1980 களில் ரொம்ப பிரசித்திப்பெற்ற சோப்பு விளம்பரம் "லிரில்" தான். டிவி எல்லோர் வீடுகளிலும் இருக்காது, எல்லாத் திரையரங்களிலும் திரையிடப்படும் இந்த விளம்பரத்தையும், அந்த பெண்ணையும் விரும்பாதோர் இல்லை.
எனக்கும் இந்த விளம்பரம் பிடிக்கும், அந்த சோப்பும் பிடிக்கும். ஆனால் வீட்டில் அதை வாங்கவே மாட்டாங்க. விலை அதிகமான சோப்புகள் என ஒரு பட்டியல் இருக்கும் அவற்றில் முதலில் வருவது "லக்ஸ்" அடுத்து "லிரில்". லக்ஸ் சோப்பிற்கு ஸ்ரீதேவி & ஜெயப்பிரதா விளம்பரப்படத்தில் வருவாங்க. லக்ஸ் சோப்பு பயன்படுத்தினால் ஸ்ரீதேவி போல இருப்போம்னு அநேகப் பெண்கள் நம்பியக்காலம்.
விலை காரணமாக, லக்ஸ்'ஐ அக்கம் பக்கத்தில் இருப்போர், உறவினர்கள் யாரும் உபயோகித்து பார்த்ததில்லை. ஆனால், நடு அத்தை வீட்டில் லிரில் சோப்பு வாங்குவாங்க. அங்கப்போகும் போது முகம் கழுவிட்டு வீட்டுக்குப் போடின்னு அத்தை சொன்னால், சோப்பை எடுத்து கலரை ரசிப்பேன், பின்னர் முகர்ந்துப்பார்ப்பேன், எலுமிச்சை வாசம் அடிக்கும். லிரில் சோப்பின் வடிவம், மேலுள்ள மஞ்சள், அடற்பச்சை கோடுகள் என்னமோ என்னை மிகவும் கவரும்.
வீட்டில் தாத்தா கதை எப்பவும் தனிக்கதை. தாத்தாவிற்கு தனி ரூம். எல்லாமே தனி. ஆயாவே பணத்தை பார்த்து பார்த்து சிக்கனமாக செலவு செய்வாங்க. தாத்தா அதைவிட ரொம்ப மோசம், கஞ்சம் என்றே சொல்லனும். அநாவசியமாக ஃபேன் ஓடக்கூடாது, லைட் எரியக்கூடாது. ரேடியோ போடக்கூடாது.
தாத்தாவிற்கு பணம் செலவு செய்ய மனசே வராது, அதனால் அவரின் சோப்பு "லைஃப்பாய்". ஒரே ஒரு சோப்பு வாங்கினால், கிட்டத்தட்ட ஒரு வருசத்துக்கு வரும். ஒரு சோப்பு வாங்கி அதை ரொம்ம்ம்ம்பவே கஷ்டப்பட்டு இரண்டாக நறுக்கி, பாதி பாதியாகவே பயன்படுத்துவார். எனக்கு சுத்தமாக பிடிக்காத ஒரு 'ஒவ்வேக்' சோப்பு அது.
தாத்தா முதுகு தேய்க்க கூப்பிட்டாலே, வாயடிச்சிக்கிட்டே தேய்ப்பேன். "ஏன் தாத்தா இந்த சோப்புல நுரை வரல, வாசனையும் இல்ல, கரையவே மாட்டேங்குது, இதுக்கு பதிலா ஒரு செங்கல்லை தாங்க தேய்ச்சு விடறேன்" னு சொல்லுவேன். உடனே தாத்தா புராணத்தை ஆரம்பிச்சிடுவாரு. நான் ஒரு ஏழை விவசாயிக்கு பிறந்த பரம ஏழை.. நீ பொறக்கும் போதே உங்கப்பன் ஃபோர்மேன், எனக்கப்படியா, மேல் சட்டைக்கூட இல்லாமல், வெத்து ஒடம்போட, இடுப்புல சின்னதா ஒரு துண்டைக்கட்டிக்கிட்டு, உங்க ஆயா வீட்டு வாசலில், சொந்த மாமங்காரன் கிட்ட, "ஐயா..சாமி, எனக்கொரு வேல வாங்கித்தாங்கன்னு கைக்கட்டி நின்ன ஆளு" உங்களாட்டும் செலவு செய்ய எனக்கு வசதி இல்ல" ன்னு சொல்லுவாரு.
இந்த கதையை 12814 ஆவது தடவையாக காதில் ரத்தம் சொட்ட சொட்டக் கேட்டு, முதுகை ஏனோ தானோவென்று தேய்ச்சிட்டு வருவேன். கதையும் மாறாது தாத்தாவின் பாதி " லைஃபாய்" சோப்பும் மாறாது. இந்த சோப்பையும் விரும்பி எங்கவீட்டில் இன்னொரு ஜீவன் தாத்தாவிற்கு தெரியாமல் திருடி குளிக்கும். அது என் சின்ன அண்ணன். அதை தாத்தாவிடம் போட்டுக்கொடுத்ததில், என்னமோ ஒரு தரம் குளிச்சதில், சொத்தே கரைஞ்சுப் போன மாதிரி, அவர் அண்ணனை ஏகத்துக்கும் திட்ட, அந்த கடுப்பில் அண்ணன், என்னை எவ்ளோ முடியுமோ அவ்ளோ கும்மி கும்மி எடுத்த கதை வேற இருக்கு. (யப்பா என்னா அடி.??!!! அண்ணன்களா அதுங்க.. பிசாசுங்க!! எப்பவாச்சும் அதுங்க அடிவாங்கியிருந்தா தெரியும்.. அடி எவ்ளோ வலிக்கும்னு...:((, நம்ளத்தானே வீட்டில ஒருத்தர் விடாம பின்னி பெடல் எடுத்தாங்க...)
இப்ப ஒரு டிவிஸ்டு. பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு நுழையுது சோப்பு. திருமணம் ஆன நாளிலிருந்து இன்று வரை பழனி ஆண்டவர் பயன்படுத்தும் ஒரே சோப்பு, "சின்தால்" அவரும் மாறமாட்டார், நாங்கள் மாறினாலும், அவருக்கென சின்தால்' தான் வாங்கனும். எனக்கும் சின்தால் சோப்பே பழகியும் போனது. இருப்பதிலேயே, சருமத்திற்கு மிகவும் தரமான சோப்பு சின்தால்' என்பதால், அதுவே தொடர்கிறது. சோப்பு கிடைக்காத நேரத்தில் நீயூ' விலிருந்து ஓல்ட் க்கு வருவோம். ஓல்டிலிருந்து நீயூவிற்கு மாறுவோம். (Cinthol had been rated first with high TFM. http://en.wikipedia.org/wiki/Total_fatty_matter )
நடுவில் நவீன், அவனுக்காக தனியாக விருப்பப்பட்டு வாங்க ஆரம்பித்த சோப்பு, "பியர்ல்ஸ்". ஆனால் ஒன்றிரண்டோடு அதன் கதை முடிந்தது. அவரும் சின்தாலே பயன்படுத்தினார். முகத்தில் கரும்புள்ளிகள் அதிகம் வரவே, மெடிமிக்ஸ்; க்கு மாறினார்.
சிறுவயதில், நிறம், வாசனை, விளம்பர மோகத்தில், பொருட்களை வாங்க வேண்டும் என்பது போய், இது தான் நல்லது என எவ்வளவு விலை ஏறினாலும் அல்லது குறைவான விலையில் தரமான பொருளாக கிடைத்தாலும், சில தயாரிப்புகளை , தரம் மற்றும் உடல் நலம் கருதி தொடர்ந்து வாங்குவதென்னவோ உண்மை.
அணில் குட்டி : ம்ம்... அம்மணி அடுத்து என்ன டூத் பேஸ்ட்டா? கோபால் பல்பொடியிலிருந்து ஆரம்பிச்சி எழுதுவீங்களே...............ஹய்யோ கடவுளே.....
பீட்டர் தாத்ஸ் : Let advertisers spend the same amount of money improving their product that they do on advertising and they wouldn't have to advertise it.
Thx : Google -> Images & Video