வெளி நாட்டில் உட்கார்ந்து கொண்டு, இந்தியாவின் மேல் மிகுந்த அக்கறை இருப்பது போல் பேசும் நம் நாட்டு இளைஞர்கள், ஏன் இங்கேயே இருந்து அதே அக்கறையுடன் இந்தியாவையும் , இந்தியநாட்டு மக்களையும் காப்பற்ற வேண்டியது தானே? படிக்கும் போதே எதற்கு வெளிநாட்டு கனவுகளோடு இருக்கிறார்கள்? ஏன் இந்தியாவில் அவர்களுக்கான வாய்ப்புகள் இல்லையா.? பணம் மட்டுமே பிரச்சனை என்றால், போய் சம்பாதித்து, உங்களின் தேவைகளை சுயநலமாக முடித்துக்கொள்ளுங்கள். அத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள். உங்களின் வாழ்க்கை உங்களின் குடும்பம், உங்களின் உழைப்பு, உங்களின் பணம். யார் உங்களை கேட்க போகிறார்கள்.?

ஆனால், அங்கே உட்கார்ந்து கொண்டு, இந்தியர்களுக்கும், இந்தியாவிற்க்கும் அறிவுரை சொல்லிக்கொண்டும், நக்கல், நையாண்டி செய்து கொண்டும் இருக்காதீர்கள். இந்தியா இப்படி இருக்கிறது, இந்தியாவிற்கு வயசாகி போச்சி, இந்தியாவில் தலைவர்கள் இப்படி ஆகிவிட்டார்கள் என்று ஆவேசமாக ஏன் ஏழுதவேண்டும். நீங்கள் சம்பாதிப்பது மட்டும் அல்ல, அதனால் ஒரு செளகரியமான வாழ்க்கைமுறையை அங்கு அனுபவிக்கிறீர்கள். அதனால் உட்கார்ந்த இடத்தில் இருந்து, ஒன்று என்ன, ஒரு நூறு அறிவுரைகளை இந்தியாவிற்கு உங்களால் சொல்ல முடியும். ஏதாவது செய்ய முடியுமா என்பது தான் கேள்வி?. உங்களுக்கு பொழுது போகவில்லை என்றால், அதே வெளிநாட்டில் நிறைய விஷயங்கள் இருக்கிறது அதை செய்யுங்கள்.

மேற்கண்ட இந்த கருத்தை நான் சொல்ல “நாகை சிவா” விற்கும் எனக்கும் ஒரு பனிப்போர் நடந்து கொண்டு இருக்கிறது. என்னை அவர் திருப்பி “இவ்வளவு அக்கறையாக MNC யில் வேலை பார்க்கும் நீங்க பேசக்கூடாது” என்று சொன்னார். அதற்கு அவரின் ‘பங்கு” சந்தோஷ் ஜால்ரா தட்டுகிறார். இருவருக்குமாக ஏன் MNC யில் வேலை பார்க்கிறேன் என்று சொல்ல வேண்டியுள்ளது.

MNC யின் வரவு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவை பொருத்தவரை வெளிநாட்டு தொழில் கொள்கைகளில் நிறைய பிரச்சனைகள் உண்டு. இந்தியாவிற்குள்ளே வேற்று மாநிலத்தில் ஒரு தொழிலை தொடங்கி செய்வது மிக சிரமம். கேரளா அதற்கு ஒரு உதாரணம். தொழிலதிபர் டாடா’ வென்று நினைக்கிறேன். “தெரியாமல் கால் வைத்து விட்டேன், அதனால், என்னுடைய ஒரு கால் செருப்பை கேராளாவில் விட்டுவிட்டு வர வேண்டியதாகிவிட்டது" என்று தன்னுடைய தொழில் நிறுவனத்தை பிரச்ச்னை காரணமாக அங்கே முடியபோது சொன்னதாக எனக்கு நினைவு. இப்போது நம் வெளிநாட்டு கொள்கைகள் ஓரளவிற்கு இளகியதாக இருந்தாலும், ஒரு வெளிநாட்டு கம்பெனி அத்தனை எளிதாக தொழில் செய்ய நம்முடைய Foreign Trade Policy எளிமையானதாக இல்லை. அதையும் மீறி பல வெளிநாட்டு கம்பெனிகள் இந்தியாவில் முதலீடு செய்ய காத்திருக்கின்றன. காரணம்,

மிக குறைந்த சம்பளத்தில் கிடைக்கும் வேலையாட்கள்
மிக குறைந்த முதலீடு
இரவு/பகல் நேர வித்தியாசத்தால் பணி விரைவில் முடிகிறது
இந்தியர்களின் - படிப்பு, திறமை, உழைப்பு

பொதுவாக அனுபவத்தின் மூலம் இந்திய கம்பெனிகளுக்கும், MNC களுக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்கிறேன்.

இந்திய கம்பெனி :-
1. மிக குறைந்த சம்பளம்
2. முதலாளி - தொழிலாளி வித்தியாசம் & அதிக இடைவெளி.
3. தனி மனித சுதந்திரம் இல்லை
4. வேலை தரம் குறைவு
5. அடிப்படை வசதி முதல், தேவையான வசதிகள் இல்லை
6. தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தல் குறைவு
7. முதலாளிகள் எப்போதும் கோடிஸ்வரர்கள், தொழிலாளிகள் எப்போதும் அன்றாடம் காய்ச்சிகள்

MNC
1. அதிகமான, மிக அதிகமான சம்பளம்
2. முதலாளி - தொழிலாளி வித்தியாசம் இல்லை, இடைவெளியும் இல்லை.
3. தனி மனித சுதந்திரம் உண்டு
4. வேலை தரம் மிக அதிகம்
5. எல்லா வசதிகளும் உண்டு
6. தொழில்நுட்ப வளர்ச்சியை உடனுக்குடன் பயன்படுத்துதல்
7. முதலாளிகள் எப்போதும் கோடிஸ்வரர்கள், தொழிலாளிகளும் வாழ்க்கையின் எல்லா அடிப்படை தேவைகளுடனும் வசதிகளுடனும் வாழ்கிறார்கள்.

இந்திய கம்பெனிகளில், முதலில் மிகவும் சம்பளம் குறைவு. அதற்கு அதன் முதலாளிகள் மட்டுமே காரணம். தான் மட்டுமே சம்பாதித்து வாழ்வை அனுபவிக்க வேண்டும், தனக்கு கீழ் வேலை பார்ப்பவர்கள் முன்னேற அவர்கள் விடுவதே இல்லை.
தனக்கு கீழ் வேலை செய்யும் தன்னைவிட குறைந்த சம்பளம் வாங்கும் ஒருவன், இரு சக்கர வாகனம் வாங்கி, அதே இரு சக்கர வாகனம் தன்னிடம் இல்லையென்றால் இவன் அவனை பார்த்து வெந்து போவான். இவர்களின் எண்ணமும், பக்குவமில்லாத அறிவும், வாழ்க்கை முறையும் இந்தியர்களின் பரம்பரை பழக்கமாகிவிட்டது.

முதலாளிக்கு எத்தனை லாபம் வந்தாலும், 10% , 20% வருடத்திற்கு சம்பளம் கூடம் அதுவும் நேரத்திற்கு கொடுக்கமாட்டார்கள், அவர்களிடம் போராட்டம் செய்து, அடவாடி செய்து, வேலை நிறுத்தம் செய்து வாங்கவேண்டும்.

அடுத்து, வேலைதரம். International Standard தேவையில்லை. Local Standard கூட இருப்பதில்லை. படித்து, இந்த வேலையை இப்படி தான் செய்ய வேண்டும் என்று சொல்லும் வேலை திறமை வாயந்தவர்கள் எல்லாம் இரண்டாம்பட்சம், முதலாளிக்கு, அறிவே இல்லையென்றாலும் கூஜா தூக்கும் சிலரால், வேலை தரம் என்பது சுத்தமாக இல்லாமல் இருப்பது தான் உண்மை.

அடுத்தது, வேலை செய்ய அடிப்படை வசதி - போதுமான காற்று, வெளிச்சம், மேஜை, நாற்காலி, வேலை செய்ய தேவையான சாதனங்கள், தண்ணீர், சாப்பாடு, கழிவறை (ஆண், பெண் என்று தனித்தனியே), சாப்பிடும் அறை, ஓய்வெடுக்கும் அறை, first Aid Facility, பாதுகாப்பு (security) போன்ற எல்லா வசதிகளும் எல்லா இந்திய கம்பெனிகளில் இருப்பதில்லை. நான் வேலை பார்த்த அத்தனை இந்திய கம்பெனிகளிலும் கழிவறை பெரிய பிரச்சனையாக எனக்கு இருந்து இருக்கிறது. ஆண் பெண் தனி கழிவறைகள் இல்லாமல், அதனால் தொற்று நோய் பரவி நான் பாதிக்கவும் பட்டிருக்கிறேன். அதை பலமுறை நேரடியாக, மருத்துவ குறிப்புகளுடன் என்னுடைய மேலாளாரிடம் சொல்லியும் அதற்கான எந்த மாற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இந்த விஷயத்தை அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. நான் மட்டும் இன்றி எல்லா பெண்களுமே கழிவறை தொற்றுவியாதியால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அறிந்து கொண்டேன். ஆனால் அவர்கள் கூச்சப்பட்டு கொண்டு வெளியில் சொல்லுவதில்லை. இப்படி அடிப்படை வசதிகள் இல்லாததால் உடல் மட்டும் இல்லை மனமும் நாள் ஆக ஆக வியாதியால் தொற்றிக்கொள்ளும். எடுத்துக்காட்டு - 1. தேவையான வெளிச்சமும், காற்றும் இல்லையென்றால் இயற்கையாக கொஞ்சம் கொஞ்சமாக நம் மனநிலை பாதிக்கப்படும். 2. நாம் தினமும் அமர்ந்து வேலை செய்யும் நாற்காலி, சரியாக இல்லாவிட்டால் முதுகு, இடுப்பு, கழுத்து வலி வரும். இது வாழ்நாள் முழுதும் நம்மின் ஒரு நிரந்தர வலியாக மாறிப்போகும். பலருக்கு நாம் ஏன் எதற்காக பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்று கூட தெரியாது.

அடுத்து வேலை செய்ய தேவையான அடிப்படை சாதனங்கள். பேனாவிலிருந்து, வேலை சம்பந்தமான software வரை எல்லா வசதிகளும் செய்து கொடுப்பதில்லை. என்ன கொடுக்கிறார்களோ அதை வைத்து க்கொண்டு, அவர்கள் எதிர்பார்க்கும் வேலையை செய்து கொடுக்கவேண்டும். அதில் கண்டிப்பாக அவர்கள் தரத்தை எதிர்பார்ப்பதில்லை. வேலை முடிந்தால் போதும். தரம் இங்கு பெரிதாக பேசப்படுவதில்லை.

தொழில்நுட்ப வளர்ச்சியும், பயன்படுத்தலும் - உலகம் எங்கேயோ போய் கொண்டு இருக்கிறது. இன்னமும் நோட்டு புத்தகம் வைத்து வேலை மற்றும் கணக்கு எழுதும் இந்திய கம்பெனிகள் ஏராளம். IT, தவிர, மற்ற நிறுவனங்களில் கம்பியூட்டர் என்பது கேள்வி குறியே. பள்ளி அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள், ரயில்வே, தனியார் நிறுவனங்கள், வங்கிகள் எங்குமே தேவையான, அல்லது நடைமுறையில் உள்ள தொழில்நுட்ப வசதியை கூட பயன்படுத்தவதில்லை. அதற்கான ஆர்வமும் அவர்களிடம் இல்லை. (சென்னையை மட்டும் கவனிக்காதீர்கள், தமிழ்நாட்டில் பிற இடங்களை தயவுசெய்து பாருங்கள்). என் சொந்த அண்ணன் (Railway Guard) வேலை பார்க்கும் “விழுப்புரம் சந்திப்பு” ரயில்வே நிலையத்தில், அவர்களுக்கு என்று ஒரே ஒரு கம்பியூட்டர் உள்ளது. அதுவும் யாரும் உபயோகப்படுத்துவது இல்லை. உபயோகிக்க அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க படவில்லை. நோட்டுப்புத்தகங்களில் தான் எல்லா வேலைகளையும் அவர்கள் செய்து வருகிறார்கள். இப்போது மொபைல் இருப்பதால் என்னுடைய அண்ணனை அவசர வேலைக்கு அதன் மூலம் அழைக்கிறார்கள். இல்லையென்றால், ஒரு ஆளை வீட்டுக்கு அல்லது அவர் இருக்கும் இடம் தேடி அனுப்பி, “உங்களுக்கு இன்றைக்கு இந்த வண்டியில் வேலை” என்று சொல்லும் அளவிற்குதான் நாம் வளர்ந்து இருக்கிறோம்.

கடைசியாக ஒரு பெண்ணாக நான் உணர்ந்த சுதந்திரம், முதலாளிகள் (ஆண்கள்), தேவையில்லாமல் அங்கே இங்கே என்று பார்ப்பது இல்லை, தனியாக அவர்கள் அறைக்கு அழைத்து தேவையில்லாமல் வழிவதோ, சிரித்துக்கொண்டே மேலே கை வைக்க முயற்சி செய்வதோ இல்லை.

MNCயில் சேர்ந்த புதிதில் வேலையை செய்ய சற்று சிரமாக இருந்தது. ஏனென்றால் அவர்கள் எப்போதும் எதிர்பார்க்கும் வேலை தரம் 100%. செய்யும் அத்தனை வேலைகளிலும் 100% தரம் இருக்க வேண்டும். திறமைக்கும், படிப்பிற்கும் வாய்ப்பளித்து, கை நிறைய சம்பளம் கொடுத்து, அடிப்படை வசதிகள் அத்தனையும் செய்து கொடுத்து, சக மனிதனை சமமாக நினைத்து நடத்தும் MNC களில் வேலை செய்வது சுலபமாக உள்ளது. மேலும், தரமாக வேலை செய்ய கற்றுக்கொள்ள முடிகிறது, சுதந்திரமாக இருக்கமுடிகிறது. இங்கே உள்ள ஒரே பிரச்சனை கலாசார சீர்கேடு. அதை நானே எழுதி இருக்கிறேன். ஆனால், அதை நல்ல முறையில், நமக்கும் நம் கலாசாரத்திற்கும் கேடு வராமல் நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் இடம் தேடி வந்து இருக்கும், நமக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி நம் வேலை தரத்தையும், அறிவையும், தனி நபர் வருமானத்தையும் பெருக்கிக்கொள்ள வேண்டும்.

MNCயில் வேலை செய்வதால் நான் வெளிநாட்டில் வேலை செய்வதாக அர்த்தம் இல்லை, என்னுடைய இடத்தில், வேற்று நாட்டுக்காரர், என்னுடைய நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு, கொள்கைகளுக்கு கட்டுப்பட்டு கம்பெனி நடத்துகிறார். அதில் தான் வேலை செய்கிறேன். அவரின் நாட்டை தேடி சென்று அவருக்கு சேவகம் செய்யவில்லை. மேலும் அங்கே உட்கார்ந்து கொண்டு.. இந்தியர்களுக்கு இது இல்லை அது இல்லை என்று அளக்கவும் இல்லை. வெளிநாடு வாய்ப்பு கிடைத்து ஒரு வேலை சென்றாலும், என் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு இருப்பேனே அன்றி, இதுபோல் உபதேசம் செய்து கொண்டு இருக்கமாட்டேன்.

அணில் குட்டி அனிதா:- ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்பா!! முடியல........... அம்மணியோட ஆட்டத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சி.. புள்ளைங்க பாவம் எங்கேயோ செவனேன்னு இருக்குங்க. .அதுங்கள கூட்டுவச்சி இவ்வளா.................ஆம் பெரிய லக்சர் வுட்டு இருக்காங்க.. பாவம் என்ன பண்ண போறாங்களோ தெரியல.. (புலி அண்ணே காத குடுங்க.. அம்மணிய வுடாதீங்க.. நல்லா புராண்டிவிடுங்க.....ரத்தம் வரணும் சரியா?, தல சந்தோஷ்க்கு சொல்லவே வேணாம்.. நான் பேசினாவே ஓவராத்தான் டான்ஸ் ஆடுவாரு .......ம்ம்..பாக்கலாம் ..!.

அம்மணிக்கு வேல வெட்டி இல்லன்னு நல்லா தெரியுது..... “சும்மா இருக்கற சங்கை எவ(ளோ)னோ ஊதி கெடுத்தானாம்..... “ உங்களுக்கு எல்லாம் இந்த பழமொழிக்கு அர்த்தம் இப்ப சரியா புரிஞ்சி இருக்குமே...!! ம்ம் ..அதே தான்........!! வாங்க அப்படி ஓரமா உக்காந்து அம்மணி ஒதை வாங்கறத பாக்கலாம்........ரொம்ப நாள் ஆச எல்லாருக்கும் நெரவேற போகுது.....:))))))

பீட்டர் தாத்ஸ்:- Pursue one great decisive aim with force and determination.