அதாகப்பட்டது இந்த பதிவில் தாலிக்கட்டின.. கட்டாத, மோதிரம் போட்ட, போடாத, திருமணப்பதிவு செய்துக்கொண்ட, செய்யாத "கணவர்" என்ற போஸ்ட் கொண்ட மாங்கா மடையர்கள் அவர்களின் மனைவிகளிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று கற்றுக்கொடுக்கப்படும். எல்லாரும் வந்து அமைதியாக உட்காருங்க பார்க்கலாம். சத்தம் வரப்பிடாது, சத்தம் போட்டா பெண்ணியவியாதிகளுக்கு பிடிக்காது. அமைதியாக வாங்க. ம்ம்ம் ஆச்சா...

உட்காந்துட்டீங்களா. அது.. !! (அந்த பயம் எப்பவும் இருக்கனும்) இப்ப ஆரம்பிக்கலாம்.

1. முதல்ல கல்யாணம் என்றால், தாலிய பெண் கழுத்தில் கட்டக்கூடாது, வேணும்னா அவன் கழுத்தில் பெண்'ணை தாலிக்கட்ட சொல்லல்லாம். மெட்டி, நெற்றியில் பொட்டு இத்தியாதிகள் எல்லாமே ஆணிற்கு பெண் செய்ய வேண்டும். அது தான் இனி நடைமுறையாக்க ப்படவேண்டும். அதற்கான சட்டம் முதல்ல கொண்டு வரனும்.அதை ஆல் மாங்கா மடையன்ஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

2. அடுத்து, தாலிக்கட்டிக்கிட்ட மாங்கா மடையன் செய்ய வேண்டியது, பெண் வீட்டுக்கு வரும் போது பெரிய சொம்பை சீதனமாக எடுத்துக்கிட்டு வரனும். கூடவே, ஒரு உட்காரும் மனை, மனைவி உட்காரும் போது எல்லாம் மனையை பின்னால் வைக்க வேண்டும், இதை சம்பராதயமாக கடைப்பிடிக்க வேண்டும். இது மனைவி மேல் உள்ள மரியாதை நிமித்தம் மாங்கா மடையன் செய்ய வேண்டும். அப்பத்தான் தன்னை கட்டிய மனைவிக்கு மரியாதை கொடுப்பதாக இருக்கும்.அந்த சொம்பு சொன்னேன் இல்லையா, அதை தினமும் விம் போட்டு விளக்கி, வெள்ளையாக பளிச் ன்னு வச்சிக்கும், அப்பத்தான் மனைவி எப்ப அதை தூக்க சொல்றாங்களோ தூக்க வசதியாக இருக்கும்.

3. அது மட்டும் இல்லாம, சமைக்கறது, துவைக்கறது, வீட்டை சுத்தமாக வச்சிக்கறது, குழந்தை குட்டியை பாத்துக்கறது, அதுங்களுக்கு சாப்பாடு கொடுக்கறது, படிப்பு சொல்லி தருவது, வேலைக்கு போயி மனைவி சம்பாதிக்கறத்துக்கு மேல 1 ரூ அதிகமாக சம்பாதிப்பது, வீட்டுக்கு விருந்தாளி வந்தால் அவங்களை கவனிக்கறது, நாலு தெரு தள்ளி இருக்கிற குழாயில் போயி தண்ணீர் தூக்கிக்கிட்டு வந்து வீட்டில் மேல் மாடியில் உள்ள டேக்ங்கில் நிரப்பி வைக்கறது போன்ற வேலைகளை இந்த மாங்கா மடையன் சொம்பை கீழே வைக்காமல் செய்ய வேண்டும்.

4. மனைவி சொல்லே மந்திரம், அவள் என்ன சொன்னாலும் தலைய.. அப்படியே மாடு மாதிரி ஆட்டனும், கையில இருக்க சொம்பை தரையில் வைத்துவிட்டு, கைக்கட்டி "சரிங்க ஆபிசர்" ன்னு சொல்லிட்டு திருப்பி சொம்பை கையில எடுத்துக்கனும்

5. மாங்கா மடையோட அம்மா, அப்பா, அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, உற்றார் உறவினர் அப்படி யாரும் வீட்டுப்பக்கம் தலைவச்சி படுக்கக்கூடாது, ஆனால், அதே மனைவியோட வீட்டிலுருந்து ஒரு புழு, பூச்சி வந்தால் கூட அவங்களை உபசரித்து, அனுசரித்து சமைத்து வைத்து, கவனிச்சி அவங்க மனம் கோணாமல் நடந்துக்கனும். மீறி பேசினால், வரதட்சனை கொடுமை ன்னு சொல்லி உள்ள வச்சி முட்டிக்கு முட்டி தட்டி தனி தனியா உடம்பை பேத்து எடுத்துடுவோம். ஜாக்கிறதை !

6. அடுத்து, மனைவி சம்பளம் அவங்க இஷ்டத்திற்கு செலவு செய்ய விடனும், ஆனா மாங்கா மடையன் சம்பாதிக்கிற எல்லாம் விட்டுக்கு வரனும், ஒரு நயாபைசா விடாம கணக்கு சொல்லனும். சொல்லாமல் போனால் மாங்கா மடையனுக்கும் அவனின் பெற்றோருக்கும் தொடர்பு இருக்குன்னு சொல்லி அதுக்கும் உள்ள தள்ளி முட்டிக்கு முட்டி தட்டுவோம்.

7. மனைவியை மரியாதையாக வாங்க போங்கன்னு கூப்பிடனும், மாங்கா மடையனை அவங்க எப்படி கூப்பிட்டாலும் அது பரவாயில்லை, அது நாட்டு நடப்பு, ஆணும் பெண்ணும் சரி சமம், ஆணை போலவே அதே உடம்பு, உயரம், வேகம், வீரம் எல்லாம் பெண்ணுக்கும் இருக்கு, அதை நாங்க எல்லாம் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்ல, என்ன சொன்னாலும் ஒரே பதில் "சரிங்க ஆபிசர்" ன்னு சொல்லனும், மீறி பேசினால், உடனே அது பெண்ணிற்கு எதிராக நடக்கும் வன்கொடுமை ன்னு கத்தி ஆர்பாட்டம் செய்து மாங்கா மடையன் வாயை, அடுத்து திறக்காதமாதிரி செய்துடுவோம். பஞ்சாயத்து கூட்டுவோம் அதிலும் பெண் சார்ந்தவர்கள் மட்டும் இருப்பாங்க. மாங்கா மடையன் தனி ஆளாக நின்னு, திருப்பியும் சொம்பை கையில் எடுத்து குனிந்து மரியாதையாக "சரிங்க ஆபிசர்" அப்படின்னு சொல்லனும்.

8. மனைவி எந்த நேரத்தில் வெளியில் பொறுக்கினாலும் கேள்வி கேட்க க்கூடாது, அதே சமயம் மாங்கா மடையனான நீங்க, சரியான நேரத்திற்கு வீட்டுக்கு வந்து, புள்ளைக்கு சாப்பாடு கொடுத்து, வீட்டு வேலையெல்லாம் முடிச்சி, நல்ல புள்ளையா தூங்கிடனும்.

9. இதுல ஒன்னு சொல்ல மறந்துட்டேன், புள்ள கூட நீங்க தான் பெத்துக்கனும், நாங்க என்ன புள்ள பெத்துக்கிற மிஷனா? அப்படின்னு அறிவே இல்லாம கேள்வி கேட்போம்.. ஆனா அதையும் பொறுத்துக்கிட்டு, சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, புள்ள பெத்துக்கற வழிய பாக்கனும். இல்லன்னா ஒரு புள்ள பெத்துக்க லாயிக்கி இல்லாதவன் சொல்லி டைவர்ஸ் பண்ணிடுவோம்.

10. மொத்தத்தில் வருங்காலத்தில் நீங்கள் "மாங்கா மடையனாக" இருக்க விரும்பினால் மட்டுமே உங்களுக்கு திருமணமே நடக்கும், இல்லன்னா கட்ட பிரம்மச்சாரி நமஹ தான்!!

மேல் சொன்னபடி ஒரு ஆண் இருந்தால் - எல்லாரும் கொஞ்சம் ப்ராக்கிட்டிக்கலாக யோசிச்சி பாருங்க, எழுதின எனக்கே ஆண்களை நினைத்தால் பாவமாக இருக்கு, மேலும் இப்படி எல்லாம் ஒரு ஆண் இருந்தால்...................... அவன் ஆம்பளையாக இருக்க .00000000001% கூட சான்ஸ் இல்ல.. :). அது அறிவியல் சார்ந்த உண்மை.

சில சமயங்களில் பெரிய பிரச்சனைகளில், என்னுடைய ஆற்றாமை, கோபம், இயலாமை போன்றவைகளை கட்டுப்படுத்த முடியாமல் அழும் போது, என் குழந்தை நான் அழுவது தாங்காமல் என்னுடன் சேர்ந்து அழுவான். அவன் கண்களில் கண்ணீர் வருவதை என்னால் சகித்துக்கொள்ளவே முடியாது. அவன் என்னுடைய குழந்தை என்ற பாசம் ஒருபக்கம் இருந்தாலும், அவன் "ஆண்" அவன் கண்களில் கண்ணீர் வரக்கூடாது, எதையும் தாங்கும் இதயம் அவனுக்கு வேண்டும், என்னுடன் சேர்ந்து அவன் அழுவதை விடவும், என்னை சமாதானம் செய்பவனாக அவன் இருக்க வேண்டும் என்று நினைப்பதோடு மட்டும் இல்லாமல், என்னை போன்று இளகிய மனம் உனக்கு வேண்டாமடா நீ ஆண் குழந்தை, இப்படி இருக்கக்கூடாது என்றே சொல்லி க்கொடுப்பேன்.

ஒரு தாயாக, பெண்ணாக, என் குழந்தையும், என் கணவரும், என் (ஆண்) நண்பர்களும் - எந்த சந்தர்ப்பத்திலும் ஆண்களாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அடிமையாக இருப்பவன் ஆண் ' ணாக இருக்கமாட்டான், ஆண்' ணாக இருப்பவன் பெண்ணை அடிமையாக நடத்தவும் மாட்டான். பெண்ணை அடக்கி வைத்து ஆள்பவன் தான் ஆண், அது தான் குடும்பத்திற்கும், அவளால் வளர்க்கப்படும் குழந்தைகளுக்கும் நல்லது.

இதில் "அடக்கி ஆள்பவன்" என்பதை தவறாக அர்த்தம் செய்து க்கொள்ள வேண்டாம், பெண் அவளின் இயல்பை விட்டு, குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் பிரச்சனை தரக்கூடியவளாக, பிரச்சனையை வளர்க்க கூடியவளாக இருக்கும் பட்சத்தில் அவள் அடக்கப்படவேண்டியவளே. ஒரு ஆணால் இந்த சமூகம் கெட்டுபோகும் சாத்தியக்கூறுகளை விட, ஒரு பெண்ணால் அதிகம், அதானாலேயே அவளுக்கு கட்டுபாடுகள் உள்ளன. இதற்கும் அவளுடைய தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் சம்பந்தம் இல்லை. புரிந்துக்கொள்பவர்கள் சரியாக இதனை புரிந்துக்கொள்வார்கள்.

இதை தாண்டி யதார்த்தில் எல்லா குடும்பத்திலும் சின்ன சின்ன முதல், பெரிய பெரிய பிரச்சனைகள், நம் தலையை மீறும் பிரச்சனைகள் வரத்தான் செய்யும், அது தான் வாழ்க்கை, பிரச்சனைகளே இல்லாமல், சுயநலமாக நம் விருப்பபடி வாழ்க்கை அமைய வேண்டும் என்று நினைப்பவர் எவரும் வாழ்க்கையை சந்தோஷமாகவோ, இயல்பாகவோ நடத்திவிட வாய்பில்லை. அவர்களின் சுயநலத்தால் வரும் பிரச்சனைகளே அவர்களை ஒன்றுமில்லாமல் செய்துவிடும்.

திருமண சடங்குகள், பெண்ணிற்கு போடப்படும் நகை, கொடுக்கப்படும் பாத்திரம் பண்டம் போன்றவை அனைத்திற்கும் காரண க்காரியங்கள் இருக்கின்றன. என் திருமணத்தின் போது இதை எல்லாம் நான் கேட்டு தெரிந்து க்கொண்டு தான் திருமணம் செய்துக்கொண்டேன். ஒரு பெண்ணியவியாதியாக இதை கேட்கவில்லை, என் குடும்ப சூழ்நிலை, சீர்வரிசை, நகை, பணம் என ஆடம்பரமாக செய்ய கூடிய சூழல் இல்லை,நான் உரிமையாக பெற்றுக்கொள்ள என்னை பெற்றவர்கள் எனக்காக செய்ய இல்லை, ஆயா தனியாக செய்ய நேர்ந்த போது அவர்கள் ஏன் இப்படி சிரமப்பட வேண்டும் என்பதற்காக கேட்டு தெரிந்துக்கொண்டவை.

1. ஆணின் ஊதியத்தை நம்பி பெண்ணை திருமணம் செய்து தருகிறார்கள். ஒரு வேளை அவனுக்கு வருமானத்தில் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில், (வாழ்க்கை ஒரே மாதிரியாக இருக்காது) பெண்ணிற்கு போட்ட நகை, பாத்திரம் பண்டம் போன்றவை நெருக்கடி தேவைக்கு பயன்படுத்தவே கொடுக்கிறார்கள்.

2. ஆண், பெண் குழந்தைகளுக்கு தகப்பன் சொத்தில் சரிசமமாக பங்கு இருக்காது, அதனை ஈடுக்கட்ட பெண் குழந்தைகளுக்கு நகைகள் செய்து கொடுப்பதும், சீர் செய்து பெற்ற பிள்ளைகளிடம் பாகுப்பாடு இல்லாமல் நடந்து க்கொள்வதும் வழக்கம்.

இதனை சிலர் கேட்காமல் கொடுத்தோ, கேட்டு கொடுத்தோ திருமணத்தை அவரவர் வசதிக்கேற்ப முடிப்பார்கள். தாய்மாமன், அத்தை, நாத்தனார், மாமியார், இவர்களால் நெற்றியில் கட்டப்படும் காசு, பட்டை இவற்றிக்கு கூட தனிக்கதை உண்டு. பெரியவர்கள் செய்துவைத்த ஒவ்வொரு விஷயத்திற்கும் அதனை சார்ந்த பலன்களும், அர்த்தங்களும் நிறைய உண்டு. அவர்கள் அறிவில்லாத மூடர்கள் ஒன்றும் இல்லையே.

இவை எதுவுமே இல்லாமல் திருமணம் செய்ய முடியும். அது அவரவரின் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்ததே தவிர, எல்லோரும் அப்படியே இருக்கவேண்டும் என்ற கருத்தை திணிப்பதும், அதை கிண்டல், கேலி, நக்கல் செய்து தான் புத்திசாலி என்று நீருபிக்க முயல்வதும், தன் தனிப்பட்ட காழ்புணர்ச்சியையும், தன் சொந்த அனுபவங்களால் ஏற்பட்ட மன பாதிப்புகளின் வெளிப்பாடே ஒழிய, சமுதாய நோக்கிலான பார்வை ஆகாது. தனிப்பட்ட பிரச்சனைகளும் விருப்பங்களும் வெறுப்புகளும் நான்கு சுவற்றிற்க்குள் வைத்துக்கொள்ளவோ, தீர்த்துக்கொள்ளவோ வேண்டுமே அன்றி பொதுவில் வைத்து நம் பாரம்பரிய கலாச்சாரத்தையும், பழக்கவழக்கங்களையும் கிண்டல் செய்வதாகாது. அது நல்ல முடிவினையும் தராது.

பின்குறிப்பு : இப்படி ஒரு பதிவை எழுத விருப்பமே இல்லை, இருந்தாலும் , ஒருவர் தேவையில்லாமல் என்னை சீண்டி பார்க்க நினைத்து வார்த்தைகளை பயன்படுத்தினார், அவருக்கு மேல் சொன்னபடி ஒரு மனைவி கிடைத்து, பெரிய சொம்பாக அவர் இருப்பாரா என யோசித்து, இதற்கு பிறகும் என்னிடம் தேவையில்லாத வார்த்தைகளை பயன்படுத்த மாட்டார் என்பதற்காக எழுதிய பதிவு. அவருக்கு இது தனிமடலிலும் அனுப்பி வைக்கப்படுகிறது.

அணில் குட்டி அனிதா: செய்ய வேண்டாம்னு சொன்னால் அதை செய்வேன் ன்னு செய்யற இந்த அம்மணி ய என்ன செய்யறது... ???!! இவங்கள திருத்த யாராச்சும் இருந்தா வாங்கப்பா.. என்னால முடியல...

பீட்டர் தாத்ஸ் : A journey is like marriage. The certain way to be wrong is to think you control it.

A successful marriage requires falling in love many times, always with the same person.

Before marriage, a girl has to make love to a man to hold him. After marriage, she has to hold him to make love to him.

Marriage is nature's way of keeping us from fighting with strangers.