தொலைக்காட்சி, தொலைப்பேசி, இணையம் இவை மூன்றுமே நம் நேரத்தை நாம் அறியாமல் விழுங்கக்கூடியவை.  பத்தா' காலத்தில் இவையில்லை, ரொம்பவே ப்ரொடக்டிவாக பல வேலைகளை அவங்களால் செய்ய முடிந்தது.

குறிப்பாக இணையத்தில் G+, FB, Twitter இவற்றில் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள், சொல்கிறார்கள் போன்ற விசயங்களில் நம் கவனம் செல்கிறதே ஒழிய.... நாம் என்ன செய்துக்கொண்டிருக்கிறோம் என்பதை மறக்க செய்துவிடுகிறது. ஒருவருக்கு ஒருவர், தான் அறியாமல் தெரியாமல் மற்றவர்களின் விசயத்தில் மூக்கை நுழைப்பதும் நடக்கிறது.

தலைப்புக்கு வருவோம் : என்னுடைய ஆயா, அப்பாவின் அம்மா பத்மாவதி. தாத்தா ஆயாவை செல்லமாக பத்தா'ன்னு தான் கூப்பிடுவாரு.  ஆயாவிற்கு எப்படி நேரம் கிடைத்தது என்பதை இப்போதும் நினைத்து மலைத்துப்போவேன். தோழிகள், உறவினர்கள் வருவார்கள், மணிக்கணக்காக அவர்களோடு பேச்சுவார்த்தை நடக்கும், ஆனாலும் வெட்டியாக பேசிக்கொண்டிருக்க மாட்டாங்க. கைவேலை ஏதேனும் செய்துக்கிட்டே பேசுவாங்க. ஆயாவைப்போல ரொம்ப ப்ரொடக்டிவாக ஒரு நொடியைக்கூட வீணாக்காமல், சூழ்நிலைக்கு தகுந்தார்ப்போன்று, க்ரியேட்டிவாகவும் யோசித்து வேலைசெய்ய யாராலும் முடியாது.

அப்படியென்ன வேலைகள் என்றால்..?!.ஏதோ ஒரு பாலச்சந்தர் சீரியலில் வீட்டில் இருக்கும் பெண் என்னவெல்லாம் செய்யறா'ன்னு மளிகை பட்டியல் போல மிக நீளமான ஒரு பட்டியலை அந்த கதாநாயகி எடுத்துக்காட்டுவாள். அப்படிதான் ஆயாவின் வேலைப் பட்டியலும் முற்றுப்புள்ளி இல்லாமல் நீளும். வருடத்திற்கு ஒரு முறை முறத்தை பேப்பர் கூழ் பூசி வைக்கும் பழக்கம் ஆயா சொல்லிக்கொடுத்தது. வருடத்திற்கு ஒருமுறை  3 மணி நேர என் உழைப்பு மட்டுமே. மிக எளிதாக தூக்கிப்போட்டுவிட்டு வருடம் ஒரு புதிய முறம் வாங்கிக்கொள்ள முடியும் எவ்வளவோ செலவு செய்யறோம்.. இதை செய்துக்கொள்ள முடியாதா என்ன?. ஆனால்  ஆயா எனக்காக பார்த்து பார்த்து வாங்கிக்கொடுத்தவைகளில் இந்த முறமும் ஒன்று. அவ்வளவு எளிதாக தூக்கிப்போட்டுவிட முடியாது.  முந்தைய இரவு பேப்பர் மற்றும் வெந்தயம் சேர்த்து ஊறவைத்து, காலையில் அரைத்து, முறத்தில் பூசி காயவைத்து எடுக்க வேண்டியது தான்.

இந்த ஆண்டு மிகவும் சிரமப்பட்டேன். நான் அறியாமல் எண்ணெய் பாக்கெட் ஒழுகி, ஒன்றன் மேல் ஒன்றாக வைத்திருந்த முறத்தில் ஊறி, அதை நான் கவனிக்காமல் விட்டு, இரண்டும் பிசு பிசுவென எண்ணெய் கறை படிந்து கறுப்பாக, ஒரே எண்ணெய் நாற்றம் வேறு. சோப்பு போட்டு கழுவி காயவைத்துப் பார்த்தேன் போகவில்லை. பிறகு தண்ணீரில் ஊறவைத்து பழைய பேப்பர் கூழ் முழுக்க பிய்த்து எடுத்து, வெயிலில் காயவைத்து, திரும்ப புதிய கூழ் பூசி புதிதாக ஆக்கினேன்.  சில கவனக்குறைவுகளால் ஏற்படும் தவறுகள், நமக்கு பல புதிய விசயங்களை கற்றுக்கொடுக்கத்தான் செய்கின்றன.
 **************

அடுத்து குளியலறை அறிவுகால் ஓட்டை. இதனால் பலப்பிரச்சனைகள், அதாது நாங்க வாடகைக்கு விடாமலேயே ஓசியில்  ஒய்யாரமாக தங்கி இனவிருத்தி செய்யும் கரப்பான் வகையாறக்கள். குளியலறை என்பதால் மண்புழுக்குளும் வந்து உள்ளே புகுந்துக்கும், இவற்றை சாப்பிட எரும்பு என பல வித ஜீவராசிகள் ஒன்று சேர்ந்து வாழும் இடமாகிவிட்டது. எனக்கு குளியலறைக்கு போனால், போன வேலையை விட்டு, கவனம் முழுக்க எங்கு என்ன இருக்கிறது அது எப்போது என் மேலேறும் என்றே இருக்கும், உண்மைய சொன்னால் "பயம்" & சகிப்புத்தன்மை இல்லை.  இதற்கு முடிவுக்கட்ட ஒருநாள் களத்தில் இறங்கினேன். சின்ன ஓட்டையாக இருக்குமென்று தப்புக்கணக்கு போட்டேன். சரியான பொருட்கள் கையில் இல்லை இருந்தாலும், பழைய சமையல் கத்திகள், தட்டை ஆயுதங்களாக மாற்றினேன், மேலுள்ள புகைப்படத்தில், படம் 1 -ல் பாருங்க.. பார்க்க மெல்லிய ஓட்டையாக இருந்தாலும், அந்த பெரியக்கத்தியின் கத்தி பாகம் முழுக்க உள்ளே செல்லுமளவு பெரிய ஓட்டை.  இப்படியாக அறிவுகாலின் இரண்டு பக்கமும், ஒரு அறைக்கு 4,  இரண்டு அறைக்கு மொத்தம் 8 ஓட்டைகள்.  வேறென்ன சும்மா பூசிட்டு போகலாம் என்று உட்கார்ந்த எனக்கு, அரை நாள் வேலையானது. ஆனாலும் விடாம இனிமே ஓசியில் யாருக்கும் வீடு வாடகைக்கு விடறதில்லைன்னு கலவையை உள்ளே தள்ளி தள்ளி முடிச்சோமில்ல.. ?!
*****************

கடைசியாக குளியலறை டைல்ஸ் ஓட்டைகள்:-  2000த்தில் இந்த வீட்டிற்கு வந்தோம். 14 ஆவது வருஷம் நடக்குது. குளியலறை டைல்ஸ்களுக்கு இடையே இடைவெளி...அதில் அழுக்கு சேர்ந்து பழுப்பு நிறமாகவும், ரொம்ப குட்டி குட்டி மண்புழுக்குள் புகுந்து உள்ளிருக்கும் தரையை மேலும் பாழாக்கி கடுப்பேத்தின. டைல்ஸ் ஒட்டும் வேலை எனக்கு அறவே தெரியாது, யாரும் செய்தும் பார்த்ததில்லை,  என்றாலும் குத்து மதிப்பாக இப்படித்தான் இருக்குமென ஊகித்து, குளியலறைய நன்கு கழுவி காயவைத்து, ஒய்ட் சிமெண்ட் வாங்கிவந்து கெட்டியாக்கி, டைல்ஸ் ஓட்டைகள் ஒவ்வொன்றையும் பூசி அடைத்தேன். ஆஹா... இப்ப எங்க குளியலறை பளீச்'ன்னு ஆகிப்போச்சி... ..

பத்தா'வை போல எனக்கு கூட்டுக்குடும்பம், ஏகப்பட்ட குழந்தைக்குட்டிகள், விருந்தினர் வருகை, சொந்தங்கள் அதை சார்ந்த வெளி வேலைகள், கோயில் குளம், பிராத்தனைகள், வழிபாடுகள்,  பெரிய வீடு,வாடகை விட்ட வீடுகளின் பராமரிப்பு,  தோட்டம், மரங்கள், செடி, கொடிகள் இப்படி ஏதுமில்லை என்றாலும்.. .......பத்தா வழியில்......

அணில் குட்டி : இந்த பதிவின் மூலம் நீங்க சொல்ல வரும் கருத்து என்னவோ.. ?!  ஆமா தெரியாமத்தான் கேக்கறேன்... ஏன் இந்த தம்பட்டம். ?!!

பீட்டர் தாத்ஸ் :  House work is what a woman does that nobody notices unless she hasn't done it.  Evan Esar