"நீ போனியா? அவரு எப்படியிருக்காரு... ?!! "

பதிலை எதிர்ப்பார்த்து.... ஆவலும் ஆசையும் ஒரு சேர..  பாட்டியின் கண்கள் பளப்பளவென மின்னியது...

"போனேனே... நல்லாயிருக்காரு பாட்டி..."

"என்னா சொன்னாரு...?! " அதே எதிர்ப்பார்ப்பு மின்னியது....

"உன்னை விசாரிச்சாரு... ஒடம்பு சரியானதும் வந்துடுறேன்னு சொல்ல சொன்னாரு..."

"ம்ம்ம்... விசாரிச்சாரா..... நான் இல்லாம எப்படிதான் இருக்காரோ... ?! நான் இல்லாம இருக்கவே மாட்டாரே........ "  அதே கண்களில் இப்போது நீர்க்கோர்த்து கவலை..ஏக்கம்....தவிப்பு....

"அவர் ஒடம்பு  சரியாகி வர வரைக்கும் தனியா இருந்து பழகிக்கோ பாட்டி.... "

கண்களை விரித்துக்கோபத்தோடு... "என்ன பேசற நீ? ..அவரில்லாமல் நான் எப்ப இருந்திருக்கிறேன்... ...அவர் இங்க இருக்கும்போதே... நீங்கெல்லாம் வாரி சுருட்டி வாயில இல்லப்போட்டுக்குவீங்க....?! "

"சரி சரி..கோச்சிக்காதப்பாட்டி,  உனக்கே தெரியுமில்ல....அவருக்கு ஒடம்பு சரியில்லையே...என்ன செய்யறது... ?! வந்துடுவாரு... ...வந்துடுவாரு..."

".ம்ம்ம்.... . வந்துடுவாரு..."  பார்வை குத்திட்டு நிற்க... ஏதோ சிந்தனையில் ஆழ்ந்துக்கொண்டே ஒரு பக்கமாக சாய்ந்து உடலுக்கு கையை ஊன்றி முட்டுக்கொடுத்து ஒருக்களித்து படுக்கிறார்.... .

*********************

முதியோர் இல்லத்திற்கு சென்றிருந்த என்னிடம், உதவியாளர் பாட்டிக்குத்தெரியாமல் -

 "பாவம்.... தாத்தா இறந்து நாலு நாள்..ஆச்சி.. இன்னும் இதுக்கு தெரியாது.... எவ்ளோ நம்பிக்கையா இருக்குப்பாருங்க..."

"அடடே....இறந்துட்டாரா..?!  ஏன் சொல்லல.... ஏன் சொல்லாம இருக்கீங்க... ..இவ்ளோ எதிர்பார்ப்போட இருக்காங்களே..... பாவமில்லையா.....?! "

"சொன்னா தாங்காதுங்க... தாங்காதுன்னு தெரிஞ்சி எப்படி சொல்றது? இரண்டுப்பேரும் ஒருத்தரை விட்டு ஒருத்தர் இருக்கமாட்டாங்க..."

"ம்ம்ம்ம்"

*********************

நான்கு நாட்களுக்கு முன் உடல் நிலை மிகவும் மோசமாகி, மருத்துமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட அந்தப்பாட்டியின் கணவர் அன்றே மருத்துவனையில் இறந்துவிட்டார்.

இவர்களுக்கென்று யாருமில்லை, குழந்தைகள் 4-5 பிறந்து இறந்துவிட்டன, தாத்தா ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுப்பெற்று, மாதம் 30 ஆயிரத்துக்கும் மேல் ஓய்வூதியம் பெற்றுவந்திருக்கிறார்.

அவர் இறந்ததறிந்த அந்தப்பாட்டியின் அக்காப்பிள்ளைகள், பாட்டிக்கு விசயத்தை சொல்லாமல், தாத்தாவின் ஈமச்சடங்குகளை நடத்திவிட்டு சென்றுவிட்டனர்.  இருந்த ஒரே உறவும் இறந்ததுத்தெரியாமல்,  வழிமேல் விழிவைத்து அவர் வந்துவிடுவார் எனக் காத்திருக்கும் பாட்டியைப்பார்க்க நெஞ்சு நெகிழ்ந்தது.

பாட்டியின் எதிர்ப்பார்ப்பில் "விரிந்து பளப்பளத்த"  அந்தக் கண்கள் இன்னும் என் கண்களை விட்டு விலகவில்லை...

வாழ்க்கை எத்தனை கொடுமையானது என்பதா...இல்லை அடுத்த மணித்துளியில் நடக்கவிருக்கும்  .....சுவாரசியங்களும், சூழ்ச்சிகளும், மாயங்களும், அதிசயங்களும் ஆச்சரியங்களும் அறியாத "மாயை" என்பதா... ?!

அணில் குட்டி : ஆக்சுவலி.... இதைப்பார்த்ததிலிருந்து அம்மணிக்கு அவங்க எதிர்காலத்தை நினைச்சி அள்ளுவிடுது.. !! அதை வெளியில சொல்லிக்காம பாட்டியோட லைஃப் லைவ் ஸ்டோரி எழுதறாங்க....... ......  .......

பீட்டர் தாத்ஸ் : Life is what happens while you are busy making other plans - john_lennon 

Image : Thx Google