாப்பிடலாம், பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக்கியும் சாப்பிடலாம்.
அணில் குட்டி அனிதா:- ம்ஹீம்! வீட்டுல 2 பேரு கஷ்டபடறது பத்தாதுன்னு… இது வேற ஆரம்பிச்சிட்டாங்களா?.. நீங்க எல்லாம் இவங்க சமையலை படிக்கறதோட நிறுத்திக்கோங்க.. அவ்ளோத்தான் நான் சொல்லுவேன்……….அவங்க ஆயா சமைச்சத சாப்பிட்டு இவங்க என்னவோ நல்லாத்தான் இருக்காங்க. .ஆனா இவங்க செய்த சமையல சாப்பிட்டுட்டு இவிங்க வூட்டுக்காரரும், பையனும்… எப்படா விடுவு காலம் கிடைக்கும்னு ..வெயிடிங்ஸ்………..!! ரொம்ப யோசிக்காதீங்க.. நானும்தேன்……….
பீட்டர் தாத்ஸ்:- The secret of happiness is not in doing what one likes, but in liking what one does.
பத்மா’ ஸ் கிட்ச்சன்
Posted by : கவிதா | Kavitha
on 12:04
Labels:
பத்மா'ஸ் கிட்ச்சன்
Subscribe to:
Post Comments (Atom)
12 - பார்வையிட்டவர்கள்:
// எப்போதுமே (அவர் இருந்த வரை) முழு சமையலுக்கும் நல்லண்ணெய் மட்டுமே உபயோகித்தார். //
//அப்பளம் , வத்தல் பொறிக்க மட்டும் ரீபைன் ஆயில் உபயோகித்தார். //
:-))
Refining is the process of purification of a substance. எந்த எண்ணெய்யை வேண்டுமானலும் Refining செய்யலாம்.
guidelines for purchasing re-refined lubricating oil
www.epa.gov/cpg/products/lubricat.htm
:-))
நீங்கள் sun-flower oil ஐ பேச்சு வழக்கில் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
****
பாட்டிகளின் சமையல் எல்லாப் பேத்திகளுக்கும் சிறந்ததுதான். ஆனால் அந்தப் பாட்டியின் மாமியார் என்ன சொன்னரோ? நமக்குத் தெரியாது இல்லையா? :-))
எனது தாய்வழிப்பாட்டி கடினமான காட்டு வேலைகளுக்குச் செல்பவர். சமையல் ,ருசி , வகையறாக்கள் எல்லாம் விரும்பியதை தேர்வு செய்யும் நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே. தேர்வு செய்யும் வசதி இல்லாதவர்கள் கிடைத்ததை வைத்து ஏதோ செய்வார்கள். பாட்டியும் அப்படித்தான்.
நாங்கள் விடுமுறைக்குப் போகும்போது எங்களுக்காக அரிசிச் சோறு செய்வார். மற்ற அனைவருக்கும் (தாத்தா, மாமா ) கேப்பை அல்லது கம்மங்கூழ்தான். குழம்பு என்ற ஒன்றை எங்களுக்காக வைப்பார். தட்டாம் பயிரை வேக வைத்த நீரில் கத்தரிக்காயை போட்டு தாளித்து விட்டுவிடுவார். அதுதான் குழம்பு :-) அதுவே அவர் செய்யும் சிறந்த குழம்பு :-)
விடுமுறை கழித்து வீடு வந்தவுடன் எங்கள் அம்மாவிடம் பாட்டி "சீய்க்காப் பொடி குழம்பு" வைத்ததாகச் சொல்வோம்.
பாட்டி இல்லாவிட்டாலும் அந்த "சீய்க்காப் பொடி குழம்பு" நினைவுகள் இன்னும் வாசமடிக்கிறது.
உறவுகளை / பெரியவர்களை எதோ ஒரு வகையில் நினைவு வைத்துக் கொள்ள இப்படி நினைவுகள் உதவுகின்றன்.
தகவலுக்காக...
ஆலிவ் ஆயிலும் re-fined ஆக கிடைக்கிறது
http://www.hormel.com/templates/knowledge/knowledge.asp?catitemid=41&id=408
கஸ்டப்படு ஜிம் போகாமல் உடல் எடை குறைக்கலாம் :-)
//:-))
Refining is the process of purification of a substance. எந்த எண்ணெய்யை வேண்டுமானலும் Refining செய்யலாம்.
guidelines for purchasing re-refined lubricating oil
www.epa.gov/cpg/products/lubricat.htm
:-))//
நன்றி கல்வெட்டு,
1. சூரியகாந்தி மலரில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மட்டுமே இல்லை,
2. எனக்கு தெரிந்து பாமாயில்
3. வேற்கடலையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்.
4. தேங்காய் எண்ணெய்
பாமாயில் தவிர்த்து மற்றவைகளை செக்கில் வாங்குவார்கள். அது ரீபைன் எல்லாம் செய்யப்பட்டு இருக்காது. :)
//நீங்கள் sun-flower oil ஐ பேச்சு வழக்கில் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
//
ஆமாம் போல் இருக்கிறது..ஆனால் எனக்கு தெரியவில்லை, அவர் sun-flower oil தான் வாங்கினாரா என்று.!
மல்லாட்டை (வேற்கடலை) எண்ணெயாக கூட இருக்கலாமோ என்னவோ..??!! இப்போது போல் பாக்கெட், அல்லது கேன்னில் எண்ணெய் அவர் வாங்கி நான் பார்த்தது இல்லை. பாத்திரம்/பாட்டில் நாம் எடுத்து சென்று கேட்டு வாங்கவேண்டும்.
//பாட்டிகளின் சமையல் எல்லாப் பேத்திகளுக்கும் சிறந்ததுதான். ஆனால் அந்தப் பாட்டியின் மாமியார் என்ன சொன்னரோ? நமக்குத் தெரியாது இல்லையா? :-)) //
என் ஆயாவிற்கு மாமியார் இல்லை. தாத்தா அவரை திருமணம் செய்யும் போதே மாமியார் மாமனார் ஆயாவிற்கு இல்லை. :)
//விடுமுறை கழித்து வீடு வந்தவுடன் எங்கள் அம்மாவிடம் பாட்டி "சீய்க்காப் பொடி குழம்பு" வைத்ததாகச் சொல்வோம்.//
உலகத்திலியே சியக்காய் பொடியில குழம்பு சாப்பிட்டதாக சொன்னவர்கள் நீங்களாகதான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.. :)
//உறவுகளை / பெரியவர்களை எதோ ஒரு வகையில் நினைவு வைத்துக் கொள்ள இப்படி நினைவுகள் உதவுகின்றன். //
ம்ம்...உண்மை.. இன்னும் நிறைய அவர் சொல்லிக்கொடுத்தவை உள்ளன.. மறக்காமல் எல்லாவற்றையும் எழுதவேண்டும்.. :)
//தகவலுக்காக...
ஆலிவ் ஆயிலும் re-fined ஆக கிடைக்கிறது
http://www.hormel.com/templates/knowledge/knowledge.asp?catitemid=41&id=408//
நன்றி..பார்த்தேன்... ஆனா விலை ரொம்ப அதிகம் இல்லையா? அன்றாடம் பயன்படுத்தமுடியுமா தெரியவில்லை.. :(
//கஸ்டப்படு ஜிம் போகாமல் உடல் எடை குறைக்கலாம் :-) //
எடையை சரியா வைத்துக்கொண்டால் நோய் இல்லாமல் இருக்கலாம் இல்லையா?.. எனக்கு டாக்டர் கிட்ட போகவே பயம்.. அதான் எடைக்குறைக்க கஷ்டப்பட வேண்டியதாக இருக்கு.. :(..
அணில்குட்டி கூட சேர்ந்து நீங்களுமா? :)
சமையல் ஒரு கெமிஸ்ட்ரி தொழிற்சாலை. சமைப்பதில் பல அபாயங்கள் உள்ளன.
கண்மணி சொன்னார்கள் என்பதால், சட்டென்று, சமையறைக்குள் சென்று விடாதீர்கள். நல்ல துணையோடு போங்கள்.
இந்தியா போன்ற நம் நாட்டில், பெண்களுக்கு சமையல் கட்டு செய்கிற வன்முறை, மிகப்பெரிய வன்முறை.
என் தோழி ஒருவரின் சமையலை என் நண்பர்கள் பாராட்டி, பாராட்டி, இப்பொழுது என் தோழி ஆர்வமாய், சமையலைத் தவிர வேறு ஏதும் செய்வதில்லை. நல்ல தோழியை சமையலுக்கு பலி கொடுத்துவிட்டோம்.
இப்படி பேசி, பேசி, நானும் சமைக்க கற்றுக்கொண்டுவிட்டேன். இப்பொழுது, எனக்கான சமையலை நானே தான் செய்கிறேன். இப்பொழுது தெரியுமே. ஏன் இவ்வளவு வருத்தப்படுகிறேன் என!
முன்பு, செல்லமான தொந்தியுடன் 68 கிலோ இருந்தேன். பார்த்து, பார்த்து சமைத்து, 60 கிலோவாகி விட்டேன். இப்பொழுது, ஸ்லிம்மாக அழகாக இருக்கிறேன் என எல்லோரும் சொல்கிறார்கள். இன்னும் எவ்வளவு குறைய போகிறேனோ!
கவிதா என்பதற்கு பதிலாக, கண்மணி என்று சொல்லிவிட்டேன். பொறுத்தருள்க!
வாங்க நொந்தகுமார்,
நீங்க சமையல் செய்து நொந்தபோன குமார்' னு தெரியுது..:)
//கவிதா சொன்னார்கள் என்பதால், சட்டென்று, சமையறைக்குள் சென்று விடாதீர்கள். நல்ல துணையோடு போங்கள்//
அது சரி, இதை நீங்கள் யாருக்கு சொல்றீங்க.. படிக்க வந்தவங்க எல்லாருக்குமா.. இல்ல எனக்கா..இல்ல உங்களுக்கேவா?
//உலகத்திலியே சியக்காய் பொடியில குழம்பு சாப்பிட்டதாக சொன்னவர்கள் நீங்களாகதான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.. :)//
கல்வெட்டுக்கு சீயக்காய் குழம்பு அனுபவம்:-))
சீயக்காய்பொடி காபி நான் சாப்பிட்டு இருக்கிறேன் - பள்ளி-கல்லூரி நாட்களில் விடுமுறையில் உறவினர் வீட்டில் .
நரசுஸ்/பில்டர் காபி சுவையை அத்தையின் காபியில் எதிர்பார்த்து ஏனோதானோ லோக்கல் மதுரை காபி பொடியில் தயாரித்த காப்பித் தண்ணியாக வந்து சேரும்!
சீயக்காய்காபி என்று நிறையவே கலாய்வோம்!
ஹரிஹரன்,
//சீயக்காய்பொடி காபி நான் சாப்பிட்டு இருக்கிறேன் //
அட எங்க பாட்டி ரெசிப்பி உங்க அத்தைக்கு எப்படி தெரிஞ்சது :-))
குழம்பு ரெசிப்பியில் இருந்து காப்பி ரெசிப்பியை காப்பிரைட் இல்லாமல் காப்பியடித்தது குற்றம் :-))
I too hate when someone talks while I am cooking. It disturbs me. and that spoils my cooking.
Thanks.
//குழம்பு ரெசிப்பியில் இருந்து காப்பி ரெசிப்பியை காப்பிரைட் இல்லாமல் காப்பியடித்தது குற்றம் //
கல்வெட்டு,
இது சீயக்காய் food chain ப்ரான்ச்சைஸ் ரைட்ஸாக இருக்கும்னு நினைக்கிறேன் :-))
//அட எங்க பாட்டி ரெசிப்பி உங்க அத்தைக்கு எப்படி தெரிஞ்சது//
அவர்கள் வாழ்ந்த Choiceless economy தான் :-))
என்ன சொல்லுங்க அந்த சீயக்காய் காப்பி காலங்கள் தந்த ஹாலிடே உணர்வை இன்றைக்கு Starbucks Coffee Shop-ல் உணர முடிவதில்லை.
Affection outweigh taste ..Always!
//நீங்கள் யாருக்கு சொல்றீங்க.. படிக்க வந்தவங்க எல்லாருக்குமா.. இல்ல எனக்கா..இல்ல உங்களுக்கேவா?//
நீங்க, நான் எல்லாம் சமையலில் சீனியர்ஸ். நான் சொல்வது, உங்களுடைய குறிப்புகளை படித்துவிட்டு, ஆர்வமாக சமைக்க செல்பவர்களுக்கு.
சமையலில் பாட்டியம்மாவிடம் பயிற்சி எடுத்த நீங்க ஜீனியஸ். நான் ஜுனியர்.
உங்க குறிப்புகள் எனக்கு நன்றாகவே உதவக்கூடியவை.
சோறு போட்டவங்களுக்கு நன்றிக்கடன் பட்டதா சொல்வாங்க! நான் ரொம்ப நல்லவங்க! சோறு, குழம்பு, பொரியலுக்கு குறிப்புகள் கொடுத்தாலே நன்றியோடு நினைச்சு பார்க்கிறவன்.
Post a Comment