எதிரில் ஒரு சூப்பர் மார்க்கெட்.  எது தேவைனாலும், சட்டுன்னு ஓடிப்போய் வாங்கிட்டு வந்துடலாம்.

புது ஊர், மொழி தெரியாத இடத்தில், இந்த சூப்பர் மார்க்கெட் எனக்கு பெரியதொரு வரப்பிரசாதம். பொருட்களை நானே தேடி எடுத்து, பில் போட்டு, பணம் கொடுத்து வாங்கிவரும் வரை, யாரிடமும் வாய்த்திறக்க வேண்டிய அவசியமில்லை. ஆரம்பித்தில்"பை கொண்டு வந்திருக்கீங்களா"ன்னு பெங்காலியில் கேட்டாங்க.... நான் முழிப்பதைப் பார்த்து, சைகையில் செய்து காட்டினாங்க..  இப்ப அதுவும் இல்ல, போகும் போதே பை எடுத்துட்டுப் போயிடுவேன்.

அந்தக்கடையில்..ஒரு நாள்,

உள்ளே நுழையும் போது, பொருட்களை எடுக்கும் இடத்தில் நடு மத்தியில், வயதானவர் ஒருவர் கால் மேல் கால்போட்டு நாற்காலியில் அமர்ந்திருந்தார். சுருக்கமில்லாத இன்'செய்யப்பட்ட முழுக்கை சட்டை, பேன்ட், பாலிஷ் போட்ட ஷூ சகதிமாக டிப் டாப்பாக இருந்தார்.  'வாடிக்கையாளர் முடியாமலோ அல்லது  உடன் வந்திருப்பவர் வாங்கும் வரையோ  உட்கார்ந்திருக்கிறார்  போல' என்று ஊகித்தப்படி சென்றேன்.

எப்போதும் அந்த கடையில் 23-26 வயதுள்ள இரண்டு பிள்ளைகள் இருப்பாங்க. நான் பொருட்களை எடுத்துட்டு வந்து பில் போடும் வரை, என் பின்னாலேயே வருவாங்க..எதாது தடுமாறினால் உதவி செய்யலாம் அல்லது என்ன வேண்டுமென கேட்கலாம் என்றிருக்கலாம். அன்று அந்த இருவரில் ஒருவன் நான் உள்ளே சென்று பொருட்களை எடுக்கும் போது பெரியவரைப்பார்த்து அதட்டலாக... (பெங்காலியில் தான்)

"எழுந்து அவங்களுக்கு  உதவி செய்ங்க.. அவங்க தேடறதைக்கேட்டு எடுத்துத்தாங்க"

அட.. இவர் இங்க புதுசா வேலைக்கு சேர்ந்திருக்காரா?! ஓய்வுவெடுக்கும் வயதில், இப்படி வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம் வந்துவிட்டதா இவருக்கு ?! சின்னப்பசங்க எல்லாம் அதட்டுதே'ன்னு மனசுல நினைச்சிட்டே பொருட்களை எடுத்தவாறு இருந்தேன்.

உதவிசெய்ய வந்தார், கேட்டார்.. நானே எடுத்துக்கறேன்னு (ஆங்கிலத்தில்) சொல்லி புன்னகைத்துவிட்டு, என் வேலையைப் பார்த்தேன். அப்பாடா.'.ன்னு திரும்பவும் போய் சேரில் உட்கார்ந்துக்கொண்டார். 

**************
எங்கள் வீட்டு ஜன்னலிருந்து பார்த்தாலே கடைத்தெரியும், சில நேரங்களில் நின்று வேடிக்கைப்பார்த்து பொழுதுப்போக்குவேன். அவர் சேர்ந்து ஒரு வாரம் சென்ற ஒரு நாளில்...

வெளியில் வந்து கைக்கட்டி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அன்று, சட்டையை டக்'இன் செய்யாமல் வெளியில் விட்டிருந்தார்..

ம்ம்...வேலைக்கு தகுந்தார் போன்று தன்னை மாற்றிக்கொள்ள முயல்கிறார்.... போல.....

இங்கு கடைகள் மதியம் சரியாக 1.30 மணிக்கு மூடிவிட்டு திரும்ப மாலை 5- 5.30 க்கு தான் திரும்ப திறப்பார்கள். இந்தக்கடை மட்டுமல்ல.. மதிய நேரத்தில் உசுரு போனாலும் இங்க எதும் வாங்கமுடியாது, எல்லா கடைகளுமே மூடி இருக்கும்.

எப்போதும் போல ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.  மிக சரியாக மாலை 5 மணிக்கு திறக்கும் சூப்பர் மார்க்கெட் அன்று திறக்கப்படவில்லை. வயதானவர், பக்கத்தில் இருக்கும் சின்ன கடை வாசலில்,  பெஞ்சில் அமர்ந்து தெருவையே பார்த்துக்கொண்டிருந்தார்.

அடடே... சரியான நேரத்திற்கு வந்து காத்திருக்கார், ஆனா, கடை திறக்கறவங்கள காணமேன்னு யோசிச்சிட்டே அவரைப்பார்த்தேன்..ஷூ'வை காணல.. செருப்புக்கு மாறியிருந்தார்.. 

அவரின் நடை, உடை , பாவனை, உடல் மொழி அத்தனையும் அவர் ஏதோ நல்ல வேலையில், நல்ல பதவியில் இருந்து ஓய்வுப்பெற்றவர் போன்று தெரிகிறது.. ஆனால் இந்த சூப்பர் மார்க்கெட்டில் "சேல்ஸ் பாய்" வேலை என்பது நிச்சயம் அவருக்கு நெருப்பு மேல் நிற்பதைப்போன்ற ஒரு நிலையை ஏற்படுத்துகிறது என்பது மட்டும் அவர் முக வாட்டத்திலிருந்து புரிந்தது.

கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது....

இப்போதெல்லாம் நாற்காலியில் அமர்வதேயில்லை. நாள் முழுக்க நின்றிருக்கிறார், கடையில் கஸ்டர்மர்கள் இல்லையேல் வாசலில் வந்து கைக்கட்டி நின்று வேடிக்கைப் பார்க்கிறார்.

அவர் முகத்தில் சிரிப்போ சந்தோஷமோ எதையுமே பார்க்கமுடிவதில்லை. தலையெழுத்து இந்த வேலையை ப்பார்த்தே ஆகனும்னு என்கிற ஒரு முகபாவம்..
ஒரு நாளைப்போல, சுயமரியாதையை விட்டுக்கொடுத்து மென்று விழுங்கிக்கொண்டு கடக்கும் கடினமான நொடிப்பொழுதுகள்.. வயதான காலத்தில் ஓய்வூதியத்தின் மதிப்பை புரியவைக்கும் இவர்...

ஏனோ.....  என் கண்ணில் படும்போதெல்லாம்.. ஒரு இனம் புரியாத வேதனையை ஒட்டவைத்து கடக்கிறார்......