நவீன் அறையில், ஒருவர் மட்டுமே தங்கமுடியுமென்பதால், இருவருக்கு வேண்டி அனுமதி கடிதம் விடுதியின் வாயிலாக நவீனால் பெற்றுத்தர இயலவில்லை. அதனால், ஒர் இரவுக்கு விடுதிக்கு அருகில் ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்திருந்தோம்.  மூவரும் அங்கு சென்று தங்கிவிட்டு, விடியற்காலை 5.30 மணிக்கு புறப்பட்டு, ரயில் வழிப்பயணமாக நவீன் அறையை அடைந்தோம்.

பாரீஸ் சென்றதிலிருந்தே நவீனிடம் கவனித்த முதல் மாற்றம், "அதிவேக நடை". இங்கிருந்தவரை அவசரமோ, அவசரமில்லையோ வேகமாக நடப்பேன். இருவரும்.. "ம்ம் ம்ம்ம்..ஓடு ஓடு.. நாங்க மெதுவாகத்தான் வருவோம்" னு ஆடி அசைந்துதான் வருவாங்க. ஆனால், இங்கு?!! நவீன் நடைக்கு என்னால் ஈடுக்கொடுக்கவே முடியல..அத்தனை வேகம். எப்போதும் போல, நிதானமாக என் கணவர் எங்களைப் பின் தொடர்ந்தார்.

ஹட்ச் நாய்' குட்டிப்போல நவீன் பின்னால் நான் ஓடிக்கொண்டிருந்தேன். விடுதி முகப்பின், வாசற்கதவின் சாவி ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது. தவிர, சாவி மறந்தோர், அதற்கான ரகசிய எண்ணை அழுத்தி கதவை திறக்க செய்யலாம். அறைக்கு இரண்டு சாவிகள் வீதம் கொடுக்கப்பட்டிருந்தன. ஒரு சாவியை எங்கோ தொலைத்துவிட்டு, தேடாமலேயே இருந்தான் நம்ம ஆள்.

வேக வேகமாக விடுதிக்குள் சென்றவன், இடதுப்பக்கம் இருந்த அறைக்கு சென்று அதே வேகத்தில் திரும்பி வந்து வேறு வழியில் நடக்க ஆரம்பித்தான். நான் விடுவேனா?  வேக வேகமாக அவன் சென்ற வழியே சென்றேன். ஒவ்வொரு அறைக்கும் தனித்தனியாக தபால் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன, தனக்கு கடிதம் இருக்கிறதா என்று பார்த்திருப்பான் போல, First Name , Last Name குழப்பம்.  எங்களின் பெயரிட்டு ஒரு பெட்டி இருந்தது.

விடுதி முகப்பு வாயிலிருந்தே "Motion sensor lights" பொறுத்தப்பட்டிருந்தன. இருளோவென்று இருந்த இடம், நவீன் முன்னே செல்ல ஒளி பரவி எங்களுக்கு வழியை தெளிவாக க்காட்டிக்கொடுத்தது. ஒரு corridor தாண்டி, படி இறங்கி கீழ் தளத்தில் ஒரு corridor நடந்தான், அவன் அறை வாசலில், பெயர் பலகையில் "நவீன்" என்று அவனே எழுதிய சீட்டு வைக்கப்பட்டிருந்தது.  

*********
அறையில் காலடி வைத்ததிலிருந்து -

காலணிகள் கழட்டி விடும் இடத்திலிருந்து, கழுவாத பாத்திரக்குவியல், அழுக்கான சமையல் மேடை, மடிக்காத போர்வையோடு கலைந்து கிடந்த படுக்கை, அங்கங்கே கிடந்த அழுக்குத்துணிகள், கால் வைக்க முடியாதளவு குப்பை, தலைமுடி ......  எனக்கு தலை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு சுற்றியது. அவரும் நானும் மெளனமாக  ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.

எங்களின் வருகைக்காக துளியும் அவன் எதையும் சரிசெய்து வைக்க மெனக்கெடவில்லை. சமைக்க காய்கறி  கூட ஏதுமில்லை.  வெங்காயம் நாலும், ஒரு உருளைக்கிழங்கும் இருந்தது. என் குழந்தையை எப்படி நான் வளர்த்திருக்கிறேன் என்ற கேள்வி என்னைத்துளைக்க ஆரம்பித்தது... அவன் அவனாக எங்களுக்காக எதும் வேஷம் போடாமல் இருப்பதை நினைத்து சந்தோஷப்படுவதா? இல்லை, தன் இருப்பிடம் இதை (ஓரளவு) சுத்தமாக வைக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருப்பதை நினைத்து கஷ்டப்படுவதா?  கேள்விகள் என்னுள்ளே...

எதை முதலில் சுத்தம் செய்வது என்று தெரியாமல் விழித்தேன். எதைத்தொட்டாலும் அழுக்கு, ஒன்றிலிருந்து ஓன்றாக தொடர்ந்தவாரே இருந்தது.
விடியற்காலை 6.45 க்கு கிளம்பவேண்டும் என்று புறப்பட ஆரம்பித்தான். "என்னடா எதுமே வீட்ல இல்ல..என்ன சாப்பிட்டு போகப்போற?" ன்னு ஃபிரிட்ஜை திறந்துப்பார்த்தேன்.  ஒரு கிண்ணத்தில் ஏதோ செய்து வைத்திருந்தான்.. எடுத்து முகர்ந்தேன்.. துர்நாற்றம்!!... ... என் இரத்த அழுத்தம் அதிவேகமாக ஏறத்தொடங்கியது. கொஞ்சம் சுதாரித்து, ஃபிரிட்ஜில் இருந்த ஒவ்வொன்றையும் எடுத்து தேதிப்பார்த்தேன். எல்லாமே காலாவதி ஆகிருந்தது.

"எப்படி வளத்த குழந்த... இப்படி கெட்டுப்போனதை எல்லாம் வச்சி சாப்பிடுதா? " ன்னு நினைக்க நினைக்க என் மன அழுத்தம் அதிகமாகிக்கொண்டே இருந்தது. எல்லாவற்றையும் குப்பையில் போட எடுத்துவைத்தேன்.

நவீனுக்கு ப்ராஜக்ட் முடியவில்லை.  எங்கள் மூச்சுக்காற்று சற்று சத்தமாக வந்தால் கூட, "ப்ராஜக்ட் முடிஞ்சவுடனே வந்திருக்கலாமில்ல.. நீங்க இரண்டுப்பேரும் எனக்கு ரொம்ப தொந்தரவா இருக்கீங்கன்னு" எரிந்துவிழுந்துக் கொண்டே இருந்தான்.  படிப்பின் கடுப்புஸ்.. ப்ராஜக்ட்  முடிச்சிக்கொடுக்கனும், எக்கச்சக்க வேலை இருந்தது. இடையில் நாங்கள்... ?! 

சாப்பிடாமலேயே கிளம்பினான்.. கேட்டதற்கு "காலையில் எனக்கு சமைக்க நேரமில்லை..நான் எதுவும் சாப்பிடுவதில்லை, பழகிவிட்டது" என்றான். காலையில் ஒருநாள் கூட அவனை பட்டினியாக நான் அனுப்பியதேயில்லை. அவன் குளித்துவிட்டு உடை மாற்றி, ஷூ மாற்றுவதற்குள் அவனோடு அங்குமிங்குமாக ஓடி ஓடி சாப்பாட்டை ஊட்டி விட்டுவிடுவேன்...

எப்படி அவனை வெறுமன அனுப்புவது.?  இங்கிருந்து அரிசி முதற்கொண்டு ஓரளவு மளிகைப்பொருட்கள் கொண்டு சென்றிருந்தேன்.  சம்பா கோதுமையை கஞ்சி காய்த்து, இருந்த பால் கேன்'களில் எது காலாவதி ஆகாமல் இருக்கிறது எனப்பார்த்து,  பால் + சர்க்கரை சேர்த்து கொடுத்தேன். "காலையில் சாப்பிட்டு வருசம் ஆச்சிம்மா..தீடீர்னு சாப்பிட சொன்னா ? பசிக்கலமா எனக்கு" ன்னு சாப்பிட அட்டகாசம்.  கெஞ்சி கூத்தாடி 2.5 டம்ளர் குடிக்க வைச்சாச்சு..
கிளம்புகிற அவசரத்திலும்,

"ஹாட் ப்ளேட்" எப்படி பயன்படுத்தனும், கழிவறையில் தண்ணீர் வெளியில் சிந்தாமல் எப்படி உபயோகிக்கனும், எங்கு நின்னு குளிக்கனும், தண்ணீர் சிந்தினால் எதைக்கொண்டு துடைக்கனும், சமைக்கும் போது பாத்திரம் கழுவும் போது சுவற்றில் அழுக்கு பட்டுவிட்டால் அதை உடனேயே எதைக்கொண்டு சுத்தம் செய்யனும், எந்த குழாயில் குளிர்ந்த தண்ணீர் &  சுடத்தண்ணீர் வரும், ஃபயர் அலார்ம் அடித்தால் எப்படி நிறுத்தனும்... ரூமை எதைக்கொண்டு பெருக்கனும், துடைக்கனும், சுத்தம் செய்ய தேவையான பொருட்கள் எங்கு இருக்கு, அக்கம் பக்கத்தில் உள்ள (இலங்கை) தமிழர்கள் கடை விபரங்கள் சொல்லி, "அங்க விலை அதிகம்.. ஃப்ரன்ச் தெரியாததால். இப்பத்திக்கு ரொம்ப அவசியமா எதாச்சும் தேவைன்னா வாங்கிக்கோங்க.. மிச்சம் நான் ஃபிரியா ஆனவுடனே கூட்டிட்டு போய் வாங்கித்தரேன்" என்றான். 

அதேப்போல வெளியில் சுற்றிப்பார்க்க,  அப்பாவிடம் தேவையான தகவல், எந்த ரயில் கட்டனம் குறைவு,  எந்த ரயிலில் போகனும், அவன் பயன்படுத்தாமல் அதிகமாக இருந்த சில ரயில் டிக்கெட்டுகள், ரயில் நிலையத்தில் எப்படி டிக்கெட் கேட்டு வாங்குவது போன்றவற்றை வேக வேக சொல்லி கொடுத்துவிட்டு கிளம்பினான்.

சமையல் மேடை சுத்தம் செய்து, பாத்திரங்களை கழுவி,அழுக்கு துணிகளை மடித்து ஓரம் கட்டி, ரூமை பெருக்கி, துடைத்து, நவீன் உள்ளாடைகளை அவன் துவைக்கக்கூடாது என சொல்லியும், நின்றவாறே தண்ணீர் வெளியில் சிந்தாமல் துவைத்து,  அவற்றை எடுத்துச்சென்ற கயிற்றை இடம் தேடிப்பிடிச்சி கட்டி காயவைத்து...சமையல் செய்து... .........இதற்குள் 1 மணிக்கு மேலாகியிருந்தது.  வூட்டுக்கார் இம்சை ஆரம்பமானது.. "இப்படியே உன் புள்ளைக்கு சேவகம் செய்துக்கிட்டு இருந்தால்....எங்கையும் வெளியில் சுற்றிப்பார்க்க முடியாது... கிளம்பு போகலாம்".

வெளியில் செல்லும் எண்ணமே எனக்கில்லை. என் குழந்தையோடு என்னை விட்டுடுங்கன்னு கத்தனும் போல இருந்தது,  மனசு ஒரு நிலையில் இல்லை. வெளியிலும் என் மன அழுத்தத்தை சொல்ல முடியாது.. சொன்னால்.. "ஒரு தாய் இவற்றையெல்லாம் எப்படி இயல்பாக எடுத்துக்கொள்ளவேண்டும்" என்ற தலைப்பில் லெக்சர் கொடுக்க ஒருவர் தயார் நிலையில் இருக்கிறார்....
நான் வரல சொல்லித்தொலைக்கவும் முடியல... நான் கூட இருக்கும் போதே வந்த வழியை மறந்துவிட்டு நேர் எதிரான வழியில் செல்லுவார். இவரை எங்க தனியாக அனுப்ப..?! தனியாக ஊர் சுற்ற போகவும் மாட்டார்... சரி......

10 நிமிடங்களில் குளித்து கிளம்பி.சாப்பிட்டு விட்டு, நவீனுக்கு குறிப்பு எழுதிவைத்துவிட்டு, ரயில் நிலையம் சென்றோம்....
தொடரும்..

பாரிஸ் பயணம் # 1 

*படங்களில் அறை பெரியதாக தெரிந்தாலும், மொத்தமாக 200 சதுரடி தான் இருக்கும். 
படங்கள் : நன்றி கூகுள்