அடையார் புற்றுநோய் மருத்துவமனை - சில குறிப்புகள்

அடையார் கேன்சர் மருத்துவமனை கேன்சரை குணப்படுத்தமட்டுமே நடத்தப்படுகிறது. வேறு வியாதிக்காரர்களுக்கு இங்கு வேலையில்லை.
நோயாளிகள் முதல் நிலை தகவல்/சந்தேகம்/உதவிக்கு மருத்துவமனையில் பகவான் ஆதிநாத் ஜெயின் காம்ப்ளெக்ஸ் அலுவலகத்தில் இருக்கும் PRO வை அணுகி விபரங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

ஒரு நாளைப்போல நூற்றுக்கணக்கான நோயாளிகள் வருவதால், இங்கு காத்திருப்பு என்பது ரொம்ப சாதாரணம். காலையில் 7 மணிக்கு போனால் இரவு 7 மணி வரையில் கூட காத்திருக்க வேண்டி வரும். அனைவருமே வரிசைப்படிதான் அழைக்கப்படுவர்.  Recommendation, References என்று எதும் இங்கு செல்லுபடி ஆகாது, சில தினங்கள் சென்றாலே அங்கிருக்கும் நோயாளிகளைப்பார்த்து, நாமும் இதையெல்லாம் நாடாமல் காத்திருக்க ஆரம்பிப்போம்.

இங்கு 10 ல் 8 பேருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது ஆச்சரியமான உண்மை. Operation என்று முடிவானப்பிறகு, அந்த நோயாளிகளுக்கென ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு கூட்டம் நடத்தி, அதில் பணம் கட்ட இயலாதவர்களின் நிலையை அறிந்து,அவர்களுக்கு இலவசமாக அறுவைசிகிச்சை நடத்தப்படுகிறது. இதனை அறுவை சிகிச்சை செய்யப்போகும் நோயாளிகள் அனைவருக்கும் தெரியப்படுத்தி விடுகின்றனர். நமக்கு தேவைப்பட்டால், கூட்டத்தில் கலந்துக்கொள்ளலாம் இல்லையேல் பணம் கட்டுகிறோம் என்று சொல்லிவிடலாம். இலவச சிகிச்சைக்கு Income Certificate கொடுத்தால் போதுமானது.

அறுவை சிகிச்சைக்கு முன்பான செலவுகளும், வருமானம் குறித்த சரியான தகவல்கள் கொடுப்பதன் பேரில் ஆரம்பத்திலிருந்தே சிலருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. பொதுவாக அறுவை சிகிச்சைக்கு,  முந்தைய  பரிசோதனைகளுக்கு 20-25 ஆயிரம் ரூபாய் தேவைப்படலாம்.

ஒருவேளை வெளியில் வேறு மருத்துமனையில் புற்றுநோய் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டிருந்தாலும், இங்கு வந்தால், முதலிலிருந்து எல்லா பரிசோதனைகளையும் கண்டிப்பாக செய்தே ஆகவேண்டும். வெளியில் செய்யப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் இங்கு சிகிச்சை அளிக்கப்படுவதில்லை.

சென்னையில் அல்லாது தமிழகத்தின் பல பிரபல மருத்துமனைகளில், கைவிடப்பட்டு, இங்கு வருபவர்கள் ஏராளம்.

அறிகுறிகள் : உடலில் எந்த இடத்திலாவது சிகிச்சை அளித்தும் சரியாகாத கட்டி வகையறாக்கள், ரத்தகசிவோடு இருக்கும் கட்டிகள், ரத்தம் கலந்த சிறுநீர், பேதி போன்றவையை புறந்தள்ளாமல், நேரடியாக இங்கு வந்து பரிசோதனை செய்துக்கொள்ளுதல் சிறந்தது. வேறு மருத்துமனைகளுக்கு சென்று, பின்பு இங்கு வருவதால், காலதாமதம் மட்டுமல்லாமல், பண விரயம் அதிகமாகி,  நோயாளிகளுக்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் அதிக மன உளைச்சலை தந்துவிடும்.
*******
இங்கு பார்க்கும் அத்தனை நோயாளிகளுக்கும் ஏதோ ஒரு கேன்சர்.  :-

8 மாத குழந்தைக்கும், அவங்க அம்மாக்கும் கேன்சர், என்ன ஏதுன்னு விசாரிக்க மனசு வரல.. :(

வயிறு சம்பந்தப்பட்ட (குடல்) கேன்சர் அதிகம் -  அறிகுறி : வலியில்லாத தொடர்ந்து ரத்தப்போக்கோடு வெளிக்கி/பேதி ஆகுதல்.

இந்த நோயாளிகளின் உறவினர்கள் சொன்னதிலிருந்து காரணங்களை ஊகித்தது :- உணவே  முதல் காரணம் - அதிக அசைவம் தொடர்ந்து சாப்பிட்டவர்கள், அதிக காரம், பழம் & காய்கறியே தொடாமல் இருந்தவர்கள்.  பலவருடங்களாக ஒரே மாதிரியான உணவுப்பழக்கத்தை கொண்டவர்கள்

குடி , சிகிரெட் , வெற்றிலைப்பாக்கு புகையிலை பழக்கம். இதனால் கேன்சர் வந்தவர்கள் எத்தனை வசதிக்குறைந்தவர்களாக இருந்தாலும் , இலவச சிகிச்சை அளிப்பதில்லை. முழுப்பணமும் கட்டினால் தான் சிகிச்சை.

அடுத்து, வாய் சார்ந்த புற்றுநோய். இதும் அதிகளவில் இருக்கிறது. வாய் சார்ந்த புற்றுநோய்க்கு, காதருகில் உள்ள க்ளேன்ட்ஸ் ஸை, அதில் கேன்சர் செல்கள் இல்லாவிட்டாலும் பரவும் என்று அவர்களாகவே எடுத்துவிடுகிறார்கள்.

சிறுநீரக கேன்சர் - சிறுநீரோடு இரத்தம் கலந்து வருதல் அறிகுறி.

மார்பு & கருப்பை புற்றுநோய். இ்வை பொதுவாக நாம் அறிந்தவை.

இவைத்தவிர நெற்றி, கண், இமை, தலை , தோல் 'ன்னு சொல்றவங்களும் உண்டு.
******

குழந்தைகளுக்கென்றே தனிப்பிரிவு / தனிக்கட்டிடம் இருக்கிறது.

அதிகமானோர் ஆந்திராவை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். உணவு பழக்கம் காரணமாக இருக்கலாம். கேன்சர் இன்ஸ்ட்டியூட் உருவாக்கியவர்களில் யாராவது ஆந்திராவை சேர்ந்தவர்களாக இருக்கலாம். 

இலவச சிகிச்சை செய்துக்கொள்பவர்களுக்கு, ஒரு நோயாளிக்கு ஒரு உதவியாளர் தங்க இலவசமாக உணவோடு மருத்துவனமையில் வசதி செய்யப்பட்டுள்ளது.  தவிர பணம் கட்டுபவருக்கு தனியாக தங்க வசதியான அறைகளும் உள்ளன.

இலவசம் /பணம் வித்தியாசமின்றி அனைவருக்கும் எந்த பாரபட்சமுமின்றி ஒரேமாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதை கண்கூடாக பார்க்கமுடிந்தது.

பணம் கட்டுபவர்களில் A,B,C என்ற மூன்று பிரிவுகள் வைத்திருக்கிறார்கள். அடிப்படை வித்தியாசம் என்னவென்று தெரியவில்லை.

Insurance & மற்ற Claim வசதிகள் நேரடியாக இவர்கள் செய்வதில்லை. ரசீதுகளை வைத்து நாமாக தான் claim செய்துக்கொள்ள வேண்டும்.

ஆயா வேலைப்பார்ப்போர் அனைவருமே வயதானோர். இவர்கள் சோர்வில்லாமல் வேலை செய்தது, என் கவனத்தை ஈர்த்தது. பணம் கேட்டு வாங்குகின்றனர்.. (கொடுப்பதில் தப்பேயில்லை.) எல்லோரிடமும் கேட்பார்கள் என தோணவில்லை, தேர்வு செய்தே கேட்கின்றனர்.

நோயால் அவதிப்பட்டு, குணமாகிய பலர் இங்கேயே வேலைப்பார்க்கிறார்கள். அவர்களுக்கான வேலைவாய்ப்பு இங்கு பரிந்துரைக்கப்படுகிறது. வியாதியின் தன்மையை அறிந்ததாலோ என்னவோ,  கொஞ்சம் கூட சலிப்பு இல்லாமல், முகம் சுளிக்காமல், சோர்ந்து உட்காராமல் உழைக்கிறார்கள்.

தவிர , தன்னார்வளர்கள் பலரை பார்க்க முடிந்தது. சாப்பாடு நேரத்தில், நோயாளிகளை காக்க வைக்காமல் இருக்க, இவர்கள் அந்த நேரத்தில் வேலை செய்கிறார்கள்.

குறைகள் : மருத்துமனை வசதிகள் தனியார் மருத்துவமனைகளை போல இருக்காது. சுத்தமாக வைத்திருந்தாலும், நாம் எதிர்ப்பார்க்கும் hygienic  இருக்க வாய்ப்பில்லை. கேன்டீன் உணவுகள் சுமாராகவே இருக்கும், அங்கும் அதிக சுத்தத்தை எதிர்ப்பார்க்க முடியாது. தனியார் மருத்துமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு இந்த மருத்துமனையின் வசதிகள் நிச்சயம் திருப்தி அளிக்காது. !

மருத்துவமனை இணையத்தளத்திலிருந்து->புற்றுநோய் வராமல் தவிர்க்க:

Abstinence from tobacco
Balanced diet
Personal hygiene
Vaccines
# Adyar Cancer Institute

எனக்கு 20 உனக்கு 18

எனக்கு எல்லாந்தெரியும்... வாயமூடும்மா....

ஆமா நவீன் உனக்கு எல்லாந்தெரியும்!!! தெரியாததுன்னு ஒன்னுமேயில்ல..  ஒன்னு செய்யி, நல்லா யோசிச்சி எதாது ஒன்னு உனக்கு  ''தெரியல' னு சொல்லுப்பாக்கலாம்...

(அடுத்த செகண்ட் ) 20 வருசமா சமைக்கற, இருந்தாலும் ஒழுங்கா சமைக்கமாட்ற, அதான் ஏன்னு எனக்கு "தெரியல"

:))))))))))))) ஏன்டா ஏன்ன்ன்?

*****************

அம்மாக்கு அடிக்கடி தலவலி வருதுடா... நேத்திக்கு பூரா தலவலி.. அங்கக்கூட இப்படி வரும்.. இங்க தொடர்ந்து வருது... இன்னைக்கு காலையிலேயே ஆரம்பிச்சிடுச்சி...(தலைவலியில் முகமெல்லாம் வாடி, ஒரே அழுவாச்சி டயலாக் டெலிவரி செய்யறேன்)

இல்லாத மூளைய ஓவரா ஓடவிட்டா இப்படிதான் தலவலி வரும்...

.. :))))))))))))))))))


  *************
காலையிலேயே வூட்டுக்கார்க்கிட்ட இருந்து ஃபோன்.. (அவரா அழைக்கல....மிஸ் கால் கொடுத்து கூப்பிட்டவச்சேன்.)

........ஹல்லோ.. நவீன் கிட்ட கொடுக்கட்டா?

குடு குடு..

இந்தப்பா... அப்பா லைன்ல....

............................

தாங்கஸ்....

..............................
....

எனக்கென்ன வேணும்??!! அதான் அம்மாவை அனுப்பி வச்சிட்டீங்களே.......

..............................
.........

ம்ம்ம்

.......................

ம்ம்ம்ம்

இந்தா... (என்னிடம் ஃபோன் வந்தாச்சி..)

பாத்தியாடி... உன் புள்ளைய..?? அவன் பொறந்தநாளைக்கு உன்னையே கிஃப்ட்டா நினைக்கிறான்...!! (வயித்தெறிச்சல்)

:)))..சரி சரி.. வைக்கிறேன் எனக்கு வேல இருக்கு.. !!

# ஐப்பசி 1 # நவீன் பிறந்தநாள் # ப்ரவுடு மம்மி !!

**************
ஏதோ சீரியல் பாக்கும் போது,  அந்தம்மாக்கு மருமகள் சாப்பாடு கொடுப்பாங்க..

அந்தம்மா - "அரை உசுரு தான் இங்க இருக்கு.அதுக்கு எதுக்கு சாப்பாடு...??" (ஏன்னா வூட்டுக்கார் வீட்டை விட்டு ஓடிட்டார், இவங்க சோகத்தில் இருக்காங்க)

நான் உடனே என் வூட்டுக்காரைப்பாத்து..

"ஏன்ப்பா..நான் சென்னை போயிட்டா,  உங்க அரை உசுரும் போயிடுமே என்னப்பா செய்வீங்க? " ன்னு முகத்தை சீரியல் ஃபீலிங் எஃபெக்டோட வச்சிக்கிட்டு ரொம்ப சோகமா கேட்டேன்..

டகால் னு என் பக்கம் திரும்பி..

"மிச்சமிருக்க அரை உசுரோட நல்லா சாப்பிட்டு நல்லா தூங்கி நல்லா சுத்திக்கிட்டு நிம்மதியா இருப்பேன்.."

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ர் *************

 ஒரு வேலையாக மாம்ஸ் ஆபிஸ் போயிருந்தேன். அவர் ரூமில் அவரை ஃபோட்டோ எடுத்து புள்ளைக்கு வாட்சப்பில் அனுப்பினேன்.

"ஏன் அவரு நெக் பேல்ட் போடல?

"அவரு ரொம்ப நாளா போட்டுக்கறது இல்லையே"

"டாக்டர் சொன்னாரா?"

"இல்ல, அவரே தான் போட்டுக்கறது  இல்ல"

"ஏன் நீ அவரை உன்ன மாதிரி மாத்தின"

"ம்க்கும் .... போட்டுக்கோங்கன்னு சொன்னா சிடு சிடுன்னு திட்றாரு... "

"டாக்டர் சொல்ற வர கழட்டக்கூடாது, வலி இல்லன்னா சரி ஆகிடுத்துன்னு அர்த்தம் இல்ல"

"அடேய்..இதெல்லாம் நீ அவர் கிட்ட நேரா சொல்லு..ஏன் என் உயிர வாங்கற? "

"அவரு என்னை திருத்த உன்னை அனுப்பறாரு இல்ல..for the same reason am sending you to him , no direct dealing...."

"அடப்பாவி..?!!! "

**************

தங்கும் விடுதியின் முகப்பு அறை, வூட்டுக்கார் அறை வாடகையை கொடுத்துட்டு இருந்தார்.

முகப்பு அறையில் ஒரு பக்கம் சுவர் ஓரமாக, ஒரு மிஷின் இருந்தது. கிட்டக்க போய்  பார்த்தேன். மிஷினின் மேல் பக்கம் Brown, Cream, Black என்று சரியான இடைவெளியில் எழுதியிருந்ந்தது. கீழே ஒரு உருளை, உருளையிலிருந்து காஃபி மிஷினில் இருப்பது போல சின்ன குழாய் போல் தெரிந்தது. சரி காஃபி மிஷின் போல, ரிப்பேர்னு இங்க வச்சியிருக்காங்க..ன்னு நானே நினைச்சிக்கிட்டு, அங்கு நின்றிருந்த, விடுதியில் வேலை செய்யும் ஒருவரிடம்..

ஹே க்யா? காஃபி மிஷின் ஹே?!!

"நஹி மேடம், ஓ ஷூ பாலிஷிங் மிஷின்.."

அவ்வ்... ஷூ பாலிஷ் மிஷினா...? இதையா காஃபி மிஷின் னு நினைச்சேன்.. ஆஹா எம்புட்டு அறிவுன்னு, அதை திரும்ப  நோட்டம் விட்டேன்,, ஷூ பாலிஷ் செய்ய பிரஷ் போன்ற அமைப்பும் இருந்தன.

நாம தான் ஓட்டவாயாச்சே.. வெக்கம் மானம் எல்லாம் பாக்காம வூட்டுக்கார்கிட்ட வந்து விசயத்தை சொன்னேன்.

அடிப்பாவி.. அது ஷூ பாலிஷ் மிஷின்னு தெரியாதா? ன்னு குபுக் குன்னு சிரிப்பு..

அவர் சிரிக்கும் போதே, பின்னாடி லைட்டா திரும்பி பாத்தேன். எனக்கு பதில் சொல்லும் போது சிரிக்காத அந்த வேலையாள் இப்போது சிரிப்பை மறைக்க முடியாமல் சிரிச்சிட்டு இருந்தாரூ..

....வூட்டுக்காரிடம் , பாருங்க உங்களால தான் அவரும் சிரிக்கறாரு...

"யாரா இருந்தாலும் சிரிப்பாங்க. உனக்கு ஓன்னு தெரியலைன்னா நேரா ..அது என்னன்னு கேட்டிருக்கலாம் இல்ல.... ஏன் காஃபி மிஷினா ன்னு கேட்டு அசிங்கப்பட்ட?"

ஆமா கேட்டிருக்கலாம். ஷூ வ மிஷின் ல பாலிஷ் பண்ணுவாங்கன்னு சத்தியமா எனக்குத்தெரியாது, இப்ப தான் முதல் முறையா பாக்கறேன். அதும் க்ரீம் னு எழுதியிருந்ததால் தான் காஃபின்னு நினைச்சிட்டேன்.. :((

# வெறி big பல்பு :((

***********
"இவருக்கு (விக்ரம்) ரொம்ப வயசாகிடுச்சிப்பா, இன்னும் என்ன ஹீரோ? இனிமே அப்பாவா தாத்தாவா நடிக்கலாம், பாக்க சகிக்கல.."

ஒரு மாதிரியா என்னை திரும்பி பாத்தாரூ.... (அப்பவே உசாரா ஆகியிருக்கனும்)

"அட... ஏன்ப்பா அப்படி பாக்கறீங்க.. (சன் டிவியில் சைமா நிகழ்ச்சி பாத்துட்டே இருக்கோம்) நீங்களேப்பாருங்க.. தாடையெல்லாம் கீழ இறங்கிப்போச்சி.. ரொம்ப வயசு தெரியுது... (இன்னொ்ரு சேனலில் அர்ஜுன் படம்) அந்த அர்ஜூன் கூட.. ரொம்ப வயசு தெரியுது. பொண்ணுங்களுக்கு கல்யாணம் செய்துக்கொடுத்து பேரக்கொழந்த எடுத்தது எல்லாம்  ஏன் இன்னும் ஹீரோவா நடிச்சி தொலைக்கறாங்க.....

நிதானமா திரும்பிப்பாத்து.. "ஏண்டி உனக்கு மனசாட்சியே இல்லையா? உங்க தலைவருக்கு என்ன 16 வயசா?  அவரு நடிச்சா மட்டும் விசில் அடிச்சி பாக்கற? அவருக்கு வயசே தெரியலையா..? இதெல்லாம் முதல்ல அவருக்கு சொல்லு.."

ஆஆஆவ்வ்வ்வ்... (இதுக்கு தான் முதல்லேயே லுக்கு விட்டாரோ..??...) அவரு வேற இவங்கெல்லாம் வேற... எங்க தலைவர் ஸ்டைல் அழகு எல்லாம் இவங்களுக்கு வருமா?....இந்த வயசில் அவரு.....

வாயில் கையை வச்சி மூடி காமிச்சார்...

நானும் கப் சிப்........

**************
பீட்டர் தாத்ஸ் ;  You dont choose your family. They are God's Gift to you, as you are to them. -Desmond Tutu
u don't choose your family. They are God's gift to you, as you are to them. Desmond Tutu
Read more at: http://www.brainyquote.com/quotes/topics/topic_family.html
You don't choose your family. They are God's gift to you, as you are to them. Desmond Tutu
Read more at: http://www.brainyquote.com/quotes/topics/topic_family.html
You don't choose your family. They are God's gift to you, as you are to them. Desmond Tutu
Read more at: http://www.brainyquote.com/quotes/topics/topic_family.html

எங்க வீட்டு சமையல் - தீபாவளி இனிப்பு "Chum Chum"

Chum Chum : இது ஒரு பெங்காலி ஸ்வீட். இங்க அநேகமாக எல்லா ஸ்வீட்டுமே ரசகுல்லாவின் அடிப்படையில் செய்யப்படுபவை. பனீரிலிருந்து செய்யப்படும் இனிப்புகளே அதிகம். செய்முறையில் கொஞ்சம் வித்தியாசங்கள் இருக்கும். ரசகுல்லாவை விட Chum Chum ருசியாக இருக்கும். செய்வதும் மிக எளிது.

தேவையான பொருட்கள் :

பால் - ஒரு லிட்டர்,
எலுமிச்சை 2,
சர்க்கரை 1/2 கிலோ,
ஏலக்காய் பொடி - ஒரு ஸ்பூன்
ஸ்வீட் கண்டன்ஸ்ட் மில்க் - 3 ஸ்பூன்
உலர்ந்த தேங்காய் துருவல் - 5 ஸ்பூன்
பிஸ்தா பருப்பு &  பொடி - 3 ஸ்பூன்
எலுமிச்சை நிற கலர் பொடி- 1/4 ஸ்பூன்

பனீர் தயாரிக்கும் முறை : பாலை காய்த்து, அடுப்பிலிருந்து இறக்கி 1 நிமிடம் ஆறவைத்து, அதில் வடிக்கட்டிய எலுமிச்சை சாற்றை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மெதுவாக கலக்கவும். பால் திரிந்து வந்தவுடன், அதில் பச்சைத்தண்ணீரை ஊற்றி சூட்டைக்குறைக்கவும். இதனால் பனீர் மேற்கொண்டு வேகாமல் இருக்கும். அதிகம் வெந்துவிட்டால், கடினமாக ஆகிவிடும்.
ஒரு வெள்ளைத்துணியை எடுத்து, அதில் இதைக்கொட்டி வடிக்கட்டி, நன்கு பிழிந்து 30நிமிடம் அப்படியே வைத்துவிடவும்.

Chum Chum செய்முறை : 30 நிமிடம் கழித்து,  பனீரை  அகன்ற தட்டில் கொட்டி, பின் உள்ளங்கையால் நன்கு தேய்த்து கட்டிமுட்டி இல்லாமல் 4-5 நிமிடம் தேய்த்து பிசையவும்.. பின்பு உருண்டையாக உருட்டி வைத்து, அதிலிருந்து சின்ன எலுமிச்சை அளவு எடுத்து இலை வடிவிலும்,டைமன்ட் வடிவிலும், சிலிண்டர் வடிவிலும் செய்து வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் அடி கனமான அகலமான பாத்திரம் வைத்து, சர்க்கரையைக்கொட்டி, அதில் 1 1/4 லிட்டர் தண்ணீர் விட்டு அத்துடன் எலக்காய் பொடி, கலர் பொடி இரண்டையும் சேர்த்து கலக்கி, சர்க்கரை கரைந்து கொதித்தவுடன் , தயாராக உள்ள Chum Chum ஐ அதில் போட்டு 15-20 நிமிடம் வேகவைக்கவும். பாகில் போடும் முன் இருந்த அளவைப்போல இரண்டு மடங்காக உப்பி வரும், அப்போது ஜல்லிக்கரண்டிக்கொண்டு எடுத்து ஒரு தட்டில் வைத்து, ஆறவிடவும்.  இதை மூன்று விதமாக அலங்கரித்து பரிமாறலாம்.

1. உலர்ந்த தேங்காயை இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து தட்டில் கொட்டி, அதில் இலை வடிவ Chum Chum ஐ பிரட்டி, அதன் மேல் கொஞ்சம் பிஸ்தா பொடியைத்தூவி வைக்கவும்.

2.டைமன் வடிவ Chum Chum மில் ஸ்வீட் கண்டன்ஸ்ட் மில்கை நீட்டு வாட்டத்தில் மேல் பக்கத்தில் விட்டு, அதன்மேல் பிஸ்தா வை  சிறு துண்டுகளாக்கி தூவி மென்மையாக அது பதியும் படி அழுத்திவிடவும்

3. ஸ்வீட் கண்டன்ஸ்டு மில்க் 2 ஸ்பூன், தேங்காய் துருவல் 2 ஸ்பூன், எலக்க்காய் தூள் 1 சிட்டிகை, பிஸ்தா பொடி 1 ஸ்பூன் சேர்த்து நன்கு கலக்கி, சிலிண்டர் வடிவ Chum Chum மில் நடுவில் கத்தியால் கீறி, இந்த கலவையை  அதுனுள் வைக்கவும்.

இதனை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து எடுத்து, பின்னர் அலங்கரித்து உடனே சாப்பிடலாம், அல்லது அலங்கரித்து முடித்து ஃப்ரிஜ்ஜில் வைத்தும் சாப்பிடலாம்.

குறிப்பு :

-> பாகு ரொம்ப கெட்டியாகக்கூடாது. கெட்டியானால் Chum Chum உப்பி வந்தாலும் அமுங்கிடும்.
-> பனீர் வடிகட்டி 30 நிமிடம் துணியிலேயே கட்டி வைத்துவிட்டு , பின்பு எடுத்து செய்தால், மிருதுவாக வரும்.
-> கலரை பனீர் பிசையும் போது கடைசியாக கலந்தும் பிசைந்து வைத்துக்கொள்ளலாம்.
-> கடையில் கிடைக்கும் பனீர் வைத்தும் செய்யலாம். பிசையும் போது அதிக நேரம் பிசைய வேண்டும், தேவைப்பட்டால் 2 ஸ்பூன் ரவை, அல்லது 2 ஸ்பூன் arrowroot மாவு சேர்த்து பிசைந்து செய்யலாம். மிருதுவாக வரும்.
-> ஷேப் செய்யும் போது விரிசல் இருக்கக்கூடாது. விரிசல் இருந்தால் வேகும் போது பனீர் வெடித்து பிரிந்துவிடும்.

Images : Thx Google. 

சோனா கஞ்ச் #2 - சென்றுவந்த அனுபவம்

இந்தப்பதிவை படிக்கும் முன், சோனா கஞ்ச் பற்றி 2010 ல்,  எழுதிய பதிவை படித்துவிட்டு, தொடர்ந்து படித்தால் எளிதாக புரியும்.

சோனா கஞ்ச், கொல்கத்தாவின் மத்திய பகுதியில், பழமை மிகுந்த, மக்கள் மிகவும் அதிகமாக புழங்கும் இடத்தில் உள்ளது. கொல்கத்தாவில் மிக புகழ்பெற்ற பல காலங்களாக அவர்களின் பாரம்பரிய உணவின் ருசி மாறாமல், பலகாரங்கள் விற்பனை செய்து வரும் 'மித்ரா' உணவகத்தின், பின் வாசல் இருக்கும் சாலையில் தொடங்குகிறது.

T வடிவில் சாலைகள், ஒவ்வொன்றும் அதிகபட்சம் 500 மீ இருக்கலாம், பிரதான சாலையிலிருந்து, இந்த இடத்தின் வழியாக பலர் கடந்து அந்தப்பக்கம் இருக்கும் வேறொரு பிரதான சாலைக்கு செல்கின்றனர். அதனால் இது ஒரு பொதுவழியாகவே எனக்குப்பட்டது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள, கடைத்தெருவாகவும் இருக்கிறது. உள்ளே மிகச்சிறிய சிறிய சாலைகள் பிரிந்து சென்றன, நெடுக நெருக்கமான அடுக்குமாடி குடியிருப்புகள். (படத்தில் பார்க்கலாம்).

அந்த சாலைகளில், அந்த மக்களுடன் நடக்க ஆரம்பித்தவுடன், இதுவும் ஒரு சாதாரண இடம் என புரிந்துவிடுவதால், நமக்குள் இருக்கும் தயக்க நிலை மறைந்து சகஜ நிலைக்கு தானாக வந்துவிடமுடிகிறது. T சாலையின் நடுமுக்கில் நின்று மூன்று பக்கமும் திரும்பி புகைப்படும் எடுத்துக்கொண்டேன். அப்போது, என் கணவர் காதோரம் "போலீஸ்" என்றார். பதட்டமில்லாமல் திரும்பிபார்த்தேன், T சாலையின் மத்தியில் சாலை ஓரமாக பெஞ்சில் ஒரு போலிஸ் தேமே'வென உட்கார்ந்திருந்தார். பிரச்சனை எதும் வரக்கூடாது/வந்தால் சமாளிக்க இவர் இருக்கிறார் என கூடுதல் தகவலையும் கணவர் சொல்லவும், நான் நடுரோட்டில் நின்று புகைப்படும் எடுத்தும் காவலர் கண்டுக்கொள்ளாமல் இருந்ததாலும், தைரியம் அதிகம் வர, மொபைலை மறைக்காமல், சுற்றும் முற்றும் கவனித்துவாரே ஃபோட்டோ எடுத்துபடி மெதுவாக நடந்தேன்.

இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பாலியல் தொழில், அரசின் அங்கீகாரத்தோடு நடத்தப்படும் ஒரு இடமாக அறியப்படுவது சோனா கஞ்ச். இந்தியாவில் அதிகளவில் எய்ட்ஸ் நோயாளிகள் அறியப்பட்டதும் இங்கே தான்.

தொடர்ந்து எழுதுவதற்கு முன், இப்படியான ஒரு இடத்திற்கு, தன் மனைவியை அழைத்து செல்கிறோம், அவளை மற்றவர்கள் எப்படிப்பார்ப்பார்கள்? என்ன நினைப்பார்கள் என்ற எந்தவித சிந்தனையும் எண்ணங்களும் இன்றி தைரியமாக, நான் ஆசைப்பட்டேன் என்பதற்காக அழைத்து சென்ற என் கணவருக்கு என் மனமார்ந்த நன்றியை சொல்லிக்கொண்டு தொடர்கிறேன்.

ஒரு ஆண் இங்கு செல்வதற்கும், அவனுடைய மனநிலைக்கும், என்னுடைய மனநிலைக்கும் அதிக வேறுபாடு உண்டு. அவனுக்கு இருக்கும் படப்படப்பு,, குற்ற உணர்வு இத்தியாதிகள் எனக்கில்லை. அந்த இடத்தை நான் பார்ப்பதற்கும் ஒரு ஆண் பார்ப்பதற்கும் நிச்சயம் அதிக வித்தியாசம் உண்டு.

என் முந்தய பதிவில் 65000 பாலியல் தொழிலாளிகள் இங்கு இருப்பதாக எழுதியிருக்கிறேன். நேரில் அப்படியிருக்க வாய்ப்பில்லை. வெகுவாக இந்த தொழில் இங்கே குறைந்துக்கொண்டே வருகிறது என்றும் கொள்ளலாம். அதிகபட்சமாக 30-40 பெண்களை பார்த்திருப்பேன். நாங்கள் சென்றது பகல் நேரம், ஒருவேளை இரவாக இருந்திருந்தால் இந்த எண்ணிக்கை மாறலாம், இருப்பினும் 65000 இருக்க வாய்ப்பேயில்லை

20-30 நிமிடங்களில் நடந்து சென்றாலே முடிந்துவிடுமளவு சுற்றளவு கொண்ட இடம். மிக சாதாரணமாக மக்கள் இங்கே அவர்களின் அன்றாட வேலைகளை செய்துவருகிறார்கள். ஆண்கள் மிக இயல்பாக தங்கள் வேலையைப்பார்த்து கொண்டு இருக்கின்றனர். கடை வைத்திருப்பவர்கள், உட்பட இவர்கள் அனைவரும் பெண்களுக்கு வேண்டப்பட்டவர்களாக, தரகர்களாகவும் இருக்கலாம். அல்லது அவர்களுக்கு சம்பந்தமில்லாத, அங்கு வசிப்பவர்களாகவும் இருக்கலாம். ஒரு sensitive ஆன இடத்தில் நான் இருக்கிறேன் என்ற எண்ணமே எனக்கு வரவில்லை.
கொல்கத்தாவின் மற்ற தெருக்களில் எப்படி நடந்தேனோ அப்படிதான் இங்கும் நடந்தேன், உணர்ந்தேன்.மற்ற இடங்களில் வேற்று மாநிலத்தவளாக என்னை எப்படி வித்தியாசமாக பார்த்தார்களோ அப்படியே தான் இங்கும் என்னை பார்த்தனர்.

பாலியல் தொழிலாளிகள் பற்றி :-

இங்கே செல்வதற்கு முன், குழந்தைகள் யாரையும் நான் பார்த்துவிடக்கூடாது என பிரார்த்தனை செய்தவாரே சென்றேன். என் பிரார்த்தனை வீண் போகவில்லை. ஒரு குழந்தைக்கூட என் கண்ணில் படவில்லை. :)

பாலியல் செய்யும் பெண்களை, சமூகம் இங்கே தனியாக ஒதுக்கிவைக்கவில்லை. சாதாரண மக்களோடு கலந்தே இருக்கின்றனர்.

மீன் விற்கும் ஒரு பெண்ணோ, காய்கறி விற்கும் ஒரு பெண்ணோ நமக்கு எப்படி தெரிவார்களோ, அப்படிதான் எனக்கு இவர்களும் தெரிந்தனர்.

மற்ற வேலைகள் போலவே, வருமானத்திற்காக, வாடிக்கையாளர்களை எதிர்ப்பார்த்து காத்திருந்தனர்.
 
பெண்களின் முகத்தில் எந்த ஒரு சங்கடமோ, கஷ்டமோ, சலனமோ தெரியவில்லை. பழகி இருக்கலாம், எளிதான தொழிலாகவும் இருக்கலாம்.

மிக அழகானவர்களிலிருந்து, மிக சுமாரான அழகுடைய பெண்களும், வயதான, மிகவும் குண்டான, குள்ளமான பெண்களும் கலந்திருந்தனர்.

அத்தனை கூட்டத்திலும், இவர்கள் தான் உடல் சேவை செய்து, சம்பாதிக்கிறார்கள் என்பதை, பெண்ணான எனக்கே புரியமளவிற்கு தங்களை அழகு செய்துக்கொண்டிருந்தனர்.

ஆண்களின் தேவையறிந்து, அவர்களுக்காக மட்டுமே இந்த தொழில் செய்வதால், அவர்களை கவரும்படியான உடைகள் அணிந்திருந்தனர். மார்பகங்கள் தெரியும்படியாக Low Neck, உள்ளாடை பட்டைகள் தோள்களில் தெரியும்படியான கையில்லாத, மிக இறுக்கமான மேல் சட்டைகளையே (T-shirt type) அணிந்திருந்தனர், கூடுதலான முகப்பூச்சி, அலங்காரம், இத்தியாதிகள். சிலர் புடவைக்கட்டி இருந்தாலும், உடல் தெரியும்படியான மெல்லிய புடவைகள் கட்டி சிலைகளைப்போல நின்றிருந்தனர்.

திருமணம் ஆனவர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நெற்றி வகிட்டில் நீண்ட செந்தூரம் இட்டுக்கொண்டு இருந்ததால், தனியாக தெரிந்தனர்.

T சாலையில், ஒரு பக்க  சாலையில் நின்ற பெண்கள் எல்லோரது கையிலும் சின்னதாக ஒரு கைப்பை இருந்தது, ஆக, வாடிக்கையாளர் கிடைத்ததும், அவருடன் வெளியில் செல்ல தயாராக இருந்தனர். மற்றொரு தெருவில் இருந்தவர்களுக்கு அங்கேயே இதற்கான வசதி இருக்கும் போல. மிகக் குறுகிய வாயில்களைக்கொண்ட, சின்ன சின்ன வரிசை அடுக்கு மாடி வீடுகளே இருந்தன. (படத்தில் பார்க்கலாம்).

வழி நெடுக, இப்படியான பெண்கள் விதவிதமான கவர்ச்சி உடைகளில் சாலை ஓரமாக நின்றுக்கொண்டோ, நாற்காலிப்போட்டு வரிசையாக அமர்ந்துக்கொண்டோ இருந்தனர்.

சில பெண்களை தேடிவந்த ஆண்களிடம், பண பேரம் நடந்துக்கொண்டு இருந்தது.

கோயில் வாசலில் கடைத்தெருவுகளில் பொருட்கள் விற்க நாம் நடக்க கூடவே தொடர்ந்து வந்து வியாபாரம் செய்வது போல, ஒரு பெண்ணிடம் பேரம் படிந்து, பணத்தைக்கொடுத்து, அவருடன் காரை நோக்கி நடந்துக்கொண்டிருந்த ஒரு வாடிக்கையாளரிடம், இன்னொரு பெண் சென்று, தன்னை அழைத்துசெல்ல கெஞ்சிக்கொண்டே பின் தொடர்ந்தார்.

சோனா கஞ்ச் 'ஐ ஒட்டிய, முக்கிய பிரதான சாலையிலும் பெண்கள் வரிசையாக நின்றுக்கொண்டிருந்தனர். இது வாடிக்கையாளர்களின் வசதிக்காக () வியாபாரத்திறமை ஆக இருக்கலாம்.. உள்ளே வந்து பலர் இருக்குமிடத்தில் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து, தரகர்களுக்கு பணம் கொடுத்துன்னு வாடிக்கையாளர்களின் சிரமத்தை க்குறைக்கவும், வெளியில் நின்றிருந்தால், சீக்கிரம் வேலைக்கிடைக்கும், உள்ளே கார் சென்று திரும்புமளவு பெரிய இடமும் இல்லை, ஆக காரில் வரும் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக பிரதான சாலையில் நின்றிருந்தனர் என ஊகிக்க முடிந்தது. மேலே சொன்ன கார் வாடிக்கையாளரை இங்கே தான் பார்த்தேன்.

கவனித்த வரையில், வெளி மாநிலத்து பெண்கள் இருக்கும் அறிகுறியே இல்லை. குறிப்பாக தென்னிந்திய பெண்கள் யாருமேயில்லை. இதனை அழுத்தி சொல்லக்காரணம், பொதுவாக வடகிழக்கு பகுதி பெண்கள் உயரம் மிகவும் குறைந்தவர்கள், உடல் வாகு, முகம் போன்றவை எல்லாமே வடகிழக்கு பகுதியை சேர்ந்த பெண்களே என சொல்லாமல் சொல்கிறது.

இது அவர்களின் வாழ்க்கை, அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதை சுதந்திரமாக முடிவெடுத்து செய்கின்றனர். யாருக்கும் கட்டுப்பட்டு அவர்கள் செய்வதாக எனக்குத்தெரியவில்லை. ஏனென்றால் அந்த இடத்தைவிட்டு வரவேண்டும் என்று நினைக்கும் பெண், சென்ற பதிவில் சொல்லியபடி, மிக எளிதாக வந்துவிட முடியும். கடுமையான கட்டுப்பாடு என்ற ஒன்று அங்கு இருப்பதாக தெரியவில்லை. நானும் அவரும் சாதாரணமாக சுற்றி வந்தோம். வாய்ப்பு கிடைத்திருந்தால்,அங்கிருந்த தேநீர் கடைகளில் அந்த பெண்களோடு சேர்ந்து தேநீர் குடித்திருக்கலாம், பேசியிருக்கலாம். மற்ற தொழில்கள் போலவே ஏதோ ஒரு காரணம், சந்தர்ப்பம், சூழ்நிலை இந்த தொழிலை செய்ய வந்துவிட்டனர். அதனை வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப செய்து சம்பாதிக்கிறார்கள். சந்தோஷமாக இருக்கிறார்கள்.

மற்ற மாநிலங்களில் திருட்டுத்தனமாக அதிகளவில் நடக்கும் இத்தொழில் இங்கு அங்கீகாரத்தோடு வெளிப்படையாக நடக்கிறது !! அவ்வளவே !!

பீட்டர் தாதஸ் : “I was bleeding but hoped he wouldn’t notice. I do this sometimes; a game I personally call, I have my period, let’s see if I can hide it! A darkish room and quick condom removal (make it seem like you’re just really nice and thorough, and use baby wipes to take it off) and even quicker moving of towels to cover any spots on the bed take care of this-though more than once I then saw smears on the pillowcase. Dirty! I love it. I want to not, like, ruby-shower heavy bleed on someone, but reach inside myself with a couple fingers and write my name on a dude’s chest with it. C-h-l-o-e. Smiley face.”
― Kelley Kenney, Prose and Lore: Memoir Stories About Sex Work   

சர்பம்

பாம்பு, என் கண்ணில் அடிக்கடி படக்கூடியது, பயமில்லை தான். நாம ஒன்னும் செய்யாதவரை அதும் ஏதும் நம்மை செய்வதில்லை என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை. பாம்புக்கு காதில்லை, நம் காலடி அதிர்வுகளை க்கொண்டு வேகவேகமாக கடந்துப்போகும். அதிலிருந்தே, நாம் அதைப்பார்த்து பயப்படுவதுப்போல அதும் நம்மைப்பார்த்து பயப்படுதுன்னு ஒரு தைரியம் வந்துவிடும்..

பாம்பு கனவுகளும் எனக்கு புதிதல்ல. ஒரு நாளும் பாம்பு கனவுகள் என்னை பயமுறுத்தியதல்ல. எப்பவும் எனக்கும் அதற்கும் ஒரு ஸ்நேகம் இருக்கும்.

அதான் என் வூட்டுக்கார் கனவெல்லாம் எழுதி வைக்க சொல்லி இருக்காறே, போன வாரத்தில் வந்த பாம்பு கனவுக்குள் போகலாமா?

*******
மிக நீளமான கருப்பு பாம்பு, 6 அடி இருக்கும், வீட்டினுள் வருகிறது. நானும் அவரும் அமர்ந்து பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். அது எங்களை கண்டுக்கல, நாங்கள் கண்டுக்கிட்டாலும் காட்டிகல. அது எதாது செய்துவிடும் என்ற பயமெதும் எங்களுக்கு இருப்பதாக தெரியல. உள்ளே அறையில் சென்று சுருண்டுப்படுத்துக்குது.

"இருங்கப்பா, அதை எடுத்து வெளியில்போட்டுட்டு வரேன்", னு சென்று சர்வ சாதாரணமாக அதன் வாலைப்பிடித்து தூக்கி எடுத்துட்டு வரேன். அது நான் தூக்கிட்டு வரும் போது, எந்த ரியாக்ஷனும் பண்ணாமல் பேசாமல் இருக்கு, அதனைத்தூக்கிப்பிடித்து, , அவரிடம் அது எப்படி இருக்குன்னு காட்டறேன். எனக்கு ஏதோ ஒரு மீன்'ஐ கையில் பிடிச்சிக்கிட்டு இருக்காப்ல இருக்கே ஒழிய, பாம்பை பிடிச்சிருக்கோம்னு தோணல, அந்த பாம்பின் உடல் அப்படித்தான் இருந்தது, என்ன வகைன்னு தெரியல....

சன்னல் வழியாக மிக சாதாரணமாக ஏதோ பூச்சியை பிடிச்சி விடாற்பல விடறேன். அவரோ, "ஏண்டி இங்கவே விடற, அது திரும்ப வீட்டுக்குள் தான் வரும், வெளியில் போய் தூரமாய் விட்டுட்டு வரலாமில்ல" னு சொல்றார். அதே சமயம் நவீன் என் பக்கத்தில் வந்து உட்கார்றான். அவரும் நானும், அது என்ன செய்யுதுன்னு சன்னல் வழியா அதையே பார்க்கிறொம்.

அவர் சொன்னபடியே, அது யூ ட்ர்ன் அடிச்சி திரும்ப வீட்டுக்குள் மெதுவா வர ஆரம்பிக்குது. அது வரும் வழியில் தான் நவீன் உட்கார்ந்திருக்கான். அது ஒன்னும் செய்யாது என்று எனக்கு தோன்றினாலும், நவீன் அதனை எதாது
செய்ய, அது திரும்ப எதாச்சும் செய்யுமோன்னு, அவனை இடுப்பை அணைத்து என் பக்கமாக இழுத்து, "அசையாமல் கொஞ்சம் நேரம் அப்படியே உக்காரு குட்டி, அது போயிடட்டும்"னு சொல்றேன். கையை அவன் மேலிருந்து எடுக்காமல், அது அவனை கடந்து செல்லும் வரை என் பக்கமாகவே இழுத்துப்பிடிக்கிறேன். அது நவீனின் ஓரமாக மெதுவாக நழுவி நழுவி உள்ளேப்போகுகிறது.

அவன் இது எதையும் கவனிக்காமல், மொபைலை நோண்டிட்டு இருக்கான். அது முன்னப்போலவே உள்ளப்போயி சுருண்டு படுத்துக்குது.

இப்ப அதனை திரும்ப தொந்தரவு செய்ய நானும் நினைக்கல, அவரும் எதும் சொல்லல. ஆனா அது அங்க இருக்கக்கூடாதுன்னு மட்டும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நினைக்கிறோம். அவர் பார்வையை புரிந்தவளாக, "சரிப்பா, நான் பாம்பு பிடிக்கறவங்க யாராச்சும் வரவைக்கிறேன்" னு சொல்லிட்டே பாம்பை திரும்பி பார்க்கிறேன்.

கனவு கலைந்துவிட்டது... 

படங்கள் : நன்றி கூகுள் 

பாரிஸ் பயணக்குறிப்புகள் #9


மொத்தம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்த Louvre மியூசியத்தில், முதலில் எதனைப்பார்க்கலாமென, டிக்கட்டோடு அவர்கள் கொடுத்திருந்த லீஃப்லெட்களை வைத்து தேர்வு செய்து, உள்ளே சென்றார், பின்னால் நானும். முதல் தளத்தில் ஆரம்பித்தது, சிலைகளையும், ஓவியங்களையும் பார்த்தபடி வந்துக்கொண்டிருந்தேன். பெண்களின் சிலைகள் அநேகமாக அரை/முழு நிர்வாணத்தோடே இருந்தன. ஆண் சிலைகளில் முழு நிர்வாண சிலைகள் இல்லவே இல்லை என்பது குறிப்பிட வேண்டியது, ஏன்னு எனக்கு தெரியல. பெண்களின் முழுநிர்வாணத்தை ரசிப்பதைப்போன்று ஆண்களை ரசிக்க முடியாது என்பதாலா? தெரியல. அவற்றை வடித்த சிற்பிகள் தான் விளக்கம் சொல்லனும் !
நடக்க நடக்க சீனத்து சுவர் போல நீண்டுக்கொண்டே சென்றது கூடவே கால் வலியும், சில அறைகளின் உள்ளே செல்லாமல் வெளியில் இருந்தே வேடிக்கைப்பார்த்துவிட்டு வந்தேன். அப்படி ஒரு அறையில் உள்ளே நுழையாமல் கடந்தபோது, என் கணவர் "இந்த அறையை மட்டும் உள்ளே சென்று பார்த்துவிடலாம் வா'னு அழைக்க.. "போங்கப்பா முடியல.. இன்னும் இரண்டு கட்டிடம் மிச்சமிருக்கு, நேரமும் இல்லை, நடக்கவும் முடியல..அதெல்லாம் எப்ப பார்க்கறது வாங்கன்னு" நான் அவரை இழுக்க..
"இல்லல்ல.. இதைமட்டும் உள்ள வந்து பாரு.. முக்கியமான அறை" னு சொல்ல, களைப்போடு உள்ளே போனேன்.
                 .................. ........... .............. .............. ...............
வியப்பில் விரிந்த கண்களோடு, பேச்சற்று, கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத அதிர்ச்சியில், வாய் லேசாக பிளக்க, முகம் இறுகி, அழுகை வந்துவிடுவேன் என என்னை அழுத்த.. பலவித உணர்ச்சிகளுக்கு ஆளாகி... தன்னிலை மறந்து நின்றேன். சற்று நேரம் கழித்து அவரை திரும்பிப்பார்க்கிறேன், "புருவம் உயர்த்தி, எப்பூடீ? ங்கற மாதிரி புன்னகை செய்ய..” நெகிழ்ந்துப்போனேன்.
ஆம்..அங்கே நான் பார்த்தது.. புகழ் பெற்ற ஓவியர் இலியானார்டோ தாவின்சியி வரைந்த மோனாலிசாவின் அசல் புகைப்படம். கூட்ட நெரிசலில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னே நகர்ந்து அருகே சென்றேன். இன்னமும் என்னால் நம்பவேமுடியவில்லை.. எப்படி நான் இங்கே? எப்படி இது சாத்தியம்? என் கண் எதிரில், நான் பார்ப்பது உண்மைதானா? இல்லை கனவா? என ஒன்றுமே எனக்கு புரியல..மோனாலிசா புகைப்படத்திலிருந்து என் கண்கள் நகரவேவில்லை, ஐக்கியமானேன்.
இவ்வளவு உணர்ச்சிவசப்பட காரணம்.... ??!!!
**********
திருமணம் ஆனவுடன், எனக்கு என்ன வேண்டும் எனக்கேட்ட என் கணவரிடம், ரொம்பவெல்லாம் யோசிக்காமல் "மோனாலிசா ஓவியம்" என்றேன். ஆனால் இத்தனை வருடங்கள் ஆகியும் அவர் வாங்கித்தரவில்லை. எப்போது கேட்டாலும் ஒரிஜினல் கிடைக்கலன்னு சொல்லி எஸ் ஆகிடுவார். நானும் எங்களுக்குள், எப்ப எதற்கு சண்டை வந்தாலும், சம்பந்தமேயில்லாமல் "முதல் முதலா கேட்ட கிஃப்ட் ஐ வாங்கித்தர முடியல..உங்களுக்கெல்லாம் ஒரு கல்யாணம்..” னு ஆரம்பிச்சி கழுவி ஊத்துவது தான் வழக்கம். ஆனால் எவ்வளவு கழுவி ஊத்தியும், ரோஷப்பட்டு அந்தப்படத்தை வாங்கித்தந்ததில்ல..
இதனால் என் மனதுக்குள் எப்போதும் ஒரு நிறைவேறாத ஆசை. ஆனால்... அன்று??!! உலகில் எத்தனையோ நாடுகள் இருக்க, ஃப்ரான்ஸ்க்கு வருவோம், அங்கே பாரிஸை சுற்றிப்பார்ப்போம் என்று தெரியாது, பாரிஸிலும் இந்த மியூசியம் வருவோம் என்று தெரியாது, இங்கு தான் மோனாலிசாவின் அசல் படம் இருக்கிறது என்றும் எனக்குத்தெரியாது. ஏன்னா நம்மோட ஜெனரல் நாலேஜ் அப்படி!. ஆனால் அவர் காலம் பூராவும் சொல்லியபடி... என்னை ஒரிஜினல் மோனாலிசா புகைப்படம் முன்பு நிற்க வைத்த அந்த நிமிடங்களை என்னால் வாழ்நாள் முழுக்க மறக்கவேமுடியாது அங்கிருந்த நிமிடங்கள் அத்தனையும் நெகிழ்ச்சியோடு பேச்சற்ற நிமிடங்களாக கடந்தன.
மோனாலிசா படத்தோடு சேர்த்து என்னை வீடியோ எடுத்தார், விதவிதமாக ஃபோட்டோ எடுத்தார். என்ன நடக்கிறது என்பதிலிருந்து வெளிவராத நான், இன்னமும் இறுக்கமான முகத்தோடே இருந்தேன். ஃபோட்டோ என்றால் பட்டுன்னு புன்னகை செய்யும் என்னால் மோனாலிசாவோடு எடுத்த எந்தப்புகைப்படத்திலும் புன்னகைக்க முடியவில்லை என்பது இப்பவும் அந்த புகைப்படங்களையும், வீடியோவையும் பார்க்கும் போது தெரிகிறது. ஆனால் எல்லாப்புகைப்படத்திலும் எனக்கும் சேர்த்து மோனாலிசா புன்னகைத்துக்கொண்டிருந்தார்... :)
அன்றிலிருந்து மோனாலிசா படம் வாங்கித்தரவில்லை என அவரை குத்திக்காட்டுவதை அடியோடு நிறுத்திவிட்டேன்.
Sea Life : நவீனோடு சென்ற ஒன்றிரண்டு இடங்களில் இதுவும் ஒன்று. என் குழந்தையோடு வெளியில் செல்வது புள்ளப்பூச்சியோடு வெளியில் செல்வதற்கு சமம். "ஏண்டா இப்படி நச்சரிச்சி தொலையற"ன்னு கேட்டால்.. "இதை நீ கேக்கக்கூடாது, நீ அடுத்தவங்கள எவ்ளோ புடுங்கறன்னு உனக்கு தெரிய வேணாம்? அதுக்கு தான்" னு கவுண்ட்டர் கொடுப்பான்.” “அய்யோஓஓ...என்னால முடியல, வீட்டுக்கு போய் தொலைக்கலாம்" னு சொல்றளவு தொந்தரவு செய்துடுவான்.. ஒரு நொடி என்னை விட்டு அப்படி இப்படி நகரமாட்டான், கையை வளைத்து இடுக்கிப்பிடி பிடிச்சிக்குவான், எப்பவும் என்னை உரசிக்கிட்டே இருக்கனும். இங்கவே அப்படிதான். இதுல வெளியூர்ல இரண்டு வருசமா தனியா இருக்கப்ப சொல்லவேணுமா.? .
கடல் வாழ் /நீர் வாழ் உயிரினங்கள் எக்கசக்கமாக இருந்தது. அவற்றைப்பார்ப்பதை விட, அவற்றை அவர்கள் பராமரிக்கும் விதம் பிரம்மிப்பாக இருந்தது. ஒரு பெரிய வீடு அளவிற்கு கண்ணாடி அறைகள், மிக சுத்தமான தண்ணீர், உள்ளே கடல்/நீர் நிலைகளைப் போன்ற அலங்காரங்கள். அந்த கண்ணாடி அறைகளின் மேலேயும், பக்கங்களிலும் நாம் நடந்து செல்லலாம். தண்ணீருக்குள் நாமும் இருப்பதாக ஒரு தோற்றப்பிழை. பெரிய பெரிய மீன்கள் நம் அருகில் வந்து செல்வது மயிற்கூச்சரிய செய்தது. மீன்கள் தவிர்த்து, பல்வேறு விதமான கடல்/நீர் வாழ் உயிரினங்களை காணமுடிந்தது. இணைப்பில் வீடியோவும் இருக்கிறது பாருங்கள்.
River Seine பாரிஸ்'ஸை சுற்றி ஓடும் இந்த ஆற்றை தனியாக சென்று பார்க்கவில்லை. போகிற இடமெல்லாம் கொசுறாக இதனையும் பார்த்து ரசித்துவந்தோம். நவீன் அவனுடைய ட்ரீட்டாக இந்த நதியில் செல்லும் சுற்றலா படகில், ஒரு இரவுக்கு புக் செய்திருந்தான். ஆனால் அவனோடு இருக்கவே விரும்புகிறோம் என சொல்லி மறுத்துவிட்டோம். என் புள்ளைக்கு சமைச்சிப்போட்டு, அவனோடு வம்பு வளத்தி, திரும்ப திட்டு வாங்கிட்டே இருக்கும் திருப்தி இந்த படகுப்பயணம் கொடுத்துவிடுமா என்ன?
உணவு வகைகள் : ரொட்டி, பீஸா, பர்கர் வகையறாக்களே. அவற்றோடு மாடு, பன்றி, கோழி போன்ற மாமிசங்களே இவர்களின் முதன்மை உணவுகள். ரொட்டி, சீஸ், வெண்ணெய், அவித்த மாமிசம், பச்சை அல்லது லேசாக அவித்த காய்கறிகள் சேர்த்து, மசாலா எதும் இல்லாமல் மிளகுத்தூள் உப்பு தூவி சாப்பிடுகிறார்கள். நாமறிந்த ஃப்ரென்ச் ஃப்ரை பிரசித்திப்பெற்றது. உருளை, கொடமிளகாய் போன்றவை அதிகளவில் சேர்த்துக்கொள்கிறார்கள். இவர்களின் பாரம்பரிய உணவு வகைகள் எதையும் ருசிப்பார்க்கவேயில்லை. முதல் காரணமாக எந்தவகை மாமிசம் என அறியமுடியவில்லை, ருசி எப்படியிருக்குமோ?, மற்றொன்று அதிகவிலை. விலை குறைந்த, மாமிசம் ஏதும் கலக்காத ரொட்டி வகைகள் எங்களுக்கு போதுமானதாக இருந்தது.. அவற்றில் சிக்கனில் செய்த சிக்கன் பனினி ரொம்பவே பிடித்தது. ரொட்டிக்குள் சிக்கன் வைத்து கிரில் செய்தால் அதுவே சிக்கன் பனினி (படம்) .தவிர, சாக்லெட் ஐஸ்க்ரீம் வகைகள் கண்களுக்குள் கொள்ளாமல் கொட்டிக்கிடக்கின்றன.

ஆடைகள்: பெண்கள் கழுத்தில் ஒரு மஃப்ளரை கட்டிக்கொள்கின்றனர். இவை கம்பளி நூலால் செய்தவை அல்ல. சாதாரண நைலான், ஜார்ஜட், காட்டன் துணிகளே. கழுத்தில் கட்டும் டையைப்போல, எந்தவித ஆடையோடும் மஃப்ளரை சுற்றிக்கொள்கின்றனர். கடைத்தெருக்களில் இந்த மஃப்ளர்கள் அதிகளவில் விற்கப்படுகின்றன. இதன் பலன் அநேகமாக குளிருக்கு அடக்கமாக இருக்கலாம். உடல் நிறத்திற்கு நேர் எதிரான, ஸ்கின் லெக்கிங்ஸ்அணிந்துக்கொள்கின்றனர். எத்திராஜ் கல்லூரியில் படித்தவள் என்பதால், மேல் சொன்ன இரண்டைத்தவிர, பாரிஸ்ஸில் பெண்கள் அணியும் ஆடைகள் எதும் புதிதாக தெரியவில்லை.


கவனத்தில் கொண்டவை: கறுப்பினதவர்கள், உள்நாட்டவர்களை போல அல்லாமல், பொது இடங்களில் சத்தமாக பேசுவது, பாடுவது, ஆடுவதுமாக கவனத்தை  ஈர்த்தனர். உடைகள், தலையலங்காரங்கள் என எல்லாமே இவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தியது.
நாம் குழந்தைகளை தோள்களில், கைகளில், இடுப்பில் தூக்கிக்கொள்வது போல யாருமே தூக்கவில்லை. தனியாக குழந்தைக்கான வண்டியில் வைத்தே ரயில், பேரூந்துகளில் அழைத்துவந்தனர். இதில் கைக்குழந்தைகளும் அடக்கம். தாய், தகப்பனின் அணைப்பே இக்குழந்தைகளுக்கு கிடைக்காதோ...என எண்ணத்தோன்றியது. கைக்குழந்தைகள் முதற்கொண்டு ஆண்கள் தனியாகவே குழந்தைகளை அழைத்துவந்தனர். பொதுவாக நம்மூரில் ஆண்களை நம்பி கைக்குழந்தைகளை கொடுக்கமாட்டோம்.
சென்ற இடங்கள் அத்தனையிலுமே, சாலைகளில் சைக்கிளுக்குக்கென்று தனிப்பாதை. சாலையை கடக்கும் போது, நடந்து செல்பவர்களுக்கே முன்னுரிமை. வாகனங்கள் எந்த வேகத்தில் வந்தாலும், பொறுமையாக நின்று, நடந்துசெல்பவர் கடந்தவுடனே தான் செல்கின்றன.
முதல் 2 பயணக்குறிப்புகளில் குறிப்பிட்டிருந்ததை நினைவுக்கொள்கிறேன். பாரிஸ்ஸில் இருந்த அத்தனை நாட்களும் மிகுந்த மன அழுத்தத்தோடு இருந்தேன், வெளியில் சென்று சுற்றிப்பார்க்கும் மனநிலையே எனக்கு இல்லை.24 மணி நேரமும், என் குழந்தைக்கு வேண்டுவன செய்து, அவனோடு இருக்கவே விரும்பினேன். ஆனால், அவருக்காக வெளியில் சென்று வந்தேன். அதனால் எழுதிய அனைத்துமே ஓரளவு கவனித்து எழுதியதே
10-11 டிகிரி குளிரில் ஸ்வெட்டர் இல்லாமல் வெளியில் செல்வது, குளிரை உணரும் போது, இருவருக்கும் நடுவில் நடந்து, நவீன் ஜெர்க்கின் பாக்கெட்டில் ஒரு கையும், அவரின் ஜெர்க்கின் பாக்கெட்டில் ஒரு கையும் விட்டுக்கொள்வது, வீட்டிலும் சன்னலை பப்பரப்பான்னு திறந்துவைத்துக்கொண்டு குளிரில் நின்றுக்கொள்வதுஅதே சமயம், பனி உள்ளே வந்து குளிரில் இருவரும் நடுங்குவதை பார்த்து, ஏன் இவங்களுக்கு குளிருதுன்னு வியப்பது, எப்பவும் அவர்களிடம் திட்டுவாங்கிவிட்டு சன்னலை மூடுவது என என் மன அழுத்தம் காரணமாக உயர் இரத்த அழுத்தம் அதிகமாகி என் உடல்நிலை இயல்பு நிலையில் இல்லை.
பாரிஸ் சுற்றுப்பயணத்தை எழுதத்தொடங்கி நடுவில் தொடரமுடியாமல் நிறுத்தி, திரும்ப ஓராண்டுக்குப் பிறகு, பயணத்தை முடிந்தளவு நினைவில் கொண்டுவந்து, எழுதிவிட்டேன். நிச்சயம் எதிர்காலத்தில் எனக்கு படிக்க உதவும் ! .
இத்தோடு பாரிஸ் பயணக்குறிப்புகள் நிறைவடைந்தன. ! என்  பயணக்குறிப்புகளில், இவை தான் அதிகளவு மக்களால் படிக்கப்பட்டு வருகிறது.  
பொறுமையோடு படித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி ! __/\__

பாரிஸ் பயணக்குறிப்புகள் #8

உள்ளூரில் இன்னும் நான்கு முக்கிய இடங்கள் பாக்கி, அவரின் அண்ணன் மகன் பாரிஸ்ஸில் இருந்தாரு, அவங்க வீட்டுக்கும் ஒரு மாலை பொழுதில் போயிட்டு வந்தோம். பார்த்த இடங்கள் எல்லாவற்றிற்கும் இணைப்புகள் கொடுத்திருக்கேன். படம் சேர்த்தால், நேரமும் இடமும் பிடிக்குது. அதனால் இணைப்புகளை க்ளிக்கி, படங்களையும், விபரங்களையும் தெரிந்துக்கொள்ளலாம்.
Sacre-Coeur :  இந்தியர்கள் ( Gare du nord) பகுதியிலிருந்து காலார நடந்து சென்றுக்கொண்டே இருந்தால், 15 நிமிடங்களில் இந்த சர்ச் வந்துவிடுகிறது. சிறிய குன்றின் மேல் அமைந்த இந்த சர்ச் மிகவும் பிரசித்தி பெற்றதாக இருந்தது. மேலிருந்து மாலை நேர சூரிய வெளிச்சத்தில் பாரிஸ் நகரம் மிக அழகாக தெரிந்தது. உள்ளே நுழையும் முன் வெளி மதில் சுவர் மேல் வைத்திருந்த சிலை ஒன்று திடீரென்று அசைந்து எல்லோரையும் பயமுறுத்தியது. சுதாரித்து பார்த்தால்..அட !! சிலைப்போல வேஷமிட்ட மனிதர்.. ஃபோட்டோவிற்கு சிலைப்போல போஸ் கொடுத்தார். இங்கும் கறுப்பினத்தவர்கள் ஐஃபில் டவர் பொம்மைகளை கூவி கூவி விற்றுக்கொண்டு இருந்தனர். ஒரு ஈரோவில் ஆரம்பித்து 10-15 ஈரோ வரை விலைகள் இருந்தன. நவீனுக்கு வேலைக்காக இந்த சர்ச்சில் வேண்டிக்கொண்டு மெழுகுவற்றி ஏற்றினேன்.
இங்கு, குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இயங்கும் கழிப்பிடம் இருந்தததால், சர்ச்'சின் ஒரு பகுதியில் சுற்றுளா பயணிகள் இயற்கை உபாதைக்கு ஒதுங்கி, துர்நாற்றம் வீசியது.
பக்கத்தில் நம்மூர் கோயில் இருப்பதாக சொன்னதில், வெகுதூரம் நடந்தும் கண்டுப்பிடிக்க முடியாமல், அவரின் அண்ணன் மகன் வீட்டுக்கு சென்றோம். கைப்பேசி வசதி எங்களுக்கு இல்லை, அதனால் முன்னமே இறங்கும் ரயில் நிலையம், வீட்டு முகவரி வாங்கிக்கொண்டு எத்தனை மணிக்கு வருகிறோம் போன்ற தகவலை சொல்லியிருந்தோம். ரயில் நிலையம் அச்சு அசலாக நம்மூர் கிராமத்து ரயில் நிலையம் போலவே இருந்தது, அவர் ரயில் நிலையம் வந்து எங்களை அழைத்துசென்றார்,அந்த இடம் பாரிஸ் நகரை தாண்டி புறநகர் பகுதி. நம்மூர் வீட்டுவசதிவாரிய குடியிருப்புகள் போன்றே இருந்தன, மூவர் கூட சரியாக நிற்கமுடியாத மிகக்குறுகிய லிஃப்ட்டில் 7 ஆவது மாடியிலிருந்த அவரின் குடியிருப்புக்கு சென்றோம். கட்டிடம் கட்டி பல வருடங்கள் இருக்கலாம். பாண்டிச்சேரியிலிருந்து ஃப்ரான்ஸ் குடியுரிமை பெற்று, பரம்பரையாக செட்டில் ஆகியிருந்த அந்த குடும்பத்தினருக்கு, அரசே அநேக சலுகைகள் செய்து வருகிறது. மாதந்தோரும் உதவித்தொகை, பிள்ளைகள் வேலைக்கு செல்ல அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்வதற்கான எந்தவித படிப்புக்கும் அரசே உதவுகிறது போன்ற தகவல்கள் எனக்கு அதிகபட்சமாகவே தெரிந்தன. இவை ஃப்ரான்ஸ்ஸில் குடியேறும் மற்ற நாட்டு அகதிகளுக்கும் பொருந்தும்.
மருமகள் சுட சுட சிக்கன் சமோசாவும், டீ யும் கொடுத்து உபசரிக்க, சிற்றூண்டி முடித்து, 7 ஆவது மாடியிலிருந்து, இரவு நேர பாரிஸ்ஸின் அழகை ரசித்துவிட்டு , வீடு வந்து சேர்ந்தோம்.
*********
மற்ற இடங்களைப் பார்க்க செல்லும் முன், ஐரோப்பாவின் பூக்கள் பற்றி சொல்லிவிடுகிறேன். எங்குப்பார்த்தாலும் கண்ணைப்பறிக்கும் விதவிதமான வண்ண வண்ணப்பூக்கள். குறிப்பாக நாங்கள் சென்றிருந்த மாதத்தில் மிக அருமையான தட்பவெப்ப சூழல் இருந்தது. மிதமான குளிர் (10-11 டிகிரி), லேசான மழைச்சாரல், சில நேரம் பலத்த மழை என சுற்றுப்பயணத்திற்கு ஏற்ற வானிலை ரசிக்கத்தக்க வகையில் இருந்தது.
பூக்களே......
சற்றே தயாராகுங்கள்...
கவிதா வந்துவிட்டாள்...
உங்களை படம் பிடிக்க..
ன்னு '' திரைப்பட பாடலை அடிக்கடி மனதிலும்/வாய்விட்டும் பாடிக்கொண்டே இருந்தேன்.
ஒரு பூவே
இன்னொரு பூவை
படம் பிடிக்கிறதே?!!
எனவும்.............. சரி சரி.. டென்ஷன் ஆவப்பிடாது... கூல் !!  
இந்தியா வந்தவுடன் புகைப்படங்களை சரிப்பார்த்து, கணினியில் சேமித்து வைக்கும் போது, ஐரோப்பாவின் பூக்கள் என்றே ஒரு ஆல்பம் தயார் செய்யுமளவு அதிகளவில் பூக்களை தான் படம் பிடித்திருந்தேன். பாரிஸை விட, ஜெனிவா & மான்ட் ப்ளான்க்'கில் தான் விதவிதமான பூக்கள் இருந்தன. பாரிஸ் & பார்சிலோனா'வில் வழிநெடுக மரங்களில் பூத்துக்குலுங்கிய பூக்கள், காய்ந்த இலைகளோடு சேர்ந்து நடைபாதைகளில் உதிர்ந்து, பெரிய பெரிய மலர் படுக்கை விரிப்புகளையும், அழகழகான கோலங்களையும் உருவாக்கியிருந்தன.
இவற்றை கண்டுக்களித்தவாரே அடுத்து சென்ற இடம் :
Notre Dame de Paris : சய்னி நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த சர்ச் மிகவும் வித்தியாசமான கட்டிட வடிவமைப்பில் சுற்றுளா பயணிகளை கவர்ந்தது. கோதிக் என்ற கட்டிடக்கலையின் அடிப்படையில் கட்டியிருக்கிறார்கள். நுழைவாயிலின் கதவுகளிலும், மேற்புற சுவரோடு ஒட்டி செதுக்கிய சிலைகளும் கவனத்தை ஈர்த்தன.  உள்ளேயும் ஆடம்பர விளக்குகள், ஆதீத உயரத்தில் மேல் கூரை ஓவியங்கள் என எல்லாமே பிரம்மாண்டமாக இருந்தன.
இங்கிருந்து சய்னி நதிக்கரையில் சற்று தூரம் நடந்து ஊரை சுற்றிப்பார்த்தோம். சாலையோர கடை ஒன்றில் பேன் கேக்கின் சிஸ்டர் என்று சொல்லப்படும் 'க்ரீப்ஸ்' உணவை தயாரித்துக் கொண்டிருந்தனர். இது வேற ஒன்னுமில்ல, நம்மூர் மைதா/கோதுமை தோசை தான். ஒருவேளை இந்த உணவை புதுச்சேரியிலிருந்து இவர்கள் கற்றுவந்திருக்கலாம். சீஸ், வெண்ணெய், நெய், சாக்லெட் என பல ஃப்ளேவர்களில் கலந்து விதவிதமான தோசைகளை, வித விதமான விலைகளில் விற்கிறார்கள். மாமிசம் கலக்கவில்லை (முட்டை மட்டும்) என்பதை ஊர்ஜிதம் செய்துக்கொண்டு, வெண்ணெய் தோசை ஒன்றை வாங்கி சாப்பிட்டோம். அடடா..!! என்னா ருசி!!. அதிலிருந்து இந்த தோசையை எங்குப்பார்த்தாலும் வாங்கி சாப்பிட ஆரம்பித்தேன். மைதா மாவுடன் முட்டை கலந்து செய்கிறார்கள் என கூகுள் சொல்லுது.
அடுத்து சென்ற இடம் Arc de Triomphe நம் புதுதில்லி 'இந்தியா கேட்' போல இருக்கிறது. பாரிஸிலிலுள்ள மிகவும் புகழ்பெற்ற நினைவுச்சின்னங்களில் ஒன்று. இதன் கீழே முதலாம் உலகப்போரின் "அறியப்படாத போர் வீரன்" கல்லறை உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த கேட்'டிற்கு செல்லும் சாலை நம் சென்னை அண்ணாசாலையை நினைவுப்படுத்தியது. சாலையில் இருபுறமும் ஒரே வரிசையில் நெடுக வளர்ந்திருந்த பெரிய மரங்கள், மிகப்பெரிய ஷாப்பிங் மால்கள், சாலையோர கடைகள், உணவு விடுதிகள் என  ஆடம்பர ஷாப்பிங் இடமாக இருந்தது.
இங்கு, சிறுநீர் கழிக்க கழிப்பிடம் ஏதுமில்லாமல், நேரம் செல்ல செல்ல அடிவயிற்றில் அதிக வலி ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்கு ஆளானேன். வலியின் காரணமாக அத்தனை குளிரிலும் எனக்கு வியர்வை கொட்ட ஆரம்பித்தது. கழிப்பிடம் தேடி 40 நிமிடங்களுக்கு மேலாக அலைந்தோம். ஷாப்பிங் காம்லெக்ஸ்'ஸில் இருந்த ஒன்றிரண்டு இடங்களில்,  நீண்ட வரிசை இருந்ததால் வேறு இடம் தேடி அலைந்து, நேரம் கரைந்து, வலியும் அதிகமானது. இதன் நடுவில், கழிப்பறை பொருட்கள் விற்கும் ஒரு கடையில், கட்டண கழிப்பிடம் இருப்பதாக ஒருவர் சொல்ல, அதைக்கண்டுபிடித்து வரிசையில் நின்றேன். 2 ஈரோ கட்டணம் என்பதாலோ என்னவோ அதிக கூட்டம் இல்லை, இதுவே பாரிஸில் அதிகபட்ச கழிப்பறை கட்டணமாக இருக்கும். 50 சென்ட்ஸ் லிருந்து 1 ஈரோ தான் சாதாரணக்கட்டணம்.. நம் அவசரம் தெரியாமல், மிகுந்த பகட்டான அந்த கடையில் வேலை செய்பவர், உள்ளே சென்றவர் வெளியில் வந்ததும், ஒவ்வொரு முறையும் இவர் உள்ளே சென்று, நின்று நிதானமாக சுத்தம் செய்துவிட்டு வந்தார். "அடேய் அநியாய ஆபிசரே, எங்க அவசரம் தெரியாமல், ஏண்டா இப்படி செய்யறேன்னு" நினைச்சாலும் கேக்க முடியல. வெளியே வந்தும், எனக்கு அடிவயிற்றில் ஏதோ இறுக்கிப்பிடித்தது போலவே இருந்தது. மிகவும் சோர்ந்து, நடக்கக்கூட முடியாமல் சாலையோர பெஞ்சில் உட்கார்ந்துவிட்டேன். வலி குறைந்து நடக்கமுடியும் என்ற நம்பிக்கை வந்தவுடன் தொடர்ந்து சுற்ற ஆரம்பித்தோம்
*********
மறுநாள், நவீன் இருக்குமிடத்திலிருந்து 3 ஆவது ரயில் நிறுத்தத்தில் அமைந்திருந்த Louvre அருங்காட்சியகம் சென்றோம். உலகில் அதிகளவு பார்வையாளர்கள் வந்து போகும் அருங்காட்சியகம் இதுவே. அங்கிருந்த அரண்மனை ஒன்றின் முகப்பு முதற்கொண்டு எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே மியூசியமாக மாற்றியிருந்தனர். மிகப்பெரிய மியூசியமான இதை சுற்றிப்பார்க்க இரண்டு முழு நாட்கள் நிச்சயம் தேவை. ஆனால் எங்களுக்கு 3/4 நாள் தான் கிடைத்தது. இந்த இடத்தைப்பற்றி தனிப்பதிவுக்கூட எழுதலாம். ஏனென்றால், என் வாழ்க்கை சம்பவத்தோடு, நெருங்கிய தொடர்புடையது என அங்கு செல்லும் வரை எனக்கே தெரியாது. ஆம், உள்ளே சென்ற எனக்கு பெரிய அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் காத்திருந்தது.
தொடரும்..

பாரிஸ் பயணக்குறிப்புகள் #7

மான்ட் ப்ளான்க் மறுநாள் 7.30 மணி வாக்கில் ஜென்தோட் அறையிலிருந்து கிளம்பி, ஜெனிவாவில் மான்ட் ப்ளான்க் செல்லும் பேரூந்து நிலையம் சென்று காத்திருந்தோம்.
ஜென்தோட் ரயில் நிலையத்தைப்பற்றி சொல்லியே ஆகவேண்டும். நம்மூர் கிராமங்களில் உள்ள ரயில் நிலையங்கள் போலவே இருந்தது. அதாது போகும் , வரும் ரயில் இரண்டுமே, ஒரே ப்ளாட்பாரத்தில் வந்து நிற்கும், போகும். டிக்கெட் கொடுக்க சின்னதாக கட்டிடம் அதை ஒட்டி சின்னதாக ப்ளாட்பாரம். சின்ன கேன்டீன், கழிப்பறை. சென்றதிலிருந்து திரும்ப வரும் வரை அந்த கேண்டீன் & கழிப்பறை இரண்டுமே திறக்கவேயில்லை. மக்கள் கூட்டமும் குறைவு. வந்தவர்கள் அநேகமாக மாணவர்களாக இருந்தனர். ரயிலுக்காக காத்திருக்கும் நேரத்தில் அதிவேக ரயில்கள் மற்ற தண்டவாளங்களில் மின்னல் வேகத்தில் கடப்பதைப்பார்க்க சுவாரசியமாக இருந்தது. அதைக் காத்திருந்து வீடியோ எடுத்தேன்.. ஆனால் ரயில் சென்ற வேகத்தில் சரியாக பதியவில்லை. :( . வீடியோ எடுக்கும் போது, குறுக்கே வராமல் வீடியோ எடுத்து முடிக்கும் வரை காத்திருந்து, பின்னர் புன்னகைத்தவாரே அந்நாட்டவர் என்னை கடந்து சென்றனர்.
பேரூந்து நிலையத்தில், வேன்கள், பேரூந்துகள் என ஒன்றன் பின் ஒன்றாக சுற்றுளா பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளம்பியவாரே இருந்தன. எங்களது பேரூந்து சொன்ன நேரத்தை கடந்து 30 நிமிடங்கள் தாமதமாகவே கிளம்பியது. பெரிய வால்வோ பேரூந்து, எண்ணி 12 பேர் தான் இருந்தோம்.
பேரூந்து பிரயாணத்தில் முதல் 30 நிமிடங்கள், ஜெனிவாவின் உள்ளேயே பயணித்தது. ஜெனிவாவின் கட்டிட அமைப்புகள் மற்றும் சாலைகளின் அமைப்புகளை பார்க்க முடிந்தது. ஓரளவு ஜெனிவா நகரை சுற்றிய திருப்தி. பின்னர் மெதுமெதுவாக மலைகள் சூழ்ந்த பகுதிகளில் பேரூந்து செல்ல ஆரம்பித்தது. சாலையின் ஓரத்தில் சிறிய ஓடை நதிகள்  என்னுடனேயே பயணம் செய்தன.
கைலாசம் மலையைப்போன்ற அமைப்பில், பனிப்படர்ந்து ஜொளித்த ஆல்ப்ஸ் மலைத்தொடர்ச்சியின் உச்சி தெரிய ஆரம்பித்தவுடன் எங்களுக்குள் ஒரு பரவசம் ஒட்டிக்கொண்டது. பேரூந்திலிருந்தே அதை வேடிக்கைப்பார்த்தபடி, புகைப்படம் எடுத்தபடி பயணித்தோம்.
மான்ட் ப்ளான்க் வந்துவிட்டது, இறக்கிவிட்ட நடத்துனர் கம் ஓட்டுனர், மாலை 5 மணிக்கு இதே இடத்தில் வந்து நில்லுங்கள் என்று சொல்லிவிட்டு பேரூந்தோடு கிளம்பிவிட்டார்.
அவ்விடம் மூன்று சாலைகளே அமைந்த சிறிய சுற்றலா தளம். அதிலும் அநேகமாக உணவகங்கள், சுற்றுளா பயணிகளுக்கான கடைகளாகவே இருந்தன. மலைக்கு மேல் செல்ல டிக்கெட் வாங்க வெகு நேரம் காத்திருந்தோம். பனி சரிவு இருந்ததால், முதல் நிலை வரையே எங்களை அழைத்துச்சென்றனர். கேபிள் காரில்  பயணம் செய்யும் போது அறுந்துவிழுந்தால் என்னாவது என்ற எண்ணம் வந்து சென்றது. ஆல்ப்ஸ் மலை முதல் நிலையில் கடைகள், உணவு விடுதிகள் என எல்லாமும் இருந்தன. ஹெலிக்காப்டர்கள் மூலம் பொருட்கள் கொண்டுவரப்பட்டதை பார்க்க ஆர்வமாக இருந்தது. மலையில், காக்கை நிறத்தில் புதுவிதமான பறவைகள் நிறைய இருந்தன.வெயில் அதிகமாக இருந்ததால் குளிர் தெரியவில்லை.
திரும்ப வந்து, உள்ளூரில் இருந்த ஒரு சில இடங்களை சுற்றிப்பார்த்து, ஒரு இலங்கை தமிழர் உணவகத்தில் மதியம் சாப்பிட்டு, வந்த பேரூந்திலேயே இரவுக்குள் ஜெனிவா வந்து, ரயில் நிலைய சூப்பர் மார்க்கெட்டில் இரவு உணவுக்கு ரொட்டி வகையறாக்கள் வாங்கிக்கொண்டு, ஜென்தோட் அறைக்கு வந்துவிட்டோம்.
அடுத்தநாள் விடியற்காலை 5.30 க்கு பார்சிலோனா செல்ல low cost 20 ஈரோ குட்டி விமானம் முன்பதிவு செய்திருந்தோம். அதுகுறித்து விடுதியில் சொல்ல, அவர்கள் விமான நிலையத்திற்கு 4 மணிக்கு டாக்ஸி புக் செய்துக்கொடுத்து, அலுவலகத்தில் அந்நேரத்திற்கு யாரும் இருக்க மாட்டோம், நீங்களே வெளிவாசல் திறந்து, மூடிவிட்டு செல்லுங்கள், அறை சாவியை அறையிலேயே விட்டுவிடுங்கள் என்றனர்.
விடியற்காலை 4 மணிக்கு நாங்கள் வெளியில் வந்தால், கும்மிருட்டு, சாலையில் எந்த நடமாட்டமும் இல்லை. ஏகத்துக்கும் குளிர். 10 நிமிடம் காத்திருந்தோம், டாக்ஸிக்கு சொல்லலையோ..? டாக்ஸி வராவிட்டால் இங்கிருந்து எப்படி விமான நிலையம் செல்வது போன்ற சந்தேகங்கள் வர கவலையானது. விமானத்தை விட்டுவிட்டால், மொழிதெரியாத வேற்று நாட்டில் பிரச்சனையாகுமேன்னு குழப்பத்தோடு குளிரில் நடுங்கியபடி காத்திருக்க.......20 நிமிடங்களில் ஆள் அரவமே இல்லாத அந்த இடத்தில், எங்கள் இடம் நோக்கி டாக்ஸி வந்தது.

 குட்டி விமானம் என்பதால் ஏகப்பட்ட கெடுபிடி, கட்டுப்பாடுகள். குறைந்த எடை, குறிப்பிட்ட அளவுக்கொண்ட சூட்கேஸ், கைப்பைகள் தான் அனுமதி. பாரிஸிலிருந்தே அதற்கு தகுந்தார்ப்போன்று சின்னதாக சூட்கேஸ் எடுத்துச்சென்றிருந்தோம்.
ஜெனிவா & மான்ட்ப்ளான்க் கில் அதிகம் கண்ணில் பட்டது ஸ்விஸ் வாட்சுகள். ஒன்றாவது வாங்கலாம் என விலை விசாரித்தால், எங்கள் பட்ஜெட்டில் இல்லை. வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு வந்துவிட்டோம். ஜெனிவாவின் விமானநிலையத்தில் தீபிகா படிகோனின் ஸ்விஸ் வாட்ச் ஆள் உயர விளம்பர பலகை கவர்ந்ததோடு மட்டுமல்லாமல், ஒரு இந்திய பெண் இந்நாட்டு விளம்பரத்தில் என்ற பெருமையும் உண்டானது. விமான நிலையத்தில் ஸ்விஸ் சாக்லெட்ஸ் நவீனுக்காக வாங்கிக்கொண்டோம்.
பார்சிலோனா: வெயில் அதிகமாக தெரிந்தது. இதுவரையில் பாரிஸ், ஜெனிவா, மான்ட் ப்ளான்கில் உணராத ஒரு வெயிலை இங்கு உணர்ந்தோம். விமான நிலைத்திலிருந்து பேரூந்து மூலம் ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து அரை மணி நேர பயணத்தில் ஹோட்டல் இருக்குமிடத்திற்கு வந்தோம். மாலை அங்குள்ள சுற்றுலா பயணிகளுக்கான பிரத்தியேகமான பேரூந்துகள் மூலம் ஊரை சுற்றிப்பார்த்தோம். நேரம் குறைவான காரணத்தினால் எல்லாவற்றையுமே பேரூந்திலிருந்தே பார்த்தோம். இரவு ஒரு சீன உணவகத்தில் சாப்பிட்டோம்.

பார்சிலோனா கூட்ட நெரிசலாக இருந்தது. பலதரப்பட்ட மக்கள் அங்கு இருப்பதாக தெரிந்தது. தவிர பெரிய பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகமாக தென்பட்டன,கார்கள் குவிக்கப்பட்டிருந்த அந்த நிறுவனங்கள் கண்களுக்கு விருந்து. இண்டஸ்ட்ரியல் ஏரியாவாக இருந்தது. வேலை வாய்ப்பு அதிகம் உள்ள இடமாக இருக்க வாய்ப்புகள் அதிகம். தவிர, சுற்றலா பயணிகள் மிக அதிகம். நம்மூர் திரைப்படங்கள் இங்கு அதிகம் படமாக்கப்படுகிறது போல. நிறைய இடங்கள், கட்டிடங்களை முன்னமே பார்த்ததுப்போல இருந்தது. இங்கு பல கட்டிடங்கள் வித்தியாசமான தொழில்நுட்பத்தில், வடிவமைப்பில் கட்டியிருந்தார்கள்.

பார்ஸிலோனாவிலிருந்து 40 கிமி தொலைவில் இருக்கும் விமான நிலையத்திற்கு பேரூந்தில் புக் செய்து சென்றோம். அங்கிருந்து பாரிஸ் செல்ல மேலே சொன்ன குட்டி விமானம். அது பாரிஸ் நகரின் எல்லையில் அமைந்து ஒர் விமானநிலையத்திற்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து பேரூந்தில் ரயில் நிலையம் வந்து, ரயிலில் Gare du nord ரயில் நிலையம் வந்து அங்கிருந்து நவீன் இருக்குமிடம் வந்து சேர்ந்தோம்.

சென்று வந்த இடங்களில், பெண்களைப்பற்றி சொல்லியே ஆகவேண்டும்.. பாரிஸ்ஸில் பெண்கள் பேரழகிகள், உலகில் உள்ள அத்தனை பேரழகிகளையும் ஒரு சேர பாரிஸ் நகரில் பிரம்மன் படைத்துவிட்டான் போல. செதுக்கி வைத்த சிலையைப்போன்று இருந்தனர். மேலும் குறைந்தபட்ச உயரம் 5.5 க்கு மேலாகவே இருந்தனர்.
ஜெனிவாவில் பெண்கள் அத்தனைப்பேருமே பைசப்' சுடன் விளையாட்டு வீராங்கனைகளை ப்போல இருந்தனர். இவர்கள் அத்தனை உயரம் என்று சொல்லிவிட முடியாது, மிகவும் அழகானவர்கள் என்றும் சொல்லிவிட முடியாது. சாதாரணமாக இருந்தனர்.
பார்சிலோனாவில் பெண்கள் கதைகளில் வரும் "விட்ச்" போன்று இருந்தனர். சூனியக்காரிகள் போலவே மிக நீளமான வளைந்த நகங்கள், அளவுக்கு மீறி கண்களிலும், வெளியிலும் அப்பியிருந்த காஜல், தலைவிரி கோலம், அதிகப்படியான மேக்கப், அடர் நிற விதவிதமான உதட்டு சாயங்கள் , நீண்ட முகம் என பயமுறுத்தினார்கள், இங்கு மிகப்பெரிய உருவ பெண்களை அதிகமாக பார்க்கமுடிந்தது. அழகாகவும் இல்லாமல் சாதாரணமாகவும் இல்லாமல் அதிக மேக்கப்போடு பயமுறுத்தினார்கள்.
பொதுவாகவே ஆண்களை அதிகம் கவனிக்கும் பழக்கம் இல்லை, கறுப்பின ஆண்களை மட்டும் கவனிப்பேன். எனக்கு அதிகம் பிடித்த, நடிகர் வில்ஸ் ஸ்மித் போன்றே அவர்களும் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். :) நவீன் குள்ளமாக தெரிந்ததால், அவனிடம் அதை சொல்லும் போது , அந்நாட்டு ஆண்களின் குறைந்தபட்ச உயரம் 6 அடி, அவர்களைப்பார்த்துவிட்டு அவனை ப்பார்த்தால் குள்ளமாக தான் தெரியும் என்றான். ஆக பாரிஸ் ஆண்களைப்பற்றி ஒரே ஒரு விபரம் 'உயரமானவர்கள்' என்பது மட்டுமே.!
தொடரும்..