சிம்புவின் 'பீப்' பாடலும் என் தெளிவும்

 சிம்பு'வின் பீப் பாடலை கேட்டவுடன்.. பக்'கென்றது என்னவோ உண்மை...ஓரே காரணம் நம் வீட்டு குழந்தைகள் தான். ஒரு வருசம் கூட ஆகாத குழந்தைகள்  சினிமா பாடல்களைப் பாட ஆரம்பித்துவிட்ட காலத்தில் இருக்கிறோம்..


வீட்டில் குழந்தைகள் இந்த பாடலைப் பாட ஆரம்பித்துவிட்டால்.. தயவு செய்து இதைப்படிப்போர் அவங்கவங்க வீட்டில் உள்ள குழந்தைகள் இந்த பாடலை பாடி ஆடுவதைப்போல கற்பனை செய்து பாருங்கள்.... ....... எப்படியிருக்கு????

அடுத்து சூப்பர் சிங்கரில் இந்த பாடலை குழந்தைகள் பாட.. அதற்கு நடுவர்கள்... அந்த' வார்த்தையில் ண்' க்கு சரியாக அழுத்தம் கொடுக்கல.. இன்னும் சரியா பாடனும்.. னு சொன்னால் எப்படி இருக்கும்?

இதே பாடலை நடன நிகழ்ச்சிகளில் ஆடும் போது "அந்த வார்த்தைக்கு எப்படியான அங்க அசைவுகளை செய்வார்கள்?....

இப்படியாக  பாட்டைக்கேட்ட மாத்திரத்தில் வேக வேகமாக என் கற்பனை எங்கோ போய்க்கொண்டிருந்தது.....

இதெல்லாம் கூட பரவாயில்லை போல... அந்த வார்த்தைக்கு நம்ம பதிவுலக எழுத்தாளர்கள் கொடுக்கும் தமிழ், வரலாற்று, இலக்கிய, பிற நாட்டு மொழிகளில் அர்த்தங்களை விவரமாக விளக்கி எழுதியுள்ள பதிவுகளை படிக்கும் போது தலைசுற்றி மயக்கமே வருகிறது..

என்னமா தனித்தனியா எழுத்துக்களை பி்ரித்து, ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் சொல்றாங்க..முடியலப்பா சாமிகளா...சிலதெல்லாம் சத்தியமா என் அறிவுக்கு எட்டவேயில்ல...

குஜராத்தில் இருந்து போது சில தமிழ் கெட்ட வார்த்தைகளை என்னிடம் சொல்லி, "பெகன்..இந்த வார்த்தை உங்க ஊர்ல கெட்ட வார்த்தை தானே?ன்னு" கேட்டு சிரிப்பாங்க... எனக்கு வெட்கமாகவும் அவமானமாகவும் இருக்கும். தமிழில் எத்தனையோ நல்ல வார்த்தைகள் இருக்க..அதெல்லாம் சொல்ல வராத இவர்களுக்கு கெட்ட வார்த்தைகள் மட்டும் மாநிலங்கள் தாண்டி வந்திருக்கிறதே.. எளிதாக கற்றுக்கொள்ள கூடியதாக இருக்கிறதே என்று ஆயாசப்படுவேன்..

மேற்கு வங்கம் வந்த புதிதில், ஒரு முறை வாடகை காரில் பயணம் செய்த போது பெங்காலி பாடல்கள் ஒலித்து வந்ததற்கு நடுவே திடீரென "நாக்கு முக்க" பாடல் ஒலித்தது. சற்றே யோசியுங்கள், ஹிந்தி தவிர்த்து வேற்று மொழி பாடல்களை நம்மூரில் எங்காவது  கேட்க முடியுமா? அதும் இதுப்போன்ற மக்களிடம்?  அந்த ஓட்டுனரிடம்..."தம்பி இந்தப்பாட்டு எங்க நாட்டு பாட்டு, எப்படி உங்களிடம்??" ... "ஓ இது உங்க பாட்டா? (அவருக்கு என்ன மொழின்னு கூட தெரியல) இந்தப்பக்கம் வர லாரி டிரைவர்களிடமிருந்து பரவிடுத்து"...என்றார்...      

சிம்பு பாட்டு வந்தவுடன் இந்த நிகழ்வும் நினைவுக்கு வந்து.. ஆகா.. பீப் பாடலும் மிக எளிதாக இந்தியா முழுக்க அர்த்தம் தெரியாவிட்டாலும் பரவிவிடுமே...

அடுத்து இங்கு பல கடைகளில் நம்மோட கெட்ட வார்த்தை ஒன்றை பெயர் பலகையில் பார்க்க முடிந்தது. குபுக்' னு சிரிப்பு வரும்.. ஆனால் என் வூட்டுக்கார் சீரியஸாக திட்டி, "அவங்களுக்கு ஏதாது புனிதமான அர்த்தமாக இருக்கும். ஏன் சிரிக்கற?" ன்னு எரிந்து விழவும்.. வந்ததும் வராததுமாக கூகுள் ஆண்டவரிடம் அர்த்தம் கேட்க  ' Business centre' என்று வந்தது..

நம் மொழியின் கெட்ட வார்த்தைக்கு பெங்காலியில் இப்படியும் ஒரு அர்த்தமான்னு விழிகள் விரிந்தது.

அதைவிட இப்போது பீப் பாடல் குறித்து "அர்த்தம் பாராட்டி" வரும் பதிவுகள், நம் பதிவர்கள் இயக்குனர்களுக்கே தெரியாத கோணத்தில் எழுதும் வித விதமான திரை விமர்சனர்களை விடவும்......சத்தியமா முடியல...

இங்கு இருக்கும் அறிவாளிகளையும் சிந்தனையாளர்களையும், யதார்த்தவாதிகளையும், இலக்கியவாதிகளையும், கடைசியாக பெண்ணியவாதிகளையும், அவர்களைப்பார்த்து பொங்கும் & பாராட்டும் சந்தர்ப்பவாதிகளையும் பார்க்கும் போது...

நானெல்லாம் இந்த ஒலகத்தில் என்னத்த பொறந்து, என்னத்த வளந்து.. என்னத்தத்தான் செய்யறேன்னு ரொம்ப லைட்டா புரிய ஆரம்பிச்சிருக்கு !!

பீட்டர்  தாத்ஸ் : “Only on the Internet can a person be lonely and popular at the same time.” ― Allison Burnett

Image Courtesy : Thx Google 

உங்கள கடிச்சது பாம்பா?

கல்யாணி நகரம் (மேற்குவங்கம்), கேரளாவைப்போல இருக்குமென்று 
எழுதியிருந்தேன். ஊர் முழுக்க பச்சை பசேரென்று தான் இருக்கும், வானுயர்ந்த மரங்கள், விதவிதமான வண்ண வண்ண பூச்செடிகள், கொடிகள், செடிகள் என வீடுகள் முழுக்க பாக்கு, தேக்கு, தென்னை, பலா, வாழை, மா என மரங்களும் பூச்செடிகளும் கொடிகளுமாகவே இருக்கும்.
குளிர் காலங்களில் ஆரஞ்சு நிறத்தில் பூக்கள் பூத்துக்குலுங்கும் ஒரு கொடி வீட்டு முகப்பிலும் , அதே கொடி இரண்டாவது மாடி வரையிலும் வரவழைத்து விட்டாச்சி..

தினமும் மாலையில், பக்கத்திலிருக்கும் மைதானத்திற்கு நடக்க செல்வேன். அப்படி செல்கையில் ஒருநாள், தெரு முக்கை தாண்டுவதற்குள் இடது கையில் வளையல் போடும் இடத்தில் அரித்தது. லேசாக சொறிந்தபடி, நவீனிடம் .."திடீர்னு அரிக்குதுடா'னு சொன்னேன். எப்பவும் போல.." கொசு கடிச்சி இருக்கும்.. என்னைக்கூட தான் கடிக்குது.. உன்ன மாதிரி சொல்லிட்டா இருக்கேன்.. சும்மா வாம்மா" என்றான்.

"கொசுக்கடிக்கறது எல்லாம் நமக்கு புதுசா? கொசுக்கடிச்சா இப்படி அரிக்காதுடா... சரி வா.." ன்னு நானும் பெருசா ஒன்னும் கண்டுக்கல... ஆனால்.. நேரம் ஆக ஆக கை..மற்றொரு கை, கழுத்து, காது..இடுப்பு , தொடைன்னு, முதுகுனு அரிப்பு பரவிக்கொண்டே வந்தது. முகத்தில் மட்டும் நானே கை வைக்கல..மற்றபடி எல்லா இடத்திலும் தாங்கமுடியாமல் சொறிந்து கொண்டிருந்தேன்.. இருட்டு ஒன்றும் தெரியவில்லை.

வீட்டிற்கு வந்தப்பிறகு தான் கவனித்தேன்., அல்மோஸ்ட் 40% ஐ படம் விக்ரம் போல ஆகியிருந்தேன். பெருசு பெருசா தண்டு தண்டாக வீங்கி கை, கால் முகம்னு பாரமட்சமின்றி வீங்கி இருந்தது. நவீனும் அவரும் பார்த்து பயந்துட்டாங்க..
நான் கம்பளி பூச்சியாக இருக்குமென்று நினைத்து, உடனே சுடுதண்ணீர் வைத்து குளித்தேன். 10 நிமிடம் அரிப்பு இல்லை,, ஆனால் திரும்பவும் ஆரம்பித்தது. சுடுதண்ணீரில் குளித்தவுடன் வீக்கம் லேசாக குறைந்து சிகப்பு திட்டு திட்டுகளாக உடல் முழுக்கத்தெரிய ஆரம்பித்தது. ஆனால் அதன் மேல் வீக்கமும் ஆரம்பித்தது. 

நமக்கு தான் உணவே மருந்தாச்சே? ஆயா சொல்லிக்கொடுத்தது நினைவுக்கு வர, 15 மிளகை எடுத்து வாயில் போட்டு, அடிநாக்கில் பட்டுவிடாமல் மென்று,  காரம் நாக்கை தொடுவதற்குள் தண்ணீர் குடித்து விழுங்கினேன்..
நேரம் சென்றதே ஒழிய அரிப்பும், வீக்கமும் குறையவேயில்லை. சரி இரவானால் டாக்டர் கிடைக்காமல் போக வாய்ப்பிருக்கிறது, என மருத்துமனை சென்று விடலாம்னு கிளம்பினோம். மருத்துவமனையில் மருத்துவர், தைரியம் சொல்லி ஊசிப்போட்டுக்கொள்ள பரிந்துரைத்தார். நர்சம்மா வந்து ஒரே சமயத்தில் இரண்டு இடுப்பிலும் இரண்டு ஊசிப்போட்டாங்க.

பெரிய லிஸ்ட் டாக மருந்து சீட்டு கொடுக்கப்பட்டது. ஏன் இப்படி? ன்னு கேட்டால், விஷப்பூச்சி ஏதோ கடிச்சியிருக்கு, விஷம் இரத்தத்தில் பரவி, உடல் முழுக்க இப்படி ஆகிவிட்டது, இரத்தத்தில் கலந்த விஷத்தை முற்றிலும் எடுக்கனும். அதற்கு குறைந்தது 15 நாளாவது 3 வேலை மாத்திரை சாப்பிடனும்னு சொல்லிட்டார்.

என்ன கொடுமை இது.. மாத்திரை மருந்துன்னாவே தெறிச்சி ஓடுவேன்.. எனக்கு 15 நாள், ஒரு பிடி மாத்திரை அதும் 3 வேலையும்.... நினைக்கும் போதே கண்ணைக்கட்டியது. ஆனால்.. வீக்கத்தையும், சிகப்பு திட்டுகளையும் பார்க்கும் போது.. மாத்திரை எவ்ளோ பரவாயில்லை என்றே தோன்றியது.

தூக்கத்திற்கு மிக வீரிய தூக்கமாத்திரை எழுதித்தரப்பட்டது. அதும் ஒன்றல்ல..இரண்டு. மருந்துக்கடைக்காரர், என் மேல் பரிதாபப்பட்டு, "அந்தம்மா தூங்காட்டியும் பரவாயில்ல.. இந்த மாத்திரை உடலுக்கு நல்லதல்ல...நீங்க இதை அவங்களுக்கு கொடுக்க வேணாம்,, அதனால் வாங்கிக்கவும் வேணாம்னு" சொல்லி கொடுக்கவேயில்லை. கெட்டதிலும் ஒரு நல்லது.

விடியற்காலை பெங்களூர் பயணம். கையும் காலும் இப்படி வீங்கி இருந்தால் நிச்சயம் விமானத்தில் அனுமதிக்க மாட்டாங்க, இது இரவுக்குள் சரியாகனும்னு படுத்தேன். ஊசி , மாத்திரைகள் மயக்கத்தை த்தாண்டி ஏதோ உடல் உபாதை சரியாக தூங்கல.. 3 மணிக்கு எழுந்தாச்சி. குளிக்கும் போது கையில் ஓரிடத்தில் எரிந்தது.  லேசாக கறுத்து, பெரிய கடுகு அளவில், பூச்சிக்கடித்த வடு ரணம் மாறாமல் தெரிந்தது. 
நவீனிடமும் அவரிடமும் காட்டினேன். "இவ்ளாம் பெருசா ஏதோ கடிச்சியிருக்கு, இப்பவரைக்கும் அது என்ன ஏதுன்னு உனக்கு தெரியலன்னு" திட்டு விழுந்தது.  இத்தனை மாத்திரை மருந்துன்னு சாப்பிட்டும் அந்த பூச்சிக்கடித்த இடத்தில் ரணம் போக மூன்று நாட்கள் ஆகின. நச்சு  அதிகமுள்ள பூச்சின்னு புரிந்தது.

மாத்திரையை 15 நாளும் சாப்பிட்டு தொலைக்க வேண்டியிருந்தது. வீட்டு ஓனரிடம் 2 நாள் முந்திதான் இதைப்பற்றி சொன்னேன். அதிர்ச்சியாகி,, நம்மையும் கடித்துவிட்டால் என்னா செய்வதுன்னு, தோட்டக்காரனிடம் சொல்லி, கொடியை எடுக்க சொல்றேன்னு சொன்னாங்க. நான் மறுத்து, "குளிர் காலம் இப்பதானே ஆரம்பிக்குது, அது பூத்து முடித்தவுடன் எடுத்துக்கலாம், மருந்து மட்டும் அடிக்க சொல்லுங்கன்னு""  சொன்னேன். மெதுவா...கேக்கறாங்க..."உங்கள கடிச்சது பாம்பா??"

"ஞே" 

அடப்பாவிகளா,,,பாம்பா??? ..பாம்புக்கூட கடிக்குமா இங்க? ன்னு மனசுல நினைச்சிக்கிட்டு, "பாம்பு கடிச்சா கடிச்ச இடத்தில் இரண்டு மார்க் இருக்கும் (அறிவு?? இந்த அறிவுக்கு காரணம் ..நம்மோட தமிழ் சினிமாக்கள்) ஆனா எனக்கு ஓரு மார்க் தான் இருந்துச்சி.. பாம்பு மாதிரி ஏதோ ஒன்னு தான் கடிச்சியி்ருக்கு...ஆனா அது பாம்பு இல்லைன்னு" சொன்னேன்.

இதெல்லாம் எனக்கு புதுசா இருக்கு.. கேரளாவில் வேறு விதமான அனுபவங்கள் கிடைத்தது.. இங்கே இப்படி....

மொத்தத்தில்.. நம் உடலில் விஷப்பூச்சி கடிச்சாலும் சாகாமல் இருக்குமளவு எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்று ஒரு நிம்மதி.

இன்று தோட்டக்காரர் வந்து என்னை பெங்காலியில் விசாரித்துவிட்டு, "இதுல அந்தமாதிரி பூச்சியெல்லாம் இருக்காதும்மா"ன்னு ,முக வாட்டத்தோடு, கொடி, செடின்னு எல்லாவற்றிலும் பூச்சி மருந்து அடிச்சிட்டு போனார்.

பீட்டர் தாத்ஸ்: Everyone can identify with a fragrant garden, with beauty of sunset, with the quiet of nature, with a warm and cozy cottage.

கேத்தகோம்ப் - பாரிஸ் பயணக்குறிப்புகள் #5

Catacombs of Paris :  கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லப்பட்ட மனிதர்களின் ஆயிரக்கணக்கான மண்டை ஓடுகளும், எலும்புகளும் பூமிக்கு அடியில் பாதாளாத்தில் மிக அழகாக கொலு பொம்மைகள் போன்று அடுக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.  ஒரே இடத்தில்
அமைக்கப்பட்ட 200 வளைவு படிக்கட்டுகளில் ல் இறங்கி உள்ளேப்போனால், நீண்ட இருண்ட குகை... நடக்க நடக்க சில கிமி வளைந்து வளைந்து செல்லும் நடைப்பயணம். கடைசியில் இந்த எலும்புக்கூடுகள் பகுதிக்கு செல்கிறது. இதுவும் சில கிமி இருக்கும்.. இத்தனை மனிதர்கள் கொல்லப்பட்டனரா?  என்ற ஆதங்கம் வருகிறது.  ஆனால் இவற்றைப்பார்த்து பயமே வரவில்லை. குழந்தைகள், இதயம் பலகீனமானவர்கள் அனுமதியில்லை. ஏதோ ஒரு இடத்தில் நுழைந்தோம்.. வெளியில் வர அதே 200 வளைவு படிக்கட்டுகள், வெளியில் வந்தால்.. நுழைந்த இடத்திலிருந்து 1 கிமி தூரம் தள்ளி வெளிவாசல் இருந்தது.

கூகுளில் தேடியதில், இவங்க தெளிவாக இதைப்பற்றி எழுதி இருந்தாங்க.. காப்பி செய்தாச்சி..

Content courtesy Cakes Altrincham, United Kingdom : Thank you!

//“Walls of Skulls & Bones!”
Reviewed 8 November 2006
We visited the Catacombs on a Saturday morning at about 11am. They had opened at 10am and there was already a queue as they only allow 200 visitors in the catacombs at any one time. You'll need to be fairly fit to visit as there are over 100 steps down into the tunnels and around 80 deep spiraled steps to get back to the surface - and no resting point! Once in the tunnels there are a few rooms featuring boards telling the history of the catacombs and then a very very long walk through a narrow tunnel with a low ceiling until you reach the bones. I wasn't sure what to expect, maybe a few skeletons arranged into body shapes. What I found were literally millions of peoples bones lining metre after metre of walls both sides of the tunnels, neatly stacked and arranged in patterns with femur ends and skulls making up most of the walls. The number of bones were amazing, stretching as far as the eye could see.


The catacombs are one of the strangest places I have ever visited. Certainly not suitable for children! It was a very spooky place with low lighting but I didn't find it as emotional as I thought I might. There is no tragic story to the bones, some came from a mass grave of people killed by an epidemic of some sorts, but most were just taken there from other graveyards. I think if they were all from the war or some other disaster I might have been able to empathize a little more. Nevertheless, its a very interesting place to visit. I certainly don't envy the people who had to arrange all the bones, it must have taken years.

Other things to mention are; wear sensible shoes. The ground is potholed and its a little wet and muddy in some places, plus there are a lot of tunnels to walk through. It wasn't particularly cold down there but the temperature difference may be noticed in the summer heat, so take a jumper. Don't take luggage -
they can't store it, and the entrance is streets away from the exit. Also, they will check any handbags for bones when you exit. Yes, people really do try to take them. There was a skull sitting on top of the counter that they had found in someone's bag the day before. Unbelievable.//
மேல் தரப்பட்டுள்ள தகவல்கள் , இவ்விடம் செல்ல போதுமானதாக இருக்குமென நினைக்கிறேன். நவீனோடு வெக சில இடங்களே செல்ல நேரம் இருந்தது, அதில் இதுவும் ஒன்று. இதற்கான வரிசையில் நிற்கும் போதே நவீனுக்கும் எனக்கும் ஏகப்பட்ட வாக்குவாதங்கள். அநேகமாக அது உணவைப்பற்றியும், ஃப்ரான்ஸ் நகரின் சுத்தம் மற்றும் மக்களின் பழக்கவழக்கங்கள், பொது இடங்களில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதைப்பற்றியதுமாக இருந்தது.

எப்போதும் இந்தியாவை விட்டுக்கொடுக்காமல் பேசிய நானும், ப்ளடி இந்தியன் என என் பழக்க வழக்கங்களை திட்டியபடியே அவனும் இருந்தான். அதாது, பொது இடத்தில் சத்தமில்லாமல் பேசவும், கேமராவை வைத்துக்கொண்டு ஃபோட்டோ எடுத்தபடியே இருந்ததால், எதை எடுக்கனும் யாரை எடுக்கக்கூடாது, எடுத்தால் குற்றம் என்றும், ரயில் நிலைய படிக்கட்டுகளில் எந்தப்பக்கம் நிற்கவேண்டும், ரயிலில் எப்படி நிற்க வேண்டும், உட்காரவேண்டும் என்று சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருந்தான். வேகமாக நடக்கவேண்டுமென நான் கத்த கத்த சின்னப்புள்ளையை இழுத்துக்கிட்டு போறாப்ல என்னை இழுத்துக்கொண்டும் ஓடினான்.

உணவு'ன்னு வரும் போது, கோவத்தின் உச்சிக்கு போனான். ஆம், வெளியில் சென்றால்,அந்த நாட்டு உணவு எனக்குப்பிடிக்கவில்லை என வெறும் பன் ' ஐ சாப்பிட்டும் , திரவ உணவுகளை சாப்பிட்டும் காலம் கடத்திவந்தேன். நவீனோடு சென்ற போதும், அவர்கள் உணவை சாப்பிடமாட்டேன் என அடம் பிடிக்க, விடாமல் ஏதோ உணவை வாங்கிவந்து ," எனக்கு ஃபிரன்ச் தெரியும், இது சிக்கன், சாப்பிடு" என்று கட்டாயப்படுத்தி கொடுத்தான். பாதி சாப்பிட்டு முடித்தவுடன்,அது 'பன்றிக்கறி' எனக்கூற.... குமட்டிக்கொண்டு வந்தது. பாதியை அப்படியே அவரிடம் கொடுத்துவிட்டு, கோவமும் அழுகையுமாய்.."என்னை பன்னி சாப்பிட வச்சிட்ட இல்ல நீனு"ன்னு நவீனோடு சண்டையிட... அவனோ.. "இவ்ளோநேரம் நல்லா ருசிச்சி ருசிச்சி சாப்பிட்ட இல்ல..அது பன்னியா கோழியான்னு கூட உனக்கு வித்தியாசம் தெரியல இல்ல..?..அப்புறம் என்ன ?. சாப்பிட்டு பழகு" னு திரும்ப பதில் சொல்ல.. .. இருவருக்கும் லடாய் அதிகமாகி, "இனிமே கொலப்பட்னி இருந்தாலும் இருப்பேன், நீங்க இரண்டுப்பேரும் எது வாங்கிக்கொடுத்தாலும் நான் சாப்பிடமாட்டேன்" என சவால் விட..

வூட்டுக்கார் நடுவில் வந்து... அவனை அமைதியாக இருக்க சொல்லிவிட்டு, என்னிடம் "நீ சாப்பிட்டது சிக்கன் தான்.. அவன் உன்னை சும்மா கிண்டல் செய்து வெறுப்பேத்தறான்... அதையும் நீ நம்பி.. வம்பு பண்ற?.. இந்தா சாப்பிடு இது சிக்கன் தான்".னு கொடுத்தார்..

சிக்கனா இருந்தாலும் எனக்கு வேணாம்னு தண்ணிய குடிச்சிட்டு ..அதன் பிறகு அவர்கள் என்ன கொடுத்தாலும் வாங்கி சாப்பிடாமல், வீட்டுக்கு வந்து நான் சமைத்ததை மட்டுமே சாப்பிட்டேன்..

இத்தனையும் இந்த காத்தேகோம்ப்ஸ் பார்க்க வரிசையில் நிற்கும் போது நடந்தவை.. மிக மிக மெதுவாக நகர்ந்த வரிசையில், டிக்கெட் வாங்கவே இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நிற்க வேண்டியிருந்தது.

பயணக்குறிப்பு - 4

தொடரும்....

Images courtesy Google : Thx

ஐஃபில் டவரில் புளிசாதம் - பாரிஸ் பயணக்குறிப்புகள் #4

முந்தைய பதிவுகள் :
1. பாரிஸ் பயணத்துவக்கம்
2. நவீன் விடுதி அறை
3. டிஸ்னி பார்க் - பாரிஸ்

நவீனுக்கு பிடித்த காய்கறிகளை, பக்கத்திலிருந்த இலங்கை தமிழர் கடையில் முந்தின இரவே வாங்கி வைத்திருந்தேன். காலை சிற்றூண்டியோடு, சமையலும் முடித்து, முந்தின நாள் வெளியில் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டத்தில், கொஞ்சம் புளிக்காய்ச்சல் செய்து எங்களுக்கு சாப்பாடும் கட்டிக்கொண்டேன்.  புளிசாதம் தொட்டுக்கொள்ள உருளை வறுவல். !!

இன்று, நாங்கள் போக திட்டமிட்ட இடம் "Eiffel Tower"  

நவீன் இருக்குமிடத்திலிருந்து ரயிலில், இரண்டு இடங்கள் இறங்கி , ரயில் மாற வேண்டும். இதெல்லாம் தெரியாது தான், ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்கும் போதே, எங்களுக்கு ஒரு Metro & RER Map ஐ கொடுத்து, மொழி தெரியாததால், செய்கையாலேயே எங்கு இறங்கி ரயில் மாறனும்னு பொறுமையாக விளக்கம் சொல்லி டிக்கெட் கொடுத்தார் அந்த ஃப்ரான்ஸ் பெண்.

பொதுவாக லைன்' கள் 
A, B,C,D, E என இருக்கின்றன, அவைக்கு தனித்தனியான வண்ணங்கள். இப்ப A லிருந்து D க்கு போகவேண்டுமென்றால், எந்த ரயில் நிலையிலிருந்து D க்கு கனெக்ஷன் ரயில்கள் இருக்கின்றன என்பதை புரிந்துக்கொண்டால் போதும். திரும்ப வரும்போது அபப்டியே வந்துவிடலாம்.
இதில் இன்னொன்று, மாறவேண்டிய ரயில்
நிலையில் இறங்கினாலும், அந்த ரயில் நிலையத்தில் D போக ரயில் எங்கு நிற்கும் என்பதை தேடிக்கண்டுபிடித்து, அந்த ரயில் நிலையத்திற்கு போகவேண்டி இருக்கும். இப்படி மாறவேண்டிய ரயில் நிலையங்கள் எல்லாமே கீழ்,மேல் என பல தளங்களை கொண்டும், பல்வேறு திசைகளிலும் மிக பெரிய நிலையங்களாக இருந்தன.
இதில் திசைமாறி சென்றால்..வேற என்ன குழப்பம் தான்.
  
மேப்'ஐயும், ரயிலின் உள்ளே எங்கே இறங்கவேண்டும் என்பதையும் இருவரும் கவனமாக பார்த்துக்கொண்டு, ஒருவழியாக டவர் இருக்கும் நிலையத்தை
அடைந்தோம். அங்கிருந்து 1-5 கிமி மேல் நடக்க வேண்டியிருந்தது. ஆனால், ரயில் நிலைத்திலிருந்தே டவர் தெரிந்ததாலும், மக்கள் கூட்டம் அலைமோதியதால், அவர்களையும் பார்த்தவாறு போய் சேர்ந்தோம்.
ஐஃபில் டவர் -பிரம்மாண்டம். அதே சமயம் தாஜ்மகால் பார்க்கும் போது "ஒரு அதிசயத்தை பார்க்கின்ற" உணர்வு எனக்கு இதைப்பார்க்கும் போது வரவில்லை. இரும்பு, அதன் நிறம் போன்றவை காரணமாக இருக்கலாம். இரவில் வண்ணவிளக்குகளின் அலங்காரத்தில் ஐஃபில் டவர் மிக அற்புதமாக இருக்குமென்று ஊகிக்கிறேன், இரவில் போக சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

டவரின் அடித்தளத்தில், நான்கு புறத்தில் ஒன்றை தவிர்த்து மிச்சம் மூன்று இடத்திலும் மக்கள் வரிசைகள் தென்பட்டன. எதில் கூட்டம் குறைவாக இருந்ததோ அதில் சென்று நின்றுக்கொண்டோம். டிக்கெட் " லிஃப்ட்"" என்று தான் கேட்டு வாங்கினார். ஆனால் எங்க, அவங்க பாஷை நமக்கு புரியல..டிக்கெட்டில் எழுதி இருப்பதும் நமக்கு புரியல.. உள்ளே போனால் படிக்கட்டுகள்..

சரி.. இதோ வந்துடும் லிஃப்ட்'னு.. முதல் தளம் 57 மீ உயரம், மொத்தம் 328 படிக்கட்டுகள் ஏறியாச்சி. ஒன்னும் முடியல எனக்கு.. யப்பா போதும்டா சாமின்னு மேலேயிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றுவிட்டேன்.

கொஞ்ச நேரம் ரெஸ்ட் கொடுத்த என் வீட்டுக்காரர், "வா.. மேல போகலாம்னு கூப்பிட்டாரு.. "

"என்னாது மேலேயா? முடியவே முடியாது.. எனக்கு கால் வலிக்குதுன்னு " சொல்லிட்டேன்..

முதல் தளத்தில் ரெஸ்ட்டாரன்ட் முதற்கொண்டு எல்லா வசதிகளும் இருந்தன. எல்லாப்பக்கங்களும் சுற்றி பார்த்தோம். திரும்பவும், "வா..இவ்ளோ தூரம் வந்துட்டோம், இரண்டாவது தளம் வரைக்கும் போயிடலாம்.. அப்புறம் லிஃப்ட் தான்.. மெதுவா ஏறலாம் வா" ன்னு விடல என்னை..அவர் என்னை விட்டுட்டு தனியாக போகமாட்டார்.. சரி மெதுவாக போகலாம்னு இரண்டாவது தளம்  ஏற ஆரம்பித்தோம். 115 மீ, 340 படிக்கட்டுகள்.. ஒருவழியாக ஏறிட்டோம்.

எப்பவுமே முடியலன்னு சொல்வேனே ஒழிய ,  ஆரம்பிச்சிட்டா நடுவில்
நிற்கும் பழக்கம் எனக்கில்ல. மூச்சு வாங்கினாலும், முட்டி வலித்தாலும் ..ம்ஹும்..நிற்கவோ உட்காரவோ மாட்டேன். இங்கவே திருப்பதி மலைஏறும் போது அப்படிதான். அங்கவும் அப்படியே நிற்காமல் ஏறி முடிச்சாச்சி.

இரண்டாவது தளத்தில் குழப்பம் ஆரம்பித்தது. அதாது எங்களின் டிக்கெட்டிற்கு மேல் தளத்திற்கு போக முடியுமா என்பது தான். காரணம் , மக்கள் வரிசைகளில் மேல் தளம் போக டிக்கெட் வாங்க நின்றிருந்தனர்.  டிக்கெட் வாங்கி போகனும்னா "வரவே மாட்டேன்" நானுன்னு பிடிவாதமாக சொல்லிட்டேன். ஆனா, இவரோ.. லிஃப்ட் 'னு கேட்டேன், மேல் தளம் வரைன்னு கேட்டு தான் வாங்கினேன்.. னு விசாரிக்க சென்றார். ஏறி வந்ததில் உடல் சோர்ந்து போனது ஒரு பக்கம், பசி ஒரு பக்கம்.

எடறா அந்த புளி சாத மூட்டைன்னு... ஐஃபில் டவர் இரண்டாவது தளத்தில் புளி சாதத்தை பிரிச்சாச்சி..
இந்தியர்களால் மட்டுமே இப்படியான வேலையை செய்யமுடியும் என்று நிச்சயம் சொல்லமுடியும். அங்கு வந்த வேறு எந்த அயல் நாட்டவரும் சாப்பாடு மூட்டை கட்டிட்டு வரல. அதுவும் சாதம் எடுத்துட்டு வர சான்ஸே இல்லை ..
இருவரும் புளிசாதம் சாப்பிட்டு கொஞ்சம் ஓய்வுவெடுத்துவிட்டு, அதே டிக்கெட்டில் , மேல் தளம் போகலாம் என்று தெரிந்தவுடன், அதற்கான வரிசையில் சென்று நின்றோம். 

இந்த முறை ஏமாற்றமில்லாமல் லிஃப்ட் தான். மேல் தளத்திற்கு மொத்தம் 4 லிஃப்ட்கள் இயக்கப்படுகின்றன. அதில் ஒன்று அடித்தளத்திலிருந்து நேரடியாக மேல் தளம் வருகிறது என்று புரிந்தது. அதற்கான கட்டனம் அதிகம். மிச்சம் இருக்கும் 3 லிஃப்ட்களும் இரண்டாவது தளத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
பொதுவாக, பாரிஸிலிருந்து திரும்பும் வரை, எந்த செக்யூரிட்டி செக்கிங்கிலும் நானோ அவரோ தீவரமாக கண்காணிக்க படல.. ஐஃப்பில் டவர் உட்பட, பல இடங்களில் எங்களின் பையை கூட அவங்க பரிசோதனை செய்யல. அதே சமயம்..  எங்களுடன் வந்த அதே நாட்டவர், மற்ற நாட்டுக்காரர்களை அக்கு வேறு ஆணி வேறாக பரிசோதித்தே அனுப்பினர். 
இருவரின் முகமும் அம்புட்டு அழகாவும், பால் வடியும் குழந்தை தனத்தோடும், மிக மிக நல்லவங்களாகவும் காட்டியிருக்குன்னு இதை படிக்கறவங்க புரிஞ்சிக்கனும் !

லிஃப்ட்டில் மேல் தளம் சென்றாகிவிட்டது.  உலக அதிசயம் ஒன்றின் உச்சியில் நிற்கிறோம் என்ற எண்ணம் அங்கிருந்து வரும் வரை இருந்தது, மேலிருந்து கீழே இருப்பவற்றை பார்க்கும் போது பிரம்மிப்பாக இருந்தது. மேல் நிமிர்ந்து ஐஃபில் டவரின் அந்த உச்சியை பார்த்தேன்.... மட்டற்ற மகிழ்ச்சி, இனம்புரியாத ஏதோ ஒரு உணர்வு அங்கு நிற்கும் வரை இருந்துக்கொண்டே இருந்தது..

மேல் தளத்திலும் லிக்கர் ஷாப் இருந்தது.. காதலர்களும், தம்பதிகளும் மெல்லிய கோப்பைகளில் தங்களுக்கு பிடித்த மது வகைகளை ஆர்வமாக வாங்கி அருந்தி, ஐஃப்பில் டவரின் மேல் தளத்திற்கு வந்ததை கொண்டாடினர். நமக்கு அந்த பழக்கம் இல்லாததால் அவர்களை எல்லாம் வேடிக்கைப்பார்த்தவாறு சுற்றிவந்தோம்.

திரும்ப, இறங்கும் போது..சோய்ய்ய்ய்ன்னு..நேராக கீழ் தளத்திற்கே கொண்டுவந்து விட்டதும் எதிர்ப்பார்க்காதது. அப்போது தான் யோசித்தேன்.. ஏறி வரும் போது எங்குமே எதிராக யாரும் இறங்கிவரவில்லை. மேல் தளத்திற்கு செல்லும் அனைவரும் நேரடியாக கீழ் தளத்திற்கு தான் வரமுடியும், அப்படியான வசதியை தான் செய்திருக்கிறார். திரும்பவும் படிகளில் இறங்கி வரவேண்டியதில்லை.

கீழே, பல்வேறு நாட்டுக்காரர்களையும் அவர்கள் மொழி, உடைகள், குழந்தைகள் , பெண்கள் என வேடிக்கைப்பார்த்தவாரே.. ஒரு கோன் ஐஸ்க்ரீம் 3 ஈரோன்னு கொடுத்து வாங்கி சாப்பிட்டுக்கொண்டே டவரின் கீழே ஒரு இடத்தில் இருந்த கூட்டத்திற்கு சென்று எட்டிப்பார்த்தோம். 4 இளைஞர்கள் விதவிதமான நடனம் ஆடி, பார்வையாளர்களை அசத்திக்கொண்டிருந்தனர். அதை சிறிது நேரம் வேடிக்கைப்பார்த்தோம்.

கறுப்பின இளைஞர்கள் ஐஃப்பில் டவர் மாடல் பொம்மைகளை கற்றையாக கைகளில் மாட்டிக்கொண்ட்டு விற்றுக்கொண்டிருந்தனர். திடீரென சத்தம் எழுப்பி தெறித்து தப்பித்து இங்கும் அங்குமாக ஓடினர்.. ஏன் இப்படின்னு பார்த்தால்,  அனுமதியில்லாமல் அவர்கள் அதை விற்பதால் போலிஸ் துரத்தி பிடிக்க..அவர்களிடமி்ருந்தே தப்பித்தனர்.

ஐஃபில் டவர் பார்த்தாச்சி... :) திரும்பி வரும் வழியெல்லாம் இந்த கறுப்பின இளைஞர்கள் நம்மூர் ரோடுகடையில் நின்று விற்போர் போன்று ஐஃபில் டவர் மாடல்களை விற்றுக்கொண்டிருந்தனர். அவர்களிடம் வாங்குவோர் மிகவும் குறைவாகவே இருந்தனர்.. விரல் விட்டு எண்ணும் அளவில்..  அரசு கடைகளில் வாங்குவோரே அதிகமாக இருந்தனர்.

தொடரும் ..

படங்கள் : கூகுளுக்கு நன்றி

பொது இடங்களில் பெண்கள்..

கொல்கத்தாவில், லேக் மார்கெட் பகுதியில் நம்மூர் கடைகள் இருக்கும், நல்லெண்ணெய், புளி, சம்பா கோதுமை, கேழ்வரகு மாவு, நம்ம ஊர் சிப்ஸ் எல்லாம் இங்க'தான் கிடைக்கும். இதுக்காக இவ்விடத்தை தேடி போவது வழக்கம், தமிழர்கள் அல்லது தென்னிந்திய மக்கள் அதிகம் வரும் இடம் என்பதாலோ என்னவோ 'பனானா லீஃவ்', னு ஒரு தென்னிந்திய உணவகமும் அங்க இருக்கு. உள்ளே போய் உட்கார்ந்தவுடன் கவனித்தேன் சரியாக பத்து பெண்கள் 45-50, 50-60+ வயது இருக்கலாம், அநேகமாக எல்லோர் பிள்ளைகளுக்கும் திருமணம் நடந்து பேரக்குழந்தைகளும் இருக்கலாம், அவர்களும் அம்பிரிக்கா ஆப்ரிக்கானு என்ஆர்ஐ 'கள் என்று இவர்கள் பேச்சிலிருந்து தெரிந்தது. பிள்ளைகளுடன் தங்கிவிட்டு வந்த கதைகளும் காதில் விழுந்தது. அலுவலக கதைகளும் ஓடின.

வயதிற்கு மீறிய உடைகள், தலையலங்காரம். அனைவரும் வட இந்தியப்பெண்கள், கையில்லாத டாப்ஸ், ரவிக்கை,சல்வார், பளீச்ச்ச்ச் லிப்ஸ்டிக், லூஸ் ஹேர், காதில் லோலாக்குகள்..என.....

ஒரு வயதிற்கு மேல் மேக்கப் க்கு கொடுக்கும் முன்னுரிமையை உடல் பயிற்சிக்கும் இப்பெண்கள் கொடுக்கலாம்னு தோணிச்சி. ஸ்லீவ்லஸ் ரவிக்கை & சல்வாரில் சதை தொங்கும் கைகள், சாதாரணமாக எழுந்து நடக்க முடியாத மூட்டு, இடுப்பு வலிகள், , நரைத்த முடிக்கு ஒன்றும் பாதியுமாக கலர் செய்து ஆங்காங்கே வெளியில் தெரியும் வெள்ளைகள் என கொஞ்சம் பாவமாக தான் இருந்தது.

தனிமை, கடமைகள் முடிந்துவிட்டன, வீட்டில் அதிகம் பொறுப்புகள் இல்லை, நேரத்தை எப்படித்தான் கடத்துவார்கள். எல்லோரும் திட்டமிட்டு தன்னை அழகாக்கிக்கொண்டு ????? ஹோட்டலுக்கு வந்திருந்தனர்.
யாரோ ஒருவர் பேச, மற்றவர்கள் அதை கவனித்து சிரித்து பதிலளித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இடையே திடீரென சத்தம் அதிகமானது.

என்னடா மேட்டர் என்று திரும்பிப்பார்த்தேன். ஓஓஓஓஓஒ பில் வந்துவிட்டதால் வந்த சலசலப்பு அது!. சிரிப்பதா அழுவதா எனத்தெரியவில்லை. பெண்களின் இயற்கை குணத்தை எந்த வகையிலும் மாற்ற இயலாது. இணையத்தில் பெண்களை நக்கல் அடித்து வரும் ஜோக்குகள் படங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்து எனக்கு தன்னால் சிரிப்பு வர ஆரம்பித்தது.
ஒன்னுமில்ல.. மொத்த பில் தொகை 3400 ரூ. ஒருத்தருக்கு 340 ரூ. யாரோ ஒருவர் பில்தொகையை கட்டிட்டார்.  அதன் பிறகு அந்த 340 ஐ ஒவ்வொருவரும் கொடுக்கும் போது தான் அம்புட்டு சத்தம்.

=>ஒருவருக்கொருவர் சில்லறை மாற்றுதல்,  
=> எல்லோரும் கைப்பை திறந்து வைத்து, கையில் 100, 500 ரூ நோட்டுகள்
=>கணக்கை அங்கேயே முடித்துவிடும் அவசரம் மற்றும்
=>தன் கணக்கில் 5 பைசா அதிகம் போயிடக்கூடாது

போன்ற உள்ளுணர்வுகளால், அவர்களுக்குள் ஏற்படும் பதட்டமே அத்தனை சத்ததிற்கும் காரணம். அத்தனைப்பேரும் அதை முடித்தப்பிறகே வெளியில் சென்றனர். அதற்குள் அந்த இடத்தில் அவர்கள் ஏற்படுத்திய சத்தம் ஏழு ஊரை கூட்டியதை அவர்கள் அறியவில்லை.

இதே இடத்தில் ஆண்கள் இருந்திருந்தால்.......  :)

இப்பவும் எப்பவும் எனக்குத்தோன்றுவது -  பெண்கள் எதை ஆண்களோடு ஓப்பீடு செய்யனுமோ அதை மட்டும் செய்து தங்களை மேம்படுத்த முயற்சி செய்யலாம். மேற்சொன்ன பெண்கள் வேலைப்ப்பார்த்தவர்கள், பார்ப்பவர்கள் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. அதாவது அதன் முதிர்ச்சியும் அவர்களிடம் தெரியவில்லை.

அணில் குட்டி : "ஏண்டி நாகரீகம் இல்லாமல் அங்கவே வேடிக்கைப்பார்த்துட்டு இருக்கன்னு வூட்டுக்கார்கிட்ட திட்டு வாங்கினதை அம்மணி சொன்னாங்களா பாத்தீங்களா?  இப்படி வேடிக்கை பாக்கறதும் பெண்ணின் பழக்கம் தானே அம்மணீஈஈஈ ?!!  அட்வைஸ் எல்லாம் அடுத்தவங்களுக்கு மட்டும்.. ..:)

பீட்டர் தாத்ஸ் : The beauty myth is always actually prescribing behaviour and not appearance.” ― Naomi Wolf

பாகுபலி' யாக இருக்க வேண்டியதில்லை....

சொந்த ஊர் போக எனக்கு கிடைக்கும்/கொடுக்கப்படும் நேரம் எப்போதும் ஒரு நாள் தான்.  தனியாக போவேன். விடியற்காலை சென்னையில் கிளம்பி 11 மணிக்குள் ஊரில் இருப்பேன். திரும்ப 4-5 மணிக்கு ஊரிலிருந்து கிளம்பி, இரவு 9 மணி அதிகபட்சம் 10 மணிக்குள் வேளச்சேரி வந்துடுவேன்.

ஆனால், அன்று ரயிலில் அனுப்பி வைக்கிறேன், வேகமா போயிடும்னு விழுப்புரத்தில் ரயில் கிளம்பும் போதே மாலை மணி 6.45. தாம்பரம் வந்து பஸ்ஸில் நேரம் பார்க்கும் போது 10.30 கடந்திருந்தது. இரவு, தனியாக பயணம் என்றாலே அதீத கவனம் இருக்கும். தலை முழுக்க காதுகள் முளைத்து, சின்ன சத்தத்தைக்கூட தலை திருப்பாமல் உணரும் கவனம் வந்துடும். வளையலை ரயிலேயே யாருமறியாமல் கழட்டி உள்ளே வைத்துவிட்டேன். துப்பாட்டாவை கழுத்தோடு சுற்றிக்கொண்டேன். செயின் அறுத்துட்டு போயிடுவாங்க என்ற முன்னேச்சறிக்கை.. இதை தவிர என் பாதுகாப்புக்கு தான்  காதுகள் கழுதை காதுகளாக மாறிவிடுவது. யாராவது தொடருகிறார்கள்னு தெரிந்தால் அதற்கு தகுந்தார் போல என்ன செய்யலாம்னு யோசிப்பேன். தனி பயணங்களில் எப்பவும் ஒருவித பய உணர்ச்சி இருக்கும். பொது இடங்களில் அநாவசியமாக பேசாமல் இருப்பது, யாரையும் பார்த்து சிரிக்காமல் இருப்பது குறிப்பாக ஆண்களை என பல ரூல்ஸ்ஸை ஃபோலோ செய்வேன்.

முன்கதவுக்கு பக்கத்தில் உள்ள லேடீஸ் சீட்டில் இரண்டாவதில் கம்பியொட்டி அமர்ந்திருக்கிறேன்.. பெண்கள் அதிகமில்லை, பெண்கள் இருக்கையிலும் ஆண்களே உட்கார்ந்திருந்தனர். பள்ளிக்கரணை தாண்டி பேருந்து வந்தபோது , திடீரென டிரைவர் சீட்டுக்கு பின்னால் இருந்து இருவர் எழுந்து பஸ்ஸின் வேகத்தில் தடால்னு முன்னால் ஓடிவந்து மிக சரியாக எனக்கு முன்னால் இருந்த சீட்டின் கம்பி்யை விழும் முன் பிடித்துக்கொண்டு, எனக்கு பின்னால் இ்ருந்த யாரிடமோ.. எழுந்திருங்கடா போலாம்.. " னு சொல்லும் போதே.. நல்லா தண்ணி அடிச்சிட்டு வந்திருக்காங்கன்னு தெரிஞ்சிது...

என் பின் சீட்டிலிருந்து எழுந்தவர்களும் தண்ணி.. இருவரும் நின்றபடியே ஏதேதோ பேச.. நடுவில் நானும் என் பக்கத்தில் ஜன்னலோர சீட் பெண்ணும்.. தவித்தோம்.  ஏனென்றால், முன்னே கம்பியை பிடித்து நின்றவர்களுக்கும் நிதானமில்லை.. பின்னால் எழுந்து நிற்பவர்களுக்கும் நிதானமில்லை.. இவங்க எப்ப வேணாலூம் என் மேல் விழலாம்.. இல்லாவிட்டால் வாந்தி எச்சில்னு எதாது கருமம் என் மேல் விழலாம்னு ஒருவித படப்படப்பு இருந்தது..

நடத்துனர் கவனித்து, "யோவ் வேளச்சேரி வர நேரம் இருக்கு, போய் உக்காருங்கய்யா" ன்னு சொல்ல, நாங்கள் இருவரும் உடலை சுருக்கி, குனிந்தபடி இருப்பதைப்பார்த்து, மற்ற பயணிகளும் அவர்களை உட்கார சொல்லி சத்தம் போட அவரவர் இருக்கையில் உட்கார்ந்தனர்.

இவர்களை கவனம் வைத்து வேளச்சேரி வரும் முன்னரே எழுந்து நின்றுவிடலாம்னு நான் எழுந்த அதே சமயம், முன் சீட்டில் இருந்த குடிகாரர்களும் முன்னைப்போலவே வேகமாக எழுந்து ஒரே பாய்ச்சலில் கதவு கம்பியை பிடித்து முன்னால் விழும் போது.. அநேகமாக என் மேல் விழவேண்டியது... சட்டெனறு ஒரு கை கம்பியை பிடித்து, அவர்களை என் மேல் விழாமல் தடுத்தது. கைக்கு சொந்தக்காரர் கதவுக்கு நேர் எதிரில் நின்றிருந்தார்.

நெற்றியில் சின்ன திருநீர் கீற்று (அந்த நேரத்தில்???) மெல்லிய வெள்ளை கதர் சட்டை, பாக்கெட்டில் இருக்கும் பணம் மொபைல் எல்லாம் வெளியில் தெரிந்தது. கருப்பு நிற பேன்ட், 30-35 வயதிருக்கலாம், கோதுமை நிறம், கலையான அமைதியான முகம்.

கையை கம்பியில் பிடித்ததோடு இல்லாமல் லேசாக தள்ள..அவர்கள்
பின்னோக்கி போனார்கள்.அவர்களை பார்த்து எனக்கு பின்னால் இருந்தவர்களும் எழுந்து வெளியில் வந்து என் பின்னால் விழும்படி நிற்க.....ஒன்றும் புரியாமல் கைக்கு சொந்தமானவரை நான் பார்க்க...அதை புரிந்து, வேகமாக... கண்களால் "அவருக்கு பின்னால் வரும்படி" செய்கை செய்தார். அடுத்தவினாடி அவரின் முதுகுக்கு பின்னால் நான் ஒளிய, இரண்டு கைகளையும் விரித்து குடிகார்கள் நால்வரும் என் பக்கம் வராமல் தடுத்ததோடு இல்லாமல் நான் இறங்கும் வரை பஸ்ஸின் ஆட்டத்திலும் அதே போஸ்'ஸில் நின்றிருந்தார். கதவருகில், ஒருசேர, நான்கு குடிகாரர்களின் ஆட்டத்தையும் பேச்சையும் தாங்குவது சாதாரண விசயமாக தெரியவில்லை. விஜய்நகர் வந்ததும் அவர் ஒரு கையை இறக்க.. வேகமாக இறங்கி ஓடினேன்.

பொதுவாக சின்ன விசயத்திற்கு கூட நன்றி சொல்லும் நான், அவருக்கு நன்றி சொல்லல.. இறங்கியவுடன் திரும்பிப்பார்த்து ஒரு புன்னகைக்கூட செய்யல...நேரம் அதிகமாகிவிட்டதால், வீட்டுக்கு செல்வதில் மட்டுமே என் கவனம் இருந்தது. ஏன் நன்றி சொல்ல எனக்கு தோணலன்னு இப்ப வரைக்கும் தெரியல.. ஆனால்.. அவரின் சமயோஜிதமான கண் அசைவு, கைகளை கொண்டு 3-5 நிமிடங்கள் என்றாலும் தொடர்ந்து தாய் குழந்தையை அடை காப்பது போல காத்தது..சில ஆண்டுகள் சென்றுவிட்ட பொழுதும்....இன்றும் நினைவில் இருக்கு....

வெளியிடங்களில் நேரத்தை பயன்படுத்தி உரசிவிட்டு செல்லும் ஆண்களுக்கு மத்தியில். சமயத்திற்கு ஒரு பெண்ணை காக்கும் இதுபோன்றவர்கள் தான் "ரியல் ஹீரோஸ்"..  பாகுபலி போல வீரம் தேவையில்ல...(தலைப்பை டச் பண்ணிட்டேனா? :) ) இப்படி கொஞ்சமாவது பொறுப்போடு இருந்தால் போதும்....

அணில் குட்டி : எப்பவோஓஓ நடந்தது...... வேல வெட்டி இல்லைன்னா இப்படித்தான்.. எதையாச்சும் .....

பீட்டர் தாத்ஸ் : Courage is contagious. When a brave man takes a stand, the spines of others are often stiffened. -Billy Graham

பேலியோ உணவு முறை - சொரியாஸிஸ் நோய்

ஒரு நாட்டின், இடத்தின் உணவு என்பது அங்கு அமையும் விவசாயத்தை பொறுத்தது. விவசாயம் அவ்விடத்தின் தட்பவெப்ப சூழ்நிலையை சார்ந்து அமைகிறது, தவிர மண் மற்றும் நீரின் தன்மை, வளத்தையும் பொறுத்தது,

ஆதிமனிதன் காலத்தில் இருந்த உணவு பழக்கத்தை கடைப்பிடிக்கனும்னு சொன்னால் ?!! அதே மண் வளமும் நீர் வளமும் இப்பவும் நம்மிடம் இருக்கா? காய்கறி முதலில் இயற்கையானதாக கிடைக்கிறதா?  அவன் பல கிமீ நடந்தான், மரங்களில் ஏறினான், தாவினான், மலைகளில் ஏறினான், நீந்தினான், அவனின்  உடல் உழைப்பு நமக்கு இருக்கிறதா? முதலில் நீங்க காலையில் சாப்பிட சொல்ற கிலோ கணக்கு பாதாம் பெற, அவன் பாதாம் மரங்களை வளர்த்தானான்னு எனக்கு மண்டை காய்ச்சலாக இருக்கு....

குஜராத்தில் விளையும் உருளைக்கிழங்கு, கேரட், முள்ளங்கியை ஒரு போதும் தமிழ்நாட்டில் உள்ள அதே காய்கறியோடு ஒப்பிடவே முடியாது. இங்கு பச்சைமிளகாய் இரண்டை நீட்டு வாட்டில் நறுக்கி உப்புமாவிற்கு சேர்ப்பேன், ஆனால் குஜராத்தில் 5 மிளகாய் போட்டால் கூட காரம் இருக்காது. பச்சையாக நம்மூர் முள்ளங்கியை சாப்பிட முடியாது...அதன் சுவை அப்படி. சற்றே காரமும் இருக்கும். அதுவே குஜராத்தில் முள்ளங்கியை நறுக்கி வெள்ளரிக்காய் போல் சாப்பிடமுடியும்.நீர்வடிந்து, லேசான தித்திப்போடு சுவையாக இருக்கும். உருளைக்கிழங்கு இல்லாமல் இவர்களின் சப்ஜி இருக்காது, ஆனால் நம்மூர் உருளைக்கிழங்கை இப்படிதொடர்ந்து நம்மால் சாப்பிட முடியாது.

இடத்திற்கு இடம் காய்கறியின் தன்மை, நிலம், நீர், மண், வெப்பம், மழை சார்ந்து மாறுகிறது. குளிர் பிரதேசதங்களில் செரிமானம் சார்ந்தும் உணவு பழக்கம் அமைகிறது. இதில் கோதுமையை பற்றியும் அதை தொடர்ந்து  சாப்பிடுவதால் சொரியாஸிஸ் வியாதி வருவதாகவும் படித்தபோது.. நிஜமாகவே ஆச்சரியமாக இருக்கிறது. பஞ்சாப்'பில். கோதுமை தவிர வேறு விளைச்சல் ஆதாரம் இல்லை, என்ன சாப்பிடுவார்கள்? நூற்றாண்டுகளாக வீரம் & வலிமை மிக்க மக்கள். நீங்கள் சொல்லும் தோல் வியாதி சாத்தியமெனில், காலங்காலமாக கோதுமை சாப்பிட்டு வரும் பஞ்சாப் மற்றும் வட மாநிலத்தவர் அத்துனைப்பேரும் சொரியாஸிஸ் அல்லது வேறு தோல் வியாதியால் அவதிப்படுவது வெளிவந்திருக்குமே.. ?!

வெளிநாடுகளில் ஆய் துடைக்க பேப்பர் பயன் படுத்துகின்றனர். தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நம்நாட்டில் ஏன் இப்பவும் நாம் தண்ணீர் பயன்படுத்துகிறோம்?. உணவு பழக்கமே காரணம், பேப்பரால் துடைத்து போடும் அளவுக்கு தான் அவர்கள் உண்கிறார்கள். அப்படி அவர்கள் உண்ண அந்த நாட்டின் புவியியல், தட்பவெப்பநிலை மட்டுமே காரணம். பிரான்ஸ்'ஸில் மாட்டையும், பன்றியையும் முதன்மை உணவாக எடுக்கின்றனர். அத்துடன் பேக் செய்யப்பட்ட ரொட்டி வகைகள், பச்சை காய்கறி.  மாடு, பன்றியை அவர்கள் அதிகமாக சாப்பிடக்காரணம் உடல் உஷ்ணத்திற்காக..  உடல் உஷ்ணம் அந்நாட்டின் காலநிலைக்கு தேவை, இல்லாவிடல் அன்றாட வாழ்க்கை சாதாரணமாக அமையாது.

இங்கு நமக்கு இருக்கும் சூட்டிற்கு தொடர்ந்து கோழியையும், அசைவ உணவுகளையும் எப்படி சாப்பிட முடியும்?! அதற்கு சமமாக நெய்யை கிலோ கணக்கில் சாப்பிட சொல்லலாம். எதை ஒன்றையுமே முற்றிலுமாக நிறுத்திவிட்டு, அதற்கு மாற்றாக வேறு ஒன்றை தொடர்ந்து சாப்பிடுவது சரியான முறையாக எப்படியாகும்?

நாம் உடுத்தும் உடைக்கூட மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. கேரளத்தின் மழைக்கு துணிகள் காயாது, கனமான துணிகள் காயாமல் துர்நாற்றம் வீசும்.அதனாலேயே அவர்கள் ஆண் பெண் வித்தியாசம் இன்றி வேட்டியை உடுத்துக்கின்றனர்.. வெயிலும் அங்கு அதிகம். ஆக இரண்டு பருவத்திற்கும் ஏற்றது அந்த ஆடை. அப்படியே உச்சிக்கு போனால் கம்பளிஆடை, வயிற்றில் நெருப்பு கட்டிக்கொண்டு வாழும் காஷ்மீர், ஹிமாச்சலபிரதேச மக்கள். எப்படி நமக்கு ஒரே மாதிரி உணவும், உடையும் சாத்தியப்படும்? மாநிலத்திற்கு மாநிலம் இடத்திற்கு தகுந்தார் போன்று மாறுபடும் தானே?

ஐயா, இப்போது நமக்கு கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் , தானியவகைகள், பால், முட்டை,தயிர் எதாது ஒன்று இயற்கையாக கிடைக்கிறதா? பால் தரும் மாடு பேப்பர்களை தின்று வளர்கிறது.?!??! ஆதிமனிதன் காலத்தில் இப்படிதான் மாடுகள் இருந்தனவா?  இன்றையக்கால கட்டத்தில் கோழிகள் எப்படி வளர்க்கப்படுகின்றன??? ஊசி மூலம் வளர்கின்றன. நீங்கள் பரிந்துரைக்கும் சிக்கன் நாட்டு கோழி மட்டுமா? அப்படியென்றால், அவை என்ன சாப்பிட்டு உடலை வளர்க்கின்றன? கடலிலிருந்து கிடைக்கும் மீன்கள் சுத்தமானது தான் என்று உங்களால் சொல்லமுடியுமா? பிடித்தவுடன் அதை 1-2 நாளாவது ஐஸ்பெட்டியில் வைத்து தான் நமக்கு வந்து சேர்கிறது. அதைத்தான் சாப்பிடுகிறோம். உரம், பூச்சி மருந்து இல்லாமல் காய்கறிகள், பழங்கள் உள்ளனவா?

முருங்கக்கீ்ரை எடுத்துக்கோங்க..தினம் வீட்டு தோட்டத்திலிருந்து உடைத்து, ஆய்ந்து கழுவாமல் சமையல் செய்வாங்க. அதே வீட்டுத்தோட்டத்தில் அந்த கீரையை இப்போது எடுத்து கழுவாமல் செய்யமுடிவதில்லை.காரணம் அதில் காற்றில் கலந்து வந்து படியும் தூசியும் பெட்ரோல் புகையும்.... கழுவினால்..அதிலிருக்கும் விட்டமின் சக்தி தண்ணீரோடு சென்றுவிடும் என்பதே அந்தக்கீரையை கழுவாமல் செய்யக்காரணம், இப்போது கழுவாமலும் சாப்பிடமுடியாது, கிடைக்கும் வரை சக்தி கிடைக்கிட்டும் என்றே செய்கிறோம். அப்படிதான் நமக்கு கிடைக்கும் எல்லா காய்கறி, தானிய, பழ வகைகளும்.

கேரளாக்கு போனால் அவர்களின் தண்ணீர் பழக்கத்திலிருந்து எல்லாமே வேறு, சீரகம் சேர்ந்து காய்ச்சிய தண்ணீர்தான்  குடிப்பாங்க. காரணம் அவங்களுக்கு அவர்களின் தண்ணீரின் தன்மை தெரியும். ஏன் இங்கே கொல்கத்தாவில் ஒரு டம்ளரில் தண்ணீர் பிடித்து ஒருநாள் வைத்திருந்தால் போதும், கருப்பு நிறத்தில் மிக மெல்லிய வண்டல் படியும் , அதில் ஏகப்பட்ட நச்சுத்தன்மை மிகுந்த Arsenic Elements இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இங்கு அநேக வயதானோர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், பல ஆண்டுகளாக தொடர்ந்து அதையே அருந்திவருவதால், இதை தவிர வேறு நோய்களும் தாக்கப்படுவதாக சொல்கிறார்கள்.

இப்போது உங்களின் பேலியோ டயட்டில்  குடிக்கும் தண்ணீருக்கு என்ன மாற்று நீரை பரிந்துரை செய்வீர்கள்.?

இஸ்லாமியர்களை எடுத்துக்கோங்க, பிரியாணி செய்யும் போது புதி்னா சட்னி ஒன்னு செய்வாங்க, தயிரோடு பச்சையாக அரைத்து சேர்க்கப்பட்ட புதினா... (முழு சமையல் குறிப்பு தெரியாது) இது செரிமானத்திற்காக. குஜராத்தில் காலையில் டிபனுக்கு ஒரு தட்டு நிறைய ஜிலேபி வைத்து சாப்பிடுவார்கள். ஆனால் பச்சையாக வெங்காயம், முள்ளங்கி, எலுமிச்சை, பச்சைமிளகாய் ஒரு கிண்ணம் வைத்தும் சாப்பிடுவார்கள்.

ஒவ்வொரு இடத்திலும் நம் உணவுமுறை மிக சரியாகதான் அமையப்பெற்றிருக்கிறது. அளவைத்தாண்டி நாம் அதிகாக உண்ணும் போதும், உடல் உழைப்பு இல்லாத போதும் அது நமக்கு பிரச்சனையாகிறது. எத்தனைப்பேர் இங்கே ஜிம் போறீங்க? ஒர்க் அவுட் செய்யும் முன் எடையை பாருங்கள், செய்து முடித்தப்பின் எடையை பாருங்க. 1 லிருந்து 1.5 கிலோ குறைந்திருக்கும். நாம் அன்றாடும் உண்ணும் உணவிற்கு தகுந்தார் போன்று தகுந்த உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்துவந்தாலே கொழுப்பு , சர்க்கரை கூடாமல் இருக்கும்.

ஃபாஸ்ட் ஃபுட் கூடாது, எண்ணெய் உணவுகள் கூடாது, பேக்கரி ஐட்டம்ஸ் கூடாது, பெப்ஸி, கோலா போன்ற செயற்கை பானங்கள் கூடாது..... இதுப்போல நிஜமாகவே உடலுக்கு கேடு விளைவிக்கும் பழக்கங்களை வேண்டாம் என்று சொல்லுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. நல்ல விசயமே.. அதே சமயம்....

கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கிறது என்ற ஒரு காரணத்திற்காக கோதுமை, தானியங்கள், அரிசி , சில காய்கறிகள் ஒவ்வாது என்று சொன்னாலும் பரவாயில்லை...சொரியாஸிஸ் வரும்..என்று சொல்வது எல்லாம் ரொம்பவே அதிகமாக தெரிகிறது.  எனக்குத்தெரிந்து என் முன்னோர்கள் அரிசி உணவை மட்டுமே சாப்பிட்டு வந்தவர்கள், யாருமே தோல் வியாதியால் அவர்கள் சாகும் வரை அவதிபடவில்லை என்று உறுதியாக சொல்லமுடியும். நெல் பயிர் வேரிலிருந்து அதன் உமி வரை நம் உடலுக்கு பல விதத்திலும் பயன் தரக்கூடியது. நம் நாட்டு வைத்தியத்தில் இதன் நற்பயன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

முடிவாக : 
1. உடல் இளைக்க வேண்டி தற்காலிகமாக பேலியோ உணவை எடுத்துக்கொண்டால் சரி...

2. இல்லை இதுவே தான் நம் உணவு, இது பல நற்பயன்களை தருகிறது, பல நோய்களை மருத்துவம் இன்றி தானாகவே குணப்படுத்துவது நிரூபிக்கப்பட்டு வருகிறது, அதனால் தொடர்ந்து எடுத்துக்கொள்வது நல்லது என்று சொன்னால் -

2. குறைந்தபட்சம்,  7-8 தலைமுறையாவது ஆணும் பெண்ணும் பேலியோ  உணவை மட்டுமே எடுத்து வந்து, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் பிறந்த நாள் முதல் பேலியோ உணவை மட்டுமே கொடுத்து வளர்த்து, குழந்தைகளின் அறிவு, உடல் வளர்ச்சி, இத்தியாதிகள் எல்லாவற்றையும் அறிவியல் மருத்துவ ரீதியாக ஆய்ந்து, பிரச்சனைகள் இல்லை என்றால் மட்டுமே இதனை அன்றாட வாழ்க்கையில் தொடர்ந்து பயன்படுத்துவதற்கான சாத்தியங்களை யோசிக்கவே முடியும்

அதற்கு முன் -

பேலியோ டயட்டில் இருப்பவர்கள், தாராளமாக இருங்கள், ஆரோக்கயமாகவும்,, உடல் மெளிந்து என்றும் 16 ஆகவும் இருங்கள்., உங்கள் உணவின் தன்மை காரணமாக ஏன் உங்களுக்கு இறப்புக்கூட இல்லாமல் இருக்கலாம். ...தொடருங்கள், மனமார்ந்த வாழ்த்துகள்.. பிரச்சனையேயில்லை..

ஆனால், தயவுசெய்து, டயிட்டில் இல்லாதவர்களுக்கு இல்லாது பொல்லாதை சொல்லி ஒரு வாய் சாப்பிட பயப்படும்படி செய்யாதீர்..

அணில் குட்டி : ஒன்னுமில்ல... அம்மணி  இடதுகாலில் லைட்டா சொரிஞ்சாங்க.... அந்த சமயம் பாத்து சொரியாஸிஸ் பதிவு கண்ணுலப்பட... ஒருவேள கோதுமை சாப்பிடறதால அவங்களுக்கும் சொரியாஸிஸ் வந்துடுத்தோன்னூ பக்' ன்னு ஆகி.. இவ்ளாம் பெர்ரிய போஸ்ட்....

பீட்டர் தாத்ஸ் : Nothing burns more calories than dancing in 5-inch heels... try it! -Ariana Grande
(G+ ல் பகிர்ந்தது)

எங்க வீட்டு சமையல் - சிற்றுண்டி வகைகள்

சம்பா கோதுமை ரவை அடை:
சம்பா கோதுமை ரவை - 2 கப்
அரிசி மாவு : 1/4 கப்
உப்பு
வெங்காயம் பெரியது - 1
காய்ந்தமிளகாய் 3-4
லவங்கம் - 1
சோம்பு : 1/4 ஸ்பூன்
கருவேப்பிலை

சம்பா கோதுமை ரவையை 1-2 மணி நேரம் ஊறவைத்து , காய்ந்தமிளகாய், லவங்கம், சோம்பு கொஞ்சம் ஊறிய ரவை சேர்த்து மைய அரைத்துக்கொண்டு, மிச்சமுள்ள ரவை சேர்த்து ஒன்னும் பாதியுமாக அரைத்து அத்துடன் உப்பு, பொடியாக நறுக்கி வதக்கிய வெங்காயம், கருவேப்பிலை, அரிசிமாவு சேர்த்து அடை மாவு பதத்திற்கு கரைத்து, அடை சுடவும்..

இன்னொரு முறை : அரிசி மாவு இல்லாமல் , துவரம் பருப்பு 1 கப், சோயா ச்சங்க்ஸ் (ஊறவைத்தது 10), கொண்டகடலை (ஊறவைத்தது)2 கை சேர்த்து அரைத்து செய்யலாம். காரம் இதற்கு தகுந்தார் போல மாற்றிக்கொள்ளவும்
தேங்காய் சின்னத்துண்டுகள் சேர்த்துக்கொள்ளலாம். 
 
***********
 
ராஜ்மா வடை:

ஊறவைத்த ராஜ்மா - ஒரு கப்
4 ஸ்பூன் பச்சரிசி மாவு
காய்ந்தமிளகாய் -2
2 வெங்காயம்
5-6 பல் பூண்டு
இஞ்சி - சின்னத்துண்டு
கருவேப்பிலை
சோம்பு 1/2 ஸ்பூன், லவங்கம் -2
உப்பு

இஞ்சி, பூண்டு , சோம்பு, லவங்கம், காய்ந்தமிளகாய் நல்லா அரைச்சிட்டு, ராஜ்மாவை பாதி நைசாகவும், மிச்சம் பாதியை ஒன்னும் பாதியுமாக அரைச்சிக்கனும், வெங்காயம் மிக்ஸியில் ஒருமுறை அடிச்சிட்டு, உப்பு, அரிசிமாவு கருவேப்பிலை போட்டு நல்லா கலந்து. .வடையாக தட்டி எடுக்கனும்
 
*********** 

சோயா + கேழ்வரகு மாவு பஜ்ஜி :

கடலைமாவு 1/2 கப்
சோயாமாவு 1/2 கப்
கேழ்வரகு மாவு 1/2 கப்
அரிசி  மாவு 1/4 கப்
மிளகாய் தூள் : 2 ஸ்பூன்
நெய் : 1 1/2 ஸ்பூன்
சமையல் சோடா 2 சிட்டிகை
கேசரி பவுடர் 2 சிட்டிகை
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
உப்பு
எண்ணெய்
 
காய்கறி : வெங்காயம் & கருணைக்கிழங்கில் செய்தேன்.  உருளை, வாழைக்காயிலும் செய்யலாம்,

மாவு எல்லாவற்றையும் கொட்டி, மிளகாய்தூள், பெருங்காயத்தூள், உப்பு , சோடா, கேசரி பவுடர், நெய் ஊற்றி நன்கு கலக்கிக்கொண்டு,கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து க்கொள்ளவும். கருணைக்கிழங்கை காய்கறி சீவலில் வைத்து சிப்ஸ் போல சீவிக்கொண்டு, பஜ்ஜி மாவில் நனைத்து, காய்ந்த எண்ணெய்யில் போட்டு , நன்கு வெந்தவுடன் எடுக்கவும். கருணைக்கிழங்கு சிப்ஸ் மாதிரி சீவினாலும் சில சமயம் உடையும். அதனால் பரவாயில்லை, வந்தவரை செய்யலாம். 

இதே மாவில் வெங்காயம், உருளை, வாழைக்காயை கொண்டும் செய்யலாம்.

பீட்டர் தாத்ஸ் : When a man's stomach is full it makes no difference whether he is rich or poor.- Euripides

தெரு நாய்


தெருநாய்களை தெருவில் மட்டுமே பார்த்திருக்கிறேன், ஆனால் இந்த வீட்டுக்கு குடிவந்தப்பிறகு தெரு நாய்கள் வீட்டிற்குள்ளும் இருக்கும் என்று தெரியவந்தது அவற்றின் தொல்லையும் தாங்கமுடியவில்லை.

பொதுவாகவே நம்ம யாருக்குமே தெரு நாய்களை வீட்டுக்குள் அனுமதிக்கும் பழக்கமில்லை. சாப்பாடு வைத்தாலும் கூட, காம்பவுண்டு சுவரை தாண்டி உள்ளே வராமல் பார்த்துக்கொள்வோம். கடித்துவிடும் என்ற பயமே முதல் காரணமாக இருக்கும். இங்கு காம்பவுண்டு சுவர் கதவு என்னவோ மூடிதான் இருக்கும், ஆனால் இதுங்க, சுவரேறி குதித்து, உள்ளே கூட்டமாக வந்து உட்கார்ந்துக்கிட்டு, குரைச்சிக்கிட்டு, ஊளையிட்டுக்கிட்டு எப்பவும் ஒரே சத்தம். இரவு நேரங்களில் ரொம்பவே மோசம்..ஏன் குரைக்குதுங்க..எதுக்கு குரைக்குதுங்கன்னே தெரியாது... தூக்கம் களைந்து போகுமளவிற்கு சத்தமிருக்கும்..

மொத்தமாக ஒரு 4-5 நாய்கள் இந்த வீட்டை குத்தகைக்கு எடுத்திருந்தன.
நாங்கள் இருப்பதென்னவோ இரண்டாம் தளம், இவை படிக்கட்டில் சொகுசாக காலை நீட்டிப்படுத்து தூங்கிட்டு இருக்கும். எங்களின் நடை சத்தம் கேட்டதும், திரும்பி பாத்துட்டு, கொஞ்சம் கூட மதிக்காம திரும்பவும் அதேமாதிரி படுத்துக்கும். இதுவே வீட்டு ஓனர் வீட்டிலிருந்து யாராவது இறங்கினால், உடனே எழுந்து வழிவிடும்.

எங்கள பாத்தாவே இளச்சிவாய்ன்னு அதுங்களுக்கு தெரிஞ்சிப்போச்சி போல.  இதுங்கல மிதிக்காம இறங்கிப்போக சில தாண்டவங்களை நாங்க பழக வேண்டி வந்தது. இரண்டு மூன்று மாதங்களிலேயே, அதுங்களை மிதிக்காமல் தாண்டி, குதித்து கீழ் படிக்கு செல்ல ‘ஹைஐ லாங் ஜம்ப்” ஐ  நல்லாவே பழகிட்டோம்.  
வெளியூர் சென்று, திரும்ப நடு இரவாகிவிடும் என்ற ஒருநாளில்,  வீட்டு ஓனரிடம் வெளி கேட்’ சாவி கேட்க சென்றோம். அவங்களோ..

“வெளிக்கதவை நாங்க பூட்டறதே இல்லையே.. ஆனா.. இருட்டில் ஜாக்கறதையாக வாங்க.. இந்த தெருநாய்கள் அங்க இங்கன்னு படுத்துக்கிட்டு இருக்கும்.. அதுங்கள மிதிக்காம வந்தாவே நாம பிழைச்சோம். அதுங்களைத்தவிர இங்க வேற எந்த பயமும் இல்லை” ன்னாங்க..

“ஏன் துரத்தி விடலாமே” என்றோம்.

“ ம்ஹூம், எவ்ளோ முயற்சி செய்துட்டோம்.. எதுக்கும் கட்டுப்படல,  நீங்களே பார்த்திருப்பீங்களே....எல்லாப்பக்கத்திலும், சுவர் ஏறி குதிச்சி வருது.. என்னதான் செய்வோம்.. இப்ப அதுங்க ராஜ்யம் தான்..” என்று சோகத்தோடு சொல்லி முடித்தனர்.


பகலும் இரவும், நாய்களின் சத்தத்தோடு ஓரளவு பழகிவிட்டது. அப்பறம் கவனிக்கும் போது தான் தெரிந்தது, அக்கம் பக்கம் எதிர்வீடு என யார் வீட்டுக்கும் இந்த நாய்கள் போவதே இல்லை. அட..?! இது எப்படி சாத்தியம், அங்கவும் சுவர் ஏறி குதித்து செல்லலாமே ஏன் போக மாட்டேங்குதுங்க..? ன்னு எனக்கு மண்டை காய ஆரம்பிச்சிது.

பயாஸ்கோப் கண்களோடு காரணத்தை அறிய அவற்றை கவனிக்க ஆரம்பித்தேன்.  ஒரே ஒரு நாய் உள்ளே சென்றாலும் கூட, அதை அடித்து விரட்டாமல் அடுத்த வேலைக்கு யாரும் போவதில்லை. ஆனால் எங்க வீட்டில் நேர் மாறாக நடந்துக்கொண்டிருந்தது.

கீழ் வீட்டில் , கல்லூரிக்கு செல்லும் பெண் ஒருத்தி இருக்கிறாள். சாக்கடையிலும், தெருவில் கண்டதை சாப்பிட்டு, தோலில் சிரங்கு வியாதியோடு திரியும் இந்த நாய்களை, கையால் தொட்டு தடவி, அதுங்களை செல்லம் செல்லமாக கொஞ்சி, பிஸ்கெட், சாப்பாடு எனப்போட்டு... .....

எப்படி அதுங்க இங்க வராம இருக்கும் ?!!

அவளுக்கு அந்த நாய்கள் மேல் உள்ள பிரியம் ஆச்சரியமாக இருந்தது. இன்றுப் பார்க்கிறேன். ஒரு நாய்க்கு, ப்ளாஸ்ட்டிக் குடுவையில் தண்ணீர் கொண்டு வைத்து... வா வந்து குடின்னு கெஞ்சிக்கிட்டு இருக்கா... “
அது குடிக்காமல் இங்கவும் அங்கவும் போகுது... ஓடிப்போய் நெற்றியில் ஒரு முத்தமிட்டு, அது போகிற இடத்துக்கெல்லாம் தண்ணியை பின்னாடியே எடுத்துட்டு போறா...

நடுநடுவில் அவளின் முத்தங்களை நெற்றியில் வாங்கிக்கொண்டு.. முறுக்கிக்கொண்டு இவளுக்கு போக்குக்காட்டி, அங்குமிங்குமாக ஓடி விளையாடிக் கொண்டிருக்கிறது அந்த தெருநாய்..!! 

Images courtesy Google : Thanks 

ஜல புஷ்பம்

"அது ஒரு மீன் மார்க்கெட் ஆச்சே..?!" 

இரண்டு நாட்களுக்கு முன்பு, எங்களின் கொல்கத்தா வேலை மாற்றம் பற்றி ரொம்பவே சீக்கிரம் அறிந்துக்கொண்ட தோழி ஒருவர் அடித்த கமெண்ட் தான் அது. மறுப்பேச்சே இல்லாமல்.. ஆமாம் என்று ஆமோதிக்கும் அளவிற்கு மீனுக்கும் மேற்கு வங்கத்திற்கும் சம்பந்தம் இருக்கத்தான் செய்கிறது.  

பொதுவாக நம்மூரில், சாமி, கோயில் சம்பந்தப்பட்ட விசயங்களில் அசைவ உணவுகள் இடம் வகிப்பதில்லை. தமிழர்களின் திருநாளான "தைப்பொங்கல்' அன்று நாம் இயற்கைக்கு (சைவம்) படையல் வைத்து வழிபடுவது முதல் மற்ற பண்டிகைகளிலும் அசைவம் கலக்காத உணவுகள் சமைத்தே பழக்கம். ஒருசிலர் தீபாவளி, காதுக்குத்தல் போன்றவற்றில் "கடா வெட்டுதல்" னு சொல்லுவாங்க. அப்படியான பழக்கம் கூட அனைவருக்கும் இல்லை.

இங்கு நேர்மாறாக... மீன் இல்லாத நாளே இல்லை. பிராமணர்களும் மீனை "ஜல புஷ்பம்" என்று சொல்லி சாப்பிடுகிறார்கள். எந்த விஷேஷ நாட்களிலும், காளி துர்கா பூஜை நாட்களிலும், பூஜை ஒருபக்கம் நடக்க, மீன் சேர்த்து செய்யும் சமையல் ஒரு பக்கம் நடக்கத்தான் செய்கிறது.
இவர்களின் அன்றாட உணவு , விருந்துகள், விழாக்களில்  எல்லாவற்றிலும் மீன்" ஒரு சிறப்பு அம்சமாக இருக்கிறது, அப்படி மீன்'ஐ தினம் சாப்பிட்டுமே, விருந்துகளில் மீன் பரிமாறும் போது, அன்றுதான் முதல் முதலாக மீனை பார்ப்பது போல ஆர்வத்தோடு ஆசையாக பலமுறை வாங்கி சாப்பிடுகின்றனர்.
இவர்களின் விருந்து : முதல் தரம் சாப்பிடும் போது எனக்கும் சற்று வித்தியாசமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. இரண்டாவது முறையே அலுத்துப்போனது.. காரணம் சீரியோ டைப் உணவு.. பரிமாறும் முறை..அதன் ருசி என எல்லாமே...ஒரு வித அயற்சியையும், உணவை சாப்பிடும் ஆர்வத்தையும் குறைத்தன.

தட்டில் ஒரு உணவு பரிமாறிவிட்டு, பரிமாறுபவர் மற்ற விருந்தினர்களுக்கு அந்த உணவை பரிமாறிவிட்டு வருவதற்குள், நாம் இதை சாப்பிட்டிருப்போம். பிறகு அடுத்தது வரும். இப்படியாகவே தான் ஒன்றன் பின் ஒன்றாக உணவு பரிமாறப்படுகிறது. தவிர, ஒன்றாக பரிமாற தட்டிலும் இடம் இருக்காது என்பதும் இன்னொரு காரணம். பீங்கான் தட்டு, மீடியம் சைஸ்.

Food Served in order one by one :

1. Brinjal Bajji/Fish Cutlet
2. Potato Kuchi Chips/ mixed with peanut,
3. Basmati Plain Rice,
4. Dhal (contains carrot, potato, peas - to me its alike Kurma) ,
5. Potato Peas Varuval (Added Pappad)
6. Fish, Fish Kuzhambu (Without Tamarind)/Prawn+ Raw Jackfruit Kozhambu
7. Ghee Rice /Veg Fried Rice with all nuts
8. Chicken/Mutton 
9. Tomato + Mango Pachadi (added salt n Jaggery) ,
10. Pappad,
11. Rasagulla / + One more Milkbase Sweet
12. Payasam/Ice Cream
 & Finally
13. Digestion Masala (contains Omam + Jeera +Salt)/Beeda

இது தான் நிரந்தர மெனு. திருமணம், குழந்தை பிறந்தநாள், காதுக்குத்தல், சாவு, வாழ்வுன்னு எதுவென்றாலும் இதே தான்.

இதில் வசதிக்கேற்றவாறு சிக்கன் இருக்கும் இடத்தில் மட்டன், அல்லது பெரிய இறால் வகையாறாக்கள் இருக்கும். 4,5- போன்றவை சற்றே வேறு விதமாக சமைக்கப் பட்டிருக்கலாம், 12- பாயசத்திற்கு பதிலாக சிலர் ஐஸ்க்ரீம் கொடுக்கிறார்கள். ஆனால் இந்த பரிமாறும் முறை, உணவுகளில் எந்தவித மாற்றமும் இல்லை.

ஒரு உணவை முடித்தப்பிறகே அடுத்தது வருவதால், யாருமே உணவை மீதமாக்கி தூக்கிப்போடுவது இல்லை. வேண்டாமென்றால், பரிமாறும் போதே
சொல்லிவிடுகின்றனர். அதனால் நம்மூர் போல இலையோடு சாப்பிட்டும் சாப்பிடாலும் உணவு வீணாக்கப்படுவதில்லை.
நான்கு நான்கு பேராக உட்கார்ந்து சாப்பிடும்படி மேஜை + நாற்காலி போடப்படுகின்றது.  ஒவ்வொரு மேஜைக்கு நடுவில் ஒரு ப்ளாஸ்டிக் குடுவை வைக்கப்படுகிறது. சாப்பிடும் போது, மீன் , இறால், மட்டன், சிக்கன் கழிவுகளை, நால்வரும் அதில் போட்டுவிட்டு தட்டை சுத்தமாக வைத்திருக்கலாம். (இல்லையேல், அடுத்த உணவு வைக்க  தட்டில் இடம் இருக்காது)

கடைசியாக செரிமானத்திற்கு கொடுக்கப்படும் மசாலாவும் வசதி சார்ந்து மாறுகிறது. சின்னதாக ரெடிமேட் பாக்கேட் கொடுப்பவர்கள் மிடில் க்ளாஸ் மாதவன்'கள்.. அதையே வெற்றிலையில் எல்லா வயிற்று செரிமான
மருந்துகளையும் நிரப்பி லவங்கத்தை செருகிக்கொடுத்தால் வசதியானவர்கள். நம்மூர் பீடான்னு ஆர்வத்தில் வாங்கி வாயில் போட்டு..அது மெல்லும் போதே ஏகப்பட்ட ரியாக்ஷன்ஸ் கொடுக்க.. வெளியில் ஓடிவந்து துப்பினேன்.  மருந்தெல்லாம் பச்சையாக மென்று சாப்பிட ஒரு பக்குவம் வேணுமே..அது நமக்கு இன்னும் வரல.. :(
உணவில், எது மாறினாலும், இரண்டு வித மீன்" கண்டிப்பாக எல்லா விஷேஷங்களிலும் பரிமாறப்படுகின்றன. கல்யாணி'யின் சாப்பாடு கதை இது என்றாலும், கொல்கத்தா போன்ற பெரு நகரங்களில் திருமணம் + அதன் உணவு முறைகள் எப்படியென தெரியவில்லை.

இதில் கொடுமை என்னென்னா, "சவுத் இண்டியன்ஸ்" - மொத்தமும் சைவர்கள் என்ற ஒரு பொது அறிவை கண்மூடித்தனமாக வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். ஹோட்டல்களில் காசுக்கொடுத்து நாங்களே அசைவம் ஆர்டர் செய்தாலும், எங்களை பார்த்தவுடனே, சைவம் தான் கேட்டிருப்போம், தவறாக/கவனமில்லாம ஆர்டர் எடுத்துவிட்டோம் என அவர்களாக நினைத்துக்கொண்டு, சைவ உணவை தயார் செய்துக்கொண்டு வந்து தருகின்றனர். ஞே!!!!

விசேஷங்களுக்கு செல்லும் போது, எங்களை அழைத்தவர்கள் குடும்பமாக தயக்கத்தோடு வந்து... "சைவம் இங்க கொஞ்சம் கஷ்டம்.. உங்களுக்காக சைவம் பரிமாற முயற்சி செய்யறோம்னு" சொல்றாங்க..

"அடேய்.. சவுத் இண்டியன்ஸ் எல்லாரும் சைவம்னு உங்கக்கிட்ட வந்து சொன்னோமா..? இப்படியொரு பொய்யான வதந்திய கிளப்பிவிட்டது எவன்டா?  அது ஏண்டா.. எங்களை பாத்தாவே சைவம்னு முடிவு செய்யறீங்க? 

நாங்க...அசைவம்.. அசைவம் அசைவமேதான்... எங்களுக்கும் அசைவமே கொடுத்துத்தொலைங்க.." ன்னு ஒவ்வொரு இடத்திலும் கத்தி கதறி அழுது கெஞ்சி கேட்டு கேட்டு வாங்கி சாப்பிட்டுத் தொலைக்க வேண்டியிருக்கு.... !

பெங்காலிகளுக்கு "பொது அறிவு பொக்கீஷங்கள்'னு பெயர் வைக்கலாம் அம்புட்டு அறிவு அவங்களுக்குள்ள பொதஞ்சி கிடக்கு... ..

"நீங்கெல்லாம் இட்லி சாப்பிடறதால தான் உங்கள் (பெண்கள்) உடல் வடிவமாக இருக்கா? " இப்படி கேள்விக்கேட்டு என்னை "ஞேஏஏஏ" ன்னு முழிக்க வைத்ததுப்பற்றி.....அடுத்த பதிவில்....


படங்கள் : நன்றி கூகுள் & Collage taken here.

பீட்டர் தாத்ஸ் : A nation's culture resides in the hearts and in the soul of its people. -Mahatma Gandhi

ஆனை ஆனை அழகர் ஆனை

நான் காணும் கனவுகளை, அவரிடம் சொல்லும் போது, அதை ரெக்கார்ட் செய்ய சொல்லுவார். நேற்றைய கனவை சொல்ல ஆர்ம்பித்த கொஞ்ச நேரத்தில்..

 "ரெக்கார்ட் பண்ண சொன்னேனே செய்யறியா? "

"அட கேளுங்கப்பா முதல்ல.. எல்லாம் எழுதி வைக்கிறேன்ப்பா"

 "எங்க எழுதி வைக்கிற? " . "

 என் ப்ளாகில் எழுதி வைக்கிறேன்பா.. நடுவில் பேசாம கேளுங்க..அப்புறம் மறந்துப்போவேனில்ல" ன்னு விடாம கனவை முழுக்க சொல்லிட்டு தான் மறுவேலை.

ஆனா பாருங்க, சில பல மாதங்களாகவே என் வூட்டுக்காரே கனவிலும் வந்து தொலைக்கறாரு... தூங்கி எழுந்தவுடன் கனவு நினைவில் வரும் போது என்னை நானே..எகொக இது?! ன்னு கேட்டுக்க வேண்டியிருக்கு.... ஒரு மனுசனோட குடும்பம் நடத்தறதே பெரிய விசயம்..இதுல கனவிலும் விடாம துரத்தினா.. ?!

 விடாது கருப்பு ....இதோ...

*******************
எங்கோ பெரிய மலை பகுதிக்கு அழைச்சிக்கிட்டு போயிருக்கார். மலையில் ஏறுகிறோம்.

இரவில் மழை பெய்து ஓய்ந்த ஒரு காலை பொழுது, வைக்கின்ற ஒவ்வொரு காலடியும் ஈர மண்ணில் நிற்காமல் வழுக்குது..களிமண்ணாக இருக்குமோன்னு யோசனையோடு ஒவ்வொரு காலாய் எடுத்து வைக்கிறேன்.. முடியல.. கையையும் துணைக்கு வச்சிக்கிட்டு மேலே ஊன்றி ஏற முயற்சி செய்கிறேன். கை, கால்னு ஒரே சேறு பூசிக்குது.. இவர் வருகிறாரான்னு பின்னால் திரும்பிப்பார்க்க, பேலன்ஸ் போயி சொய்ன்னு வழுக்கிடுது... வழுக்கிக்கிட்டே கத்தறேன்..

"எங்கப்பா போனீங்க..இங்க தனியா நான் ஏற முடியாம கஷ்டப்படறேனே..வந்து தொலைக்கக்கூடாதா?"

ஒன்னும் பதில் வராம..நானே தவ்வி தவ்வி மேலே எப்படியோ பேலன்ஸ் செய்து ஏறுகிறேன். ..

 எங்க வெளியில் போனாலும் என்னை இப்படி தனியா விட்டுட்டு அவர் வேலைய தனியா பார்க்கறது வழக்கம் தான்..எனக்கும் இப்படி கத்தி அவரை கூப்பிடறது வழக்கம் என்பதால்..நிஜத்தில் வரும் தலைவலி கனவிலும்....

ஒருவழியாக உச்சிக்கு வந்துடுறேன்.. வந்துவிட்டோம்..இனி, "மேல நின்னு, இயற்கையை ரசிக்கனும்னு" நினைத்துக்கொண்டே அடுத்த அடி வைத்து கையையும் மலை உச்சியில் வளைத்து பிடிக்கிறேன்...சில்லென்ற தண்ணீர் கையில் பட , வைத்த வேகத்தில் கையை எடுத்து ..ஏது தண்ணீன்னு எட்டிப்பார்க்கிறேன்...
அலைவந்து அடிக்க... கண்ணுக்கெட்டிய தூரம் வரை நிரம்பி தளும்பும் கங்கை...அது அங்கே ஏதோ ஒரு பக்கத்தில் அருவியாக கொட்டுகிறது ... "ஓஓஓவென...." பேய் சத்தம்..... எதிர்ப்பார்க்காத தண்ணீர்... அலை.. தண்ணீரின் ஆழம்....அதன் சத்தம்.. பயந்துப்போய்..

"அப்பாஆஆ..இங்கப்பாருங்க ...இங்க.கங்கை.இருக்கு . இன்னும் ஒரு அடி எடுத்துவச்சா.. பிடிக்க எனக்கு ஏதுமில்ல..இதுக்குள்ள விழுந்துடுவேன்..ன்னு திரும்பி, அவரை. பார்த்து சொல்லும் போதே பேலன்ஸ் போய் கால் தடுமாறி...வந்த வழியே வேகமாக வழுக்கி கல்லிலும் மண்ணிலும் புரண்டு கீழே வந்து விழுகிறேன்.. .

தொலைவிலிருந்து இதெல்லாத்தையும் நிதானமாக பார்க்கிறாரே ஒழிய..பொண்டாட்டி மேலிருந்து வந்து விழறாளே..வந்து தூக்குவோம்னு சின்ன பதட்டம் கூட அவரிடம் இல்ல.. தூக்கக்கூடாதான்னு கேட்டா.. "எப்பதான் நீ இதெல்லாம் கத்துக்கறதுன்னு டயலாக் டெலிவரி செய்வாரு.. சரி..நான் இருக்கட்டும்.. ஒருவேள அவர் வழுக்கி விழறாருன்னு வச்சிக்குவோம்.. ஓடிப்போய் தூக்கப்போனா, "ஏன் விழுந்த எனக்கு எழுந்துக்க தெரியாதான்னு" டயலாக் டெலிவரி செய்வாரு...

எதுக்கு இவர்கிட்ட ?!! எதையுமே கேக்காம இருக்கலாம்னு முடிவு செய்யறேனே ஒழிய...வாய் சும்மா இருக்கா? இல்லயே.."ஏன் இப்படி என்னை தனியா விட்டுட்டு விட்டுட்டு போறீங்க..." ம்க்கும்.. எப்பவும் போல எந்த பதிலும் இல்லை..அலட்சியமாக ஒரு பார்வையோடு வேற எங்கேயோ போறார்... அவரை பின் தொடர்ந்து நானும் போறேன்...

அது ஒரு பெரிய கோயில்..மிகப்பழமை வாய்ந்த பெரிய கோயிலாக தெரிகிறது. பெரிய பெரிய சிற்பங்கள்..சிலைகள்னு அன்னாந்து பார்த்தபடி ஒவ்வொன்றாய் நின்று ரசிக்கிறேன்.. நின்றுவிட்டு நகரும் போது பார்த்தால்..எப்பவும் போல நம்மாளை காணல.. ஓடி ஓடி எந்தப்பக்கம் போகிறார்னு தேடி தொடர்கிறேன்.நடு நடுவில் சிற்பங்கள்...

அப்பதான் அந்த பெர்ர்ர்ர்ர்ரிய யானை சிலைகள் இருக்குமிடத்தைப்பார்க்கிறேன்.. நிஜ யானைகள் போலவே சிற்பங்கள். சிலது நிற்கின்றன.. சிலது உட்கார்ந்து, இரண்டு முன்னங்கால்களை தூக்கிக்கொண்டு சிலதுன்னு வெவ்வேறு வடிவங்களில் விதவிதமான சிலைகள்...

 அட...எத்தனை அழகா இருக்கு..இவ்ளாம் பெரிய யானை.. ஒன்னு செய்யறதே கஷ்டம் இந்த இடம் முழுக்க யானையாவே செய்து வச்சியிருக்காங்களேன்னு..ஒரு யானை சிலையின் அருகில் செல்கிறேன்... .டக்கென்று அது தன் தும்பிக்கையை தூக்கி பலத்த சப்தத்தோடு பிளறுகிறது.... அவ்வ்வ்... திடீர் சத்தத்தில் பயந்து நடுங்கி கத்தி அலறிக்கொண்டு ஓடுகிறேன்... ஓடி நின்ற இடம் இன்னொரு யானையின் கால்.

அந்த யானை கத்தாமல்...தும்பிக்கையால் எங்கிருந்தோ தண்ணீரை வாரி இறைக்கிறது.... மீண்டும் கத்திக்கொண்டே.. ".இந்த யானைக்கெல்லாம் உயிர் இருக்கு போல......இது என்னை பயமுறுத்துது.. சீக்கிரம் இங்க வாங்கன்னு கத்தறேன்" .. அந்தப்பக்கத்திலிருந்து ஒரு சத்தமும் வரல...

 அங்கிருக்கும் ஒவ்வொரு யானைக்கும் ஏதோ ஒரு செய்கையை செய்யும் படி..செயற்கை முறையில் செட்டப் செய்திருக்கிறார்கள் போலவே.. இதை மூன்றாவது யானை காலைத்தூக்கி இங்கும் அங்குமாக அசைக்கும் போது புரிந்துக்கொண்டு.. இதுங்க கிட்டக்க போகக்கூடாது , போனால் சென்சார் மூலம் தெரிந்து..ஆடுதுங்கன்னு தெரிஞ்சிக்கிட்டு தள்ளி வந்துடறேன்...


அதற்குள்ளாக இவர் வந்து, என் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வேறு பக்கமாக சந்துபொந்துன்னு எங்கோ வளைந்து வளைந்து ஒரு குகை மண்டபத்திற்குள் போறாரு...கும்மிருட்டு...கருப்பு நிறத்தில் வழு வழுவென்ற பாறைகள், கருங்கள் தூண்கள்.. குகை மண்டபத்தை கடக்கும் போது ....லேசான வெளிச்சம் உள்ளே வர, அதைப்பார்க்கிறேன்...

அட.. ?!! மலை உச்சியில் சென்று பார்த்த கங்கை... நீலநிறத்தில்.... , சூரியனின் வெளிச்சத்தில் மின்னுகிறது.. இழுத்து செல்லும் கையை நிறுத்தி, அந்த காட்சியை அவருக்கு காட்டி... இதைத்தான் நான் அந்தப்பக்கம் போய் பார்த்தேன்னு, வியப்பு மேலோங்க சொல்றேன்.. கவனிக்கிறார்... அதான் தெரியுமேங்கற கணக்கா... வாயத்தொறக்காம திரும்பவும் இழுத்துக்கிட்டு நடக்கிறார்.. இவர் இழுத்த இழுப்புக்கு நடக்க முடியாமல், கால் வலி அதிகமாக ....

முழுச்சிக்கிட்டேன்....

*******************

பொதுவாக எனக்கு சோர்வாக இருக்கு, முடியலைன்னா, (இன்ஸ்டன்ட் எனர்ஜிக்கு) Candy ஸ்டாக் வச்சி கொடுப்பாரு, (சாக்லெட் எனக்கு பிடிக்காது அதனால் கேண்டி) தண்ணிக்கொடுத்து உக்காந்து ரெஸ்ட் எடுக்க சொல்லுவாரு...கண்டிப்பா எதாச்சும் சாப்பிட உடனே கொடுப்பாரு.... ஆனா நானு மதிக்கமாட்டேன்..வாங்கி எல்லாத்தையும் திண்ணுட்டு.. முடியாட்டியும் அதே வேகத்தோடு நடக்க ஆராம்பிச்சிடுவேன்.... உட்கார்ந்து ஓய்வெடுக்கும் பழக்கமே எனக்கில்லை.. எங்க போய் சேரனுமோ அந்த இடம் வந்தாத்தான் நிப்பேன். எப்படி உல்டாவா அவர் என்னை விடாமல் இழுத்துக்கிட்டு போறாப்ல கனவு வந்துச்சின்னு தான் தெரியல...

 **********************


அணில் குட்டி : அடுத்து சினிமா தான் எடுப்பாங்க போல...?!

பீட்டர் தாத்ஸ் : “I think we dream so we don’t have to be apart for so long. If we’re in each other’s dreams, we can be together all the time.” ― A.A. Milne, Winnie-the-Pooh 

படங்கள் : நன்றி கூகுள் !