ஏதோ ஒரு நல்ல காரணத்துக்காக தான் பெண்களை தெருவுடன் விட்டு செல்கிறார்கள் என்றால் அது என்ன?.. எங்களது வீட்டில் சொல்லப்பட்ட விளக்கம்- பெண்கள் மிகவும் மென்மையானவர்கள், அவர்களால் சுடுக்காட்டில் நடப்பவைகளை பார்த்து மனம் தாங்கமுடியாது..செய்ய வேண்டிய வேலைகளை கவனிப்பார்களா..இல்லை பெண்கள் அழுவதை பார்த்து கொண்டும், சமாதானம் செய்து கொண்டும் இருப்பார்களா?. அதனால் தான் வீட்டுடனே அவர்களை நிறுத்தி விடுகிறார்கள் என்பதே
இந்த விளக்கம் சரியானதா என எப்பவும் ஒரு கேள்வி. ?.. பெண்கள் மென்மையானவர்கள், அதிக துக்கத்தை தாங்கமாட்டார்கள் என்றால், கிறுத்துவ மதத்தில் துக்கத்தில் கடைசி வரை பெண்கள் இருக்கிறார்களே?.. மதத்திற்கு மதம் பெண்களின் இயல்பான குணம் மாறி போகிறதா?.. இதற்கு அவர்கள் சிறு வயது முதலே அப்படியே வளர்க்கப்படுகிறார்கள், அதனால் அது அவர்களுக்கு பழகி விடுகிறது என்றே வைத்து கொள்வோம். ஏன் நாமும் அப்படி பழகக்கூடாது... ஏன் தெருவுடன் நிற்க வேண்டும்.
பல காரணங்களை யோசிக்கும் போது...தோன்றிய ஒன்று....எல்லா ஆண்களும், பெண்களும் சுடுகாடு வரையில் சென்றுவிட்டால், வீட்டை சுத்தம் செய்வது யார்?.. இதற்காக பெண்கள் வீட்டோடு நின்று விட்டால்.. இந்த வேலைகள் தானாக நடக்கும் என்று இப்படி நடைமுறை படுத்தி இருப்பார்களோ..?! என்பது தான்.
இந்த பதிவிற்கு முக்கிய காரணம், எங்களது அடுக்கு மாடி குடியிருப்பில், ஒரு நண்பர் மாரடைப்பால் திடீரென்று காலமாகிவிட்டார். அவருக்கு ஒரே மகள் (22 வயது), அவருடைய உறவினர்கள், அந்த பெண்ணின் சித்தப்பா மகனை எல்லா காரியங்களையும் செய்ய சொல்ல, அந்த பெண், தன் உறவினர்களிடம், என் அப்பாவிற்கு எல்லாம் நான் தான் செய்வேன் என வாதம் செய்து எல்லாமே அவள் தான் செய்தாள். கடைசியாக சுடுக்காட்டிற்கு அவள் வரக்கூடாது என உறவினர்கள் மறுக்க, அவர்கள் சொன்ன காரணம் அவள் அங்கு வந்தால் பயந்து போவாள் என்பதே. ஆனால் அந்த பெண்ணோ..”அவர் என் அப்பாங்க..நான் எப்படி அவரை பார்த்து பயப்படுவேன்..நான் தான் அவருக்கு சுடுக்காட்டிலும் எல்லாம் செய்வேன்” என்று விடாப்பிடியாக சென்று செய்து விட்டு வந்தாள்.
இது சென்னை போன்ற நகரங்களில் சாத்தியமானது.. இதுவே..நம் கிராமங்களில் சாத்தியப்படுமா?.. பெண்கள் இப்படி செய்ய அனுமதிப்பார்களா..?!!
தன் சொந்த அப்பாவிற்கு கடைசியாக செய்யும் ஈமச்சடங்கை க்கூட ஒரு பெண் போராடித்தான் செய்ய வேண்டி உள்ளது என்பதை நினைக்கும் போது நம் சமுதாயத்தின் பார்வைகளும், பழக்கவழக்கங்களும் எப்போது மாறுமோ என வேதனையாக இருக்கிறது....
அணில் குட்டி அனிதா:- ஏன் கவிதா நீங்க வேதனை படறீங்க.. உங்களுக்கு என்ன பையன் தானே....ஆனா நான் ஒன்னு..சொல்றேன்.. நீங்க மூச்சு விட மறந்த பிறகு..உங்கள பாக்கவர அத்தனை ladies ஐயும், வேன், கார், ஆட்டோ ன்னு வச்சி எப்படியாவது உங்கள எரிக்கிற இடத்துக்கு கூட்டிட்டி வரது என் பொறுப்பு....அது சரி.....நீங்க எப்ப மூச்சு விட மறப்பீங்க.. அதுக்காக....ரொம்ப நாள் எடுத்துக்காதீங்க சரியா?!!!
பெண்கள் சுடுக்காட்டிற்கு செல்வதில்லை...ஏன்?
Posted by : கவிதா | Kavitha
on 14:08
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
43 - பார்வையிட்டவர்கள்:
//வீட்டை சுத்தம் செய்வது யார்?..// என்ன காரணம் என தெளிவாக தெரியாவிட்டாலும் தெரிந்து கொண்டு(நான் நினைப்பது சரிதானா என தெளிவுபடுத்தி) உங்களுக்கு சொல்கின்றேன். ஆனால் நீங்கள் சொல்லும் காரணத்தை நான் ஒத்துக் கொள்ளவில்லை.
ஒரு சில இடங்களில் பெண்கள் எரித்தற்கு மறுநாள்(பால்) நடக்கும் நிகழ்வுகளுக்கும் வருவதை பார்த்து உள்ளேன். அவர் அவர்களின் குடும்ப பழக்கத்தை கொண்டு மாறுபடும் என எண்ணுகின்றேன்.
//இதுவே..நம் கிராமங்களில் சாத்தியப்படுமா//
சென்னையில் மட்டும் இல்லை ஒரு சில இடங்களில் இது நடந்து கொண்டு தான் இருக்கின்றது. பெரும் அளவில் நடப்பது இல்லை என்பது உண்மை தான். இதை பெரும்பாலும் எதிர்ப்பது பெண்கள் தான். மாதர் சங்கங்கள் இது போன்ற பிரச்சனையில் கவனம் செலுத்தலாம்.
//வீட்டை சுத்தம் செய்வது யார்?..// என்ன காரணம் என தெளிவாக தெரியாவிட்டாலும் தெரிந்து கொண்டு(நான் நினைப்பது சரிதானா என தெளிவுபடுத்தி) உங்களுக்கு சொல்கின்றேன். ஆனால் நீங்கள் சொல்லும் காரணத்தை நான் ஒத்துக் கொள்ளவில்லை//
நன்றி சிவா, எனக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ எனத்தோன்றியது.. சரியா என எனக்கும் தெரியாது...
//இதை பெரும்பாலும் எதிர்ப்பது பெண்கள் தான். மாதர் சங்கங்கள் இது போன்ற பிரச்சனையில் கவனம் செலுத்தலாம்.//
எதை பெண்கள் எதிர்கிறார்கள்..?.. புரியவில்லை..
//வேன், கார், ஆட்டோ ன்னு வச்சி எப்படியாவது உங்கள எரிக்கிற இடத்துக்கு கூட்டிட்டி வரது என் பொறுப்பு....அது சரி.....நீங்க எப்ப மூச்சு விட மறப்பீங்க.. அதுக்காக....ரொம்ப நாள் எடுத்துக்காதீங்க சரியா?!!!//
என்ன கவிதாக்கா இந்த அணிகுட்டிய நான் என்னமோன்னு நெனச்சேன் ! கொஞ்சம் ஆட்டம் ஜாஸ்த்திதான் போல !! :))
இந்த பழக்கம் எல்லாம் நம்ம குடும்பத்தில் கிடையாது. இந்த முறை செய்ய வேண்டும் அந்த முறை செய்ய வேண்டும் என கூறுவதும்.
பெண்கள் சடங்கு என பல பிற்போக்கான சடங்குகளை இன்னமும் விடாமல் இருப்பது பெரும்பாலும் பெண்கள் தான் என்பது என் கருத்து. அதை தான் சொல்ல வந்தேன்.
//இந்த முறை செய்ய வேண்டும் அந்த முறை செய்ய வேண்டும் என கூறுவதும்.பெண்கள் சடங்கு என பல பிற்போக்கான சடங்குகளை இன்னமும் விடாமல் இருப்பது பெரும்பாலும் பெண்கள் தான் என்பது என் கருத்து. //
ம்ம்..நானும் கவனித்திருக்கிறேன்.. ஆண் இறந்து போனால், அவரின் மனைவிக்கு செய்யும் சடங்குகள் பெண்களால் மட்டுமே செய்யபடுகிறது.. அதை வேண்டாம் என பெண்களும் சொல்வதில்லை, ஆண்களுக் சொல்வதில்லை..
கவிதா, உங்க தலைப்பைப் பார்த்து விட்டு வந்தேன். நீங்கள் சொல்வது போலக் கிராமத்தில் எல்லாம் கிடையாது. என் பெரிய மாமனார் (மாமனாரின் அண்ணா) இறந்த சமயம் அவருக்குப் பிள்ளை இல்லை, முன்பே இறந்து விட்டார். ஒர் பெண்தான் உண்டு. ஆதலால் என் பெரிய மாமியார் தானேதான் சுடுகாடு சென்றுத் தன் கணவனுக்குக் கொள்ளி வைத்தார். இத்தனைக்கும் அது குக்கிராமம். மின்சாரம் கூட அந்த வருடம் தான் வந்திருந்தது. ஏன் பெண் வைக்கவில்லை என்றால் அப்போது அவர் கர்ப்பமாக இருந்தார். மேலும் சமீபத்தில் என் கடைசி நாத்தனார் கணவர் ஜனவரி 31-ம் தேதி இறந்த போது அவர்களுக்குக் குழந்தைகளே இல்லை. புரோகிதர் என் நாத்தனார் கொள்ளி வைக்கலாம், யாராவது கூட்டி வாருங்கள் என்று சொல்ல அவள் விரும்பவில்லை. அப்போதும் அவள் கையில் கொடுத்து வாங்கித் தான் அவள் மைத்துனர் செய்தார். சில சமயம் இந்த மாதிரி செய்வதற்குக் காரணம் பெண் கல்யாணம் ஆகிப் போகும் வீட்டில் பின்னால் காரியங்கள் செய்ய ஒத்துக் கொள்ள வேண்டும் அல்லவா? அவள் திருமணம் ஆகாத பெண்ணாக இருந்தால் கணவன் வீடு போய்க்கூடச் செய்யும் வசதி எப்படியோ, ஆதலால் வேண்டாம் என்று சொல்லி இருப்பார்கள். மேலும் குழந்தை இல்லாதவர்களுக்கு ஆண் குழந்தை இல்லாதவர்களுக்கோ இந்த மாதிரி மனைவி கையில் கொடுத்து இன்னொருவரை விட்டுச் செய்யச் சொல்வதின் காரணம் பின்னால் இது தொடரக்கூடாது. இவர்களுடன் முடியட்டும் என்றுதான். இங்கே சித்தப்பா பையன் தானே தனியாகச் செய்ததின் காரணம் பொறுப்பை வரும் நாட்களிலும் அவன் ஏற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கையில் இருக்கும். மற்றபடி ரொம்பப் பேர் பெண் போகக்கூடாது என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் எந்த சாஸ்திரமும் அப்படிச் சொல்லவில்லை. சுடுகாடு வரை கூடப் போய்க் காரியங்கள் முடித்துக் கொடுக்கப் பெண்கள் சென்னையிலேயே இருக்கிறார்கள். மஹாராஷ்டிராவில் பெண் புரோகிதர்கள் உண்டு. மேலும் துக்கத்தில் இருக்கும் அந்தப் பெண்ணை விட்டா வீடு சுத்தம் செய்யப்படும்? நம் சமூகம் இன்னும் அவ்வளவு மோசம் இல்லை.நான் எழுதினதில் உங்கள் மனம் புண்படும்படி இருந்தால் மன்னிக்கவும். எனக்குத் தெரிந்ததையும், பார்த்ததையும் குறிப்பிட்டேன்.
இதற்காகவெல்லாம் மூச்சு விட மறக்க வேண்டாம் கவிதா, வாழ்க்கை வாழ்வதற்கே.
பெண்கள் இடுகாட்டிற்குச் செல்வது, கிருத்துவ மதத்தினரைத் தவிர்த்து மற்ற பெரும்பாலான மதங்களில் கிடையாது. சாங்கியம் சம்பிரதாயம் என்று அந்தந்த சமூகத்தினர் பெண்களைத் தவிர்த்துவிடுகின்றனர். என்னதான் முற்போக்குத்தனமாக பேசும் பெண்கள் கூட, அத்தகையச் சூழலில், அவர்களின் கருத்துக்களை அனுசரித்துத்தான் செல்கின்றனர். இதனை ஒரு பிற்போக்குத்தனமான செயலாக கருத இயலாது. மேலும், அவர்களை அனுப்பாததற்கு வீட்டு வேலைகளைக் காரணமாக கூறுவதும் பொருத்தமாக இல்லை.
ஆனால், சென்னையில் ஒரு இடுகாடு இருவேறு பகுதிகளை இணைக்கிறது. ஆகையினால் பகல் நேரங்களில் பெண்கள் உட்பட இடுகாட்டிற்குள் நுழைந்துதான் மறுபுறம் செல்கின்றனர்.
//ஆனால், சென்னையில் ஒரு இடுகாடு இருவேறு பகுதிகளை இணைக்கிறது. ஆகையினால் பகல் நேரங்களில் பெண்கள் உட்பட இடுகாட்டிற்குள் நுழைந்துதான் மறுபுறம் செல்கின்றனர். //
நன்றி நாகு, ஆக பெண்களுக்கு இடுகாடு ஒன்றும் பயமில்லை என தெரிகிறது.. ஆனால் பகலில் எனவும் சொல்லியிருக்கிறீர்கள்...?!!
//என்ன கவிதாக்கா இந்த அணிகுட்டிய நான் என்னமோன்னு நெனச்சேன் ! கொஞ்சம் ஆட்டம் ஜாஸ்த்திதான் போல !! :)) //
ஆமா..ஜொள்ஸ்..வேலைக்கு சேர்க்கும் போது..இப்படி எல்லாம் ஆடல.. வரவர இது ஆட்டாம் தாங்கத்தான் முடியல.. என்ன செய்ய எனக்கும் வேற ஆள் கிடைக்கல..
முன்பெல்லாம், சுடுகாட்டின் இருபுறங்களிலும் வாயி ற்கதவுகள் இல்லாமல் இருந்தது. அதன் கா ரணமாக இரவு நேரங்களில், சமாதிகளை தற்காலிக பார்களாக எண்ணி ஆண்கள் சோமபானம் அருந்தி மகிழ்ந்தனர். பிற்பாடு, மாநகராட்சியினர் இரும்பு கதவுகளை அமைத்து, மாலையானதும் குறிப்பிட்ட நேரத்தில் பூட்டிவிடுவதால் யாரும் போகமுடியாது. சந்தர்ப்பம் கிடைத்தால், பெண்கள் இரவு நேரத்தி லும் நிச்சயம் போவார்கள், அதில் சந்தேகமில்லை!
உண்மையா, எனக்குத் தெரியலை கவிதா.. நான் பார்த்த மரணங்கள் ரொம்ப குறைவு. எங்க வீட்ல ஒரு முறை எங்க அத்தைப் பாட்டி இறந்தப்போ எங்க அக்கா அவங்களைப் பார்க்க வர தாமதமாயிடுச்சு. சுடுகாட்டுக்குப் போய்த் தான் பார்த்துவிட்டு வந்தாங்க.
பெண்கள் போவதில்லைன்னா, வீட்ல இருந்து வருத்தப் படுபவங்களுக்கு ஆறுதல் சொல்லத் தானே பெண்கள் அவசியம் தேவையா இருக்கும். (ஆண்களுக்கு இப்படி ஆறுதல் சொல்வதெல்லாம் கைவராத வேலைங்கிற அர்த்தத்துல சொன்னேன்.. வேற ஏதாச்சும் டாபிக் ஆய்டப் போகுது). அதுனால கூட இருக்கலாம்.
தெரியலை என்பது தான் சரியான பதில்.. மூத்த மகளா நான் நிச்சயம் போவேன். ஆனா, இதுவரை இது மாதிரி யோசிச்சு பார்த்ததில்லை.. ஏன்னு தெரியலை..
கவிதா, முன்பு பெண்களை நம் சமூகம் வைத்திருந்த சூழலில் அவர்கள் இடுகாட்டில் செய்யப்படும் சம்பவங்களால் அச்சப்படக்கூடும் என்ற கருத்தை மறுத்தற்கியலாது. இன்றைய சூழல் வேறு. அதே போலத்தான் சுத்தப்படுத்த வேண்டிய தேவைக்கும் பெண்களின் உழைப்பு வேண்டியிருந்தது.
இந்த நேரத்தில் எங்கள் குடும்பத்தில் நடந்த நிகழ்வு ஞாபகம் வருகிறது. எனது பெரியப்பா 1997ல் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு ஒரே மகள்தான். முன்பே சொல்லியிருந்தார் எனக்கு எப்போது என்ன நடந்தாலும் என் மகள்தான் எல்லாம் செய்ய வேண்டும் என்று. உடலை எடுத்து சுடுகாட்டிற்கு கிளம்பிய போது அக்கா எங்களோடு வந்தார். உறவினர்கள் எல்லாம் கடுமையாக எதிர்த்தார்கள். என்ன புதுப்பழக்கம் இது என்று கூப்பாடு வேறு. என் அப்பாவும் சித்த்தப்பாவும் இது எங்க அண்ணாவோட விருப்பம். பொண்ணுதான் எல்லாம் செய்வா. வர விருப்பமில்லாதவங்க அப்படியே போய்க்குங்கனு சொல்லவும்தான் எல்லாம் அமைதி ஆனாங்க. அதானல் பகைத்து கொண்ட சொந்தங்களும் சில உண்டு. அதைப்பற்றி கவலை இல்லை.
நீண்ட நாட்களுக்குப்பின் அந்த துயரை நினைக்க மனம் பாரமாகிவிட்டது.
பதிவிற்கு நன்றி
கீதா மேடம், நீங்க சொன்ன கருத்துக்கள் எனக்கு புரியும்படியாக உள்ளது..கண்டிப்பாக புண்படவில்லை.. கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
//நீண்ட நாட்களுக்குப்பின் அந்த துயரை நினைக்க மனம் பாரமாகிவிட்டது//
முத்துகுமரன், நீங்கள் துயரை நினைக்கும் படி என் பதிவு அமைந்ததற்கு என்னை தயவு செய்து மன்னியுங்கள்.
//தெரியலை என்பது தான் சரியான பதில்.. மூத்த மகளா நான் நிச்சயம் போவேன். ஆனா, இதுவரை இது மாதிரி யோசிச்சு பார்த்ததில்லை.. ஏன்னு தெரியலை.. //
பொன்ஸ்..எனக்கும் கூட தெரியவில்லை தான்..கீதா மேடம் கருத்து உதவும் என நினைக்கிறேன்.. எல்லோருடைய கருத்துக்களை படித்தால் கொஞ்சம் விளங்கும் நமக்கு,,
//இரவு நேரங்களில், சமாதிகளை தற்காலிக பார்களாக எண்ணி ஆண்கள் சோமபானம் அருந்தி மகிழ்ந்தனர்.//
பெண்கள் பேய் பிசாசுகளுக்கு பயப்படுகிறார்களோ என்னவோ.. சோமபானம் அருந்தும் ஆண்களுக்கு பயப்பட்டு த்தான் ஆகவேண்டும்..
//இதற்காகவெல்லாம் மூச்சு விட மறக்க வேண்டாம் கவிதா, வாழ்க்கை வாழ்வதற்கே//
ம்ம்..வாழ்க்கை வாழ்வதற்கே.. அணில்குட்டியின் அற்ப ஆசை எல்லாம் இப்போ நிறைவேறாது மேடம்....நாளாகும்..
இந்த பதிவை படிக்கும்போது லீனா மணிமேகலை அவர்களின் கவிதன் ஒன்று நினைவுக்கு வருகிறது. முழு கவிதையையும் பின்னர் பின்னூட்டமிடுகிறேன்.
//ஆண்களுக்கு இப்படி ஆறுதல் சொல்வதெல்லாம் கைவராத வேலைங்கிற அர்த்தத்துல சொன்னேன்.. // - பொன்ஸ், இதுவே ஒரு பெரிய டாபிக்தான்!
ஆறுதல் கூறுவதில் ஆண்களுக்கு நிகர் ஆண்கள்தான் என்பதை மனதிற் கொள்ளுங்கள்.
என்னை நெருங்கிய சொந்தங்களின் இறப்பில் கூட பெண்கள் இடுகாடு வந்து நான் பார்த்ததில்லை.ஆனால்,மூன்றாம் நாள் காரியத்திற்கு வந்துப் பார்த்திருக்கிறேன்.ஆனால் இதில் என்ன விடயம் என்றால் ஆறுதான் சுடுகாடு எங்கள் கிராமத்தில்,அதைக் கடந்துதான் இந்தப் பக்கத்திலிருந்து அந்த பக்க தோட்டத்திற்கு செல்லவேண்டும்.எல்லா நேரங்களிலும் பெண்கள் செல்வார்கள் பயமின்றி(யானை பயம் மட்டும் உண்டு - பொன்ஸோட யானையில்லை - இது காட்டு யானை) இருந்தும் அன்று மட்டும் பெண்கள் வராதது ஏன் என்பது எனக்கு இதுவரைக்கும் தெரியவில்லை.வராத என் அம்மா பாட்டியைக் கேட்டால் அவர்களுக்குக் கூடத் தெரியாது என்றே நினைக்கிறேன்.
//ஆறுதல் கூறுவதில் ஆண்களுக்கு நிகர் ஆண்கள்தான் என்பதை மனதிற் கொள்ளுங்கள்.//
ஆமாமா.... பெண்களுக்கு ஒரு பிரச்சனைனா முதல்ல வந்து குரல் கொடுக்கறது ஆண்கள் தான்.. .. பெண்கள் மீது அதீஈஈஈ...க அக்கறை.. எல்லாவிதத்திலும்...
கவிதா கிண்டல் பண்ணாதீங்க.. :)) அருள் உங்களுக்கு இன்னோரு விவாத டாபிக் எடுத்து தர்றாரு..
அருள், கவிதை எல்லாம் பின்னூட்டத்துல சொல்லாதீங்க ப்ளீஸ், உங்க பக்கத்துல போட்டீங்கன்னா இன்னும் படிக்க சுலபமா இருக்கும்..
//ஆறுதல் கூறுவதில் ஆண்களுக்கு நிகர் ஆண்கள்தான் என்பதை மனதிற் கொள்ளுங்கள்.//
கரெக்டு.. பெண்களுக்கு நிகராக மாட்டாங்க.. சரி தானே? ;)
பொதுவாக ஈம சடங்கு செய்வது ஆண் பிள்ளைகள் அல்லது சார்ந்த்வர்களாக நடைமுறையில் இருந்து வருகின்றது. குக்கிராமத்தில் கூட விருப்ப பட்டால் பெற்றோருக்கோ கணவனுக்கோ பெண்கள் கொள்ளியிடுவது நடைமுறையில் உள்ளது. ஆண்பிள்ளை கொள்ளியிட்டால் தலை வழித்தல். போன்ற இத்தியாதி சடங்குகள் நிறைவேற்றுவதால் பெண்கள் அந்த பொருப்புகளுக்கு செல்லாமல் இருந்திருக்கலாம். வீடு சுத்தம் செய்ய மட்டுமே பெண்கள் என்பது தவறான வாதமாகும்.இப்பொதெல்லாம் காலம் மாரி போயிட்டு .ஆமா இப்போ என் சுடுகாட்டு சிந்தனையெல்லாம்.............ஒரு வேளை பேய்களெல்லாம் ஏன் சுடுகாட்டு பக்கம் அனுப்பனும் வீட்டோடையே வச்சிருந்தா திருஷ்டி கழியும்னு சுடுகாட்டுக்கு அனுப்பாம இருந்திருக்கலாம்........:)
//பெண்கள் மிகவும் மென்மையானவர்கள், அவர்களால் சுடுக்காட்டில் நடப்பவைகளை பார்த்து மனம் தாங்கமுடியாது..//
இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், இவையெல்லாம் ஒரு அற்ப காரணமாக மட்டுமே இருக்கமுடியும். எந்த மதமும் பெண்களை விலக்கியே வைத்திருக்கிறது. ஒருவேளை பெண்களைபபற்றின பயம் தான் காரணமாக இருக்கமுடியும்.
//////
//ஆறுதல் கூறுவதில் ஆண்களுக்கு நிகர் ஆண்கள்தான் என்பதை மனதிற் கொள்ளுங்கள்.//
ஆமாமா.... பெண்களுக்கு ஒரு பிரச்சனைனா முதல்ல வந்து குரல் கொடுக்கறது ஆண்கள் தான்.. .. பெண்கள் மீது அதீஈஈஈ...க அக்கறை.. எல்லாவிதத்திலும்...
//////
அருள்,
நம்மையெல்லாம் நம்பவேமாட்டாங்க போல. விடுங்க, பெண்புத்தி பின்புத்தி (இதுக்கு யாராவது வையப்போறாங்க)
//வேண்டாம் என பெண்களும் சொல்வதில்லை, ஆண்களுக் சொல்வதில்லை.//
ஆண்கள் கூறியனால், பொம்பளைங்க விசயத்தில் எல்லாம் நீங்க தலையீடாதீர்க்கள் என்பது தான் பெருபாலும் கிடைக்கும் பதில்.
//ஆண்களுக்கு இப்படி ஆறுதல் சொல்வதெல்லாம் கைவராத வேலைங்கிற அர்த்தத்துல சொன்னேன்.. வேற ஏதாச்சும் டாபிக் ஆய்டப் போகுது). //
வேற எதாவது டாபிக் ஆயிட போகுது என சொல்லியே வேற டாபிக் அடித்தளம் போட்டு வீட்டீர்க்கள் பொன்ஸ்,
அது எப்படிங்க. இப்படி ஒரு முடிவுக்கு வந்தீர்க்கள். ஆண்களை இவ்வளவு குறைத்து மதிப்பீட்டு வீட்டீர்க்கள். பெண்களை கண்டிப்பாக ஆண்களால் மட்டும் தான் புரிந்து கொள்ள முடியும். ஆறுதல் சொல்லும் பெண்களை காட்டிலும் சேர்ந்து அழும் பெண்கள் தான் அதிகம். துக்கம் தொண்டையை அடைத்தாலும் நம் துக்கம் தன் குடும்பத்தாரை பாதித்து விட கூடாதே என துக்கத்தை அடக்கி கொள்ளும் ஆண்கள் இந்த சமூகத்தில் அதிகம். ஆறுதல் மட்டும் அல்ல ஆதரவாக இருப்பதும் ஆண்கள் தான் என்பது என் கருத்து.
//ஆமாமா.... பெண்களுக்கு ஒரு பிரச்சனைனா முதல்ல வந்து குரல் கொடுக்கறது ஆண்கள் தான்.. .. பெண்கள் மீது அதீஈஈஈ...க அக்கறை.. எல்லாவிதத்திலும்... //
நீங்க எந்த அர்த்தில் சொல்கின்றீகள் எனத் தெரியவில்லை. எந்த அர்த்தமாக இருந்தாலும் அது சரி தான்.
//பெண்களுக்கு நிகராக மாட்டாங்க.. சரி தானே? ;) //
பொன்ஸ், இப்ப தான் உங்க அடுத்த பின்னூட்டத்தை பார்த்தேன்.
ஆமாம், பெண்களுக்கு நிகராக மாட்டார்க்கள். இந்த விசயத்தில ஆண்கள் பல படி மேலே....
//அருள், கவிதை எல்லாம் பின்னூட்டத்துல சொல்லாதீங்க ப்ளீஸ், உங்க பக்கத்துல போட்டீங்கன்னா இன்னும் படிக்க சுலபமா இருக்கும்.. //
- அப்படியே ஆகட்டும்.
//கரெக்டு.. பெண்களுக்கு நிகராக மாட்டாங்க.. சரி தானே? ;)//
- கரெக்டு.. பெண்களுக்கு நிகராக மாட்டாங்க.. சரி தான். எப்பவௌம் அவங்களவிட ஒருபடி மேலதான் :)
எனக்கு சப்போட்டுக்கு சீனு மட்டும்தானா?! மத்த ஆம்பளைங்கல்லாம் எங்கப்பா போயிருக்கீங்க? யாருக்காச்சும் ஆறுதல் சொல்லத்தானே! :)
//நம்மையெல்லாம் நம்பவேமாட்டாங்க போல. விடுங்க, பெண்புத்தி பின்புத்தி (இதுக்கு யாராவது வையப்போறாங்க) //
சீனு, பின்புத்தினா..ஆண்களை பின் இருந்து பெண்கள் நடத்தி செல்வதால்.. சொல்லப்பட்டது..
//ஒரு வேளை பேய்களெல்லாம் ஏன் சுடுகாட்டு பக்கம் அனுப்பனும் வீட்டோடையே வச்சிருந்தா திருஷ்டி கழியும்னு சுடுகாட்டுக்கு அனுப்பாம இருந்திருக்கலாம்........:) //
வாங்க அண்ணன் செயகுமார் அவர்களே, உங்களுக்கு வரப்போற அம்மனியும்தான் அந்த பேய் கூட்டதுல அடக்கம்.. சும்மா தெரிஞ்சிக்கலாம்னு தான்...
நன்றி தமிழவன்..
//எனக்கு சப்போட்டுக்கு சீனு மட்டும்தானா?! மத்த ஆம்பளைங்கல்லாம் எங்கப்பா போயிருக்கீங்க? யாருக்காச்சும் ஆறுதல் சொல்லத்தானே! :) //
அருள், காத்திருந்து பாருங்கள்..யாராவது வரலாம்..னு தான் நினைக்கிறேன்..
தமிழவன்,
ஈழத்துப் பெண்களின் வீரம் நிச்சயம் போற்றுதலுக்குரியது. போர்க்காலத்தில் அர்த்தமில்லாத சம்பிரதாயங்கள் தானாக உடைந்துவிடுகின்றன.
ஈழத்தின் நிலை சீக்கிரம் மாறட்டும். சகோதரிகள் உடன் வந்த தோழிகளைச் சுமந்து திரும்புவது என்பது படிக்கவே கஷ்டமாக இருக்கிறது. :(
சுடுகாடு என்ற சொல் வினைத்தொகையாம். நடுவில் க் வராதே என்று யாரோ சொன்னாங்க
சரி சரி அருள், சீனு, சிவா, சிங்..
நான் சொன்னது வாபஸ், ஆறுதல் எல்லாம் சும்மா ஒரு ஊகத்துக்குத் தான் சொன்னேன். ஆறுதல் சொல்வதில் ஆண்பால், பெண்பால் என்றெல்லாம் இந்தக் காலத்தில் ஒன்றும் இல்லை.. வல்லவர்கள் இதிலும் வல்லவர்கள் தான் :)
கவிதா, என்னங்க முடிவு வந்துச்சு? பெண்கள் இடுகாட்டுக்குச் செல்வதில்லை, ஏன்?
எனக்குத் தெரிந்த என் உறவினர் ஒருவர், மரணங்களுக்குச் செல்வதையே முடிந்தவரை தவிர்த்துவிடுவார். இறப்பு நிகழ்ந்த இடத்தில் சுகாதாரம் குறைவாக இருக்கும், நோய்க் கிருமிகள் அதிகம் இருக்கும்னு மருத்துவ காரணம் சொல்லுவார்(அவர் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை, அது பிறகு)!! அப்படி ஏதாவது மருத்துவத்தைத் துணைக்கழைக்கிறார்களா இதிலும்? இல்லைன்னா, போக வேண்டிய ஒரு காரணமற்ற சம்பிரதாயம் தானா?
இந்த கேள்விய நான் பத்தாவது வயசிலயே கேட்டுட்டேன். என்னோட
தாத்தா இறந்த போது என்னோட அத்தைகள் யாருமே சுடுகாட்டுக்கு வரலை. இதுபத்தி அப்பாவிடம்
கேட்டேன். பெரியவர்கள் எதை சொன்னாலும் அதில் அர்த்தம் இருக்கும் னு சொன்னாங்க. ஒருவேளை
அப்படி ஏதாவது இருக்குமோ.
//சுடுகாடு என்ற சொல் வினைத்தொகையாம். நடுவில் க் வராதே என்று யாரோ சொன்னாங்க //
நன்றி லதா..எனக்கு தெரியவில்லை..
பொன்ஸ், லதா சொல்றது சரியா?!! அப்புறம், கீதா மேடம் தவிற யாருமே காரணம் என்னன்னு சொல்லல..
விடை தெரியாமல் நாம் செய்யும் பல விஷயங்களில் இதுவும் என்று என நினைத்து கொள்ள வேண்டியது தான்..
//பெரியவர்கள் எதை சொன்னாலும் அதில் அர்த்தம் இருக்கும் னு சொன்னாங்க. ஒருவேளை
அப்படி ஏதாவது இருக்குமோ. //
நன்றி தம்பி, இப்படிதான் எல்லோருமே பழகிவருகிறோம்..
சுடுகாடு- க் வராது தான்.. இப்போதெல்லாம் நான் இந்த இலக்கணப் பிழை சுட்டுவதில்லைன்னு முடிவு பண்ணி இருக்கேன். அதனால எந்தப் பயனும் இருப்பதில்லை. பழக்கத்துல வருவது தானே.
//விடை தெரியாமல் நாம் செய்யும் பல விஷயங்களில் இதுவும் என்று என நினைத்து கொள்ள வேண்டியது தான்..//
விடை தெரியாமல் என்பது சரியில்லை கவிதா. மத்தவங்க சொன்னது போல் அந்தக் காலத்தில் இதற்கு அர்த்தம் இருந்திருக்கும். பெண்கள் என்றாலே ரொம்ப பயந்தவர்கள், பொத்திப் பாதுகாக்க வேண்டியவர்கள் என்னும் எண்ணம். இப்போ பயமாவது ஒண்ணாவதுன்னு ஆகிடுச்சு. இனிமேலும் இந்த சம்பிரதாயங்களைத் தொடர வேண்டுமா என்பது தனிமனிதத் தீர்மானம் தானே. முத்துகுமரன் சொன்னது போல் அந்தந்த வீட்டு/குடும்ப மனிதர்கள் முடிவு செய்ய வேண்டியது இது.
எந்த ஒரு பழக்கத்தையும் நம்பிக்கை மூட நம்பிக்கை என்று இரண்டாகப் பிரிக்கலாம். வாசலில் சாணம் தெளிப்பது நல்லது என்று அறிவியல் சொல்கிறது ஆகவே நம்பிக்கை. கோயிலில் உயிர் பலி மூட நம்பிக்கை. ஆக இந்த விசயத்தை அறிவியல் பூர்வமாக ஆராய வேண்டும். அறிவியல் பூர்வமாகாவோ, உணர்வுப் பூர்வமாகவோ காரணம் இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். இதனை ஆராய்ந்து கூறும் அளவிற்கு எனக்கு அறிவு இல்லை. ஆகவே தற்சமயம் எனக்கு இது மூட நம்பிக்கையாகவே தோன்றுகிறது ஆகவே இதனை பின்பற்ற வேண்டியதில்லை. என் அம்மா வழிப் பாட்டி இறந்த சமயம் என் அம்மாதான் இறுதி காரியங்களைச் செய்தார். ஆக மற்ற மூட நம்பிக்கைகள் போலவே இதுவும் வழக்கழிந்து போகும் என்றுதான் நினைக்கிறேன்.
//ஆண்களை இவ்வளவு குறைத்து மதிப்பீட்டு வீட்டீர்க்கள். பெண்களை கண்டிப்பாக ஆண்களால் மட்டும் தான் புரிந்து கொள்ள முடியும். //
ஏங்க! பெண்களை ஆண்கள் தாங்க புரிந்துகொள்ளமுடியும். ஏன்னா, வேறு யார் இருக்காங்க?
//துக்கம் தொண்டையை அடைத்தாலும் நம் துக்கம் தன் குடும்பத்தாரை பாதித்து விட கூடாதே என துக்கத்தை அடக்கி கொள்ளும் ஆண்கள் இந்த சமூகத்தில் அதிகம். //
எனக்கு P.K.S படம் தான் நியாபகத்திற்கு வருகிறது. கமலும் அவர் தாத்தாவும் அழுவார்கள். அப்போ கமல் அழுதுகிட்டே சொல்லுவார், "சரி! விடுங்க. ஆம்பளைங்க நாம ஏன் அழுவனும்"
//சீனு, பின்புத்தினா..ஆண்களை பின் இருந்து பெண்கள் நடத்தி செல்வதால்.. சொல்லப்பட்டது..//
ஓ! ஒரு வேளை Pin புத்தியோன்னு நினைச்சிட்டேன். (ஹி...ஹி...ச்சும்மா, சோக்கு)
எல்லா காரியங்களும் ஒரு காலத்தில் ஏதாவது ஒரு காரணத்தை அடிப்படையாக வைத்தே ஆரம்பிக்கப்பட்டிருக்கும்.
பிரசங்கியார் தனது பிரசங்கதுக்கு நடுவே வந்து தொந்தரவு கொடுத்த பூனையைக் கட்டிப்போட்டுவிட்டு வந்து தனது பிரசங்கத்தை ஆரம்பித்தது போல. அந்த பிரசங்கியார் பொய் அடுத்த பிரசங்கியார் வந்த பின்னும் இந்த பழக்கம் தொடர்ந்தது. அது சரியே. ஆனால் அந்த பூனை ஒரு நாள் செத்துப்போனது. ஏன் பிரசங்கத்துக்குமுன் பூனையை கட்டிப்போட வேண்டும் எனத்தெரியாத புது பிரசங்கியார் புதிதாக ஒரு பூனையை வாங்கி கட்டிப் போட்டுவிட்டு பிரசங்கத்தை ஆரம்பித்தார்.
பெரியவர்கள் எதை செய்தாலும் ஒரு காரணம் இருக்கும், அந்த காரணம் என்ன என்று நாம் யோசிப்பதில்லை. இது போன்ற ஆராய்ச்சி தேவைதான்.
//பெரியவர்கள் எதை செய்தாலும் ஒரு காரணம் இருக்கும், அந்த காரணம் என்ன என்று நாம் யோசிப்பதில்லை. இது போன்ற ஆராய்ச்சி தேவைதான்//
நன்றி, பாவூரன், நானும் இதற்கு காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று பலரிடம் கேட்டேன், முழுமையாக சொல்லப்பட்ட காரணம், கடைசியாக "சொத்தை பற்றியது" பெண்ணுக்கு திருமணத்திற்காக சீதனமாக எவ்வளவு செய்ய வேண்டுமோ செய்து விடுகிறார்கள், இறுதி சடங்கை செய்பவர்கள் பொதுவாக சொத்துக்கு வாரிசாகத்தான் இருப்பார்கள் என்பதால் பெண் செய்யும் போது, சீதனம் என்ற பெயரில் ஒண்றும், சொத்து என்ற பெயரில் இரண்டு பங்கு செல்கிறது என்பதால் மட்டுமே இது பெண்களால் செய்யபடுவதில்லை என்ற காரணம் எனக்கும் சரியென்றே பட்டது.ஆனால் அதுவும் ஒரே பெண் என்ற விஷயத்தில் சரிவராது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
in this context i want to share my personal experience with you
we are two daughters in our family and no sons
My father does not have any brothers nor my mother has any brothers .we do not have any close male relatives except cousins .
When my father passed away my fatherin law refused to give permission to my husband to do the cremation .quoting some sastras.
my mother (poor woman) had to beg her male cousins to come forward and do the cremation.
even though both me and my sister are both highly qualified and working we could not do anything as my mother forbid us from speaking . (did not want any friction with society)
ultimately one of my mothers cousin came forward with lot of reluctance and went away after doing the bare essential .
if you cannot even give a decent cremation to your father what is the use in bringing up a girlchild ,educating her and getting her married .
drastic change is required in all these rituals.
this is one of the reasons why people prefer male children
( sorry i do not know to type in tamil in computer)
நன்றி கோமதிஜி, நீங்க எங்கே இருக்கிறீர்கள் என்று புரியவில்லை. உங்கள் அப்பாவிற்கு நீங்களோ இல்லை உங்கள் சகோதரியோ இறுதி சடங்குகளை நிச்சயம் செய்து இருக்கலாம். தவறு ஒன்றும் இல்லை.
நிறைய காரணங்களை இங்கு நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.. நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் மாற்றத்தை நாம் தான் கொண்டு வர வேண்டும். நம் கையில் தான் இருக்கிறது..
Post a Comment