சொந்த ஊர் போக எனக்கு கிடைக்கும்/கொடுக்கப்படும் நேரம் எப்போதும் ஒரு நாள் தான்.  தனியாக போவேன். விடியற்காலை சென்னையில் கிளம்பி 11 மணிக்குள் ஊரில் இருப்பேன். திரும்ப 4-5 மணிக்கு ஊரிலிருந்து கிளம்பி, இரவு 9 மணி அதிகபட்சம் 10 மணிக்குள் வேளச்சேரி வந்துடுவேன்.

ஆனால், அன்று ரயிலில் அனுப்பி வைக்கிறேன், வேகமா போயிடும்னு விழுப்புரத்தில் ரயில் கிளம்பும் போதே மாலை மணி 6.45. தாம்பரம் வந்து பஸ்ஸில் நேரம் பார்க்கும் போது 10.30 கடந்திருந்தது. இரவு, தனியாக பயணம் என்றாலே அதீத கவனம் இருக்கும். தலை முழுக்க காதுகள் முளைத்து, சின்ன சத்தத்தைக்கூட தலை திருப்பாமல் உணரும் கவனம் வந்துடும். வளையலை ரயிலேயே யாருமறியாமல் கழட்டி உள்ளே வைத்துவிட்டேன். துப்பாட்டாவை கழுத்தோடு சுற்றிக்கொண்டேன். செயின் அறுத்துட்டு போயிடுவாங்க என்ற முன்னேச்சறிக்கை.. இதை தவிர என் பாதுகாப்புக்கு தான்  காதுகள் கழுதை காதுகளாக மாறிவிடுவது. யாராவது தொடருகிறார்கள்னு தெரிந்தால் அதற்கு தகுந்தார் போல என்ன செய்யலாம்னு யோசிப்பேன். தனி பயணங்களில் எப்பவும் ஒருவித பய உணர்ச்சி இருக்கும். பொது இடங்களில் அநாவசியமாக பேசாமல் இருப்பது, யாரையும் பார்த்து சிரிக்காமல் இருப்பது குறிப்பாக ஆண்களை என பல ரூல்ஸ்ஸை ஃபோலோ செய்வேன்.

முன்கதவுக்கு பக்கத்தில் உள்ள லேடீஸ் சீட்டில் இரண்டாவதில் கம்பியொட்டி அமர்ந்திருக்கிறேன்.. பெண்கள் அதிகமில்லை, பெண்கள் இருக்கையிலும் ஆண்களே உட்கார்ந்திருந்தனர். பள்ளிக்கரணை தாண்டி பேருந்து வந்தபோது , திடீரென டிரைவர் சீட்டுக்கு பின்னால் இருந்து இருவர் எழுந்து பஸ்ஸின் வேகத்தில் தடால்னு முன்னால் ஓடிவந்து மிக சரியாக எனக்கு முன்னால் இருந்த சீட்டின் கம்பி்யை விழும் முன் பிடித்துக்கொண்டு, எனக்கு பின்னால் இ்ருந்த யாரிடமோ.. எழுந்திருங்கடா போலாம்.. " னு சொல்லும் போதே.. நல்லா தண்ணி அடிச்சிட்டு வந்திருக்காங்கன்னு தெரிஞ்சிது...

என் பின் சீட்டிலிருந்து எழுந்தவர்களும் தண்ணி.. இருவரும் நின்றபடியே ஏதேதோ பேச.. நடுவில் நானும் என் பக்கத்தில் ஜன்னலோர சீட் பெண்ணும்.. தவித்தோம்.  ஏனென்றால், முன்னே கம்பியை பிடித்து நின்றவர்களுக்கும் நிதானமில்லை.. பின்னால் எழுந்து நிற்பவர்களுக்கும் நிதானமில்லை.. இவங்க எப்ப வேணாலூம் என் மேல் விழலாம்.. இல்லாவிட்டால் வாந்தி எச்சில்னு எதாது கருமம் என் மேல் விழலாம்னு ஒருவித படப்படப்பு இருந்தது..

நடத்துனர் கவனித்து, "யோவ் வேளச்சேரி வர நேரம் இருக்கு, போய் உக்காருங்கய்யா" ன்னு சொல்ல, நாங்கள் இருவரும் உடலை சுருக்கி, குனிந்தபடி இருப்பதைப்பார்த்து, மற்ற பயணிகளும் அவர்களை உட்கார சொல்லி சத்தம் போட அவரவர் இருக்கையில் உட்கார்ந்தனர்.

இவர்களை கவனம் வைத்து வேளச்சேரி வரும் முன்னரே எழுந்து நின்றுவிடலாம்னு நான் எழுந்த அதே சமயம், முன் சீட்டில் இருந்த குடிகாரர்களும் முன்னைப்போலவே வேகமாக எழுந்து ஒரே பாய்ச்சலில் கதவு கம்பியை பிடித்து முன்னால் விழும் போது.. அநேகமாக என் மேல் விழவேண்டியது... சட்டெனறு ஒரு கை கம்பியை பிடித்து, அவர்களை என் மேல் விழாமல் தடுத்தது. கைக்கு சொந்தக்காரர் கதவுக்கு நேர் எதிரில் நின்றிருந்தார்.

நெற்றியில் சின்ன திருநீர் கீற்று (அந்த நேரத்தில்???) மெல்லிய வெள்ளை கதர் சட்டை, பாக்கெட்டில் இருக்கும் பணம் மொபைல் எல்லாம் வெளியில் தெரிந்தது. கருப்பு நிற பேன்ட், 30-35 வயதிருக்கலாம், கோதுமை நிறம், கலையான அமைதியான முகம்.

கையை கம்பியில் பிடித்ததோடு இல்லாமல் லேசாக தள்ள..அவர்கள்
பின்னோக்கி போனார்கள்.அவர்களை பார்த்து எனக்கு பின்னால் இருந்தவர்களும் எழுந்து வெளியில் வந்து என் பின்னால் விழும்படி நிற்க.....ஒன்றும் புரியாமல் கைக்கு சொந்தமானவரை நான் பார்க்க...அதை புரிந்து, வேகமாக... கண்களால் "அவருக்கு பின்னால் வரும்படி" செய்கை செய்தார். அடுத்தவினாடி அவரின் முதுகுக்கு பின்னால் நான் ஒளிய, இரண்டு கைகளையும் விரித்து குடிகார்கள் நால்வரும் என் பக்கம் வராமல் தடுத்ததோடு இல்லாமல் நான் இறங்கும் வரை பஸ்ஸின் ஆட்டத்திலும் அதே போஸ்'ஸில் நின்றிருந்தார். கதவருகில், ஒருசேர, நான்கு குடிகாரர்களின் ஆட்டத்தையும் பேச்சையும் தாங்குவது சாதாரண விசயமாக தெரியவில்லை. விஜய்நகர் வந்ததும் அவர் ஒரு கையை இறக்க.. வேகமாக இறங்கி ஓடினேன்.

பொதுவாக சின்ன விசயத்திற்கு கூட நன்றி சொல்லும் நான், அவருக்கு நன்றி சொல்லல.. இறங்கியவுடன் திரும்பிப்பார்த்து ஒரு புன்னகைக்கூட செய்யல...நேரம் அதிகமாகிவிட்டதால், வீட்டுக்கு செல்வதில் மட்டுமே என் கவனம் இருந்தது. ஏன் நன்றி சொல்ல எனக்கு தோணலன்னு இப்ப வரைக்கும் தெரியல.. ஆனால்.. அவரின் சமயோஜிதமான கண் அசைவு, கைகளை கொண்டு 3-5 நிமிடங்கள் என்றாலும் தொடர்ந்து தாய் குழந்தையை அடை காப்பது போல காத்தது..சில ஆண்டுகள் சென்றுவிட்ட பொழுதும்....இன்றும் நினைவில் இருக்கு....

வெளியிடங்களில் நேரத்தை பயன்படுத்தி உரசிவிட்டு செல்லும் ஆண்களுக்கு மத்தியில். சமயத்திற்கு ஒரு பெண்ணை காக்கும் இதுபோன்றவர்கள் தான் "ரியல் ஹீரோஸ்"..  பாகுபலி போல வீரம் தேவையில்ல...(தலைப்பை டச் பண்ணிட்டேனா? :) ) இப்படி கொஞ்சமாவது பொறுப்போடு இருந்தால் போதும்....

அணில் குட்டி : எப்பவோஓஓ நடந்தது...... வேல வெட்டி இல்லைன்னா இப்படித்தான்.. எதையாச்சும் .....

பீட்டர் தாத்ஸ் : Courage is contagious. When a brave man takes a stand, the spines of others are often stiffened. -Billy Graham