ஏதோ ஒரு நல்ல காரணத்துக்காக தான் பெண்களை தெருவுடன் விட்டு செல்கிறார்கள் என்றால் அது என்ன?.. எங்களது வீட்டில் சொல்லப்பட்ட விளக்கம்- பெண்கள் மிகவும் மென்மையானவர்கள், அவர்களால் சுடுக்காட்டில் நடப்பவைகளை பார்த்து மனம் தாங்கமுடியாது..செய்ய வேண்டிய வேலைகளை கவனிப்பார்களா..இல்லை பெண்கள் அழுவதை பார்த்து கொண்டும், சமாதானம் செய்து கொண்டும் இருப்பார்களா?. அதனால் தான் வீட்டுடனே அவர்களை நிறுத்தி விடுகிறார்கள் என்பதே

இந்த விளக்கம் சரியானதா என எப்பவும் ஒரு கேள்வி. ?.. பெண்கள் மென்மையானவர்கள், அதிக துக்கத்தை தாங்கமாட்டார்கள் என்றால், கிறுத்துவ மதத்தில் துக்கத்தில் கடைசி வரை பெண்கள் இருக்கிறார்களே?.. மதத்திற்கு மதம் பெண்களின் இயல்பான குணம் மாறி போகிறதா?.. இதற்கு அவர்கள் சிறு வயது முதலே அப்படியே வளர்க்கப்படுகிறார்கள், அதனால் அது அவர்களுக்கு பழகி விடுகிறது என்றே வைத்து கொள்வோம். ஏன் நாமும் அப்படி பழகக்கூடாது... ஏன் தெருவுடன் நிற்க வேண்டும்.

பல காரணங்களை யோசிக்கும் போது...தோன்றிய ஒன்று....எல்லா ஆண்களும், பெண்களும் சுடுகாடு வரையில் சென்றுவிட்டால், வீட்டை சுத்தம் செய்வது யார்?.. இதற்காக பெண்கள் வீட்டோடு நின்று விட்டால்.. இந்த வேலைகள் தானாக நடக்கும் என்று இப்படி நடைமுறை படுத்தி இருப்பார்களோ..?! என்பது தான்.

இந்த பதிவிற்கு முக்கிய காரணம், எங்களது அடுக்கு மாடி குடியிருப்பில், ஒரு நண்பர் மாரடைப்பால் திடீரென்று காலமாகிவிட்டார். அவருக்கு ஒரே மகள் (22 வயது), அவருடைய உறவினர்கள், அந்த பெண்ணின் சித்தப்பா மகனை எல்லா காரியங்களையும் செய்ய சொல்ல, அந்த பெண், தன் உறவினர்களிடம், என் அப்பாவிற்கு எல்லாம் நான் தான் செய்வேன் என வாதம் செய்து எல்லாமே அவள் தான் செய்தாள். கடைசியாக சுடுக்காட்டிற்கு அவள் வரக்கூடாது என உறவினர்கள் மறுக்க, அவர்கள் சொன்ன காரணம் அவள் அங்கு வந்தால் பயந்து போவாள் என்பதே. ஆனால் அந்த பெண்ணோ..”அவர் என் அப்பாங்க..நான் எப்படி அவரை பார்த்து பயப்படுவேன்..நான் தான் அவருக்கு சுடுக்காட்டிலும் எல்லாம் செய்வேன்” என்று விடாப்பிடியாக சென்று செய்து விட்டு வந்தாள்.

இது சென்னை போன்ற நகரங்களில் சாத்தியமானது.. இதுவே..நம் கிராமங்களில் சாத்தியப்படுமா?.. பெண்கள் இப்படி செய்ய அனுமதிப்பார்களா..?!!

தன் சொந்த அப்பாவிற்கு கடைசியாக செய்யும் ஈமச்சடங்கை க்கூட ஒரு பெண் போராடித்தான் செய்ய வேண்டி உள்ளது என்பதை நினைக்கும் போது நம் சமுதாயத்தின் பார்வைகளும், பழக்கவழக்கங்களும் எப்போது மாறுமோ என வேதனையாக இருக்கிறது....

அணில் குட்டி அனிதா:- ஏன் கவிதா நீங்க வேதனை படறீங்க.. உங்களுக்கு என்ன பையன் தானே....ஆனா நான் ஒன்னு..சொல்றேன்.. நீங்க மூச்சு விட மறந்த பிறகு..உங்கள பாக்கவர அத்தனை ladies ஐயும், வேன், கார், ஆட்டோ ன்னு வச்சி எப்படியாவது உங்கள எரிக்கிற இடத்துக்கு கூட்டிட்டி வரது என் பொறுப்பு....அது சரி.....நீங்க எப்ப மூச்சு விட மறப்பீங்க.. அதுக்காக....ரொம்ப நாள் எடுத்துக்காதீங்க சரியா?!!!