தேடலும் சுவடுகளும்..


கடற்கரை-
இருள் சூழும் நேரம்
மழை வரும் வானம்
தனிமை-

முழங்கால்களை
கட்டிக்கொண்டு-

சுழன்று வரும் காற்று
சற்றே வேகமாய்
மோதிச்செல்கிறது -
முகர்ந்ததில்
உப்பின் வாசம் -

தன்னிச்சையாக
நாக்கை சுழட்டி
உதட்டோரம் சுவைக்கிறேன்
கரித்தது!

கடலின் எல்லையை
தேடி
கண்கள்
நெடுந்தொலைவு
பயணக்கிறது 

தொலைவில்
தள்ளாடும் குட்டி படகு
பெரிய வெள்ளை கப்பல்
கடல் பட்சிகள்
அலைகள் அடங்கிய
நிதானமான சாம்பல்
நிறக்கடல்  -

சிமிட்டாத இமைகள்
சுருக்கிய புருவங்கள்
பார்வையில் கூர்மை
நிற்காமல் அலைகிறது
எல்லை கிட்டவில்லை...

புரிந்த தருணத்தில்
வேகமாய் மீண்டு வந்த பார்வை
அருகில் '
மெதுவாய் மணற்பரப்பில்
உலாவுகிறது -

எட்டிய தூரம் வரை
பாதச்சுவடுகள் -
ஒவ்வொன்றும்
ஒவ்வொரு திசை நோக்கி
வெவ்வேறு அளவுகளில்-

எதையோ
தேடி தேடி... தேடி தேடி...

என் பாதங்களை
சாய்ந்து பார்க்கிறேன்
பாதங்களின் அடியில்
சுவடுகள்....சிரித்தன..

தேடல் எனக்கு மட்டுமல்ல..........

லக்கிலுக் - இதுதான் உங்களுக்கு கடைசி எச்சரிக்கை !!!

என்ன எடுத்தவுடனே கடைசி? முதல், மிடில் எச்சரிக்கை எல்லாம் எங்கன்னு கேக்காதீங்க . அதெல்லாம் மெயில் ல முடிஞ்சிப்போச்சி. அவரு எதையும் கேக்கறாப்ல இல்ல, அதனால இது கடைசி எச்சரிக்கை ....தொடர்ந்து படியுங்கள்...  எச்சரிக்கை நடுவில் வரும்...

இணைய நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பகல் இரவு பாராமல், மீனவர்களின் வாழ்வியல்பு மாற்றத்திற்காகவும், இலங்கை கடற்படையால் தன் வாழ்க்கையை இழந்து வரும் மீனவர்களின் பாதுக்காப்பு வேண்டியும் பல்வேறு விதங்களில் தங்களின் ஆதரவையும், தற்போதைய அரசுக்கு எதிராக தங்களின் எதிர்ப்பையும் பதிவு செய்து வருகின்றனர்.

அதில் முதற்கட்டமாக, நாம் ஒன்றுகூடி "கீச்சின்" மூலம் நம் எதிர்ப்பை தெரிவித்துக்கொண்டு இருக்கிறோம்.  அடுத்து, நம் நண்பர்கள் பலர் சமீபத்தில் மென்பொருள் வல்லுனர்களின் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துக்கொண்டு மீனவர்களுக்காக தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.

இதற்கு நடுவே, இணைய நண்பர்கள் சிலர், மீனவர்கள் பிரச்சனை சம்பந்தமாக அரசியல் தலைவர்களையும், மீனவ பிரதிநிதிகளையும் சந்தித்து பேசி வருகின்றனர். சந்திப்பு மற்றும் பேச்சு விபரங்களை tnfisherman கூகுள் குழுமத்திற்கு அனுப்புகிறார்கள். http://groups.google.com/group/tnfisherman.

30 ஆண்டுகளாக தொடரும் இந்த பிரச்சனையை இத்தோடு  நாம் விட்டுவிடாமல்,  மீனவர்களை அவர்கள் இடத்தில் சந்தித்து, அவர்களின் வாழ்வியல் முறைகளையும், பிரச்சனைகளையும் நேரில் கண்டு, அதனை நம் வாயிலாக எழுத்தாக்கி பலரை சென்றடைய முயற்சி நடந்து வருகிறது. வருகின்ற மார்ச் 4,5 தேதிகளில் நாகையிலும் - 6, 7 தேதிகளில் ராமேஷ்வரத்திலும் மீனவ கிராமங்களுக்கு நேரடியாக சென்று, அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்டுள்ள நான்கு நாட்களில், இரண்டு நாட்கள் அல்லது ஒரு நாள் கலந்துக்கொள்ள முடியுமானால் கூட வரலாம்.

இதற்கான போக்குவரத்து மற்றும் உணவு செலவு மட்டும் நாம் பார்த்துக்கொண்டால் போதுமானது. தங்கும் வசதி, கிராமங்களுக்கு அழைத்து செல்லுதல் போன்றவற்றை அங்கிருக்கும் உள்ளூர் நண்பர்கள் செய்வதாக ஒப்புக்கொண்டு உள்ளனர்.  உங்களுக்கு அதில் சிரமம் ஏதும் இருக்காது.

*************************
விளம்பர இடைவேளை - 

விளம்பரம் உத்தி ன்னு கேள்விப்பட்டு இருப்போம்.  விளம்பரங்களால் மக்களின் கவனத்தை ஈர்த்துவிட்டால் போதும், நம் விளம்பரப்படுத்தும் பொருளினை பற்றிய விபரம் எளிதில் மக்களை சென்றடைந்துவிடும். அப்படி ஒரு விளம்பரம் தான் இது. :) லக்கி க்கு என் நன்றிகள். ஒரு நல்ல விஷயத்திற்கு அவர் பெயரை பயன்படுத்திக்கொள்கிறேன். பத்திரிக்கைகளில் கவர்ச்சிப்படத்தை முன் அட்டையாக போட்டு, பார்வையாளர்களின் கவனத்தை இழுப்பதை போன்று இங்கு கவர்ச்சி நாயகன் "லக்கி".  அவ்வளவு தான், எனக்கும் அவருக்கும் வாய்க்கால் வரப்பு தகறாரு என்று ஒன்றுமில்லை. :)) எவ்வளவு தான் மாங்கு மாங்கென்று எழுதினால் கூட, தலைப்பை வைத்து தான் மக்கள் பதிவினை படிக்க வருகிறார்கள். உங்கள் அனைவரின் கவனத்தை கவரவேண்டி வைக்கப்பட்ட பொய்யான ஒரு தலைப்பு. :) லக்கியின் பெயரை சொல்லி நன்மை நிகழ்தால் எல்லாம் லக்கிக்கே... :)  
*************************

இந்த பயணம் பற்றிய அறிவிப்பை தொடர்ந்து, இது வரையில் 8 நண்பர்கள் கலந்துக்கொள்ள முன் வந்துள்ளனர்.

1    மா சிவகுமார்
2    நாகை சிவா
3    அறுசுவை பாபு
4    கவிராஜன்
5    ரோசா வசந்த்
6    உண்மை தமிழன்
7    சாந்தப்பன்
8    அபிஅப்பா

உங்களுக்கும்  கலந்துக்கொள்ள ஆர்வம் இருப்பின், masivakumar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பெயர், தொலைபேசி எண், கலந்து கொள்ளும் நாட்கள் என்ற விபரங்களை குறிப்பிட்டு பதிவு செய்து கொள்ளுங்கள்.

மேலும், இதனைப்பற்றிய முழுவிபரங்கள் அறிய கீழ்கண்ட பதிவுகளை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

1. வலைப் பதிவர்களுக்கு ஒரு அழைப்பு 
2. நம் மீனவர்களுக்காக - செயல்படும் நேரம் இது !
3. பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

தினம் தினம் செத்து பிழைக்கும் மீனவர்களுக்காக, நம்மால் முடிந்த உதவிகளில், இந்த எள்ளளவு உதவியும் ஒன்று.  ஆர்வமும், விருப்பமும் இருப்பவர்கள், இதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள். விரைந்து உங்களின் பெயர்களை பதிவு செய்யுங்கள், உங்களை பின் தொடர்ந்து பலரும் வருவர்....

நன்றி !!

அணில்குட்டி : ம்ம்ம்.. இவிங்களுக்கு முன்ன மூனு நல்லவங்க இது சம்பந்தமா போஸ்ட் போட்டு இருக்காங்க. . எவ்ளோ டீசன்ட்டா, ரிலேட்டடா தலைப்பு வச்சி இருக்காங்க..  அம்மணி மட்டும்.. .. ...... ஒன்னும் பண்ணமுடியாது..  தலைப்பு ஹூரோ லக்கிலுக் வந்து கழுத்தை திருப்பினா தெரியும்... கதை :)) நமக்கென்ன...!
.

உ.த & லக்கி - என்னை கொலகாரி ஆக்காதீங்க சொல்லிட்டேன்!

திரை விமர்சனம் எழுதறேன் ன்னு சொல்லிக்கிட்டு இரண்டு பேரும்..... அய்யோ யம்மா.. இந்த படத்தை பாக்கதீங்கன்னு ஒவரா சவுண்டு விட்டு, பொங்கோ  பொங்கோன்னு பொங்கி.............. அதை நானும் படிச்சி,  பொங்கி உணர்ச்சி வசப்பட்டு பயந்து போயி, இந்த படத்தை என் குழந்தை பார்த்துட்டா என்ன செய்யறதுன்னு ஓவரா யோசிக்க ஆரம்பிச்சி.................... ............... அப்புறம் என்ன??............  படத்தை அவனுக்கு முன்ன நான் பார்க்கனும்னு முடிவு செய்துட்டேன். அவன் பார்த்தப்பிறகு, உக்காச்சி பொறுமையா அவனுக்கு கவுன்சிலிங் கொடுக்கலாம்னு வூட்டுக்காரை இம்சை செய்து (எவ்ளோ முடியுமோ) , அர்ஜன்ட் அர்ஜன்ட் ஆ டிக்கட் புக் செய்து.. போயி பார்த்தா ஆஆஆஆ.... அவ்வ்வ்...................

மரண மொக்கை படம்.... !!  உங்கவீட்டு எங்கவீட்டு மொக்கை இல்லைங்க..  அப்பவே இவங்க இரண்டு பேரும் கிடைச்சி இருந்தா. .டிக்கெட் காசையாச்சும் திருப்பி கொடுங்கன்னு கேட்டு வாங்கி இருப்பேன்.

ம்ம்ம்ம்... இந்த மாதிரி ஒரு மொக்கை படத்துக்கா இரண்டு பேரும் இம்புட்டு பில்டப் கொடுத்து  விமர்சனம் எழுதி இருக்கீங்க..?? எனக்கு தெரிந்து இப்படிப்பட்ட நிஜ சைக்கோ' க்களை பற்றிய தொடரை ஜீவி யில் பலவருடங்களுக்கு முன்னமே படித்திருக்கிறேன். அதுவும் டாக்டர்களின் விளக்கங்களோடு.... ஏன்ப்பா நீங்க இரண்டு பேரும் பத்திரிக்கை துறையில் தானே இருக்கீங்க.. ? அங்க இருக்கும் போதே இந்த மாதிரி படத்துக்கெல்லாம் பொங்குவீங்களா என்ன?

ஜூவி யிலிருந்து ஒரே ஒரு உதாரணம் இன்னுமும் நினைவில் இருப்பதை சொல்றேன். நம்ம அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிணவறைகளில் வேலை செய்யும் ஊழியர் சொன்னது இது, அவரிடம்  இறந்த பெண்களின் உடல்கள் வந்தவுடன் சொல்ல சொல்லி வைத்து இருப்பார்களாம். இவர்களும் பணத்துக்காக சொல்வதுண்டு, பெண் சடலம் கிடைத்த தகவல் வந்ததும், நேரே பிணவறைக்கே சென்று, அந்த உடல்களுடன் உடல் உறவு வைத்துக்கொள்வார்களாம். இது உண்மையில் நடந்த விஷயம். இப்படிப்பட்டவர்கள் மத்தியில் தான் நாமும் வாழ்கிறோம். அவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள், அவர்கள் மேல் கோபப்பட என்ன இருக்கிறது? அவர்களுக்கு தேவை தகுந்த சிகிச்சை. :( அவ்வளவே. அந்த கோணத்தில் மட்டுமே இந்த படத்தை பார்க்கலாம்..

அப்படி பார்க்கும் போதே.. ஒரு கட்டத்துக்கு மேல்.. அந்த ஹீரோ பேசும் போதெல்லாம் சிப்பு சிப்பா வருது....  ஆனா நீங்க இரண்டு பேரு மட்டும் எப்படி இம்புட்டு டென்சன் ஆகிட்டீங்கன்னு புரியல. .நான் மட்டுமே சிரிக்கல.. ஒரு கட்டத்துக்கு மேல் எல்லாருமே சிரிக்க ஆரம்பிச்சிடறாங்க.. இதுக்கு காரணம் ..இந்த மாதிரி ஒரு மொக்கை படத்திற்கு.. காசு செலவு செய்து வந்து உக்காந்துட்டுமே ன்னு கூட ஒரு காரணம் இருக்கலாம்..

அது மட்டுமல்ல தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் னு பலமொழிகளிலும் இதைவிட மிக மோசமான கொடூரமான படங்கள் எல்லாம் வந்து இருக்கின்றன.  ஆங்கிலத்தில் சொல்லவே வேணாம்...  ஆங்கிலப்படங்கள் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு இது ஒரு மல்டி மரண மொக்கை ப்படமே..

ஆனாலும் என்னைய ரொம்பத்தான் பயமுறுத்திவிட்டு. .லக்கி போஸ்டை நானு ரீடர்ல வேற ஷேர் பண்ணேன். .அதுவும் எப்படி???  ஓவர் ஃபீலிங்கோ ஃப்லீங் ஆஃப் மை குழந்தை ........... லக்கி........ஆட்டோ அனுப்பினா நீங்க தான் முதல். .இரண்டாவது எங்கப்பன் முருகன்.. க்கு...

(வீரா மீனாட்சியம்மா ன்னு அடிக்கடி பேசறது தாங்கமுடியாம... )  படம் முடிய போகும் நேரத்தில், பின்னாடி இருந்த ஒருத்தர்  "டேய்..அப்பவே "எங்கம்மா" சொன்னாங்கடா.. இந்த படத்துக்கு எல்லாம் போவாதன்னு.. கேக்காம வந்துட்டேண்டா. ..என் தப்புன்னு இப்பத்தாண்டா எனக்கு தெரியுது... "

மக்கா இவிங்க இரண்டு பேரும் சொல்லிட்டாங்கன்னு என்னைய போல உணர்ச்சிவசப்பட்டு போயி காசை வீணாக்காதீங்க. .சீக்கிரம் இந்திய தொலைக்காட்சிகளில்ல்ல்ல்ல்ல்ல்ல்.. முதல்முறையா வந்துடும் அப்ப பாத்துக்கலாம்... சொல்லிட்டேன்... :)))) அவ்ளோ மொக்கை. .!!

அணில் குட்டி : அம்மணி செம பல்பு போல.. ராவணன் படத்துக்கு வாங்கின பல்பை விட ரொம்ப பெருசா இருக்கும் போல.... :) முருக்ஸ் அண்ட் லக்கி.. யூ கைஸ் ராக்ஸ்.. :))


நீயும் நானும்...


பழைய
ஆடைக்கேட்டு
கதவை தட்டி
கையேந்துகிறாய்-

உனக்கு
ஏதேனும் கொடுக்க
உள்ளே
திரும்புகிறேன்............

எங்கள் வீட்டு
கதவும்
ஜன்னலும்
கூட
புதிய 
ஆடையுடன்.. :((




கனவுகளை கட்டுப்படுத்துதல் ?!


கனவுகளை கட்டுப்படுத்துதல் என்பது சாதாரண விஷயமா என்றால் இல்லை என்றே சொல்லுவேன். அதிக மனக்கட்டுபாடு தேவை. இது தான் இப்படித்தான் என்ற முடிவுகள் தேவை. மேலும், அட.. கனவு, அதுவும் என் கனவு, இது எனக்கு மட்டுமே தெரியும், பிறர்/வெளியாள் அறிய வாய்பில்லை என்ற எண்ணம் என்னிடம் இருந்ததில்லை. அது எனக்கு சொந்தமானதாக இருந்தாலும், வந்த கனவு சரியா. .வரலாமா? கனவு என்பது அடிமனதின் ஆசையா?  என் அடி மனதில் அப்படி ஒரு ஆசை/ தேவை/தேடல்/பயம் இருக்கிறதா? அந்த ஆசை/தேவை/தேடல்/பயம் சரியா?  என்று என்னை நானே கேள்வி கேட்கும் போது, தேவை என்றால், வந்தால் வரட்டும் என்றும், தேவையில்லை என்றால் அது கனவாக வராமல் இருக்க, என் மனதை சரிபடுத்திக்கொள்ளவும், இரண்டுக்கும் நடுவில் "தெரியாத" விடையாக இருந்தால், தெரியும் வரை அதை விடாமல் துரத்துவதும் வேலையாக கொள்ளுவேன். முடிவு தெரிந்த பிறகே அதை விடுவதை பழக்கமாக்கி க்கொண்டுள்ளேன் அல்லது அப்படி ஒரு குணமுடன் பிறந்துவிட்டேன் னு சொல்லலாம். 

தேவையில்லை அல்லது அப்படி ஒரு கனவு நமக்கு வரக்கூடாது என்று நினைக்கும் நேரங்களில் வந்தால், அது தொடராமல் இருக்க வேண்டி, என் அறிவு என்னை இத்துடன் நிறுத்து என்று எழுப்பி விடுவது, ஒரு விஷயத்தை எந்த அளவு உள்நோக்கி சென்று கவனித்து, என் மூளையை அதற்காக பழக்கப்படுத்தி வைத்திருக்கிறேன் என்பது தெரிகிறது. எனக்கு பல சமயங்களில் கனவுகள் சந்தோஷம் கொடுத்தாலும், வேண்டாமென தொடராமல் நிறுத்திவிடுவது பிடித்திருக்கிறது.

ஆனால் இந்த கட்டுப்படுத்துதல் ஒருவித அழுத்தத்தைக்கொடுக்கிறது என்பது உண்மை. இதையும் நானே உணர்ந்திருக்கிறேன். அதாவது பிடித்த கனவுகளை கட்டுப்படுத்தாமல், அதனுடன் நான் பயணிக்கும் போதும், அதை தூங்கி எழுந்தவுடன் நினைவில் கொள்ளும் போதும், வெளியில் சொல்லும் போதும் என் மனம் லேசாக பறப்பதை போன்ற உணர்வை பெருவேன்.  அதே சமயம் கட்டுப்படுத்தும் போது, ஒரு வித இறுக்கும் பரவி அது நாளுக்கு நாள் வளர்ந்து வருவதும் உணர முடிகிறது. 

நிற்க, இதுவரையில், மூளையின் எந்த பகுதி கனவு வருவதற்கான காரணம் என்று கண்டுபிடிக்கபடவில்லை ஆனால், எந்த நேரத்தில் கனவு வருகிறது என்பதை ஆராய்ந்து கண்டுப்பிடுத்து இருக்கிறார்கள். நாம் தூங்கும் போது இரு வேறு நிலைகளில் தூங்குகிறோம். ஒன்று ஆழந்த சாதாரண தூக்கம், மற்றொன்று rapid eye movement (REM) sleep, இது ஒரு இரவில் 4-5 முறை வேவ்வேறு நேரங்களில் ஏற்படுகிறது, நம் தூக்கத்தின் 20-25% பகுதியை இது எடுத்துக்கொள்கிறது. அதாவது ஒரு இரவில் நம் தூக்கத்தில் 90-120 நிமிடங்கள் இது எடுத்துக்கொள்கிறது.  REM sleep ல், நம் மூளை நாம் விழித்திருக்கும் போது செயல்படுவது போன்றே செயல் படுகின்றது. இது வரையில் நம் மனம் அல்லது உடம்பு  எது சம்பந்தப்பட்டு கனவுகள் வருகிறது என்று இன்னும் கண்டுபிடிக்க ப்படவில்லை.  Parietal Lobe என்ற மூளையின் பகுதி பாதிக்கபட்ட நோயாளிகளுக்கு கனவுகளே வருவதில்லை என்றும் கண்டுப்பிடித்துள்ளார்கள்.

REM sleep ல் நம் மூளையை இயக்கத்தில் இருந்தாலும், அதன் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் திறன் மூளைக்கு அந்த நேரம் இருக்கிறதா என்பது தெரியவில்லை. கட்டுப்படுத்தும் திறன் இருந்தால், கனவினை நம் இஷ்டத்திற்கு எடுத்துச்செல்லவும் முடியுமல்லவா? அப்படி ஒரு முயற்சியை நான் செய்ததில்லை. ஆனால் கனவு தொடராமல் இருக்க எழுந்து விடுவதையே இங்கு கட்டுப்படுத்துதல் என்று சொல்கிறேன். பல கனவுகளில் பயத்தில் திடுக்கிட்டு எழுந்துவிடுவது என்பது போல இல்லை இவை, வேண்டுமென்றே, தேவையில்லை என்று மூளையை கட்டுப்படுத்தி எழுந்துவிடுவது என்றே சொல்லவேண்டும்.

இதில் எனக்கு வரும் ஒரு சில கனவுகளை ரொம்பவே ரசித்து தொடருவேன். அந்த கனவுகளில் ஒரு குழந்தை வரும். அந்த குழந்தை வரும் கனவுகள் எல்லாமே நீண்ட நேரமுடையதாக 10-15-20 நிமிடங்கள் மேல் நீடிக்கும். அந்த கனவுகளில் ஒரு தொடக்கம், கதை, திரைக்கதை எல்லாமே இருக்கிறது. பகலில் அவற்றை ரீகால் செய்து, மறக்காமல் இருக்க எழுதியும் வைத்திருக்கிறேன். ஆனால் இந்த அதிக நிமிடங்களில் கனவுகள் வரும் போது, அது சந்தோஷமானதாக இருந்தாலும் கூட, எழுந்தவுடன் தலை பாரமாக இருக்கும்.

சில நிகழ்வுகள் முன்கூட்டியும் வருவதுண்டு. என் கனவில் நடந்தவை எப்போது நடக்கும் என்று தெரியாவிட்டாலும், இது நடக்கும் என்று எழுந்தவுடன் உள்மனது சொல்லும் அதை அறிவும் கூட இருந்து ஆமோதிக்கும்.  அப்படிப்பட்ட கனவுகள் நினைவில் நின்று, எப்போது அது நடக்கும் என்று காத்திருக்கும். அதே போல் அவை எல்லாமே அட்சரம் பிசுகாமல் நடக்குமென்றும் சொல்லிவிட முடியாது. சம்பந்தப்பட்டதாக, ஏதோ ஒன்று கண்டிப்பாக நடக்கும், நடந்தும் இருக்கிறது.

அப்பா இறந்து கிட்டத்தட்ட  20 வருடங்கள் ஓடிவிட்ட பிறகும், அப்பா என் கனவில் எப்போது வந்தாலும் "நான் இங்கே இருந்தேன் பாப்பா, அங்கே இருந்தேன் பாப்பா" என்று சொல்லி, ஏதோ ஒரு இடத்தை பற்றி விபரம் சொல்லி பேசுவார், அவர் அணிந்திருக்கும் சட்டை கலர், சட்டை கை மடிப்பு, தலை முடி உட்பட, எல்லாமே எழுந்தவுடன் எனக்கு நினைவில் இருக்கும். அப்பா இல்லை என்ற உண்மையை இந்த கனவுகள் மறைக்க பார்க்கும். அப்பா இப்படி என்றாவது என் முன் வந்து நிற்பார் என்றே தோன்றும்.

கனவுகள் மெய்ப்பட வேண்டும் என்று சொன்னாலும், அந்த கனவுகள் எப்படிப்பட்ட தாக இருக்கவேண்டும் என்பதையும் நாமே தான் முடிவு செய்கிறோம். இது டே டீரிம்ஸ் க்கு மட்டும் இல்லைங்க..  :)

அணில் குட்டி : .ச்ச்ச்சச்ச்சோஓஒ......அம்மணி ஆஸ்பித்திரிக்கு போக நேரம் வந்தாச்சி.....போலவே..... :(

பீட்டர் தாத்ஸ் : Do not spoil what you have by desiring what you have not; remember that what you now have was once among the things you only hoped for.”
  .
படம், தகவல் - நன்றி கூகுல்.

 

வா..... தாயீஈஈஈ.....வாம்மா...வாஆ.....

உடுக்கை சத்தம் கேட்டால், தன் நிலை மறந்து ஆடும் ஆண், பெண்களை கோயில்களிலும், திருவிழாக்களிலும் பார்த்திருப்போம். உடுக்கைக்கு மனிதனின் மூளையை மழுக்கி, நினைவிழக்க வைத்து, இழுத்து வந்து ஆடவைக்கும் சக்தி இருக்கிறது என்பது வியப்பான விஷயம் தான். அதன் ஒலிக்கு அத்தனை சக்தி இருக்கிறது. ஆனால் எல்லோரும் ஆடுவதில்லை. ஏன் அந்த ஒரு சிலர் மட்டும்?

என் சின்ன வயதில் அப்பாவின் சித்தி மகள் இப்படி ஆடுவார். "அத்தை ஏன்ப்பா ஆடறாங்க..நான் ஏன் ஆடல.. நீங்க ஏன் ஆடல" ன்னு கேட்டு இருக்கேன். அப்பா "Nerve Weakness" என்ற பதில் சொன்னார்.  நரம்பு சம்பந்தப்பட்ட வியாதின்னு சொல்லலாமா? ஆனால் சமீபத்தில் ஒரு காதுக்குத்தல் விழாவிற்கு சென்றிருந்தோம். அங்கு பார்த்த பொழுது தான், இது பூசாரி யின் தில்லாலங்கடி வேலை என்று தெரிந்தது. விழாவை நடத்தியவர்கள் முத்திரை க்குத்திய வைணவர்கள், இவர்கள் எங்கள் குடும்பத்தில் நிறையவே இருக்கிறார்கள். நாங்கள் சைவம் என்றாலும், பல உறவினர்களின் குடும்பத்தில் திருமணத்தின் போது வைணவமும் கலந்துவிட்டது. 

எடுத்துக்காட்டாக என் அம்மா வைணவம்-அப்பா சைவம்,  என் கணவர் சைவம் - நான் சைவம், என் அண்ணன் சைவம்-அண்ணி வைணவம், நாத்தனார் சைவம்- அண்ணன் வைணவம், அத்தை சைவம்- அத்தை மாமா வைணவம் (முத்திரைக்குத்திய குடும்பம்)பெரியம்மா வைணவம்- பெரியப்பா வைணவம் (முத்திரைக்குத்திய குடும்பம்), தாய் மாமா வைணவம்- மாமி வைணவம். இப்படி குடும்பம் முழுக்க நிறைய சைவம்-வைணம் கலப்பு இருக்கிறது.
இதில் முத்திரை க்குத்திய வைணவர்கள் என்பவர்கள் வைணவத்தில் தீவிரமாக இருப்பவர்கள், சங்கையும் சக்கரத்தையும் கைகளில்  முத்திரையாக குத்திக்கொண்டு தங்களின் மதத்தின் மீதுள்ள, பெருமாள் மீதுள்ள பற்றை தீவிரமாக வெளிப்படுத்திக்கொண்டவர்கள்.

இவர்களை நேரில் நான் பார்த்ததில்லை. முத்திரைக்குத்தியவர்கள் எல்லோருமே தாத்தாவிற்கு தாத்தா என்ற நிலை தான். அதற்கு பிறகு வந்தவர்கள், இவர்களை தொடர்ந்து வருபவர்களாக, மிக சுத்த, உசத்தியான வைணவர்களாக தங்களை நினைத்தும், காட்டியும், இன்று வரை அப்படியே பழகியும் வருகிறார்கள்.  இதை ப்பற்றி விரிவாக சொல்ல தனியாகத்தான் பதிவிடவேண்டும். 

நிற்க, நாம் சாமி ஆட்டத்திற்கு வருவோம். இப்படி ஒரு வைணவ க்குடும்பம் நடத்திய காதுக்குத்தல் திருவிழா,  108 பிள்ளையார் மண்ணில் பிடித்து, அதை ஒரு கட்டுக்குள் வைத்து, தனித்தனியாக பூஜை செய்து, மாவிளக்கு, பஞ்சாமிருதம், பொங்கல் பொங்கி, உடுக்கை , பம்பை, சிலம்பம் அடித்து, பூசாரி பாட்டு பாட, நடந்த அந்த விழாவில் தான் சாமி ஆட்டத்தையும் பார்க்க முடிந்தது.

மூன்று பெண்கள் ஆடினார்கள், முதலில் ஆடிய பெண் உடுக்கை அடிப்பவருடன் வந்த பெண்.  அடுத்து என் நெருங்கிய உறவினர் பெண் ஆட ஆரம்பித்தவுடன் எனக்கு உள்ளுக்குள் ஆட ஆரம்பித்தது. இது வரையில் அந்த பெண் இப்படி ஆடுவார் என்று தெரியாமல் இருந்ததால் எனக்குள் ஆட்டம் எடுத்தது எனலாம்.  அந்த பெண்ணின் ஆட்டத்தின் நடுவில் பூசாரி உடுக்கை அடித்தவாறே கேட்கிறார்.

"தாயீ வந்து இருக்கறது யாரு..."

"முக்காத்தம்மன்"

"எந்த குறையும் இல்லையே..."

"இல்லடா.."

"சந்தோஷமா..."

"ரொம்ப சந்தோஷன்டா..."

பூசாரி கூட்டத்தை பார்த்து சத்தமாக - "எல்லாரும்  கேட்டுக்கோங்க... ஆத்தாவிற்கு எந்த குறையும் இல்லையாம் எல்லாம் திருப்தியாம்,,...ரொம்ப சந்தோஷமா.. வேற யாருக்காச்சும் எதாவது கேக்கனுமா?"

கூட்டத்தில் இருந்து ஒருவர் "இந்த கோயில் எப்ப புதுப்பிப்பாங்கன்னு கேளுங்க.."

ஆத்தாஆ... தாயீ... "இந்த கோயிலுக்கு எப்ப கும்பா அபிஷேகம் நடக்கும்...?"

"ஒரு வருஷன்டா....வர ஆடிக்குள்ள நடக்கும் டா.... நான் இருந்து நடத்தறேண்டா....... நடத்துவேண்டா......"

:நன்றி தாயீ........"  (கூட்டத்தை பார்த்து , "இன்னும் எதா கேள்வி இருக்கா?", எல்லோரும் அமைதியாக இருக்க) தட்டில் இருந்து வீபூதியை எடுத்து நெற்றியில் வைத்த அடுத்த வினாடி சாமி இறங்கி ஓடி ப்போகிறது. என்ன மாயம் இது? :)

இதில் பூசாரியின் கை நிறைய இருப்பதாகப்பட்டது.  எடுத்த வீடீயோவிலும் அது தெரிகிறது. அதாவது, பூசாரி தான் செய்தவை திருப்தி அளிப்பதாக தன்னை அமர்த்தியவர்களுக்கு சொல்ல வேண்டி, இதை செய்கிறார். கூட்டத்தில் யாரும் ஆடவில்லை என்றால் தன்னை சார்ந்தவர்கள் யாரையாவது ஆடவைத்து, இதை நிறைவேற்றிக்கொள்கிறார்கள், ஒரு வேளை கூட்டத்தில் யாரும் ஆடினால், அவர்களிடம் இப்படி கேள்வி கேட்டு சாமர்த்தியமாக நடந்துக்கொள்கிறார்கள். இதில் ஒரு முறை ஆடிய பெண் மீண்டும் ஆடுவதில்லை. :)  ஆடாமல் இருந்தாலும் பூசாரிகள் விடுவதில்லை.. உடுக்கையை வேகமாக அடித்து, அந்த பெண்ணை ப்பார்த்து ". .வாம்மா வா... வா தாயீ.. .வா வா. " .என்று சொல்லியே அடிக்கிறார்கள். அந்த பெண்ணும் கொஞ்சம் கொஞ்சம் தலையை ஆட்டி ஆட ஆரம்பித்து, வேகம் எடுக்கிறார்.

இப்போது சாமி ஆடும் பெண் பக்கத்திலிருந்து பார்க்கலாம். ஒரு முறை தன்னை சாமி என்று சுற்றி இருப்பவர்களால் நம்ப வைக்கப்படும் (அ) நம்பும் அந்த பெண், அதை தக்க வைத்துக்கொள்ள தொடர்ந்து அதே யுத்தியை கடைப்பிடிக்கிறார். மனிதனின் இயற்கை குணம் இது. இப்படி சாமியாக பார்க்கப்படும் அந்த பெண்ணிற்கு ஊரில் கிடைக்கும் மரியாதை, மதிப்பு, தன் வார்த்தையின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்ள, இதையே தொடர்ந்து அவர் செய்கிறார்.


கவனித்து பார்த்த வரை அவர்கள் சாமி ஆடும் போது செய்வது பேசுவது அவர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. சிலம்பு வைத்திருப்பவரிடம் சென்று சிலம்பை பிடுங்கி ஆடுகிறார்கள். உடுக்கை, பம்பை வைத்திருப்பவர்களிடம் இவர்கள் செல்வதில்லை. ஏன்? அதை எல்லாம் அடிக்க பயிற்சி த்தேவை.  சட்டென்று பிடுங்கி தாளம் தப்பாமல் அடித்துவிடமுடியாது.:)

கூகுலில் சாமி ஆட்டம் னு தேடினால், தமிழர்களின் மூட நம்பிக்கை பட்டியலின் கீழ் வருகிறது. :). அப்பட்டமான ஒரு மூட நம்பிக்கை இது என்றாலும் இன்னமும் இதை தொடர்ந்து நம் மக்கள் பழகி வருவது வருந்தத்தக்கது.  விழாவில் எடுத்த வீடியோ, இதில் ஒரு வயதான பெண் ஆடுவார் பாருங்கள், ரொம்ப குதித்து ஆடாமல், (6.00 -7.11) தன் வயதுக்கு தகுந்தார் போன்று நாசுக்காக ஆடுகிறார். அவரிடம் பூசாரி பேசுவதும், ஒரு வினாடித்துளியில்  பூசாரி அவரின் உள்ளிருக்கும் சாமியை வெளியே அனுப்பதும் இருக்கும்.



அருள்வாக்கு சம்பந்தப்பட்ட ஒரு பதிவு கூகுகில் கிடைத்தது - http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=4542:2010-03-03-05-38-00&catid=3:short-stories&Itemid=266

அணில் குட்டி : நம்மையும் மதிச்சி ஒரு வீட்டு விஷேஷத்திற்கு கூப்பிட்டா,  போனமா குட்டிய விஷ் பண்ணமா ..நல்லா கொட்டிக்கிட்டோமா.. வந்தமான்னு இல்லாம ..என்னா கிருவித்தனம் !! ..  ... அந்த பூசாரி என்னவோ இவிங்க விடியோ எடுக்கும் போது ரொம்ப ரசிச்சி எடுக்கறாங்க. .ன்னு உடுக்கைய வேக வேகமா அடிச்சி சூப்பரா போஸ் எல்லாம் கொடுத்தாரு. .ஆனா அம்மணி  இம்புட்டு கொலவெறி யோட எடுக்கறாங்கனு தெரியுமா ????  ம்ம்ம்ம்.. .... யாராவது முட்டு சந்துல வச்சி மொத்து மொத்துனா த்தான் அடங்குவாங்க..

பீட்டர் தாத்ஸ் : I know God will not give me anything I can't handle.  I just wish that He didn't trust me so much.  ~Mother Teresa