சென்ற பதிவில் உணவில் நிறுத்தினேன்

பெங்காலில் பிராமணர்களும் காலை உணவுக்கு மீன் சாப்பிடும் பழக்கம் உடையவர்கள் என்பது உண்மையே. மாதத்தில் 2-3 நாட்கள் தவிர, அன்றாடம் அசைவு உணவு சாப்பிடும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். மீன், கோழி, ஆடு இவை பிராதான உணவு. சாலையோர டீ கடைகள் அனைத்திலும் முட்டை வைக்கப்பட்டிருக்கிறது, ஆம்லெட், பிரெட் ஆம்லெட் தயார் செய்து தருகிறார்கள். இங்கு வரும் சைவர்களுக்கு சாப்பாடு மிகவும் கஷ்டம் தான். அதே சமயம் எல்லா காய்கறிகளும், பழங்களும் கிடைப்பதால் சமாளித்தும் கொள்ளலாம்.

அசைவத்திற்கு அடுத்து இனிப்புகள். பாலில் செய்யப்படும் இனிப்புகள் அதிகம். ரசகுல்லா பேர் போனது என்பது அறிந்த விசயம். ஆனால், விநோதமாக அநேக இனிப்பு கடைகளில் இனிப்புகளின் மேல் குளவிகள் ஈக்களை போல மொய்த்துக்கொண்டிருக்கின்றன. அவற்றை அவர்கள் விரட்டவும் இல்லை, வராமல் இருக்க ஏதும் செய்த மாதிரியும் தெரியவில்லை. கேட்டதற்கு "இது இங்கு சகஜம், இதில்லாமல் நீங்க ஸ்வீட் கடை பார்க்க முடியாது.." என்றனர். மீறி தேடிச்சென்று குளவிகள் மிக்காத இரண்டு இனிப்புகள் விற்கும் கடைகளை கண்டுப்பிடித்து வைத்துள்ளோம். சமோசா, பஜ்ஜி போன்றவையும் அவர்களின் மசால் சுவையில் கிடைக்கின்றன. கடுகு எண்ணெய்யை தான் சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். அதனால் இவர்களின் உணவின் ருசி தனி சுவை, சட்டென்று வேற்று மாநிலத்தவருக்கு பிடித்துவிடாது.  ஊர் முழுக்க தேடியும் நல்லண்ணெய் கிடைக்கவில்லை. கடுகு எண்ணெய் தவிர,  ரிஃபைன் செய்யப்பட்ட மற்ற எண்ணெய் வகைகள் கிடைக்கின்றன.

காய்கறிகள் மிக செழிப்பானதாகவும் ருசியானதாகவும் கிடைக்கின்றன. பூசணி வகையை சார்ந்த காய்கறிகள் அதிகமாக இருக்கின்றன. எல்லா வகை பழங்களும் கிடைக்கின்றன. விலை என்னவோ சென்னை விலை தான்.. !

மிக முக்கியமான விசயம், பிரியாணி. இப்படியொரு சுவையில் பிரியாணியை இந்தியாவில் வேறு எங்கும் சாப்பிடமுடியாது. இரண்டு முறை முயற்சி செய்த என் கணவருக்கு பிரியாணியின் ருசி பிடிக்காமல் கஷ்டப்பட்டார். எந்த வகை சாப்பாட்டையும் ஒரு கைப்பார்க்கும் என் கணவரையே இந்த ஊர் பிரியாணி சோதனை செய்துவிட்டது. திருமண ஆன நாள் முதல் அவர் எந்த சாப்பாட்டையும் பிடிக்கவில்லை என்றோ, ருசிக்காக ஒதுக்கியோ நான் பார்த்ததேயில்லை. முதல் முறையாக இந்த ஊர் பிரியாணியை அப்படியே ஒதுக்கிவைத்தார்.

பெண்கள் குறுக்கு சிறுக்காமல் நேரான உடல்வாகு கொண்டவர்களாக இருக்கின்றனர். அதிக பருமன் உடைய பெண்களை பார்க்க முடியவில்லை.  சராசரியாக உயரம் ரொம்பவே குறைந்தவர்களாக எனக்குப்பட்டது அநேகப்பெண்கள் 5 அடி உயரத்துக்குள் தான் இருப்பார்கள்.  99% பெண்கள் புடவை' மட்டுமே அணிகிறார்கள், குறிப்பாக திருமணம் முடித்தவர்கள் புடவையே அணிகின்றனர், நெற்றி வடு முழுக்க குங்குமம் வைத்திருக்கிறார்கள், ஆனால் கழுத்தில் தாலி செயின் போடும் வழக்கம் இல்லை, மாறாக மோதிரம் அணிகின்றனர். வெறும் கழுத்தோடு தான் இங்கு பெண்களை பார்க்க முடிகிறது. கையில் ஒரு சிகப்பு ப்ளாஸ்டிக் வளையல், வெள்ளை நிறத்தில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட வளையல் அனைவருமே அணிந்திருக்கின்றனர். பெண்களின் அழகுக்குறித்து எழுத வேண்டுமென்றால், பெங்காலி பெண்கள் சிகப்பாக, கொழு கொழுவென்று இருப்பார்கள் என்ற எண்ணமே இருந்தது, ஆனால் அப்படியில்லை என்பதே உண்மை. மாநிறத்தில் மிக சாதாரண முக அமைப்புக்கொண்டவர்களாகவே இருக்கின்றனர். இன்னும் அழகான பெண்களை நான் பார்க்கவில்லை போலும்.. ?! .
ஆண்கள் எந்நேரமும் கையில் சிகிரெட்'டுடன் இருக்கிறார்கள், இவர்களையும் அழகானவர்கள் என்று சொல்லிவிட முடியாது, சராசரிக்கும் குறைந்தளவே. வியாபாரம் செய்யும் இடத்தில் ஒரு கையில் சிகிரெட் வைத்து புகைத்துக்கொண்டே வியாபாரம் செய்கின்றனர். இந்த புகைப்பழக்கதை மட்டும் சகிக்கமுடியல. இது காய்கறி, மளிக்கைக்கடை, துணிக்கடை என்று எங்கும் நடக்கிறது. சிகிரெட்டை விட பீடி' யெ அதிகம் புகைக்கின்றனர்.

பெண்கள், ஆண்கள் இருவருமே சைக்கிள் அதிகம் ஓட்டுகின்றனர்.  பெண்கள் குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்த வர சைக்கிளை பயன்படுத்துகின்றனர். இருபாலாருமே சர்வசாதாரணமாக ஒரு கையில் குடையை பிடித்துக்கொண்டு இன்னொரு கையில் சைக்கிளை பிடித்து ஓட்டுகின்றனர். இவர்கள் வெயில் , மழை எதற்கும் குடை பிடிப்பதால், கேரளாவை நினைவுக்கொள்ள வேண்டியிருக்கு. வெயில் சென்னை அளவிற்கே இருப்பதால், வியர்வையும் அதிகம். அதே சமயம் நவம்பர் மாதத்திலிருந்து குளிர் அதிகமாக இருக்குமென்று சொல்லுகின்றனர். குளிர் ஆரம்பித்திருந்தாலும் இன்னும் அதிகமாகவில்லை.
 
அன்றாட தேவைகளான பால், தயிர், நெய், காய்கறி , பழவகைகள், இனிப்புகள் கார வகைகள் அனைத்துமே சென்னை விலை தான். மீன் வகைகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. வஞ்சனம் கிலோ 160 ரூ என்பதை என்னால் நம்பவேமுடியவில்லை.  சிறிய வகை மீன்கள் மிகவும் ருசியாக இருந்தாலும், முள் அதிகமாக உள்ளன. இன்னமும் மீன் வகைகள் எங்களுக்கு நன்கு பரிச்சயப்படவில்லை.  தெரிந்தவகை , முள் இல்லாத மீன்களாக பார்த்து வாங்குகிறோம்.

போக்குவரத்துக்கு ரிக்ஷாக்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. தவிர மீன்பாடி வண்டிகளிலும் மக்கள் பயணம் செய்கின்றனர். அதாது அலுவலகம், கடைத்தெருவிற்கு போவோர் இந்த வண்டிகளில் அமர்ந்து செல்கின்றனர், ஒருவருக்கு 5 ரூ.  தவிர மினி பேரூந்துகள் அக்கம் பக்கம் ஊர்களுக்கு இயக்கப்படுகின்றன. அவற்றில் சவுகரியமான பயணம் என்று சொல்லமுடியாது. ரயில் என்பது மிக பிரதானமாக போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. கல்கத்தாவிலிருந்து வரப்போகவும், நடுவில் இருக்குமிடங்களுக்கு செல்லவும் ரயிலே சிறந்தது. ஆனால் கூட்ட நெரிசலில் மிகவும் முரட்டுத்தனமாகவும், சுயநலத்தோடும் மனிதாபிமானமின்றியும் நடந்துக்கொள்கின்றனர். சென்ற பதிவில் சொன்னதுப்போல திருட்டு பயமும் அதிகம். குறிப்பாக ரயிலில், பேரூந்தில் திருட்டுகள் அதிகம்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என தனியாக குடியிருப்பு பகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஏழ்மையானவர்கள் மட்டுமே இருப்பர் என்று நினைத்தால் அதான் இல்லை, மிகுந்த வசதிப்படைத்த மில்லியனர்களும் பெரிய வீடுகள் கட்டிக்கொண்டு அங்கு வசிக்கிறார்கள். வீடுகளுக்கு வேலை வரும் பெண்கள் அனைவருமே சைக்கிளில் வருகின்றனர். ஒரு வீட்டில், வீட்டு வேலை செய்ய மட்டும் 2-3 வேலைக்காரர்கள் இருக்கிறார்கள்,  தவிர தோட்ட வேலை செய்ய 15 நாளுக்கு ஒரு முறை இருவர் வருகின்றனர், தினமும் காலையில் வீட்டை சுற்றியுள்ள இடங்களையும், வீட்டை ஒட்டிய சாலையோர வெளிப்பகுதிகளையும் சுத்தம் செய்ய இருவர் வருகின்றனர். 
 
பொதுவாகவே இந்த மக்கள் சுயநலவாதிகள் என்றே மற்றவர்களால் வருணிக்கப்படுகின்றனர். உண்மைதானா என்று அறிய எனக்கு வாய்ப்பு இன்னும்
கிட்டவில்லை. அக்கம் பக்கம் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வதில்லை, அவரவர் வேலையை அவரவர் பார்க்கின்றனர். காளி, துர்கா பூஜைகளில் அவரவர் பகுதிகளில் ஒன்றாக சேர்ந்து பிரமாண்டமாக கொண்டாடுகின்றனர். பெங்காலிகள் முற்போக்குவாதிகளாகவே எனக்கு தெரிகின்றனர். யாரும் யார் விசயத்திலும் தலையிடுவதில்லை, துக்கம் சந்தோஷம் போன்றவை அக்கம் பக்கத்தில் பகிர்ந்துக்கொள்ளும் பழக்கம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

அரசின், 'வீட்டு குத்தகை நிபந்தனை' காரணமாகவோ என்னவோ, புதியவர்கள் யாரும் குடிபெயர்ந்து இங்கு வாழ விரும்புவதில்லை அல்லது வசதிகள் அதிகம் இல்லாததாலும் இங்கு யாரும் தங்க விரும்புவதில்லை. அதனால் எல்லா வீடுகளில் முதியோர் அதுவும் 60 - 70 வயதுக்கு மேற்பட்ட முதியோரே வாழ்கின்றனர். பிள்ளைகள் வேலை விசயமாகவோ, வசதிகள் தேடியோ வேறு இடங்களுக்கு சென்றுவிட இவர்கள் மட்டும் இங்கே. கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இன்னமும் இங்கே இருப்பது குறிப்பிடத்தக்கது. வட இந்தியாவில் இந்த முறை இன்னும் கைவிடப்படாமல் இருப்பது ஆரோக்கியமான விசயமே.

படித்தவர்கள் அதிகமாக உள்ளனர், படிப்பு என்றால் மருத்துவம், பொறியியல் அல்ல இளநிலை முனைவர்கள், ஆராய்ச்சியாளர்கள் அதிகமாக இருக்கின்றனர். சந்திப்போர் அனைவருமே மருத்துவர்களாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும் இருப்பது நம்மை "ஒரு ஸ்டெப் பேக்" வைக்க வைக்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கு வங்கத்தினர் இருக்க இந்த படிப்பும் காரணமாக இருக்கலாம். அரசு மற்றும் தனியார் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளும், கல்யாணி பல்கலைகழகமும் இங்கு உள்ளது.
 
கோயில்கள், துர்கா, காளி, லட்சுமி பூஜை .... இவைப்பற்றி எழுத எனக்கு இன்னும் அவகாசம் தேவை.  தொடர்ந்து இங்கு சில பூஜைகளும் அது சம்பந்தப்பட்ட  விழாக்களும் நடந்தவாரே இருக்கின்றன... என்ன ஏதுன்னு இன்னும் ஒன்னும் புரியல. இவற்றைப்பற்றி புரிந்து.. பிறகு பொறுமையாக பதிய வேண்டும். நிதானமாக  கொல்கத்தா சென்று ஹவுரா & ஹூக்ளி ஆறுகள், மேம்பாலங்கள், காளிக்கோயில்,படா பஜார்  எல்லாம் பார்த்து.......... வேறென்ன எழுதிவைக்கனும். !

அணில் குட்டி : ஸ்ஸ் யப்பா முடிச்சிட்டாங்களா ?! வந்தாலும் வந்தாங்க.. என்னா கதை.. ?!

பீட்டர் தாத்ஸ் :“Culture is the sum of all the forms of art, of love, and of thought, which, in the coarse or centuries, have enabled man to be less enslaved”

Images courtesy Google : Thanks. &