என் கணவர், என்னுடைய கனவுகளை எழுதிவைக்க சொன்னக்காரணமே, என் கனவுகள் கதைகளாக இருப்பது மட்டுமல்ல, அதை அவரிடம் சொல்லும் விதமே!.

ஒரு தயாரிப்பாளரிடம், அறிமுக இயக்குனர் கதை சொல்வதைப்போல இருக்குமென நினைக்கிறேன். அவர் எதிரில், அந்தக்கனவு நிஜத்தில் நடந்தால் எப்படியிருக்குமோ அப்படி சொல்லுவேன். பின்னணி இசை மட்டுமே இருக்காது.

ஓவராக கற்பனை செய்துக்கொள்வதில் என்னை வெல்ல என்னாலேயே முடியாதுதான். இருந்தாலும், நேற்று வந்த கனவை நினைத்து சிரிப்பதா அழுவதா.. இல்லை ஏன் இப்படியெல்லாம் எனக்கு கனவு வந்து தொலைக்குதுன்னு நினைச்சி ஆச்சரியப்படுவதான்னு தெரியல...

தினப்படி எத்தனையோ நிகழ்வுகள் நடக்குது..

ஓவியா சென்றதிலிருந்து பிக்பாஸ் பாதிப்பு இல்லை.... 

அதிமுக வால் பிரேக்கிங் நியூஸ் அடிக்கடி வந்து அந்த சத்தமும் பழகிப்போச்சி

ரஜினி அரசியல் - பெருசா யோசிக்கல..

கமல் டிவிட்டர் - யோசிச்சாலும் ஒன்னும் புரியப்போறதில்ல..

என் சொந்தப்பிரச்சனைகள்.. அது ஏகத்துக்கும் இருக்கு...

என் கணவரின் அலுவலகப்பிரச்சனை, அதை அவர் எப்படிக்கடக்கப்போகிறார் என்ற கவலை...

வெளி மாநிலத்தில் இருப்பதால், இங்கு சந்திக்கும் மனிதர்கள்..னு

என்னென்னமோ தினப்படி நடக்குது.. இதுல..நேற்று எனக்கு வந்த கனவு இருக்கே.... படிங்க..நீங்களும் கடுப்பாக சான்ஸ் இருக்கு...

காலையில் எழுந்துவரும் போது கனவு நினைவில் இல்லைதான். ஆனால் பல் விளக்கும் போது நினைவுக்கு வர, மறந்துவிடுவேனோன்னு , பிரஷ்ஷை வாயிலிருந்து எடுத்துவிட்டு அவரை அழைத்து கனவை சொன்னேன்.

"இன்னைக்கு எனக்கு ரொம்ப ஸ்ட்ரேன்ஜ்ஜா ஒரு கனவு வந்துச்சிப்பா..."

புதுசா என்ன..ங்கற மாதிரி லுக்கு விட்டுட்டு என் முகத்தையே கவனிச்சார்..

"காடை இருக்கில்ல..."

"ஆங்...??????"

"காடை ப்பா காடை... பறவை..கோழிமாதிரி..நாமக்கூட மூனார்ல காடை முட்டை ஆம்லெட் சாப்பிட்டோமே..?! அந்த காடை..."

"ம்ம்ம்..சொல்லு.. " னு சொன்னக்குரல் கடுப்பாக இருந்தது.


"அந்த காடையை பிடிச்சி, பால் கறந்து.. அதை ஒரு ஃபில்டரில் வடிகட்டி உங்களுக்கு தரேன்" ப்பா..

ஞே.... அவர்ட்ட ரியேக்ஷனே இல்ல..என்ன சொல்றதுன்னு தெரியாம.. என்னையே ப்பாக்கறாரு..  [கனவை சொல்ல முன்னமே கடுப்பா?  யார்கிட்ட??? ]

ரியாக்ஷன் செய்யமுடியாம திகைச்சிப்போய் நிக்கறவரை பாத்து சிரிப்பு வந்தாலும், வெளியேக்காட்டிக்காம... 

"எப்படிப்பா காடை க்கிட்ட பால் கறக்க முடியும்? எனக்கு ஏம்ப்பா இப்படியெல்லாம் கனவு வருது..?"

"உனக்கு இப்படியெல்லாம் கனவு வராட்டிதான் பிரச்சனை..காடை என்ன காடை.. எரும்பை ப்பிடிச்சிக்கூட நீ பால் கறப்ப.. போடி போ.. போய் பல்ல வெளக்கு...."

"ஆவ்வ்வ்.... அப்ப நெக்ஸ்ட் பால் எரும்புக்கிட்டவா..? " ன்னு நினைச்சிக்கிட்டு அவர் மேற்கொண்டு திட்டும்முன்ன எஸ் ஆகிட்டேன். :

கனவை சொல்லியாச்சி...இதோ எழுதியும் வச்சாச்சி. ஆனா என்னாலேயே இந்த கனவை இப்பவரை ஜீரணிக்க முடியல.. ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் கனவு வருதுன்னு தெரியமாட்டேங்குது..

நேத்திக்கோ..அதுக்கு முன்னமோ... காடையோ..கோழியோ மற்ற பறவைகளைப்பற்றியோ பேசல.. பார்க்கல.. காடை ஆம்லெட் சாப்பிட்டுக்கூட ஒரு 4-5 வருசமிருக்கும்..

என்னமோ போங்க.. என்னாலேயே முடியல..

அணில் குட்டி : பாருங்க..கொஞ்ச கொஞ்சமா சந்தரமுகியா மாறிக்கிட்டு இருக்க கவிதா வை பாருங்க.!!!.

பீட்டர் தாத்ஸ் : I'm interested in the dream and subconscious mind, the peculiar dream-like quality of our lives, sometime nightmare quality of our lives. - Anthony Hopkins