ரொம்ப நாட்களாக சமையலையும் பதிவுல சேர்க்க வேண்டும் இருந்தேன், சமையல் இல்லாமல் நாம் இல்லை. அடிக்கடி உடல் நலமின்றி டாக்டரிடம் போவதற்கு பதில், நல்ல சாப்பாட்டை சாப்பிட்டாலே போதும் என்று என் ஆயா அடிக்கடி சொல்லுவார்கள்.

பத்மாவதி அம்மாள்’ என்னுடைய ஆயா,(அப்பாவின் அம்மா) அவர்களுடைய சமையலை சாப்பிட தவம் செய்து இருக்கவேண்டும். சமையல் மட்டுமே அல்ல, அதை மற்றவர்கள் வயிறு நிறைய சாப்பிட வைப்பதிலும் அவருக்கு நிகர் அவரே. மனசு நிறைய, சாப்பிடுபவர்கள் நல்ல உடல் நலத்துடன் நல்லபடியாக இருக்கவேண்டும் என்று பரிமாறுவார்கள். அவர்களிடம் சாப்பிட்ட உடம்பு மற்றவர்களிடம் இருந்து தனியாக நம்மை காட்டும். என் ஆயாவின் சமையலை சாப்பிடவே சொந்தக்காரர்களும், நண்பர்களும் வீட்டுக்கு வருவதுண்டு.

என்னுடைய ஆயாவிற்கு என்று தனி கைப்பக்குவம் இருந்தது, என் அத்தைகளும், நானும் அவர்களிடம் தான் சமையல் கற்றுக்கொண்டோம், ஆனால் அவர்கள் செய்வது போன்ற ருசி எங்களது சமையலில் இல்லாதது மிக பெரிய குறையாக உள்ளது. சமையல் சொல்லி தரும் போது, சமையலை தவிர, உடன் என்ன வேலைகளை செய்யலாம், என்பதையும் சொல்லி தருவார்கள். கண் பார்த்து கை வேலை செய்யவேண்டும், யாரும் சொல்லிதராமேலேயே வேலை செய்ய பழக வேண்டும் என்று, கண்களால் பேசியே வேலை வாங்கும் திறமை அவர்களிடம் இருந்தது.

எனக்கு அவரின் சமையலில் பிடித்தது, அல்லது எனக்காக நான் விரும்பி சாப்பிடுவேன் என்பதற்காக அவர்கள் சமைக்கும் உணவு.

1. எல்லா வகை கீரையும்
2. வாழைக்காய் வருவல்
3. கத்திரிக்காய் பொறியல்
4. ரசம்
5. மீன் குழம்பு, (மீன் முள்’ளிற்கு பயந்து அதை சாப்பிடமாட்டேன்,ஆயா, ஆய்ந்து கொடுக்க கொடுக்க சாப்பிடுவேன். இன்னமும் எனக்கு மீன் ஆய்ந்து சாப்பிட தெரியாது, 1, 2 முறை முயற்சி செய்து தொண்டையில் மாட்டி பிரச்சனை ஆகி, அந்த பக்கமே தலைவைப்பதில்லை, சாப்பிடுவதையே நிறுத்திவிட்டேன்)

பொதுவாக எல்லோருக்கும் அவரின் எல்லா சமையலுமே பிடிக்கும், குறிப்பாக மீன் குழம்பு, ரசம்.. சான்ஸே இல்லை, இது வரை அப்படி யாருமே ருசியாக சமைத்தது இல்லை. வெறும் ரசமும், வாழைக்காய் வறுவலும் இருந்தால் போதும் உலகமே மறந்து போகும். சாப்பாட்டின் ருசியால் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்து இருந்தார்கள்.

பத்மா ஆயா எனக்கு கொடுத்த சில நல்ல குறிப்புகள் :-

1. தலைக்கு குளிக்கும் தினம், முடியை முடிந்துக்கொள்ளாமல் (முடியை விரித்து போட்டு) சமையல் அறைக்கு மட்டும் அல்ல, வீட்டிற்க்குள்ளேயும் வரக்கூடாது என்பார்கள். தலைமுடி சாப்பாட்டில் வந்துவிட கூடாது என்பதற்காக சொல்லுவார்கள். சமையல் செய்யும் போது தலைமுடி கட்டி இருக்கவேண்டும்.

2. சமையல் செய்யும் போது பேசக்கூடாது, சிலர் பேசும் போது வாயிலிருந்து எச்சில் தெறிக்கும். ஆனால் எச்சில் தெறிப்பது அவர்களுக்கே கூட தெரியாது. அது சமையல் பொருட்களில் படும், அதனால் பேசக்கூடாது என்பார்கள். சாமிக்கு படையல் வைக்கும் நாட்களிலும் எச்சில் படாமல் சமையல் செய்யவேண்டும், அதற்கும் இதே தான் –பேசக்கூடாது.

3. சமையல் செய்யும் போது நல்ல மனதுடன், நிதானுத்துடன் செய்யவேண்டும், அதாவது கோபமாக இருக்கும் போது சமைத்தால் அதன் ருசி நன்றாக இருக்காது என்பார். பிறரின் பசியை போக்கும் உணவு நல்ல மனதுடன், அவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சமைத்தால் நல்ல ருசியாகவும், பக்குவமாகவும் சமைக்க முடியும் என்பார்.

4. டிவி பார்த்துக்கொண்டு, அக்கம் பக்கம் இருப்பவர்களுடன் பேசிக்கொண்டும் சமைக்க கூடாது என்பார். சமையலில் பல்லி விழுந்தால் கூட நமக்கு தெரியாது சமையல் விஷமாகிவிடும், கவன குறைவால் சமையல் தீய்ந்து விடும், அல்லது அதிக நேரம் அடுப்பில் இருந்தால் அதன் ருசி மாறிவிடும் என்பார்.

5. எந்த வகை சமையல் செய்தாலும் அதற்கு தேவையான எல்லா பொருட்களும் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு தான் சமையலை தொடங்க வேண்டும், இல்லையென்றால், அதை வாங்கிவந்த பிறகே அந்த சமையலை செய்வார். சரி வெந்தயம் இல்லை, பரவாயில்லை என்று காரக்குழம்பு தாளிக்கவே மாட்டார்கள். ஏனென்றால் ஒவ்வொரு பொருள் சேர்ப்பதும் அது சாப்பாட்டிற்கு தனி ருசியும், சக்தியும் தரும் என்பதற்காகவே. அதனால் ஒன்று இல்லை, பரவாயில்லை என்று விட்டு விட்டு சமைக்க கூடாது என்பார்.

6. சமைத்த பாத்திரங்களுடனே பரிமாற எடுத்துசெல்லக்கூடாது. பரிமார தனிப்பாத்திரம் வைக்கவேண்டும்.

7. சாம்பார் கரண்டியை மற்ற உணவுகளில் போடக்கூடாது. கெட்டுவிடும்.

8. பால் காய்க்கும் பாத்திரங்களை வெயிலில் காயவைக்க வேண்டும். பொதுவாகவே பாத்திரங்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்த பிறகு தான் கவிழ்த்து வைக்கவேண்டும், இல்லையென்றால், பூச்சிகள் அண்டும் என்பார்.

9. சூட்டு உடம்புக்கார பெண்கள் இட்லி மாவை அவர்கள் கைவைத்து கரைக்க க்கூடாது. சீக்கிரம் புளித்துவிடும் என்பார்.

10. கீரை, மீன் குழம்பு போன்றவை சமைக்க தனித்தனி சட்டி வைத்து இருப்பார்கள். இதில் தனித்தனி என்றால் அசைவம், சைவம் வித்தியாசம் இல்லை. சட்டியின் டிசைன் அப்படி இருக்கும். கீரை கடையும் சட்டி உட்புறம் வரி வரியாக இருக்கும். ஆனால் மீன் குழம்பு செய்யும் சட்டி டிசைன் எதுவும் இல்லாமல் சாதாரணமாக இருக்கும்.

11. எப்போதுமே (அவர் இருந்த வரை) முழு சமையலுக்கும் நல்லண்ணெய் மட்டுமே உபயோகித்தார். நல்லெண்ணெய் உடலுக்கு குளிர்ச்சி மற்றும் தோற்றம் இளமையாக இருக்கும். அவருக்கு தலைமுடி 82 வயதிலும் நரை இல்லாமல் இருந்தது, இப்படி ஒரே எண்ணெய்யை பயன்படுத்தியது தான் அதற்கு காரணம் என்று எல்லோரும் சொல்லுவார்கள். அப்பளம் , வத்தல் பொறிக்க மட்டும் ரீபைன் ஆயில் உபயோகித்தார்.

எல்லாமெ எனக்கு அவர்கள் சொல்லிக்கொடுத்தது என்றாலும், 2, 3 ம் எனக்கு அவர் அடிக்கடி சொல்லும் உபதேசங்கள். நான் இருந்தாலே வீட்டில் சத்தம் அதிகமாக இருக்கும். ஏதாவது ஒரு விஷயத்தை பேசிக்கொண்டே இருப்பேன், வேகமாக வேறு பேசுவேன். அவர்களுக்கு வயதாகி விட்டது அல்லவா அதனால், சில சமயம் காதை மூடிக்கொண்டு, “பாப்பா எனக்கு நீ பேசவதை ஜீரணிக்க முடியவில்லை, காது வலிக்குது, கொஞ்சம் அமைதியா இரு” நீ பேசறதனால் நிறைய சத்து உடம்பை விட்டு போய்டும், அப்புறம் வேலை எப்படி செய்வே? “ என்பார்கள். எந்த வேலை செய்தாலும் அமைதியாக செய்”என்பார்கள்.

நிறைய பதிவுகளில் சொன்னது போன்று அதிவேக கோபம், பிடிவாதம் போன்ற குணங்கள் என் சொத்தாகி போனதால், நான் சமைக்கும் போது நெடி நிறைய வந்து அனைவருக்கும் தும்மல் வருகிறது என்று, என் குணத்தை மாற்ற சொல்லுவார்கள். “நல்ல பெண்மணி இவள் நல்ல பெண்மணி “ என்ற பாட்டை அடிக்கடி பாடி என்னை வெறுப்பேற்றுவார்கள்.

இன்று ஒரு இனிப்போடு “பத்மா’ஸ் கிட்சன் ” னில் சமையலை ஆரம்பிக்கலாம். இது என்னுடைய ஆயாவின் சமையல் இல்லை. அத்தையிடம் கற்றுக்கொண்டு, இப்போது அடிக்கடி ஓவன்’ ல் எளிதாக செய்ய கற்றுக்கொண்ட டிஷ்.

பத்மா’ஸ் கிட்சன் – 1. பீட்ரூட் ஹல்வா

பீட்ரூட் – 4 மீடியம் சைஸ் (துருவி, கப்’பில் அளந்து கொள்ளவும்)

சர்க்கரை – பீட்ரூட் அளவில், 3/4 அளவு (இனிப்பு வேண்டும் என்றால் அதிகமாக போட்டு க்கொள்ளலாம்)

ஏலக்காய் :- 1 (நுணுக்கியது)

நெய்:- 5 ஸ்பூன்

முந்திரி பருப்பு – 4-5 (சிறு துண்டுகளாக பொடித்து வைத்துக்கொள்ளவும்.)

1. ஓவனில் வைக்கும் கண்ணாடி/பீங்கான் பாத்திரத்தில் மைக்ரோ வேவ்’ 100 ல், 1.5 mins செட் செய்து நெய்யை ஊற்றி சூடு செய்யவும். பிறகு அதில் பொடித்த முந்திரி பருப்பை போட்டு 2-3 mins வைக்கவும்.

2. முந்திரியை நெய்யை வடிகட்டி எடுத்துவிட்டு, மீதமுள்ள நெய்யுடன் பீட்ரூட் துருவலை போட்டு – 4-5 mins வைக்கவும். நடுவில் ஒரு முறை ஓவனை நிறுத்தி கிளறி விடவும்.

3. பீட்ரூட் நன்றாக வதங்கி இருக்கும், இதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கி, திரும்பவும் 6-8 mins வைக்கவும். நடுவில் ஒரு முறை ஓவனை நிறுத்தி கிளறி விடவும்.

அவ்வளவு தான் பீட்ரூட் ஹல்வா ரெடி – ஓவனிலிருந்து எடுத்து, பரிமாற தட்டில் கொட்டி ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி பருப்பு தூவி பரிமாறவும். இதே போன்று கேரட் ஹல்வாவும் செய்யலாம். இதை சூடாகவும் சாப்பிடலாம், பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக்கியும் சாப்பிடலாம்.

அணில் குட்டி அனிதா:- ம்ஹீம்! வீட்டுல 2 பேரு கஷ்டபடறது பத்தாதுன்னு… இது வேற ஆரம்பிச்சிட்டாங்களா?.. நீங்க எல்லாம் இவங்க சமையலை படிக்கறதோட நிறுத்திக்கோங்க.. அவ்ளோத்தான் நான் சொல்லுவேன்……….அவங்க ஆயா சமைச்சத சாப்பிட்டு இவங்க என்னவோ நல்லாத்தான் இருக்காங்க. .ஆனா இவங்க செய்த சமையல சாப்பிட்டுட்டு இவிங்க வூட்டுக்காரரும், பையனும்… எப்படா விடுவு காலம் கிடைக்கும்னு ..வெயிடிங்ஸ்………..!!  ரொம்ப யோசிக்காதீங்க.. நானும்தேன்……….

பீட்டர் தாத்ஸ்:- The secret of happiness is not in doing what one likes, but in liking what one does.