நண்பர் சிறில், விடாது கருப்பு & பிசாசு குட்டி’ யும் என்னை எட்டுக்குள்ளே கூப்பிட்டு இருக்காங்க. இதில் சிறில் என்னை கூப்பிடாம அணிலை கூப்பிட்டு இருக்காங்க.. அணிலுக்கு ரொம்பத்தான் எல்லாரும் இடம் கொடுக்கிறார்கள்..ம்ம் பார்த்துக்கிறேன்...சரி.. எட்டுக்குள் போகலாம் வாங்க......

அணில் குட்டி அனிதா:- சிறில் அண்ணே..என்னை மதிச்சி கூப்பிட்டதோட, கவிதாவை நீங்க ஓரம் கட்டனீங்க பாருங்க. .அங்கத்தான் நீங்க நிக்கறீங்க..! அம்மணி என்னை விட்டுட்டு தனியா எழுதறாங்க. .எப்படி எழுதறாங்கன்னு பாக்கலாம்.. ஆனா....இங்க நான் பேசுறது உங்களுக்கு மட்டும் தான் கேக்கும்..அவங்களுக்கு கேக்காது சரியா........

1. பிறந்தது :- குடும்பத்திற்கே ஒரே பெண், குல விளக்கு என்று முன்பே ஒரு பதிவில் அணில் சொல்லி இருக்கிறது. பிறந்தது, வளர்ந்தது, (பள்ளி) படித்தது எல்லாம் விழுப்புரம். கல்லூரி சென்னை எத்திராஜ். தாத்தா, ஆயாவிடம் தான் வளர்ந்தேன். அதனால் நிறைய கட்டுப்பாடு. நடை, உடை, பழக்கவழக்கம், பேச்சு என்று எல்லாவற்றிலும் கட்டுப்பாடு. 

அணில்:- ஓ...கட்டுப்பாடா வளர்த்தப்பவே இவ்ளோ ஆட்டம் ஆடறீங்களா?. இன்னும் free ஆ வளத்து இருந்தா.. ஸ்ஸ்ப்பா.. பூமி தாங்காதுடா சாமி சரி சரி....மேல.......போங்க......!!

2.ஆர்வம்:- பொதுவாக எல்லாவற்றிலும் ஆர்வம் அதிகம். எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளவேண்டும், தெரிந்து கொள்ளவேண்டும் என்று விரும்புவேன். அதற்கான முயற்சியும் செய்வேன்.

அணில்:- ம்ம்ம் .....முயற்சி செய்யுங்க..அதுங்காக அடுத்துவங்க உசுர வாங்காதீங்க.......... சரி.. மேல சொல்லுங்க..

3.குணங்கள்:- எல்லாவற்றிலும் வேகம், அதனால் பொறுமை இன்மை, அதிவேக கோபம், நினைத்தை செய்து முடிக்க வேண்டும் என்ற பிடிவாதம், அடம், நிறைய பாசம் & அன்பு, தனித்தன்மையோட இருக்க வேண்டும் என்று நினைப்பேன். போராட்ட குணம் அதிகம், கிடைக்காதது, நடக்காதது, முடியாதது என்று எதுவும் இல்லைன்னு முழுசாக நம்புகிறேன். அதிகமா பேசிக்கிட்டே இருப்பேன். ரொம்ப அமைதியாகவும் இந்த பூனையும்.....மாதிரியும் சில சமயம் இருப்பேன். முகத்துக்கு நேராக பட்டேன்று எதையும் பேசிவிடுவேன். அதனால் அதிகமான பிரச்சனைகளையும் அனுபவித்து உள்ளேன். ஆனாலும் திருந்தவில்லை.

அணில்:- நீங்க திருந்தமாட்டீங்கன்னு சொல்லனுமா வேற, அதான் ஊரு உலகத்துல இருக்கற அத்தன பேருக்கும் தெரியுமே......!! ம்ம்..ம்ம்.............மேல.... மேல ....!!

4.பொழுதுபோக்கு:- இயற்கை,குளிர்ந்த நிலவு, இரவில் நட்சத்திரம் எண்ணுதல், மெல்லிய தென்றல், ரயில் பயணத்தில் சன்னல் ஓரம், கிராமத்து பச்சை, மழையில் சாரல், விடியற்காலை பனி, கூட்டமில்லாத கோயில், சாமியுடன் சண்டை, அடர்ந்த மரம், அணிலுடன் பேச்சு, குழந்தைகளுடன் விளையாட்டு, பாட்டு கேட்பது, பாடுவது, தெரிந்தவர் தெரியாதவர் யாராக இருந்தாலும் பேசிவிடுவது, சிரித்துவிடுவது, இதற்காக கணவரிடம் திட்டு வாங்குவது, வீட்டை சுத்தம் செய்வது, மண் கைவேலை பொருட்கள், மரப்பாச்சி பொம்மை, பழைய காலத்து டிசைனில் செய்யப்பட்ட மரப்பொருட்கள், மண் சொப்புகள், சில மணி நேர நிசப்தம், கூட்டமில்லாத கடைகள், அலை அதிகமில்லாத கடல், பரிசல் பயணம், நிலவின் ஒளியில் எனக்கு தோன்றும் கவிதைகள், பச்சை நிறம், கறுப்பின மக்கள், பெரிய கட்டிடங்கள், மரங்கள் சூழ்ந்த சாலை.......... (ஐயோ...இன்னும் நிறைய இருக்கே..)

அணில்:- ஆமா நாங்களே.........எப்படா நிறுத்துவீங்கன்னு காத்துக்கிட்டு இருக்கோம்..இதுல.. இன்னும் வேற..இருக்காமாம்.........எப்பவும். உங்களோட ஒரே காமெடி போங்க....:))))))))))))

5.உணவு:- உணவில் அதிக சிங்கினாதம். மிகவும் பிடித்த குறிப்பிட்ட உணவுகளை மட்டுமே சாப்பிடுவேன். சுவை இல்லையென்றால் தொடவே மாட்டேன். பிடிக்காத உணவுகள் என்பதை விட உடம்புக்கு ஒத்துக்கொள்ளாத உணவுகள் அதிகம். நண்பர்கள், சொந்தங்கள் வீட்டுக்கு செல்லும் போதோ, வெளி ஊர்களுக்கு, இடங்களுக்கு செல்லும் போதோ.. சாப்பாடு ஒரு பெரிய பிரச்சனை. நானே சமைத்தால் கூட ருசி இல்லையென்றால் சாப்பிடவே மாட்டேன்.

அணில்:- நீங்க தின்னா எங்களுக்கு என்ன தின்னாட்டி எங்களுக்கு என்ன.. இது எல்லாம் நாட்டுக்கு ரொம்ப முக்கியமா..... தாங்க முடியலடா சாமி............

6.விருப்பம்:- எல்லாவற்றிலுமே ரொம்ப செலெக்டிவாக இருப்பேன். இது தான் என்று முடிவு செய்த பிறகே செய்வேன். வாங்கும் பொருட்கள், பார்க்கும் சினிமா, நெருக்கமாக பழகும் மனிதர்கள், உடை, அணியும் நகைகள், உணவு என்று ஒரு முடிவுடன் இருப்பதால் எனக்கு நிறைய அமைவதில்லை என்றே சொல்லுவேன். காரணம் பிடித்தது இல்லையென்றால் வேறொன்றை மாற்றிக்கொள்ளாத என் பிடிவாதம்.

அணில்:- இது எல்லாம் உருப்படற கேஸ் இல்லன்னு நான் மட்டும் இல்ல எல்லாருமே முடிவு பண்ணியாச்சி.............ம்ஹீம் மேல......

7.உள்ளே-வெளியே:- பொதுவாக என்னை பார்ப்பவர்கள் மிகவும் சாது என்று நினைப்பதுண்டு. அதற்கு மாறாக இருப்பேன். அடுத்து நான் பேசுவதை வைத்து, ரொம்ப கடுமையான, சீரியஸான பெண் என்றும் நினைப்பார்கள். ஆனால் அப்படியில்லை.

அணில்:- ஸ்ஸ்ப்பாஆஆ..முடியலப்பா.. ஏங்க இவங்கல 8 போட கூப்பிட்டது யாரு? கவிதாவ ஒரு பாயிண்டு பேச சொன்னாவே...ஓவரா பேசுவாங்க.. இப்ப 8 பாயிண்டா.. அய்யோ.. எப்ப முடிப்பாங்களோ தெரியலையே....

8.லட்சியம்:- ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லமும், முதியோர் இல்லமும் ஆரம்பிக்க வேண்டும். தரமான கல்வியையும், அளவில்லாத அன்பையும் அவர்களுக்கு தரவேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. செய்வேன் என்று நம்புகிறேன்.

அணில் :- முதியோர் இல்லம்னா.. நீங்க தான கவிதா முதல் உறுப்பினர்...?...

பீட்டர் தாத்ஸ்:- The secret of joy in work is contained in one word-Excellence. To know how to do something well is to enjoy it.

எட்டுக்குள் அழைப்பவர்கள் :-
1. சிவகுமார்ஜி
2. சீனு
3. மங்கைஜி
4. மதுரா
5. உஷாஜி
6. நா.அன்ந்தகுமார்
7. தேகாஜி
8. கொத்ஸ்

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்