உங்களின் ஐ' படம் பற்றிய FB பதிவைப்பார்த்தேன். உங்களை நான் அங்கு தொடரவில்லை என்றாலும் தோழி மங்கை' பகிர்ந்ததில் எனக்கு படிக்கக்கிடைத்தது.

ஐ' படத்தை பெரிதாக தலையில் தூக்கிவைத்துக்கொள்ள ஏதுமில்லை. இயக்குனர் சங்கர் அவர்களுக்கு சரக்கு தீர்ந்துவிட்டது, அரைத்த மாவையே அரைத்திருக்கிறார், கொச்சையான இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்து, நடுவில் குழந்தைகளின் கார்ட்டூன் பட கதையை பெரிதாக்கி பார்த்தமாதிரி இருந்தது, நடிகர் விக்ரமின் உழைப்பு வீணாக்கப்பட்டிருக்கிறது...தவிர வேறொன்றுமில்லை.  .

நிற்க, உங்களின் பிரச்சனை,ஐ' படத்தில் இயக்குனர் சங்கர் திருநங்கைகளை அசிங்கப்படுத்தியிருக்கார் என்பதே.


பொட்டை' என்ற சொல், பொட்டச்சி என்பதிலிருந்து வந்தது தானே. உங்களை தான் சுட்டுகிறது என்பதை என்னால் ஏற்கமுடியவில்லை. நான் எப்போதும் என்னை /பெண்களை சுட்டுவதாகவே நினைப்பேன். பல தமிழ் திரைப்படங்களில் இப்பவும் எப்பவும் வரும் சில நடைமுறை வசனங்கள்..

"நீ ஆம்பளையா இருந்தா" - இந்த வசனம் ஒரு ஆண் இன்னொரு ஆணைப்பார்த்து கேட்பதாகவே காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். எந்த காரணி ஒரு ஆணை "அவன் ஒரு ஆண்" என்று நிரூபிக்கிறது. ?! குழந்தைப்பெற்றுவிட்டாலா? அப்படீன்னா.. குழந்தைப் பெற்றவனுக்கும் அந்த வசனம் கொடுக்கப்படுகிறதே? இந்த ஒரு வசனத்தைக்குறித்த என் கேள்விகளுக்கு இன்று வரை எனக்கு பதில் தெரியவில்லை.

அடுத்து, " நீ ஒருத்தனுக்கே (ஒரு அப்பனுக்கு) பிறந்திருந்தால்..." ஒருத்தனுக்கு பிறக்காம 10 பேருக்கா பிறக்கமுடியும் ?!! அறிவியல், மருத்துவ ரீதியாக இதையெல்லாம் இயக்குனர்கள் கொஞ்சம் யோசிக்கலாம்.. தவிர இங்கே "ஒரு தாய் ' அசிங்கப்படுத்தப்படுகிறாள்.

" உன் அம்மா ஒருத்தனுக்கே முந்தி ........" யோவ் போங்கய்யா... நீங்களும் உங்க வசனங்களும்னு சொல்லத்தோணுது.... இப்படியாக பெண்களை இழிவுப்படுத்தும் பல "டெம்ப்ளேட்" வசனங்கள் தமிழ் படங்களில் இருக்கின்றன, அவற்றை அநேகமான எல்லா முன்னணி கதாநாயகர்களும் பாரபட்சமின்றி பயன்படுத்தியும் உள்ளனர்.

இதெல்லாம் கூட விடுங்க.. தமிழ் திரைப்படங்களிலும், ஏன் இப்ப தொலைக்காட்சி தொடர்களில் "பெண்" எத்தனை மோசமானவளாக சித்தரிக்கப்படுகிறாள். பார்த்து பார்த்து பழகிவிட்டது.

ஒரு தொடரில், சாதாரண குடும்பத்து பெண் "சயனைடு" வாங்கிவந்து ஒருவரைக் கொல்ல திட்டம் போடுகிறாள்.. "சயனைடு அவ்ளோ சாதாரணமாக கிடைக்கிறதா?.. எங்க கிடைக்குதுன்னு தெரிந்தால் நல்லாயிருக்கும், இந்த கருமத்தையெல்லாம் பார்க்காமல், அதை வாங்கி குடிச்சிட்டு செத்துத்தொலைக்கலாம்.  தாய், மனைவி, காதலி, அக்கா, தங்கை, மாமியார், அத்தை, சித்தி,பெரியம்மா,ஓரகத்தி, பாட்டி, தோழி, சிறுமி ' ன்னு எல்லா கதாப்பாத்திரங்களும் மிகவும் வில்லித்தனமாக காட்டப்படுகின்றன.


நீங்க சொல்ற காதல் தோல்வியும் (நியாயமான, கண்ணியமான, உண்மையான காதல்) அதனால் அந்த பெண் வில்லியாக மாறுவதும் பலப்படங்களில் இங்கு பல காலமாக வந்துகொண்டிருக்கின்றன.

சமீபத்தில் தொலைக்காட்சியில் "நூற்றுக்கு நூறு" ன்னு ஒரு படம்பார்த்தேன். அம்மாடி... அதில் வரும் அத்தனை பெண்களும் ரவுண்டுக்கட்டி வில்லிகளாகி, ஒரு (நல்லவனுக்கு) ஆணுக்கு எதிராக மாறி அவன் வாழ்க்கையையே கேள்விக்குறி ஆக்குவதே கதை...


ரம்யா கிருஷ்ணன் - படையப்பா..?!! ஏன் இந்த படத்தில் இந்தம்மாவின் காதல் நியாயமானதும் புனிதமானதும் இல்லையா? இப்படியான குணமுடைய பெண்களுக்கு காதல் வரக்கூடாதா? அல்லது வந்தால் அதை ஆண் புறக்கணிக்கத்தான் வேணுமா?

ஷேரேயா ரெட்டி - திமுரு ?!! இதில் விஷால் அந்தப்பெண்ணை, நீயெல்லாம் ஒரு பொம்பளையாடி?! முதல்ல பொம்பளை மாதிரி நடந்துக்கோ" ன்னு அடிக்கடி பேசுவாரு... இந்தப்பெண்ணுக்கும் காதல் வரும்.. அது மிக கேவலமான வசனங்களால் மறுக்கப்படும்.

ரீமா சென் - வல்லவன் - ?!! என்னமாதிரியான ஒரு வில்லி?!

ராதிகா - ஜீன்ஸ் ?!! கணவர் நாசரை கீழ்த்தரமாக கேவலப்படுத்தும் எத்தனை எத்தனை வசனங்கள்?!

வடிவுக்கரசி - முதல்மரியாதை.. - ஸ்ஸ்யப்பா நினைச்சாவே கண்ணக்கட்டுது.. என்னா வாய்.. ?!!

சங்கீதா - உயிர் ?!! மிக மிக மோசமாக கொடூரமாக சித்திரக்கப்பட்ட ஒரு கதாப்பாத்திரம். காதலனை அடைய பெற்றக்குழந்தை மேல் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி காயப்படுத்தும் காட்சி அமைந்த ஒரு படம். எந்த ஒரு தாயும் செய்ய துணியாத ஒரு செயல்... இப்படியொரு கொடுமையை நிச்சயம் எதற்காகவும் எந்த தாயும் செய்யமாட்டாள், தன்னையறியாத 'மனபிறழ்வு' உடையவர்கள் கூட இப்படியான செயல்களை செய்யத்துணிய மாட்டார்கள்.

மேற்கண்டவை சில உதாரணங்கள், இதைப்படிப்பவர்களுக்கு, இதைவிட மோசமான "பெண்" கதாப்பாத்திரங்களும் வில்லிகளும் தமிழ் திரைப்படங்களில் காண்பித்துள்ளார்கள் என்பது நினைவுக்கு வரலாம்..

இப்படியே "ஆண்" வில்லன்'களும். இதற்கு எண்ணிக்கையே இல்லை. உலகத்தில் உள்ள அத்தனை கெட்ட குணங்களும், கேவலமான செயல்களும் செய்யும், கொடுரூமானவர்களாவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இதற்கு உதாரணங்களே தேவையில்லை. ஏன் ஐ' படத்திலும் கதாநாயகன் அத்துணூண்டு உடம்பையும் ஏகப்பட்ட பிரச்சனைகளையும் வைத்துக்கொண்டு எல்லோரையும் மிக கொடூரமான முறையில் தான் பழிவாங்குகிறார். இயக்குனர் சங்கரின் அந்நியன்' படத்திலும் மிகக்கொடூரமான தண்டனைகளைக் கொடுக்கும் கதாநாயகன் தான் வருகிறார். இந்தியன் தாத்தா; அவ்ளோ வயசாகியும் தப்பு செய்பவர்களை தண்டிக்கிறார்...

இப்படி.. யதார்த்தத்தில் நம்மால் முடியவே முடியாத, நடக்காத பல விசயங்களை சினிமாவில் காட்டிவருகிறார்கள். குறிப்பாக ஆண்/ பெண் என்ற வித்தியாசம் இன்றிதான் காண்பித்து வருகிறார்கள்.

இதில் மூன்றாவது பாலினமான நீங்கள்.... அதை யதார்த்தோடு சேர்த்துவைத்து பார்த்து கோபப்படுவது சரியா? ஆண்/பெண்/திருநங்கை எல்லாமே சமம் என்று நினைத்தால், தமிழ் திரைப்படங்களில் ஆண், பெண்ணை இழிவு படுத்தாமல் இல்லை. குறிப்பாக ஆண்களுக்குள் தகராறு என்றால் கூட வசனங்களில் "*xxxxxxxx மவனே" என்றும்.. இன்னும் தமிழில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளும் பெண்களை குறிப்பிடுபவை/மையப்படுத்தியே அர்த்தம் கொள்பவை என்பதை நான் உங்களுக்கு சொல்லத்தேவையில்லை.

இவற்றையெல்லாம் விட, உங்களில் ஒருவரான திருநங்கை ஓஜஸ்' முழு சம்மதத்தோடு நடித்துள்ளார், அவருக்கு மொழித்தெரியாவிட்டாலும், நடிக்கும் சாரம் கூட புரியதவாரக இருக்க வாய்ப்பேயில்லை. கதாப்பாத்திரத்தை உள்வாங்கி மிக அருமையாக உணர்ச்சிகளை தன் நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு டப்பிங் செய்துள்ள திருநங்கை "ரோஸ்" நன்கு தமிழ் அறிந்தவர், மேலும் காதல் உணர்வுகளையும், அதனால் படும் கஷ்டங்களையும் குரலில், அழுகையில் மிக தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக, 'உங்களை" என்று கொள்ளாமல், எந்த பாலினரையும் எதும் காயப்படுத்தாமல் ஒரு திரைப்படம் எடுக்க முடியுமா? அது சாத்தியமா? ஏன் தமிழ் திரைப்படங்களில் நோய்வாய்ப்பட்டவர்களையும், வயதானவர்களையும், உடல் ஊனமுற்றவர்களையும் கிண்டல் கேலி செய்யவில்லையா? நிறைய படங்களில் செய்துள்ளனர். காமெடிக்காக என்றாலும் வயது வித்தியாசமின்றி கவுண்டரிடம் எட்டி உதைவாங்கியவர்கள் எத்தனைப்பேர். ?!

ஒருதலை காதல், காதல் தோல்வி என்பது மட்டுமல்ல... வாழ்க்கையில் எல்லா தோல்விகளும், அதனால் ஏற்படும் தாக்கங்களும் நல்லதோ கெட்டதோ எல்லா பாலினங்களுக்கும் ஒன்றே. இதில் உங்களை நீங்கள் ஏன் தனிமைப்படுத்தி, சிறுமைப்படுத்தி பார்க்கிறீர்கள்.?! நீங்களும் மற்ற இரு பாலினங்களைப்போல முன்னிலைப்படுத்தப்படுகிறீர்கள் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்...

போராட்டம் நடத்தவேண்டுமானால்... ஆண்/பெண்/திருநங்கைகள் ஒன்றாகக்கூடி ஒவ்வொரு படத்திற்கும் போராட்டம் நடத்தவேண்டும்.

வில்லத்தனம், கேலி, கிண்டல், கோபம், சிரிப்பு, ஆற்றாமை, அழுகை, வலி,காதல், காமம் போன்ற எல்லா உணர்வுகளும் உங்களுக்கு மட்டுமல்ல இந்த மண்ணில் பிறந்த எல்லா பாலினங்களுக்கும் பொருந்தும். இதை நான் சொல்லவில்லை... நீங்கள் எனக்களித்த கேப்பங்கஞ்சி வித் கவிதா" பதிவில் சொல்லியிருக்கீங்க...

உங்களின் கஷ்ட நஷ்டங்கள், பிரச்சனைகள், வலிகள் தெரியாமல் இப்பதிவை எழுதவில்லை. எல்லாம் தங்கள் மூலமாகவே அறிந்ததால் பிற பாலினங்களுக்கு சமமாக நினைக்க, உங்களை தயார் படுத்த முயற்சி செய்யுங்கள் என்று சொல்லவே இந்த பதிவு... உங்கள் மனதை எந்தவிதத்திலாவது என் எழுத்து காயப்படுத்தியிருப்பின்... மன்னித்து விடுங்கள்...

அன்புடன்
கவிதா