சென்னையிலிருந்து மேற்குவங்கத்திற்கு மாற்றம். அதுவே சரிவர முடியாத ஒரு சூழ்நிலையில், போவோமா மாட்டோம்மான்னு இருந்த பாரிஸ் பயணம் அவசர அவசரமாக நிகழ்ந்தது.  வீட்டு பொருட்கள் சென்னையிலிருந்து வந்து சேர்ந்த 2 ஆம் நாள் பாரிஸ் பயணம், என் நிலை எப்படியிருந்திருக்கும் என சொல்லத்தேவையில்லை.  வீடு முழுக்க பிரிக்காத அட்டைப்பெட்டிகளும் சாக்கு மூட்டைகளும்.  துணிமணி, அத்தியாவசிய பொருட்கள், மளிகைப்பொருட்கள் எல்லாவற்றையும் பிரித்து எடுத்து வைக்க வேண்டும், இதில் மளிகை சென்று வருவதற்குள் என்ன ஆகுமோ ? அவற்றைப்பிரித்து தகுந்த பாதுகாப்பில் வைக்கவேண்டியிருந்தது.  

மளிகைப்பொருட்களை சென்னையில் வைத்தபடி இங்கு வைத்துவிட்டு செல்ல முடியாது, மரங்கள் செடிகள் அடர்த்தியாக சூழப்பட்டுள்ளதால், அதிகமாக பூச்சி, எறும்பு, எலிகள் நடமாட்டம் உள்ளது, எறும்பில் இத்தனை விதமா?  ஏகப்பட்ட அளவுகளில், நிறங்களில் எறும்புகள் இங்கு இருக்கின்றன. அவற்றிடமிருந்து பொருட்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் இருந்தது, பொருட்களை கொட்டிவைக்க போதிய டப்பாக்கள் இல்லாமல் (மாற்றல் காரணமாக பயன்படுத்தி வந்த கண்ணாடி,ப்ளாஸ்டிக் டப்பாக்களை சென்னையிலேயே வைத்துவிட்டேன்) தடுமாறி எப்படி எப்படியோ சமாளித்து, கொட்டி இறுக்கமாக மூடிவைத்து, எல்லா கதவு , ஜன்னல்களுக்கும் எறும்பு பொடி தூவி பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டி இருந்தது. 

இதில் பாரிஸ் பிரயாணத்துக்கு தேவையானவற்றை மறக்காமல் எடுத்துக்கொள்ளவும், அங்கு நாங்கள் தங்கும் வரை சமைத்துக்கொள்ள தேவையான பொருட்கள், நவீனுக்கு வைத்துவிட்டு வர தேவையான பொருட்கள், உடைகள், குளிருக்கான உடைகள், இவற்றை எடுத்து செல்ல சூட்கேசூகள் என கடையில் வாங்கும் பட்டியல் நீண்டுக்கொண்டே இருந்தது, ஆனால் நாட்களோ குறைவு. கல்யாணியில் அன்றாடத்தேவைக்கான வேலைகளே சரிவர முடியாத நிலையில் இந்த பாரிஸ் பயணம் எனக்கு எந்தவித ஆர்வத்தையும் ஏற்படுத்தவில்லை.  மாறாக, பயண ஏற்பாடு செய்தாகிவிட்டது, சென்றுவர வேண்டும் என்பதைத்தவிர்த்து வேறேதுமில்லை.  

கிளம்பிய அன்று அம்மாவின் நினைவு வர,விமான நிலையம் செல்லும் வரை அழுவாச்சி. விமானநிலயத்தில் காலடி வைத்தவுடன், இவருக்கு இருந்த பதற்றத்தைப்பார்த்து, அம்மா நினைவு காணாமல் போய் இவரை கவனிக்க வேண்டிவந்தது.  Immigration சோதனையில் எதும் கேள்விக்கேட்டு பிரச்சனையாகுமோ என்ற பயத்துடனே இருந்தார். என்னையும் கொண்டுசென்ற பெட்டிகளையும் மறந்துப்போனார்.  எல்லா சோதனைகளும் முடிந்து, எங்கள் விமானம் செல்லும் கதவு’ அறை அறிவிக்கப்பட்டு, அங்கு சென்று அமர்ந்தவுடன் தான் சாதாரண நிலைக்கு வந்தார், மனைவி இருக்கிறாளா? பொருட்கள் இருக்கின்றனவா? என சரிப்பார்த்துக்கொண்டார். 

எமிரேட்ஸ் A380 விமானம். வெள்ளை வெள்ளேரென மிக அழகான, குட்டைப்பாவாடையும், நீண்ட காலுறைகளும், தொப்பியும் அணிந்த
விமானப்பணிப்பெண்கள், விமானத்தின் கேப்டன் குழுவினர் அரபி , ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் விமானத்தில் ஏதோ ஒரு தகவலை சொல்லிக்கொண்டே இருந்தனர்.  தொலைக்காட்சிப் பெட்டி, அதில் தமிழ் நிகழ்ச்சிகள்  இருந்தன என்பது சந்தோஷமாக இருந்தது. மான் கராத்தேவும், நான் சிகப்பு மனிதனும் இந்த மாத தமிழ் படங்கள் போல. இரண்டு படங்களுமே பார்க்காததால் நேரம் போகும் என்று நினைத்தேன். ஒவ்வொரு விமானப்பயணத்தின் போதும் என்னை எரிச்சல் படுத்தும் ஒரு விசயம், ரயில் நிலையங்களில் விற்கும் விற்பனையாளர்கள் கூட பரவாயில்லை. ஆனால் விமானத்தில் நய் நய் ன்னு ஒரு நிமிஷம் கண் அயர விடாமல்,  “ஹல்லோ.. யுவர் ..”னு ஆரம்பிச்சி இம்சை. “வேணாண்டி வேணாம்.. என்னை தூங்கவிடு”ன்னு மனசு கத்தும்..ஆனா அவங்களை பார்த்து புன்னகைத்து, அவங்க கொடுப்பதை கை அனிச்சயாக வாங்குவது தான் எப்போதும் நடக்கும்.  தொல்லைத்தராதேன்னு இறுக்கையின் மேல் சீட்டு வைத்துவிட்டு தூங்கினாலும், பக்கத்தில் வூட்டுக்கார் சும்மாயிருப்பதில்லை.. (நிரந்தர இம்சை) கொடுக்கறதை ஏன் விடனும்னு வாங்கி வாங்கி என்னை தட்டி எழுப்பி கொடுத்துக் கொண்டிருந்தார்.  

ஏஆர் ரகமானின் பாடல்கள், சித்ரா அம்மாவின் பாடல்களின் ஆடியோக்களும் இருந்ததால் நிம்மதியானேன். கிளம்பும் முன்பே சில நாட்களாக வேலை பளுவின் காரணமாகவும் மிகுந்த சோர்வாக இருந்ததாலும், பொதுவாகவே என் கண்கள் பயண நேரத்தில் படம் பார்க்கவோ படிக்கவோ உகந்ததல்ல என்பதாலும் இன்னமும் சோர்வாகி, ஏஆரின் பாடல்களை குறைவான சத்தத்தில், காதில் மாட்டிக்கொண்டு, காலை மடக்கி சீட்டின் மேல் வைத்து போர்வையை போத்திக்கொண்டு தூங்கிப்போனேன். 

கண் விழிக்கும் போதெல்லாம் ஏதோ ஒன்றை கொடுத்து என் வயிற்றை நிரப்பிக்கொண்டிருந்தார்கள் விமானப்பணிப் பெண்கள். இதில் எமிரேட்ஸ்சின்
உணவை பார்க்கும் போதே ‘உவ்வேக்’ என்றிருந்தது. பழச்சாறுகள் மட்டுமே என் வயிற்றை நிறைத்தன என்றால் மிகையாகாது. பிஸ்கெட், சாக்லெட், கேக் வகைகள் உள்ளே சென்றன. நடுநடுவில் மான் கராத்தே ஃபார்வேட் செய்து செய்து பார்த்து தொலைத்தேன்.  


துபாய் குறுக்கு சந்தில் வேறு விமானம் மாறவேண்டும், 3 மணி நேரம் இடைவேளை, கொல்கத்தாவிலேயே நேரடியாக “செக்கின்” செய்திருந்தோம், பெட்டிகளும் நேரடியாக பாரிஸ்ஸில் எடுத்துக்கொள்ளலாம்.  கைப்பைகள் மட்டுமே.    விமானத்தைவிட்டு இறங்கியவுடன் பழையபடி பதற்றமும் இறுக்கமும் என் கணவரை கவ்விக்கொண்டது.  பின்னால் மனைவி வருகிறாளா என்று கவனிக்காமல் அவர் பாட்டுக்கும் வேக வேகமாக நடந்தார் இல்லை ஓட்டமாய் ஓடினார். துபாய் குறுக்கு சந்து பளப்பளவென எங்கு திரும்பினாலும் கடைகளும், கண் கவர் பொருட்களுமாக இருந்தன.  “அட எதும் வாங்கித்தர வேணாம், ஃபோட்டோ எடுக்கவாச்சும் விடலாமில்ல..? 3 மணி நேரம் இருக்கு, எதுக்கு இப்படி ஓடறார்’ ன்னு கடுப்பானது. ஆனால் அவர் என்னை திரும்பிப்பார்ப்பதாக தெரியவில்லை. 

டெர்மினல் சி’ யிலிருந்து டெர்மினல் ஏ” விற்கு செல்லவேண்டும்.  அதிக தூரம் தான், நடுவில் மெட்ரோ வேற பிடித்து போகனும்னு கொஞ்ச தூரம்
சென்றவுடன் புரிந்தது. ஓடிப்போய் அவரோடு சேர்ந்துக்கொண்டு நடக்கமுயன்றாலும், சுற்றுப்புறம் என்னை வேடிக்கைப்பார்க்கவே அழைத்தது. நடுநடுவில் வேடிக்கைப்பார்த்து நிற்பதும், அவர் சற்றே தொலைவு சென்றுவிட்டால் ஓடிப்போய் அவரோடு சேர்ந்து நடப்பதுமாக மெட்ரோ சென்றோம். ரயில் மிக வேகமாக சென்று டெர்மினல் ஏ’ வில் சேர்ப்பித்தது. அங்கு சென்று, செக்கிங் வரிசையில் நிற்கும் போது, வளையலை கழட்டும் படி ஆங்கிலத்தில் ஒரு செக்கியூரிட்டி சொல்ல, “ம்க்குங்.. கொல்த்தாவிலிருந்து வீட்டில் ழைய ப்ளாஸ்டிக் கேனில் எடுத்துக்கிட்டு வந்தண்ணி இன்னும் பையில் இருக்கு... செக்கிங் பண்றாங்ளாம் செக்கிங்.. அமொதல்ங்செக்கிங் மெஷினை கண்டுப்பிடிச்சி எடுக்சொல்லுங்க..அப்புறம் ழட்லாம் ளைல'ன்னு சுநினைச்சுட்டு, அவரைப்பார்த்துக் கொண்டே கடந்து வந்தேன். அவரும் நான் வளையலை கழட்டுவேன்னு எதிர்ப்பார்த்து.....பட்டிக்காடு’க்கு நாம சொன்னது புரியலப்போலன்னு நினைச்சி தொலையட்டும்னு விட்டுட்டார்.  பாரிஸ் செல்லும் விமான ஓய்வு அறையின் ‘கதவு’ திறந்து, நாற்காலி தேர்வு செய்து உட்கார்ந்தவுடன் தான் திரும்பவும் தன் நினைவுக்கு வந்தார் என் கணவர். (ஸ்ஸ்ஸ்..... போய்ட்டு வரும்வரை இப்படி எத்தனை முறை ஆகுமோ..இவர் மேல் ஒரு கண் வைத்துக்கொண்டே இருக்கவேண்டும்) 

அடுத்ததும் எமிரெட்ஸ்... அடக்கடவுளே..அதே சோறு தான் போடுவாங்க’ன்னு நினைக்கும் போதே ஒவ்வேக்’னு வந்துச்சி.... வேகவைத்த காய்கறி நடுவில் மாட்டிறைச்சி அல்லது பன்றி அல்லது கோழி. இது மூன்றில் எது இருக்குன்னு தெரிஞ்சி கேட்டு வாங்கனும், கேட்காட்டி, மாட்டையோ , பன்னியையோ சாப்பிடவேண்டிவரும். வூட்டுக்கார் பீரும், விஸ்கியும், ஜூன்'னுமாக ஆர்டர் செய்து ஆனந்த நிலையை அடைந்தார். அவர் குடிப்பதற்கு முன் வாங்கி முகர்ந்துப்பார்த்து.. ஓவ்வேக் என்று திருப்பிக்கொடுத்தேன். ருமம், எப்படித்தான் இவ்ளோ நாத்தத்தை ருசிச்சி ரசிச்சி குடிக்கறாங்களோ.....?! அதுக்காக இன்னொருவாட்டி.. ஓவ்வேக்..

திரும்பவும் அதே தொப்பி, குட்டைப்பாவாடை காலுறை அணிந்த விமானப்பணிப் பெண்கள், இந்தமுறை பயனநேரம் 8 மணி நேரம், அதே டிவி, ஆனால் அதிகமான படங்கள் இருந்தன. அதே ஏஆர், சித்ராம்மா பாடல்கள்.  கண் விழிக்கும் போதெல்லாம் ‘நான் சிகப்பு மனிதன்’ பார்த்தேன். ஆங்கிலப்பேய் படங்கள் சில பார்க்க நினைத்து , பயமே வராததால் கடுப்பாகி... தமிழே போதும்னு முடிவுக்கு வந்தேன். 
 
இரவு 8.30 மணி, பாரிஸ் வந்துவிட்டது. இப்போது உலகம் மறந்து, நவீன் மட்டுமே நினைவில் இருந்தான், திரும்பவும் “Immigration Checking”, வூட்டுக்காரை கவனித்தேன்.. ஆமா..அதேதான்.. சுற்றம் மறந்து கவுண்டரில் இருந்த ஆளையும், அவர் வருபவர்களிடம் என்ன பேசுகிறார் என்பதையுமே கவனித்தபடி இருந்தார். வெளியில் வந்தோம், பெட்டிக்காக காத்திருந்து எடுத்தோம். சென்னை, கொல்கத்தா’ போல இல்லாமல் செக்கிங் முடிந்த அடுத்த நிலை வாசலிலேயே நவீன் இருந்தான். 

அவனைப்பார்த்தவுடனே  “செல்லக்குட்டி..ஏன்டா குள்ளமாயிட்ட?”

சீரியசாக “நான் குள்ளமாகலம்மா.. நீதான் வளந்துட்டே “

மீ தி.... “ஞே.." !! பாத்தவுடனேயே பல்பா... ?! இவன் கிட்ட டிஸ்டென்ஸ் மெயின்டெயின் பண்ணனும்..வன் வாயிசிக்கிக்கப்பிடாது...ங்... மீ சைன்ட் மோட்...

அமைதி நிலைக்கு வந்த என் வூட்டுக்கார் அவனுடன் பேசியவாறே நடந்தார். அவர்கள் இருவரும் பேசுவதை கவனித்தவாறே பின்னால் நான்....

“ப்ராஜக்ட் ரிசல்ட் வராம ரொம்ப பிரச்சனைக்கொடுத்துட்டே இருந்திச்சிப்பா, இன்னைக்கு தான் ரிசல்ட் வந்துச்சிப்பா, உடனேயே  “இன்னைக்கு என் ஆத்தா பாரிஸ் மண்ணில் கால் வைக்குது, அதான் ரிசல்ட் வந்துடுச்சின்னு” ப்ராஜக்ட் ஹெட் கிட்ட சொன்னேன்ப்பா..” ன்னு சொல்லிக்கொண்டே என்னை பார்த்தான்.. .

குழந்தையின் பூரிப்பைக்கண்டு மகிழ்ச்சியை விட வருத்தம் மேலோங்கியது.. தனியாக அவன் கஷ்டப்படுவது புரிந்தது...

பாரிஸ் நகரம் இருளில் ஒன்றும் பிடிபடவில்லை... வாடகை கார் பிடிக்க நவீன் பிரஞ்சு மொழியில் பேசியது, காரினுள் ஓட்டுனரிடம் வழிசொல்லி பிரஞ்சு மொழியில் பேசியது  சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது. தனக்கு பிரஞ்சு மொழி கஷ்டமாக இருப்பதாக அடிக்கடி எங்களிடம் சொல்லுவான், மாறாக அவன் மிக  சரளமாக பேசியது நிம்மதியையும் தந்தது..

ருளில்....  நவீன் விடுதி நோக்கி பயணம்....


தொடரும்...

சாப்பாடு தட்டு விர : Images Courtesy Google - Thx